கனிந்தமனம் - 42


விஷ்வாவின் கடந்த காலத்தை, இல்லை.. தற்போது இறந்த காலம் என்று தான் சொல்ல வேண்டும். அவனும் தனக்குள் இருந்த பழைய விஷ்வாவை, உணர்வுகளைக் கொன்றுவிட்டு தான் இந்த இரண்டு ஆண்டுகளாய் புது மனிதனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அவனின் வாய் மொழியாகவே மீரா கேட்டு கொண்டிருந்தாள், விஷ்வாவை பற்றி.

"உங்களுக்கு எப்ப அண்ணா கல்யாணம் ஆச்சு?"

புன்னகைத்தவன், "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி"

"உங்க மனைவி?"

"இது சரியான கேள்வியா இருக்காது மீரா..!"

அவள் புரியாமல் பார்க்க, "இப்ப அவங்க இன்னொருத்தரோட வொய்ஃப்.."

கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாய்த் தெரிய, "அண்ணே.?"

வறண்ட முறுவல் ஒன்றை உதிர்த்தவன், "நா முதல போலீஸ் டிபார்ட்மென்ட்லதான் வேல பாத்தேன், எஸ்.ஐ யா இருந்தேன். ஈஸ்வருக்கும் எனக்கும் அப்பதான் பழக்கம். கொஞ்ச நாள்ல ப்ரண்ட்ஸ் ஆயிட்டோம். என்னோட குடும்பத்த தாண்டி, என்னய பத்தி முழுசா தெரிஞ்ச ஒரேஆள் அவன்தான்.

எனக்குச் சிபிசிஐடியா வொர்க் பண்ணனும்னு ஆச. வேலய பாத்துக்கிட்டே, அதுக்கான முயற்சியும் பண்றது கஷ்டமா இருந்தது. அதுனால வேலய விட்டுட்டு, பேருக்கு டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்னு ஆரம்பிச்சு வச்சுகிட்டு என்னோட கனவ நிறவேத்திக்கிற வழிய தேடுனேன்"

அவன் சொல்வதைக் கேட்டிருந்த மீராவின் விழிகள் வியப்பினை காட்டி, "அப்ப நீங்க?"

விஷ்வா மெல்லிய புன்னகையைச் சிந்தி ‘ஆம்’ என்பதைப்போல் தலையசைத்து, மீண்டும் தொடர்ந்தான்.

"என்னோட முயற்சிக்கு பலனா வேல கிடைக்கிற நிலைல இருந்தது, பைனல் இன்டர்வியூ மட்டும்தான். வீட்ல அம்மா அப்பாட்ட நா எதுவும் சொல்லல. வேல கன்ஃபார்ம் ஆனதும் சொல்லிக்கலாம்ன்னு இருந்திட்டேன்.

அதுக்குள்ள எனக்குக் கல்யாணம் பண்ண நினச்சு, சொந்தத்துல ஒரு பொண்ணையும் பாத்துட்டாங்க அம்மா. அப்பாவுக்குத் தெருஞ்சவங்க, கொஞ்சம் தூரத்துச் சொந்தம்.

பொண்ணு பேரு வனிதா. பாக்குறதுக்கு லட்சணமா இருப்பா. வேண்டாம்ன்னு சொல்றதுக்கு எந்தக் காரணமும் இல்லாததால நானும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லீட்டேன்.

நிச்சயம் பண்றதுக்கு முதல்நாளே அந்தப் பொண்ண பாத்து, இந்தக் கல்யாணத்துல இஷ்டமான்னு கேட்டு தெருஞ்சுகிட்டு, அதுக்கப்புறம் தான் கல்யாண தேதியே முடிவு பண்ணோம். எல்லாம் நல்லபடியாதான் போச்சு. என்னோட கவனம் முழுக்க இன்டர்வியூவ பத்தியே இருந்ததால, வனிதாகிட்ட கல்யாணத்துக்கு முன்னமே பேசணும் பழகணும்ன்னு தோணல.

குறிச்ச நாள்ல கல்யாணம் முடிஞ்சு, எங்க லைஃப்பும் நல்லபடியா ஸ்டார்ட் ஆச்சு. வனிதாவ பத்தி எனக்கு முழுசா தெரியலைன்னாலும், கல்யாணம் ஆன நாலஞ்சு நாள்லயே ஓரளவுக்குப் புருஞ்சுகிட்டேன். வளந்திருந்தாளே தவிர அந்தளவுக்கு மெட்சூரிட்டி இல்ல.

சின்னப்பொண்ணு மாதிரி, யாரு எது சொன்னாலும் சரின்னு தலையாட்டிடுவா, முக்கியமா அவளோட அம்மா அப்பா. அவங்க எதாவது சொன்னா, அது சரியோ தப்போ எதையும் யோசிக்காம உடனே செஞ்சிடுவா, என்கிட்டயும் அப்டிதான்.

நா எது சொன்னாலும் மறுத்து பேசாம, சொல்றத கேட்டுக்குவா. ஆரம்பத்துல எனக்கு அது பெரிய விஷயமா தெரியல. ஆனா போகப் போகதான்.. அவளோட அம்மா அப்பா, எதுக்கெடுத்தாலும் அவள திட்டுறது அடிக்கிறதுன்னு செஞ்சே வனிதாவ சொல்பேச்சு கேக்க வச்சிருக்காங்கன்னு புருஞ்சது.

கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆன சமயத்துல, எனக்கு டெல்லில இருந்து இன்டர்வியூக்கு கால் வந்துச்சு. வனிதாகிட்ட சொன்னப்ப, பெருசா எந்த ரியாக்சனும் இல்ல. நானும் முழுசா சொல்லாம, சும்மா வேலைக்கான இன்டர்வியூன்னு மட்டும்தான் சொல்லி இருந்தேன்.

நா கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு வாரமாவே அவ சரியில்ல. எதாவது கேட்டா, ஒன்னுமில்லன்னு சொல்லீடுவா. எனக்குத் தெரியாம அப்பப்ப தனியா உட்காந்து அழுதுகிட்டு இருந்தா. நானும் இரண்டு மூணுதடவ கேட்டுப்பாத்துட்டு, டெல்லிக்கு போய்ட்டு வந்து பாத்துக்கலாம்ன்னு விட்டுட்டேன்.

நா கெளம்புறப்ப கூட அவகிட்ட எந்த மாற்றமும் இல்ல. கிளம்புறேன்னு சொன்னப்ப சரின்னு தலையாட்டி அனுப்பி வச்சுட்டா. நா இடைல போன் பண்ணா கூட இரண்டு மூணு வார்த்ததான் பேசுவா. அங்க இன்டர்வியூ டென்சன்ல, என்னால இதெல்லாத்தையும் யோசிக்க முடியல..." என்றவன் சில நிமிடங்கள் அமைதி காத்தான்.

மீராவிற்கு ஏதோ பெரிதாய் நடந்திருக்கிறது என்று தோன்ற ஆறுதலான குரலில், "அண்ணா.."

திரும்பி பாரத்தவன் வறுத்த முறுவலுடன், "இன்டர்வியூ முடிச்சு கைல அப்பாய்ண்மென்ட் ஆர்டரோட சந்தோஷமா அவகிட்ட சொல்லலாம்ன்னு வந்தா.. இங்க எனக்காக வெயிட் பண்ணது பூட்டுன வீடும், அவ எனக்கு எழுதி வச்சுட்டு போன கடைசி லெட்டரோட, நா அவ கழுத்துல கட்டுன தாலியும்தான்.

என்ன ஏதுன்னு புரியாம அத பிரிச்சுப் பாத்தப்பதான், அவளோட அத்தன நாள் நடத்தைக்கும் பதில் தெரிஞ்சது..."

அந்தக் கடிதத்தின் வரிகளை வனிதாவின் கையெழுத்தாகவே மீராவிடம் சொன்னான் விஷ்வா.விஷ்வா அவர்களுக்கு...

என்னை மன்னிச்சிருங்க. ஏன்னா, உங்கள்ட்ட சொல்றதுக்கு இப்ப இது மட்டும்தான் என்கிட்ட இருக்கு. நா கல்யாணத்துக்கு முன்னாடியே என்கூடக் காலேஜ்ல படிச்ச ஒருத்தர விரும்புனேன், அவரும்தான். இது எங்க வீட்ல தெருஞ்சதும் படிப்பு முடிஞ்ச உடனே, உங்களோட கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீட்டாங்க.

நா முடியாதுன்னு வீட்ல சொல்லி சண்ட போட்டதுக்கு எல்லாரும் தற்கொலை பண்ணிப்போம்ன்னு சொல்லி என்னை மிரட்டி சம்மதிக்க வச்சுட்டாங்க.எனக்கு வேறவழி தெரில, நானும் என்காதல மனசுக்குள்ள போட்டு புதைச்சுட்டுக் கல்யாணம் பண்ணி, உங்களோட குடும்பம் நடத்துனேன்.

ஆனா இப்ப, என்னைக் காதலிச்சவரு என்னை மறக்க முடியாம நீங்க டெல்லி போறதுக்கு நாலுநாள் முன்னாடி விஷத்த குடிச்சிட்டாரு. இந்த நிலைல குற்ற உணர்ச்சியோட என்னால காலம் முழுக்க வாழமுடியாது, நா அவருகிட்டயே போறேன். அவரு பொழச்சு வந்தா, அவரோடதான் ஏ வாழ்க்கை. இல்லேன்னா, அவருகூடவே என் உயிரும் போயிடும்.

உங்க வாழ்க்கைல நுழஞ்சு, உங்களுக்குக் கஷ்டத்த கொடுத்துட்டு போறேன். இதுக்கு மேலயும் உங்கள ஏமாத்த நா விரும்பல. இந்த லெட்டரோட சேத்து, எனக்கு உரிமையில்லாத நீங்க கட்டின தாலியையும் வச்சுட்டு போறேன். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும்.

இப்படிக்கு,
வனிதா.கடிதத்தைப் படித்த விஷ்வா ஒருநொடி உறைந்து போனான். என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் தொழிலிக்கு ஏற்றபடி பல கோணங்களில் சிந்திக்கும் விஷ்வா, அந்நிலையில் இருந்தும் தன்னை உடனை மீட்டுக்கொண்டான்.

இருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்து வரவைத்தவன், வனிதாவின் பெற்றோரிடம் அவள் எழுதி வைத்துச் சென்ற கடிதத்தை நீட்டி, "என்ன சார் இதெல்லாம்?"

அவளின் தந்தை, "மாப்ள?"

தன் கையில் இருந்த பொன்தாலி கோர்த்த செயினைக் காட்டி, "இந்த உறவு முறிஞ்சு போச்சு"

"நீங்க ஒன்னு சங்கடபடாதிங்க மாப்ள, நா அந்தக் கழுதைய நாலு அடி போட்டு இழுத்துட்டு வர்ரேன்"

தன் மாமனாரை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவன், மென்மையாய் புன்னகைத்து அமைதியாய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

சிலநிமிட அமைதிக்குப் பின், "நீங்க முன்னாடி பண்ண தப்பையே தான் இப்பவும் பண்றீங்க. உங்க பொண்ணு இதுல எழுதீருக்கிறத பாத்தீங்களா? அந்தப் பையனுக்கு ஏதாவது ஆச்சுன்னா, உயிர விட்ருவேன்னு எழுதீருக்கா.

உங்களுக்கு ஏ இது புரியமாட்டிது? உங்க கவுரவத்துக்காக, அவள கஷ்டபடுத்தி எனக்குக் கல்யாணம் பண்ணி கொடுத்து என்னோட வாழ்க்கையையும் அழிச்சு, என்ன சார்?"

தான் ஏமாந்த வலியுடனும் இயலாமையுடனும் விஷ்வா கேட்க, அவரோ பதில் பேச முடியாமல் தலைகுனிந்து நின்றிருந்தார்.

விஷ்வாவின் தாய் அவரிடம், "ஏண்ணே, இப்டி பண்ணீங்க? இப்ப ஏ பைய வாழ்க்க நட்டாத்துல நிக்குது, என்ன நடந்துச்சுன்னு வெளிய இருக்கவங்களுக்குத் தெரியுமா?பேசுறவங்க இனி எங்குடும்பத்த பத்திதா அசிங்கமா பேசுவாங்க, ஒரு நல்லது கெட்டதுக்கு நாலு பேருக்கு முன்ன தல நிமிந்து நிக்க முடியாம பண்ணீட்டீங்களே?

என்பைய இப்ப என்ன உத்தியோகத்துல இருக்கான்னு தெரியுமா, வேல பாக்குற இடத்துல இனி அவன எப்டி மதிப்பாங்க? இப்ப அவனோட கல்யாணம் கேலி பொருளாயிடுச்சு. புள்ள ஆசப்பட்டு, கஷ்டப்பட்டுக் கிடைச்ச வேல, அந்தச் சந்தோஷத்தக்கூட அவனால முழுசா அனுபவிக்க முடியலயே..?"

வார்த்தைகளாய் ஆரம்பித்துக் கதறலாய் மாறி கண்ணீர் வடித்தவர், தன் மகனின் கைகளைப் பற்றிக் கொண்டு, "என்ன மன்னுச்சுரு ய்யா. உனக்கு நல்லதுன்னு நெனச்சுதா பண்ணேன், ஆனா அதுவே இப்டி ஓ வாழ்க்கைய நாசமாக்கிடும்ன்னு எனக்குத் தெரியாம போச்சுப்பா!"

தன்னிடம் மன்றாடும் தாயை கண்டு சகிக்க முடியாமல் அவரைத் தோளில் சாய்த்து கொண்டவன், "நீங்க என்னம்மா பண்ணீங்க? எல்லா அம்மாவும் தன்புள்ள நல்லா இருக்கணும்னுதான் நினைப்பாங்க. நீங்களும் அப்டிதான் நினச்சீங்க. என்னோட தலையெழுத்து இப்டி ஆயிடுச்சு, விடுங்க"

"அதில்லய்யா, இனி உன்னோட வாழ்க்க?"

"உங்கமகன் சந்தோஷமா தான் இருப்பான். மனசுக்கு புடுச்ச வேல கைல இருக்கு, அப்புறம் என்ன? எனக்கு அதுவே போதும்!"

தாயும் மகனும் பேசிக்கொண்டிருக்க விஷ்வாவின் தந்தை வனிதாவின் தந்தையிடம், "சொல்லுங்கய்யா, எங்குடும்பத்த ஏமாத்துனதுக்கு என்ன பதில சொல்ல போறிங்க?"

"சம்மந்தி?"

"இனிமே இப்டி கூப்டாதிங்க, அதான் அவன் உறவு முறிஞ்சிடுச்சுன்னு சொல்லீட்டானே?"

அவர் தன் கைகளைக் கூப்பி, "அப்டியெல்லா பேசாதிங்க சம்மந்தி. ஏ பொண்ணு, சே.. சே.. இனி அவ ஏ பொண்ணே இல்ல. ஏதோ பெத்த கடனுக்கு, அவ செஞ்ச பாவத்துக்கு நான்தா பரிகாரம் தேடணும். ஏ ரெண்டாவது பொண்ண மாப்ளைக்குக் கட்டித்தாரே சம்மந்தி. நம்ம ரெண்டு குடும்பத்துக்கும், அது தான் கவுரவம். நீங்க மறுக்காதிங்க சம்மந்தி"

அவரின் வார்த்தையில் சற்று தள்ளி நின்றிருந்த அந்தச் சிறு பெண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கூசி போனான் விஷ்வா.

வனிதாவின் தங்கை பவானி, பாவாடை சட்டை அணிந்திருந்த பருவப்பெண் பதினொன்றாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தாள்.

அவனின் உள்ளம் நெருப்பாய் கொதிக்க, "சீ, நீங்கெள்ளாம் என்ன மனுசன் சார்? ஒரு சின்னப் பொண்ண போயி..?"

அதற்கு மேலும் வார்த்தைகளை விடாமல் தன் நாவை அடக்கியவன், கைப்பேசியில் ஈஸ்வரை அழைத்து விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லி வனிதாவை பற்றி விசாரிக்கச் சொன்னான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அனைத்து தகவல்களும் வந்துவிட, "பவானி இங்க வாம்மா"

தயங்கிய படியே கண்களில் நீருடன் வந்தவள் அழுகையுடன், "மாமா எனக்குக் கல்யாணம் எல்லாம் வேண்டாம். நா உங்கள கட்டிக்க மாட்டேன்"

அவளை நோக்கி நீண்ட கையைப் பாதியிலேயே நிறுத்தியவன், பவானியின் தந்தையிடம் குற்றம் சாட்டும் பார்வையைச் செலுத்தினான்.

பின் அவளிடம் மென்மையாக, "உனக்கு யாரு இப்ப கல்யாணம் பண்ண போறாங்க? நீ சின்னப் பொண்ணுடா, இது படிக்கிற வயசு. நீ நல்லாபடியா படிச்சா மட்டும் போதும்!"

தன் பெற்றோரை ஒருமுறை திரும்பி பார்த்தவள், கலங்கிய கண்களுடன் அமைதியாய் விஷ்வாவின் மேல் பார்வையைப் பதித்தாள்.

அவளின் கையை மென்மையாய் பற்றிக் கொண்ட விஷ்வா, "எனக்கு உன்கிட்ட ஒருஉதவி வேணும்"

தயக்கத்துடன், "என்ன மாமா?"

"உங்க அக்காவ பாத்து பேசணும். ஆனா இனிமே நேர்ல போய்ப் பாக்குறதுன்றது, என்னால முடியாது. எனக்குப் பதிலா, நீ போய் உங்கக்காட்ட பேசுறியா?"

சிலநொடி அமைதிக்குப் பின், "சரிங்க மாமா"

பவானியின் தந்தையிடம் திரும்பியவன், "சார் நீங்க வீட்டுக்கு போங்க. வேல முடிஞ்சதும் பவானி பத்திரமா வீட்டுக்கு வந்துடுவா"

அவரின் பதிலையோ சமாதான பேச்சையோ எதையும் எதிர்பாராமல், அவளை அழைத்துக் கொண்டு மதுரைக்குக் கிளம்பினான் விஷ்வா. வனிதாவின் காதலன் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனைக்குச் செல்ல, ஈஸ்வர் ஏற்கனவே அங்கு அவர்களுக்காகக் காத்திருந்தான்.

"வா விஷ்வா”

"இப்ப அந்தப் பையனுக்கு எப்டி இருக்கு ஈஸ்வர்?"

"ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஒருதடவ சூசைட் அட்டண்ட் பண்ணீருக்கான், வீட்ல பாத்து ஹாஸ்பிடல்ல சேத்து காப்பாத்திட்டாங்க. நீ டெல்லிக்கு போறதுக்கு முன்னாடி, மறுபடியும் டிரை பண்ணி ரொம்பச் சீரியஸ் கண்டிசன்ல இருந்திருக்கான். அதுக்கப்புறம்தான் இந்தப் பொண்ணு கெளம்பி வந்திருக்கு"

"ம்ம்.."

"நேத்துதான் ஐ.சி.யூ ல இருந்து நார்மல் வார்டுக்கு மாத்தீருக்காங்க, இப்ப பரவாயில்ல"

"வனிதா?"

"அங்கதான் இருக்கு. அந்தப் பையனோட வீட்டாளுக வனிதாவ பாத்ததும் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி, திட்டியிருப்பாங்க போல. பதில் எதுவும் பேசாம, இந்தப் பொண்ணு அமைதியாவே இருந்திருக்கு. அவன் கண்முழிச்சுப் பாத்ததும், வனிதாகிட்ட தான் முதல பேசிருக்கான்!"

"ஓ.." இரண்டு நிமிடம் யோசித்தவன், "ஈஸ்வர், இது வனிதாவோட சிஸ்டர் பவானி. நீ அவங்கட்ட கூட்டிட்டு போ"

"பவானி நீ போய் அக்காட்ட பேசிட்டிரு"

"என்ன பேசணும் மாமா?"

சின்னதாய் புன்னகைத்தவன், "அவ உன்னோட அக்காடா, என்ன பேசுறதுன்னு என்கிட்ட கேக்குற?"

குரல் உள்ளே போக, "அப்பா தான், வனிய தன்னோட பொண்ணே இல்லன்னு சொல்லீட்டாரே?"

"என்ன நடந்துச்சுன்னு ஓ அக்காட்ட, அவ வாய்மூலமா கேட்டு தெருஞ்சுக்க? எனக்குக் கால் பண்ணி சொல்லு, அடுத்து என்ன பண்றதுன்னு உடனே முடிவெடுத்தாகனும். இத இப்டியே விட முடியாதில்லயா?"

விஷ்வை புரியாமல் பார்த்துவிட்டு, ஈஸ்வருடன் மருத்துவமனைக்குள் சென்றாள் பவானி.

அவன் சற்று தொலைவிலேயே நின்று கொள்ள, வனிதாவின் அருகே சென்றவள், "வனி"

சுற்றும் முற்றும் பார்த்த வனிதா, "ஏ பவி, நீ எப்டி இங்க?"

"மாமா கூட்டிட்டு வந்தாரு"

கண்களில் திகைப்புடன், "டெல்லில இருந்து வந்துட்டாரா?"

"ம்ம்.." என்றவள் வீட்டில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தமக்கையிடம் சொல்வி, "நீ ஏ வனி இப்டி பண்ண?"

"எனக்கு வேறவழி தெரில பவி"

"மாமா நல்லவரு வனி. நீ முன்னாடியே அவருகிட்ட உன்னோட காதல பத்தி சொல்லீருந்தா, அவரே கல்யாணத்த நிப்பாட்டிருப்பாரு"

வறண்ட முறுவல் ஒன்றை உதிர்த்தவள், "எனக்கப்பறம் நீ இருக்க. தங்கச்சியோட வாழ்க்க அது இதுன்னு சொல்லி, என்னைப் பயமுறுத்தீட்டாங்க பவி. எனக்கும் அப்ப தைரியம் இல்லாம போச்சு"

"சரி, இதுக்கு மேல என்ன பண்ண போற?"

"அதுதான் லெட்டர்ல தெளிவா எழுதி வச்சுட்டு வந்தேனே?"

"அப்ப மாமா?"

"நா பண்ணது துரோகம் பவி, எனக்கு அவருகிட்ட மன்னிப்பு கேக்குற தகுதிக்கூட இல்ல"

"உன்னோட வாழ்க்க?"

"அத இனிமே நானே பாத்துக்குறேன். நீ வீட்டுக்கு போ, நா சொன்னத அப்டியே அவருகிட்ட சொல்லீடு"

சிறிது நேரம் அங்கேயே தன் தமக்கைக்குத் துணையாக நின்றவள், பின் வெளியே வந்து ஈஸ்வரின் கைப்பேசியிலிருந்து விஷ்வாவிடம் விவரத்தை சொன்னாள்.

எங்கோ வெளியே சென்றிருந்தவன், பத்து நிமிடத்தில் திரும்பிவந்து பவானியிடம் சில பேப்பர்களை நீட்டி, "இது டைவர்ஸ் பேப்பர்ஸ் மா. இதுல ஓ அக்காவோட சைன் வேணும்"

அவள் புரியாமல், "மாமா..?"

"வாங்கிட்டு வரியா?"

கண்களில் நீர்கோர்க்க காகிதங்களை வாங்கிக் கொண்டவள், அடுத்தச் சில நிமிடங்களில் வனிதாவின் கையெழுத்தை பெற்று அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.

அங்கிருந்து கிளம்பியவன், பவானியை அவளது வீட்டில் விட்டுவிட்டு நேரே தனக்குத் தெரிந்த ஒரு வக்கீலிடம் சென்று பேப்பர்களை ஒப்படைத்துவிட்டு சென்னைக்குக் கிளம்பினான்.

தாய் தந்தையரோடு பெங்களூரில் இருக்கும் தன் தமக்கையின் வீட்டிற்குச் சென்றவன் சில நாட்கள் தங்கிவிட்டு, அவன் மட்டும் திரும்பினான்.

தனக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டவன்.. தனது அலுவலகத்திலேயே தங்கியபடி, வேலையில் சேர்ந்தான். அவனது வேலை பற்றிய விவரம் வெளியே தெரியாமல் இருக்க, டிடெக்டிவ் என்ற பெயரிலேயே வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறான்.

குடும்பநல நீதிமன்றத்தில் காகிதங்களைப் பதிவுசெய்து, ஒரு வருடத்திற்குப் பிறகு தான் விஷ்வாவிற்கு விவாகரத்துக் கிடைத்தது. வக்கீலிடம் பேப்பர்களைக் கொடுத்துவிட்டு வந்தவன், அதன்பிறகு அங்குச் செல்லவில்லை.

வனிதா மட்டும் நீதிமன்றத்திற்குச் சென்று உண்மையை மறைக்காமல் கூறியதால், விவாகரத்து எளிதாகக் கிடைத்தது.

நீதிமன்றம் அளித்த விவாகரத்துக் காகிதங்களைக் கூட விஷ்வா வாங்கவில்லை.

வேறு வேலையாக மதுரைக்குச் சென்ற போது தான், வக்கீலிடம் இருந்து அந்தக் காகிதத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிய தருணத்தில், கங்காவை கடத்திய விவரம் தெரிந்து அவளைக் காப்பாற்றியது.

விஷ்வா சொல்லி முடிக்கும் வரை அமைதியாய்க் கேட்டிருந்த மீரா, "அதுக்கப்பறம் அவங்கள பாக்கலையாண்ணா?"

அமைதியாக இருந்தவன், "நா மதுரைக்கே போலம்மா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தவிர்க்க முடியாத ஒருகேஸ் விஷயமா போனேன். எதிர்பாராத விதமா பவானிய பாத்தேன். இப்ப காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா. அவதான் சொன்னா, வனிதாக்கும் அந்தப் பையனுக்கும் ஒரு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சுன்னு"

"ஓ.."

"இப்ப சமீபத்துல, வனிதாவ பாத்தேன்"

"எங்கண்ணா?"

"சென்னைல தான். முகுந்.. கங்காவ கவுன்சிலிங் கூட்டிட்டுப் போகச் சொல்லி உங்க ஊர்ல இருந்து கால் பண்ணான்ல, அன்னிக்கி தான்!"

புரியாத புன்னகையை உதிர்த்தவன் தொடர்ந்து, "கைக்குழந்தையோட பாத்தேன். ரெண்டு பேரும் இங்க ஏதோ ஃபங்சன்க்கு வந்துருப்பங்க போலருக்கு!"

என்ன பேசுவதென்று மீரா அமைதி காக்க, அத்தனை நாள் தன்னுள் இருந்த வலிகளை வெளியே கொட்டிவிட்டதால், லேசான மனதுடன் மௌனமாக இருந்தான் விஷ்வா.

"கங்காக்கு இது எல்லாமே தெரியுமா?"

"ம்ம்.. ஆபிஸ்ல என்னோட டைவர்ஸ் பேப்பர்ஸ்ஸ பாத்தப்பதான். அவளுக்குத் தெரியும். மத்த விஷயமெல்லாம் அவளுக்குத் தெரிய வாய்ப்பில்ல.."

அவள் ஏதோ நினைவில் சின்னச் சிரிப்பை உதிர்க்க, விஷ்வா கேள்வி பார்வையுடன், "என்ன மீரா?"

"என்னோட யூகம் சரின்னா, அவளுக்கு உங்கள பத்தி எல்லாமே தெரியும். வாசுகி அம்மாட்ட கேட்டு தெருஞ்சுகிட்டு இருந்திருப்பா.."

அவன் புரியாமல் பார்க்க, "ஊருக்கு வந்தப்ப அவ மொகத்துல பழைய பயம் இல்ல, குழப்பம்தான் இருந்தது. இன்னிக்கு உங்கள பாத்தப்ப அவ பார்வைல வேற ஏதோ இருந்தது. நா அவள உலகம் புரியாத சின்னப் பொண்ணுன்னு நினச்சுட்டு இருந்தேன்.

ஆனா இந்த ரெண்டு மாசத்துல புது இடமும், இங்கிருக்க மனுஷங்களும், அவங்களோட பழக்கவழக்கமும் அவள நிறையவே மாத்திருக்கு. நா அவகிட்ட உங்கள மறந்திற சொன்னேன்"

இதழ்களில் தானாய் புன்முறுவல் பூக்க, "உடனே மறந்திடுறேன்னு சொன்னா. ஆனா, மனசுல வேற என்ன நினச்சுகிட்டு இருக்கான்னு தெரியல..!”

அவள் சொன்ன வார்த்தைகளில் கங்காவை பற்றிய யோசனையுடன் விஷ்வா அமர்ந்திருக்க, நேரமாவதை உணர்ந்து மீரா விடைபெற்றுப் பேருந்தில் ஏறினாள்.

அவனின் கவனம் எங்கோ இருக்க, பெயருக்கு தலையாட்டி அவளை அனுப்பி வைத்துவிட்டு, தானும் கிளம்பினான் விஷ்வா.

 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom