• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 6 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – ஆறு

அன்றைய பிரச்சினைக்கு பிறகு ப்ரத்யா ஒரு முறைக்கு இரண்டு தடவையாக தன் மாமியார் மற்றும் நாத்தனாரிடம் கேட்டே தேவையானதை செய்தாள்.

காலை எழுந்தது முதல் எல்லோருக்கும் தேவையானது செய்து விட்டு, ஆபீஸ் ஓடி, பிறகு மாலையிலும் வந்த பிறகு வேலை என்று ஓடிக் கொண்டிருந்தாள்.

அவளின் இத்தனை ஓட்டத்தையும் சமாளிப்பது இரவில் ஆதி இவளோடு பேசும் நேரங்களில் கிடைக்கும் மகிழ்ச்சி மட்டுமே.

ஆதிக்கு இவ்வளவு கஷ்டபடுகிறாள் என்று தெரியாது. இருந்தும் வித்யா வந்த இரண்டு மூன்று நாட்களில் இரவில் பேசும்போது பிரயுவின் முகத்தில் தெரியும் களைப்பை பார்த்து விட்டு

“ப்ரயும்மா, ரொம்ப டயர்டா தெரியறியே? வேலை அதிகமா இருக்கோ?”

“இல்லை ஆதிப்பா. (இப்பொழுதெல்லாம் அவர்களின் இரவு பேச்சில் ஆதிப்பா என்று தான் அழைக்கிறாள்) அம்மா வீட்டில் இருந்ததை விட இங்கே கொஞ்சம் தூரம் அதிகம் என்பதால் கொஞ்சம் அசதியா இருக்கு.” என்று சமாளித்து விட்டாள்.

“வேண்டும் என்றால் ஸ்கூட்டி வாங்கி கொள்கிறாயா? அட்லீஸ்ட் நீ பஸ்ஸில் நசுங்காமல் வரலாம்”

பிரயுவின் மனத்திலும் அந்த எண்ணமேஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.

“கொஞ்ச நாள் பார்க்கலாம்பா. தேவை என்றால் வாங்கி கொள்ளலாம்” என்று முடித்து விட்டாள். இதை பற்றி அவள் யாரிடமும் எதுவும் பேச வில்லை,

முதல் பிரச்சினைக்கு பிறகு ஆதி அவன் அம்மாவிடம் நலம் விசாரித்து விட்டு, வேறு ஏதாவது தேவையா என்று விசாரிப்பான். முதலில் இரவில் பேசிக் கொண்டிருந்தவன், வித்யா வந்த பிறகு ஆதி மதியம் அவன் அம்மாவிடம் பேசினான். அம்மா அறையில் அவள் இருப்பதால் அம்மாவிடம் பேசினாலும் வித்யாவிற்கு இரவில் தூக்கம் கெடும். அதோடு அவளிடமும் சாதாரணமாக பேசி வைத்து விடுவான்

பிரத்யாவிடம் பேசிய மறுநாள் மதியம் வீட்டிற்கு அடித்து வித்யாவிடம் பேசி விட்டு, அம்மாவிடம் பேசினான்.

“அம்மா, பிரத்யாவிற்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அவள் வீட்டில் வேலை முடித்து விட்டு , ஆபீஸ் போய் வருவது கஷ்டமாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இரவில் பேசும்போது மிகவும் அசதியாக இருக்கிறாள். வித்யா கணவர் வந்தால் அவரோடு போய் வாங்கி வர சொல்லுங்கள் அம்மா”

“அது எதற்கு அனாவசியமாய்? நீ அங்கே போய் இருப்பதே இருக்கிற கடன் எல்லாம் மொத்தமாக அடைக்கத்தான். இப்போ ஸ்கூட்டி வாங்கினால் அதுவும் கடனாகும்.”

“ஏன்மா கடன் வாங்கினால் நான் தானே அடைக்க போகிறேன். உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் அங்கே இருந்தால் அட்லீஸ்ட் அவளை கொண்டு விட்டு அழைத்து வருவேன். அவள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக போகட்டும் என்று எண்ணினேன். நீங்கள் இப்படி பேசுகிறீர்களே,?”

“ஏன் டா இப்போ ஸ்கூட்டி கடனோடு இது முடியுமா ? உன் தங்கை பிரசவத்திற்கு பணம் வேண்டாமா? அதற்கு முன் வளைகாப்பு, சீமந்தம் என்று வரிசையாக செலவு இருக்கிறதே? அதோடு பிறக்கும் குழந்தைக்கு ஏதாவது நகை போட வேண்டும். இதெல்லாம் செலவு இல்லியா அதற்காக சொன்னால் என்னிடம் குதிக்கிறாயே? என்னவோ செய்.”

“அம்மா, இது எல்லாம் யோசிக்காமலா இருப்பேன். வித்யா சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தனியாக பணம் எடுத்து வைத்து இருக்கிறேன். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அப்படியா நான் அவளை விட்டு விடுவேன்” என்றான்

“அதுதான் உன்னிஷ்டம் என்று சொல்லி விட்டேனே” என்று போனை வைத்து விட்டார் அவன் அம்மா.

இதற்கு இடையில் அன்று மாலை ப்ரத்யா சக அலுவலர் ஒருவரின் திருமண வரவேற்பு இருப்பதால் மாலை கட்டிக் கொள்ள வேறு புடவை எடுத்து செல்ல மறந்து விட்டாள்.

சரி உள்ளபடியே வரலாம் என்றால், பிரியா அவளை கடித்த கடியில், மதிய உணவு இடைவேளையின் போது வந்து எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்று வந்தவள், தன் மாமியார் பேசுவதை கேட்டு விட்டாள். இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றவளிடம்,

“அவனை அங்கே பேச சொல்லி விட்டு, இங்கே வந்து ஒட்டு கேட்க வந்து விட்டாயா? ஆமாம். நான் ஸ்கூட்டி வேண்டாம் என்றுதான் சொன்னேன். இப்போ என்ன ? உன்னால் பஸ்சில் போய் வர முடியாதா? இருக்கிற செலவில் இது வேறா? மாதாமாதம் பெட்ரோல்க்கு வேறு செலவழிக்க வேண்டுமே? இதேல்லாம் உங்கள் இருவருக்கும் தெரியாதா? “ என்று பொரிந்து கொட்ட ஆரம்பித்து விட்டார்.

அமைதியாகவே தன் மாமியாரிடம் “நான் கேட்க வில்லை அத்தை “ என்றாள்.

வித்யா சும்மா இல்லாமல் “நீங்கள் கேட்கவில்லை என்றால், அண்ணன் ஏன் அம்மாவிடம் பேசுகிறார். அண்ணன் இங்கே இருக்கும் போது கார் வாங்க சொன்னதற்கு அவ்வளவு கணக்கு பார்த்தான். இப்போ நான் இங்கிருந்து செக் அப் போக, இன்னும் டெலிவரி சமயத்தில் எல்லாம் கார் தேவைபடாதா? இது எல்லாம் யோசிக்கவில்லை. உங்களுக்கு என்றால் உடனே செய்கிறான். “ என்று இன்னும் கொஞ்சம் ஏற்றி விட்டாள்.

அப்போதும் ப்ரத்யா “நான் கேட்கவில்லை வித்யா. எனக்கு பஸ்ஸில் செல்வது பழக்கமே. கொஞ்சம் டயர்டாக இருப்பதை பார்த்து உன் அண்ணன் சொல்கிறார். நான் அவரிடம் வேண்டாம் என்று சொல்லி விடுகிறேன். “

அதற்கும் “ஒஹ் நானும், அம்மாவும் கெட்ட பெயர் வாங்க வேண்டும் என்று இதை சொல்ல போகிறீர்களா?” என்று வித்யா பேசவும்,

“அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். இதற்கு மேல் பேச எனக்கு நேரமில்லை. நான் மாலை ஒரு வரவேற்பிறக்கு செல்கிறேன். அங்கே சாப்பிட்டு விட்டுதான் வருவேன். கிளம்புகிறேன்” என்று சென்று விட்டாள்.

வித்யாவும், அவள் அம்மாவும் ப்ரத்யா பாதி பேச்சில் சென்று விட்டாள் என்று வசை பாடிக் கொண்டிருந்தனர்.

உடனே ஆதியிடம் பேச வேண்டும் என்று எண்ணியவள், இருக்கும் இடத்தை எண்ணி அமைதியாகி விட்டாள்.

அவள் முகம் பார்த்த பிரியா

“என்ன ஆச்சு ப்ரத்யா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க,

அவளிடம் சொல்ல எண்ணியவள், ஏற்கனவே அவளுக்கு கொஞ்சம் தெரியும் என்றாலும், இதையும் சொன்னால், அவள் அவர்கள் இருவர் மேலும் கோபப்படக் கூடும் என்று பேசாதிருந்து விட்டாள். என்னதான் பெஸ்ட் பிரண்ட்ஸ் என்றாலும், தன் மாமியார், வித்யாவை பற்றி குறை கூறினால், அவள் தன் கணவனையும் தவறாக எண்ணக் கூடும் என்று தோன்றியது.

பெற்றோர் செய்து வைத்த திருமணம் என்றாலும், ஆதியின் குணமோ, அக்கறையோ இல்லை மஞ்சள் கயிறின் மகிமை என்பார்களே அதுவோ ஏதோ ஒன்றுஅவள் மனம் ஆதியிடம் சரணடைந்து விட்டது. அதனால் ஆதிக்கு எந்த விஷயத்திலும் முக்கியமாக தன்னால் அவமானம் ஏற்படக் கூடாது என்று விரும்பியது.

அதனால்தான் வீட்டில் நடந்த விஷயங்களை தன் தோழியிடம் மறைத்து விட்டாள். இன்னும் சொல்ல போனால் தன் பெற்றோரிடம் கூட அவள் எதுவும் சொல்வதில்லை. இதனால் அவளுக்கு ஏற்படப் போகும் பாதிப்பை பற்றி அவள் அறியவில்லை.

பிரியா பதிலுக்கு காத்திருப்பதை உணர்ந்து ,

“ஒண்ணுமில்லமா.வெயிலில் போய் வந்ததுதலை வலிக்கிறது“ என்றாள்.

“சரி சாப்டியா? “ அவள் இல்லை என தலையசைக்கவும், அவளை திட்டி சாப்பிட அனுப்பினாள். அவள் அக்கறையில் மனம் கனிந்தவளாக சாப்பிட்டு வந்தாள்.

அன்று இரவு அந்த வரவேற்பிற்கு சென்று வீட்டிற்கு வந்த போது, அவள் வீட்டினர் லைட் எல்லாம் அணைத்து விட்டு படுத்து விட்டனர். இத்தனைக்கும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்தில், அவர்களுக்கு தொந்தரவாக இருக்க கூடாது என்று எண்ணி ஒன்பது மணிக்கு முன்னால் வந்து விட்டாள்.

அவளுக்கு கதவை திறந்த மாமியார், அவள் நுழையும் போதே , “வீட்டில் இருப்பவர்கள் நிலைமை தெரியாது. அசதியில் வித்யா தூங்க போய் விட்டாள். இப்போ காலிங் பெல் சத்தத்தில் முழித்து விட போகிறாள். போ. சத்தம் செய்யாமல் இரு.” என்று விட்டு உள்ளே சென்று விட்டார்.

ஒஹ்.. இது தான் மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடமோ என்று எண்ணி சிரித்தாள்.

வழக்கம் போல் இரவில் பேசிய ஆதி,

“என்னடா .இன்று வரவேற்பு எப்படி இருந்தது.?” முதல் நாள் அவள் சொல்லியிருந்ததால் அவன் கேட்டான்.

“ஹ்ம்ம். நல்லா நடந்தது..” என்று பதில் சொல்லவும், அவளின் கலகலப்பான பேச்சை எதிர்பார்த்தவன், அவள் அமைதியாக இருக்கவும்,

“என்னடா. செல்லம் இன்று அமைதியா இருக்க? “

“ஹ்ம்ம். இன்று மதியம் அத்தைக்கு பேசினீங்களா?”

“ஆமாம் எப்போதும் பேசுவதுதானே.”

“இல்லை. ஸ்கூட்டி வாங்குவது பற்றி பேசினீங்களா?”

“ஆமா. ஏன் எதுவும் சொன்னாங்களா?”

“பச்ச்.. நான் தான் சொன்னேன் இல்ல. இப்போ வேண்டாம். பார்க்கலாம் என்று. அதுக்குள்ள ஏன் கேட்டீங்க? அவங்க அது அனாவசிய செலவு தானேன்னு சொல்றாங்க. அதுவும் கரெக்ட் தானே.”

“அத பத்தி நான் பேசிக்கிறேன். நீ பேசாமல் இரு.”

“வேண்டாம் ஆதிப்பா. அவங்கள மீறி செய்ய வேண்டாம்.”

“ஏய். நான் உன்ன அங்க என் பொண்டடியாதான் விட்டு வந்துருக்கேன். வேலைக்காரியா இல்ல புரியுதா?”

“இப்போ என்ன அவசரம் அதுக்கு?”

“நான் உன்ன பார்க்கும் போது எனக்கு உன்னோட களைப்பு தெரியுது. இது வேற ஏதாவது கோளாறுலே விட்டுட கூடாது. அதோட பண விஷயம் என்னோட பொறுப்பு. “

“ஆனால் அவங்களுக்கு இது அவசியமில்லன்னு தோணுதே? நீங்க கார் கூட வாங்காம இருக்கீங்க.? “

“நான் கார் வாங்கலை என்றால் அதுக்கு காரணம் நிறைய. எனக்கு ஆபீஸ் போய் வர கேப் இருக்கு. வித்யா படிக்க சென்று விடுவாள். அது முடிந்ததும் திருமணம். நம்ம மெட்ராஸ் டிராபிக்கில் போய் வர பைக் சவுகரியம் என்றுதான் கார் வாங்கவில்லை. நம் திருமணம் அவசரமாக நடை பெற்றது, மேலும் நானும் வெளிநாடு சென்று விடுவேன் என்பதால், கார் இப்போ வாங்குவதை விட, நான் திரும்பிய பிறகு வாங்கலாம் என்று நினைத்தேன். அதில் என்ன பிரச்சினை? “

“இல்லை. வித்யா டெலிவரி சமயத்தில் தேவைப்படாதா? ஸ்கூட்டி வாங்குவதற்கு பதில் கார் வாங்கலாமே?

“லூசாடி நீஉனக்கு வண்டி வாங்குவதற்கும், கார் வாங்கினால் உள்ள செலவுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று தெரியாதா? அதோடு அதற்கு டிரைவர்க்கு என்ன ஏற்பாடு செய்வது? இதெல்லாம் நீ யோசிக்காமல் இருக்க மாட்டாய். இப்போ வித்யா எதாவது சொன்னாளா?”

“பச்ச்.” என்று சொல்லவும்,

“நான் அவளிடம் நாளைக்கு பேசுகிறேன்” என்றான் ஆதி.

“ஐயோ தயவு செய்து அதை மட்டும் செய்யாதீங்க. ஏற்கனவே நான் கேட்டுதான் நீங்க செய்யறீங்கன்னு நினைக்கிறாங்க. இதுலே இது வேறா?”

“சரி. அப்படினா நீ போய் வண்டி விலை எல்லாம் விசாரிச்சு சொல்லு.”

“நான்தான் வேண்டாம்னு சொல்றேன்லே விட்டுடுங்க. “

“நான் சொல்றத விட அவங்க சொல்றதுதான் உனக்கு பெருசா தோணுதா? நான் நீ வசதியா இருக்கணும்னு நினைக்கிறது உனக்கு முக்கியமில்லையா?”

“ஏன் பா புரிஞ்சிக்க மாட்டேன்குறீங்க? நான் அவங்களோட தானே இருந்தாகணும். அவங்களை கோபப்படுத்திட்டு எப்படி அவங்க முகம் பார்க்குறது?”

“சோ.. இப்போ உனக்கு வண்டி வேண்டாம். அதானே. எனக்கு எவ்ளோ கில்டியா இருக்கு தெரியுமா? நீயும் ஆசாபாசங்கள் நிறைந்த பொண்ணுதானே. இப்படி உன்னை விட்டுட்டு இருக்கறது தப்புன்னு சங்கடமா இருக்கு. இதுலே நீ மற்றவர்களால் கஷ்டப்படும் போது ரொம்ப வருத்தமா இருக்கு. என்னமோ பண்ணு“ என்றவன் லைன் கட் பண்ணிட்டான்.

வீடியோ சாட் செய்த பிறகு கொஞ்ச நேரம் வாட்ஸ் அப்ல் பேசுவது வழக்கம். குட் நைட், பாய் மட்டுமே ஒரு நாலைந்து தடவை சொல்வார்கள். அப்புறம் என்ற வார்த்தை ஒரு ஐந்து முறை. இப்படி பேசி விட்டு, அதற்கு பின்னும் தங்கள் மன நிலையை தெரிய படுத்தும் விதமாக பாடல் அனுப்பி விட்டுத் தான் தூங்குவான்.

அன்றைக்கு ஆதிக்கு இருந்த மன வருத்தத்திலும், கோபத்திலும், ஆதி எதுவும் செய்யாமல் படுத்து விட்டான்.

ஆதி வருத்தமாக பேசியது கஷ்டமாக இருந்தது பிரயுவிற்கு. சரி அவன் மீண்டும் பேசும் போது சரி பண்ணலாம் என்று எண்ணியிருந்தாள். அவன் பேசவில்லை என்று அவள் மெசேஜ் அனுப்பி பார்த்தாள். அதற்கும் பதில் அனுப்பவில்லை என்றவுடன் கண்ணீரோடு உறங்கி விட்டாள்.

மறுநாள் காலையில் கூப்பிடுவான் என்று எண்ணியவள், மதியம் மட்டுமில்லாமல் இரவும் கூப்பிடவில்லை. அவள் இரண்டு மூன்று முறை மெசேஜ் அனுப்பியவள் அதற்கும் ஒன்றும் ரிப்ளை செய்யவில்லை என்றவுடன் அவளுக்கும் கோபம் வந்து அவனிடம் அதன் பின் பேசவில்லை. கிட்டத்தட்ட இருவரும் ஒரு வாரம் வரை பேசவில்லை.

இங்கேயோ வீட்டில் அவள் மாமியாரும், வித்யாவும் சேர்ந்து “நீதான் நாங்கள் பேசினதை சொல்லி அவன் இப்போ எங்களோடு பேசுவதில்லை இப்போ திருப்தியா?” என்று அவளை சொல்லால் வதைக்க ஆரம்பித்தனர்.

பிரத்யாவிற்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவன் தன்னோடு மட்டுமில்லாமல் வீட்டிற்கும் பேசவில்லை என்றவுடன் பயம் பிடித்துக் கொண்டது. அவள் கவலையோடு அவன் அலுவலகத்திற்கு இ-மெயில் அனுப்பி விசாரித்த போது அவன் ஆபீஸ் வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது,

பிரத்யாவிற்கு மேலும் கோபம் அதிகரித்தது. ஏன் ஒரு வார்த்தை தினமும் நன்றாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாதா? என்று வெறுப்படைந்தாள். அட்லீஸ்ட் தன் வீட்டிற்காவது பேசியிருக்கலாமே என்று யோசித்தாள்.

இந்த கோபமும், வருத்தமும் கொட்ட முடியமால் தவித்தவள், தன் மன அழுத்தம் தாங்காமல் மயக்கம் வந்தது. ஆனால் அவள் வேலை செய்யும் ஹாஸ்பிடலில் வைத்து வந்ததால், உடனே பார்த்து தெளிய வைத்தார்கள். டாக்டர்ஸ் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள ஆலோசனை சொன்னார்கள். இந்த விஷயம் ப்ரியாவிற்கு கூட தெரியாது. எல்லோரிடமும் சாப்பிடாததால் வந்த மயக்கம் என்று கூறிவிட்டாள்.

ஒரு வாரம் கழித்து ஆதி போன் செய்தான். அவள் எடுக்க வில்லை. கிட்ட தட்ட பத்து முறை அழைத்தவன், அவள் எடுக்கவில்லை என்றவுடன் ஹாஸ்பிடல் லைன் வந்தான்.

தவிர்க்க முடியாமல் அழைப்பை எடுத்து “ஹலோ” என்றாள்.

-தொடரும் -
 

பிரிய நிலா

Well-known member
Member
பிரச்சனைகள் தொடங்கி விட்டது. கணவனிடம் வெளிப்படையாக சொல்லாமல் இருந்திருக்க வேண்டாம்..
பிரத்யு ஓவர் நல்லவளாக இருந்ததுதான் அவளின் மாமியாருக்கும் நாத்தனாருக்கும் வசதியாக போய்விட்டது..

மனம்விட்டு யாரிடமாவது பிரச்சனைகள் பிரத்யு பேசாமல் இருந்தால் அழுத்தம் அதிகமாகிக் கொண்டேதான் போகும்..
 

Gandhimathi Pandian

New member
Member
அம்மாவை பாத்துக் கொள்வதற்காக கல்யாணம் பண்ணும் போது தெரியவில்லையா இப்போ தான் தெரிந்ததா வேலைக்காரி இல்லை பொண்டாட்டின்னு
 

Rajam

Well-known member
Member
உஷா தவறு செய்கிறாள்.
வருத்தம். இருந்தால்
கணவனிடமோ இல்லை தோழியிடமசொல்லி இருக்கலாம். சொல்லதது மன
அழுத்தம் ஆகிவிட்டது.
 

kothaisuresh

Well-known member
Member
பாவம் பிரத்யு டென்ஷன் தான் காரணம்.இந்த அம்மா வுக்கும் பெண்ணுக்கும் கண்ணுல விரல விட்டு ஆட்டும் பொண்ணு மருமகளா வந்திருக்கணும்
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom