கனிந்தமனம் - 38


கல்லூரி முடிந்து விடுதி அறைக்குத் திரும்பியிருந்தாள் கங்கா. மீரா மூலம் விஷ்வா வரும் விவரத்தை ஏற்கனவே அறிந்திருந்ததால் அவனுக்காகக் காத்திருந்தாள்.

மாலை மணி ஐந்தரை ஆகியும் அவனைக் காணவில்லை. தன் யோசனையிலேயே இருந்தவள் வாசுகியிடம் கேட்பதற்காகச் சென்றாள். விடுதி பொறுப்பாளராக இருக்கும் அவர், கங்காவின் அறையிலிருந்து இரண்டு அறைகள் தள்ளி தங்கியிருந்தார்.

வாயிலிலேயே நின்று, "மேடம்"

அவளைப் பார்த்து புன்னகைத்தவர், "வாம்மா கங்கா"

அவள் உள்ளே நுழைய அருகிலிருந்த நாற்காலியில் அமர சொன்வர், "என்னமா ரூம்வரைக்கும் வந்திருக்க?"

"மீராக்கா ஆறுமணிக்குக் கவுன்சிலிங் போகணும்னு சொல்லுச்சு, இப்பவே அஞ்சர ஆயிடுச்சே?"

மணியைப் பார்த்தவர், "நானும் விஷ்வாக்கு போன் டிரை பண்ணீட்டுதான் இருக்கேன். என்னன்னு தெரில எடுக்க மாட்டீரான்!" பேசிக்கொண்டே அவர் விஷ்வாவை தொடர்பு கொள்ள, இம்முறையும் அவரின் அழைப்பு எடுக்கபடாமலேயே கட் ஆனது.

கங்காவை பார்த்து புன்னகைத்தவர், "வந்திடுவான்மா. கரெக்ட்டா உன்ன கவுன்சிலிங் கூட்டிட்டுப் போயிடுவான்"

"அது இல்ல மேடம்"

"வேற என்னம்மா?"

"நா இதுவரைக்கும் மத்தவங்க கூட வெளிய போனதில்ல, மீராக்கா சொன்னப்ப அதுகிட்ட மறுத்துப்பேச முடியாமத்தான்.." சற்றே திணறலுடன் ஒவ்வொரு வார்த்தையாய் சொல்லி பாதியில் நிறுத்தினாள்.

அவளின் தலையை வருடி புன்னகைத்த வாசுகி, "எல்லா ஆம்பளைங்களும் கெட்டவங்க இல்லமா, நாம பாக்குற பார்வையிலதான் இருக்கு. முகுந்தன் உனக்கு என்ன வேணும்?"

"தாராக்கா வீட்டுக்காரவுங்க. அத்தான் மொற"

"அவரு மேல உனக்கு நம்பிக்க இருக்கா?"

"என்ன மேடம் இப்டி கேக்குறீங்க? நா இப்ப நல்லா இருக்கதுக்கு அவுங்களும் ஒரு காரணம். அவுங்கள நம்பாம எப்பிடி?"

"முகுந்தன், விஷ்வாவ நம்பி உன்னை அனுப்பி வக்கிறான்னா, அப்ப அவன்மேல எவ்வளவு நம்பிக்க இருக்கணும்? உனக்காக ஒரு ஊரையே எதித்து மீரா பொண்ணு இவ்வளவு செய்றா. அவ விஷ்வாக்கூடப் போன்னு சொல்லும்போது, நீ தைரியமாவே போலாம். என்ன சரியா?"

கங்கா தயக்கத்துடனே 'சரி' என்பதுபோல் தலையாட்ட அவளைப் பார்த்து புன்னகைத்த வாசுகி, "கொஞ்ச கொஞ்சமா உனக்குள்ள இருக்குற பயத்த விட்டுட்டு, தைரியத்த வளத்துக்கக் கங்கா. இனிமேல் யாரோட உதவியும் இல்லாம உன்ன நீயே பாத்துகிற அளவுக்குத் தயார் படுத்திக்கணும்.

அதுதான் மீராவுக்கும், உன்ன பணம் கட்டி படிக்க வக்கிற வேலுவுக்கும் நீ செய்ற கைமாறா இருக்கும். அவங்களும் உன்கிட்ட இருந்து அதத்தான் எதிர்பாக்குறாங்க, புருஞ்சுதா?"

அவள் மீண்டும் மௌனமாகவே தலையசைக்க, அதைக்கண்டு வாசுகி சிரிக்க அவளும் சிரித்தாள்.

சிறிது நேரத்தில் அறையின் வாயிலில் நிழலாட இருவரின் பார்வையும் திரும்பியது. களைத்திருந்த முகத்தில் வியர்வை துளிகளுடன் மெலிதாக மூச்சு வாங்கியபடி புன்னகைக்க முயலும் இதழ்களுடன் எதிரில் நின்றிருந்தான் விஷ்வா.

வாசுகி, "என்னடா இப்டி வந்து நிக்கிற, இதுதான் நீ அஞ்சு மணிக்கு வர்ர லட்சணமா?"

"ஸாரி சித்தி, வேலைல மாட்டிகிட்டேன். இதுல டிராஃபிக் வேற, சந்து பொந்துல நுழஞ்சு வர்ரதுக்குள்ள அப்பாடான்னு ஆயிருச்சு" என்றவன் கங்காவின் புறம் திரும்பி, "கிளம்பலாமா?"

அவள் சிறுதயக்கத்துடன் எழுந்து வாசுகியிடம் விடைபெற்றுச் சென்றாள்.

"நா கவுன்சிலிங் முடிச்சிட்டு வந்து உங்கள பாக்குறேன் சித்தி, இப்ப டைம் ஆயிடுச்சு" என்ற விஷ்வா வேக எட்டுகளில் செல்ல, அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பாதி நடந்தும் பாதி ஓடியும் விஷ்வாவின் பின்னே வந்தாள் கங்கா.

அவனது பைக்கை ஸ்டார்ட் செய்து, "உட்காரு கங்கா?" என்றவன் அரை நிமிடத்திற்கும் மேலாய் அவளிடமிருந்து பதில் வராமல் போகவே திரும்பி பார்த்தான்.

விஷ்வா இருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி எட்டவே நின்றிருந்தவள், கண்களில் மிரட்சியுடன் பார்த்தாள்.

எதையோ உணர்ந்தவன் போல் சட்டென்று தன் தலையில் அடித்துக் கொண்டவன், வண்டியை பூட்டி கொண்டு வெளியே சென்றான்.

இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்தவன் சற்று எட்ட நின்று, அவளைப் பார்த்து ‘வா’ எனச் சைகை செய்தான். கங்கா யோசனையுடன் செல்ல வாயிலில் ஆட்டோ ஒன்று நின்றிருந்தது.

"ஏறிக்கோ" என்றவன் அவள் ஏறி ஆட்டோவின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டதும், தானும் ஏறி மறு ஓரத்தில் அமர்ந்து கொண்டான்.

ஆட்டோ ஓட்டுபவனிடம் செல்ல வேண்டிய இடத்தைச் சொல்லிவிட்டு, "சீக்கிரம் போப்பா" என்றவன் தன் கைப்பேசியை எடுத்து முகுந்திற்கு அழைப்பு விடுத்தான்.

"என்னடா ரீச் ஆயிட்டீங்களா?"

"இல்ல முகுந், நா வர்ரதுக்கு டைம் ஆயிடுச்சு. இப்பதான் கிளம்புறோம்"

"ஓ சரிடா, நா அங்க இன்பார்ம் பண்ணீடுறேன். முடிஞ்ச அளவு சீக்கிரம் போயிடுங்க"

"ம்ம் ஓகேடா, நா அப்புறம் போன் பண்றேன்" என்றுவிட்டு தன் கவனத்தைச் சாலையில் பதித்தான்.

ஆட்டோ ஓட்டுபவனிடம் வழியை மாற்ற சொல்லி, "இந்தப் பக்கம் டிராஃபிக் அதிகமா இருக்கும்பா. இந்த வழியா போ" என்க, பதிலுக்குச் சிரித்தவன், "மெட்ராஸ்ல சந்து பொந்தெல்லாம் கரச்சி குடிச்சிருக்கீங்க போலச் சார்?"

"பொறந்து வளந்ததே, இங்க தான?" எனச் சிரித்தவன் வழியில் கவனத்தைச் செலுத்தினான்.

அருகே அமர்ந்திருந்த கங்கா அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள். இதுவரை அவனை நான்கைந்து முறைகள் சந்தித்திருக்கிறாள். ஆனால் இன்று அவனிடம் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.

எப்போதும் சிரிக்கும் அவனது கண்கள் இன்று சிறிது வலியுடன் சற்று நிதானமின்றி இருந்தது. ஏனோ பதற்றமாக இருப்பது போல் தெரிந்தான். என்னவென்று அவனிடம் கேட்க தோன்றியது, ஏனோ அதற்குத் தைரியம் தான் வரவில்லை.

சிறிது நேரத்திற்கு முன், அவனுடன் வண்டியில் செல்ல தயங்கிவிட்டு இப்போது அவனிடம், 'ஏ பதட்டமா இருக்கீங்க?' என்று எப்படிக் கேட்பது.

இதுநாள் வரை அவனாகப் பேசிய போதும், அதற்குப் பதில் பேசாமல் மௌனம் சாதித்துவிட்டு இப்போது தானாகச் சென்று எப்படிப் பேசுவது?

அவனைப் பார்க்கும் போதெல்லாம் முன்பு ஏற்படும் பயமும் நடுக்கமும் இப்போது வருவதில்லை. ஆனால் தயக்கம் விலகி சென்ற பாடில்லை.

எப்போதும் ஓரிரு வார்த்தைகளாவது அவளிடம் பேசுவான் விஷ்வா. அவள் பதில் பேசுவாள் என்றெல்லாம் நினைத்து பேசுவதில்லை. தனக்கு அறிமுகமான புது நபரிடம் பேசுவது போல், இயல்பான நான்கைந்து வார்த்தைகளோடு நிறுத்தி கொள்வான்.

இன்று ஏனோ அதுவும் இல்லை. ஒருவேளை அவன் பேசியிருந்தால் இவளும் பேசியிருப்பாளோ என்னவோ? மௌனமாகவே இருவரும் இருக்க, இருபது நிமிடத்தில் ஆட்டோ அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் நின்றது.

ஆட்டோவிற்குப் பணம் கொடுத்துவிட்டு, "வா கங்கா" என்றவன் உள்ளே சென்றான்.

பத்து நிமிடங்கள் தாமதமாகி இருந்த போதிலும் முகுந் ஏற்கனவே மருத்துவரிடம் தெரிவித்திருந்ததால், அவரும் காத்திருந்து அரைமணி நேரம் கங்காவிற்குக் கவுன்சிலிங் அளித்தார். அவள் வெளியேவர தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டிய விஷ்வா, இயல்பாக மாறி இருந்தான்.

மருத்துவரிடம், "எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கு டாக்டர்?"

அவர் புன்னகைத்து, "மச் பெட்டர், பேசுறப்ப திக்குறதில்ல. ஏதாவது ஒருசில நேரங்கள்ல மட்டும்தான். ஆனா புது மனிஷங்கள பாக்குறப்ப, அவங்களலால இயல்பா பழக முடியல. அது மட்டும்தான்!"

கங்காவிடம் திரும்பி, "இனிமே ஹாஸ்டல்லயே இருக்காதமா, வெளி இடங்களுக்கும் போயிட்டு வா. எல்லாரோடையும் இயல்பா பேச டிரைப்பண்ணு. அறிமுகம் ஆனவங்களோ அறிமுகம் இல்லாதவங்களோ, யாரா இருந்தாலும் சரி.. இயல்பா பயப்படாம பேசு. இனி ரெண்டு, மூணு கவுன்சிலிங் மட்டுமே போதுமானது, அப்புறம் தேவையில்ல. உன்ன நீயே மோட்டிவேட் பண்ணிக்கணும், ஆல் தி பெஸ்ட்!"

"தாங்க்யூ டாக்டர்" என அவரிடம் கை குலுக்கிய விஷ்வா, "ஒரு சின்ன ஹெல்ப், முகுந்கிட்ட பேசீடுங்களேன்!"

புன்னகைத்து, "ஓகே மிஸ்டர்" என்றவர் தனதறையை நோக்கி சென்றார்.

கங்காவிடம், "கெளம்புவோமா?" என்ற விஷ்வா நிதானமாக நடந்து சென்றான்.

இருவரும் வெளியே வந்து ஆட்டோவிற்காகக் காத்திருக்க.. அவளின் கையில் பாட்டிலை பார்த்து, "தண்ணி இருக்கா, காலி ஆயிடுச்சா?"

"ம்ம். இருக்கு" என்றவள் பாட்டிலை நீட்டினாள்.

வாங்கிக் குடிந்தவனுக்குத் தாகம் அடங்க வில்லைப் போலும். அந்தப் பகுதியில் பார்வையைச் சுழற்றியவன் எதிர்ப்புறம் இருந்த ஒரு ஹோட்டலை பார்த்துவிட்டு, "ஒரு பத்து நிமிஷம்…" எனத் தயங்கி பாதியில் நிறுத்த, மீதியை அவனின் கண்கள் வயிற்றுப் பசியெனச் சொல்லிற்று.

அவள், "என்ன?"

"உனக்கு ஆட்சேபனை இல்லேனா, சாப்ட்டு போயிடலாமே?"

அவள் பதில் பேசாமல் தலையசைக்க, இருவரும் கவனமாகச் சாலையைக் கடந்து ஹோட்டலில் நுழைந்தனர். காலியாக இருந்த இருக்கையைத் தேடி அமர, பேரர் அவர்களிடம் வந்தான்.

"என்ன வேணும் சார்?"

விஷ்வா கங்காவிடம், "உனக்கு?"

"எனக்கு எதுவும் வேண்டாம், நீங்க சாப்டுங்க"

"அது.." அவன் தயங்க, "எனக்குப் பசியில்ல, ப்ளீஸ் வேண்டாமே!"

பேரரிடம் திரும்பியவன், "மொதல அஞ்சு இட்லி கொண்டு வாப்பா, மீதி அப்புறம் சொல்றேன்"

ஆர்டர் எடுத்துக் கொண்டு நகர்ந்தவனிடம், "அப்டியே ஒரு காஃபியும்"

அடுத்த ஐந்து நிமிடத்தில் உணவு வந்துவிட, அதைத் தொடர்ந்து காஃபி கப்பும் வந்தது.

உணவை தன்புறம் இழுத்துக்கொண்ட விஷ்வா காபியை கங்காவின் புறம் நகர்த்தி, "குடி.." என்றுவிட்டு தன் வேலையில் கவனமானான்.

அவள் அரைக் கப் காபி குடித்து முடிப்பதற்குள், அவனது தட்டு காலி ஆகியிருந்தது. அடுத்தடுத்து அவன் கேட்டு வாங்கி உண்பதை தொடர, அவனையே பார்த்துக் கொண்டிருந்த கங்காவின் கண்களில் வியப்பு மேலிட்டது.

எதையோ உணர்ந்து நிமிர்ந்து, ஒரு நொடி அவளைப் பார்த்த விஷ்வா, எதையும் கண்டுகொள்ளாமல் தோள்களைக் குலுக்கி கொண்டு உணவில் கவனமானான்.

கங்காவிற்குச் சிரிப்புதான் வந்தது. அத்தோடு முதன்முறை சந்தித்த நாளில் அவன் உண்டதும், தன்னைத் தானே சாப்பாட்டு ராமன் என்று சொல்லி கொண்டதும்!

ஏதோ ஒன்று உந்தித்தள்ள அவனிடம், "கடைசியா எப்ப சாப்டீங்க?"

அவனோ வேலையில் கவனமாக, "காலைல, மதியம் சாப்டுறதுக்கு டைம் இல்ல அதான்"

"ஒரே நேரத்துல இப்டி மொத்தமா சாப்டா, உடம்பு கெட்றாது?"

"அதைப்பத்தி எல்லாம் கவலைப் படுறதில்ல, எனக்குப் பசிக்கிறப்போ சாப்டுவேன். என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ, ம்ம்.." பேசிக்கொண்டே இருந்தவன், வாயருகே கொண்டு சென்ற உணவு நிறுத்தினான்.

கங்காவை நிமிர்ந்து பார்த்துக் கண்களில் ஆச்சர்யம் மிளிர, "என்னய கடத்தல் காரன்னுல்ல நினச்சுட்டு இருந்த, என்கிட்ட எப்டி பேசுற?"

அவள் சிலநொடிகள் மௌனம் காத்து, "தேங்க்ஸ்.."

அவன் தன் இடக்கையை உணவு மேஜையின்மேல் ஊன்றி விரல்களை மடக்கி கன்னத்தில் பதித்து, "எதுக்கு?"

"அன் அன்னிக்கி என்னைக் காப் காப்பாத்துனதுக்கு!"

"அப்பாடி, எவ்ளோ சீக்கிரமே தேங்க்ஸ் சொல்லீட்ட?"

அவள் தலையைக் குனிந்து அமைதியாய் இருக்க.. புன்னகைத்தவன், "தேங்ஸ் எல்லாம் வேணாம், ஏற்கனவே வேணுங்குற மட்டும் மீராவும் வேலுவும் சொல்லீட்டாங்க"

அவள் மெல்லிய குரலில், "அப்ப இன்னிக்கு ஹெல்ப் பண்ணதுக்குத் தேங்க்ஸ்..."

"இந்த ஹெல்ப் உனக்காகப் பண்ணதில்ல, ஏ நண்பனுக்காகப் பண்ணது. அதுனால இந்தத் தேங்க்ஸ்ம் வேணாம்.."

அவள் நிமிர்ந்து புரியாமல் பார்க்க.. விஷ்வா கண்கள் சிரிக்க, "இந்தத் தேங்ஸ்க்கு பதிலா எதையாவது சாப்ட வாங்கிக் கொடுத்தா, சந்தோஷமா இருக்கும்! ஏன்னா எனக்கு இப்ப அதுதான் முக்கியம், தேவையும் கூட..." என்றவன் உண்பதை தொடர, அவனது செய்கையில் கங்கா தன்னை மறந்து சிரித்துவிட்டாள்.

சட்டென்று நிமிர்ந்து பார்த்த விஷ்வா, ஒரு நொடி இமைக்க மறந்தான். அவன் அறிந்த வரையில், இன்றுதான் கங்கா சிரித்து முதன்முறையாகப் பார்க்கிறான்.

அவள் அப்படி ஒன்றும் அழகானவள் இல்லை தான், ஆனால் சிரிக்க மறந்த முகம். வலிகளை மறந்து தன்னையும் மீறி புன்னகையைச் சிந்தும் போதுதான் எத்தனை அழகாகத் தெரிகிறது?

அவளது சிரிப்பை பார்த்தவனின் வயிற்றோடு சேர்ந்து மனமும் நிறைந்து விட, கைக்கழுவி வர சென்றான். பேரர் பில்லை கொண்டு வந்து அவர்களின் மேஜையில் வைக்க, கங்கா பணத்தை எண்ணி அவனிடம் நீட்டினாள்.

அதைப் பார்த்ததும் வேகமாக வந்தவன், "என்ன பண்ற?"

"தேங்ஸ்க்கு பதில்!" என்றவள் பணத்தைக் கொடுத்துவிட்டு, தனது கைப்பையை எடுத்துக்கொண்டு, "போலாமா?"

விஷ்வாவும் தலையாட்டி அவளுடன் நடந்து கொண்டே, "ம்ம் பரவாயில்ல பரவாயில்ல, ரொம்பவே தேறீட்ட. என்ன மேஜிக் நடந்துச்சு?"

"மேஜிக் எல்லாம் எதுவும் இல்ல. நா இவ்ளோ தூரம் மாறுனதுக்குக் கவுன்சிலிங் ஒரு காரணம்ன்னா, வாசுகி மேடமும் ஒரு காரணம். அவங்கதான் கூடவே இருந்து, தன் பொண்ண பாத்துக்குற மாதிரியே என்னைப் பாத்துகிறாங்க.."

"ம்ம் ம்ம், ஆனாலும் ஆச்சர்யம்தான். நீ பேசுறப்ப கொஞ்சங்கூடத் திக்கவே இல்ல. இதையே மெயிண்டெயின் பண்ணு, என்ன?''

இருவரும் ஆட்டோ பிடித்துப் பொதுவாகப் பேசிக்கொண்டே கல்லூரியை வந்தடைந்தனர்.அரசநல்லூரில்...

பஞ்சாயத்து மரத்தடியில் ஊர் பெரியவர்கள் கூடியிருந்தனர்.

முதலில் பேச்சை ஆரம்பித்த முத்தையா, "எப்பா எல்லாப் பேரூ நல்லா கேட்டுகிடுக. இன்னூ ரெண்டு மாசத்துல நம்மூரு திருவுழா வருது. அதுக்கு ஏற்பாடெல்லா செய்யோணூ, யாரு யாரு என்னென்னத்த செய்யிறதுன்னு பேசி முடிக்கத்தே இப்ப கூடியிருக்கோ. அவுகவுக நெனைக்கத சொல்லுங்கல"

கூட்டத்தில் ஒருவருக்கொருவர் சலசலவென்று பேசிக்கொண்டிருக்க, ஒன்பதாம்நாள் கும்ப மரியாதைக்குரிய தலைக்கட்டுக்காரர் எழுந்து, "பெரியவுகளுக்கூ தெரியாதில்ல, இந்த வருஷந்தே ஏம் பொண்ணுக்கு கண்ணாலத்த முடிச்சே. தலக்கட்டு பணத்த கட்டீடுதே, மேக்கொண்டு செய்ய இன்னத்த வருஷத்துக்கூ யெனக்கு திராணி இல்ல"

பெரியவர், "அட என்னலே, இதென்ன அம்புட்டு பெரிய காரியமா? உம்மால முடுஞ்சத செய்யி, மத்த தலகட்டுக்காரவுக எல்லாச் சேந்து கொறைக்குப் போட்டுகிடுதோ. என்னலே சொல்லுதீக?"

கூட்டத்தில் ஒருவர் எழுந்து, "சேரித்தேனூங்கய்யா, ஆனா இன்னத்திக்கி வருஷத்துக்கூ சேர்த்து அடுத்த வருஷோ செஞ்சுபுடனூ. என்ன மாணிக்கண்ணே செய்வீகளா? அம்மாக்கு செய்யிறதுல நாம எந்தக் கொறையூ வச்சுபுட கூடாதில்ல!"

முதலில் பேசிய தலைக்கட்டு யோசித்து, "சேரிங்கப்பு நா அடுத்த வருஷோ சேத்து செஞ்சுபுடுதே!"

பெரியவர், "சேரி சேரி, என்னென்ன செய்யிறதுன்னு பேசீடுவோ. ஏ வீரேந்திரா நீ என்னப்பா செய்யப் போற?"

மீராவின் தந்தை வீரன், "இந்த வருஷோ பதுனோரு நாளைக்கூ சேத்து மொத்த தேங்காயையூ நம்ம தோப்புலயே எடுத்துகிடலா. தேவப்படுத மளிய ஜாமான என்னால முடிஞ்ச அளவு கொடுத்திடுதே"

வேலுவின் தந்தை பெரியவர், "சரிப்பா சரிப்பா, தலக்கட்டு வரியோட தேங்கா பொறுப்பு ஒன்னோடது. சாப்பாட்டுக்கு அரிசி, பருப்பெல்லா நம்மவூட்ல இருந்து வந்ரூ.

பந்தப்போட்டு தோரணோ கட்றது, மேள தாளத்துக்குச் சொல்லி அவுகளுக்கு வேட்டியத செய்யிறது, வாழமரோ வாழ எல கொண்டாறது, ஹோமத்துக்கு ஐயர கூட்டியாந்து ஜாமா செட்டு வாங்கிப் பாத்துகிறது, நேத்திகடே இருக்கவுகளுக்குக் காப்புக்கட்டி விரதத்த ஆரம்பிக்கது, மொளப்பாரி போடுறதுன்னு ஒவ்வொரு தலகட்டு காரவுகளூ ஒவ்வொன்ன ஏத்துக்கங்க.."

கூட்டத்தில் பெருசு ஒன்று, "இந்த வருஷோ தலக்கட்டு வரிய யாருப்பா வசூல் பண்றது?"

வீரேந்திரன் இடைநுழைந்து, "இம்புட்டு வருஷோ பெரியவுக நாமதே செஞ்சோ. இப்பதே புள்ளக வளந்துருச்சுகல, தனித்தனியா தொழில் செஞ்சு தலையெடுக்க ஆரம்பிச்சுட்டாக, அதுக்களுக்குப் பொறுப்ப சொல்லி கொடுக்கோணுல? அதுக செய்யட்டுமே!"

முத்தையா யோசனையுடன், "நீ சொல்றதூ சரிதே வீரா. சோரிப்பா, இந்த வருஷோ வரிப்பணத்த நம்ம வீரே மவ மீராட்ட கொடுத்திருகய்யா. பொட்டப்புள்ள வரவுசெலவு கணக்க கட்டுசெட்டா சரியா பாக்கூ. என்ன மீரா பாத்துகிடுதியா?"

தன் வயதினருடன் ஓரமாய் நின்ற மீரா, "சேரி பெரியய்யா, பாத்துகிடுதே"

"சேரி யாத்தா, பதினோரு நா சாப்பாட்டு பொறுப்ப ஏ மவே வேலு பாத்துப்பிய்யா. என்னய்யா வேலு?"

"சேரிங்கய்யா"

"ம்ம் ம்ம், பாத்துப் பதமா செய்யோணூ. பதினோரு நாளூ எவரு வூட்லயூ அடுப்பு எரியாது. யெல்லா மாரியாத்தா எடத்துலதே, எவரூ வெறு வயித்தோட இருந்துபுடக் கூடாது வேலு. பெத்தவனுக்குப் பேரு வாங்கித் தந்து போடோனூ, என்ன..?"

அவனும் பெரியவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி, "சேரிங்கய்யா.."

"சேரிப்பா, யெல்லாரூ வூட்ல இருக்கப் பொம்பள ஆளுககிட்ட பேசி, என்னென்ன செய்தீகன்னு கோயில்ல சொல்லிபுடுங்க.."

கூட்டம் மொத்தமும் ஒன்றாய் சரி என்று விட, அடுத்த விஷயத்தை ஆரம்பித்தனர்.

"ஏப்பா வீரா, இந்த வருஷோ கும்ப மரியாதைய யாருக்கு செய்யிறது?"

வீரன், "கும்பத்துக்குச் சொந்தமானவரு யெனக்கு மூத்த ராசா அண்ணந்தே. அவருக்குப் பதிலாத்தே நானு மரியாதைய வாங்கிகிடுறே. நியாயமா மரியாதைய அவரோட மகனுக்குக் கொடுக்கோணூ, ஆனா எங்க ரெண்டு பேருக்குமே வாரிசு இல்லாம போச்சு.

இன்னத்திக்கி அண்ணனுக்கு அப்புறோ, அவரு மவ தாராதேவிதே. நா கும்ப மரியாதைய, ஏ மூத்த மருமவனுக்குச் செய்யோணுன்னூ பிரியப்படுதே. பஞ்சாயத்துகாரவுக என்ன சொல்லுதீக?"

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட.. எழுந்து நின்ற முகுந்தன், "இல்ல மாமா, கும்ப மரியாதைய நா ஏத்துக்க முடியாது!" என உரைக்க, பஞ்சாயத்து சட்டென்று அமைதியாகி விட்டது.

முத்தையா, "ஏ மாப்ள, இப்டி சொல்லுதீக? மருமவனூ மகே மாதித்தே. போன வருஷமே இந்தப் பேச்ச ஆரம்பிச்சிருப்போ, ராசா போயி வருஷோ திரும்பல. அதே இந்த வருஷோ பஞ்சாயத்து முடிவெடுக்குது. வீரே எங்கிட்ட முன்னமே சொல்லீட்டா, அதே உங்கள பஞ்சாயத்துக்கு இருக்கச் சொன்னோ!"

"இல்லங்க, தாராவ கல்யாணம் பண்ண காரணத்துக்காக மட்டுமே என்னால இந்தக் கும்ப மரியாதைய ஏத்துக்க முடியாது. அதுவும் இல்லாம இத்தன வருஷம் மாமாக்குத்தான மரியாத செஞ்சீங்க, இப்ப என்ன திடீர்ன்னு?

அவரு இருக்குற வரைக்கும் எப்பவும் போல மாமாக்கே செய்ங்க. தாராவோட சார்பா தலக்கட்டு வரிய நா கொடுத்திர்ரேன். கும்ப மரியாதையைப்பத்தி இப்ப முடிவெடுக்க அவசியம் இல்ல. தேவப்படுறப்ப பாத்துக்கலாமே, இப்ப வேண்டாம்.."

முகுந்தன் நீளமாய்ப் பேசி முடிக்க, மீரா கங்காவின் பஞ்சாயத்தில் கொடுத்த வாக்கும் நியாபகத்திற்கு வர.. வீரேந்திரன், "ஆமாங்கய்யா, மாப்ள சொல்ற படியே இருக்கட்டூ. கங்கா புள்ளைக்கு ஒருவழி பொறந்ததூ, பொறவு பேசிக்கிடலா.."

அங்கிருந்த அனைவரின் பார்வையும் மொத்தமாய் மீராவிடம் திரும்ப, அவள் தன் தந்தையைப் பெருமையோடு பார்த்து கொண்டிருந்தாள்.கிருஷ் அமெரிக்கா வந்து இருபது நாட்களுக்கும் மேலாகி இருந்தது. சென்னையில் ஏற்பட்ட அடுத்தடுத்த பிரச்சனைகள், அலைச்சல், இங்குத் திரும்பியதும் அலுவலக வேலை என ஓய்வு என்ற ஒன்று தேவை என்பதையே மறந்து போனான்.

படுக்கையில் படுத்திருந்தவனின் மூளை, எழுந்து அலுவலகம் செல்ல கட்டளை பிறப்பிக்க, உடலோ 'வேண்டாமே..' எனக் கெஞ்சி கொண்டிருந்தது.

எழுவதா வேண்டாமா என அவன் தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்தி கொண்டிருக்க, "தேவ்"

"ம்ம்.."

மீண்டும் அழுத்தமாய், "தேவ்"

அந்த அழைப்பில் அதிர்ந்தவன், சட்டென்று எழுந்து அமர்ந்தான். அறை முழுவதும் கண்களால் துழாவி, தன் தலையில் அடித்துக் கொண்டு பெருமூச்சு விட்டான்.

'டேய் கிருஷ்ணா என்னடா ஆச்சு உனக்கு? அந்த ராட்சசி, உன்ன பைத்தியமாக்காம விடமாட்டா போலருக்கு?' என்று தன்னையே நொந்து கொண்டவன், வலுக்கட்டாயமாய் எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான்.
 
Last edited:

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom