• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 8 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – எட்டு

அன்று முதல் நாள் இரவு முதலே ப்ரயு மிகவும் சந்தோஷமாக இருந்தாள். ஆதி காதலர் தின வாழ்த்துக்களோடு பரிசும் அனுப்பியது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது

பொதுவாக அவளுக்கு காதலர் தினத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும், தனக்கே உரிய தன் கணவன் பரிசளிப்பது அவளை மகிழ்சிக்குள் ஆழ்த்தியது. ஒரு வேளை அவர்களுக்கு முதலில் நிச்சயம், பிறகு சில மாதங்கள் கழித்து திருமணம் என்று நடந்து இருந்தால் அப்போது அவளுக்கும் சில பல எதிர் பார்ப்புகள் இருந்திருக்கலாம். நேரடியாக திருமணம் நடைபெற்றதால் அவள் ஆதி இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை

பரிசு என்பது யார் கொடுத்தாலும் மகிழ்ச்சியே .அதிலும் எதிர்பாரதபோது கொடுத்தால் ரெட்டிப்பு மகிழ்ச்சி வரும். பிறந்த நாள், திருமண நாள் என்று வரும் போது தங்கள் துணைகள் பரிசு கொடுத்தாலும், மற்றவர்களும் கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் காதலர் தினம் தங்கள் துணைகள் மட்டுமே பரிசளிக்கக முடியும். அன்று ஆதி கொடுத்தது அவளுக்கு சந்தோஷத்தின் அளவு பல மடங்காக இருந்தது.

அவன் பரிசளித்த புடவை கட்டி போட்டோ எடுத்து அனுப்ப எண்ணிய போது, அவன் ரசிக்கும் படி ஃபுல் சைஸ் போட்டோ அவள் மொபைலில் எடுக்க முடிய வில்லை. என்ன செய்ய என்று யோசித்த போது, தன் தோழி ப்ரியாவை அழைத்தாள்.

ஒரு எட்டு மணி போல் ப்ரியாவின் எண்ணிற்கு கூபிட்டாள்.

தூக்க கலக்கத்தில் பிரியா “ஹலோ” என,

“ஹே.. சோம்பேறி இன்னும் எழுந்துக்கலையா?”

யாருடா அது நம்மள இப்படி பேசுறது என்று நம்பரை பார்த்தவள்

“அட நம்ம உஷா மேடம் ஏய் ஏண்டி என்னை இப்படி நடுராத்திரியிலே எழுப்பறே?”

“அடியேய். மணியை பாரு எட்டு மணி. விடிஞ்சு ரெண்டு மணி நேரம் ஆச்சு”

“உனக்குதாண்டி அது எல்லாம். நீங்க குடும்ப இஸ்த்ரி. நாங்க எல்லாம் யூத். எங்களுக்கு இப்போ அதுவும் சண்டே விடிகாலை என்பது 12 மணிதான்.“

“சரி சரி. உன் யூத் புராணம் போதும். எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். இப்போ நீ எங்க வீட்டுக்கு வர முடியுமா..?”

“அதானே பார்த்தேன். எலி என்னடா ஏரோப்ளேன் ஒட்டுதேன்னு. சொல்லு என்ன விஷயம்?”

“நீ நேர்ல வா. நான் சொல்றேன்..”

“சரி சரி வரேன்..” என்றவள் அடுத்த அரை மணி நேரத்தில் பிரயுவின் வீட்டில் இருந்தாள்.

அவள் கதவை தட்டிய போது திறந்த பிரயுவின் மாமியார், ப்ரியாவை யார் என்பது போல் பார்க்க,

“ஆண்ட்டி. நான் பிரத்யாவின் பிரெண்ட் அவள கொஞ்சம் பார்க்கணும்..” என்றாள்.

அவர் வா என்பது போல் தலையசைத்து அவள் ரூமிற்கு அனுப்பி வைத்தார்,, உள்ளே சென்ற பிரியா அசந்து நின்றாள். தேவதை போல் நின்றிருந்த பிரயுவை பார்த்த பிரியா,

“அட.இது யாரு? நான் அழுமூஞ்சி பிரத்யாவ தேடி வந்தா , இங்கே ஒரு கடல் தேவதை இருக்கு ..?”

“ஏய். வாயாடி போதும். ஓவரா ஒட்டாதே..”

“மேடம் இன்னிக்கு கலக்கலா இருக்கீங்க. என்ன விஷயம்? உங்க பர்த்டே கூட இல்லியே? “

“அது“ என்று அவள் முகம் சிவக்க,

“ஓஹோ இது உங்களவர் கொடுத்ததா? ஆனால் என்ன தீடிர் என்று “ என்று யோசித்தவள் , “ஹே காதலர் தினம் இல்ல . அண்ணா கலக்கிட்டார் டி“ என்று அவளை சந்தோஷமாக அணைத்தாள்.

“சொல்லு இப்போ நான் என்ன செய்யணும்..”

“அது அவர் இந்த சாரீலே உடனே போட்டோ எடுத்து அனுப்ப சொல்றார். செல்பி ட்ரை பண்ணேன். செட் ஆகல. வேற யார்கிட்ட ஹெல்ப் கேட்க முடியும் .தங்கச்சிக்கிட்டயோ இல்ல மத்தவங்க கிட்டேயோ வேலன்டைண்ஸ் டே கிப்ட்னு சொல்ல கூச்சமா இருக்கு. அதான் உன்னை கூப்பிட்டேன்சாரி டா. உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

“சீ. லூசு. இதுலே என்னடி இருக்கு ? “ என்றவள் அவளை அழகாக போட்டோ எடுத்து அனுப்பினாள்.

அதை உடனே ஆதிக்கு அனுப்பி அவன் அவளை கூப்பிட்டு பேசினான். அப்போது பிரியா ஹாலில் பொறுமையாக காத்திருந்தாள். ஆதியின் பேச்சில் முகம் சிவக்க கனவோடு இருந்தவள், அவள் மாமியாரின் குரலில் வெளியே வந்தாள்.

அவள் அலங்காரத்தை பார்த்த அவள் மாமியார் ஆச்சரியமாக பார்த்தார். அவரின் வியப்பை உணர்ந்த ப்ரத்யா கொஞ்சம் தயக்கத்தோடு “ உங்கள் மகன் அனுப்பிய புடவை இன்னிக்கு வெளியே போறதால் அதை கட்டினேன். “ என்று கூறவும்,

சிரித்த படி “நல்லா இருக்கு .சீக்கிரம் வா. சாப்பிட்டு கிளம்பலாம்” என்றார்.

மீண்டும் ப்ரியாவை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.

பிரியா “ஏய். என்னடிஅதிசயமா இருக்கு .உன் மாமியார் உன்னை பாராட்டிட்டாங்க?’ என்று கேட்டாள்.

“அவங்க இதுலே எல்லாம் தலையிட மாட்டாங்க.நல்லா இருக்குன்னாலும் உடனே சொல்லிடுவாங்க“ என்று பதில் சொன்னாள் வித்யா ..

அப்போது மீண்டும் ஆதியிடமிருந்து போன் வரவும், ப்ரத்யா ப்ரியா முகத்தை பார்க்க, “என்ன மறுபடி வெளியே போகனுமா ? சண்டே விடிகாலையிலே எழுப்பி வர சொல்லிட்டு, இப்படி ஹால்க்கும் ரூம்க்கும் அலைய விடறியே இது உனக்கே நியாயமா இருக்கா?” என்று புலம்பவும்.

“ஹே. நீ வெளியே போகவேண்டாம். நான் பால்கனிலே போய் பேசறேன். நீ இங்கேயே வெயிட் பண்ணு” என்றபடி போனை அட்டென்ட் பண்ணி,

“ஹலோ ..” என்றாள்

“ஹே. ரதிக்குட்டி .நான் உனக்கு சர்ப்ரைஸ் அனுப்பினா, நீ டபுள் சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிருக்க. எப்படிடா ?”

“ஆன்லைன்லே ஆர்டர் பண்ணேன்”

“நீ எங்கிட்ட சொல்லவே இல்ல. நான் உனக்கு புடவை பூவோடு அனுபிச்சேன். நீ எனக்கு டீ ஷர்ட் வித் பொக்கே அனுப்பிருக்கே. நானும் முதல்ல பொக்கே ஆர்டர் பண்ணலாமுன்னு நினைச்சேன். ஆனால் .அங்கே உனக்கு அம்மா எதிரில் சங்கடமா இருக்கும்னுதான் செய்யல..”

“புரியுது அதான் நான் உங்களுக்கு பொக்கே அனுப்பிச்சேன்...” பிறகு மெல்ல தயக்கத்தோடு “நான் அனுபிச்சது உங்களுக்கு பிடிச்சிருக்கா ?”

‘பிடிச்சுதாவா? நேரில் இருந்தால் அப்படியே உன்னை தூக்கி ஒரு சுத்து சுத்தி இருப்பேன் ..”.

“அப்படினா நீங்க மட்டும் அந்த டீ ஷர்ட் போட்டு போட்டோ அனுப்பல “ என்று சிணுங்கல் குரலில் கூறினாள்.

“ஹே. சாரி டா. சந்தோஷத்திலே அத மறந்துட்டேன் “ என்றவன் உடனே இப்போ உன் மொபைல் பாரு என்றான்.

அவள் கொடுத்த டீஷர்ட் அணிந்துஅந்த பொக்கேவை தன் நெஞ்சோடு அணைத்தவாறு போட்டோ அனுப்பிருந்தான். யாரும் இல்லை என்று எண்ணி , அந்த போட்டோவிற்கு முத்தம் வைத்தாள் ப்ரத்யா ..

பிறகு போன் செய்த .ஆதி “ஹே. செல்லம்உன் புருஷன் எப்படி இருக்கேன்..?”

“சூப்பர்” என்றாள்.

“சரி போட்டோ அனுப்பினதும் பார்த்துட்டு என்ன செய்த?”

“ஒன்னும் செய்யலே. பார்த்தேன் வேறென்ன?”

“இப்படி கவுத்துட்டியே. நான் கூட அய்யா பெர்சனாலிட்டி பார்த்து மயங்கி ஏதாவது பரிசு கொடுத்துருப்ப நினைச்சேன்..”

“அது எல்லாம் இல்லை .” என்றாள். மீண்டும் தன் மாமியார் அழைக்கவே அவனிடம் இரவு பேசலாம் என்று விட்டு புன்னகையோடு வந்தாள்..

ப்ரியாவோ அவள் ரகசியத்தை கண்டவள்

“ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ ..” என்று பாடினாள்.

அவள் தலையில் தட்டியபடி வெளியே வந்தவள், பிரியா, ப்ரத்யா அவள் மாமியார் மூன்று பேரும் டிபன் சாப்பிட்டு கிளம்பினர்.

பிரியா அவள் வீட்டிற்கு சென்று விட, இவர்கள் இருவரும் கடைக்கு சென்றனர்.

ப்ரத்யா மாமியார், பிரத்யா ஆதியை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்று பயப்படுவாரே தவிர, அதை விட, ப்ரத்யா ஆதி மாதிரி தன் மகளும் அவள் கணவனை விட்டு இருக்க வேண்டும் என்று நினைத்த வித்யாவின் மாமியார் பேச்சு தான் அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. மற்றபடி அவரும் பிரத்யாவை நல்லவிதமாக நடத்தினார். தன் மகளுக்கு சீர் செய்யும் போதும், மற்ற நேரமும் அவர் பிரத்யவை முன்னிலைபடுத்திதான் செய்வார்.

அதனால் இருவரும் மகிழ்ச்சியோடு சென்று முதலில் காத்திருந்தனர். இவர்கள் வந்து ஒரு கால் மணி நேரம் கழித்து வித்யா வீட்டில் எல்லாரும் வந்தனர்..

முதலில் அவளை கவனித்த வித்யாவின் மாமியார் “அட. புது புடவை எல்லாம் கட்டி இருக்கே. என்னம்மா உனக்கு பிறந்த நாளா?” என்று கேட்டார்.

அதற்கு பதில் பிரத்யாவின் மாமியார் “இல்லசம்பந்திம்மா. ஆதி இன்னிக்கு தான் அவளுக்கு அனுப்பிருக்கான் போலே. இன்னிக்கு இங்கே வரதாலே கட்டியிருக்கா .” என்றார்.

அவர் சாதாரணமாக அதை சொன்னதும் ப்ரத்யா, தனக்குள் அப்பாடி என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

ஆனால் வித்யாவின் மாமியார் கொஞ்சம் விவரம் ஜாஸ்தி “ஒஹ். இன்னிக்கு காதலர் தினமாமே அதுக்கு அனுப்பி இருக்கறா உங்க பையன் ? “ என்று நக்கலாக கேட்கவும், ப்ரத்யா மாமியாரின் முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது. வித்யாவின் முகமும் மாறி விட்டது.

இதை கண்ட ப்ரத்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அதோடு விடாமல், “ஹ்ம்ம். அந்த காலத்திலே நாங்கள் எல்லாம் .பிறந்த நாளுக்கு புதுசு கேட்டாலே என் புகுந்த வீட்டில் கேலி செய்வார்கள். ஏதோ தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு மட்டும் தான் புதுசு. இப்போ எல்லாம் நின்னா பரிசு, தும்மினா பரிசுன்னு கொண்டாடுறாங்க..” என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார்கள்.

அதோடு “தம்பி சரவணா நீயும் இப்படி ஏதாவது உன் பொண்டாடிக்கு வாங்கி கொடுத்துருக்கியா?”

வித்யாவிற்கோ திருடனுக்கு தேள் கொட்டிய நிலைமை. அவள் கணவன் யாருக்கும் தெரியாமல் முதல் நாள் இரவு அவளுக்கு பரிசு கொடுத்து இருந்தான். இப்போ அவளால் அவள் அண்ணிக்கு சப்போர்ட் செய்து பேச முடியவில்லை

வித்யாவின் கணவர்தான் நிலைமையை சமாளிக்கும் விதமாக “சரி சரி ..வந்த வேலையை பார்ப்போமா ?” என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு போனார்.

சற்று பின்தங்கிய வித்யா, அவள் அம்மாவும் பிரத்யாவிடம் “ஏன் அண்ணி? இதை நீங்க இன்னிக்குதான் கட்டிட்டு வரணுமா.? இங்கே வரீங்கன்னு தெரியுமில்ல? அவங்க ஏதாவது பேசற மாதிரி ஏன் நடந்துக்கறீங்க?” என,

வித்யா அம்மாவோ “உன் நினைப்பு தவிர வேற எதுவுமே ஆதிக்கு தோணாதா? அம்மா இருப்பாங்களே? தங்கச்சி பார்ப்பாளே .? அவ புகுந்த வீடு இருக்கே. எதுவுமே அவனுக்கு நினைப்பு இல்லை. அவன்தான் அனுப்பி வைச்சான்னா, நீயாவது அதை வேற எப்பவாவது கட்டியிருக்கலாம். இன்னிக்கே இதை கட்டி இந்த அம்மா முன்னாடி என் மானத்த வாங்குறதே ரெண்டு பேரும் வேலையா வச்சிருக்கீங்க” என்று திட்டினார்.

பிரத்யா அவர்கள் இருவரையும் நேராக நோக்கி “என் புருஷன் தானே எனக்கு எடுத்து கொடுத்தார். எதுக்காக இதை மறைச்சி வச்சி கட்டனும்? அதோட நான் சும்மாவே கூட புதுசு போட்டாலும் அதில் அவங்களுக்கோ, உங்களுக்கோ என்ன பிரச்சினை ?” என்று அவள் கேட்டாள்.

“என்ன பிரச்சினை? இது எதுக்காக ஆதி கொடுத்தான்னு அவங்க கிட்ட நேரா சொல்ல முடியுதா? ஏன் உங்க அம்மா கிட்ட உன்னால சொல்ல முடியுமா?”

“அவங்க முன்னாடி தலைமுறை .அதானாலே அவங்க கிட்ட தயக்கம் இருந்தது. உங்ககிட்டையும், எங்க அம்மாகிட்டயும் கூட என்னாலே அவர் எடுத்து கொடுத்தார்னு மட்டும் தான் சொல்ல முடியும். ஆனால் என் வயதில் உள்ள யாரும் இதை அதுவும் புருஷன் எடுத்துக் கொடுப்பதை தவறாக எண்ண மாட்டர்கள். அதோடு நான் எதற்காக மற்றவர்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும்?”

“உங்கள் கொண்டாட்டங்களை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். இனிமேல் எங்கள் மாதிரி பெரியவர்கள் எதிரில் கொஞ்சம் அடக்கியே வாசிங்கள்“

அதற்கு பதில் அளிக்கும் முன், சரவணன் மீண்டும் கூப்பிடவே எல்லோரும் அங்கே சென்றனர்.

காலையில் இருந்த உற்சாகம் அப்படியே வடிந்து விட்டது பிரத்யாவிற்கு. மனதினுள் இவர்கள் எல்லோருக்கும் மருமகள் என்றால் இவர்களை மாதிரியே இருக்க வேண்டுமா? காலம் மாறுவது தெரியவில்லையா? பிரத்யாவிற்கு நன்றாக தெரிந்தது சரவணன் வித்யாவிற்கு ரிங் பரிசளித்திருப்பது. அதை கையில் அவளும் போட்டிருக்கிறாள். இதை வித்யாவின் மாமியார் கண்டு கொள்ளவில்லை. தன்னை பற்றி பேச வந்து விட்டார்கள்.

பிரத்யாவின் மாமியாரவது அவளை விட்டு கொடுக்காமல் பேசியிருக்கலாம். அவர்கள் பேசவில்லை என்றாலும் முகத்திலேயே காண்பித்து விட்டார்கள். அதை அந்தம்மா பார்த்த பின்பு இன்னும் நிறைய பேசுகிறார்கள்.

தன் மகள் கையில் உள்ள மோதிரத்தை வந்தவுடனே கவனித்த மாமியார், தன் மகளிடம் கண்ணாலே கேட்டு கொண்டதை ப்ரத்யா கண்டு கொண்டாள். இருவரும் ஜாடையில் பேசியது பார்த்து புரிந்து கொண்டாள்.

அதே தன் மகன் மருமகளுக்கு செய்யும் போது மட்டும் இவர்களுக்கு ஏன் எரிச்சல் ஏற்படுகிறது? அவர் இயற்கையிலேயே தன்னை பிடிக்காதவராக இருந்தாலும் பரவாயில்லைநன்றாக இருப்பவர், தன் மகளுக்கு பிரச்சினை ஏற்பட நேரடியாகவோ மறைமுகமாகவோ ப்ரத்யா காரணம் என்று தெரிந்தால் மாறி விடுகிறார். அவள் பக்கத்துக்கு நியாயத்தையோ, உணர்வுகளையோ அவர் மதிப்பதில்லை.

இந்த விஷயம் பிரத்யாவிற்கு உறுத்தலாக இருந்தது. ப்ரத்யா பட்டும் படாமலும் இருக்க, ஒரு வழியாக வித்யா வளைகாப்பிற்கு தேவையான எல்லாம் வாங்கினர். தன் மகன் அனுப்பிய பணம் எல்லாம் எடுத்து அவளுக்கு செலவு செய்தார்.

வித்யா மாமியார் “சம்பந்தி அம்மா கல் வளையலாக பார்த்து விடலாம்” என்று அந்த பிரிவிற்கு போக,

ப்ரத்யா மாமியார் முழித்தார். தன் மகன் அனுப்பிய பணம் தங்க வளையல் வாங்கதான் சரியாக இருக்கும். அவர் எண்ணியதை விட புடவை மற்றும் வெள்ளி சாமான்கள் விஷயத்தில் ஏற்றி விட்டு விட்டார் வித்யா மாமியார். அவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வித்யாவும் ஒன்றும் கவனிக்க வில்லை, அவள் தன் கணவனோடு அவர் தேர்ந்தெடுக்கும் எல்லாவற்றிற்கும் சந்தோஷமாக தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

அதற்குள் வித்யா மாமியார் காட்டியதை, சரவணனும் ஓகே சொல்ல, வித்யாவும் தலையாட்டினாள்.

இதை கவனித்த ப்ரத்யா , அவர் கையில் இருந்த பில்லை வாங்கியவள்

“அத்தை. உங்க கார்ட்லே லிமிட் முடிஞ்சிருக்கும் .இருங்க. இந்த கார்ட்லே போட்டுடலாம்” என்று தன் டெபிட் கார்டு மூலம் பணம் கொடுத்தாள்.

ஆதியின் அம்மாவிற்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவளை ஏதோதோ சொல்லி விட்டு இப்போது அவளே தனக்காக சமாளிக்கிறாளே என்று இருந்தது.

ஆனாலும் தன் மாமியார் என்ற கெத்தை விடாமல் பற்றிக் கொண்டு சாதாரணமாக இருந்தார்.

பிரத்யாவின் மனதில் தன் மகன் அனுப்பிய பணத்தை செலவழித்தவர், தன்னிடம் ஒரு வார்த்தைக்காவது நீயும் பணம் எடுத்துக்கோம்மா. அங்கே முன்ன பின்ன ஆனால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று கேட்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது.

பிரத்யாவாக கவனித்து சரி செய்து விட்ட போதும் அவர் ஒரு சந்தோஷம் என்ற உணர்வை கூட காண்பிக்கவில்லையே என்று இருந்தது.

ஷாப்பிங் எல்லாம் முடித்து அவரவர் வீடு சென்றவர்கள், அலுப்பில் அமர்ந்தார்கள். மதியம் வெளியில் சாப்பிட்டதால், இரவிற்கு வெறும் இட்லி மட்டும் போதுமென சாப்பிட்டு சீக்கிரம் படுக்க போய் விட்டார்கள்.

காலையில் இருந்த உற்சாகத்தில் அன்று இரவு ஆதியோடு வீடியோ சாட் செய்யும் போது அவன் சந்தோஷத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தாள். அதனால் வேறு புடவை மாற்றாமல் இரவு பேச வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்..

ஆனால் தற்போது உள்ள மனநிலை அதற்கு இடம் கொடுக்காது என்று எண்ணியவளாக வழக்கமான தன் உடைக்கு மாறியவள் அவனோடு பேச அமர்ந்தாள்.

“ஹாய். டார்லிங்“ என்று அவளை பார்த்தவன் , அவள் வேறு உடை மாற்றியிருப்பதை பார்த்து அவன் உற்சாகம் வடிந்தது. அவனோ காலையில் அவள் கொடுத்த டீ ஷர்டோடு இருந்தான்.

பிரத்யாவிற்கு வேதனையாக இருந்தது. ஆனால் அதை காட்டினால் அவன் வருந்துவான் என எண்ணி சாதாரணமாக இருப்பது போல் நடித்தாள்

“சாரி ஆதிப்பா. வெளியில் அலைந்தது பயங்கர அலுப்பு. அதோடு புடவையும் கச கச என்று இருக்கவே மாற்றி விட்டேன். “ என கூறவும்,

“ஹே. இதுலே என்னடா இருக்கு? உன்னை காலையில் போட்டோவில் பார்த்ததே சந்தோஷமா இருக்கு.“ என்றவன் அவளிடம் ஷாப்பிங் பற்றி விசாரித்தான்.

முதலில் தயங்கியவள் , பிறகு என்ன என்ன வாங்கினார்கள் என்று மட்டும் சொன்னாள்.

ஆனால் அவள் அறியாதது முதலில் தன் அன்னையிடம் பேசியவன் , அவர் ஷாப்பிங் சென்றபோது வித்யா மாமியார் பேசியதை சொன்னவுடன்

“அம்மா, அவர்கள் குடும்ப விஷயத்தை மட்டும் பார்க்க சொல்லுங்க. என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி குடுக்குரதுக்கெல்லாம் நான் அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதே நீங்களோ வித்யாவோ அவங்ககிட்ட சொல்லிடுங்க. நான் சொன்னா அது வேற மாதிரி ஆகிடும்” நு எச்சரித்தான்.

இதை கேட்ட ஆதியின் அம்மா நல்ல வேளை நாம பேசியதை சொல்லவில்லை என்று மனதிற்குள் மெச்சிக் கொண்டார்.

மேலும் அவரிடம் செலவுகளை பற்றி விசாரித்தவன், பணம் குறைவாக இருந்திருக்குமே என்று எண்ணியவன் , என்ன செய்தார்கள் என்று விசாரித்தான். அவர் ப்ரத்யா சமாளித்ததை சொல்ல, அவனுக்கு தன் மனைவியை எண்ணி பெருமையாக இருந்தது. அந்த மனநிலையோடு பேச வந்தவன்,

அவளின் சுருக்கமான பதில்களில், மேலும் ஏதோ நடந்திருப்பதை ஊகித்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் டா. அம்மா சொன்னங்க. நீதான் அந்த ஷார்ட் ஆன பணத்திற்கு அட்ஜஸ்ட் செய்தியாம்உன் அக்கௌன்ட் நம்பரில் அந்த பணத்தை ட்ரான்ஸ்பர் செய்துடறேன்“

“ஏன் ..நீங்களும் என்னை உங்க குடும்பத்தில் ஒருத்தியா நினைக்கலியா? உங்க பணம் , என் பணம் ஏன் பிரிச்சி பார்க்கறீங்க ? “ என்று வருத்தமாக பேசவும்,

“ஹே. அப்படியெல்லாம் இல்லைடா தங்கம், உனக்கு செலவிற்கு பணம் வேண்டாமா? உங்க அம்மா வீட்டுக்கு வேற பணம் அனுப்பற. அதோட இது எல்லாம் சேர்த்து வித்யாவிற்கு போட்ட பணம்தான். அம்மா இவ்வளவு போதும்னு சொன்னதாலே தான் கரெக்ட்டா ட்ரான்ஸ்பர் பண்ணினேன். இல்லாட்டா இந்த அமௌன்ட் சேர்த்துதான் பண்ணியிருப்பேன்.”

“அதெல்லாம் வேண்டாம் .உங்களுக்கு இல்லாம எங்கிட்ட எதுவும் இல்ல “ என்றவுடன்,

“அப்படியா அப்படின்னா காலையில் என் போட்டோவிற்கு கொடுத்ததை இப்போ என் முகம் பார்த்து சொல்லு “ எனவும்”

வெட்கத்தோடு அதெல்லாம் முடியாது என்று தலையாட்டினாள். .அவன் மேலும் ஏதோ கேட்க அவள் இன்னும் அதிகம் வெட்கப்பட்டவள், அவனோடு செல்ல சண்டையிட்டு கட் செய்தாள்.

ஆதியிடம் பேசுவதற்கு முன் இருந்த மன நிலை மாறியிருந்தாலும் , காலையில் ஏற்பட்ட அந்த தடையற்ற மகிழ்ச்சி இப்போ இல்லை பிரத்யாவிற்கு. ஆனால் இதுதான் தன் வாழ்க்கை என்று புரிந்து கொண்டாள்.

- தொடரும் -
 

Gandhimathi Pandian

New member
Member
இது தான்எதார்த்தம் எல்லா மாமியாருமே தன் மகள் என்று வரும்போது ஒருமாதிரியும் மருமகள் என்று வரும்போது அப்படியே வேறு மாதிரி ஆகிடுவாங்க
 

Rajam

Well-known member
Member
இதுதான் யதார்த்தம்.
நான் அம்மா இல்லை.
உனக்கு மாமியார் என்று
உணர்த்தி விடுகிறார்கள்.
 

kothaisuresh

Well-known member
Member
ஏன் இப்படி இருக்காங்க? இவங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை வாங்கி கொடுத்தால் ஓகே, இதே பையன் மருமகளுக்கு வாங்கிக் கொடுத்தால் தப்பா?
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom