உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்..

Viba Visha

✍️
Writer
வணக்கம் ஸ்நேகங்களே.. இந்தத் தளத்திற்கு நான் புதியவள்.. எழுத்துக்கும் கூட.. இங்கு எனது "உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்" கதையை பகிர்கிறேன்..

சிறு காதலும், ஊடலுமான ஒரு பயணத்தினூடே, உங்கள் அன்பான இணையோடு ரோலர்கோஸ்டரில் ஏறினால் எப்படியிருக்கும்.. அப்படியான ஒரு திக் திக் தித்திக்கும் அனுபவத்திற்கு "உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்" கதை உங்களை அழைத்துச் செல்லும்.. ஒவ்வொரு மணித்துளியிலும் காதலுடன் கூடவே, சஸ்பென்ஸையும் அனுபவியுங்கள்!!


UNNODU .JPG


அத்தியாயம் - 1


அது ஒரு அழகான மாலை வேளை. பரபரப்பின் பெருநகரமான சிங்காரச் சென்னையின் ஓங்கி உயர்ந்து, உலகளந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடி.

சுற்றிலும் சுழன்று கொண்டிருக்கும் காற்றில் மெல்ல அவளது கேசம், அவள் முகத்தோடு உறவாடிக் கொண்டிருக்க.. அதை ஒதுக்கி விடக் கூடத் தோன்றாது, தான் கேட்ட கேள்விக்கானப் பதிலை அறிய, தனக்கு எதிரில் இருப்பவனது முகத்தையே வெகு தீவிரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.. அந்தக் கம்பெனியின் எம்.டி அச்சிரா.

எதிரில் இருப்பவனும் தீவிரமாக அவளது கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாலும், சட்டென அவிழ்கிறது அவனது கண்களின் கவனம்.

"மேடம்.. ஏதாவது பிராங்க் ஷோக்கு ட்ரை பண்றீங்களா?" என்று கேட்டபடியே சுற்றும் முற்றும் பார்க்க, அங்கு அதற்கான எந்த அறிகுறியும் இல்லா விட்டாலும், இன்னமும் கூட அவனது இதழில் ஏறிக்கொண்டது சிறு சிரிப்பு.

அந்தச் சிரிப்புக்குக் காரணமும் இருக்கிறதே.. ஏன்னா இந்த அச்சிரா எப்போ, என்னென்னவெல்லாம் செய்வாள்ன்னு யாராலயும் கணிக்கவே முடியாதே.. அவன் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, இவளோட தோற்றத்தை வச்சு இங்க ஏதோ சாதாரணமா வேலை செய்யற மற்ற பொண்ணுங்கள்ள ஒரு சின்னப் பொண்ணுன்னு தப்பா அவன் நினைக்க, அதையே காரணமா கொண்டு ஒரு வாரம் இவனை வச்சு செஞ்சவ தானே இவ.
ஆமா.. அவனோ இந்தக் கம்பெனியோட முக்கிய நிர்வாக இயக்குனருக்குச் செயலாளரா பணிக்கு வந்தவன். இவ்வளவு பெரிய கம்பெனியை இந்தச் சின்னப் பொண்ணு கட்டிக் காக்கும்னு இவனுக்கு எப்படித் தெரியுமாம்?

இன்டெர்வியூல செலக்ட் ஆன மறுநாளே ஆபிசுக்கு வந்தவனுக்கு யாரையும் அறிமுகம் செய்யாம நேரா எம்.டி ரூமில் போய் வெயிட் பண்ணுன்னு சொல்லி அனுப்பி விட்டுச்சு ரிசெப்ஷன்ல இருந்த பொண்ணு. இவனும் நம்பி போய் எம்.டி ரூம் கதவை தட்டினா, உள்ள யாரும் இல்ல. நீ உள்ள போய் உட்காருன்னு மறுபடியும் ஒரு ஏவல் அந்த ரிசெப்ஷனிஸ்ட்டுக்கிட்ட இருந்து.

அப்படி உள்ள வெயிட் பண்ணின நேரத்துல, அந்த எம்.டியான அச்சிரா வரவும், அவளிடமே, கருத்துக் கண்ணாயிரமாக, சின்சியர் சிகாமணியாக.. "நீ யாரும்மா? நேரா இந்த ரூம்க்கு வந்துட்ட? இது முதலாளியோட ரூம். இங்க எல்லாம் நீ வர கூடாது"ன்னு அவன் அச்சிராவை பார்த்தே கூற, அவன் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டவ, அதுக்கு அப்பறம் ஒரு வாரம்.. தான் தான் அந்த எம்.டி ன்னு சொல்லிக்காம அவனைச் சுத்தல்ல விட்டு, எதுவும் தெரியாத சின்னப் பொண்ணு மாதிரி, தான் தான் எம்.டி ஓட தனிச் செயலாளர் பதவிக்குத் தேர்வாகியதாவும், இவன் தப்பா இங்க வந்துட்டதாவும் எத்தனை பிரச்னை செய்தா?

அவ மட்டுமில்லாம, அவ கம்பெனியோட மொத்த ஆட்களையும் அவளோட ஆட்டத்துல சேர்த்துட்டு அத்தனை பேரும், "இங்க ரெண்டு பேருக்குமே வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்திருக்காங்க. ஆனா, யார் உண்மையான பி.ஏ ன்னு தெரில.. கம்பெனியோட முதலாளி வந்தா தான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்"னு சொல்லி.. தினமும் இவனை அங்கேயும், இங்கேயுமா அலையவச்சு.. ஹப்பா.. எத்தனை பாடு படுத்திட்டா?

இப்போ இது வேறயா?

ஏன்னா.. இங்க வேலைல இருக்கறது தான் இப்போதைக்கு அவனோட வாழ்நாள் லட்சியமே.. ஒரு வழியா இல்லாத தகிடுதித்தங்கள் எல்லாம் செய்து இந்தக் கம்பெனியோட தலைமைக்கு நெருக்கத்துல வேலைக்கு வந்துட்டோம்னு நினைச்ச சமயத்துல இவ இப்படியெல்லாம் செய்யவும் என்ன செய்றதுன்னே தெரியாம, தன்னோட வாழ்நாள்ல முதன் முறையா திகைச்சுப் போய்ச் செய்வதறியாம நின்னானே இவன்?

அப்பறம் ஒரு வழியா படுத்தினது போதும்னு நினைச்சாளோ.. இல்ல அவளுக்கே இந்த விளையாட்டு சலிச்சிடுச்சோ என்னவோ, ஒரு நன்நாள் காலையில கம்பெனியோட முக்கிய நிர்வாகிகளையெல்லாம் கூப்பிட்டு அவங்களுக்கு இவன அறிமுகம் செய்துட்டு, தன்னையும்.. தான் தான் இந்தக் கம்பெனியோட நிர்வாக இயக்குநர்ன்னும் சொன்னப்போ.. இவனுக்குத் தான் தல சுத்தி போச்சு.

இருக்காதா பின்ன.. இந்தக் கம்பெனியை பத்தி அக்கு வேறா, ஆணி வேறா விசாரிச்சு, சகலமும் தெரிஞ்சுட்டு இங்க உள்ள நுழைஞ்சுருக்கோம்.. இனி வரும் வேலையெல்லாம் ரொம்பச் சுலபமா முடிச்சுடலாம்னு எவ்வளவு இறுமாந்திருந்தான் அவன்?

அந்த இறுமாப்பெல்லாம், வந்த சுவடு கூட இல்லாம தவிடுபொடியாகும் படியா செய்துட்டால்ல இந்த அச்சிரா? இவன மாதிரியான ஒரு வில்லாதி வில்லனாலையே கணிக்க முடியாத ஒரு கதாபாத்திரமாயில்ல இருக்கா இவ?

இத்தனைக்கும் அவன், இந்த வேலைக்கு வர முன்னாடி, இந்தக் கம்பெனியை பத்தி அத்தனை விவரமும் சேகரிச்சவன் தானே? ஆனா, இவன் வேலைக்குச் சேரும் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் இந்தக் கம்பெனி அச்சிரா கைக்கு மாறின விஷயம் மட்டும் இவன் காதுக்கு எட்டாம போய்டுச்சு. அதனால இவன் மண்டை காஞ்சு போனதே இப்ப இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வரான்.

இதுல பார்த்துப் பழகி இந்த ஆறே மாசத்துல அவனைக் காதலிக்கறேன்னு சொல்லி, அவனோட பதிலுக்காக அவன் முன்னாடி நிற்கறாளே? இவள எந்த அளவுக்கு நம்பலாம்?" என்று அவன் எண்ணி கொண்டிருக்கையிலேயே.. அவன் முன்னே விரல்களைச் சொடுக்கிட்டு அவனை அழைத்தாள் அச்சிரா.

அவனும் தனது சிந்தை கலைந்து இப்பொழுது அவளது முகத்தினைக் கூர்ந்து நோக்க, "நான் சொன்னதுக்கு நீ இன்னமும் பதில் சொல்லல?" என்றாள் அவள் சற்று கடுகடுத்த பாவனையுடன்.

இவனுக்கோ இன்னமும் சிரிப்பு, சிரிப்பாய்த் தான் வந்தது, அவளது பாவனையைப் பார்க்கையில்.

பார்ப்பதற்குச் சின்னப் பெண்ணாய் , அழகான பார்பி டால் போல இருந்தாலும், மிகச் சிறந்த நிர்வாகி தான் அவள். எட்டு மாதங்களுக்கு முன்பு தான் வெளிநாட்டில் தொழில் மேலாண்மை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அடுத்த இரண்டே மாதத்தில் கைக்கு வந்த இந்தத் தொழிலை, இது லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கம்பெனியே என்றாலும், அதன் சீர் குலையாது.. இன்னமும் சொல்லப்போனால்.. அவளது தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் அணுகுமுறையில்.. ஏற்றத் தாழ்வு பாராது, யாவரிடமும் இணக்கமுடன் இருக்கும் நட்பினில், அவளது இந்தத் தொழில் இன்னமும் ஏற்றமும் கண்டிருக்கிறது தான்.

ஆனால்.. இப்படி அவள் திடீரென்று காதல் என்கவும்.." என்று மீண்டும் அவன் யோசனைக்குள் மூழ்கும் நேரம், அவனை மீண்டுமாய் அழைத்தாள் அவள்.

"என்ன உன்ன பிடிச்சுருக்குன்னு நானே வந்து சொல்லிட்டதால உனக்குப் பிடிக்கலையா? ஹ்ம்ம்.. எல்லா ஆம்பிளைங்களுக்கும் பொண்ணுங்க அவங்க மனசுல இருக்கற ஆசைய சொன்னா ரொம்பவே இளக்காரம் தான் இல்லையா?" என்று கைகளைக் கட்டிக் கொண்டு நெரித்த புருவத்துடன் கேட்டாள் அவள்.

இப்படியாய் அவள் கேட்கவும்.. அவசரமாக, "ச்சே.. ச்சே.. நான் அப்படி எல்லாம் நினைக்கல மேடம். ஆனா.. நீங்க ரொம்பச் சினிமா பார்ப்பீங்களோ? இல்ல, கதை புத்தகம் எல்லாம் ரொம்பவே படிப்பீங்களோ?" என்று அவன் தீவிரமாகச் சந்தேகம் கேட்கவும், மேலும் முகம் கடுத்தாள் அவள்.

"இல்ல.. மேடம் முறைக்காதீங்க. அப்படிச் சினிமாக்கள்லயும், கதைகள்லயும் தான், பணக்கார ஹீரோ.. தன் கிட்ட பி.ஏ வா இருக்கற ஏழை ஹீரோயினைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கறதா வரும். இப்போ நீங்க சொல்றத வச்சு பார்த்தா.. அதெல்லாம் பார்த்து சிலிர்த்துப் போய்ச் சில்லறையை விட்டெறிஞ்சுருக்கீங்கன்னு தெரியுது" என்றான் அள்ளித் தெறிக்கும் நக்கலுடன்.

அவளைப் பார்த்து இவன் மனதிற்குள் அப்படிச் சிரிக்கிறான் என்று நன்றாகவே அச்சிராவிற்குப் புரிந்தாலும், "அப்போ.. என்னோட பீலிங்ஸ் வெறும் வயசு கோளாறு.. கண்ட சினிமாவும், கதை புத்தகமும் பார்க்கறத்தாலையும், படிக்கறதாலையும் வர பளபளக்குற ஜிகினா காகிதம் மாதிரியான பீலுங்குற?" என்று அவள் அவனை நேருக்கு நேராய் தலை நிமிர்ந்து கேட்கவும்.. இவன் படு கேசுவலாகத் தோளைக் குலுக்கினான்.

அதைக் கண்டு அடிவயிறெல்லாம் அனல் கக்கும் கரி அடுப்பாய் எரிந்தாலும், சட்டென வருவித்துக் கொண்ட முறுவலுடன்.. "அப்போ சரி தான் ஜெய் தேவ்.. நான் வரேன்" என்று கூறிவிட்டு தனது வழமையான நிமிர்ந்த நடையுடனே அங்கிருந்து சென்று விட்டாள் அச்சிரா.

அச்சிராவின் மனதின் திட்டங்கள் எதுவும் ஜெய் தேவுக்குப் புரிவதாய் இல்லை. ஆனாலும், இப்பொழுது அலுவலகத்தில் மட்டும் அவளோடு உறவாடுவது அவனுக்குப் போதாது. அவளுக்கும், அவளது குடும்பத்திற்கும் மிக அருகில் அவன் நெருங்கியாக வேண்டும். அதற்கு இந்தக் காதலும் கூடச் சரிப்பட்டு வராது.

இப்படிக் காதல் என்று அவள் கூறுவதே எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லையே அவனுக்கு. எனவே.. அவளையும், அவளது குடும்பத்தையும் நெருங்க இன்னொரு வழியை ஆராயலானான் ஜெய் தேவ்.

அதே அந்தி மாலையில் மும்பையின் ஒரு அரசங்கக் கட்டிடம்..

அவசரகதியான ஒரு அசுவாரஸ்ய மீட்டிங் கூட்டப்பட்டிருந்தது அன்று. அங்குக் குழுமியிருந்தவர்கள்.. புலன் விசாரணைத் துறையில் மிகுந்த நிபுணத்துவம் வாய்ந்த இந்தியாவின் உள்நாட்டு உளவுப்படையான இன்டெலிஜென்ஸ் பியூரோ எனப்படும் ஐ.பி யை சேர்ந்தவர்கள்.

அனைவரின் முகத்திலும், உடுப்பிலும் அப்படியொரு கடினத்தன்மை.

அவர்கள் அனைவரின் முன்பும் பேசிக்கொண்டிருந்தார், அந்த இன்டெலிஜென்ஸ் அமைப்பின் A.D.G.P பானுகோபால்.

நீங்க எல்லாரும் இங்க ஏன் கூடியிருக்கீங்கன்னு யாருக்காவது தெரியுமா?
சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னாடி மும்பை அரசாங்க வங்கியின் பணத்தைக் கடத்திட்டு போன கும்பலை பற்றி விவரம் அறிவதற்காகத் தான் நாம இங்க குழுமியிருக்கோம்.

இந்தச் சம்பவத்துல ஈடுபட்ட முக்கிய மற்றும் மொத்த ஆட்கள்.. வெறும் அஞ்சே பேரு. அதிலும் எல்லாருமே இருபத்தி அஞ்சு வயசுல இருந்து முப்பது வயசுக்கு உட்பட்ட இளைஞர்கள்.." என்று பேசிக்கொண்டிருக்க, அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் என்கவுண்டரில் சதமடித்தவரும்.. ஐ.பியின் S.Pயுமான ரகோத்தமனுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது.

"எத்தனை நாட்களா தான் இவனுங்கள தேடறோம் தேடறோம்னு கதை சொல்லிட்டே இருப்பாங்க? முக்கியமான கூட்டம்.. முக்கியமான கூட்டம்னு வர சொல்லிட்டு, அவங்கவங்களோட வயதையும் மீறி வளர்ந்திருக்கத் தொப்பை நிரம்பும் அளவுக்கு நொறுக்குத் தீனியை நொறுக்கிட்டு.. கூடவே பேச வந்த விசயத்தையும் சைடு கேப்புல கொஞ்சமே கொஞ்சம் நொறுக்கிட்டு.. டிஸ்ஸு பேப்பரால் கையையும், வாயையும் துடைக்கற மாதிரி இந்த விஷயத்தையும் இங்கயே துடைச்சு எறிஞ்சுட்டு போய்டுவாங்க.. இதுக்கு இவ்ளோ பில்டப் வேற.." என்று யோசித்தவருக்குத் தூக்கம் கண்களைச் சொருகியது.

"ஹையோ.. போதும்டா.. விட்ருங்கடா.." என்று மனதோடு புலம்பிக் கொண்டிருந்தவரை, நித்திரா தேவி முழுமையாக ஆட்கொள்ளும் முன்.. ஐ.பியின் முதன்மை அதிகாரியான D.G வர்மா, ரகோத்தமனை விளித்தார்.

"மிஸ்டர். ரகோத்தமன்.. இந்தக் கொள்ளைக்கார கும்பலை பத்தி உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைச்சுச்சா?" என்று கேட்கவும், ஒரு அலட்சிய சிரிப்பு அவரிடம் இருந்து.

அவரது சிரிப்பை பார்த்த வர்மா.. "என்ன ரகோத்தமன்? எதுக்காக இப்போ நீங்க சிரிக்கறீங்க?" என்று கேட்க, தான் தளர்வாகச் சாய்ந்து அமர்ந்திருந்த தனது நாற்காலியில் இருந்து, மெதுவே அலட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து நேரே அமர்ந்தார் அவர்.

"சார்.. எனக்கு இந்த இன்டெலிஜென்ஸ் பியூரோல சேர்ந்து பல வருஷங்கள் அனுபவம் இருக்கு. என்னோட அனுபவத்தின் படி.. இப்படி ஒரு சின்னப் பசங்க கும்பல், இவ்வளவு தைரியமா அரசாங்கத்துகிட்ட நேரடியா மோதினதா எந்தச் சரித்திரமும் இல்ல.

அத மிக அறிவாளிகளும், திறமைசாலிகளையும் கொண்ட இந்த ஐ.பி கண்ணுல மண்ணைத் தூவிட்டு செய்திருக்காங்கன்னா.. அவங்க எவ்வளவு பெரிய மூளைக்கரங்களா இருக்கணும்?" என்று எதிராளியின் திறமையை வியக்கவும், இந்தக் கும்பலைப் பற்றிய தகவல் திரட்ட நியமிக்கப் பட்டிருக்கும் தனிக் குழுவின் தலைவர் அகிலேஷுக்குப் பயங்கரக் கோபம் வந்துவிட்டது.

"நிறுத்துங்க சார்.. போயும் போயும் ஒரு கொள்ளைக்காரன் அவன்.. அவனைப் போய் ஐ.பில இருக்கறவங்க திறமையோடு கம்பேர் பண்றீங்க?" என்று கேட்க.. இப்பொழுது தனது இருக்கையில் இருந்து மெல்ல எழுந்தார் ரகோத்தமன்.

"நான் ஒன்னும் தப்பா சொல்லிடலையே மிஸ்டர். அகிலேஷ். மும்பை மெட்ரோபொலிட்டனோட பணத்தை ஒரு கும்பல்.. வெறும் அஞ்சே பேர் கொண்ட கும்பல் கடத்தியிருக்காங்க.

அவங்க கிட்ட அதி பயங்கரமான ஆயுதங்கள் இருந்ததாகவும், நம்ம விசாரணையில் தெரிய வந்திருக்கு.
இங்க மும்பையில பல நிழல் உலக வேலைகள் நம்ம முதுகுக்குப் பின்னாடியே நடந்துட்டு இருக்கு. இதோ இந்தக் கொள்ளை கும்பலோடு தலைவன்.. இப்போதைக்கு அந்த நிழல் கும்பலுக்குப் புதுசா இருக்கான். ஆனா.. கூடிய சீக்கிரம்.. மும்பையின் நிழல் உலகத் தாதாக்களுக்கு எல்லாம் அரசனா மாறிடுவான். ஏன்னா இவனோட திறமையும், தைரியமும், வேகமும் அப்படி இருக்கு.

இதுவரைக்கும் கிடைச்ச தகவல்கள் படி.. இந்தக் கொள்ளைக்காரன்.. ரகசிய கூலிப்படையாவும் செயல்படறான்னு சொன்னீங்க. யாருக்கு சார்? இன்னொரு முறை அவன் யாருக்குக் கூலிப்படையா செயல்படறான்னு நீங்களே சொல்லுங்க?" என்று இப்பொழுது அகிலேஷை பார்த்து கோபத்துடன் ரகோத்தமன் கேட்க, அவரது கோபத்தில் அதிர்ந்த அகிலேஷும், மெல்லிய குரலில்..

"அவன் கூலிப்படையா செயல்படறது.. அரசியல்வாதிகளுக்கும், சினிமா நடிகை, நடிகைகளுக்கும்.. இன்னும் பற்பல தொழிலதிபர்களுக்கும்.." என்று திக்கித் திணறியபடியே கூற..

"ஹ்ம்ம்.. கேட்டுகிட்டீங்களா? அரசியல்வாதிகளுக்கும், சினிமாகாரங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் இவன் கூலிப்படையா செயல்பட்டு, பல கொலை, கடத்தல் சம்பவங்களை நிகழ்த்திட்டு இருக்கான். ஆனா, அவங்களையும் நம்மால விசாரிக்க முடியலை. ஏன்னா நம்மகிட்ட அதற்கான ஆதாரம்னு எதுவும் இல்லை.

அதையும் விட, உளவுத்துறையான நம்மகிட்ட அவனைப் பத்தின தனிப்பட்ட எந்த விவரமும் இல்ல.. அவன் போட்டோவை விடுங்க.. அவன் பேர் கூட நமக்குத் தெரியலையே..

இந்த வேகத்துல நாம போனோம்ன்னா.. அவன் சீக்கிரம் தீவிரவாதியா மாறிடுவான். அப்ப நம்மளால அவனைச் சுத்தமா பிடிக்கவே முடியாது.

இவ்வளவு ஏன்? மும்பை கொள்ளை சம்பவம் நடந்து முடிஞ்ச இந்த ஒரு வருஷமா இந்தக் கேசுல நமக்கு ஏதாவது முன்னற்றம் இருக்கா? இவங்க விசாரிக்கற வேகத்துக்குப் பார்த்தா.. அந்தக் கொள்ளைக்காரன் இந்நேரம் ரெண்டு மூணு மாநிலம் தாண்டி அவனோட ராஜ்ஜியத்தை நிலைநாட்டியிருப்பான்னு தோணுது.

இப்பவும் நீங்க அவன் மும்பையில் இருப்பான்னு நினைச்சுட்டு இங்கயே ஓடிட்டு இருங்க.. அவன் ஒவ்வொரு மாநிலமா தாவித் தாவி.. அங்கங்க தன்னோட வேலைகளைக் கனகச்சிதமா முடிச்சுட்டே இருக்கட்டும்." என்று ஆத்திரத்துடன் நக்கலும் கலந்து கூற, அதைக் கேட்டுக் கொண்டிருந்த அகிலேஷுக்கு இன்னமும் சினமேறியது.

"இங்க பாருங்க மிஸ்டர்.ரகோத்தமன்.. நாங்க ஒன்னும் மத்தவங்க மாதிரி எதிராளியோட புகழ் பாடிட்டு.. அரசாங்க சம்பளம் மட்டுமில்லாம, அவன்கிட்டயும் கிம்பளம் வாங்கற ஆளுங்க கிடையாது" என்று ரகோத்தமனை மறைமுகமாய்த் தாக்கிவிட்டு..

"இப்ப இந்தக் கூட்டம் எதுக்காகன்னு உங்களுக்குத் தெரியுமா? எப்படித் தெரியும்? நீங்க தான் வந்ததுல இருந்து தூங்கி தூங்கி விழுந்துட்ட இருக்கீங்களே?" என்று இன்னமும் நக்கலாய்த் தொடர.. சடாரென்று அவரருகே சென்றுவிட்டார் ரகோத்தமன்.

அவர் சென்ற வேகத்திற்கு, அகிலேஷை அவர் அடித்துவிடுவார் என்றே அனைவரும் பயந்து போய்த் தத்தமது இருக்கையிலிருந்து அதிர்ச்சியுடன் எழுந்து நின்றனர்.

அருகில் வந்து நின்றவரை பார்த்த அகிலேஷுக்கும் பயத்தில் தொண்டை வறண்டுவிட்டது தான். இறுதியாக ரகோத்தமனின் சீற்றத்தைப் பார்த்து, வர்மா தான்..

"ரகோத்தமன்.. என்னதிது?" என்று சற்றுச் சத்தமாய்க் கேட்க, சட்டென அவரைப் பார்த்து சிறு நகையுடன் திரும்பினார் அவர்.

"இல்ல சார்.. நான் தூங்கிட்டு இருந்ததா சொன்னாரே.. மிஸ்டர்.அகிலேஷ். அதான் நான் அப்படித் தூங்கிட்டு இருக்கும் போது, இவர் சொன்ன அந்த முக்கியமான விஷயம் என்னன்னு கேட்கத் தான் அவர்கிட்ட போனேன்.. அதுக்குள்ளே எல்லாரும் பயந்து அலறிட்டீங்க?" என்று எள்ளலாய்க் கூற.. அகிலேஷ் தன் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையைத் தனது கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார்.

பின்னர்ச் சாவதானமாக அகிலேஷ் புறம் திரும்பிய ரகோத்தமன்.. அவரது தோளை பற்றி அவரை, அவரின் இருக்கையில் அமரச் செய்து, தானும் அவருக்கு முன்னிந்திருந்த மேஜை மீதே சாய்ந்து கொண்டு.. "சொல்லுங்க அகிலேஷ்.. இப்படி ஒரு அவசர கூட்டத்தைத் தாங்கள் கூட்டியதன் காரணம் தான் யாதோ?" என்று இன்னமும் கேலியாய்க் கேட்க.. அவரது கேலியில் அகிலேஷின் முகம் கடுத்தாலும்..

"அது வந்து என்னனா.." என்று இன்னமும் ரகோத்தமனைக் கண்டு பயந்ததில் அடைத்த தொண்டை சீராகாததால்.. அதனைக் கஷ்டத்துடன் செருமி சரிசெய்தவர்.. "இப்போ எங்களுக்கு அந்தக் கொள்ளைக்காரனைப் பற்றி ஒரு சின்ன விவரம் தெரியவந்திருக்கு." எனவும்.. "ம்ம்.." என்றார் ரகோத்தமன் அசுவாரஸ்யமாக.

அவரது அலட்சியத்தைக் கண்டுகொள்ளாத அகிலேஷா.. "அது.. அவன் பேர்.. ஜெயராஜ்" எனவும் இப்பொழுது அதிர்வுடன் அகிலேஷை தலை நிமிர்த்திப் பார்த்தார் ரகோத்தமன்
 

Hema Manjari

New member
Member
Hi... யார் அந்த தேவ் அவனுக்கும் அந்த கொள்ளை கும்பலுக்கும் என்ன சம்பந்தம், ரகோத்தமன் ஏன் ஷாக் ஆகிறார், அச்சிரா plan என்ன, so exciting to know what will happen,,, oru chinna clarification, dev join panni 6 months thaan aagirathu then achira take over panni 8 month solli இருக்கீங்க then achira take over pannathu dev join panna 16 munnadi 3ndrum varuthu so 😁😁😁😁
 

Viba Visha

✍️
Writer
Hi... யார் அந்த தேவ் அவனுக்கும் அந்த கொள்ளை கும்பலுக்கும் என்ன சம்பந்தம், ரகோத்தமன் ஏன் ஷாக் ஆகிறார், அச்சிரா plan என்ன, so exciting to know what will happen,,, oru chinna clarification, dev join panni 6 months thaan aagirathu then achira take over panni 8 month solli இருக்கீங்க then achira take over pannathu dev join panna 16 munnadi 3ndrum varuthu so 😁😁😁😁
athu konjam parkeren ma.. thank you..
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom