கனவே 7

மகிழன் தன் அறையை விட்டு வெளி வரவேயில்லை. அவனின் அம்மாவும், பாட்டியும் எவ்வளவோ கெஞ்சி விட்டார்கள். ஆனால் யாராலும் அவனோடு உரையாட முடியவில்லை.

பாட்டி உணவை அவனின் அறைக்கே கொண்டு வந்து தருவாள். ஆனால் அந்த நேரங்களிலும் கூட குளியலறைக்குள் சென்று ஒளிந்துக் கொள்வான் அவன். பாட்டி வெளியே சென்று விட்டாள் என்பதை உறுதிப்படுத்திய பிறகே வெளிவருவான். தனியாய் இருந்தாலும் கூட அவன் தன் கர்ச்சீப்பை முகத்திலிருந்து கழட்டவில்லை. கண்ணாடியை பற்றி யோசிக்கவே பயந்தான்.

"டாக்டர்ஸ்கிட்ட பேசிட்டு இருக்கேன் மகி.. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நீ அழகா மாறிடலாம்." என்று அவனுக்கு நம்பிக்கை சொன்னார் அப்பா.

ஆனால் அவன் தன் அறையின் கதவை திறக்கவில்லை. அவனுக்கு தெரியும், என்ன சிகிச்சை செய்தாலும் அவனின் பழைய முகம் திரும்பி வராதென்று. அந்த முகம்தான் மீரா விரும்பிய முகம். அதுதான் அழகிய முகம். அவனுக்கு அந்த முகம்தான் வேண்டும். ஆனால் உடைந்த முகத்தின் எலும்புகளை எவ்வளவு சீர் செய்தாலும் அந்த முகம் கிடைக்க வாய்ப்பே இல்லை.

உள்ளுக்குள் உடைந்துக் கொண்டிருந்தான். மீராவின் கை பிடிக்கவே முடியாது என்ற விசயம் புரிந்து கலங்கிக் கொண்டிருந்தான். இந்த நான்கைந்து மாதங்களில் பலமுறை தற்கொலை செய்ய முயன்றான். ஒவ்வொரு முறையும் அவனின் அண்ணன் அகிலனும் அப்பாவும் பார்த்து காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்.

இவனை இப்படி தனியாய் விட்டால் சீக்கிரம் மனநல குறைபாடு வந்துவிடும் என்றுச் சொன்னார்கள் மருத்துவர்கள்.

கவலைக் கொண்ட அகிலன் தம்பியோடு பேச முயன்றான்.

"இப்படியே ஒளிஞ்சிட்டு இருந்தா எதுவும் மாறாது மகி!" என்றான்.

"இந்த அசிங்கமான முகத்தை வச்சிக்கிட்டு வெளியே வரச் சொல்றியா?" ஆத்திரத்தில் கத்தினான் அவன். இப்போது மீராவும் அருகில் இல்லாத காரணத்தால் அவனுக்கு தன் கோபத்தை சுத்தமாக கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது. யாரையாவது அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணம் மூளையில் சுழன்றுக் கொண்டே இருந்தது.

"ஆபரேசன் பண்ணலாம்." அண்ணன் தைரியம் சொன்னான்.

"நான்.. நான் பழையபடி மாற முடியாது.. என்னால மீராவை பார்க்க முடியாது.!" என்றவன் அருகே இருந்த சுவரில் கையை ஓங்கி குத்தினான். கை விரல் முட்டிகள் நான்கிலும் காயம் உண்டாகி ரத்தம் கசிந்தது.

கதவின் வெளியே நின்றிருந்த அகிலனால் விசயத்தை யூகிக்க முடிந்தது. உடன் பிறந்த பாசம் அவனை வாட்டியது.

"இப்படி செய்யாத மகி.. நாங்க எல்லாம் இருக்கோம்.. உனக்கு அந்த பொண்ணுதான் வேணும்ன்னா நான் போய் கடத்திக் கொண்டு வந்தாவது உனக்கு கட்டி வைக்கிறேன். ஆனா இப்படி உன்னையே தண்டிச்சிக்காதடா." என்றான் கெஞ்சலாக.

மகிழன் அண்ணன் சொன்னதை யோசித்தான். மீரா தனக்கு கிடைப்பாளா என்று தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனால் அவளின் சம்மதம்? அவனுக்கு தேவை அவளின் காதலும், ஆசையும் அல்லவா? அந்த ஆசையும் காதலும் இல்லாத பட்சத்தில் என்ற கிடைத்து என்ன லாபம்?

"அவளை நீங்க யாராவது நெருங்கினா அப்புறம் நான் இந்த வீட்டையே கொளுத்திடுவேன் அகி." எச்சரித்தான் மகிழன்.

அகிலன் தலையில் அடித்துக் கொண்டான். எந்த பக்கமும் வராமல் கழுதை போல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தால் அவன் மட்டும் என்ன செய்வான்? தினமும் மகிழனின் அறை கதவின் முன்னால் நின்றுக் கெஞ்சிக் கொண்டிருக்க அவனுக்கும் பிடிக்கவில்லைதான். ஆனால் என்ன செய்வது? பாச தம்பியாயிற்றே!

தன் தம்பிக்காரன் வீட்டை மட்டுமல்ல ஊரையே கொளுத்தும் துணிவுடையவன் என்பது அவனுக்கு மட்டுமில்லாமல் அந்த வீட்டில் இருந்த அனைவருக்குமே தெரியும்.

ஆறாம் வகுப்பிலேயே சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு சென்றிருக்க வேண்டியவன்தான் இந்த மகிழன். பள்ளியில் அகிலனோடு படித்த பையன் ஒருவன் அகிலனை அடித்து விட்டான். அண்ணன் மீது கொண்ட பாசம் என்றுச் சொல்லி அந்த பையனை நொறுக்கி விட்டான் மகிழன். அவனுக்கு சிறு வயதிலிருந்தே கோபம் வரும். ஆனால் தன்னை விட மூன்று வயது பையன் ஒருவனை அரை உயிராய் ஆகும் அளவுக்கு அடித்து விடவும்தான் இந்த வீட்டிலிருந்த எல்லோருக்கும் பயம் வந்தது. மகிழன் அடித்த அந்த பையன் ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தான். அவனின் கையில் ப்ளேட் வைத்தார்கள். அந்த அளவுக்கு அடி பலம். அந்த விசயத்திற்காக சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு சென்றிருக்க வேண்டியவன் இவன். ஆனால் நடந்த விசயத்தை தன் பணத்தின் மூலம் ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார் வசந்த்.

அடிப்பட்ட பையனின் குடும்பத்தாருக்கு கட்டாக பணம் தந்தார். அந்த பையனுக்கான மருத்துவ செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார். அவனின் படிப்பையும் தானே பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி தந்தார்.

அப்போதே மகிழனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். ஆனால் அவன் அங்கே நிற்க மாட்டேன் என்று சொல்லி விட்டு யாருக்கும் சொல்லாமல் பாட்டியின் ஊருக்கு பேருந்து ஏறி விட்டான்.

வசந்த் திருமணத்திற்கு பிறகு நகரத்தில் வந்து செட்டில் ஆகிவிட்டார். ஆனால் பாட்டியோ இறந்துப் போன தன் கணவனின் நினைவை சுமந்து நின்ற அந்த வீட்டை விட்டும் அந்த ஊரை விட்டும் வர மறுத்து விட்டாள். அது இப்போது மகிழனுக்கு வசதியாகி விட்டது‌. பாட்டியின் ஊருக்கு வந்தவன் பிறகு அங்கிருந்து திரும்பவில்லை.

மகனைத் திருப்பி அழைத்துச் செல்வதில் தோற்றுப் போன வசந்த் மகிழனை சந்தனக் கொடிக்கால் பள்ளி ஒன்றிலேயே சேர்த்து விட்டுவிட்டு சென்றார். அப்போதும் கூட மகன் எந்த வம்பை இழுத்து வருவானோ என்று பயமாகத்தான் இருந்தது அவருக்கு.

ஆனால் அந்த நேரத்தில்தான் மகிழன் மீராவை பார்த்தான். மீரா அவனை பார்த்தாள் என்றும் சொல்லலாம்.

ஆரம்பத்தில் வெட்கம்தான் அதிகம் வந்தது அவனுக்கு. அவளின் முன்னால் நிற்கவும், அவளின் பார்வையில் படவுமே அதிகம் வெட்கினான். கணுக்கால் வரையிலான பாவாடையோடும் கழுத்தில் தளர்வாய் கட்டிய டையோடும் இருப்பாள்‌. அந்த நேரத்தில் அவளும் அவனும் ஏழாம் வகுப்பு. இருவரும் வேறு வேறு பிரிவில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

அனைத்து வகுப்புகளுக்கும் ஒன்று சேர்த்தார் போலதான் பாட்டு கிளாஸ் நடக்கும். அந்த ஏழாம் வகுப்பில் இருந்த மூன்று பிரிவு மாணவர்களையும் ஒரு மரத்தடியில் அமர வைத்துதான் பாட்டு சொல்லிக் கொடுப்பார் ஆசிரியை.

'ஓம் பூர் புவஸ்ஸுவஹ..' என்று அவர் ஆரம்பித்தால் அனைவரும் உயர் குரலில் பாடுவார்கள். ஆனால் மகிழனுக்கு வார்த்தையே வெளியில் வராது‌. அவனின் வாயிலிருந்து காற்று கூட வராது என்று சொல்லலாம். ஏனெனில் இடது பக்கத்தில் நான்கு வரிசை தள்ளி அமர்ந்திருக்கும் மீரா அவனைதான் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பாள்.

அவன் ஒன்றும் குமரனோ அல்லது பருவம் வந்த வாலிபனோ இல்லை. எல்‌.கே.ஜி சென்று வந்து விட்டு எனக்கு கேர்ள் பிரெண்ட் உள்ளாள் என்று சொல்லும் மேல் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்தவனும் அல்ல. ஆனால் இந்த பெண் பார்ப்பது புதிதாக இருந்தது அவனுக்கு. முதல் நாள் பிரேயரில் தன் வரிசை தேடி ஓடும்போது அவனோடு மோதி கொள்ள இருந்து விலகி சென்றவள் அவள். அவளுடனான முதல் சந்திப்பு அதுதான். அன்றிலிருந்து வெறித்துக் கொண்டிருக்கிறாள். பிரேயரிலும் கூட அவனுக்கு பக்கத்தில் நிற்பவள் அவள்தான். அவள் அருகில் இருந்தால் கை கால் நடுங்கியது அவனுக்கு. பிரேயரில் வெறும் உதட்டை அசைக்கவே கடினமாக இருந்தது.

அப்படி இருக்கையில் பாட்டு கிளாஸ் மட்டும் எப்படி சிறக்கும்?

குண்டு கண்களை மேலும் விரித்துப் பார்ப்பாள் அவள். அவனுக்கு தன் கழுத்தெல்லாம் சிவப்பது போலவே இருக்கும். என்ன உணர்வு என்றே கண்டறிய முடியவில்லை.

பள்ளியில் மற்ற மாணவர்கள் அமைதியாகவும் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவனோ அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்படியே சில மாதங்கள் சென்று விட்டது. காலாண்டு விடுமுறை வந்தது. மகிழனை ஊருக்கு அனுப்பி வைக்க முயன்றுக் கொண்டிருந்தாள் ஆரவல்லி. பேரனுக்கு இப்போது கோபம் கொஞ்சமும் வருவதில்லை என்று மகனிடம் சொல்லி விட்டிருந்தாள். பையன் திருந்தி விட்டான் என்பது கேட்டு மகிழ்ந்த வசந்த் அவனை மீண்டும் பார்க்க ஆசை கொண்டார்.

ஆனால் மகிழன் ஊருக்கு கிளம்பும் முன் அவனை தேடிக் கொண்டு வந்தாள் மீரா. அவளை தன் வீட்டு வாசலில் கண்டு சில நிமிடங்களுக்கு அவனுக்கு இதயமே நின்றுப் போனது.

"ஹாய் மகி.." என்று பல் தெரிய புன்னகைத்தாள். கையசைத்தபடி அவர்களின் வீட்டு வாசற்படியில் ஏறி அவனை நெருங்கினாள். அவன் சிலையாய் நின்றான்.

"சம் ஒன்னு டவுட்.. உனக்கு தெரிஞ்சா சொல்லி தரியா?" என்றுக் கேட்டாள். வளர்ந்து வந்த பார்பி டால் போல இருந்தாள். அவனுக்கு இந்த மாதிரி பொம்மைகளில் விருப்பம் இல்லைதான். அவன் விரும்பியது அனைத்தும் ரிமோட் கண்ட்ரோல் ப்ளேனும், வீடியோ கேம்ஸ்ம்தான். ஆனால் அவளை காணுகையில் பார்பி டால்தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

"யார் அது?" பாட்டி மீராவின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள்.

"நான் மீரா.. வடக்கு கொடிக்கால்ல இருக்கேன்." என்று தன் தந்தை பெயரையும் சொல்லி அறிமுகம் செய்துக் கொண்டாள் மீரா.

அவளின் தைரியம் கண்டு மகிழனுக்கு பயமாக இருந்தது. ஆனால் அவள் இயல்பே அதுதான் என்பது விரைவிலேயே அவனுக்குப் புரிந்துப் போனது.

"உள்ளே வாம்மா.." என அழைத்து அவளுக்கு மோர் தந்தாள் பாட்டி.

மகிழன் தனக்கு அரைகுறையாக தெரிந்த அந்த கணக்கை அவளுக்கு சொல்லித் தந்தான். ஆனால் அவளுக்கு அந்த கணக்கு ரொம்ப நன்றாகவே தெரியும். ஆனாலும் அதை ஒரு சாக்காக வைத்து அவனை பார்க்க வந்தாள் என்பது வெகு நாட்களுக்கு பிறகே அவனுக்கு தெரிந்தது.

ஆரம்பத்தில் அவனை தன் நண்பன் என்று சொல்லி மற்றவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள். ஆனால் எட்டாம் வகுப்பு முடிந்த கடைசி நாளில் "பெருசான பிறகு நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்றுக் கேட்டாள் அவள்.

பதிலே சொல்லாமல் வந்து விட்டான் அவன். உடல் நடுக்கம் வந்து விட்டது. அன்று இரவெல்லாம் வயிற்றுப் போக்கு நிற்கவே இல்லை அவனுக்கு. உடம்பும் அனலாக கொதித்தது.

"வர வழியில எந்த புளிய மரத்தையாவது கண்டு பயந்துட்டியா?" என்று விசாரித்தாள் பாட்டி.

"இ‌.. இல்ல பாட்டி.. சும்மா.!" என்றவனுக்கு உண்மையிலேயே பயமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பையனை சாகடிக்க துணிந்தவன்தான் இன்று மீராவின் சொல்லுக்கு பயந்துப்போய் கால் மணி நேரத்திற்கு ஒரு முறை கழிவறை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.

காய்ச்சலுக்கும், வயிற்றுப் போக்குக்கும் ஊசி போட்ட பிறகுதான் குணமானது. அந்த நாட்களை இன்று நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பு வரும்.

அவன்தான் அந்த பாடு பட்டான். ஆனால் அவள் அடுத்த நான்காம் நாள் வந்து "அன்னைக்கு நீ பதில் சொல்லவே இல்ல.." என்றாள்.

"நா.. நான் பெருசான பிறகு சொல்றேன்.." திக்கித் திணறிதான் அந்த வார்த்தைகளை சொல்லியே முடித்தான்.

"வயசுக்கு மீறி பேசறாளேன்னு என்னை தப்பா நினைச்சிக்காத மகி.. எங்க வீட்டுல ஒரு பாய் டால் இருக்கு. உன்னை மாதிரியே ரொம்ப அழகா இருக்கும். தினம் அதைதான் வச்சி விளையாடுவேன். ஆனா உன்னை பார்த்த பிறகு அந்த பாய் டால் அழகா இல்லாத மாதிரி ஆயிடுச்சி. நீ ரொம்பவும் அழகா இருக்கியா அதான் இப்படி. என்னோடு விளையாட, என்னோடு சேர்ந்து படிக்க, என்னோடு சேர்ந்து ஸ்கூல் போய் வர நீ இருந்தா நல்லா இருக்கும். ஸ்கூல் முடிஞ்ச பிறகு, காலேஜ் முடிஞ்ச பிறகும் இதே மாதிரிதான் வேணும். லைஃப் லாங் தோஸ்தா வேணும். ஆனா தோஸ்தா வேணாம்.. அதுக்கு நிறைய டெர்ம்ஸ் அன்ட் கன்டிசன்ஸ் இருக்கு. பெருசாகும் வரை தோஸ்தா இருந்துட்டு பெருசான பிறகு லவ்வர்ஸா.. சாரி இது நமக்கு கெட்ட வார்த்தைதான். ஆனா உனக்கு புரியணுமேன்னுதான் லவ்வர்ன்னே சொல்றேன். நாம பெருசான பிறகு லவ்வர்ஸா மாறிக்கலாம்.. உனக்கு ஓகேவா?" என்றாள்.

மகிழனுக்கு அடிவயிறு சலசலப்பது போலவே இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom