• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடி கிடைத்த செல்வம் – 7

Umanathan

✍️
Writer
தேடி கிடைத்த செல்வம் – 7

சனிக்கிழமை மாலை வித்யுத்தின் அப்பா விஸ்வநாதன் மற்றும் அம்மா பார்வதி வருகிறார்கள். அந்த வாரம் முழுவதும் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு அவர்களின் அறையை தயார் செய்வதில் நேரம் செலவிடுவாள் ஷர்விகா. வித்யுத்தை தவிர்க்க இது அவளுக்கு உதவி செய்தது.

தினமும் அலுவலகத்திற்கு ஒன்றாக சென்று ஒன்றாக திரும்பி வந்தார்கள். அலுவலகத்தில் வேறு நிலை. வீட்டிற்குள் ஒன்றாக இருப்பது ஷர்விகாவிற்கு தீராத வேதனையாக இருந்தது. இருவரும் ஒன்றாக இல்லை என்றாலும் ஒரு காலத்தில் இப்படி இருப்போம் என்று கற்பனை செய்த மனம் தானே. அந்த நினைவுகள் மீண்டும் தலை தூக்க முயற்சிக்க அதை நினைக்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவித்தாள். கூடுமானவரை அவனருகில் இருப்பதை தவிர்த்தாள்.

சனிக்கிழமையும் வந்தது. இருவரும் வித்யுத்தின் பெற்றோரை வரவேற்க விமான நிலையம் சென்றனர். விமானம் வந்த இறங்கும் நேரம் பொருத்து வித்யுத் காரை கொண்டு வரவும், அவன் பெற்றோர்கள் வெளியே வரவும் சரியாக இருந்தது. கணவன் மனைவியாக இருவரும் அருகருகே நின்று அவர்களுக்காக காத்திருப்பதை கண்களில் நீராடும் உதடுகளில் புன்னகையோடும் பார்த்தார் பார்வதி.

அவரின் பார்வையை புரிந்து கொண்ட ஷர்விகாவின் மனம் கலங்கியது. எவ்வளவு இனிமையான பெண்மணி. இவரை ஏமாற்றுகிரோமே என்று அவள் மனம் அவளை சுட்டது. அருகில் வந்ததும் வித்யுத்தின் கைகளை பற்றி கொண்டாள் அந்த தாய். விஸ்வநாதன் அதிகம் பேசவில்லை.

"எப்பிடி இருக்க ஷர்வி?" என்று கேட்டார்.

"நல்லா இருக்கேன் மாமா. உங்களுக்கு டிராவல் எல்லாம் எப்பிடி இருந்தது?"

"ஒரு பிரச்சினையும் இல்லைமா."

அதற்குள் பெட்டிகளை காரில் ஏற்றி விட்டு வந்த வித்யுத் "போகலாமே. வீட்டுக்கு போய் பேசிக்கலாம். லக்கேஜ் அவ்வளவு தானா? வேற இருக்கா?" என்று தந்தையை பார்த்துக் கேட்க, இல்லை என்று தலை அசைத்தார். இன்னும் தந்தைக்கும் மகனுக்கும் பிரச்சினை சரியாகவில்லை போலும் என்று நினைத்தாள் ஷர்விகா.

வீட்டிற்கு வந்து பெரியவர்கள் இருவரையும் அமர்ந்ததும், காபி எடுத்து வருகிறேன் என்று எழுந்த ஷர்விகா கைகளை பிடித்து அமர வைத்தார் பார்வதி.

"இருக்கட்டும். அன்னம்மா எடுத்துட்டு வருவாங்க. நீங்கள் ஒரே பிராஜெக்ட்டில் வேலை செய்யறதா வித்யா சொன்னான்.அப்படிதான் திரும்ப பாத்தீங்களா?"

"என்னம்மா இப்போ தான வந்திருக்கீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. உங்க மருமக எங்கயும் போயிட மாட்டா. பொறுமையா எல்லா கதையையும் கேட்டுக்கோங்க." என்று வித்யுத் கூறினான்.

"ஆமாம் பார்வதி. கதையை மெல்ல கேட்டுக்கலாம்." என்று கதையை என்னும் வார்த்தையை அழுத்தி கூறினார் விஸ்வநாதன். விதியுத்தின் முகம் ஒரு முறை சிவந்தாலும் உடனே முகத்தை மாற்றிக் கொண்டான்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஷர்விகாவிற்கோ முகத்தை மாற்றாமல் பார்த்துக் கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் இது எதுவும் புரியாமல் உண்மையான சந்தோஷத்தை காட்டியது பார்வதி ஒருவர் தான்.

"என்னமோ உங்கள் ரெண்டு பேருக்கும் நேரம் தான் சரியா இல்லை போல. அதுதான் எல்லாம் சரியாகிட்டதே. ஒரு முறை எல்லாரும் குல தெய்வக் கோவிலுக்கு போயிட்டு வரனும்." என்று கூறினார்.

இரவு உணவு முடித்து பெரியவர்களை சீக்கிரமே உறங்க சொல்லிவிட்டு வித்யுத்தும் ஷர்விகாவும் உறங்க சென்றனர். அறையில் நுழைந்ததும் எப்பொழுதும் போல அந்நியர்களாக மாறினார்கள்.

ஞாயிற்றுக்கிழமை சாவகாசமாக நாள் தொடங்கியது. காலை உணவுக்கு பின், பார்வதி ஷர்விகாவையும் வித்யுதையும் அருகில் அமர்த்திக் கொண்டார்.

"இப்போது சொல் ஷர்விமா. போன மாடம் உங்கிட்ட பேசறப்ப கூட நீங்க ஒன்று சேர்ந்ததை சொல்லவே இல்லையே?" என்று குறைபட்டார்.

ஷர்விகா புன்னகையுடன் அவர் கையை பிடித்துக் கொண்டு "இல்லை அத்தை. நாங்கள் ரெண்டு பேரும் 4 மாடமா ஒன்னா வேலை செய்யறோம். முன்ன என்ன பிரச்சினை, எதுக்காக பிரிஞ்சோம்ன்னு யோசிச்சா, எங்கக்குள்ள பெரிய பிரச்சினை எதுவும் இருக்கறது போல தெரியலை. ஏதோ தப்பு செஞ்சிட்டோனு மட்டும் ரெண்டு பேருக்கும் தோணிச்சு. மனம் விட்டு பேசினோம். அப்புறம் பழசை விட்டுடலாம்ன்னு முடிவு செஞ்சிட்டோம். நடந்தது முக்கியமில்லை. இனி நடக்கறது தானே முக்கியம்." என்று ஏற்கனவே பேசி வைத்ததை பிசிரில்லமல் சொல்லி முடித்தாள்.

மேலும் ஏதோ கேட்க போன பார்வதியின் கையை பற்றி "போதும்மா, உன் மருமக இங்கே தானே இருக்கப் போறா. ஒரே நாள்ல எல்லா கேள்வியையும் கேட்டுட்டா, அப்புறம் ரெண்டு பேருக்கும் பேசறதுக்கு ஒன்னும் இல்லாம போயிடப் போகுது." என்று கேலி போல் கூறினான் வித்யுத்.

"போடா, என்னமோ எங்களுக்குள்ள பேச ஒன்னுமே இல்லைங்காறத போல சொல்ற. மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆயிரம் இருக்கும். மூக்கை நுழைச்சு உடச்சிக்காத" என்று பத்திரம் போல் விரலை காட்டி சிரித்தாலும், மேலும் எதுவும் கேட்காமல் விட்டு விட்டார் பார்வதி.

அம்மாவும் மகனும் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஷர்விகா, வித்யுத் இது போல் தன்னுடன் பேசிய நாட்களை நினைத்து பார்த்தாள்.ஏன் இப்படி மாறிவிட்டோமென யோசித்து ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டாள். அவளின் செய்கையை பார்த்த வித்யுத் என்ன என்பது போல பார்த்தான். அவன் கண்டு கொண்டதை உணர்ந்த ஷர்விகா முகம் சிவந்து பார்வையை வேறுபுறம் திருப்பினாள்.

இந்த நாடகத்தை ஒரு யோசனையோடு விஸ்வநாதன் கவனிப்பதை யாரும் பார்க்கவில்லை.

மதிய உணவு முடிந்தவுடன் வித்யுத் யாரோ தோழனை பார்க்க போவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றான். மாமியாருடன் சிறிது நேரம் பேசிவிட்டு, அவரை உறங்க சொல்லி வெளியே வந்தாள் ஷர்விகா.

ஹாலில் விஸ்வநாதன் ஏதோ புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். ஷர்விகா வெளியே வருவதை பார்த்த பின் வந்து அவருடன் அமருமாறு சைகை செய்தார். ஷார்விகாவும் அருகில் இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்தாள்.

"இன்னும் உங்களுக்குள்ள எதுவும் சரியாகலையா?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

ஒரு கணம் திகைத்த ஷர்விகா இவரிடம் உண்மையை தவிர வேறு எதுவும் பலிக்காது என்று உணர்ந்தாள். ஆனால் உண்மையை சொல்லவும் தயக்கமாக இருந்தது.

"நீங்கள் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு தானே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்க. அப்புறம் என்னம்மா?" அவர் குரலில் உண்மையான வருத்தம் தென்பட்டது.

ஒரு பெருமூச்சுடன் "நாங்கள் ரெண்டு பேரும் பிடிச்சு தான் மாமா கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். ஆனா இந்த பிரிவு ஏன் நடந்ததுன்னு என்னாலும் சரியாக சொல்ல முடியலை. வித்யுத் என்மேல தப்பு சொல்றார். ஆனால் அது எதனாலன்னு சொல்ல மாட்டேங்கறார். எனக்கும் காரணம் தெரிஞ்சா தானே இதுக்கு பதில் சொல்ல முடியும்."

"அப்புறம்?" என்று கூற முற்பட்டவரை பார்த்து "நான் எதையும் மறைக்க விரும்பலை மாமா. இப்போ நாங்க ஒன்னு சேர்ந்திருக்கறது அத்தைக்காகத் தான். நாளைக்கு என்ன நடக்கும்னு என்னால சொல்ல முடியலை. ஆனா எதுக்கும் ஒரு முடிவு உண்டு. அதனால் என் நம்பிக்கை இன்னும் போகலை. ஆனால்..." என்று மேலே கூற தயங்கினாள்.

"சொல்லம்மா" என்று ஊக்குவித்தார் விஸ்வநாதன்.

"நீங்க உங்க பையன் மேல கோபமா இருக்கீங்க. அது எங்க பிரச்சினையால தான்னு எனக்கு தெரியும். ஆனால் அது அத்தையை கஷ்டப்படுத்துது. எந்த தாய்க்குத் தான் தன்னோட மகனும், கணவனும் எதிர் எதிரா திசையில் இருக்கறது பிடிக்கும் சொல்லுங்க. அத்தோட வித்யுத் காட்டிக்கலைன்னாலும் நீங்கள் பேசாம இருக்கறது அவரையும் பாதிக்குது. இதை நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க மாமா." என்று கூறி விட்டு அவள் மாமனார் தனியாக யோசிக்கட்டும் என்று தனியாக விட்டு சென்றாள்.

இரவு உணவருந்தும் போது சாதாரணமாக "சாம்பாரை இந்த பக்கம் தள்ளு வித்யா"என்று விஸ்வநாதன் கூறிய போது ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக பார்த்த வித்யுத்தையும், பார்வதியையும் ஒரு புன்னகையுடன் பார்த்து விட்டு அமைதியாக உண்டாள் ஷார்விகா.

இரவு அவர்கள் அறைக்கு வந்து உடை மாற்றிக் கொண்டு உறங்க முற்பட்ட ஷர்விகாவை வித்யுத்தின் குரல் நிறுத்தியது.

"நீ தான்னு எனக்கு தெரியும்? ஏன்?" என்று கேட்டவனிடம், "சொன்னா நீங்கள் நம்ப போகிறீங்களா என்ன?" என்று கேட்டு விட்டு, இல்லை என்பது போல் அவள் தலையும் ஆட்டினாள்.

அவன் பேசாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே குட் நைட் என்று கூறி விட்டு கட்டிலில் அவள் புறம் படுத்துக் கொண்டாள்.

***

"ஒரு வழியாக பிளான் போட்டு முடிச்சிட்டோம். பெரிய வேலை முடிஞ்சிடிச்சு. இனி வேலையை ஆரம்பிச்சா ஒழுங்கா முடிஞ்சிடும்." என்று காபி இடைவெளியில் சொல்லிக் கொண்டிருந்த ஷர்விகா, ரித்வியின் முகத்தை பார்த்து நிறுத்தினாள்.

"என்ன ஆச்சு ரித்வி. வேலை எதுவும் இருக்கா? காபி தான் குடிச்சிட்டோமே. வா போகலாம்." என்றவளின் கையை பிடித்து நிறுத்தினாள் ரித்வி.

என்ன என்று கேள்வியாக நோக்கிய ஷர்விகாவை ரித்வி எதுவும் சொல்லாமல் சில நொடி பார்த்தாள்.

"நீயும் வித்யுத்தும் பக்கத்து பக்கத்துல தங்கி இருக்கிங்களா? நீங்க ரெண்டு ஒன்னா ஆபீஸ்க்கு வந்து போறீங்க. இதை பத்தி நம்ம புராஜக்ட்ல என்ன பேசறாங்கன்னு உனக்கு தெரியுமா?" என்று கேட்டாள்.

ஷர்விகா சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் காபி கோப்பையையே பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வையை உயர்த்தாமலேயே "நானும் வித்யுத்தும் இப்போது ஒன்னா இருக்கோம். போனதை எல்லாம் மறந்துட முயற்சி செய்யறோம்." என்றாள்.

"என்ன பேசற ஷர்விகா? நீயா இப்பிடி பேசறது? 2 வாரத்துக்கு முன்னாடி தானே உன் வாழ்கையை பற்றி அவ்வளவு வலியோடு பேசின?" என்று ரித்வி படபடத்தாள்.

ஷர்விகா ரித்வி கையை பற்றி "உண்மை தான் ரித்வி, ஆனா நாங்க பழசை மறக்க முயற்சி செய்யறோம். பார்ப்போம்." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது "ஷர்விகா?" என்று ஒரு குரல் கேட்டது.

யார் என்று பார்த்த ஷர்விகாவின் முகம் புன்னகையில் மலர்ந்தது. ரித்வியிடம் சொல்லிவிட்டு அந்த புதிய மனிதரிடம் வந்தாள். அது ஷர்விகாவின் கல்லூரி சீனியர் அனந்த். இதே நிறுவனத்தில் ஆனால் வேறு கிளையில் பணிபுரிகிறான்.

"அனந்த் அண்ணா? எப்பிடி இருக்கிங்க? என்ன இங்கே?" என்று கேட்டாள்.

"ஒரு மீட்டிங் ஷர்விகா. அதுக்கு தான் இங்கே வந்திருக்கேன். நீ எப்பிடி இருக்க? அண்ணான்னு சொல்லி என் மனச உடைச்சிட்டியே" என்று நாடக பாணியில் கூறியவுடன் ஷர்விகா பக்கென்று சிரித்து விட்டாள்.

"நீங்க தான் என்னை அண்ணான்னு கூப்பிட சொன்ன ஞாபகம்." என்று கூறினாள்.

"நீ இவ்வளவு அழகான பொண்ணா மாறுவன்னு தெரிஞ்சிருந்தா நான் அப்பிடி சொல்லி இருக்கவே மாட்டேன்" என்று சிரித்தான். விளையாட்டுக்கு தான் சொல்கிறேன் என்று இருவருக்கும் தெரியும். ஏனென்றால் அனந்தின் மனைவி ரம்யா ஷார்விகாவுடன் படித்தவள். கல்லூரி காலத்தில் காதலித்து மணம் புரிந்தவர்கள் அவர்கள் இருவரும்.

"ஷர்விகா மீட்டிங்குக்கு நேரமாகுது. வர முடியுமா?" என்று வித்யுத்தின் குரல் கேட்டது. அனந்திடம் சொல்லிவிட்டு அறையின் உள்ளே வந்த ஷர்விகா "என்ன மீட்டிங்? எனக்கு எந்த மெயிலும் வரலையே?" என்று கேட்டுக் கொண்டே வித்யுத்தின் முகம் பார்த்த ஷர்விகா ஒரு நிமிடம் நிதானித்தாள். ஏனென்றால் அவன் முகம் கோபத்தில் கனன்று கொண்டிருந்தது.

"இப்படித்தான் பொது இடத்தில அடுத்தவன் கிட்ட வழிஞ்சிட்டு இருப்பியா. சே!"

ஷர்விகாவிற்கு கோபம் வந்தது. சேவா? அன்று வினுவுடன் சென்ற போது இவன் கூறியது ஞாபகம் வந்தது. அன்று அப்படி சொல்லிவிட்டு இன்று இவன் மட்டும் இப்படி பேசலாமா? திருப்பி கொடுக்கும் நோக்கத்தோடு "நான் யார்கிட்ட, எங்கே, எப்பிடி பேசறேங்கறது என்னோட தனிப்பட்ட விஷயம். அதை பத்தி பேச அடுத்தவங்களுக்கு உரிமையில்லை மிஸ்டர் வித்யுத்" என்று கூறினாள்.

சரேலென்று அவளை பார்த்த வித்யுத் அழுத்தமான அடிகளுடன் அவளை நோக்கி வந்தான். "எனக்கு உரிமையில்லியா?" என்று ஒரு விதமான அமைதியுடன் அவளை நெருங்கினான்.

வித்யுத்தின் கோபம் அதிகமாவதை கண்ட ஷர்விகா மெல்ல எச்சரிக்கையோடு பின்னே சென்றாள். அவளது மேஜைக்கு அவனுக்கும் இடையில் ஷர்விகாவை சிறை செய்த வித்யுத் "என் உரிமையோட அளவை காட்டவா?" என்றான்.

அவனின் முகம் பாறை போல் இருகியிருந்தது. அச்சத்தில் வேண்டாம் என்பது போல் அவள் தலையாட்ட ஒரு சில நொடிகள் அவளை பார்த்து விட்டு விடு விடுவிடுவென அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

ஷர்விகாவின் கோபம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகி விட்டது. வர வர அவனிஷ்டத்திற்கு ஆடும் பாவை போலல்லவா அவளை ஆக்கி விட்டான். இப்படி தன்மானம் இல்லாமல் இருப்பதற்கு சீக்கிரம் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டாள் ஷர்விகா.
 

Rajam

Well-known member
Member
வித்யுத்தும் நடந்தது சொல்லாம இருக்கான்.
இவளுக்கும் பொறுமை இல்லை.
மாமியாரிடம் நடிப்பு வேற.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom