குறிப்பேடு 25

யாழினிக்கு அதிர்ச்சியில் ஒன்றுமே புரியவில்லை.

தந்தையை பார்த்தாள். வசந்தன் தலைகுனிந்து தரை பார்த்தார்.

சிவா கோபத்தோடு எழுந்து நின்றான். "அப்படின்னா நீங்கதான் தினேஷை கொலை பண்ணிங்களா அங்கிள்.?" என்றான்.

"அப்பா.. நான் அவனை ரொம்ப லவ் பண்றேன்.‌." என்ற யாழினிக்கு கண்கள் கலங்கியது.

"உன் சுய மரியாதையை அடகு வச்சிட்டு நீ யாரையும் லவ் பண்ண தேவையில்லை.. அது எனக்கும் பிடிக்காது.." என்றவரை குழப்பமாக பார்த்தாள் அவள்.

"நானும் நிறைய முறை வாட்ச் பண்ணியிருக்கேன் யாழினி.. அவன் மேல நீதான் உயிரா இருந்தா.. ஆனா அவன் உன் காதலை கூட புரிஞ்சிக்கல.. நீயா பார்த்துட்டு விலகிடுவன்னு நினைச்சேன். ஆனா நீயோ அவன் பின்னாடியே சுத்திட்டு இருந்த.. லவ்ங்கறது இரண்டு பக்கமும் இருக்கணும்.. என் பொண்ணு காதலுக்காக ஒருத்தன்கிட்ட கெஞ்சறது எனக்கு சுத்தமா பிடிக்கல.. உன் பர்த்டே பார்டியில் நீ சிவாவுக்கு கிஸ் தந்த.. நீங்க இரண்டு பேரும் லவ் பண்ணா அது கரெக்ட்.. ஆனா தினேஷை லவ் பண்றது சரி கிடையாதே.. அதான் உன் பர்த்டே பார்ட்டி நடந்த ராத்திரி அவனை பாலோவ் பண்ணேன். பிரேத மலையில் வச்சி அவனை கொன்னேன்.. அவன் பாடியை நாய் நரி இழுத்துட்டு போயிடும்ன்னுதான் நினைச்சேன்.. ஆனா அவன் பேயா வந்து நம்ம எல்லோரையுமே ஒரு பிரேத மாளிகைக்குள்ள அடைச்சி வச்சி கொல்ல டிரை பண்ணிட்டான். அவனை கொன்னது தப்பே இல்ல.." என்றவரை முறைத்தார் சதாசிவம்.

"சொசைட்டியில பெரிய மனிதனா இருக்கிங்க.. உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? லவ் பண்ணா அவங்களுக்குள்ள கெஞ்சுறாங்க.. கொஞ்சுறாங்க.. உங்களுக்கு என்ன போகுது.? வாங்க இப்ப ஸ்டேசனுக்கு போகலாம்.." என்றவர் அவரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

யாழினி தலையை பிடித்தபடி தரையை பார்த்தாள். இதற்கு அந்த பிரேத மாளிகையிலேயே தான் இறந்திருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு.

இது விதியா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் அவள் தன் தந்தையை பிரிந்துக் கொண்டே இருந்தாள். இதற்கு முன் கோமண சாமியாரால்.. இந்த முறை தந்தையின் செயலாலேயே.!

"அவன் பணமில்லாதவன்னு உங்க அப்பா அவனை கொன்னுட்டாரு.." என்ற சிவாவை குழப்பமாக நிமிர்ந்து பார்த்தாள் யாழினி.

அவனின் கண்கள் சிவந்து போயிருந்தது. கோபத்தில் உதடு துடித்தது.

"என் நண்பன் சாதாரண எழுத்தாளன்.. ஃபேமஸ் ஆகாதவன். உங்க அளவுக்கு பணம் இல்லாதவன். அதனால்தான் உங்க அப்பா கொன்னுட்டாரு.. தன் மகளுக்கு அவன் பொருத்தம் இல்லைன்னு நினைச்சி கொன்னுட்டாரு.." என்றான் கோபத்தோடு.

யாழினியின் கன்னத்தில் கண்ணீர் முத்துகள் உருண்டது.

"என் அப்பா அப்படி கிடையாது.." அவளையும் மீறி வந்தது வார்த்தைகள்.

"இதை என்னை நம்ப சொல்றியா.?" கோபத்தோடு கேட்ட சிவா மேஜையின் மீதிருந்த பொருட்களை கீழே தள்ளி விட்டான்.

"உங்க அப்பாவோட அந்தஸ்து கௌரவ ஆசைக்கு அநியாயமா என் பிரெண்ட் பலியாகிட்டான்.." என்று கோபத்தோடு சொன்னவன் அந்த அறையை விட்டு வெளியே போனான்.

யாழினிக்கு அழுவதை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.

அவள் வீட்டிற்கு வந்தபோது வீடே வெறிச்சோடி போய் இருந்தது.

இரண்டு நாட்கள் ஹாலின் சோபாவிலேயே விழுந்து கிடந்தாள்.

சிவா தனது சொத்துகள் முழுவதையும் விற்றான். வெளிநாட்டில் இருந்த தன் அக்காவின் வீட்டிற்கு புறப்பட்டான். அதன் பிறகு அவன் தன் சொந்த நாட்டிற்கே திரும்பவில்லை.

இரண்டு நாட்களுக்கு பிறகு எழுந்து அமர்ந்தாள் யாழினி. அவளின் தந்தைக்கு ஆயுள் தண்டனை உறுதி என்று அவளுக்கு நிச்சயமாக தெரியும்.

எழுந்தவள் அந்த டைரியை தேடி எடுத்து வந்தாள்.

வீட்டை விட்டு வெளியேறியவள் கால் போன போக்கில் நடந்தாள்.

வெகுதூரம் வந்து விட்டிருந்தாள். கனத்த மனதோடு நிமிர்ந்து பார்த்தாள். அவளின் முன்னால் சுடுகாடு ஒன்று இருந்தது. வெட்டியான் காவலுக்கு இல்லாத அந்த சுடுகாட்டுக்குள் நுழைந்தாள். பிணம் ஒன்று கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது.

சிலையின் அருகே சென்றவள் தன் கையிலிருந்த டைரியை தூக்கி அந்த சிதையின் மீது எறிந்தாள்.

அதே நேரத்தில் மருத்துவமனையில் "அந்த தினேஷோட உடலை எரிக்க தந்துட்டிங்களா.?" என கேட்டார் மருத்தவர் ஒருவர்.

"தந்தாந்துச்சி சார்.. பக்கத்து சுடுகாட்டுலதான் எரிக்கறாங்க.." என்றார் அவருக்கு முன்னால் இருந்தவர்.

நெருப்பில் டைரி எரிவதை கண்ட யாழினியின் கண்கள் கலங்கியது.

"வந்துவிடு மகளே.. உனக்காக நந்தவனத்தை உடைய ஒரு கோவில் உனக்காக காத்திருக்கிறது.‌." என்று அவளின் காதோரம் கேட்டது கோமண சாமியாரின் குரல்‌.

"அங்கும் சிறை.. இங்கும் தண்டனை.." என்றவள் நெருப்பை நோக்கி பாய்ந்தாள்.

முற்றும்.

"சார்.. நிஜமாவே கதை பினிஷ்டா.?" என்று கேட்ட தன் வாசகியை பார்த்தான் தினேஷ். அவளின் கையில் 'ஓர் ஆன்மாவின் குறிப்பேடு' என்ற நாவல் இருந்தது. அது அவன் எழுதியதுதான்.

அவளை பார்த்து ஆமென தலையசைத்து புன்னகைத்தான் அவன்.

அவர்கள் இருந்தது புத்தக கண்காட்சி ஒன்றில். அந்த அரங்கில் அவனது பெயரோடு கூடிய தனி பகுதி இருந்தது. அங்கே வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன அவன் எழுதிய புத்தங்கள் அனைத்தும். வாசகர்கள் கூட்டம் அந்த பகுதியில் அமோகமாக இருந்தது.

தினேஷ் அது அரங்கின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தான். காலையிலிருந்து வாசக ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு தந்துக் கொண்டிருந்தான்.

"ஆனா சுத்தமா நல்லா இல்ல சார்.." என்றாள் அவனது புத்தகத்தை கையில் வைத்திருந்த அந்த பெண்.

நேர்மையாக பதிலளித்தாள் அவள். தினேஷிற்கு தெரியும் அந்த கதை இவளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றது போல் இருக்காது என்று.

அந்த கதை அவனின் முதல் மர்ம நாவல். ஆனால் அப்போது யாரும் அந்த கதையை பதிப்பிக்க விரும்பவில்லை. 'பேர் தெரியாத எழுத்தாளரின் கதைகளை நாங்கள் பப்ளிஷ் செய்ய மாட்டோம்..' என்று சொல்லி விட்டார்கள்.

ஆனால் அதன் பிறகு அவன் வாழ்வில் முன்னேற்றம். அவன் எழுதிய பல கதைகளும் வின்னிங் அவார்ட் பெற்றுக் கொண்டே இருந்தது.

இன்று அவனுக்கு ஐம்பத்தி ஐந்து வயது. அவனது பதினாங்கு நாவல்கள் திரைப்படமாக வெளி வந்துள்ளன. ஐந்து நாவல்கள் சீரியலாகவும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஷார்ட் பிலிம்மாகவும் வெளி வந்துள்ளன. அனைத்தும் மர்ம கதைகளே. ஒற்றை பேயை வைத்து பத்து கதைகள் படைக்கும் அளவிற்கு முன்னேறியிருந்தான் அவன்‌.

ஆனாலும் இந்த முதல் கதை அவனின் முழு முயற்சி. அதை வெகுநாளாக காகிதமாகவே வைத்திருந்தவன் இப்போதுதான் அச்சில் ஏற்றியிருந்தான். வழக்கம் போல இதுவும் அமோக விற்பனைதான். ஆனால் முந்தைய கதைகளை போல் இல்லை இது.

"யாழினியை மட்டுமாவது நீங்க உயிரோடு விட்டிருக்கலாம்.." என்றாள் அந்த வாசகி.

இப்போது யோசித்து பார்த்தால் சரியென்றுதான் தோணுகிறது. ஆனால் அன்று அதுதான் அவனுக்கு எழுத வந்தது. யாழினியின் இறப்புதான் அந்த கதையில் முக்கியமாக தோன்றியது.

இன்னோரு வாசகன் ஒருவன் எங்கிருந்தோ ஓடி வந்தான்.

"சார்.. நீங்க என் நம்பிக்கையை உடைச்சிட்டிங்க.. எல்லோரையும் அந்த மாளிகைக்குள்ளயே கொன்னிருந்தா கூட கதை நல்லா இருந்திருக்கும். ஏன் இப்படி எழுதி வச்சிங்கன்னு தெரியல.. இதுல பயமே இல்லை எனக்கு. மர்மமாவும் இல்ல.." என்றான்.

"அடுத்த நாவலில் உங்க தேவையை திருப்தி செய்றேன்.." என்றான் தினேஷ்.

"போங்க சார்.. நீங்க ரொம்ப மோசம்.. இந்த ஒரு முறை இந்த கதையை உங்க முதல் மர்ம கதையா நினைச்சி போனா போகுதுன்னு விடுறோம்.." என்றுவிட்டு திரும்பி சென்றான் ‌அவன்.

மாலை நெருங்கியது. பதிப்பகத்தார் தினேஷின் அருகே வந்தனர்.

"எங்க இன்விடேசனை ஏத்துக்கிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ் சார்.." என்றார் அந்த பதிப்பகத்தார்.

"டைம் ஆச்சி கிளம்பட்டுங்களா நான்.?" என்ற தினேஷ் அங்கிருந்து கிளம்பினான்.

தன் வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு இறங்கினான்.

நாய்க்குட்டி ஒன்று ஓடி வந்து அவனின் கால்சட்டையை பிடித்து கடித்து இழுத்தது.

"ஹோ.. ஜிம்மி.." என்று அதன் தலையை தடவி விட்டுவிட்டு நிமிர்ந்தவன் உள்ளே நடக்க இருந்த நேரத்தில் அவனின் காலடியில் வந்து விழுந்தது புத்தகம் ஒன்று. ஓர் ஆன்மாவின் குறிப்பேடு. நிமிர்ந்து பார்த்தான். யாழினி இரு பக்க இடுப்பிலும் கைகளை பதித்தபடி நின்றிருந்தாள். கண்களில் கோபம் இருந்தது.

இன்னுமும் அவள் மட்டும் இளமையாக இருப்பது போல தோன்றியது அவனுக்கு. தன்னை மறந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.

"என்ன கருமத்தை எழுதி வச்சிருக்க நீ.?" என்றாள் கோபத்தோடு அவள்.

தினேஷ் புத்தகத்தை கையில் எடுத்தான். "என் முதல் மர்ம நாவல்.. நீயென்ன கருமம்ன்னு திட்டுற.?" என கேட்டவன் புத்தகத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

"அதுக்கு ஏன்டா எல்லாத்தையும் கொன்னு வச்சிருக்க.? என்னையும் சேர்த்து ஏன்டா கொன்ன‌.?" என கேட்டவளின் அருகே வந்தவன் அவளின் தாடையை பற்றினான். கொஞ்சினான்.

"கதையில நானே இறந்துட்டேன்.. நீ உயிரோடு இருந்தா நல்லாருக்காதே.. அதான்.." என்றவனின் பின்னந்தலையில் வந்து விழுந்தது கார் சாவி ஒன்று. திரும்பி பார்த்தான். சிவா வெளியே இருந்து வந்துக் கொண்டிருந்தான்.

சிவா இப்போது தன் தொழிலில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருந்தான். தினேஷின் கதைகளை வைத்து அவன்தான் படம் எடுத்துக் கொண்டிருந்தான்‌. நண்பனின் கதை மீது அவன் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. நல்ல வருமானம்தான் வந்து சேர்ந்தது.

"என்ன மாதிரி யோசிச்சி இருக்க நீ.? நல்லவேளை வசந்தன் சார் போன வருசமே ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு.. இந்த புத்தகத்தை மட்டும் படிச்சிருந்தாருன்னா உன்னை நிஜத்துலயும் கொன்னுட்டு நிஜமாவே ஜெயிலுக்கு போயிருப்பாரு.." என்றான். அவனின் தலையில் பாதி வெள்ளி கம்பியாகதான் இருந்தது.

"என்னவோ யோசனை அப்ப எழுத்திட்டேன்.. விடுங்கடா.." என்றவன் மனைவியை திரும்பி பார்த்தான்.

"பசங்க எங்கே.?" என்றான்.

"காலேஜ் பிரெண்ட்ஸோடு சேர்ந்து என்னவோ பர்த்டே பார்டிக்கு போறேன்னு சொன்னாங்க.." என்றவள் புத்தகத்தில் எழுதியிருந்த பர்த்டே பார்டியை பற்றி நினைவு வந்து கணவனின் தோளில் அடித்தாள்.

"பூனைக்குட்டியை போல உன்னையே சுத்தி வந்துட்டு இருக்கேன் நான்.. ஆனா நீ என்னை இந்த முட்டைக்கோஸ் மூஞ்சிக்கு கிஸ் தந்ததா இதுல எழுதி வச்சிருக்க.." என்றாள் எரிச்சலோடு.

அப்போது ஏதோ ஒரு கற்பனையில் எழுதி விட்டான். ஆர்வ கோளாறில் எதையும் திருத்தாமல் அப்படியே பப்ளிஷ்க்கும் தந்து விட்டான்.

"அந்த கிஸ் சீனை என்னாலயும்தான் ஜீரணிச்சிக்க முடியல.. அதுக்காக நீ என்னை முட்டைக்கோஸ் முகம்ன்னு சொல்லாதே.. கிழவின்னு கூட பார்க்காம பல்லை உடைச்சி வச்சிடுவேன்.." என்றான் சிவா.

"இதோ.. இரண்டு பேரும் சண்டை போடாம இருங்க.. நான் இந்த புத்தகத்தை கொண்டு போய் என் பர்சனல் லைப்ரரியில் வச்சிட்டு வந்துடுறேன்.." என்றவன் தனது தனி நூலகத்தை நோக்கி நடந்தான்.

அவனது தனி நூலகம் இருட்டாக இருந்தது. உள்ளே நுழைந்து கதவை தாழிட்டு விட்டு நடந்தான். விளக்கை ஒளிர விட்டான்.

கையிலிருந்த புத்தகத்தை கொண்டு சென்று மற்ற புத்தகங்களின் வரிசையில் வைத்தான். அனைத்து புத்தகங்களையும் பார்த்தான். எத்தனை எத்தனையோ.. அவ்வளவும் அவனுக்கு பெயர் வாங்கி தந்தவை. பதிப்பகத்தாருக்கும், திரைப்பட தயாரிப்பாளருக்கும் லாபம் ஈட்டி தந்த கதைகள். வாசகர்களை அழ வைத்த கதைகள் பல. பயமுறுத்தி உறங்க விடாமல் செய்த கதைகள் பல. அனைத்தும் அவனின் பொக்கிஷம்.

புத்தகங்களை பார்த்து ரசித்தவன் தரையில் மண்டியிட்டான். அந்த கீழ் அடுக்கில் கடைசி வரிசையில் ஒரு ஓரமாக இருந்த டைரியை கையில் எடுத்தான்.

நடந்ததை நினைத்து பார்த்தான். பால் பாக்கெட் வாங்க சென்றவன் குருதி நதிக்கரை சென்றதும் உண்மை. பிரேத மலையில் இந்த டைரி கிடைத்ததும் உண்மை. அதன் பிறகுதான் அனைத்தும் கற்பனை. அதன் பிறகு இந்த டைரி அவனை உறங்க விடவில்லை. வீட்டிலேயே பல விசயங்கள் கற்பனையில் வந்து அவனையும் சேர்த்து பயமுறுத்தின. பயங்களைதான் கதையாக மாற்றி தாளில் எழுதினான்.

அந்த டைரியினால் அவனுக்குள் உண்டான கற்பனையை நினைத்தால் இன்னமும் அவனுக்கு உடல் சிலிர்க்கும்.

சாந்தவி இப்போதும் கூட நேரில் வந்து பயமுறுத்துவது போலிருக்கும். கோமண சாமியார் கட்டிய பிரேத மாளிகை அவனை தனக்குள் இழுக்கும். அனைத்தும் கற்பனை என்று தெரிந்தும் கூட அவனால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. முதலில் பல நாட்கள் அந்த கற்பனையிலேயே மூழ்கி போய் விட்டான். தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் கூட அந்த கற்பனை கோட்டைக்குள் இழுத்துக் கொண்டான் அவன்‌.

இந்த புத்தகம் அவனின் அரைகுறையாக கூட இருக்கலாம். ஆனால் அவனின் கற்பனையை அவன் மட்டும்தான் வாழ்ந்தான். அவனின் சில வாசக நட்புக்களும் அந்த கற்பனையில் வாழ்ந்திருப்பார்கள் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அரைகுறையாக இருந்தாலும் கற்பனையும் சில நேரத்தில் நிஜமே. அதுவே அவனுக்கே போதுமானதாக இருந்தது.

டைரியை பழைய இடத்தில் வைத்து விட்டு திரும்பினான்.

"மரகதா.. உன்னை கொல்லாமல் விட மாட்டேன்.." என்று எங்கிருந்தோ ஓடி வந்த சாந்தவி தன் கையிலிருந்த ரத்த கரை படிந்த வாளால் அவனின் நெஞ்சில் குத்தினாள்.

பயந்து போய் நெஞ்சை தொட்டவன் கண்களை மூடி திறந்தான். அவன் முன் யாரும் இல்லை. கற்பனை என்று தெரிந்தும் ஒவ்வொரு முறையும் அவனை பயம் கொன்றது.

பெருமூச்சி விட்டுக் கொண்டு நூலகத்தை தாழிட்டு விட்டு வெளியே வந்தான்.

ஹாலில் யாழினியும் சிவாவும் அமர்ந்து என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் தன் வாழ்வில் அடைந்தது தன் பாக்கியம் என்று அவனுக்கு தெரியும்.

ஆரம்பத்தில் அவனிடம் பணம் இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் பாசத்தை தந்து துணை நின்றார்கள். கதையில் கூட அவனோடு சேர்ந்து வாழ்ந்தார்கள்.

அன்று இரவு உறங்கும் முன் "ஓர் ஆன்மாவின் தேடல் இதுன்னு முதல் பக்கத்து முன்னுரை படிச்சிட்டு நான் கூட இந்த ஆன்மா மரகதனுடையதோன்னு நினைச்சிட்டேன்.." என்றாள் யாழினி.

அவளை அணைத்துக் கொண்டவன் 'ஆமா.. அது மரகதனின் ஆன்மாதான்.. ஆனா நிஜத்தில் வாழும் இந்த மரகதனுடைய கதை.. உன்னை அடைய மரகதனாவும் நானே கற்பனை உருவம் எடுப்பேன்.. உனக்காக அமுதனாகவும் நானே வருவேன்.. உன்னை காதலிக்க தினேஷாவும் நானே நிகழ்காலத்துலயும் இருப்பேன்..' என மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

அவனின் அழைப்பில் யாழினி உறங்கி போனாள். அவளின் அருகே அவனும் உறங்கி போனான்.

நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது "தினேஷ்.. போன் அடிக்குது பாரு.." ஒன்று உறக்க கலக்கத்தில் சொன்னாள் யாழினி.

தினேஷ் அரை தூக்கத்தோடு போனை எடுத்து காதில் வைத்தான்.

"சார் நான் ரிஷி.. நீங்க சொன்னதுல ஒரு புது க்ளூ கிடைச்சிருக்கு.." என்றான் எதிரில் இருந்தவன்.

"சொல்லுங்க ரிஷி.."

"நீங்க சொன்ன பிரேத மலை.. பிரேத கோட்டை.. குருதி நகரம்.. இதை பற்றி நிறைய இடத்துல விசாரிச்சி பார்த்தேன் சார்.. அந்த டைரி உங்க கைக்கு கிடைச்ச பிறகு மீண்டும் அந்த குருதி நதிக்கரையும், பிரேத மலையும் உங்க கண்ணுக்கே தெரியலன்னும் அது காணாம போயிட்டதாகவும் நீங்க என்கிட்ட சொல்லி இருந்திங்க.. இத்தனை நாளா அலைஞ்சி திரிஞ்சதுல நான் அந்த குருதி நதிக்கரையை கண்டுபிடிச்சிட்டேன் சார்.. அந்த ஊர் ரொம்ப வித்தியாசமா இருந்தது. இரண்டு ஆள் உயரத்துக்கு மனுசங்க இரண்டு பேர் நடந்து போனதை கூட பார்த்தேன். அந்த இடத்துலே இருந்த ஒருத்தர்.. மூணு நாள் முன்னாடி பௌர்ணமி.. அதனால பிரேத மலையும் இந்த ஊரும் விழிச்சது.. ஆனா இன்னைக்கு மறைஞ்சிடும்ன்னு சொன்னாரு..

எனக்கு ஒரே குழப்பம் சார்.. அதனாலதான் இன்னைக்கு முழுக்க அந்த ஊர்லயே இருந்தேன்.. ஆனா என்ன நடந்ததுன்னு நான் சொன்னா நீங்களே நம்ப மாட்டிங்க.. அந்த ஊர்ல நின்னு அங்கிருந்த ஒரு பொண்ணுக்கிட்ட பேசிட்டு இருந்தேன். கோவிலுக்கு பூசை செய்ய போயிட்டு இருந்தாளாம். அழகா இருந்தா. அவளோடு பேசிக்கிட்டே கண் மூடி திறக்கறேன்.. மணி நைட் பன்னென்டு.. நானும் என் வீட்டுல இருக்கேன்.." என்றான் அவன்.

"ஓ.." என்ற தினேஷிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இனி அந்த கற்பனை தன் மனதில் மட்டுமல்லாமல் அவனின் மனதிலும் வாழும் என்பதை தவிர அவனுக்கு வேறு எதுவும் தெரியாது. தன்னை போலவே ரிஷியும் கடைசி நாளில் அந்த இடத்திற்கு போயுள்ளான் என்றும் தினேஷ்க்கு தெரியும். மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு அந்த இடம் விழித்தால் ஒழிய அதை பற்றி மற்றவர்களுக்கு தெரியாது என்றும் தெரியும்.

"நீங்க இதுக்காக வேலை செஞ்சது போதும் ரிஷி.. மத்த வேலையை பாருங்க.. நான் நாளைக்கு பேமெண்டை டிரான்ஸ்ஃபர் பண்ணி விட்டுடுறேன்.." என்றான் தினேஷ்.

போன் இணைப்பை துண்டித்து விட்டு போனை மேஜையின் மீது வைத்தான். படுக்கையில் திரும்பி படுத்தான். சாந்தவி படுத்திருந்தாள். கண்களை மூடி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை அணைத்தான் தினேஷ்.

"எழுதிய சில கேரக்டர்ஸோடவே வாழ்ந்தா அவங்க முரட்டு ரைட்டர்ன்னும், படிச்ச சில கேரக்டர்ஸோடவே வாழ்ந்தா அவங்களை முரட்டு ரீடர்ன்னு ஒரு காலத்துல சொல்வாங்களாம்.." என்று முனகியபடியே கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான்.

முற்றும் நட்புக்களே..

கதை எப்படின்னு மறக்காம சொல்லுங்க..

மர்மம் மற்றும் திகிலில் இது எனது முதல் நாவல்.. அதனால குத்தம் குறை இருந்தா மன்னிச்சிகங்க.. கதை பற்றிய உங்களது நிறை குறைகளை மறக்காம சொல்லுங்க. குறை கொஞ்சம்ன்னா கமெண்ட்ல சொல்லுங்க. குறை ரொம்ப அதிகமா இருந்தா ஐபியில சொல்லுங்க..

இதுவரை இந்த கதைக்கு ஆதரவு அளித்த அனைத்து நட்புள்ளக்களுக்கும் நன்றிகள். நீங்கள் தந்த ஒவ்வொரு வோட்டிற்கும் ஒவ்வொரு கமெண்டிற்கும் எனது நன்றிகள். ஊக்குவிப்பு ஸ்டிக்கர் (பிரதிலிபியில்) தந்த நட்புக்களுக்கும் நன்றிகள்.

சைலண்ட் ரீடர்ஸ்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

கதை நல்லாருந்தா வோட் பண்ணுங்க. கமெண்ட் பண்ணுங்க.. ரொம்ப நல்லாருந்தா உங்க பிரெண்ட்ஸ்கும் ஷேர் பண்ணுங்க.. அடுத்தடுத்த படைப்புக்கான நோட்டிபிகேஷன்களை பெற பாலோவ் பண்ணுங்க..

நன்றிகளுடன் crazy writer
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom