• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடிக் கிடைத்த செல்வம் – 3

Umanathan

✍️
Writer
தேடிக் கிடைத்த செல்வம் – 3

வித்யுத் ப்ராஜெக்டில் சேர்ந்து இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. அன்று ஹோட்டலில் கூறியபடி, இன்று வரை அவன் வேலை நிமித்தமாக மட்டுமே ஷர்விகாவுடன் பேசினான். வேறு எந்தக் குத்தலும் கிண்டலும் அவனிடம் இருந்து வரவில்லை. எந்நேரமும் அவனருகாமையில், வில்லில் ஏற்றிய நாணாய் விறைப்பாக இல்லாமல் சகஜமாக இருக்கத் தொடங்கினாள் ஷர்விகா.

ஒருவேளை அவன் கூறியது உண்மை தான் போலும். தனிப்பட்டப் பிரச்சினைகளை கொண்டுவராமல் வேலை நிமித்தமாக மட்டுமே பேசினால் எந்த சண்டையும் இல்லாமல் தவிர்க்க முடிந்தது. ஆனால் அவன் அருகாமை அவளுள் ஒரு இதத்தையும், அவளின் வேலையை அவன் பாராட்டும் போது அவளின் மனதில் பறக்கும் பட்டாம்பூச்சிகளையும் அவளால் தவிர்க்க முடியவில்லை. அப்படி உணருவது முட்டாள்தனம் என்று அவள் மூளைக்கு புரிந்தாலும், அவளின் மனதிற்கு புரியவில்லையே.

இப்படியே வெள்ளிக்கிழமை மாலையும் வந்தது. ஷர்விகா தன் பொருட்களை எல்லாம் கைப்பையில் வைத்தபடி இருக்கும் போது, அவளின் கைப்பேசி சிணுங்கியது. வித்யுத்தின் எண்ணைப் பார்த்ததும் அவள் முகம் யோசனையில் சுருங்கியது. வித்யுத் எதற்காக அழைக்க வேண்டும் என்ற யோசனையுடன் பச்சை பொத்தானை அழுத்தினாள்.

"ஷர்விகா, திங்கட்கிழமை நடக்கப் போற மீட்டிங்கில தரப்போகும் பிரசன்டேஷன்ல ஒரு சில விஷயங்கள் சேக்கனும். அதைப் பற்றி சொல்லனும். நான் பார்க்கிங்கில தான் இருக்கேன். கீழே வா." என்றான்.

"நீங்கள் போன்லயே சொல்லுங்க. நான் நோட் செஞ்சிக்கறேன்." என்றவளை கோபமாக இடை மறித்தான்.

"என்ன சொன்னாலும் அதற்கு எதிர் வாதம் செய்யறதுன்னு முடிவோட இருக்கியா? இது நான் நோட் எடுத்து வெச்சிருக்கற பேப்பர். அதை எப்படி ஃபோன்ல அனுப்ப முடியும். ஒரு சின்ன விஷயத்த கூட உன்னால புரிஞ்சிக்க முடியாதா? கீழே இறங்கி வா." என்றுரைத்து விட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் தொடர்பை துண்டித்தான்.

இவன் சொல்லும் படி ஆடும் பொம்மை போலல்லவா நடத்துகிறான். கட்டளையிட்டு விட்டு சிறு கோரிக்கையாமே. ஆவணங்களை கொடுக்க மறந்தது யார் குற்றமாம் என்று பொருமிக்கொண்டே கீழே சென்றாள்.

கார் பார்க்கிங்கில் அவனை அதிக நேரம் தேட தேவையில்லாமல் காரின் அருகில் நின்று கொண்டிருந்தான். அவனை நோக்கி வந்தவள் அவனிடமுள்ள மாற்றத்தை கண்டு திகைத்து நின்றாள். இது இன்று அவன் அலுவலகத்திற்கு போட்டு வந்த சட்டை இல்லையே. அது என்ன உடை என்று அவள் நினைவுக்கு வந்தது.

அது ஷார்விகா வித்யுதிற்கு முதன் முதலாக கொடுத்த பரிசு. இள நீல நிறம் அவனது தோற்றத்திற்கு எடுப்பாக இருக்கும் என்று தேடி தேடி எடுத்த சட்டை. இதை ஏன் இப்பொழுது அணிந்திருக்கிறான். அதை வாங்கியது, அவனுக்கு கொடுத்தது, அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து பரவசம் ஆனது என்று நியாபக நினைவுகள் கோர்வையாய் தோன்றியது.

கண்கள் கரித்துக் கொண்டு வந்த போது, பிரயாசைப்பட்டு மனதை அடக்கிக் கொண்டாள். இது சுயபச்சாதாபத்திற்கான இடமும் இல்லை நேரமும் இல்லை. மனதை கொஞ்சம் சமன் படுத்தி சுற்றம் அறிந்து பார்த்த போது தான் காரில் வேறு ஒருவர் அமர்ந்திருப்பதை பார்த்தாள்.

யாரென்று தெரிந்ததும் அவளின் கோபம் மீண்டும் தலை தூக்கியது. இன்று எனக்கு நேரம் சரியில்லை. இவனோடு அவளையும் பார்க்க வேண்டி இருக்கிறதே என்று நொந்தபடி ஒரு வேக பெருமூச்சை எடுத்து விட்டாள்.

அது வித்யுத்தின் சிறு வயது தோழி வினு. எப்பொழுதும் மறைமுகமாக ஷர்விகாவை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பாள். வித்யுத்தின் வாழ்வில் அவளுக்குத் தான் உரிமை அதிகம் என்பதை அடிக்கடி ஷர்விகாவிற்கு நினைவூட்டி வதைத்தவள் இவள் தானே. ஓர் பெரிய மூச்சை உள்ளிழுத்தபடி அவனை நோக்கி மீண்டும் நடந்தாள்.

"பிரசன்டேஷன்ல சேக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள இதுல நோட் செஞ்சி இருக்கேன். நீயும் ஒரு முறை பார்த்துட்டு, முக்கியமானத சேர்த்துடு." என்று வித்யுத் கூறிக் கொண்டிருக்கும் போதே கார் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

"எவ்வளவு நேரம் விது. இன்னும் நாம் 3 மணி நேரம் கார்ல போனும். இருட்டற முன்னாடி போய் போகனுமே?" என்று கொஞ்சல் குரலில் கேட்டுக் கொண்டே இறங்கிய வினு அப்பொழுது தான் ஷர்விகாவை கவனித்தாள். பார்த்தவளின் முகம் அதிர்ச்சியில் மாறினாலும் உடனே புன்னகை சிந்தியது. இந்த நாடகங்களை பல முறை பர்த்திருப்பதால் ஷர்விகா ஒன்றும் கூறவில்லை.

"ஷர்விகா? நீ தானா? நீயும் விதுவோட தான் வேலை செய்றியா? விது எங்கிட்ட சொல்லவே இல்லை. எப்படி இருக்க?" வினுவின் குரலில் ஷர்விகாவை கண்ட அதிர்ச்சி நன்றாக தெரிந்தது.

அதனை கண்டு கொள்ளாமல் ஹலோ வினு என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.

"நீ கார்ல போய் உட்காரு வினு. இன்னும் 5 நிமிஷத்துல கிளம்பிடலாம்." என்றான். அப்பப்பா அவனின் குரலில் தான் எத்தனை கனிவு. அவர்களின் உரையாடலை ஒரு ஏளனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வினு காரில் ஏறியவுடன் வித்யுத் பிரசன்டேஷன் பற்றி நினைவூட்டி விட்டு காரை நோக்கி திரும்பினான். அவ்வளவு நேரம் கடைபிடித்த பொறுமை காற்றில் மறைய "விதுவாமே? வெறும் விதுவா இல்ல விது டியர், விது டார்லிங்கா அந்த மாதிரி எதுவும் இல்லையா?" என்று குத்தலாக கேட்டாள்.

எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் "பொறாமையா? உனக்கு பொருந்தலைன்னு சொல்ல மாட்டேன். முன்னேயும் இப்படிதானே நடந்துகிட்ட?" என்றான்.

"3மணி நேரப் பிரயாணமோ. இன்னைக்கு மட்டுமா அல்லது வாரகடைசி முழுசுமா?" என்று கேட்டாள்.

"மிஸ். ஷர்விகா, நான் யாருகிட்ட எங்கே எப்போ போறேங்கறது என் தனிப்பட்ட விஷயம். அடுத்தவங்க அதை பத்தி பேச உரிமை இல்லை. பிரசன்டேஷன் தயார் செஞ்சிட்டு, ஞாயிறு மதியத்துக்குள்ள அனுப்பிடு." என்று கூறினான்.

ஷர்விகா கொஞ்சமேனும் சுயமரியாதையை காட்ட முடிவு செய்தாள். "அப்படியே மிஸ்டர் வித்யுத். ஆனால் ஒன்னு, நான் மிஸ் அல்ல. மிஸஸ் ஷர்விகா" என்று விட்டு திரும்பி அலுவலகத்திற்குள் நடந்து சென்றாள். மனதில் உள்ள நடுக்கத்தை குரலில் காட்டாமல் இருந்ததை நினைத்து ஒரு சந்தோஷத்துடன் சென்றாள். ஆனால் அவளையே கண்களில் ஒரு பளபளப்புடன் மற்றும் உதட்டில் ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த வித்யுத்தை அவள் கவனிக்கவில்லை.

***

ஷர்விகா அலுவலகத்திற்குள் நுழைந்த போது வாயிலில் இருந்த காவலாளி சொன்ன காலை வணக்கத்திற்கு பதிலாக ஒரு புன்சிரிப்புடன் பதில் கூறிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள்.

கடந்த இரண்டு வருடங்களாக வார விடுமுறை மற்றும் அரசாங்க விடுமுறைகள் எல்லாம் அவள் அலுவலகத்தில் தான் கழித்தாள் என்பது அவருக்கு தெரியும். அவளின் கழுத்தில், காலில் இருக்கும் அடையாளங்கள் அவள் மணமானவள் என்பதை தெளிவாக காட்டும். இருந்தாலும் தான் எதற்காக எப்பொழுதும் அலுவலகத்திலேயே இருக்கிறேன் என்பதை அவர் யோசித்து இருப்பாரோ என்று நினைத்தாள்.

உடனேயே அந்த நினைப்பை தூர விலக்கினாள். அவள் வாழ்வில் மிக முக்கியம் என்று நினைத்த ஒருவனே அவளை தவறாக எண்ணவில்லையா? இனி மற்றவர்கள் அவளைப் பற்றி என்ன நினைத்தால் அவளுக்கென்ன.

நேற்று சனிக்கிழமை முழுவதும் வேலை செய்து பிரசன்டேஷன் முழுவதும் முடித்து விட்டாள். ஒரு சில மாற்றங்கள் மட்டுமே பாக்கி. இப்படி நினைத்துக் கொண்டே அவளது அறையை நோக்கி சென்றவள் வாசலிலேயே நின்றாள்.

"இங்கே என்ன செய்கிறீங்க?" என்று கேட்டாள். கணினியில் கவனத்தை வைத்திருந்த வித்யுத் தலையை தூக்கி அங்கே நின்றிருந்த ஷார்விகாவை பார்த்தான். மீண்டும் கணினியை பார்த்தபடி பதில் கூறினான். "நாளைக்கு மீட்டிங்குக்கு ரெடி செய்ய வந்தேன். பிரசன்டேஷன் தயாரா?"

"இன்னைக்கு மதியம் தானே கேட்டீங்க. அதுக்கு இன்னும் நேரம் இருக்கு." என்றாள். வேறு ஏதேனும் கூறி அதற்கும் கொட்டு வாங்குவானேன்.

கணினியிலிருந்து கண்களை அகற்றாமல் "சரி, முடிச்சவுடனே கூறு. ரெண்டு பேரும் சேர்ந்தே பார்க்கலாம்." என்றான்.

பிரசன்டேஷன் நல்லபடியாக வந்த திருப்தி இருவர் முகத்திலும் தெரிந்தது.

எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு வித்யுத் ஷர்விகாவை நோக்கி "ஞாயித்துக் கிழமை கூட உன்னை ஆபீஸ்க்கு வர வச்சுட்டேன். அதனால் குறைந்தபட்சம் உன் லன்ச் மட்டுமாவது நான் பார்த்துக்கனும். வா, வெளியே எங்காவது போய் சாப்பிடலாம்." என்றான்.

வேண்டாம் என்று எப்படி மறுப்பது. மறுத்தால் தான் ஒவ்வொரு ஞாயிறும் அலுவலகத்தில் செலவழிப்பதை கண்டு கொள்வானோ? எனவே கைப்பையை எடுத்துக் கொண்டு அவனுடன் சென்றாள்.

பாதி உணவின் போது, "ஸ்வேதாவை ஞாபகம் இருக்கா" என்றவனின் கேள்விக்கு ஆம் என்று தலையாட்டினாள். ஸ்வேதா வித்யுத்தின் கல்லூரித் தோழி. வினுவைப் போல் இல்லாமல் ஷர்விகாவிடம் உண்மையான அன்போடு பழகும் ஒரு நல்ல தோழி. ஆனால் இடையில் நடந்த சூறாவளி எல்லோருடனும் இருந்த தொடர்பை அறுத்து விட்டது.

அந்த நினைவுகளில் அசை போடும் போது, வித்யுத் கேட்ட கேள்வியை கவனிக்காமல் விட்டாள். சட்டென்று கண் முன் ஒரு கை அசைவதில் தடுமாறி திரும்பிய போது அவன் அவளையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

"என்ன பகலிலேயே கனவா?" என்று கேலி போல கூறியவனை பார்த்த போது அவள் முகம் சிவந்தது.

என்ன என்று மீண்டும் தடுமாறி கேட்டவளிடம் மீண்டும் விளித்தான். "ஸ்வேதாவிற்கு இப்போ இரட்டை பெண் குழந்தைகள். அவங்களோட முதல் பிறந்த நாள் விழா இன்னைக்கு சாய்ங்காலம் இருக்கு. உனக்கு வேறு ஏதும் வேலை இல்லைன்னா வர முடியுமா?"

அது... என்று அவள் தடுமாறுகையில் வித்யுத் கோபத்துடன் அவளை பார்த்தான். "உன்னை உண்மையாக நேசிப்பவங்க எல்லோரையும் நோக வெச்சி பாக்கறதுல அப்படி என்ன உனக்கு ஒரு சந்தோஷம்? ஸ்வேதா என்னைகாச்சும் உன்னை வேத்து ஆளா பார்த்தது உண்டா?" என்று கேட்டான்.

அவள் வேறெங்கோ பார்த்தபடி "ஸ்வேதா எனக்கும் ஒரு நல்ல தோழி தான்." என்று மென்குரலில் கூறினாள். "அப்புறமென்ன தயக்கம். 6 மணிக்கு ரெடியா இரு" என்று கேட்டான்.

சரி என்று அவள் தலையாட்டவும் உணவுக்கு பில் வரவும் சரியாக இருந்தது. "உன்னை உன்னோட இடத்துல விட்டுடறேன். சாயங்காலம் உன்னை கூப்பிட்டு போக எனக்கு இடம் தெரியனும் இல்ல?" என்று கேட்டான்.

"வே.. வேணாம். ஆபீஸ்லயே விட்டுடுங்க. பக்கத்தில் தான் நான் இருக்கேன். சாயங்காலமும் நான் ஆபீஸ்க்கே வந்துடறேன்" என்று தடுமாற்றத்தோடு கூறி முடித்தாள்.

"ஏன் எல்லாவற்றையும் இப்பிடி சிக்கலா மாத்தற? எனக்கொன்னும் உன் வாசலில் தினம் தவம் இருந்து உன்னை கூட்டிட்டு போய் திரும்ப வர்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. அதனால வீணான கற்பனை எதுவும் வெச்சிக்காதே." என்று கோபத்துடன் கூறி முடித்தான்.

அவனிடம் எப்படி சொல்வாள், அவன் அப்படி செய்ய வேண்டும் என்று அவள் பேதை மனம் எதிர்பார்க்கிறது என்று.
 

Lakshmi

Well-known member
Member
மனம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை சொல்ல வேண்டியது தானே.அவள் கணவன் தானே அவன்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom