அத்தியாயம் - 9&10

அத்தியாயம் – 9

திருப்பூர் மாநகரம் அந்த முன் அதிகாலை வேலை ‘சொர்க்கமோ?’ என்று எண்ணும் அளவிற்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது.

எத்தனையோ நாட்கள் இதே சாலையில் நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் பயணம் செய்திருக்கிறான். ஆனால் இன்று! இந்த இரவு! ஏனோ அவனுக்கு மிகவும் அழகாகத் தெரிந்தது.

ஆழ்ந்து மூச்சை இழுத்து வெளிவிட்டான், மனதெல்லாம் சுகந்தம்! முகமெல்லாம் பூரிப்பு!

சாலைகளில் பொருத்தப்பபட்டிருந்த மின் விளக்குகளைத் தாண்டி பூர்ணவ்வின் முகம் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

பின் இருக்கையில் இருக்கும் தனது மகனையும் மனையாளையும் பார்த்தான்.. திடீரென்று உலகமே அழகாய் தெரிய ஆரம்பித்ததாய் ஓர் உணர்வு அவனுள். அதன் காரணமாக காரின் முன் கண்ணாடியில் தெரிய.. சிரித்துக் கொண்டான்!

கார் திருப்பூரினுள் நுழைந்து சில நிமிடங்கள் ஆகி இருந்தன.

மதுரை மட்டும் அல்ல திருப்பூரையும் கூட ஒருவகையில் தூங்கா நகரம் என்று சொல்லலாம் தான். யார் ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ இதைத் திருப்பூரில் உள்ள கம்பனிகளில் வேலை செய்பவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள். காரணம், மாதத்தில் பாதி நாட்கள் இரவு முழுக்கக் கண் விழித்து நைட் ஷிப்ட் பார்க்கும் ஆட்கள் இங்கு அதிகம்.

நொய்யல் நதிக் கரையை வழமாகக் கொண்டு அங்குக் கிடந்த கரிசல் மணலில் பருத்தி உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்களாம் திருப்பூரை பூர்விகமாகக் கொண்ட முன்னோர்கள். அவர்களின் சந்ததியினர் எண்பதுகளில் பருத்தி பின்னலாடை தொழில்களில் இறங்க, இன்று இந்தியாவின் மொத்த பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் தொண்ணூறு சதவிகிதத்தைத் தனது கைகளில் வைத்துக் கொண்டு கர்வத்தோடு எழுந்து நிற்கிறது திருப்பூர்.

எதற்கு இத்தனை பில்ட் அப் என்று கேட்கலாம். ஆக்ஸ்போர்ட்டின் பொருளாதார ஆய்வின் முடிவில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னையையும் திருச்சியையும் கூடப் பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்தில் வந்து நிற்கிறது திருப்பூர்.

சரி கதைக்கு வருவோம்.

இப்பொழுது பூர்ணவ்வின் கார் திருப்பூரின் மிக முக்கியப் பகுதிகளில் ஒன்றில் இருக்கும் கே.பி.என் காலனிக்குள் நுழைந்திருந்தது.

இங்குக் காற்றில் கூடப் பண வாடை வீசுமாம்.

சுற்றியும் பங்களாக்கள் நிறைந்திருக்க ஒரு பெரிய அகன்ற பங்களாவின் கேட்டின் முன் சென்று நின்ற காரில் இருந்த பூர்ணவ் ஹாரனை அடிக்க வாட்ச் மேன் அவசர அவசரமாக ஓடி வந்து கதவைத் திறந்தார்.

வெளியில் இருந்து பார்த்தால் அது ஒரு ஏக்கர் நிலபரப்பில் கட்டப் பட்டிருக்கும் வீடு என்று எவர்க்கும் தெரியாது.

கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்த பின் தான் அதன் விசாலம் தெரியும். அதையும் தாண்டி வீட்டிற்குள் சென்றால் அரை நிமிடம் பிரமித்துப் போய் நின்று வாயைப் பிழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் எங்கும் கொட்டிக் கிடக்கும் செழுமையும் பழமையும் நவீனமும். அதெப்படி பழமையும் நவீனனும் முரணாக இருக்கிறதே என்ற கேள்வி எழலாம்.

சந்திரன் குடும்பத்தின் இந்தப் பங்களா பூர்ணவ் சந்திரனின் தாத்தாவால் கட்டப்பட்டது. அதில் நிரம்பிய பழமை, காலத்திற்கு ஏற்ப இப்பொழுது சிறிது புதுபிக்கப் பட்டிருக்கிறது.

அந்த அதிகாலை நேரத்திலேயே

“பாக்கியம் தரும் லக்ஷ்மியே வா அம்மா... அம்மம்மா நீ “ என்ற பாடல் உள்ளே ஒலித்துக் கொண்டிருக்க இஃது அவனுடைய அம்மா யசோதாவின் வேலை என்று புரிந்துகொண்ட பூர்ணவ் முகத்தில் ஒட்டிய சிரிப்போடு காரை விட்டு இறங்கி வந்து பின்னால் இருந்த கதவை திறந்தபடி “யாழ்” என்று யாழிசையின் தோளில் தட்டினான்.

அவள் சிணுங்கிக் கொண்டு நெஞ்சோடு சாய்ந்திருந்த மகனை இன்னும் இறுக்கி அணைத்துக் கொள்ள

“ஹேய் பொண்டாட்டி.. வீடு வந்துருச்சுடி” என்று அவளது காதோரமாக துள்ளலோடு கிசுகிசுத்தான்.

அதில் விலுக்கெனத் கண் விழித்த யாழிசை சுற்றும் முற்றும் பார்த்தாள்.

கேட்ட பூர்ணவ்வின் குரல் கனவில்லை நிஜம் தான்! ஆனால் கனவுகளில் கட்டி அணைத்திருந்த பூர்ணவ் இல்லை மடியில் என்பது மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பார்த்ததும் தான் புரிந்தது.

“எப்படி இப்படித் தூங்கிப் போனோம்? இத்தனை நாட்களாய் இப்படி நடப்புக் கூடத் தெரியாமல் என்றுமே தூங்கியதில்லையே?” என்று யோசித்துக் கொண்டே அவள் பிரம்மைப் பிடித்தவள் போல் அமர்ந்திருக்க

இன்னும் குனிந்தவாறே இருந்தவன் இயல்பாக அவளது களைந்திருந்த தலை முடியை சரி செய்துவிட்டு அவளது கன்னத்தைக் கைகளில் ஏந்தியபடி “அண்ட் பைனல்லி யூ ஆர் பேக்...நா இன்னைக்கு எவளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? யாழ்” என்றபடி அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டான். அவனது ஸ்பரிசத்தை உணர்ந்தவளின் கண்கள் தானாக மூடிக்கொள்ள, அவளின் எதிர்ப்பின்மையைக் கவனித்தவன் அடுத்ததாக அவளது உதட்டிற்குப் பயணிக்க, இரு இதழ்களும் உரசப்போகும் நேரம் அவனை பட்டெனத் தன்னைவிட்டுத் தள்ளினாள் யாழிசை.

விலகியவனின் முகத்தில் ஏமாற்றம்!!

இவளது முகத்தில் பல விதமான உணர்ச்சிக் கலவைகள். “இவனுடன் இருப்பது என்னைத் தடுமாற வைக்கின்றதே.. அப்படி இருக்கையில் மூன்று வருடங்கள் எப்படி?” காலம் கடத்த கேள்வி கேள்விகள் அவளது மனதில்.

யாழிசையைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று நினைத்தாலும் அவனது மனதில் உள்ள அவள் மீதான காதல் எஜமானைக் கண்ட நாய்க்குட்டியைப் போல துள்ளிக் கொண்டு வெளி வருகிறதே என்ன செய்ய?

ஆழ்ந்த மூச்சுகளை இழுத்து விட்டவன் “வீடு வந்துருச்சு வெளிய வா” என்றான்.

தூங்கிக் கொண்டிருந்த அபினவ்வைத் தூக்கிக் கொண்டு காரை விட்டு இறங்கி வந்தவளின் மூளையில் மீண்டும் எதார்த்தம் சவுக்கால் அடித்து, தூக்க கலக்கத்தில் கவனிக்காமல் விட்ட இடைத்தை எல்லாம் இப்பொழுது தெளிவாகக் காண்பித்தது.

“மீண்டும் இந்த வீட்டிற்குள்ளா?” இடவலமாகத் தலை அசைத்தபடி பின்னால் நகர்ந்தவள் “இங்க எதுக்கு எங்களக் கூட்டிட்டு வந்திங்க... எங்கள எதாவது ஒரு ஹோட்டல்ல விடுங்க” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு

இதைக் கேட்ட பூர்ணவ்விற்கு சுருக்கென்று இருந்தது.

அவளது கையை இருக்கி பிடித்து இழுத்து “ஹோட்டலா?” என்று அவன் கர்ஜிக்க, அவளது தோளில் தூங்கிக் கொண்டிருந்த அபினவ் சிணுங்கினான்.

அதில் யாழின் கையை விட்டவன் “மூணு வருஷம் மட்டும் தான் என் பையன் என் கூட இருக்கப் போறான்.. அதுவரைக்கும் என் கூட என் வீட்ல தான் அவன் இருக்கணும்” ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்துக் கூறினான் பூர்ணவ்.

ஆனாலும் அவளது முடிவு மாறியது போல் தெரியவில்லை.

இதைப் புரிந்து கொண்ட பூர்ணவ் மூச்சை இழுத்து விட்டுவிட்டு “ப்ளீஸ்டி... இப்போ கூட நீ எனக்கு சைன் பண்ணிக் குடுத்துருக்கப் பத்திரத்த வச்சு மெரட்டி என்னால உன்ன போர்ஸ் பண்ணி இங்கேயே தங்க வைக்க முடியும்... ஆனா நீ ஒவ்வொரு நிமிஷமும் உனக்குப் பிடிக்காம இந்த வீட்ல இருக்கது எனக்கு வேணாம்... ப்ளீஸ்.. நீ தான் கண்டிஷன் போட்டுருக்கில.. மூணு வருஷம் மட்டும் தான் நா உங்க கூட இருக்க முடியும்னு... அதுவரையும் நீயும் அபினவ்வும் என் கூட இருக்கணும்னு நா ஆசப் படுறே” என்று சொன்னவனின் குரல் கர கரத்தது.

அந்தக் கரகரப்பை யாழிசையாலும் உணர முடிந்தது. இவ்வளவு நேரம் இருந்த கோபமும் வீம்பும் போய், தான் உயிரையே வைத்திருக்கும் ஆண்மகன் தன் முன் கெஞ்சுகிறான் என்ற எண்ணமே அவள் முன் வந்து நின்றது.

என்றுமே திமிரோடும் நிமிர்வோடும் அடுத்தவர்களை ஆளும் பூர்ணவை தான் அவள் பாத்திருக்கிறாள். ஏன், தவறை எல்லாம் அவன் செய்துவிட்டு நேற்று அவளை நான்கு வருடங்களுக்குப் பிறகு பார்த்த போது கூட அவன் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லையே.. அவன் கூட அவளும் அபினவ்வும் வர முடியாது என்று மறுத்த போது கூடப் பத்திரத்தை வைத்துக் காரியத்தை சாதித்தானே தவிரக் கெஞ்சவும் இல்லை, அவனிடம் இருந்த திமிரும் இறங்கவில்லை.

அப்படிப்பட்ட பூர்ணவ் அவள் முன் நின்றுக் கெஞ்சுகின்றானா?

அவளின் மனதின் ஆரோக்கியத்தை எண்ணிக் கவலைக் கொள்கிறானா?

யாழிசைக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘மீண்டும் அவனிடம் மயங்குகிறாய் யாழிசை’ அவளது மனது திடீரென அதட்டியது.

‘இல்ல.. இல்ல.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. எப்டி இருந்தாலும் வெளியப் போய் வீடு எடுத்து தங்குனா வர்ற செலவ இங்க குடுத்துக்கலாம்” பூர்ணவ் மேல் காதல் கொண்ட மனது பூசி மொழுகி அவளை சமாதனப்படுத்தியது. அதில் கொஞ்சம் சமாதானம் ஆனவள் “இங்கிருந்தா என்ன வெளிய எங்கயாச்சும் இருந்தா என்ன? எல்லாம் ஒன்னு தான் ” என்ற எண்ணத்தோடு அவனது கோரிக்கைக்குப் பதிலாக சிறு தலை அசைப்பை மட்டும் வெளிப்படுத்தினாள் யாழிசை. அந்தச் சிறுதலை அசைப்பிற்கே பூர்ணவ்வின் முகம் சூரியனைக் கண்ட தாமரையென மலர்ந்தது. இதைப் பார்த்த யாழிசையின் புருவங்கள் சுருங்கின... இப்படி அவளுடைய ஒரு தலை அசைப்பிற்கே ஏங்கிக் கிடந்த பூர்ணவ்வை அவனுடன் வாழ்ந்த வாழ்வில் அவள் கண்டதில்லை.

“ஒருவேள உண்மையாலுமே கடமைக்காக இல்லாம நம்ம மேல இருக்கப் பாசத்துல தான் நம்மள இங்க கூட்டிட்டு வந்துருக்காறா?” என்ற எண்ண விதை யாழிசையின் மனதினுள் விழுந்தது. இந்த எண்ணமே அவளுக்குள் சொல்லொண்ணா குளிர்ச்சியை எற்படுத்துவதை அவளால் மறுக்காமல் இருக்க முடியவில்லை.

யாழிசையின் சம்மதத்தை அறிந்தவுடன் இயல்பாக அபினவ்வை அவளது தோளில் இருந்து தனது தோளில் இடம் மாற்றிக் கொண்டபடி அவளது கையைப் பிடித்து “வா” என்றபடி உள்ளே அழைத்துப் போனான்.

அவளால் அவனின் மேல் இருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.

நடப்பதெல்லாம் கனவு போல் இருந்தது.

“இந்த மாதிரியான அரவணைப்பிற்காகத் தானே நான் ஏங்கிக் கிடந்தேன்” அவளது மனம் கலங்கியது.

அவள் இந்த உணர்வை மனதில் போட்டு உழப்பிக் கொண்டே அவனுடன் நடக்க வீட்டினுள் நுழைந்தவன் “அம்மா..” எனக் கத்த தனது சிந்தனைகளில் இருந்து வெளி வந்தாள்.

தலையை நிமிர்த்தியவள் தான் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.

அவள் எப்படி வீட்டை மாற்றி வைத்திருந்தாளோ அப்படியே இருந்தது வீடு.

அவள் விரும்பி வாங்கி மாட்டிய சாண்டிலியர் நடுநாயகமாக அந்த உயர்ந்த விட்டம் வைத்துக் காட்டியிருந்த ஹாலில் தொங்கிக் கொண்டிருக்க.. அவள் மாற்றி வைத்திருந்த சோபாகுஷன்ஸ்-சிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் திரைகள் வரை நான்கு வருடங்களுக்குப் பிறகும் அந்தப் பங்களா அவள் மாற்றி அமைத்திருந்தபடியே தானிருந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களுக்கு அரக்கு நிற சேலையில் பச்சை கரை வைத்துக் காதுகளில், மூக்கில், கைகளில், கழுத்தில் என வைரங்கள் மின்ன அவற்றைத் தோற்கடித்து விடக் கூடிய மின்னும் கண்களோடும், வாயோடு சேர்ந்து முகம் நிரம்பிய புன்னகையோடு நடந்து வந்தார் பூர்ணவ்வின் அம்மா யசோதா. இல்லை இல்லை ஓடி வந்தார் என்று கூடச் சொல்லலாம். யாழிசையை முதலில் பார்த்தவரின் கண்கள் அவள் மீதிருந்து விலகவே இல்லை... “யாழ்.. எப்படி இருக்கடா?” என்று அவர் கையை விரித்துக் கொண்டு வர அவரைப் பார்த்ததும் ஏனோ அவளின் கண்களில் கண்ணீர் குபுக்கென வந்து விட “அத்த” என்ற கூச்சலோடு ஓடிப் போய் அவரைக் கட்டிக் கொண்டாள் யாழிசை.


அத்தியாயம் – 10

தன் உயரத்தை குறைத்து தனது நெஞ்சில் சாய்ந்து அழுது கொண்டிருக்கும் யாழிசையை நிமிர்த்திய யசோதா

“ஏ யாழ், இவளோ மெலிஞ்சு போயிட்ட.. ஒழுங்கா சாப்பிடுறையா இல்லையா?” என்று அதட்டிக் கொண்டிருந்தவரின் பார்வை அப்பொழுது தான் பூர்ணவ்வின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த அபினவ் மீது விழுந்தது.

உடனே மண்டையில் மணி அடிக்க இப்பொழுது அவரது கண்களில் இருந்து தானாகக் கண்ணீர் உடைப்பெடுக்க யாழிசையை விட்டுவிட்டு பூர்ணவ்வை நோக்கி நடந்தார் யசோதா.

அவரது கண்கள் பூர்ணவ்விடம் கேட்ட கேள்வியின் பொருள் உணர்ந்த பூர்ணவ் “ஆம்” என்பது போல் தலை அசைக்க யசோதாவின் கண்களில் தேங்கி நின்று கொண்டிருந்த கண்ணீர் கன்னகளில் வழிய ஆரம்பித்தது.

தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பவும் முடியாமல், பூர்ணவ்விடம் இருந்து வாங்கினால் எழுந்துவிடுவானோ என்ற பயத்தோடு பூர்ணவ்வின் முதுகிற்குப் பின் சென்று அபினவ்வின் முகத்தைப் பார்த்தார் யசோதா.. அவரது கைகள் உயர்ந்து அபினவ்வின் குண்டுக் கன்னத்தை வருடின...

“பூர்ணவ்வ்வ்.. அப்படியே உன்ன மாதிரியே இருக்கான்டா என் பேரன்” என்றவரின் கண்கள் ஒளிர்ந்தன.

“அம்மா.. அதுக்கு ஏ இப்டி அழுறிங்க.. கண்ணத் தொடைங்க மொதல்ல” அதட்டினான் அவரது மகன்.

அப்பொழுது தான் தனது அறையை விட்டு வெளியே வந்த பூர்ணவ்வின் தந்தை இளையச்சந்திரன் ‘என்ன நடக்கிறது?’ என்பது போல் எண்ணிக் கொண்டே வர கண்களில் கண்ணீரோடு நின்று கொண்டிருந்த யாழிசை தான் அவரது கண்களுக்கு முதலில் பட்டாள்.

அவளைப் பார்த்ததும் “குட்டிமா....” என்றபடி யாழிசையை நோக்கி வேக அடிகளை எடுத்து வைத்து வந்தார் இளையச்சந்திரன்..

“குட்டிமா” என்ற அழைப்பில் ஸ்தம்பித்துத் திரும்பியவள் இளையச்சந்திரனைப் பார்த்ததும் “மாமா” என்ற கதறலோடு பள்ளத்தைக் கண்ட தண்ணீர் என சென்று அவரை அணைத்துக் கொண்டாள்.

சிதம்பரமும், இளைய சந்திரனும் மட்டும் தான் யாழை ‘குட்டிமா’ என்று அழைப்பார்கள்.

அவளை நெஞ்சினில் தாங்கியவர் “எங்கடா போயிட்டிங்க எல்லாரும்? சித்து எங்கடா? தங்கச்சி எங்கடா?” என்று அவர் மகிழ்ச்சியுடன் கேட்க

“மாமா.. மாமா.. அப்பாவும் அம்மாவும்... “ என்றவளுக்கு அதற்கும் மேலும் அழுகை மட்டுமே வெளிவந்தது... எதோ தவறாகப் பட அவளை நிமிர்த்தியவர்

“குட்டிமா.. என்னைய பாரு... என்னைய பாருன்னு சொல்றேன்ல... சிதம்பரமும் மீனாட்சியும் எங்க?” என்று சிறு அதட்டலோடு கேட்டார்.

இதில் அவளது குரல் இன்னும் வெதும்பியது “மாமா.. அப்பாவும் அம்மாவும்.. ஆக்சிடன்ட்ல... “ என்று சொன்னவளுக்கு அதற்கும் மேல் சொல்ல முடியவில்லை... தொண்டைக் குழி வரை வந்து நின்ற வலி அவளுள் இருந்து வெளி வந்து கொண்டிருந்த வார்த்தைகளை அடைத்து நின்று கொண்டு நின்றது.

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளைய சந்திரன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய்ச் சோபாவில் அமர்ந்துவிட்டார்..

கடந்த நான்கு வருடங்களின் ஆரம்பத்தில் யாழிசை, சிதம்பரம், மீனாட்சி என மூவருமே ஒரே நேரத்தில் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கேள்விப்பட்டவருக்குக் கட்டுக்கடங்காத கோபம் அவர்கள் மூவரும் மேலுமே இருந்தது.

உயிர் நண்பன் என்பதைத் தாண்டி சம்மந்தி என்ற முறையையாவது மதித்துருக்க வேண்டாமா என்ற கோபம்...

ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது.. ஆனால் என்ன பிரச்சனை என்று கூடத் தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்ட தன் மேல் கோபம்..

‘இது தான் என்னுடைய பிரச்சனை.. எனக்கு உதவி செய்யடா’ என்று உரிமையோடு கேட்காத உயிர் நண்பன் சிதம்பரத்தின் மீதான கோபம்,

‘அவர் சொல்லமாட்டேன் என்கிறார் அண்ணா நான் சொல்கிறேன்’ என்று சொல்லாத மீனாட்சி மீது கோபம்...

இதையெல்லாம் தாண்டி சிறு வயதில் இருந்தே யாழிசையைத் தூக்கி வளர்த்து, தனது மகனுக்கே திருமணமும் செய்து வைத்து, தனக்கு மருமகளாக வந்து தன் பின்னே “மாமா.. மாமா” என்று சுத்தி வந்த யாழிசை கல்யாண வாழ்வையும் விட்டுவிட்டு தனது மகனையும் அம்போவென விட்டுவிட்டு மருமகள் என்ற கடமையை மறந்து.. சொல்லிக் கொள்ளாமல் கூட கிளம்பி சென்றுவிட்ட யாழிசையின் மீது அளவுக்கு அதிகமான கோபம்.. இதையெல்லாம் தாண்டி இப்படிச் சொல்லிக் கொள்ளாமல் கூடப் போனவர்களை நானே தேடித் போக வேண்டுமா என்ற தன்மான வீம்பும் சேர்ந்துக் கொண்டாலும் கொஞ்ச நாட்கள் ஆக ஆகக் கோபம் பின் சென்று அவர்கள் மூவரின் மீது வைத்திருந்த அன்பே முன் வர, தானே தேட நினைத்தாலும் எங்கே போய் அவர்களைத் தேடுவது, எப்படி அவர்களைத் தொடர்பு கொள்வது என அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்தக் கவலையிலயே அவர் சுழன்று கொண்டிருந்த பொழுது தான் அவரது கவலையைப் புரிந்து கொண்ட பூர்ணவ் “அப்பா.. நா எல்லாத்தையும் பாத்துக்குறேன்... “ என்று அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு கூற, பூர்ணவ்வின் பொறுப்பில் விட்டுவிட்ட வேலை என்றால் அது சரியாக வந்து விடும் என்று தெரிந்த இளையச் சந்திரன் தனது தேடுதல் வேட்டையை நிறுத்தினாலும் பூர்ணவ்விடம் அதைப் பற்றி நச்சரித்துக் கொண்டே தான் இருந்திருந்தார்.

ஆனால் போகப் போக யாழிசையின் பிரிவு பூர்ணவ்வை மிகவும் பாதிக்கின்றது என்று புரிந்துக் கொண்டவருக்கு நாம் மீண்டும் மீண்டும் போய் நச்சரித்து அவனை மேலும் கவலைக் கொள்ள வைக்கிறோமோ என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டார்.

இன்று யாழிசையைப் பார்த்த பின்பும் கூட அவரது கோபத்தைத் தாண்டி அவள் மீது கொண்டே பாசம் தான் முன் வந்து நின்றது. அப்படிப்பட்ட மனிதனுக்கு அவரது உயிர் நண்பன் இறந்துவிட்ட செய்தி இதயத்தில் பாய்ச்சிய கத்தி போல் தான் அவருள் விழுந்து இருந்தது.

வீடே நிசப்தத்தில் மூழ்கி இருக்க யசோதாவின் மார்பில் சாய்ந்திருந்த யாழிசையின் அழுகையை அடக்கும் விசும்பல் சத்தம் எல்லோரது காதிலும் எதிரொலித்தது.

சூழ்நிலையைக் கவனித்த பூர்ணவ் ‘மன்னித்துக் கொள்ளடா மகனே.. எனக்கு வேற வழி தெரியல ஆத்தா’ என்று தனக்குள் நினைத்தபடி யாருக்கும் தெரியாமல் அபினவ்வை நறுக்கெனக் கிள்ளினான்.

அதில் எழுந்து விட்ட அபினவ் “ம்ம்ம்மா” என வீரிட அது வீட்டின் நிசப்தத்தை கிழுத்துக்கொண்டு எல்லோரது காதிலும் எதிரொலித்தது.

அவனது குரலில் இவ்வளவு நேரம் உறைந்து போய் சிலை போல் அமர்ந்து இருந்த இளையச்சந்திரன் கூட உயிர் பெற்றார்.

இதற்கும் முன் அபினவ் கண்ணில் பட்டிருந்தாலும் யாழிசையைப் பார்த்த சந்தோசத்திலும் அதற்குப் பின் கிடைத்த அதிர்ச்சியிலும் கருத்தில் பதியாமல் இருந்த அபினவ்வைப் பார்த்தவரின் கண்கள் ஒளிர்ந்தன.

இதற்கிடையில் அபினவ்வின் குரலைக் கேட்டு யசோதாவிடம் இருந்து பிரிந்து பூர்ணவ்வின் கைகளில் இருந்த அபினவ்வை தனது கைகளுக்கு இடம் மாற்றி இருந்தாள் யாழிசை.

இதைப் பார்த்த இளையச்சந்திரன் சோபாவில் இருந்து மெதுவாக எழுந்து யாழிசயிடம் வந்தார்.

“இது... இது” என்று அவர் திணற

“உங்க பேரன் மாமா..... ... அபினவ்” என்றாள் யாழிசை அழுகையுடன்

உடனேயே அவரது முகம் பகலவனைக் கண்ட செந்தாமரையென விரிந்தது

“இல்ல குட்டிமா... இல்ல.. இது சிதம்பரம்.. என்னோட சித்து... அவன் தான் மறுபடியும் பொறந்து வந்துருக்கான்..” என்றபடி அபினவ்வை கைகளில் வாங்கியவர் அவனது முகம் முழுக்க முத்த மழை பொழிந்தார்.

“என்ன நடக்கிறது” என்று ஒன்றும் புரியாமல் அபினவ் திருதிருக்க அவனது முகத்தைப் பார்த்த யாழிசைக்குக் கூட லேசான சிரிப்பு பீறிட்டது.

ஒரே வினாடியில் மொத்த சூழ்நிலையும் மாறிவிட்டது. அப்பொழுது தான் ஏன் குழந்தைகளைப் பொக்கிஷம் போலப் பாவிக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டாள் யாழிசை.

நிலைமை சுமூகம் ஆவதைப் புரிந்து கொண்ட பூர்ணவ் “ப்பா.. இப்போ தான் அம்மா என் பையன் என்னைய மாதிரியே இருக்கான்னு சொன்னாங்க.. நீங்க என்னன்னா சிதம்பரம் மாமான்னு சொல்றிங்களே.. இதெல்லாம் போங்குப்பா” என்று அவன் தரையை உதைத்துக் கொண்டு குழந்தையாய் சிணுங்க

சத்தமாகச் சிரித்த இளைய சந்திரன் “இவன் எனக்கு சிதம்பரம் தான்டா” என்றார் நிறைவுடன்

சிதம்பரம் இறந்துவிட்டார் என்று விசயம் தெரிய வந்த பூர்ணவ்விற்கு இதை எப்படி அப்பாவுக்குச் சொல்வது? அதை எப்படி அவர் எடுத்துக் கொள்வார் என்றுப் பயந்து கொண்டு அவன் இருந்திருக்கத் தனது மகனால் அவரது முகத்தில் கிடைத்த நிறைவில் அவனது மனமும் நிறைந்தது.

“என் மகன்னு நிரூபிச்சுட்டடா... வேற வழி தெரியாம சரியான டைம்ல உன்ன கிள்ளி எழுப்பினது சரியா போச்சு..” என்று நினைத்துப் பெரும் மூச்சு விட்டவன் இதற்கும் மேல் யாழிசையின் பெற்றோரைப் பற்றிப் பேசினால் நிலைமை மாறக்கூடும் என்று நினைத்தவன் “ஹா......” என்று ஒரு பெரிய கொட்டாவியை வெளியிட்டவாறு “அம்மா.. நைட் புல்லா தூங்காம கார ஓட்டிட்டு வந்தேன்.. நா கொஞ்ச நேரம் போய்த் தூங்குறேன்..” என்று யசோதாவிடம் சொன்னவன் “அபினவ்வ குடுங்க” என்றபடி இளையச்சந்திரனிடம் கைகளை விரிக்க அவரோ

“டேய்.. என் பேரனே இப்போ தான் என்கிட்ட வந்துருக்கான்... அதுக்குள்ள ஏன்டா பிரிக்கப் பாக்குற.. உனக்குத் தூக்கம் வருதுன்னா நீ போய்த் தூங்குடா” என்று அதட்டினார்.

அதற்கு அசட்டையாகத் தோளைக் குழுக்கியவன் “வாடி போய்த் தூங்கலாம்” என்றான் யாழிசையிடம் இயல்பாக,

அதற்கு அவள் முறைக்கவும் தான் “ஐயையோ... இந்த ராட்சாசிய வேற அப்பாக்கும் அம்மாக்கும் டவுட் வாராத மாதிரி சமாளிக்கனுமே” என்று யோசித்தவன் பின் தலையைச் சொறிந்தவாறு அவனது அப்பாவையும் அம்மாவையும் பார்த்தான். கேஷுவலாகப் பார்க்கிறானாம்.

இளையச்சந்திரனும், யசோதாவும் அபினவ்வினுள் மூழ்கிவிட்டதைப் புரிந்துக் கொண்டவன் யாழிசையை மிக நெருங்கி “டி.. டி.. ப்ளீஸ்டி.. அப்பா அம்மாக்கு நம்ம வெவகாரம் எல்லாம் தெரியாது... ப்ளீஸ் கொஞ்ச நேரம் என் கூட வா” என்று கண்களை சுருக்கிக் கெஞ்சினான்.

இத்தனை நேரம் நிலைமையை அவன் சகஜமாக்க முயற்சி செய்வதை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள். அதனால் அவள் சம்மதமாகத் தலை அசைக்க அதில் முகம் மலர்ந்தவன் “அப்பா, அம்மா.. நாங்க ரெஸ்ட் எடுத்துட்டு வர்றோம்” என்று அவர்களின் பதிலைக் கூடக் கேட்காது அவளது கையைப் பிடித்து இழுத்தபடி “ஓடோ.. ஓடோ ஓடோடிப் போறேன்” என்று அவன் பாடிக் கொண்டே இருபக்கமும் இருந்த படிக்கட்டுகளில் இடதுபக்க படிக்கட்டுகளில் ஏற

“டேய்.. என்னடா ஆட்டம்லாம் ஓவரா இருக்கு” என்று இளைய சந்திரன் சத்தமாகக் கேட்க

‘எவ அவ’ என்ற தோரணையோடு திரும்பியவன் “ஆங்.. என் பொண்டாட்டிக் கூட நா ஆட்டம் போடுறேன்.. அதோ உங்க பொண்டாட்டி உங்க கூடத் தான நிக்குறாங்க... நீங்களும் ஆட்டம் போடுங்க.. யார் வேணாம்னா” என்று அவன் நக்கலாகக் கூற

“அடிங்.. படவா” என்று இளைய சந்திரன் நாக்கை மடிக்க

“எஸ்கேப்... ” என்று கத்தியபடி யாழிசையை இழுத்துக் கொண்டு படிக்கட்டுகளில் ஏறியவன் அவர்களது அறை வந்ததும் அவளை உள்ளே தள்ளி தானும் உள் நுழைந்து தாளிட்ட பின் தான் நின்றான்.

கீழே வீடே அதிர சிரித்துக் கொண்டிருந்த இளையச்சந்திரனின் சிரிப்புச் சத்தம் கேட்ட யாழிசையின் முகம் மலர்ந்திருக்க நான்கு வருடங்களுக்குப் பிறகு தான் பூர்ணவ்வோடு வாழ்ந்து இருந்த அறையைப் பார்த்தவளினுள் நேற்று பூர்ணவ்வை பார்த்த பொழுது ஏற்பட்ட அதே பிரித்தறிய முடியா உணர்ச்சிக் குவியல்கள்.
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom