கனிந்தமனம் - 40

அன்று ஞாயிற்றுக்கிழமை...

மறுநாள் சமர்ப்பிக்க வேண்டிய அசைன்மென்ட்டை கங்கா எழுதி கொண்டிருக்க, அவளது அறை வாயிலில் வந்து நின்றார் வாசுகி.

அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள், "வாங்க மேடம் என்ன மேடம், என்னைத் தேடி?"

சின்னதாய் புன்னகைத்து, "உங்கிட்ட ஒரு ஹெல்ப் வேணும் கங்கா.."

பதிலுக்குப் புன்னகைத்தவள், "சொல்லுங்க மேடம்.."

"தீவுத்திடல்ல புக் ஃபெஸ்ட்டி வெல் நடக்குது. எனக்குக் கொஞ்சம் புக்ஸ் எல்லாம் வேணும், வாங்கிட்டு வரியா?"

சில நொடி யோசித்தவள், "சரி மேடம், நா போய்ட்டு வரேன்.."

அவளின் கன்னம் வருடி, "தேங்க்ஸ்மா, எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அதான். இல்லாட்டி நானே பொய்டுவேன்"

"இதுலென்ன மேடம் இருக்கு? நீங்க எனக்கு எவ்வளவோ பண்றீங்க. நான் சின்னதா, ஏதோ என்னால முடிஞ்சது!"

"சரிம்மா ரூம்க்கு வா, நா பணம் தரேன்"

"நீங்க போங்க மேடம், நா டிரஸ மாத்தீட்டு வரேன்.."

வாசுகி, "சரி.." என்றுவிட்டு முன்னே செல்ல, அடுத்தப் பத்து நிமிடங்களில் தயாராகி அவரது அறைக்குச் சென்றாள் கங்கா.

அவளின் கையில் பணத்தையும், வாங்க வேண்டிய புத்தகங்களை ஒரு சிறிய டைரியில் எழுதி அவளிடம் கொடுத்தவர், "இதுல புக்ஸ் நேம் எழுதீருக்கேன். ரொம்ப எல்லாம் தேடி அலைய வேணாம். அங்க இருக்குறத மட்டும் பாத்து வாங்கிட்டு வா"

கல்லூரியின் வாயில்வரை உடன்வந்தவர், ஏற்கனவே வாட்ச்மேன் அழைத்து வந்திருந்த ஆட்டோவில் கங்காவை ஏற்றிவிட்டு, "பாத்து மா. ஏதாவதுன்னா எனக்கு உடனே கால் பண்ணு, என்ன?"

அவள் புன்னகைத்து, "நா முன்ன மாதிரி இல்ல மேடம். பத்திரமா வந்திடுவேன், நீங்க கவலபடாதிங்க.."

வாசுகி பதிலுக்குப் புன்னகைத்து அவளின் தலை வருடி, "குட் கேர்ள், எப்பவும் இப்டிதான் தைரியத்தோடயும் தன்னம்பிக்கை யோடவும் இருக்கணும்.." என்றிட, அவள் ‘சரி’ என்பதுபோல் தலையாட்டி விடைபெற்றாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் புத்தகவிழா நடக்கும் இடத்தை அடைந்தவள்.. கைப்பேசியில் வாசுகியை அழைத்துத் தான் வந்துவிட்ட விவரத்தை சொல்லிவிட்டு, வேலையில் மூழ்கினாள்.

அரங்கம் முழுவதும் சுற்றிவந்து கிட்டதட்ட தேவையான அனைத்து புத்தகங்களையும் வாங்கி விட்டாள் கங்கா. மீதம் ஒரே ஒரு புத்தகம் இருந்த நிலையில், அனைத்து கடைகளையும் சுற்றி வந்துவிட்ட பின்பும் அது கிடைத்தப்பாடில்லை.

வேலையில் கவனமாக இருந்தவள் நேரத்தை கவனிக்க மறந்துவிட, அது இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கடந்திருந்தது. கங்காவிடம் பேசுவதற்காக வாசுகி இரண்டு முறை அவளின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்திருக்க, சைலன்ட் மோடில் வைத்திருந்ததால்.. அவள் அறியவில்லை.

தனக்குத் தேவையான சில கதை புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு கங்கா வெளியே வரும்போது மூன்றுமணி நேரத்தை கடந்து, மணி இரவு ஏழரையை நெருங்கி இருள தொடங்கியிருந்தது. வாசுகியை அழைத்து விவரத்தை சொன்னவள் ஆட்டோவிற்காகக் காத்திருந்தாள்.

அந்த ஜன நெருக்கடியான இடத்தில் புத்தக விழாவிற்கான கூட்டமும் சேர்ந்து கொள்ள, அரைமணி நேரத்திற்கு மேல் கடந்தும் ஆட்டோ கிடைக்கவில்லை.

நேரமாகிவிட்டதால் வாசுகி மறுபடியும் அழைப்பு விடுக்க, "சொல்லுங்க மேடம்.."

"எங்க வர கங்கா?"

"ரொம்பக் கூட்டமா இருக்கு, ஆட்டோ எதுவும் கிடைக்கல மேடம். அங்கையேதான் இருக்கேன்"

"ஓ.. ம்ம்.. ஒன்னு பண்ணு, புதுஇடம் வேற, ரொம்ப நேரம் தனியா நிக்க வேண்டாம். பக்கத்துலதான் விஷ்வாவோட ஆபிஸ், நீ அங்க போயிடு"

"அது வந்து மேடம்.." அவள் தயங்க, "விஷ்வாகிட்ட சொல்லி உன்னைப் பிக்கப் பண்ண சொன்னேன். ஏதோ வேலையா வெளிய போயிருக்கான்மா. வர்ரதுக்கு ஒன்பதுமணி ஆகுமாம். நீ அவனோட ஆபிஸ்ல வெயிட் பண்ணு, அவன் வந்து உன்னை டிராப் பண்ணட்டும்!"

தயக்கம் விலகாமலேயே, "நா மட்டும் அங்க, எப்டி தனியா..?"

"ரிசப்பசனிஸ்ட்டா ஒரு பொண்ணு அங்க இருக்கு. ஒன்பது மணிக்குத்தான் போகும், நீ பயப்படாம போ"

"சரி மேடம்" என வழியைக் கேட்டறிந்து, விஷ்வாவின் அலுவலகத்திற்குச் சென்றாள்.

கங்கா தயக்கத்துடன் உள்ளே நுழைய, வரவேற்பறையில் இருந்த வரவேற்பாளினி, "எஸ் மேடம், என்ன விஷயமா வந்திருக்கீங்க?"

"விஷ்வா சார்..?"

"சார் வெளிய போயிருக்காங்க. நைன் ஓ கிளாக்தான் வருவாங்க, நீங்க?"

"நான் கங்கா, விஷ்வா சாருக்கு தெரிஞ்சவங்க தான்.."

அவள் புன்னகைத்து அருகிருந்த நாற்காலியை காட்டி, "வந்து உக்காருங்க மேடம், இப்பதான் வாசுகி அம்மா போன் பண்ணி சொன்னாங்க.."

கங்கா அலுவலகத்தைப் பார்வையிட்டுக் கொண்டே நாற்காலியில் அமர, உள்ளே சென்றவள் ஜுஸ் பாட்டிலுடன் வந்தாள்.

கங்காவிடம் நீட்டி, "இந்தாங்க மேடம் குடிங்க"

நடந்து வந்து வியர்த்திருந்தவளின் தொண்டை காய்ந்திருக்க, அவளுக்கு அது தேவையாகத்தான் இருந்தது.

"தேங்க்ஸ்.." என்ற ஒற்றைச் சொல்லோடு கையில் வாங்கிக் கொண்டாள். பாட்டிலின் மூடியை திறந்து வாயில் ஜீஸை ஊற்ற, அது சிலுசிலுவென்று நாவில் மூலம் தொண்டையில் இறங்கி வயிற்றையும் சேர்த்துக் குளிர்வித்தது.

வரவேற்பாளினி தன் இடத்திற்குச் சென்றமர்ந்து வேலையைத் தொடர, கங்கா தன் பார்வையைச் சுழற்றினாள்.

ஓரளவு விசாலமான அறையின் ஓரத்தில், நாற்காலியையும் மேஜையையும் போட்டு வரவேற்பாளினி அமர்ந்திருக்க, அறையின் மறு ஓரத்தில் சில பிளாஸ்டிக் சேர்கள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. அதில் ஒன்றில்தான் கங்கா அமரந்திருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேர்எதிரே ஒருகதவு இருந்தது. அது விஷ்வாவின் அலுவலக அறை என்பதைக் கணித்துக் கொண்டாள்.

சிறிதுநேரம் அமைதியாக இருந்தவள்.. பொழுது நகராமல் இருப்பது போல் தோன்றவே, வாங்கி வந்திருந்த கதை புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள்.

பாதிக் கதையை வாசித்து முடித்த நிலையில் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, விஷ்வா உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

அவளைப் பார்த்து, புன்னகைத்தவன், "வாங்க மேடம்"

அவளும் புன்னகைத்து எழுந்து நிற்க, "ஒரு நிமிஷம்" என்றவன் வரவேற்பாளினியை நோக்கி செல்ல.. ஏற்கனவே தயாராக இருந்தவள், அவனிடம் சாவியை நீட்டி, "நா கிளம்புறேன் சார்"

"சரிம்மா, அப்புறம் நாளைக்கு ஒரு அரைமணி நேரம் முன்னாடியே வந்துரும்மா"

"ஓகே சார்.." என்றவள், கங்காவின் புறம் திரும்பி பார்த்து புன்னகைத்துவிட்டு சென்றாள்.

விஷ்வா அவளிடம், "வந்து ரொம்ப நேரம் ஆச்சா?"

"எட்டு மணிக்கு வந்தேன்"

"சித்தி எனக்குக் கால் பண்ணப்ப, நா வேலையா இருந்தேன். அதான் உடனே வரமுடியல."

"மேடம் சொன்னாங்க, கிளம்புவோமா மணி ஒன்பதாச்சு..?"

"ஒரு ஐஞ்சே நிமிஷம், இதோ வந்திடுறேன்." என்று தன் அறையை நோக்கி சென்றவன்.. ஒருநொடி நின்று திரும்பி அவளிடம், "உள்ள வந்து உக்காரு கங்கா.."

அவள் தயக்கத்துடன் செல்ல, வழிவிட்டு கதவை திறந்து வைத்து ஒதுங்கி நின்றான் விஷ்வா. கங்கா நினைத்தது போல், அது அவனது அலுவலக அறைதான்.

அவளை அங்கிருந்த இருக்கையில் அமர சொன்னவன், அறையின் மூலையில் இருந்த இன்னொரு கதவை திறந்து உள்ளே சென்றான். ஐந்து நிமிடம் என்று சொல்லி சென்றவன், பத்து நிமிடங்கள் கடந்த பின்னும் வரவில்லை.

'கதவை தட்டலாம்..' என நினைத்து எழுந்து சென்றவவளை, அங்கிருந்த மேஜை காலில் இடரிவிட, பிடிமானத்திற்காக மேஜையைப் பிடித்துக் கொண்டாள். அவளின் கைபட்டதால், அங்கிருந்த பேப்பர்கள் அனைத்தும் நழுவி கீழேவிழ, அதை எடுத்து வைப்பதற்காகக் குனிந்தவளின் கண்களில் பட்டது அந்தக் காகிதம்.

மற்ற அனைத்தையும் எடுத்து வைத்தவள் ஏதோ ஒன்று உந்தி தள்ள, விஷ்வாவின் பெயரில் இருந்த காகிதத்தைப் பிரித்துப் படித்தாள். அதில் இருந்த செய்தி அவளை அதிர்ச்சி அடைய செய்ய, தன்னை மறந்து சிலையென நின்றாள்.

முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்த விஷ்வா, "கெளம்பலாம் கங்கா..?"

அவளிடம் இருந்து பதில் இல்லாமல் போகவே, அருகேவந்து தோளை தொட்டு, "கங்கா கங்கா.."

அவனின் தொடுகையில் சுயநினைவுக்கு வந்தவள் தயக்கத்துடன் தொண்டையைச் செருமி, "உங்களுக்குக் கல்யாணம் ஆகிருச்சா சார்?"

அவளின் கேள்வியில் திடுக்கிட்டவன் தன்னைச் சமாளித்து, முயன்று வருவித்த புன்னகையுடன், "ஏன் கல்யாணம் பண்ணிக்கிறது ஒன்னும் தப்பில்லையே?"

அவள் மெல்ல தலையசைத்து உள்ளுக்குள் ஏற்பட்ட வலியை மறத்தவாறு, "தப்பில்ல தான்!"

"என்ன திடீர்ன்னு இந்தக் கேள்வி?" என்றவன் அவளது கையில் இருந்த காகிதத்தைப் பார்த்து புரிந்து கொண்டான்.

அதை வாங்கி நான்காகக் கிழித்தவன் அங்கிருந்த குப்பை கூடையில் போட்டுவிட்டு, "எனக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது, வேற ஏதாவது தெரியணுமா?"

அவள் விஷ்வாவை நேரே பார்க்க முடியாமல், தலையைக் குனிந்து கொண்டு அமைதியாய் இல்லை என்பது போல் இடவலமாகத் தலையசைக்க, "வா போலாம்" என முன்னே நடந்தான்.

எப்போதும் இயல்பாகக் கேலி பேசும் விஷ்வா, இன்று மௌனத்தைத் தன்னோடு துணை வைத்துக் கொள்ள அவளும் அவனிடம் ஏதும் பேசவோ கேட்கவோ தோன்றாது இதழ்களை மூடிக்கொள்ள, இருவரும் அமைதியாகவே கல்லூரியை வந்தடைந்தனர்.

அவள் இறங்கியதும் முகம் பாராமல், "நீ உள்ள போ, எனக்கு வேல இருக்கு. சித்திகிட்ட நான் அப்புறம் போன்ல பேசிக்கிறேன்.." என்றவன் நொடியில் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

அவன் சென்ற வழியையே பார்த்துக் கொண்டு நின்றவளின் கண்கள் கலங்க, எவரும் அறிந்துவிடா வண்ணம் அதை மறைத்து விடுதியை நோக்கி நடந்தாள்.

இதுநாள் வரை விஷ்வாவிற்கும் கங்காவிற்கும் இடையே இருந்த இயல்பான நட்பு, இன்று எங்கோ தொலைந்து போயிருந்தது.

ஆரம்பத்தில் மூன்றாம் மனிதனாக இருந்த விஷ்வா, சில நொடிகளுக்கு முன்புவரை அவளின் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒருவனாய் மாறியிருந்தான்.

தன் கடந்த கால நிகழ்வுகளையும் அதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகளையும் கங்கா இன்னும் மறக்கவில்லை தான். கசப்பான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வந்தவளுக்கு ஒரு பெண்ணிற்குள் இருக்கும் இயல்பான ஆசைகள் என்று எதுவும் இல்லை. தன் வாழ்வில் திருமணம் என்ற ஒன்றையோ, அதன்பிறகான வாழ்க்கையையோ அவள் எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும் சில நாட்களாக அவனிடமே செல்லும் தன்மனதை கட்டுபடுத்தும் வழியறியாது தவித்திருந்தாள். அவளையும் அறியாமல் விஷ்வாவிடம் தன் உள்ளத்தைத் தொலைத்திருந்த கங்காவிற்கு, அவனிடம் தன் மனதை தெரிவிக்கும் எண்ணம் துளியும் இல்லை. எப்போதும் போல் அவனுடனான நட்பை தொடரத்தான் எண்ணியிருந்தாள்.

ஆனால் இன்று, அவனைப் பற்றிய எந்த விவரமும் தெரியாமல், திருமணமான ஒரு ஆண்மகனை தனக்குள்ளே நேசித்ததை எண்ணி கூனிக் குறுகிப்போனாள்.

அவளின் கண்களில் பட்ட காகிதம் விஷ்வாவுடைய வாழ்க்கையின் வேறொரு நிறத்தை காட்ட, அதைப் புரிந்து கொள்ள முடியாமலும் குழம்பி தவித்தாள்.

வாசுகியின் அறைக்குச் சென்று அவரிடம் புத்தகங்களை ஒப்படைத்தவள், உணவையும் மறந்து படுக்கையில் விழுந்தாள். மனம் கனக்க, அவனையே நினைத்திருந்தவள் தன் எண்ண ஓட்டத்திற்குக் கடிவாளமிட்டு நள்ளிரவுக்குப் பின்னே தூக்கத்தைத் தழுவினாள்.

அடுத்த நான்கு நாட்களும் அவ்வாறே கழிந்தது. அன்று வாசுகியிடம் சென்றவள் விஷ்வாவை பற்றித் தெரிந்து கொள்ளும் பொருட்டு, "மேடம்"

"உள்ள வாம்மா"

அவரின் எதிரே அமர்ந்தவள், "விஷ்வா சார் போன் பண்ணாங்களா மேடம்?"

"அன்னிக்கி உன்னை விட்டுட்டு போனப்ப பேசுனவன்தான், அதுக்கப்புறம் இல்ல. ஏம்மா ஏதாவது பிரச்சனையா?"

"அது வந்து..."

"என்னம்மா, சும்மா சொல்லு!"

அன்று விஷ்வாவின் அலுவலகத்திற்குச் சென்றபோது நடந்த நிகழ்வுகளைச் சொன்னாள்.

வருத்த முறுவலொன்றை உதிர்த்தவர், "ஓ, அதான் சார் மூடவுட்ல இருக்காரா? நா பேசிக்கிறேன்.."

கங்கா தயக்கத்துடன், "அவருக்கு என்ன பிரச்சினை மேடம்? அவரோட ஓய்ஃப், பேமிலி எல்லாம் எங்க இருக்காங்க?"

"அது முடிஞ்சு போனது கங்கா.." என்றவர் விஷ்வாவின் கடந்த காலத்தைச் சுருக்கமாகச் சொன்னார்.

"அவன்கிட்ட வேற எதையும் கேக்காத, என்ன?"

அவள் ‘புரிந்தது’ என்பது போல் தலையாட்ட, மெலிதாய் புன்னகைத்தவர், "அப்புறம் ஒருவிஷயம் அவன் டிடெக்டிவ் இல்ல, சிபிஐல ஒர்க் பண்றான். அதனாலதான் அடிக்கடி எங்கேயாவது காணாம் போயிடுறான். இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது. எனக்கு, என்னோட அக்கா, அத்தான்,அவனோட ப்ரண்ட்ஸ் ரமேஷ், ஈஸ்வருக்கு மட்டும் தான் தெரியும். நீயும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத"

கங்கா நம்பமுடியாமல் பார்க்க.. அவர் புன்னகைத்து, "எப்ப ஊருக்கு போற?"

"இந்த வார கடைசில மேடம், வேலு அண்ணே கூட்டிட்டு போக வருது. எனக்கு இரண்டுநாள் எக்ஸ்ட்ரா லீவு வேணும், ஊருக்கு போய் ரொம்ப நாளாச்சு.."

"சரி, நீ போய்ட்டு வா. நா பாத்துக்குறேன்.."

"சரி மேடம்.." என்றவள் வாசுகி விஷ்வாவை பற்றிச் சொல்லியவற்றை நினைத்தவாறே, தன் அறையை வந்தடைந்தாள்.கைநிறைய அள்ளி வந்த பைல்களை ஜார்ஜ் அமர்ந்திருந்த டேபிளின் மேல் போட்டான் கிருஷ்.

நிமிர்ந்து பார்த்தவன், "என்னடா இது?"

"இதெல்லாம் பாத்துரு ஜார்ஜ், ஏதாவது டவுட்டுன்னா என்கிட்ட கேளு!"

"நா எதுக்குப் பாக்கணும், இதெல்லாம் நீ ஃபாலோ பண்ற கஸ்டமர்ஸோடது தான?"

"ஆமா, ஆனா இனிமே நீதான் ஃபாலோ பண்ண போற!"

புரியாமல் விழித்தவன், "ஏன்?"

"நா இந்தியா போறேன், வர்றதுக்கு நாலஞ்சு மாசம் ஆகும். நீதான் ஆபிஸ்ஸ பொறுப்பா பாத்துக்கணும்"

"டேய், என்ன விளையாடுறியா?"

"இல்ல, சீரியஸா தான் சொல்றேன்!"

"ஓ, சார் அந்த ம ரு த வ ள் ளி ய பாக்க போறீங்களா?"

கிருஷ் அவனை ஆழ்ந்து பார்க்க, "சரி சரி முறைக்காத, ஏண்டா அண்ணனுக்கும் தம்பிக்கும் என்னய பாத்தா எப்டித்தான் இருக்குமோ? நீங்க உங்க ஆள பாக்க போறப்ப எல்லாம், இருக்க வேலையெல்லாம் ஏ தலைல கட்டீட்டு போயிடுறீங்க!"

கிருஷ் புன்னகைத்து, "நண்பனுக்காக இதக்கூடச் செய்யக்கூடாதா?"

அவனை முறைத்து ஏற இறங்க பார்த்தவன், "ம்ம் செய்யலாம் செய்யலாம், ஏண்டா ரெண்டு பேருக்கும் இங்க இருக்குற பொண்ணுங்களை எல்லாம் புடிக்காதா? நாடு விட்டு நாடு போயிதான் லவ் பண்ணனுமா?"

இவன் புன்னகைத்து, அப்பாவி போல் முகத்தை வைத்து, "அவன மாதிரியே நானும் இந்தியாலதான் வாழ்க்கபடனும்னு இருந்தா, என்ன பண்ண முடியும்?"

கிருஷ்ஷை பார்த்து விழிவிரித்த ஜார்ஜ், "முடிவே பண்ணீட்டியாடா?"

"ம்ம், ஆனா அவகிட்ட எப்டி பேசுறதுன்னு தான் தெரில, பாக்கலாம்!"

"ஆல் தி பெஸ்ட், கிருஷ்"

"தேங்க்ஸ் டா, சரி சரி வேலய பாரு.."

"ஆயிரம் இருந்தாலும் வேலைல கண்ணா இரு, என்ன!"

ஜார்ஜ்ஜை பார்த்து சிரித்தவன், தன் கேபினுக்குச் சென்று சில கவர்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.ராகவன் வேலையைவிடும் விஷயத்தைத் தன்னுடைய மேலதிகாரியிடம் ஏற்கனவே சொல்லியிருக்க, அவரது பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டிருக்கும் வேலைகளை முடித்துக் கொடுக்கும் முனைப்பில் இருந்தார்.

விடுமுறை நாட்களிலும் அவர் அலுவலகத்திற்குச் சென்றுவர, முடிந்தவரை வீட்டை ஒதுங்க வைக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் காஞ்சனா.

வீட்டிற்குள் நுழைந்த கிருஷ் அன்னையைத் தேடி சமையலறைக்குச் சென்றான்.

"என்னடா?"

"இந்தாங்க மா" என்று தான் கொண்டுவந்த கவரை நீட்டியவன், அடுப்பு மேடைக்குத் தாவிஏறி அமர்ந்து கொண்டான். ''டிக்கட் போட்டுட்டியா கிருஷ்?"

"ம்ம்.."

கவரை பிரித்துப் பார்த்தவர், "என்னடா மூணு டிக்கட் இருக்கு? நீயும் வர்றியா என்ன?"

"ம்ம், நானும் வரேன். தாராவுக்குக் குழந்தை பிறந்து நம்ம வீட்டுக்கு வந்ததும், இங்க ரிட்டர்ன்!"

காஞ்சனா கேலி பார்வையோடு, "திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்னவோ, வேற எதாவது..?" புருவம் உயர்த்திக் கேள்வியாய் பாதியில் நிறுத்த, "ஆமம்மா, பொண்ணு பாக்க வரேன்!"

காஞ்சனா சிரித்து மகனின் முதுகில் ஒருஅடியை போட்டு, "போடா போக்கிரி, எப்ப பாத்தாலும் விளையாடிகிட்டு!"

அவன், 'என்ன கிருஷ், இப்டி சொல்லீட்டாங்க? உண்மைய சொன்னாக்கூட நம்ப மாட்டீறாங்க, அவளாவது நம்புவாளா?' தனக்குத்தானே கேட்டுக் கொண்டவனுக்கான விடை மட்டும் அரசநல்லூர் மகளிடம் இருந்தது.

 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom