கனிந்தமனம் - 71 (முதல் பாகத்தின் இறுதி அத்தியாயம்)


அரசநல்லூரை விட்டு வெளியேறும் மண்சாலையில், அந்தக் கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அவள் முறைக்க, அவனோ சிரித்துக் கொண்டிருந்தான்.

"என்ன மேடம், கோவமா?"

கோபப்பார்வை பாத்துவிட்டு, வெளிப்புறமாகக் கண்களைத் திருப்பினாள் மீரா.

வளைகாப்பு முடித்துத் தன் தாய்வீட்டிற்கு வந்திருந்த நிலையில் ஒருவாரத்தில் அழைத்துச் செல்ல வந்துவிட்டான் அவளது கண்ணாளன். தன்னை மட்டும் வெளிநாடு செல்லாமல் தடுத்துவிட்டு, இவள் மட்டும் அரசநல்லூர் வந்ததைக் கிருஷ்ணாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக அவளின் அருகாமை இல்லாமல் இந்த ஒருவாரமாய்த் தவித்துப்போனான் ஆடவன்.

'இதற்கு மேல் தாங்காது..!' என்றெண்ணியவன், விடிந்தவுடன் கிளம்பி மனைவியின் பிறந்தகத்தை வந்து சேர்ந்தான்.

மாமனார், மாமியாரிடம் அவர்களுக்குத் தகுந்தாற் போல் பேசி சமாளித்து, மீராவின் பிரசவத்தையும் சென்னையிலேயே பார்த்துக்கொள்ள அனுமதி பெற்று, இதோ அவளுடன் தன்வீட்டை நோக்கி பயணமாகிறான்.

மீராதான் அவனைப் பார்த்ததில் இருந்து ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனத்தைத் துணை வைத்துக்கொண்டு அவனைப் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள்.

காரை ஓட்டிவந்த கிருஷ்ணா திரும்பிப் பார்க்க, அவளோ நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்து புன்னகைத்தவன் கையைத் தட்டிவிட்டு, "இது என்ன பழக்கம் மீரு?"

"பாத்தா தெரில!"

"பசிச்சா சொல்லேன்டி, அதுக்கு எதுக்கு நகத்த கடிச்சு திங்கிற?"

அவனை முறைத்து.. பின் கேலியாக, "ஆமா, நீ பண்ற வேல அத்த மாமாக்கு தெரியுமா?"

அவன் சிரித்து, "எனக்குத் தோன்றத நான் செய்வேன், அதுக்கு அவங்கட்ட பர்மிசன்லாம் வாங்குறதில்ல!"

"ஓ.."

"என்ன ஓ.. ஓ.."

"நா வந்து, ஒரு வாரம் கழிச்சுதான் உனக்கு இது தோணுச்சா? இத்தன நாளா நல்லா ஊர சுத்தீட்டு இருந்தியா?"

அவன் புரியாமல் பார்த்து, "என்னடி சொல்ற?"

"ஆமா சொல்றாங்க, சுரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு. ஏண்டா ஊருக்கு வந்து என்னைக் கூட்டிட்டு போக, உனக்கு ஒருவாரம் தேவைபட்டுச்சா?"

இதை எதிர்பாராதவன், ஒருநொடி திகைத்து ப்ரேக் அடித்துச் சட்டென்று காரை நிறுத்தினான்.

"ஏ லுசு, இப்டியா ப்ரேக் போடுவ?"

"அடிப்பாவி, என்னடி இப்டி சொல்லீட்ட? நம்மள யு.எஸ். போகவிடாம பண்ணீட்டு, இவமட்டும் எப்டி அம்மா வீட்டுக்கு போலாம்ன்னு, நா ப்ளான் பண்ணி கூட்டிட்டு வந்தா...?"

"பழி வாங்குற மூஞ்சிய பாரு!"

அவன் முறைக்க மீரா சிரித்து, "ஏன்டா உன்னைப் போக வேண்டாம்ன்னு சொல்லீட்டு, நான்மட்டும் இங்க வந்து மாசக்கணக்குல இருப்பேனா?"

அவன் கண்கள் சிரிக்க, "ஏன் மீரு முன்னாடியே சொல்லல, ஊருக்கு விடாம உன்னை எங்கூடவே வச்சிருந்திருப்பேன்ல? நீ இல்லாம இந்த ஒருவாரம் எவ்ளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? நம்ம ரூம்குள்ள போனாலே எரிச்சல்தான் வருது!"

அவள் சிரித்து, "இதுதான் முறை தேவ். வளையல் போட்டதும் அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க. நா எதாவது சொன்னேன்னு வச்சுக்க, ஓ மாமியார் தாமர.. வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும்!"

அவன் சிரித்து, "என்கிட்ட மட்டும் ஒன்னுமே சொல்லாம கேட்டதும், உன்னை அனுப்பீட்டாங்க?"

"நீ மருமகனாச்சே, அதுனால எதுவும் மறுத்து சொல்ல மாட்டாங்க. மரியாதையாம்மா..!" அவள் கண்களில் கேலியோடு, கீழுதடு பிதுக்கிச்சொல்ல, அவளின் பாவனையில் தன்னை மறந்து சிரித்தான்.

"மீரு.."

"என்ன தேவ்?"

அவன்புறம் திரும்பியவளை, மென்மையாய் அணைத்துக் கன்னத்தில் இதழ்பதித்து, "தேங்ஸ்டி"

"ஓய், நா ஒன்னும் உனக்காக வரல!"

"பின்ன?"

"நீ என்னை ஏமாத்தீடுவேல, அதான்!"

"என்னடி சொல்ற, நா எதுக்கு உன்னை ஏமாத்த போறேன்?"

"அப்புறம், நீ இதுவரைக்கும் ஆயிரத்துல ஐநூத்தி முப்பத்தெட்டுத் தோப்புக் கரணம் தான் போட்டிருக்க. மீதிய யாரு போடுறது, இந்த ஒருவாரத்துல மறந்துட்டேல..?"

"அடிப்பாவி ராட்சசி ராட்சசி!"

'கணக்க கரெக்ட்டா வச்சிருக்கா பாரு..?’ அவன் வாய்குள்ளேயே முணுமுணுக்க, அவள் பாவமாய், "மாசமா இருக்கப் பொண்ணுன்னு கூடப் பாக்காம ராட்சசின்னு திட்டுற?"

"உன்னால மட்டும் தான்டி, ஒவ்வொரு செகண்டுக்கு ஒவ்வொரு ரியாக்சன் கொடுக்க முடியும்!"

கிருஷ்ணா பொய்யாய் முறைக்க, மீரா கலகலவெனச் சிரித்தாள்.நாட்கள் இறக்கையின்றிப் பறந்து செல்ல, மீராவிற்கு ஒன்பது மாதங்கள் ஆகியிருந்தது. மகளைப் பார்க்க வந்த தாமரை.. பிரசவம் வரை அவளுடனே இருக்க முடிவெடுத்து, சென்னையிலேயே தங்கிக்கொண்டார். வீரன் மட்டும் அவ்வபோது வந்து சென்றார்.

நாட்கள் செல்ல செல்ல மீரா தன் உடல்நிலையை உணர்ந்து, தன்னைத்தானே கவனமாகப் பார்த்து கொண்டாள். தாய் மற்றும் மாமியாரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்துச் சமர்த்தாக நடந்து கொள்பவள், தன்னவனிடம் மட்டும் தன்சேட்டைகளைத் தொடர்ந்து, படுத்தி எடுத்தாள்.

கிருஷ்ணாவிற்கோ மனையாள் செய்யும் லீலைகள் அனைத்தையும் ரசிப்பதிலேயே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. அவன் முன்பும் தன்னவளை நேசித்தான்தான், ஆனால் இந்த ஒன்பது மாதங்களில் மீரா அவனின் உயிராகிப் போனாள்.

எந்த அவளிற்கு என்றால்? எண்ணிக்கையில் ஆயிரம் தோப்புக்கரணம் முடிந்த பின்னும், தன்னவளின் குழந்தை தனமான சிரிப்பிற்காகவும், விருப்பத்திற்காகவும் இன்றும் தோப்புக்கரணம் போடுவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.அதிகாலையில் நான்கு மணி. கண்விழித்த மீராவிற்கு, ஏனோ எழுவதற்கே சிரமமாக இருந்தது. எங்கெங்கோ வலித்தது, ஆனால் எங்கென்று தான் உறுதியாகத் தெரியவில்லை.

சுருக்கென்று இடுப்பில் எடுத்த வலி, அடுத்த நொடியே மறைந்து அடிவயிற்றில் தோன்றியது. அவள் முழுதாய் உணரும் முன்பே வலியின் சுவடு காணாமல் போயிருந்தது. மெல்ல படுக்கையில் இருந்து இறங்க கால்கள் வலுவிழந்தது போல் நிற்க முடியாமல் இடைக்குக் கீழே விண்ணென்று தெரித்தது.

'டெலிவரி டேட்டுக்கு இன்னும் இருபது நாளுக்கும் மேல இருக்குதே, ஏ இப்டி வலிக்குது?" என்றெண்ணியவள், காலை கடன்களை முடித்தாள்.

வெந்நீரில் குளித்தவள், படுக்கையில் உறங்கி கொண்டிருந்த கணவனை எழுப்பினாள்.

தூக்கம் தெளிந்தவன் அவளின் முகத்தில் இருந்த சோர்வை பார்த்து பதற்றத்துடன், "என்னாச்சு மீரு?"

"எனக்குச் சூடா காஃபி வேணும் தேவ்"

அவள் மெல்லிய குரலில் கூற, அடுத்த இரண்டு நிமிடத்தில் காஃபி கப்பை அவளிடம் நீட்டினான். அவள் முயன்று புன்னகைத்து, வாங்கிக் குடித்தாள்.

முத்துமுத்தாய் அவளின் முகத்தில் வியர்வை துளிகள் முளைக்க.. கிருஷ்ணா மென்மையாய் துடைத்துவிட்டு, "என்னடா ஏ ஒரு மாதிரி இருக்க? ஏ இவ்ளவு வெள்ளன்னா குளிச்சிருக்க, தூக்கம் வரலையா?"

இது அவளது வழக்கம் தான். இருபத்திரண்டு ஆண்டுகளாய் விடிகாலை நான்கு மணிக்கே எழுந்து பழகிய உடல் இப்போதும் அதையே தொடர்ந்தது. எழுந்தவுடன் குளித்தும் விடுவாள் மீரா.

அவனையே பார்த்திருந்தவள், "நீ குளிச்சிட்டு வா தேவ்!"

சுவர் கடிகாரத்தில் மணி ஐந்தரை என்றிருக்க, மீராவை புரியாமல் பார்த்தான். அவள் மெலிதாய் புன்னகைக்க, அமைதியாய் குளியலறை நோக்கி நடந்தான்.

"தேவ்"

அவன் திரும்பி பார்க்க, "ஒன்னுல்ல போ.." என்றவள், மெதுவாய் எழுந்து அறையிலிருந்து வெளியேறினாள்.

அடுத்தப் பத்து நிமிடத்தில் கிருஷ்ணா தயாராகிவர, வீட்டினர் அனைவரும் விழித்திருந்தனர். தாமரை பூஜையறையில் விளக்கேற்றி மீராவிற்குத் திருநீரும் குங்குமமும் வைத்துவிட்டார்.

கிருஷ்ணா புரியாமல் பார்க்க அவனருகே வந்தவள், கணவனின் கையைப் பிடித்து அறைக்குள் நுழைந்து, மேடிட்ட வயிறு தட்ட முடிந்த மட்டும் அவனை அணைத்து, "லவ் யூ தேவ்"

"என்னடி?" என்று புரியாமல் கேட்டவனுக்கு நொடியில் மூளை அறிவுறுத்த, "வலிக்குதா மீரு?"

அவள் கண்களில் வலியுடன், மெல்லிய புன்னகையைச் சிந்தினாள். அவளின் செய்கையில் அதிர்ந்தவன், நொடியில் தன்னை மீட்டு, மனைவியைக் கைகளில் ஏந்திக்கொண்டு அடுத்த நிமிடம் காரில் இருந்தான். தாமரையும், காஞ்சனாவும் அவர்களுடன் கிளம்பினர்.மருத்துவமனையில் நுழைந்தும் மீராவை பரிசோதித்த மருத்துவர், அவளுக்குப் பிரசவவலி வந்ததை உறுதிசெய்ய, வீட்டில் இருந்த மற்றவர்களுக்குக் கைப்பேசி அழைப்புச் சென்றது.

முதல் வேலையாக அரசநல்லூருக்கு செய்தியை தெரிவித்தான் முகுந். விஷ்வாவை அழைத்து.. தாரா குழந்தையுடன் இருப்பதால், வீட்டில் அவளுக்குத் துணையாகக் கங்காவை வைத்துவிட்டு, ஆண்கள் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

மீரா பிரசவ அறையில் இருக்க, கிருஷ்ணா வெளியில் நிலை கொள்ளாமல் தவிப்பதைக் கண்ட முகுந் தம்பியின் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்டான்.

அவனிற்கு என்ன நடக்கிறது என்று, எதுவும் புரியவில்லை. எந்தச் சூழ்நிலையையும் தனக்கே உரிய பாணியில் எதிர்கொள்பவன் தான். ஆனால் வாழ்வின் முதல் அனுபவம், இந்த நொடியை, இந்த நிமிடத்தை எப்படிக் கையாள்வதென்று தெரியாமல் தவித்தான்.

தன்னவளிடம் இருந்து சற்றுமுன் கிடைத்த அணைப்பும், புன்னகையும் மட்டுமே அவளைத் திடமாய் நிற்க வைத்துக் கொண்டிருந்தது. வலியை வாய்விட்டு சொல்லாத அவளின் மனதிடமும், அந்நிலையிலும் புன்னகை சிந்தும் முகமும் கிருஷ்ணாவை மொத்தமாய்ச் சாய்த்துத்தான் விட்டிருந்தது.

தன்னவள் தன்உயிரணுவை தாங்கி.. ஒன்பது மாதமாய்த் தன்னுள் பாதுகாத்து.. உயிரோடு சேர்த்து உடல் வளர்த்து.. தன் சுவாத்தையும் ரத்தத்தையும் தன்னவனின் ஜீவனிற்குப் பகிர்ந்தளித்து.. இதோ இன்று தங்கள் தாம்பத்தியத்தின் அடையாளமாய், காதல் பரிசாய் சின்னஞ்சிறு உயிரை பூமிக்குக் கொண்டு வர இருக்கிறாள்.

இத்தனை நாட்களாகப் பெறப்போகும் பிள்ளை செல்வங்களை நினைத்து மகிழ்ச்சியில் திளைத்தவன், மீராவின் கண்களில் கண்ட வலியில் மொத்தமும் வடிந்துவிடக் குழந்தைகளையும் தாண்டி, தன்னவளை காணப்போகும் நொடிக்காக, அணு அணுவாய் துடித்து, யுகங்களைக் கடக்க முயன்று, சிறிது சிறிதாகத் தோற்றுக் கொண்டிருந்தான் மீராவின் தேவ்.

இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பின், இரு செவிலியர்கள் குழந்தைகளைத் தாங்கி வந்தனர். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்க, கிருஷ்ணா ஒருகுழந்தையை ஏந்தி கொள்ள, தாமரை மற்றொரு குழந்தையை வாங்கினர்.

அவனின் முகத்தில் தோன்றிய ஒருநொடி மலர்ச்சி, அடுத்த நொடியே கலக்கத்துடன் வார்த்தைகள் திணறி, "நர்ஸ் மீரு?"

அந்த நடுத்தர வயது தலைமை செவிலியர் பெண் புன்னகைத்து, "யூ ஆர் லக்கி மிஸ்டர் கிருஷ்ணா, உங்க மனைவி ரொம்பவே தைரியமானவங்க. கொஞ்சங்கூட வலில முகத்த சுழிக்காம ரெண்டு குழந்தைகளையும் பெத்துட்டாங்க"

தன்னவளை பற்றி அறிந்தவன் புன்னகைக்க முயன்று, "பாக்கலாமா?"

"அரைமணி நேரத்துல வார்டுக்கு மாத்தீடுவோம், அப்புறம் பாக்கலாம்!" எனக் கூறிச்சென்றார்.

தன்னிடமிருந்த குழந்தையைக் காஞ்சனாவின் கையில் கொடுத்தவன் தன்னவளுக்காகக் காத்திருந்தான். அறைக்கு வந்த செய்தியை அறிந்தவன், அனைத்தும் மறந்து அவளைக் காணச்செல்ல, கண்மூடி படுத்திருந்தாள் மீரா.

அருகே சென்றவன்.. தயக்கத்துடன் நடுங்கும் விரல்களால், தலைமுடியை மென்மையாய் கோதி, "மீரு.."

கிருஷ்ணாவின் ஸ்பரிசத்தில் மெல்ல விழிதிறந்த மீரா, மெலிதாய் புன்னகைத்தாள்.

அவனுக்குத் தோன்றிய முதல் கேள்வி, ‘இவளால் மட்டும் எப்படி இப்படியிருக்க முடிகிறது?’ என்பதுதான்.

எந்தச் சூழ்நிலையிலும் இயல்பை இழக்காத தெளிந்த முகமும், புன்னகையும் அவனை அசர வைத்தது. வார்த்தை வராமல் கிருஷ்ணா தவித்துக் கொண்டிருக்க, குடும்பத்தினர் அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

அனைவரையும் பார்த்தவள், குழந்தைகளைக் காணாது கேள்வியோடு நோக்க, "பேசிக் செக்கப் பண்ண குழந்தைகளைக் கொண்டு போயிருக்காங்க" என்று பதிலளித்தார் காஞ்சனா.

"என்ன குழந்தைங்க அத்த?"

கிருஷ்ணாவும் அவளுடன் சேர்ந்து, "என்ன குழந்தைங்க மா?" என்க, அனைவரும் அவனை ஒருமாதிரியாகப் பார்த்தனர்.

"ஏ இப்டி பாக்குறீங்க?" அவன் புரியாமல் கேட்க.. மீரா கையைப் பிடித்து, "ஏ தேவ், நீ குழந்தைகள பாக்கலயா?"

"ம்ம் பாத்தேன், ஏ கையாலதான் வாங்குனேன்.."

"அப்புறம் என்னடா, என்ன குழந்தைன்னு அத்தைட்ட கேக்குற?"

"அது..." அவன் தலையைச் சொரிந்து அசடுவழிந்தான்.

தம்பியைப் பார்த்து வாய்விட்டு சிரித்த முகுந், "நீ வேற மீரா, அவன் உன்னைப் பாக்குற வரைக்கும் இந்த உலகத்துலயே இல்ல. பக்கத்துல இடியே விழுந்தாலும் தெருஞ்சிருக்காது. குழந்தையைதான் பாத்தான், அது என்ன குழந்தைன்னு தெருஞ்சுகிறதுக்குச் சாருக்குப் பொறுமை இல்ல.

அதுக்குள்ள பொண்டாட்டிய பாக்க ஓடிவந்துட்டாரு. இங்க எவனோ ஒருத்தே கல்யாணமே வேண்டான்னு சொல்லீட்டு திரிஞ்சான், யாராவது அவன பாத்தீங்க?"

கிருஷ்ணா முறைத்து, ''போதும்டா ரொம்பத்தான் பேசுற!"

"வா வா உன்னைத்தான் எதிர்பாத்தேன். நீதான பொண்டாட்டி, குழந்தைங்க இந்த உறவெல்லாம் கண்ணுக்கு தெரியாத ஜெயில் மாதிரின்னு சொன்ன? ஆனாலும் மீரா, நா இத எதிர்பாக்கல. எப்டி இருந்த ஏ தம்பிய இப்டி மாத்தி வச்சிருக்க?

ஏன்டா நல்லவனே, தாரா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப ஒருநாலு போன் போட்டு பேசுனதுக்கு என்ன எல்லாம் சொன்ன? இந்த ரெண்டு மணிநேரமும் ஓ மூஞ்சிய பாக்கணுமே, கண்ணெல்லாம் கலங்கி.. விட்டா அழுதுடுவேன்ற லெவளுக்கு இருந்தான்மா இவன்!"

கிருஷ் இடைநுழைந்து, "உனக்குத் தெரியுமா, நீயா எதாவது பேசாத!"

"சரிதான், ஒன்னுமில்ல மீரா. ஓ புருஷே கண்ணுல கொஞ்சம் நிறையவே தூசி விழுந்து கண் கலங்கீடுச்சு அவ்ளவுதான். அப்புறம் தம்பி, பொண்ணு ஒன்னு ஆண் ஒன்னுன்னு எந்தப் பாகுபாடும் இல்லாம சரிசமமா பெத்துருக்கீங்க!"

முகுந் சொல்லிய விதத்தில் அனைவரும் வாய்விட்டு சிரிக்க, கிருஷ்ணோ எதுவும் பேசஇயலாது பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

பரிசோதனைகளை முடித்துக் குழந்தைகளுடன் மருத்துவர் உள்ளே நுழைய, பேச்சும் சிரிப்பும் இரண்டாம் பட்சமாகி அனைவரின் கவனத்தையும் தன்புறம் திருப்பிக்கொண்டனர், கிருஷ் மீராவின் செல்வங்கள்.

சுகபிரசவத்தோடு, குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்ததால், மூன்றே நாட்களில் வீடுவந்து சேர்ந்தனர்.

தாமரை மகளின் உடல்நலம் தேற, தனக்குத் தெரிந்த கைவைத்தியங்களையும் நாட்டு மருந்துகளையும் கொடுத்துவர.. ஒரே மாதத்தில் பழைய மீராவாக மாறிவிட்டாள்.

எப்போதும் குழந்தைகளைச் சுற்றி வீட்டினர் யாராவது இருக்க, இதற்கிடையில் கிருஷ்ணாதான் தன்னவளிடம் தனியாகப் பேசக்கூட நேரம் கிடைக்காமல் பாதி ஆளாக மாறிவிட்டான்.

நாற்பது நாட்களில் புரோகிதரை வரவழைத்து முறையான சடங்குகள் செய்து, சொந்தங்களின் மத்தியில் குழந்தைகளுக்கு.. ஆதித்யா, ஆராத்யா எனப் பெயரிட்டனர் கிருஷ், மீரா தம்பதியினர்.

வேலு தாய்மாமன் முறை செய்ய, காசி அவனுக்குத் துணைநிற்க, குமரன், கர்ணா, ஜெயந்தி என இளையவர்களுடன் முத்தையா தம்பதியரோடு சேர்ந்து கர்ணா மற்றும் குமரனின் வீட்டிலிருந்து பெண்களும் பங்குக்கொண்டனர்.

கங்கா இரண்டுமாத கருவை தன்னுள் தாங்கி, மலர்ந்த முகத்துடன் தன்னவனோடு சுபநிகழ்வில் கலந்து கொண்டாள். அவர்களோடு ரமேஷ் மற்றும் பிரியா இரண்டு வயது ஆரவ்வுடன்.

விழா முடிந்ததும் வீரனும் தாமரையும் சொந்தங்களுடன் ஊருக்கு திரும்பிவிட, வீடு பழைய நிலைக்குத் திரும்பியது.ஒரு வாரம் கடந்த நிலையில்..

தன் இரு செல்வங்களையும் சமாளிக்க முடியாமல் கிருஷ்ணா போராடி கொண்டிருக்க, குளியரையில் இருந்து வெளிவந்த மீரா, அவனைப் பார்த்து சிரித்துவிட்டாள்.

"தேவ்"

"மீரு கஷ்டம்டி, இதென்ன ரெண்டு பேரும் ஒரே நேரத்துல அழுதா யார பாக்குறது? எப்டி சமாதானம் பண்றது? என்னால பத்துநிமிஷம் சமாளிக்க முடியல, நீ எப்டிதான் பாத்துக்கிறியோ..?"

"ரெட்டை பிள்ளைங்கடா, ஆரம்பத்துல அப்டித்தான் இருக்கும். போகப்போகச் சரியாயிடும்!"

"எவ்வளவு நாளைக்கு இப்டி?" அவன் பாவமாய்க் கேட்க.. அவள் சிரித்து, "நமக்குப் பழகுற வரைக்கும்!"

"என்னது?"

"ஆமாம்டா, நாளாச்சுன்னா நமக்கே பழகீடும்!" என்றவள் ஆராவை வாங்கிக் கொள்ள, ஆதியை கிருஷ் வைத்திருந்தான்.

பெண்ணுக்கு பசியாற்றிவிட்டு மகனை வாங்க, கிருஷ் ஆராவைத் தோளில் போட்டு தட்டித் தூங்கவைக்க முயன்றான். ஆதியை தூங்க வைத்த மீரா மகளைப் பார்க்க, அவளோ தந்தையின் சட்டையில் எச்சிலை வடியவிட்டு, அவனின் காதை பிடித்து விளையாடி கொண்டிருந்தாள்.

பெண்ணைக் கையில் வாங்கிய மீரா, மடியில் போட்டு தட்டிவிட.. அடுத்த இரண்டாவது நிமிடம் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள் கிருஷ்ணாவின் மகள்.

மனைவியின் அருகே வந்தவன், "இங்கப்பாரேன், இவ்ளவு நேரமா என்கிட்ட சேட்டை பண்ணீட்டு உன்கிட்ட வந்ததும் தூங்கிட்டா.."

அவள் மென்மையாய் சிரிக்க, "இதெல்லாம் நல்லாவே இல்ல. ரெண்டும் எல்லார்கிட்டயும், நல்லா சமத்தா இருக்குதுக, என்கிட்ட மட்டும் எவ்ளவு சேட்ட பண்ணுதுக தெரியுமா?"

அவன் சிறுபிள்ளையாய் மாறி தன்பிள்ளைகளைப் பற்றி மனைவியிடம் குறை சொல்ல, "குழந்தைங்கன்னா அப்டித்தான்டா. எல்லார்கிட்டயும் ஒரே மாதிரியா இருப்பாங்க?"

அவன் முறைத்து, "இதெல்லாம் உன்னாலதான் மீரு!"

"நா என்னடா பண்ணேன்?"

"வயித்துல இருக்கும் போதே நல்லா ட்ரெயின்ங் கொடுத்து வச்சிருக்க!"

அவள் கலகலவென்று சிரிக்க, கடிகாரம் மெல்லியதாய் குயிலின் ஒலிஎழுப்பி நள்ளிரவு பன்னிரண்டு மணியைக் காட்டியது.

"தேவ் டைமாச்சு. தூங்கு, நாளைக்கு ஆபிஸ் வேற போகணும்"

அவன் புன்னகைத்து, "ஒருநிமிஷம் இரு, வரேன்"

"எங்கடா போற?"

"ம்ம் வரேன் வரேன்.." என அடுத்த நான்காவது நிமிடம் கையில் பார்சலுடன் வந்தவன் அவளிடம் நீட்டி, "ஹாப்பி ஆனிவர்சரி, மீரு டார்லிங்"

அவள் ஆச்சர்யத்துடன், "நமக்குக் கல்யாணம் ஆகி, அதுக்குள்ள ஒருவருஷம் ஆச்சா தேவ்?" எனத் தன் தலையில் தட்டிக்கொண்டவள், "நா மறந்தே போய்ட்டேன். உனக்கு எதுவுமே வாங்கலியே, சாரிடா.."

அவன் சிரித்து, "ஏய், உனக்குக் குழந்தைங்கள பாத்துக்கவே நேரம் பத்தல. இதெல்லாம் நியாபகத்துல இருந்தாதான் ஆச்சர்யம்"

"உனக்கு வருத்தமா இல்லியா?"

அவளை மென்மையாய் அணைத்து கொண்டவன், "எதுக்கு வருத்தம்? நீ என்கூடவே இருக்க, அதவிட நீ மட்டுமே கொடுக்கக்கூடிய கிஃப்ட ஒண்ணுக்கு ரெண்டா குடுத்திருக்க. வேற என்ன வேணும்?"

அவள் புன்னகைத்து, "பார்சல்ல என்னடா?"

"நீயே பாரு!"

பிரித்துப் பார்த்தவளின் கண்கள் வியப்பினால் விரிந்தது.

"தேவ் இது..?"

அவன் முதன்முதலில் அவளுக்குப் பரிசளித்த வெள்ளைநிற அனார்கலி சுடிதார், அதேபோல் துளியும் மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்தது.

"எப்ப வாங்குனடா, அதே கடையிலயா? இவ்ளவு நாள் வச்சிருந்தாங்களா?"

அவன் புன்னகைத்து, "இல்ல மீரு, நா உனக்கு வாங்கிக் கொடுத்ததுதான் லாஸ்ட் பீஸ். ரொம்ப ஆசையா வாங்குனேன்டி, ஆனா தாராவோட ஃபங்சன் அன்னிக்கி ஏதேதோ நடந்து, அந்தடிரஸ் ஒண்ணுமில்லாம போச்சு.

அதேகடைல கேட்டுப் பாத்தேன், கிடைக்கல. அப்புறம் ரமேஷ்ட்ட சொல்லி ஒரு டிசைனர பிடிச்சு, ரெடி பண்ணோம். நம்ம கல்யாணம் முடிஞ்சதுமே உனக்குக் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன், ஆனா டிசைன்ஸ் பர்ஃபக்ட்டா வரல. நாலு மாசத்துக்கு முன்னாடிதான் ரெடியாச்சு"

அவனைப் பார்த்து புன்னகைத்தவள் தோளில் சாய்ந்து, "தாங்ஸ்டா, நீ எனக்கு முதல் தடவையா வாங்கிக் கொடுத்தது. ஆனா யூஸ்பண்ண முடியாம போச்சு" என்றவள், எழுந்து சென்று அலமாரியில் இருந்து கிழிந்து போன பழைய உடையை எடுத்து வந்தாள்.

"ஏய் இதென்ன? கிழிஞ்சத போய்ப் பத்திரமா வச்சிருக்க, ஏன் மீரு?"

அவள் புன்னகைத்து, "உன்னோட நியாபகம். முதல் தடவையா எனக்கு உன்மேல இருக்குற காதல உணர ஆரம்பிச்ச தருணம். போட முடியாட்டியும், பாத்து சந்தோஷ படலாம்ல?"

எதுவும் பேச முடியாமல், கிருஷ்ணா அவளை அணைத்து கொண்டான்.

"தேவ்"

கிருஷ்ணா சற்றே விலகி அவளின் முகத்தைப் பார்த்தான். ஒருநொடி தன்னவனின் கண்களை நோக்கியவளீ, அவனின் உயரத்திற்குப் பாதங்களை உயர்த்தித் தன்இதழ்களை அவனின் இதழ்களில் அழுத்தமாகப் பதித்தாள்.

சற்றே விலகியவள் கண்களில் காதல் வழிய, "ஹேப்பி ஆனிவர்சரி தேவ்"

அவனின் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல், மீரா முகம்சிவந்து குனிந்து கொண்டாள்.

காதருகே குனிந்து, "லவ் யூ மீரு" என்றவன், அவளைக் கைகளில் ஏந்திக்கொண்டான், காதல் கணவனாக.


◆ முற்றும் ◆


கிருஷ் மீரா திருமணத்திற்குப் பின் இடைபட்ட ஒருவருட காலமாக அரசநல்லூரில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கனிந்தமனம் இரண்டாம் பாகம்
"தேனும் தமிழும்" ல்.

வேலு, வேணி, கர்ணா, ஜெயந்தி, குமரன், காசி, தேனு இவர்களோடு இன்னும் சிலரின் காதலும் இல்லறமும்..

நன்றியுடன்
நந்தினி சுகுமாரன்.
 

Apsareezbeena loganathan

Active member
Member
Super sis!!! 71 update ah, ippo பார்த்தா ஆச்சர்யமா இருக்கே??? Waiting for 2 nd part sis!!!
Niraiva இருந்துச்சு அதுக்குள்ள mudinchuduchunnu நினைக்கும் போதே பிரமிப்பு நீங்கவில்லை!!! அருமையா இருந்தது!!!! கிராமத்து மக்கள், பழக்க வழக்கங்கள், திருவிழா பஞ்சாயத்து வயல் சார்ந்த வேலை னனு எல்லாமே அறிந்து கொள்ள முடிகிறது வெளி நாட்டு வாழ்க்கை பற்றி மேலும் அறியவும் முடிந்தது!!! அனைத்தும் அருமை அருமை அருமை!!! வாழ்த்துக்கள் sis!!
 
Super sis!!! 71 update ah, ippo பார்த்தா ஆச்சர்யமா இருக்கே??? Waiting for 2 nd part sis!!!
Niraiva இருந்துச்சு அதுக்குள்ள mudinchuduchunnu நினைக்கும் போதே பிரமிப்பு நீங்கவில்லை!!! அருமையா இருந்தது!!!! கிராமத்து மக்கள், பழக்க வழக்கங்கள், திருவிழா பஞ்சாயத்து வயல் சார்ந்த வேலை னனு எல்லாமே அறிந்து கொள்ள முடிகிறது வெளி நாட்டு வாழ்க்கை பற்றி மேலும் அறியவும் முடிந்தது!!! அனைத்தும் அருமை அருமை அருமை!!! வாழ்த்துக்கள் sis!!
Thank you so much sis.. ஒவ்வொரு எபியையும் ரீட் பண்ணி, நேரம் செலவிட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கிட்டீங்க. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இரண்டாம் பாகத்துல இதைவிட இன்னும் நிறைய விசயங்கள் தெரிஞ்சிக்கலாம், முழுமையான கிராமத்துக் கதைக்களத்துல...❤️❤️
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom