காதல் கடன்காரா 23

மூர்த்தி பணி மாறுதல் பெற்ற ஊருக்கு கிளம்பி சென்றான். செல்லும் முன் அபிராமியை தேடி வந்து "புவி சொன்ன எதையும் மனசுல வச்சிக்காதே.." என்று விட்டு சென்றான்.

அபிராமி புவனா சொன்னது எதையும் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் கார்த்திக்கிற்குதான் அதே நினைவாக இருந்தது.

ஒன்றாம் தேதி கணவர் சம்பளத்தை எண்ணி பத்திரப்படுத்திய யமுனா "கார்த்திக்.. சம்பளம் எங்கேடா.?" என்றாள்.

ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவன் "தாலி செய்ய கடையில் தந்துட்டு வந்திருக்கேன்ம்மா.." என்றான்.

யமுனா அதிசயமாக மகனை பார்த்தாள். "இப்பவாவது புத்தி வந்ததே.." என்றுவிட்டு தனது வேலைகளை பார்க்க கிளம்பினாள்.

நல்ல நாள் பார்த்து அபிராமியை மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டான் கார்த்திக்.

நான்கு நாட்களில் தாலியும் செய்யப்பட்டது. வேலை முடிந்து வருகையில் கடைக்கு சென்று மாங்கல்யத்தை வாங்கியவன் மனைவியிடம் சர்ப்ரைஸாக சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.

மனம் முழுக்க குஷியில் திளைத்திருந்தது. வீட்டின் வாசலில் பைக்கை நிறுத்துவிட்டு "அபிராமி.." என்று அழைத்தபடியே உள்ளே சென்றான்.

வீடு வெறிச்சோடி போயிருந்தது.

"எல்லோரும் எங்கே போனாங்க.?" என்றபடி சமையலறையை எட்டிப் பார்த்தான். யாரையும் காணவில்லை.

"வேலை முடிச்சி வரவனுக்கு தாகத்து தண்ணீர் தர கூட இந்த வீட்டுல ஒரு ஆள் இல்ல.." என சலித்தபடி சென்று தண்ணீரை குடித்தான்.

அவன் தண்ணீர் டம்ளரை கீழே வைக்க இருந்த நேரத்தில் இரு கரங்கள் அவனை பின்னிருந்து அணைத்தது.

"அபிராமி.." டம்ளரை வைத்துவிட்டு துள்ளலோடு திரும்பியவன் வேலைக்கார பெண்ணை கண்டு அதிர்ந்து போனான்.

"நீ.." அவன் தனது அதிர்ச்சியை முழுதாக வெளிப்படுத்தும் முன்பே "கார்த்திக்.." என்றாள் அபிராமி அதிர்ச்சி குரலில்.

நிமிர்ந்து பார்த்தான் கார்த்திக். சமையலறை வாசலில் நின்றிருந்தாள் அபிராமி. இப்போதுதான் குளித்து வந்திருந்தாள். துண்டு சுற்றிய கேசத்தில் இருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.

கண்கள் இரண்டும் கலங்கி நின்றிருந்தவளை பார்த்து இடம் வலமாக தலையசைத்தான் கார்த்திக். அவனுக்கு அதற்குள் நெற்றி வியர்த்து விட்டது.

"அபிராமி.." என்றவனை இன்னும் அந்த பெண் அவளின் அணைப்பில்தான் வைத்திருந்தாள்.

அபிராமி புறங்கையால் கண்ணீரை துடைத்துக் கொண்டே அங்கிருந்து திரும்பி நடந்தாள்.

"என்னை விடு.." அந்த பெண்ணிடமிருந்து விலகி நின்ற கார்த்திக் பளீரென ஒரு அறையை விட்டான்.

"இன்னொரு முறை உன்னை இந்த வீட்டுக்குள்ள பார்த்தேன்னா கொன்னுடுவேன்.." என்று எச்சரித்து விட்டு அபிராமியை தேடி ஓடினான்.

அவன் தன் படுக்கையறை நோக்கி செல்ல இருந்த நேரத்தில் அபிராமி வீட்டின் வாசல் கதவை நோக்கி செல்வது பார்வையில் பட்டது.

"அபிராமி.." என்று ஓடியவன் அவளை வாசலில் பிடித்து நிறுத்தினான்.

"இது மிஸ்அண்டர்ஸ்டேன்டிங்.." என்றான்.

தன் கரம் பிடித்திருந்த அவனது கையை விலக்கி தள்ளினாள் அபிராமி. "என் கண்ணால பார்த்ததை பொய்யுன்னு சொல்றியா நீ.?" என்றாள் அழுகையோடு.

கார்த்திக் விளக்கிச் சொல்ல முயன்ற நேரத்தில் "இப்ப எல்லாமே புரிஞ்சது எனக்கு.. அவளை விட நான் அழகா இல்ல.. அவ அளவுக்கு நான் சின்ன பொண்ணு இல்ல.. அதனால உனக்கு என்ன பிடிக்கல.." என்றாள் கோபத்தோடு.

கார்த்திக் மறுப்பாக தலையசைத்தான். "உன்னை ரொம்ப பிடிக்கும் அபிராமி.."

"பொய்யா சொல்லாதே கார்த்தி.. நீயும் அவளும் ஹக் பண்ணி நின்னுட்டு இருந்ததை நான் பார்த்துட்டேன்.. அவளுக்கு உன் மேல ரொம்ப நாளா கண்ணுன்னு ஏற்கனவே சொன்னேன் நான்.. ஆனா நீ எதுவும் கண்டுக்கல.. ஆனா அவ மேல உனக்கும் ஆசை இருந்ததால்தான் கண்டுக்கலன்னு இப்போதான் புரிஞ்சது.. என்னை விடு கார்த்தி.. எனக்குன்னு ஆறோ குளமோ கிடைக்காமலா போயிடும்.." என்றவள் அவனை விலக்கி தள்ளி விட்டு நடந்தாள்.

கார்த்திக் மீண்டும் ஓடி அவளின் முன்னால் நின்றான்.

"லூசு மாதிரி பேசாதே.. வா நாம வீட்டுக்குள்ள போய் பேசலாம்.. மழை வர மாதிரி இருக்கு.." என்றான்.

"நான் வர மாட்டேன்.. உன்னை மாதிரி ஒரு துரோகியோடு இனி ஒருநாள் கூட வாழ மாட்டேன்.." என்றாள் கத்தலாக. அதே வேளையில் சனி மூலையில் இடி இடித்து மின்னல் மின்னியது.

அவளின் தோளை இரு கைகளாலும் பற்றினான் கார்த்திக். "நான் சொல்றதை.."

"நீ சொல்லும் எதையும் நான் கேட்க மாட்டேன்.. என்னை விடு.." என்றவளின் கன்னத்தில் வேகமாய் அறைந்தான். அபிராமியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

"என் பேச்சை கேளு.. என்னை நம்பு.. என் மனசுல உன்னை தவிர வேற யாரும் இல்ல.. ஐ லவ் யூ‌‌.. வா.. வீட்டுக்குள்ள போய் மீதியை பேசலாம்.." என்றான்.

அபிராமி அவனின் நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளினாள். அவன் விலகவே இல்லை.

"இப்ப நீ மட்டும் என்னை விடலன்னா நான் சூஸைட் பண்ணிப்பேன்.." என்றாள் தரையை பார்த்தபடி.

அதிர்ந்து போய் அவளை பார்த்தான் கார்த்திக். அபிராமி நிமிர்ந்து அவனை பார்த்தாள். "என் மனசு எவ்வளவு வலிக்கும்ன்னு உனக்கு புரியாது.. இரும்பு சுத்தியால கண்ணாடியை உடைச்ச மாதிரி என் மனசு விரிசல் விட்டு உடைஞ்சி போச்சி.. என்னை விடு.. எனக்கு பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு.. நான் இங்கே இருந்தேன்னா இதையே யோசிச்சி யோசிச்சி எதையாவது பண்ணிப்பேன்.." என்றாள்.

கார்த்திக்கிற்கு அவளை விட்டு விட விருப்பம் இல்லை. ஆனால் அவள் இப்படி சொல்லவும் பயந்து விட்டான்.

"நான்.." அவனை பேசவே விடவில்லை அபிராமி.

"இப்ப என்னை விடுறியா.? இல்ல நான் நம்ம ரூம்லயே சூஸைட் பண்ணி செத்து போகட்டுமா.?" என அவள் கேட்கவும் அவனின் கரங்கள் தானாக கீழிறிங்கியது.

அபிராமி அந்த வீட்டை விட்டு விலகி நடந்தாள். சிலையாய் நின்றிருந்தான் கார்த்திக். சில துளிகளாய் மழை ஆரம்பித்தது. அபிராமியின் மீதும் தூறல்கள் விழுந்தது.

"சூஸைட் பண்ணி செத்து போகட்டுமா.? எனக்குன்னு ஒரு ஆறு குளம் கூடவா கிடைக்காது.?" என்று அவள் கேட்டது அவனின் மூளையில் திரும்ப திரும்ப ஒலிபரப்பானது.

கார்த்திக் மழையில் நடந்தான்.

அபிராமி பக்கத்து ஊருக்கு செல்லும் சாலையில் நடந்தாள். கார்த்திக் அவளை பின் தொடர்ந்து சென்றான்.

அவள் அடிக்கடி கண்களை துடைத்துக் கொள்வது அவனின் பார்வைக்கும் தெரிந்தது. அதைக் கண்டு இவனுக்கு மனம் துடித்தது.

'அபிராமி என்னை விட்டு செல்லாதே..' என்று அலறியது அவனின் மனம்.

சற்று நேரத்தில் மழையின் வேகம் அதிகரித்தது. அபிராமி மழையில் நனைவது அவனுக்கு சரியாக படவில்லை.

அவளருகே சென்று அவளின் கையை பிடித்து நிறுத்தினான். "அபிராமி ரொம்ப மழை வருது.. வா வீட்டுக்கு போகலாம்.." என்றான்.

அபிராமி முடியாதென தலையசைத்துவிட்டு தன் கையை உருவிக் கொண்டாள். "மழையில் நனைஞ்சி செத்தாலும் சாவேனே தவிர உன்னோடு வரமாட்டேன்.. விடு நான் எங்க அப்பா வீட்டுக்கு போறேன்.." என்றவள் சாலையில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

இப்படி ஒரு நாள் வருமென்று கார்த்திக் கனவில் கூட நினைக்கவில்லை. காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என்று வார்த்தைகளாக சொல்லும்போது உணர முடியாத காதலை இந்த நேரத்தில் தெளிவாக உணர்ந்தான். அவளை விட்டு பிரிந்து இருக்க முடியாத பயம்தான் காதல் என்பதை இப்போதுதான் அறிந்தான்.

அவனை விட்டு தூரமாக நடந்தாள் அபிராமி. இவனோ ஸ்தம்பித்து போய் ஒரே இடத்தில் நின்றான். அவள் சொன்ன ஆறு குளம்தான் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தது. அன்று திருமணம் பிடிக்காததற்கே குளத்தில் மூழ்கியவள் இன்று கோபத்தில் எது வேண்டுமானாலும் செய்வாள் என்று புரிந்தது. பயந்து போனவன் மீண்டும் அவளை பின்தொடர்ந்து ஓடினான்.

மாலை இருள் சூழ ஆரம்பித்தது. மழையும் அடர்த்தியாக பொழிய ஆரம்பித்தது. அபிராமியின் உருவம் அவனுக்கு மங்கலாகதான் தெரிந்தது. இருந்தாலும் அவனுக்கு பின் வாங்கும் நோக்கம் இல்லை‌.

வழியில் எங்கேனும் குளமோ கிணறோ வருகையில் பயந்து போனான் கார்த்திக். அந்த நேரத்தில் அவளின் அருகே நெருங்கி நடந்தான். அபிராமியோ அவனை விட்டு விலகி விலகி நடந்தாள்.

பக்கத்து ஊரில் நுழைந்தாள் அபிராமி. ஊரின் ஆரம்ப எல்லையிலேயே இருந்தது அவளின் வீடு. கேட்டை கடந்துச் சென்றவளை கவலையோடு பார்த்தான் கார்த்திக். இருந்தாலும் அவள் பத்திரமாக வீடு வந்து விட்டது அவனுக்கு சிறு நிம்மதியை தந்தது.

அவளை பின்தொடர்ந்து செல்லவும் தயக்கம். திரும்பி செல்லவும் தயக்கம் அவனுக்கு. தடுமாறிய மனதோடு அந்த வீட்டின் காம்பவுண்ட் கேட்டின் மீது சாய்ந்து நின்றான். உள்ளே ஏக்கமாக பார்த்தான். அவனின் சட்டை பாக்கெட்டில் இருந்த தாலி அவனின் நெஞ்சில் குத்தியது‌.

முத்தமிழ் மழையை பார்த்தபடி யோசனையோடு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தான்.

"அபிராமி.." அம்மாவின் அதிர்ச்சி கலந்த ஆச்சரிய குரலில் நிமிர்ந்தவன் அம்மாவின் பார்வை சென்ற வாசல் பகுதியை திரும்பி பார்த்தான். அபிராமி முழுதாய் நனைந்தபடி வீட்டுக்குள் வந்தாள்.

அம்மா கையிலிருந்த பாத்திரத்தை மேஜை மேல் வைத்துவிட்டு மகளை நோக்கி ஓடினாள்.

"அபிராமியா.?" என்றபடி தாத்தாவும் பாட்டியும் எங்கிருந்தோ ஹாலுக்கு வந்தார்கள்.

அம்மா மகளின் அருகே சென்று அவளின் தலையை முந்தானையால் துவட்டி விட்டாள்.

"மழையில நனைஞ்சிட்டு வந்திருக்கியே.. உனக்கு என்ன பைத்தியமாடி.?" என்றாள் அம்மா.

முத்தமிழ் அவளை சந்தேகமாக பார்த்தான். அவள் கழுத்தில் இன்னமும் தாலி கயிறு இருந்தது.

"என்னாச்சி அபிராமி.?" என்றாள் பாட்டி.

"வந்துட்டேன் பாட்டி.." என்றவளை அனைவரும் குழப்பமாக பார்த்தனர்.

"நான் அவங்க வீட்டை ஒரு கை பார்க்கட்டுமா.?" என்றார் தாத்தா.

பெருமூச்சோடு நிமிர்ந்தவள் "இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி சொல்றேன் தாத்தா.. அப்போது இரண்டு கையாவே பாருங்க.." என்றவள் முத்தமிழின் அருகே சென்றாள்.

தங்கை வீட்டிற்கு திரும்பி விட்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் அவன். அவனின் வலது கால் முட்டியின் மீது உதை ஒன்றை தந்தாள் அபிராமி.

முத்தமிழ் காலை பிடித்தபடி தங்கையை குழப்பமாக பார்த்தான். "இனிமேல் எவனையாவது பிரெண்டுன்னு சொல்லி வீட்டுக்கு கூட்டி வா.. உன்னை கழுத்தை நெரிச்சே கொல்றேன்.." என்றவள் தனது அறையை நோக்கி நடந்தாள்.

அம்மாவிற்கும் பாட்டிக்கும் ஒன்றுமே புரியவில்லை. "என்னடா ஆச்சி.? இங்கே என்ன நடக்குது.?" என்றாள் பாட்டி.

"பத்து வயசுல பதினைஞ்சி வயசுல இருபது வயசுலயெல்லாம் அவ என்ன பண்ணாளோ இப்பவும் அதைதான் பண்றா பாட்டி.." என்றவன் தங்கையின் அறை நோக்கி ஓடினான்.

இப்போதும் கூட அந்த பெண்கள் இருவருக்கும் விசயம் புரியவில்லை. தாத்தாவோ எப்போது கார்த்திக்கின் கை காலை உடைப்போம் என்று காத்திருந்தார்.

முத்தமிழ் தங்கையின் அறைக்குள் வந்தான். அவளை தேடினான். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் அபிராமி. மாற்று உடை அணிந்திருந்தாள். அழகிய சுடிதார் அது‌.‌

"அபிராமி உன் நாடகம் முடிஞ்சதா.?" என்றான் முத்தமிழ்.

தலை துடைத்த துண்டை அவன் மீது வீசினாள் "இனிதான் நாடகமே இருக்கு.. இதுக்கு முன்னாடி நடந்தது சாம்பிள்.." என்றவள் கேலி சிரிப்போடு சென்று ஜன்னலை கொஞ்சமாக திறந்து பார்த்தாள்‌.

கார்த்திக் கேட்டின் மீது சாய்ந்து நின்றபடி இந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பது அரை இருட்டில் தெரிந்தது.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom