தென்றல் - 1

Umanathan

✍️
Writer
வாகன நிறுத்தத்தில் அந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினாள் வானதி.

“இந்தாடி உன்னோட வண்டி. பத்திரமா வந்துட்டோம் பாரு” என்றபடி இறங்கிய வானதி பின்னே திரும்பி பர்க்க, அவளுக்கு முன் அவள் தோழி சிந்தியா இறங்கி தரையில் அமர்ந்திருந்தாள்.

“ஹேய் லூசு. எந்திரிடி. கடைக்குள்ள சேர் போட்டிருப்பாங்க. அங்க போய் உட்காருவ.” என்றாள் வானதி.

“போடி. நீ பறந்த வேகத்துக்கு, திரும்ப பூமில கால் வைப்போமான்னே பயம் வந்திடிச்சி. அதனால நான் பூமித் தாய கொஞ்சிட்டு வந்திடறேன்.” என்று பதிலளித்தாள் சிந்தியா.

“ரொம்ப பண்ணாத. இப்போ ஒழுங்கா எழுந்திருக்கப் போறியா இல்லையா? மானத்தை வாங்காதே.” என்று மிரட்டினாள் வானதி.

கடைக்குள்ளே தோழியுடன் நுழைந்த சிந்தியா, “ஏண்டி உங்க வீட்டுல தான் ஒன்னுக்கு மூணு கார் இருக்கில்ல, அப்புறம் ஏண்டி என்னோட ஸ்கூட்டியவே புடிச்சிட்டு தொங்கற” என்று கேட்டாள் சிந்துயா.

வானதி நிர்வாகப் படிப்பு கடைசி வருடம் படிக்கும் இளம்பெண். ஐந்தரை அடி உயரத்தில் கலகலப்பே உருவான இனியவள். மாநிறத்திற்கு சற்று குறைவாய் இருந்தாலும் அவளின் பேசும் கண்களை பார்த்த யாருமே அவளை மறுமுறை பார்க்காமல் இருந்ததில்லை. உற்சாகமே உருவாய் சிரித்த முகமாய் இருக்கும் அவளை பார்க்கும் யாருக்கும் அவளை பிடித்துவிடும்.

கோயம்புத்தூரில் இருக்கும் மிகப்பெரிய தொழிலதிபர்களில் மிக முக்கியமான ஒருவர் சந்திரன். அவரின் ஒரே பெண் தான் வானதி. தாயற்ற பெண்ணான அவளின் மீது அவள் தந்தை உயிரையே வைத்திருக்கிறார். 3 தொழிற்சாலைகளின் உரிமையாளரான சந்திரனின் வீட்டு செல்ல இளவரசி அவள். மகளுக்காக அவர் விதவிதமாய் கார் வாங்கி வைத்திருந்தாலும், வானதிக்கு சிந்தியாவின் ஸ்கூட்டியை எடுத்து ஓட்ட மிகவும் பிடிக்கும்.

எந்த சாக்கு கிடைத்தாலும் அந்த வண்டியை எடுத்துக் கொண்டு உலாவ சென்று விடுவாள். இப்பொழுதும் அப்படித்தான். சிந்தியாவின் அன்னை சில பொருட்களை வாங்க வேண்டும் என்று கூற, வழக்கம் போல் தோழியை கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்.

ட்ராலியை தள்ளில் கொண்டு கடை முழுக்க சுற்றி பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

“நீ பாட்டுக்கு வண்டியை ஓட்ட சாக்குனு என் அம்மா கேக்கும் போதெல்லாம், சரின்னு கடைக்கு போய், கேட்டதெல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தடற. நீ இல்லாத சமயம் என்னை போட்டு படுத்தறாங்க.” என்று புலம்பிக் கொண்டே கூட வந்தாள் சிந்தியா.

“சே! ஏண்டி இப்பிடி சொல்ற. ஆன்ட்டி எவ்வளோ ஸ்வீட். அவங்க போய் படுத்தறாங்களா? நீ சரியான சோம்பேறிடி.” என்றாள் வானதி.

“ஊர்ல பத்து பன்னெண்டு ப்ரெண்ட வெச்சிருக்கவ எல்லாம் நிம்மதியா இருக்கா. உன் ஒருத்திய வெச்சிட்டு நான் படுற பாடு இருக்கே. சாமி” முணுமுணுத்தாள் சிந்தியா.

“மைண்ட் வாய்ஸ்னு நினைச்சிட்டு சத்தமா பேசிட்டு இருக்கற நீ.” என்று சிரித்தாள் இவள்.

“மைண்ட் வாய்ஸெல்லாம் இல்ல. உனக்கு கேக்கனும்னு தான் சொன்னேன்.”

“விடுடி விடுடி.” என்றவாறு நெய் பாட்டில் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தனர். அங்கிருந்த நெய்யில் ஒன்றை கையில் எடுத்த வானதி “ஏண்டி, உங்க வீட்ல எந்த கம்பெனி நெய் வாங்குவீங்க. வெறுமனே நெய் அப்பிடீன்னு மட்டும் எழுதியிருக்காங்க. எந்த பிராண்ட் வாங்கறது?”

அவளின் கேள்விக்கு பதில் இல்லாது போகவே அருகிலிருந்தவளின் முதுகில் படீரென்று ஒரு அடி வைத்தாள்.

“எரும, கேள்வி கேட்டா பதில் சொல்லாம எங்கடி பராக்கு பாத்துட்டு இருக்க?” என்று கேட்டபடி நிமிர்ந்தவள், அதிர்ந்து போய் ஒரு அடி பின்னால் சென்றாள்.

ஏனென்றால் அங்கிருந்தது அவள் தோழி சிந்தியா இல்லை. சொல்லப்போனால் அங்கிருந்தது ஒரு பெண்ணே இல்லை, ஒரு இளைஞன்.

“சாரி, நான் என்னோட பிரண்டுன்னு…” என்று ஆரம்பித்து என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றாள்.

“கொஞ்சம் வழி விடறீங்களா?” என்றவனின் கேள்வியை கேட்ட பின் தான் அவளின் ட்ராலி குறுக்கு வாட்டில் இருப்பதை உணர்ந்தாள்.

“சாரி” என்று மறுபடியும் கூறி, அவள் வண்டியை நகர்த்தினாள்.

“நல்லவேளை கையால அடிக்கற பழக்கம் இருந்திருக்கு. என்னா அடி.” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு சென்றான் அவன்.

அவனின் வார்த்தைகளை கேட்டவளின் முகம் சிவந்து விட்டது. சே! இப்படியா யார் என்ன என்று தெரியாமல் அடிப்பாள். எல்லாம் இந்த சிந்தியாவால் வந்தது. எங்கே போய் தொலைந்தாள்.

ஏனோ அந்த இளைஞனை திரும்ப பார்க்கத் தோன்றியது. அவள் எத்தனயோ ஆண்களை கல்லூரியிலும் வெளியிலும் பார்த்திருக்கிறாள். ஆனால் யாரும் இவனைப் போல் முதல் பார்வையில் அவளை ஈர்த்ததில்லை.

கிட்டதட்ட ஆறடி உயரமாய், அந்த உயரத்திற்கேற்ற கட்டுப் கோப்பான உடலுடன் இருந்தான். நன்றாக வாரிய சிகை, அடர்ந்த புருவம், கூர் நாசி, எந்த தீய பழக்கமும் இல்லை என்பதை சொல்வது போன்ற இயற்கையாய் சிவந்த இதழ்கள், பார்ப்பவரை கட்டிப் போடும் விழிகள். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த குரல் வளை, சிறிது நீண்ட அவன் கழுத்தில் தனியாக தெரிந்தது அவன் கழுத்தின் சங்கு.

அவனைப் பார்த்த சில நிமிடங்களில் அவன் தோற்றம் அவள் மனதில் பதிந்து விட்டது. அவனைப் பார்த்த அந்த நொடி அவளுக்குள் ஏதோ அசைந்தது. அவனை மீண்டும் பார்க்கும் ஆவலில் கண்களால் தேடிக் கொண்டே வந்தாள்.

திடுமென அவளின் ஆடையை யாரோ இழுப்பது போல உணர திரும்பிப் பார்த்தவள் அங்கே ஒரு சிறிய பெண் குழந்தையை கண்டாள். சுமார் ஒரு ஐந்து ஆறு வயது மதிக்கத் தக்க உள்ள ஒரு சிறு பெண் அவளின் ஆடையை இழுத்துக் கொண்டிருந்தாள். குனிந்து அக்குழந்தையை தூக்கியவள் “யார் நீங்க?” என்று கேட்டாள்.

“நான் மிருணா. உங்க கூட வந்தவங்களும் காணாம போயிட்டாங்களா? அவங்களைத் தான் தேடரீங்களா?” என்று கேட்டாள்.

என் கூடவா? அப்படியென்றால்? என்று எண்ணிய வானதி “நீங்க யார் கூட வந்தீங்க?” என்று கேட்டுக் கொண்டே அருகில் பெரியவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடினாள்.

“எங்க இளாப்பா கூட வந்தேன். பாட்டியும், தேவா அண்ணா கூடவும் வந்திருக்காங்க. ஆனா எல்லாரும் காணாம போயிட்டாங்க.” என்றது அந்த குழந்தை.

“அவங்க காணாம போயிட்டாங்களா?” என்று கேட்டபடி சிரித்தள் வானதி. பிறகு “சரி வா. அவங்க எங்க இருக்காங்கன்னு தேடலாம்.” என்றவாறு அக்குழந்தையை தூக்கிக் கொண்டு கடையை சுற்றி வந்தாள்.

இரண்டு அடுக்குகள் தாண்டியதும் சற்று முன் பார்த்த இளைஞன் ஒரு பத்து வயது மதிக்கத் தக்க பையனோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அதோ எங்க இளாப்பா.” என்று அவனை காட்டிய சின்னப் பெண், “இளாப்பா…” என்று சத்தமாய் அழைத்தாள்.

மிருணாவின் குரலைக் கேட்டு திரும்பியவன், வானதியின் கையில் அவளைப் பார்த்ததும் வேகமாய் அருகில் வந்தான். அவளிடம் இருந்து குழந்தையை வாங்கியவன் “மிரு குட்டி, எங்க போயிட்டீங்க? பாட்டி கையை விடக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல” என்றான்.

“இல்லப்பா. பாட்டி கையை பிடிச்சிட்டு தான் இருந்தேன், அங்க சாக்லேட் எடுத்துட்டு பார்த்தா பாட்டி காணாம போயிட்டாங்க” என்றது குழந்தை. அதை கேட்டு சிரித்தவன் “இனிமே கையை விடக் கூடாது. சரியா?” என்று கேட்க, சரி என்று தலையாட்டினாள் மிருணா.

பின் இவள்புறம் திரும்பியவள், அப்பொழுது தான் அவளை கவனித்தான். பார்த்ததும் மின்னிய அவன் கண்கள், அவள் அடித்ததை நினைக்கிறான் என்பதை கூறியது.

“ரொம்ப தாங்க்ஸ்” என்று கூறி விட்டு சென்று விட்டான். யார் இவன்? அந்த இரு பிள்ளைகளின் தந்தையா? அவனுக்கு மணமாகி விட்டதா? ஏனோ இதை நினைத்த போது அவளின் மனம் வலித்தது.

“இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?” சிந்தியாவின் குரல் கேட்டு திரும்பியவள், “எங்கடி போன எரும?” என்று கடிந்துக் கொண்டாள் வானதி.

பின்னர் வாங்கிய பொருட்களுக்கு பில் போட்டு வாங்கிக் கொண்டு சிந்தியாவின் வீடு வந்து சேர்ந்தனர்.

இரவின் தனிமையிம் தன்னையே கடிந்துக் கொண்டாள் வானதி. அவன் யாரோ. அவனை ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுக் கொண்டவள், அவனின் நினைவுகளை ஒதுக்கி வைத்து தூங்க முயன்றாள்.
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom