• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடிக் கிடைத்த செல்வம் – 9

Umanathan

✍️
Writer
தேடிக் கிடைத்த செல்வம் – 9



ஷாரிகாவின் திருமணம் இன்னும் 3 மாதங்களில் நடை பெற உள்ளதால், ஷர்விகாவின் வெளிநாட்டு பயணமும் தள்ளி போடப்பட்டது. இதை கேட்ட வித்யுத் எந்த விதமான பதிலும் சொல்லவில்லை. இன்னும் இவளை 3 மாதம் பொறுத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைக்கிறான் போலும்.

அவன் பெற்றவர்களுக்காக தானே என்னை வர சொன்னான். இப்போது என்ன? எல்லாமே அவனிஷ்டத்திற்கு நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் முடியுமா? இந்த எண்ணம் தோன்ற தோளை குலுக்கி கொண்டு அவளின் வேலையை பார்த்தாள் ஷர்விகா.

நாளை சனிக்கிழமை ஷர்விகாவின் பெற்றோர்களும் தங்கையும் இங்கே வருகிறார்கள். ஷரிகாவின் திருமணத்திற்கு தேவையான பட்டு புடவைகளும், நகைகளும் வாங்கி கொண்டு அப்படியே இங்கே தெரிந்தவர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு போக திட்டமிட்டிருந்தார்கள்.

அன்றிரவு உணவு உண்ணும் பொழுது பார்வதி ஷர்விகாவை பார்த்து கேட்டார். "உன்னோட அம்மானும் அப்பாவும் எப்போ வர்றாங்க ஷர்விகா?"

"நாளைக்கு வர்றாங்க அத்தை. ஷாரிகாவும் வர்றா. திவாகர் வீட்ல இருந்தும் நாளைக்கு சென்னை வர்றாங்க, அதனால புடவை எடுத்துடலாம்ன்னு அப்பா சொன்னார். ஞாயித்துக்கிழமை நகைகளை எடுத்துட்டா பெரிய வேலை முடிஞ்சிடும்." என்றாள்.

இதற்கிடையில் வித்யுத் குறுக்கிட்டான் "ஆமாம்மா. அப்புறம் அடுத்த வாரம் முழுசும் பகல்ல பத்திரிக்கை கொடுக்கற வேலையை முடிச்சிடலாம்ன்னு மாமா சொன்னாங்க. நானும் ஷர்விகாவும் அந்த வாரம் முழுசா சீக்கிரம் வந்து மீதி சின்ன சின்னதாக ஏதாச்சும் வாங்கற வேலையய் முடிக்சிடுவோம்." ஷர்விகாவிற்கு ஒரு நிமிடம் எதுவும் ஓடவில்லை. இவன் எப்பொழுது அப்பாவுடன் பேசினான் என்று யோசித்தாள். அத்துடன் வாரம் முழுவதும் ஒன்றாக கடைகளுக்கா? அவளால் முடியுமா?

"ஒரு வாரம் ரெண்டு பேரும் சீக்கிரமாவா? புராஜக்ட்ல ஏதாவது பிரச்சினை வந்தா? யாராச்சும் ஒருத்தர் இருக்கணும் இல்லை?" அவளின் குறிப்பை அவன் புரிந்து கொள்வானா?

"எதுக்கு ஷர்வி? புராஜக்ட்ல எனக்கு தெரிஞ்சி எந்த பிரச்சினையும் இப்போதைக்கு வர வாய்ப்பு இல்லை. அதனால கவலைபடாதே." ஷர்வியாம், எவ்வளவு இலகுவாக அவன் வாயில் வருகிறது. நான் மட்டும் விது என்றால் கோபம் வருமாம் என்று மனதுக்குள் பொருமினாள்.

"அவங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?" என்று கேட்ட பார்வதிக்கு ஷர்விகாவை தாண்டி வந்தது வித்யுத்தின் பதில்.

"காலைல் ஆறு மணி ட்ரெயின்ல வர்றாங்கமா. நான் ஸ்டேஷனுக்கு வர்றதா ஏற்கனவே மாமாட்ட சொல்லிட்டேன்."

இரவில் தனிமையில் மீண்டும் ஷர்விகா கேட்டாள். "ரெண்டு பேரும் ஒன்னா போறதுன்னு தேவையா? இல்லைன்னாலும் வீட்ல பெரிசா சந்தேகம் வராது." என்று சொல்லி பார்த்தாள்.

"இது நம்ம பெத்தவங்காளுக்காக இல்லை. எனக்காகன்னு சொன்னா நீ நம்ப போறியா? காலைல அத்தை மாமா ஷாரிகாவை கூட்டிட்டு வர நான் சீக்கிரம் போகனும். அதனால குட் நைட்" என்று கூறி விட்டு அவளின் வியந்த முகத்தை கவனிக்காத மாதிரி படுத்து உறங்கினான்.

***

அடுத்த நாள் காலையில் அம்மாவின் மடியில் சலுகையாய் படுத்துக் கொண்டு வளவளத்துக் கொண்டிருந்தாள் ஷர்விகா. தங்கை ஷாரிகா எப்பொழுதும் செல்லிலேயே இருப்பதை பார்த்து "என்ன லைவ் ரிலே, கொஞ்சம் டிலேயா?" என்று சினிமா வசனம் கொண்டு கிண்டல் செய்தாள். மருந்துகளின் விளைவினாலோ என்னவோ பார்வதி காலையில் மெதுவாக தான் எழுவார்.

ஒரு வழியாக புடவைகளும், நகைகளும் ஷாரிகவிற்கு பிடித்த மாதிரி வாங்கினார்கள். திவாகரும், ஷாரிகாவும் எல்லோருக்கும் நடுவிலும் தனி உலகில் இருப்பதை பார்த்து ரசித்த ஷர்விகாவிற்கு அவளின் திருமணத்திற்கு எல்லாம் வாங்கியது ஞாபகத்திற்கு வந்தது. அப்பொழுது கூட வித்யுத் ஆசையுடன் தானே இருந்தான். இடையில் என்ன ஆயிற்று? எவ்வளவு யோசித்தாலும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.

அன்று வெளியே எங்கும் போக வேண்டிய வேலை இல்லை என்பதால் அப்பாவுடனும் ஷரிகாவுடனும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றாள்.

"ஷர்விகா, நகைகளை மட்டும் இங்கே விட்டுட்டு போக சொல்லி வித்யுத் சொன்னாருடா. ரெயில்ல எடுத்துட்டு போறது அவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியாது. அதனால் அடுத்த முறை நீயும் வித்யுத்தும் வரும் போது எடுத்துட்டு வருவீங்கன்னு சொன்னார்"

இவன் இவ்வளவு தூரம் என் பொற்றோர்களுடன் பழக வேண்டுமா? மறுபடியும் எல்லோர் மனதிலும் ஏன் நம்பிக்கையை விதைக்கிறான் முடிய வித்யுத் மீது ஷர்விகாவிற்கு கோபம் வந்தது.

அதற்குள் அவள் தந்தைக்கு போன் வரவே கோவிலுக்கு வெளியே சென்று விட்டார். சகோதரிகள் இருவரும் ஓர் இடத்தில் அமர்ந்தனர்.

"நீ எப்பிடி இருக்க அக்கா?" என்று ஷாரிகா திடுமென கேட்டாள்.

அவளை ஒரு சிரிப்புடன் நோக்கி விட்டு, "நீ தான் பாக்கிறியே. நான் நல்லா தானே இருக்கேன்."

"அதனால் தான் எல்லாரையும் விட்டுட்டு வெளிநாட்டுக்கு போக முடிவு செஞ்சிட்டியா?" ஷர்விகா இந்த கேள்வியை எதிர் பார்க்கவில்லை. சிறிது நேரம் அவர்களுக்குள் மௌனம் நிலவியது.

திடீரென்று பேச்சை மாற்றினாள் ஷாரிகா. "தேவையான பொருள் எல்லாம் வாங்கியாச்சுக்கா. இனி எனக்கு லெஹங்கா மட்டும் தான் வாங்கனும். நான், நீ, திவாகர், வித்யுத் அத்தான் மட்டும் போகலாம் என்று அத்தான் அப்பாட்ட சொல்லிட்டார். இங்கே ஒரு கடை நல்லா இருக்கும்ன்னு அத்தான் சொன்னார். நாம நாளைக்கு போகலாம்."

வித்யுத் லெஹங்கா கடை பற்றி கூறினானா. மனதில் தோன்றிய ஆச்சர்யத்தை முகத்தில் காட்டினாள் ஷர்விகா. அதை புரிந்து கொண்ட ஷாரிகா, "எனக்கு தெரியும் அக்கா. ஆனால் நான் பார்த்த வரைக்கும் அத்தான் ரொம்ப மாறிட்டார். நான் முன்ன சின்ன பொண்ணு. அதனால எனக்கு எதுவும் சரியாக புரிஞ்சிக்க முடியலை. சொல்லப்போனா நீ இன்னும் ஏன் இந்த கல்யாணத்தில் கட்டபாடு இருக்கனும்னு கோபம் கூட வந்தது. ஆனா இப்போ திவாகரை பார்த்ததுக்கு அப்புறம் தான் உன்னோட மனசு எனக்கு புரியுது. அதுக்காக எல்லாத்துக்கும் சரின்னு போ அப்படின்னு நான் சொல்லலை. ஆனா அத்தான் இல்லாம உன்னால வாழமுடியுமான்னு யோசி."

ஷர்விகா ஒரு புன்சிரிப்புடன் பார்ப்பதை பார்த்த ஷாரிகா பேச்சை நிறுத்தி விட்டு சிவந்த முகத்துடன் என்ன என்று கேட்டாள்.

"நீ இன்னும் சின்ன பொண்ணுன்னுங்கற நினைப்பிலேயே இன்னும் இருக்கேன். அதுதான் நீயா இப்படி பேசறதுன்னு ஆச்சரியமாக இருக்கிறது." என்றால் ஷர்விகா.

"போ அக்கா." என்று சிணுங்கியவள் முகம் மீண்டும் தீவிரமானது.

"ஈகோ பார்க்காம பேசி பாரேன்கா. அப்பிடி பேசி உங்க பிரச்சினை தீர்ந்துட்டா அப்பா அம்மா எவ்வளவு சந்தோஷப் படுவாங்க. அவங்களை விடு, விது அத்தான் இல்லாம உன்னால இருக்க முடியுமா?"

ஷர்விகா முதலில் ஒன்றும் பேசவில்லை. இருவருக்கும் இடையில் சிறிது நேரம் மௌனம் தான் இருந்தது. பின்னர் தங்கையின் முகத்தை பார்த்து புன்னகைத்தாள்.

"நான் எனக்குள்ளயே கேட்க பயந்து ஒதுக்கி வெச்ச கேள்விகளை நீ கேட்டுட்டடா. இதுக்கு பதில் என்னனு உனக்கும் தெரியும், ஆனால் அதை சொல்ல பயந்து தான் நான்..." அதற்கு மேல் பேச முடியாமல் பெருமூச்சு விட்டாள். பின் மீண்டும் தங்கையை பார்த்து "சின்ன பொண்ணு ஆனா பெரிய வார்த்தைகளை பேசற." என்றாள்.

"சின்ன பெண்ணா? எனக்கு இன்னும் 3 மாசத்துல கல்யாணம் தெரியுமா?" என்று சிரித்தவள் "என்ன அக்கா?" என்று கேட்டாள்.

சரி என்று தலை ஆட்டிய ஷர்விகா "நான் வித்யுத்கிட்ட ஒரு முறை மீண்டும் பேசி பாக்கறேன்" என்றாள்.

அதற்குள் அவர்கள் தந்தை வந்து விட மூவரும் வீட்டிற்க்கு திரும்பினர். தங்கையிடம் பேசியதில் ஷர்விகாவின் மனம் லேசானது. வித்யுத்துடன் பேச முடிவு செய்தவளுக்கு பாவம் அதற்கான சந்தர்ப்பம் அமையாது என்பது தெரியவில்லை.

அடுத்த நாள் அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பி ஷாரிகாவை அழைத்து கொண்டு நகரத்தின் நடுவில் உள்ள பெரிய ஷாப்பிங் மாலுக்கு போனார்கள். திவாகர் அங்கே வந்து இணைந்து கொண்டான்.

தேவையானதை வாங்கி விட்டு அங்கேயே உணவு உட்கொண்டு விட முடிவு செய்தனர். ஷாரிகாவிற்கும் திவாகருக்கும் தனிமை தர பின்னே வர சொல்லி விட்டு இவர்கள் இருவரும் உணவு ஆர்டர் செய்ய முன்னே சென்றனர். மாலின் அளவிற்கு ஏற்ப ஃபுட் கோர்ட்டும் மிக பெரிது.

ஃபுட் கோர்ட்டில் உள்ளே நுழைந்தவுடன் வித்யுத்தின் உடல் விறைத்து நின்றது. ஏன் என்ற குழப்பத்துடன் ஷர்விகா அவனை பார்க்கையில் அவளை பாரமலேயே ஒரு மேஜையை காட்டி "அங்க உட்காரு. நான் மெனு கார்டு எடுத்துட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றான்.

இவனை எப்பொழுது புரிந்து கொண்டோம் இப்போது குழம்புவதற்கு என்று எண்ணியபடி அவன் கூறிய மேஜைக்கு சென்று அமர்ந்தாள்.

சில நிமிடங்களிலேயே "சிஸ்டர்" என்ற குரல் கேட்டு திரும்பினாள். ஒரு ஆணும் பெண்ணும் அங்கே உணவோடு நின்றிருந்தனர். "இந்த டேபிள்ல நாங்க தான் உட்கார்ந்திருந்தோம். எங்கள் பேக் கூட அடியில் தான் இருக்கு. நீங்கள் வேற டேபிள் பார்த்துக்கறீங்களா" என்று கூறியதை கேட்டு மன்னிப்பு கேட்டு எழுந்தாள்.

வேறு மேஜை ஏதும் காலியாக இருக்கிறதா என்று அவள் பார்க்க தொடங்கிய போது வித்யுத் அருகே வந்தான். வேறு மேஜை இருப்பதாகவும், ஷாரிகா திவாகர் வந்து விட்டதாகவும் கூறி அவளை அழைத்து சென்றான்.

அதன் பின் வித்யுத் எதுவும் பேசவில்லை. மிகவும் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான். பாதி உணவில் திடுமென எழுந்து சென்றவன் வெகு நேரமாகியும் வரவில்லை. நல்லவேளை இதை கவனிக்கும் உலகத்தில் ஷாரிகாவும் திவாகரரும் இல்லை.

கிட்டத்தட்ட கிளம்பும் சமயம் தான் திரும்பி வந்தான். அப்பொழுதும் அவன் முகம் கல்லாக இருகியிறுந்தது. ஷாரிகாவின் முன் எதுவும் பேச தயங்கி அமைதியாக இருந்தாள் ஷர்விகா.

இரவில் தனிமையில் அவனிடம் பேசப் போனால், "எனக்கு தூக்கம் வருது. எதுவானாலும் அப்புறம் பேசலாம்" என்று கூறி அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

ஷர்விகாவிற்கு அவர்களின் திருமணத்திற்கு முன் வித்யுத்தின் இறுக்கமும் பாரா முகமும் நினைவுக்கு வந்தது.
 

Rajam

Well-known member
Member
நல்லா தானே.இருந்தான்.
திடிரென்று மூட் மாற காரணம் என்ன.
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom