• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடிக் கிடைத்த செல்வம் – 6

Umanathan

✍️
Writer
தேடிக் கிடைத்த செல்வம் – 6

கடந்த இரண்டு நாட்களாக இறுகிய முகத்துடனும், ஆழ்ந்த யோசனையுடனும் அமைதியாக இருக்கும் வித்யுத்தை பார்க்க பார்க்க ஷர்விகாவிற்குள் ஏனோ ஒரு இனம் தெரியாத பதட்டம் ஏற்பட்டது. என்ன ஆயிற்று? ஒரு வேளை உடம்பு சரியில்லையா?

ஓடி சென்று அவன் நெற்றியில் கை வைத்து பார்க்க வேண்டும் என்று ஏற்பட்ட ஆவலை ஒரு நெடிய மூச்சுடன் அடக்கினாள். இல்லை உடல் நிலை சரியில்லாதவன் போல் இல்லை. வேறு என்னவாக இருக்கும்?

நடந்தவைகளை எல்லாம் திரும்ப நினைத்து பேசியதில் இருந்து ஷர்விகாவின் மனம் சஞ்சலத்துடன் இருந்தது. திரும்ப முதலில் இருந்து எல்லாவற்றையும் மறக்க வேண்டும். இவன் அருகில் இல்லாத போதே அது முடியவில்லை. இப்பொழுது என்ன செய்வேனோ என்று உள்ளுக்குள் மருகினாள்.

புராஜக்டிலும் எந்த பிரச்சினையும் இல்லை. பின் என்ன தான் ஆனது? ஒருவேளை அன்று கூறியது நடக்க போகிறதோ? மண விலக்கு பற்றி யோசிக்கிறானோ? இந்த நினைவில் ஷர்விகாவின் உள்ளம் சில்லிட்டு திகைத்தது.

தன்னில் மூழ்கியிருந்தவளுக்கு வித்யுத் அவள் முன் வந்து நின்றது ஒரு கணம் புரியவில்லை. பின்னர் அவனை விழியகல ஏறெடுத்து பார்த்தாள். என்ன என்று அவள் கண்கள் அவனை கேட்டது. ஆனால் அதை புரிந்து கொள்ள அவன் அவளை பார்க்க வேண்டுமே. அப்போதுதான் இரண்டு நாட்களாக வித்யுத் அவள் முகத்தை பார்த்து கூட பேசவில்லை என்பது ஷர்விகாவிற்க்கு நினைவுக்கு வந்தது. ஆனால் என்ன என்று கேட்கும் உரிமை இல்லையே.

எங்கோ பார்த்தபடி “ஒரு முக்கியமான விஷயம் பேசனும், வர முடியுமா?” என்று கேட்டவனிடம் சரி என்று கூறி கிளம்பி சென்றாள். கார் அவர்கள் அலுவலகம் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு செல்லாமல் வேறு பாதை நோக்கி செல்வதை பார்த்து குழம்பினாள். ஏன் என்று கேட்க எத்தனித்து அவனை பார்த்தவளுக்கு பதிலாக கிடைத்தது அவனின் இறுகிய முகம் மட்டுமே. எப்படியும் கார் நிற்கும் போது போகும் இடம் தெரிந்து விடும் என்று ஒரு பெருமூச்சை விட்டபடி அமைதியாக இருந்தாள்.

தன்னினைவில் மூழ்கி இருந்தவள் கார் திடுமென நிற்கவும் சுற்றி பார்த்தாள். அங்கு இருப்பது எல்லாம் வீடுகளே. கடை, ஹோட்டல் மாதிரி ஏதுமில்லைய என்று குழப்பத்தோடு அவனை பார்த்தாள்.

"இது என்ன இடம்?" என்று கேட்டவளிடம் "இது என்னோட வீடு. நாம பேசபோறது முக்கியமான ஒரு விஷயம். வெளியே பேசறது நல்லதில்லை. அதனால் தான்." என்றான்.

அதைக்கேட்ட ஷர்விகாவிற்கு கோபம் தலைக்கேறியது. "வெளியே பேச வேண்டாம்ன்னா ஆபீஸ்லயே எத்தனையோ மீட்டிங் ரூம் இருக்கு. இங்கேதான் பேசனும்னு என்ன கட்டாயம்."

அவளின் பதிலை கேட்டு கோபமாக முகத்துடன் "எந்த விஷயத்தையும் சிக்கலாக்கறது தான் உனக்கு தெரியுமா. ஒரு முறை அடுத்தவங்க சொல்றத கேட்டா தான் என்ன?" என்று கேட்டான்.

அவனின் பதிலை கேட்ட ஷர்விகாவிற்கு சிரிப்பு தான் வந்தது. "நான் சிக்கலாக்குறேனா. நம்மோட வாழ்வுல இருந்து வெளியே போனது நீங்க தான். நான் இல்ல..."

தன் கையை உயர்த்தி அவளை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தவன், "இப்படி விதண்டாவாதம் செய்யறதா இருந்தா, இன்னைக்கு முழுக்க கூட இப்படி பேசிக்கிட்டே இருக்கலாம். ஆனால் நீ உள்ள வந்தின்னா பேச வேண்டியதை பேசிட்டு திரும்ப போய்டலாம்." என்று கூறிவிட்டு விடு விடுவென வீட்டின் உள்ளே சென்று விட்டான்.

சுருசுருவென்று வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவனை பின் தொடர்ந்தாள். என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். அவன் இஷ்டத்திற்கு பொம்மை போல் ஆட்டி வைக்கிறானே என்று பொறுமியபடியே அவன் சென்ற வீட்டிற்குள் நுழைந்தாள்.

விஸ்தாரமான ஹாலும் அடுத்து இருந்த சமயலறையும் முதலில் அவள் கண்ணில் பட்டது. அதிகமான அலங்காரங்கள் இல்லாமல் தேவையான பொருட்கள் மட்டும் கொண்டு வீடு சுத்தமாக இருந்தது. இவன் நாள் முழுவதும் அலுவலகத்தில் தான் இருக்கிறான். அப்புறம் வீட்டை யார் பார்த்துக் கொள்வது? அத்தோடு ஒருவருக்கு இவ்வளவு பெரிய வீடு தேவையா? ஒருவர் தானா? இந்தக் கேள்வி மனதில் எழுந்த போது சுரீல் என்றது. மனதில் தோன்றிய கேள்வியால் கண்கள் கரித்துக் கொண்டு வந்ததை அவன் பார்கும் முன்பாக பெரிய மூச்சுகள் எடுத்து சரியாக்கினாள்.

"அன்னம்மா ரெண்டு பேருக்கும் சமைச்சு வெச்சிட்டு தான் போயிருக்காங்க. முதல்ல சாப்பிட்டுட்டு அப்புறம் பேசலாம்." என்றான்.

அவள் கண்டிப்பாக வருவாள் என்று அவன் நம்பியிருக்கிறான். அப்படி என்றால் இன்னும் அவன் நினைத்ததை நான் செய்யும் நிலையில் தான் இருக்கிறோமா என்று யோசித்தாள் ஷர்விகா. இவ்வளவு தூரம் வந்து விட்டு சாப்பிட மாட்டேன் என்று கூறினால், சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் என்று நினைத்து சாப்பாட்டு மேஜையில் அவனுடன் அமர்ந்தாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு அமைதியாக சாப்பிட்டனர். என்ன பேச இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறான்? அதுவும் தனியாக? இங்கே பேச வேண்டும் என்றால் அலுவலக விஷயமாக இருக்காது. பின்னே? ஒருவேளை அன்று நான் கூறியது பலித்து விட்டதா? மண விலக்கு பற்றி பேசத்தான் அழைதிருகிரானோ? ஷர்விகாவிற்குள் இந்த எண்ணம் தோன்றியவுடன் இருந்த கொஞ்ச நஞ்ச பசியும் மறைந்து விட்டது.

அவனை பார்த்து "என்ன விஷயம் சொல்லுங்க வித்யுத்?" என்றாள். அவள் குரல் நடுங்காமல் இருப்பதே ஆச்சரியம் தான்.

சற்று நேரம் எங்கோ வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தவன் வாய் திறந்தான். அவனின் வார்த்தைகள் கேட்டவள் அப்படியே உறைந்தாள். இது அவள் நினைத்ததற்கும் மேலாக அல்லவா இருக்கிறது.

"என்ன? என்ன சொன்னீங்க?" அவன் சொன்னதை தான் தப்பாகத்தான் கேட்டு இருப்பதாக அவள் நினைத்தாள்.

வித்யுத் மீண்டும் சொன்னான். "நீ மறுபடியும் என்னோட இந்த வீட்டுல வந்து இருக்கனும்."

கோபத்துடன் எழுந்த ஷர்விகா "நீங்க என்ன நினைச்சிட்டு விளையாடுகிறீங்கன்னு எனக்கு தெரியவில்லை. இதுக்கு மேல பேச எனக்கு விருப்பம் இல்லை." வெளியே செல்ல முயன்றவளை விதியுத்தின் குரல் நிறுத்தியது.

"நான் உன்னை என்னோட வாழ சொல்லலை. என்னோட இந்த வீட்ல இருக்கத் தான் சொல்றேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. இது எனக்காக இல்லை. என்னோட அம்மாவுக்காக. அவங்களை உனக்கும் பிடிக்கும். அவங்களுக்காக நான் சொல்றதை கொஞ்சம் கேளு." என்றான்.

கைகளை கழுவி விட்டு இருவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் எதிர் எதிரே அமர்ந்தனர்.

"அம்மாவுக்கு ஒரு வருஷமாகவே உடம்பு சரியில்லை. அது உனக்கும் தெரியும். அவர்கள் இப்போ இங்கே வர்றாங்க. என்னதான் ட்ரீட்மெண்ட் எடுத்தாலும் அம்மா நமக்கு உடம்பு சரியாகனும்னு நினைச்சா தானே சரியாகும். அவங்காளோட மனக் கவலை எல்லாமே நம்மாள நினைச்சுத் தான். அம்மாவும் அப்பாவும் இங்க இருக்கற வரைக்கும் நீயும் நானும் ஒன்னா ஒன்னா இருக்கற மாதிரி நடந்துகிட்டா, அவங்களோட மனசு நிம்மதி ஆகிடும். அம்மா குணமாக இது ரொம்ப உதவும்."

எல்லாவற்றையும் கேட்ட ஷர்விகா கேலியுடன் கேட்டாள், "ஒன்னை மறந்துட்டீகளே? அவங்களுக்கு சரி ஆனதுக்கு அப்புறம் திரும்ப நாம பிரிஞ்சா அப்போ அவங்களுக்கு ஒன்றும் ஆகாதா?"

இல்லை என்று தலை அசைத்தான் வித்யுத்.
"ஆகாது. அதற்குள் நீ ஆன் சைட் சென்று விடுவாய். அதை வைத்து நான் சமாளித்துக் கொள்வேன்."

"நீங்க வேண்டாம்னா பிரிஞ்சிடனும், அப்புறம் வேணும்ன சேர்ந்துடனுமா? முடியாது வித்யுத். உங்க அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அவங்காளுக்காக கூட என்னால இது முடியாது" தெளிவாக அவனிடம் கூறினாள்.

அவளின் பேச்சை கேட்டு இறுகிய முகத்துடன் வித்யுத் கேட்டான். "என் அம்மாவுக்காகில்லைன்னா, உன் தங்கச்சிக்காக செய்வியா?"

"என்ன?" ஒன்றும் புரியாமல் அவனை நோக்கினாள்.

"உன்னோட தங்கை ஷாரிகாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கறது எனக்கு தெரியும். உன்னால அங்கு போக முடியலைன்னு எனக்கு தெரியும். நீ இந்த ஏற்பாட்டுக்கு நீ சம்மதிச்சா, உன்னோட புருஷனா இந்த கல்யாணத்துல நான் கலந்துக்குவேன். இல்லைன்னு சொன்னா மாப்பிள்ளை வீட்ல போய் நாம் ரெண்டு பேரும் ஒன்னா இல்லை. அதுக்கு காரணம் நீ தான்னும், உன் தங்கை உன் மாதிரி இருக்க மாட்டா என்று என்ன நிச்சயம்னும் கேட்பேன். கல்யாணம் நடக்கும்ன்னு நீ நினக்கறியா?"

"இது.. இது. அநியாயம்.." அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் தவித்தாள்.

"அநியாயம்ன்னு எனக்கு தெரியும். ஆனால என்னோட அம்மாவுக்காக நான் எதுவும் செய்வேன். முடிவு உன்னோட கையில." என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் கூறினான்.

இடிந்து போய் பொத்தென்று சோஃபாவில் அமர்ந்தாள் ஷர்விகா. இவன் ஏன் இப்படி ஆகிவிட்டான். திருமணத்திற்கு முன் எவ்வளவு இனிமை நிறைந்தவனாக இருந்தான். இடையில் என்ன வந்தது? இல்லை நான் தான் இவனின் உண்மை தன்மை தெரியாமல் இருந்து விட்டேனோ? இல்லையே அப்படி இருந்த மாதிரி ஞாபகம் இல்லையே. அவளின் மன குமுறல்கள் அவனுக்கு கேட்டதோ என்னவோ, எழுந்து உள்ளே சென்று குளிர் சாதன பெட்டியிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து வந்து கொடுத்தான்.

"நான்.. நான்.. யோசிக்கனும்."

ஷர்விகாவிற்கு பதிலாக கிடைத்தது தலை அசைவு தான். என்ன என்று அவனை மீண்டும் பார்த்தாள்.

"என்னோட அம்மா அப்பா இன்னும் 10 நாள்ல வர்றாங்க. அதுக்குள்ள நீ இங்க வரணும். அதனால உனது பதில் இப்பவே வேணும்."

மீண்டும் அவளுக்கு கோபம் தலைக்கேறியது. "உங்கள இப்போ பார்த்தாலே எனக்கு வெறுப்பா இருக்கு."

வித்யுத்தின் முகம் எந்த உணர்வையும் காட்டாமல் "கவலை படாதே. அதே வெறுப்பு தான் எனக்கும் இருக்கு. ஆனா என் அம்மாவுக்காக தான் நான் இதை செய்யறேன். உன்னோட முடிவு தான் என்ன?"

"எனக்கு தான் வேறு வழி இல்லையே." தவிப்புடன் வந்தது அவள் பதில்.

***

அந்த வார கடைசியில் வித்யுத் ஷர்விகாவின் விடுதிக்கு வந்தான். அன்று தான் அவள் விடுதியை காலி செய்து விட்டு வித்யுத்தின் வீட்டிற்க்கு போகப் போகிறாள். அவளது உடமைகளை எடுத்துக் கொண்டு அவளை அழைத்து செல்லவே வித்யுத் வந்திருக்கிறான்.

விடுதி மேலாளருக்கு வருத்தம். இரண்டு வருடமாக எந்த பிரச்சினையும் கொடுக்காமல் இருந்து வந்த பெண். திடுமென போகிறாள் என்ற வருத்தம். அத்தோடு ஒரு மாத நோட்டீஸ் கொடுக்காமல் வேறு காலி செய்கிறாள். அதற்காக கொடுத்த முன் பணத்தை கூட வேண்டாம் என்று சொல்லி விட்டாள். அவளால் எதற்காக அவருக்கு நட்டம் ஏற்பட வேண்டும்.

அழைத்து செல்ல வந்த வித்யுத்தை பார்த்து புருவங்களை ஆச்சரியமாக மேலே ஏற்றினார். மற்றபடி ஒன்றும் சொல்லவில்லை. விடுதியில் கூட்டி பெருக்கும் ஆயாவும், காவலாளியும் அவளுக்காக வெளியே காத்திருந்தனர். இரண்டு வருடமாக பழகிய பெண் அல்லவா. அத்தோடு இங்கே பணிபுரிபவர்கள் என்ற எண்ணத்தோடு அவள் பழகியதில்லை. அந்த பாசத்தில் அவர்கள் காத்திருந்தனர். ஷர்விகாவிற்கும் அங்கிருந்து செல்வது வருத்தம் தான். ஆனால் இன்றில்லவிட்டால் எப்படியும் ஆன் சைட் செல்லும் போது பிரிந்து தானே ஆக வேண்டும்.

அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த உடைகளை அவர்களிடம் தந்தாள். அத்தோடு கொஞ்சம் பணமும்.

"அலமு அக்கா, மணி அண்ணா. நான் இங்க இருக்கற வரைக்கும் என்னை வேத்தாளா நீங்க நினைச்சதில்லை. அதனால இதை நீங்கள் மறக்காம வாங்கிக்கனும்" என்று புன்முறுவலோடு கூறினாள்.

"நீ நல்லா இருக்க வேணும் கண்ணு. நீ மட்டும் என்ன, எங்களை வேலை பாக்கரவங்களாவா பாத்த. இப்போ உன் புருசன் கூட நல்லா இருக்கணும் கண்ணு." என்ற அலமு அக்கா வித்யுத்தை பார்த்தாள்.

"நீங்க தான் சர்வி பொண்ணோட புருஷனா? அவள நல்ல பாத்துக்கோப்பா. ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்." என்று வாழ்த்தினாள். மணி அண்ணனும் தான் பங்குக்கு வாழ்த்தினார்.

ஏனோ அந்த நல்ல உள்ளங்களிடம் இருந்து விடை பெற்ற போது ஷர்வியின் கண்கள் கலங்கி விட்டது. எதுவும் பேசாமல் அவள் ஏறியதும் காரை தான் வீட்டிற்கு விட்டான் வித்யுத். அவன் முகத்தில் தீவிர யோசனை மட்டுமே தென்பட்டது. என்ன தான் அம்மவிற்காக என்றாலும் இவளை சகித்துக் கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறான் போலும் என்று ஷர்விகாவிற்கு தோன்றியது. கேட்டது அவன் தானே பட்டுத் தான் ஆக வேண்டும் என்று எண்ணியபடி கார் பக்கவாட்டில் பார்த்துக் கொண்டு வந்தாள்.

கார் அவன் வீட்டு வாசலில் நின்றதும், இறங்கியவளை வரவேற்க ஆரத்தி தட்டோடு காத்திருந்தார் அன்னம்மா. "அன்னைக்கு உங்கள பாக்க முடியல. மகாலட்சுமி மாறி இருக்க தாயி. தம்பி நீங்களும் பாப்பா பக்கத்துல நில்லுங்க." என்று கூறி ஆலம் சுற்றினார். வேண்டாம் என்று தடுக்க போனவளின் கையை அழுந்த பற்றினான் வித்யுத்.

அன்னம்மா அப்படி சென்றதும் "எதுக்காக?" என்று கேட்டவளிடம் "அவங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க. அன்னம்மாவுக்கு சந்தேகம் வந்தா அம்மாவுக்கு தெரிஞ்சிடும்." என்று கூறியபடி அவளை உள்ளே அழைத்து வந்தான்.

அடுத்த அதிர்ச்சி அவள் உடமைகள் இருந்த அறை. அது அவளது தனி அறை இல்லை. அது வித்யுத்தின் அறை. அதிர்ந்து போனவள் வேகமாக வெளியே வாந்தாள். முதல் மாடி ஹாலில் அமர்ந்து ஏதோ புத்தகம் வாசித்து கொண்டிருந்தான்.

"இது என்ன. என்னோட பெட்டி எல்லாம் எதுக்காக..." அவளை அதற்கு மேல் முடிக்க விடாமல் "உடனே அடுக்க வேணாம் ஷர்வி. முதல்ல ரெஸ்ட் எடு. அப்புறமா பார்த்துக்கலாம்." என்று புன்சிரிப்புடன் கூறினான்.

ஒரு நிமிடம் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் அவன் கண்களை பார்த்தாள். எச்சரிக்கும் அவன் கண்களை உணர்ந்த போதுதான் அண்ணமா காபியுடன் மேலே வருவது தெரிந்தது.

அன்னம்மா சென்றவுடன், "எதையும் பார்த்து பேசு. அம்மா வந்ததுக்கு அப்புறம் நாம வேற வேற ரூம்ல இருந்தா இந்த திட்டம் எல்லாம் வீண் தான்." என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.

சூழலில் சிக்கியது போன்ற உணர்வுடன் விக்கித்து அமர்ந்தாள் ஷர்விகா.
 

Rajam

Well-known member
Member
சூப்பர்.
இப்போ ஷர்விகா அவன் வீட்டுக்கு வந்தாச்சு.
இனி அவன் வாழ்க்கையிலும்.
.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom