• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 24 -அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அன்று இரவு முழுதும் ப்ரயு கண் விழிக்க வில்லை. ஆதி முதல் நாள் இரவு ஐ.சி.யூவில் பிரயுவிடம் பேசியதுதான். அதன் பின் அவன் யாரிடமும் பேசவில்லை. அவனின் முக இறுக்கம் பார்த்து அவனை நெருங்கவே அவன் அம்மாவிற்கு கூட பயமாக இருந்தது.

ஆதியின் நண்பன் காலையில் அனைவருக்கும் காபி வாங்கி கொடுக்க, ஆதி மட்டும் அதை வாங்கவில்லை. பிரபுவும் எத்தனையோ முயற்சி செய்தவன், ஆதி பிடிவாதமாக வாங்க மறுக்கவும் விட்டு விட்டான்

மறுநாள் காலையிலேயே பிரயுவின் பெற்றோர், தங்கைகள் மட்டுமல்ல, ஆதியின் தங்கை வித்யாவும் வந்துவிட்டாள்.

டாக்டரும் வழக்கத்தை விட சீக்கிரமே வந்துவிட, எல்லோரும் பிரயுவின் நிலை பற்றி அறிய காத்திருந்தனர். ஆனால் ப்ரயு கண் விழிக்க வில்லை.

ஆதியும், பிரபுவும் டாக்டரிடம் கேட்க,

“என்ன ஆச்சு டாக்டர். ? இன்னும் பிரயுவிற்கு மயக்கம் தெளியவில்லையே?”

“நாங்களும் அதைதான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் மிஸ்டர்.ஆதி. சென்ற முறை போல் என்றால் அதிகபட்சம் நான்கு மணி நேரத்தில் தெளிந்து விடும். இரவு என்பதால் உறக்கம் தொடர்ந்து இருக்க கூடும் என்று எண்ணி தான் காலையில் தெளியும் என்று எண்ணினோம் ஆனால் அவளுக்கு கொடுக்க கூடிய மருந்துகள் வேலை செய்வதாகத்தான் தெரிகிறது. எதற்கும் இன்று மதியம் வரை பார்க்கலாம் ”

ஆதி திணறலாக “அவளுக்கு கோமா தவிர ஆபத்து ஒன்றும் இல்லையே டாக்டர் “

“இருக்காது மிஸ்டர் ஆதி. .அவளின் மற்ற உறுப்புகள் எல்லாம் வேலை செய்கிறது. இதய துடிப்பும் சீராக இருக்கிறது. அவள் மயக்கம் தான் பிரச்சினை பார்க்கலாம். “

இதை கேட்ட பின் தான் ஆதியின் மூச்சு சீராக வந்தது டாக்டரிடம்

“நான் போய் பார்க்கலாமா டாக்டர் ?”

“ஹ்ம்ம் நீங்கள் பாருங்கள் அவள் தெளியும் சமயம், உங்கள் குரல் கேட்டால் விரைவாக கண் விழிக்க வாய்ப்பு இருக்கிறது,”

டாக்டரிடம் பேசி விட்டு அவன் மீண்டும் ஐ.சி.யு. அருகே வரவும், அனைவரும் அவன் பதிலுக்காக ஆவலாக அவனை பார்த்தனர். ஆதி எல்லோரையும் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல், பிரயுவை பார்க்கச் சென்றான்.

அவனின் மனதை உணர்ந்து கொண்டவனாக , பிரபு அவர்களுக்கு டாக்டர் கூறியதை சொன்னான்.

பிரயுவின் அம்மா, அப்பா இருவருக்கும் இங்கே வந்த பிறகு தான் எல்லா விஷயமும் தெரிந்தது. மற்ற ரெண்டு மாப்பிள்ளைகள் சொல்ல, சொல்ல பிரயுவின் அம்மா அப்படியே தொய்ந்து விழுந்தார்.

பிரயுவின் அப்பா மாத்திரை எல்லாம் எடுத்துக் கொள்வதால் , இந்த அதிர்ச்சி அவர் உடல்நிலையை பாதிக்கவில்லை. ஆனால் அவரும் மற்றொரு சேரில் இடிந்து போய் அமர்ந்தார்.

எல்லாரும் இறைவனை வேண்டியபடி ப்ரயு கண் விழிக்க காத்து இருந்தனர்.

உள்ளே சென்ற ஆதி மீண்டும் பிரயுவிடம்,

“ப்ரயு ப்ளீஸ் என்னை மன்னிச்சிரு என்னால இந்த தண்டனை தாங்கிக்க முடியல சீக்கிரம் எழுந்து வா இனிமேல் உனக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்கறேன் . கண்ணைத் திறந்து பார் “

என்று அவளின் கையை வருடியபடி பேசிக் கொண்டிருந்தான். அவள் கூந்தலை ஒதுக்கி விட்டு முத்தமிட்டான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவள் அருகில் இருந்து அவளிடம் பேசி கொண்டிருந்ததோ, இல்லை ஆதியின் தொடுகையோ, டாக்டரின் மருந்தோ ஏதோ ஒன்று வேலை செய்து பிரயுவின் விழிகள் அசைய ஆரம்பித்தன.

உண்மையில் சொல்ல போனால், ஆதியின் குரல் தான் அவளை மீட்டது என்றும் சொல்லலாம் ஏன் என்றால் இந்த கடைசி ஆறு ஏழு மாதத்தை தவிர, மற்றபடி இருவரும் இரண்டு வருடங்களாக போனில்தான் அதிகம் பேசி இருந்தார்கள். பிரயுவால் அவன் குரலை வைத்து அவன் மனநிலையை ஓரளவு உணர முடியும் என்பதால் அவனின் தற்போதைய வேதனை அவளுக்கு புரிந்தது.

ஆதி மேல் கோபப்பட்டு பேசாமல் இருக்காமல், கொஞ்ச நாட்கள் கழித்து ப்ரயு பேச ஆரம்பித்து இருந்தால் கூட, அவளின் இந்த பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி இருக்கும் அதை செய்யமால் விட்டது தான் அவளின் இந்த நிலைக்கு காரணம் என்று கூட சொல்லலாம்.

ஆதிக்கு அவள் விழிப்பது கூட தெரியவில்லை. அவன் அவள் கைகளை வருடுவதும், பேசுவதுமாக இருந்தான்.

அங்கே இருந்த நர்ஸ் கவனித்து டாக்டரை அழைத்து வர, அங்கே வந்த டாக்டர்

“மிஸ்டர் ஆதி நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள் “ என்றார்,

“ஏன் டாக்டர்?”

“பிரயுவிற்கு மயக்கம் தெளிய ஆரம்பிக்கிறது நாங்க மேற்கொண்டு அதற்கு ட்ரீட்மென்ட் செய்கிறோம்” என,

ஆதி டென்ஷனோடு வெளியே வந்தான்.

பிரபு அவனிடம் என்ன என்று கேட்க, டாக்டர் உள்ளே வந்திருப்பதை சுட்டிக் காண்பித்தான். எல்லோரும் ஐ.சி.யு வாசலையே பார்க்க, சற்று நேரத்தில் டாக்டர் வந்தார்.

ஆதி வேகமாக அருகில் வர,

“மிஸ்டர்.ஆதி ப்ரயு கண் விழித்து விட்டாள் இனி பயமில்லை. “ என்றார்.

“தேங்க்ஸ் டாக்டர் இப்போ உள்ளே போகலாமா? “ என்றான் எல்லோருமே ஆவலாக அவர் முகத்தை பார்க்க,

“இங்கே வேண்டாம் சாதாரண வார்டுக்கு மாற்ற சொல்லியிருக்கிறேன் நர்ஸ் வந்து எந்த அறை என்று சொல்வார் அதன் பின் நீங்கள் போய் பாருங்கள். இன்னொரு விஷயம் அவளிடம் அதிகம் பேச்சு கொடுக்க வேண்டாம் “ என்றார்.

எல்லோரும் காத்திருக்க, அரை மணி நேரத்தில் நர்ஸ் வந்து அறை எண் சொன்னார்.

அந்த அறையின் வாசலில் அனைவரும் நிற்க, ஆதி யாரை பற்றியும் கவலைபடாமல் உள்ளே சென்று விட்டான். நர்ஸ் வந்து ஒவ்வொருவராக சென்று பார்க்க சொல்லியிருந்தார்.

உள்ளே யாரோ வரும் அரவம் கேட்டு , ப்ரயு கண் திறந்து பார்த்தாள் ஆதியைக் கண்டதும் அவள் தலையை அசைத்தாள் ஆதி அவளருகே வந்தவன், அவள் கையை எடுத்து தன் கண்ணில் வைத்துக் கொண்டான் பிரயுவும் ஒன்றும் பேசவில்லை. சற்று நேரத்தில் கைகளில் ஈரம் படவும், அவன் முகத்தை நிமிர்த்தினாள்.

ஆதி அழுது கொண்டிருந்தான். அவன் கண்களில் கண்ணீரை கண்ட ப்ரயு, எழுந்திருக்க முயற்சித்தாள். அவளை தடுத்த ஆதி , அவள் தலைக்கு அருகில் இருந்த சேரில் அமர, ப்ரயு வேகமாக அவன் கண்களை துடைத்தாள். அவளுடைய கண்களிலும் கண்ணீர் ஆதியின் கண்ணீர் நிற்கவில்லை என்றவுடன்,

“அழாதீங்க ஆதிப்பா” என்றாள்

அந்த வார்த்தையை கேட்ட ஆதி, மீண்டும் அவள் கைகளை தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்,

“ஏன் ரதி இப்படி செஞ்ச? நேத்து ராத்திரிலேர்ந்து நான் நானா இல்லடி எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்டி. எங்கிட்ட சண்டை போடு. ஏன் இப்படி பண்றீங்கன்னு கேளு அதைவிட்டு இப்படி மனசுலே போட்டு வைச்சு உனக்கு கஷ்டத்தை தேடிக்காத. என்னையும் வேதனைப்படுத்தாத, “ என்று புலம்பினான்.

ப்ரயு அவனுக்கு பதில் சொல்லவில்லை என்றாலும் , அவனின் வேதனை உணர்ந்து அவன் கன்னத்தை அழுத்தினாள்.

அங்கே வெளியே யார் உள்ளே செல்ல என்று தயக்கத்தில் இருக்க, ஒவ்வொருவரும் குற்ற உணர்ச்சியில் இருந்தனர். ஆனால் பிரியாவும், பிரபுவும் உள்ளே சென்றனர்.

ப்ரியாவை பார்த்த ப்ரயு,

“ஹேய் ப்ரியா நீ எப்படி இங்கே வந்த ? நீ பெங்களூர்லே தானே இருந்த? வாங்க பிரதர் எப்படி இருக்கீங்க” என்று வினவ,

“அடிங்க நேத்து ராத்திரிலேர்ந்து எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு, இப்போ மேடம் நிதானமா குசலம் விசாரிக்கிறீங்களோ? இங்கே நீதான் பேசண்ட் ஞாபகம் இருக்கா?” என்று பொரிந்தாள்.

“ஹேய் என்னடி நேத்து இரவிலேர்ந்தா ? நீ ஏண்டி இங்கே இருக்க ? வீட்டிற்கு போயிட்டு காலையில் வந்துருக்கலாம்லே”

“ஏண்டி இப்படி இருக்க ? ஏன் யார்கிட்டயும் எதுவும் சொல்லாமல் மறைச்ச? அட்லீஸ்ட் என்கிட்டயாவது ஷேர் பண்ணிருக்கலாமே. அங்கே உள்ள பிஸி வொர்க்லே உன்கிட்ட பேசல. அதுக்காக நான் உன் ஃப்ரெண்ட் இல்லன்னு ஆகிடுமா? மனசு வேதனைப்படும் சமயத்துலே எங்கிட்ட ஷேர் பண்ணியிருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்துருக்கும் இல்லியா? இவ்ளோ பெரிசா இழுத்து விட்டுட்டியே?“ என்று பட பட பட்டாசாக பொரிந்தாள்.

“ஹேய். .அப்படி எல்லாம் இல்லபா “ என்று அவள் மறுக்கும் போதே

“ப்ரியா போதும், சிஸ்டர டென்ஷன் ஏத்தாதே. சிஸ்டர் அவள் பேசறத பத்தி யோசிக்காமல் நீங்க ரெஸ்ட் எடுங்க “

“தேங்க்ஸ் ப்ரோ “ என்றவள், தன் கணவனுக்கு அவனை அறிமுகம் செய்ய எண்ணி ஆதியை பார்க்க, ஆதியோ பிரபுவின் கையை பிடித்து

“தேங்க்ஸ்டா. நேத்திக்கு நான் இருந்த நிலைமையில் நீ வந்ததுக்கு அப்புறம் தான் கொஞ்சம் தைரியமே வந்துச்சு. உங்களுக்கும் தேங்க்ஸ் சிஸ்டர்” என, ப்ரயு விழித்தாள்.

“உங்களுக்கு இவங்களை ஏற்கனவே தெரியுமா ஆதிப்பா ?” என, பிரபு

“நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா காலேஜ்லே படிச்சவங்க இப்போ ஒரே இடத்துலே தான் வேலையும் பார்க்கறோம்.”

“அப்போ நீங்கள் எங்க கல்யாணத்துக்கு வரலையே?

“இல்லமா. இப்போ ஆதி பண்ண ப்ராஜெக்ட் அங்கே நான் தான் பார்த்துக் கொண்டிருந்தேன் எங்க அப்பாக்கு தீடிர்னு உடம்பு சரியில்லாம போனதால் நான் இங்கே வர, ஆதி அங்கே போக வேண்டியிருந்தது. “

மேலும் ஏதோ கேட்க வாயெடுக்க, ஆதி ‘ போதும் ப்ரயு அவங்க போய் ரெஸ்ட் எடுக்கட்டும் நீ அப்புறமா எல்லாம் விரிவா பேசலாம் “ என்றான்.

“நாங்க கிளம்புறது இருக்கட்டும். முதலில் இந்த காபிய குடி. நேத்து ராத்திரியாவது சாப்பிட்டியா ? சிஸ்டர்க்கு என்ன தரலாம்ன்னு கேட்டுக்கலாம் “

ஆதிக்கும் அப்போதுதான் பசி தெரிந்தது. முதல் நாள் இரவு ஆதி ப்ரயு வீட்டிற்கு சென்று அவளோடு சாப்பிடலாம் என்று எண்ணித்தான் அங்கே சென்றான். அதன் பிறகு என்னன்னவோ நடந்து விட்டது. ஒரு பெருமூச்சோடு பிரபுவிடமிருந்து காபி வாங்கி கொண்டான்.

நர்ஸ் வர பிரயுவிற்கு என்ன சாப்பிட கொடுக்கலாம் என்று கேட்க, இப்போது ஜூஸ் கொடுத்து விட்டு. பிறகு கொஞ்ச நேரம் கழித்து சாப்பாடு கொடுக்கலாம் என்றனர்.

ஆதி ஜூஸ் வாங்க வெளியே வர, பிரியாவும், பிரபுவும் கிளம்பினர்.

ஆதியின் அம்மா அவனிடம் “இப்போ எப்படி இருக்காப்பா ப்ரத்யா?” என்று வினவ, ஒரு விநாடி அவரை நேராக பார்த்தவன், ஒரு பெருமூச்சோடு,

“அம்மா, உங்ககிட்டயும். வித்யாகிட்டயும் கொஞ்சம் பேசணும் கான்டீன் வரீங்களா?’ என்றான்

வித்யா குழந்தைய அவள் கணவரிடம் விட்டு விட்டு இருவரும் ஆதியோடு கான்டீன் சென்றனர்.

பிரயுவிற்கு ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு, தன் அம்மா, தங்கைக்கும் ஜூஸ் வாங்கி கொடுத்தான்.

“அம்மா என்னம்மா பிரச்சினை உங்களுக்கு ? ஏன் ப்ரயு அப்பா ஹாஸ்பிடலில் இருக்கும் போது ப்ரயு கிட்ட அப்படி பேசி இருக்கீங்க ? “

“என்னடா ? நீயே மூணு வருஷம் கழிச்சு வந்துருக்க? உன் கிட்ட கோபப்பட்டு , அந்த ட்ரைனிங் போறத பத்திக் கூட சொல்லாம இருந்திருக்கா? அத மனசுலே வச்சுதான் பேசினேன். அவகிட்ட தானே பேசினேன் “

“நீங்க பேசும் போது அவங்க அப்பா முழிச்சு தான் இருந்துருக்காங்க அவரே ஹார்ட் பேசண்ட். நீங்க அவர் எதிரே பேசுறது நல்லாவா இருக்கு? அதோட எதுவா இருந்தாலும் எங்கிட்ட நீங்க கேட்டுருக்கலாமே உங்களுக்கு நான் பதில் சொல்லலன்னா அவகிட்ட கேட்டுருக்கணும், “

“இப்போ என்னாலதான் அவளுக்கு பிரச்சினை என்று சொல்கிறாயா?”

“இல்லைதான் ஆனால் அதுவும் ஒரு காரணம் அவகிட்ட கல்யாணம் முடிஞ்சு என்ன சொன்னேன் தெரியுமா? என் இடத்துலே இருந்து உங்கள பார்த்துக்க சொல்லி இன்னிக்கு வரைக்கும் அவ உங்கள மதிக்காமலோ, வித்யாவ அவ தங்கை மாதிரி பார்துக்கறதிலேயோ எந்த குறையாவது வச்சிருக்காளா? “

இதை கேட்ட இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.

“வந்த சில பிரச்சினைகள் கூட நான் வித்யா டெலிவரி போது பேசாதது, உங்களையும் அவளையும் என்னோட கூட்டிட்டு போறது இத மாதிரிதானே. அவ இப்படி செஞ்சா அதனாலே எங்களுக்கு இந்த பிரச்சினை ஆச்சு என்று நீங்க இதுவரைக்கும் சொல்லி இருக்கீங்களா?”

வித்யாவும், அவள் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“அதோட உங்கள எல்லாம் பிரிஞ்சி இருக்கேன்ற குறை மட்டும் தான் எனக்கு ஆனால் அவளுக்கு ? எல்லாம் தெரிஞ்சும் கூட எத்தனை வித பிரச்சினைகள் ஃபேஸ் பண்ணினா? நீங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் ஆதரவா இருந்து இருந்தா அவள் தன்னோட உடல் நிலைய பத்தி உங்ககிட்ட சொல்லியிருப்பால்ல? “

ஆதியின் அம்மா , “ஆனால் சென்ற முறை அவள் உடம்புக்கு வந்த பிறகு , அவளை வீட்டில் கூட அதிக வேலை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் தானே?”

“ஆனால் அவள் மனசு பத்தி நீங்க கவலைபடலியே? இத நான் சொல்லக் கூடாது தான். இருந்தாலும் ஏன் சொல்றேனா என் மனசுலே நீங்க அவள பார்துப்பீங்க என்ற நம்பிக்கை இருந்துது. நான் ஒரு நிமிஷம் கூட நினைச்சது இல்ல. நீங்க வித்யாவையும், பிரயுவையும் பிரிச்சுப் பார்ப்பீங்கன்னு அப்படி எண்ணியிருந்தால் நான் கல்யாணம் செய்துருக்க மாட்டேன் “

இருவரும் அவர்கள் தவறை உணர்ந்தனர்

வித்யா ‘சாரி அண்ணா எனக்கு இப்படி எல்லாம் தோன்றியது இல்லை. நான் புகுந்த வீட்டில் ஒரே பிள்ளையாய் போனதால், எனக்கு யாரையும் அவன்க மனசு எப்படி இருக்கும் என்று எண்ணி பார்க்கத் தெரியவில்லை. என் மாமியாரும், அவன்க பிள்ளைக்காக என்று என்னிடம் எதையும் காட்டமாட்டார். இனிமேல் நான் கவனமாக இருக்கிறேன் அண்ணா இப்போ நான் அண்ணியிடம் மன்னிப்பு கேட்கிறேன் “

“நீ உணர்ந்து கொண்டால் போதும் வித்யா அவள் உடல்நிலை பற்றி மட்டும் பேசி விட்டு கிளம்பு. சின்னக் குழந்தையை இங்கே அதிக நேரம் வைத்து இருக்க வேண்டாம்.”

ஆதியின் அம்மா முகம் வேதனை இருந்தாலும் , ஒரு முடிவுக்கு வந்து விட்டது போல் , “ஆதி நீ வேண்டும் என்றால் தனி குடித்தனம் போகிறாயா? இவ்ளோ நாள்தான் எனக்காக பார்த்துட்டு ரெண்டு பேரும் கஷ்டபட்டீங்க. இனிமேல் உங்கள் இருவரின் சந்தோஷம் தான் முக்கியம். என்னை அறியாமல் நான் உங்களை சங்கடபடுத்தி விடுவேனோ என்று கலக்கமா இருக்கிறது”

ஆதி அவன் அம்மா கையை பிடித்து “அம்மா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இதை பிரயுவே ஒப்புகொள்ளவும் மாட்டாள். அவளுக்கு யார் மீதும் கோபம் இருக்காது. வருத்தம் வேண்டுமானால் இருக்கலாம் அவளை புரிந்து கொள்ளவில்லையே என்று. நீங்கள் போய் அவளிடம் பேசுங்கள் எல்லாம் சரியாகி விடும் “

ஆதி இருவரிடமும் பேசி முடித்து , பிரயுவின் அறைக்குத் திரும்புவதற்கு முன், பிரயுவின் அறையில் அவள் தங்கைகள், பெற்றோர் பிரயுவிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

பிரயுவின் தங்கைகள் “அக்கா எங்களை மன்னித்து விடுங்கள் எங்கள் கல்யாணம் என்ற ஒன்று உங்கள் மேல் வைத்த பாசத்தை கூட மறக்க அடித்து விட்டது. அதனால் தான் நாங்கள் யாரையோ திருப்தி படுத்த, உங்களை நோகடிச்சுட்டோம். இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டோம். மாமா இங்கியே திரும்பி வந்துட்டதா சொன்னங்க. சீக்கிரம் வீட்டிற்கு வந்து, எங்கள் பசங்களை பார்க்க மாமாவோடு வாங்க ப்ளீஸ்கா “ என்று அவள் கைகளை பிடித்து மன்னிப்பு கேட்க,

பிரயுவோ “ஏய் இதெல்லாம் என்ன ? உங்கள் மேல் எனக்கு கோபம் எல்லாம் இல்லை. சரியா. நான் சீக்கிரமே வரேன் இப்போ நீங்க கிளம்புங்க குழந்தைங்க தேடப் போறாங்க “ என்று அவர்களை அனுப்பி வைத்தாள் அவர்களின் கணவன்மார்களும் அவளிடம் தங்களால் தான் இவர்கள் இப்படி நடந்து கொண்டார்களோ என்று வருத்தப்பட்டு, அவளிடம் இனிமேல் தாங்களும் அவர்களை அழைத்து வருவதாகக் கூறினார்.

அவர்கள் வெளியே இருக்க, பிரயுவின் அப்பா, அம்மா மட்டும் உள்ளே இருந்தனர் பிரயுவின் அம்மாவோ

“ஏன் ப்ரத்யா இப்படி பண்ணின? நாங்க உன் நல்லதுக்கு தானே சொன்னோம். நீ அவங்க அங்கே இருக்கும்போது, உன்னாலே ரெஸ்ட் எடுக்க முடியாதுன்னு தானே சொன்னேன். அதுக்காக இவ்ளோ பெரிய விஷயத்தை சொல்ல மாட்டியா ? “

‘ஏன் அப்போ நீங்க அவங்க முக்கியம்ன்னு தானே நினைச்சீங்க “

‘உனக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு எங்களுக்கு தெரிஞ்சா நாங்க அப்படி இருந்து இருப்போமா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும். அதுக்கு உங்க வீடு தான் பெடடெர் ன்னு நினைச்சேன் இது தப்பா?”

“ஆனால் நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ? எனக்கு என்ன பிரச்சினைன்னு தெரியல ? இந்த டெஸ்ட் , அந்த டெஸ்ட் ன்னு பண்ணும் போது எவ்ளோ பயமா இருந்துச்சு தெரியுமா ? உங்ககிட்டேயே சொல்ல முடியல. . வீட்டில் தனியா இருக்கிற அத்தை கிட்ட எப்படி சொல்ல முடியும் ? இல்ல வெளிநாட்டிலே தனியா இருக்கிற அவர்கிட்டதான் எப்படி சொல்வது ? இது எல்லாம் தான் எனக்கு உங்கள் மேல் கோபம் “

அவள் அப்பா அவளிடம் “ப்ரத்யா என்னம்மா இப்படி சொல்ற ? நீ எங்கள் பொண்ணும்மா அந்த சூழ்நிலைதான் எங்கள அப்படி நடந்துக்க வைச்சிருக்கு புரிஞ்சிக்கோம்மா “ என்று கெஞ்ச

“சரி. நடந்ததா விடுங்க நீங்க சாப்பிடீங்களா? மாத்திரை போட்டீங்களா ? “ என்று வினவ, அவர் பதில் சொல்லவும்,

“அப்பா உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா? நீங்க எப்படி நாலு வருஷம் வெளிநாடு போவார்ன்னு தெரிஞ்சும் கல்யாணம் செய்து கொடுக்க சம்மதிச்சீங்க?”

“முதல்லே மாப்பிள்ளதான்மா எங்கிட்ட பேசினார். அவர் பேசினத கேட்டதும், உன்னை நல்ல வச்சுப்பார்னு தோணிச்சு. அதுதான் நான் சம்மதிச்சதுக்கு காரணம். நீ பொறுப்பும் , பக்குவமும் உள்ளவ உன்னால மானேஜ் பண்ண முடியும்ன்னு தான் சரின்னு சொன்னேன் “

“ஆனால் இது தரகர் மூலமா வந்த வரன் தானேப்பா ” இந்த கேள்விக்கு பதில் சொல்ல வரும்போது , வெளியே கதவு திறக்கும் சத்தம் கேட்டு, நிறுத்தினார்.

அங்கே ப்ரயு மாமியார், வித்யா வரவே, பிரயுவின் பெற்றோர்கள் வெளியே சென்றனர். அவர்களோடு ஆதியும் கையில் ஜூஸ் கொண்டு வந்தான். (ஷப்பா ஒரு வழியா ஜூஸ் வந்துச்சு )

வித்யா ப்ரயுவிடம் “அண்ணி இப்போ எப்படி இருக்கு ?” என்று வினவினாள்

“ஹ்ம்ம். பரவாயில்லை வித்யா “

“அண்ணி, இனிமேல் இப்படி எல்லாம் எதையும் சொல்லாமல் இருக்காதீங்க ப்ளீஸ். எங்களுக்கு நீங்களும் முக்கியம் தான் அண்ணி. என்ன அதை காட்டாமல் இருந்தோமே தவிர, நீங்க இல்லாமல் அண்ணா இல்லை. அண்ணா இல்லாமல் எங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்க? “

“ஹேய். அப்படியெல்லாம் இல்லமா எல்லாரையும் சொல்லி கவலபடுத்த வேண்டாம்ன்னு தான் நினைச்சேன். பையன் எப்படி இருக்கான் ? “என்று அவளிடம் வினவ, அவளும் சற்று நேரம் பேசிவிட்டு சென்றாள்.

பிரயுவின் மாமியார் “ப்ரயு. மனசுலே எதுவும் வச்சுக்கதேம்மா உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா நீயும் ஆதியும் வேணா தனியா இருந்துக்கோங்க. நான் வாழ்ந்து முடிச்சவ. நீங்க எனக்காக யோசிக்காதீங்க “ என்றார்.

“ஐயோ அத்தை அப்படி எல்லாம் சொல்லாதீங்க. நான் என்னிக்குமே அப்படி நினைச்சது இல்லை. நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இவங்க ரெண்டு பேரயும் வளர்த்து இருப்பீங்க. உங்களுக்கு அப்புறம் தான் நான் உங்கள யாரையும் பிரிக்கணும் நினைச்சதில்ல.,”

ஆதியும், அவன் அம்மாவும் பார்த்துக் கொண்டனர்.

“அப்படின்னா இனிமேல் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லணும் சரியா ?” என்றார்.

“சரி அத்தை “

“சரி ஆதி நீ அவள் கூட இரு நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன் ” என்று கிளம்ப,

பிரயுவின் அம்மா “வேண்டாம் சம்பந்தி அம்மா நான் காலையிலேயே சமைச்சு எடுத்துட்டு வந்துட்டேன் அவங்க வெளியிலே சாப்பிட முடியாதுன்னு பிரயுவிற்கும் சேர்த்து எடுத்து வந்துட்டேன் “ என,

ஆதி “அப்படி என்றால் , பிரயுவும் அவங்க அப்பாவும் இதை சாப்பிடட்டும் நாம் எல்லோரும் கான்டீன் போய்விடலாம்” என்று அழைத்தான்.

வித்யா, பிரயூவின் தங்கைகள் எல்லாரும் அவர்கள் கணவன்மர்களுடன் கிளம்பி விடுவதாகக் கூற, ஆதி, அவன் அம்மா, மாமியார் மட்டும் கான்டீன் சென்று சாப்பிட்டு வந்தனர்.

சாப்பிட்டவுடன் எல்லோரையும் வீட்டிற்கு கிளம்பச் சொன்னான் ஆதி. பிரயுவின் பெற்றோர் இருப்பதாக கூற,

“இல்லை மாமா. நீங்க ரெஸ்ட் எடுக்கணும் அனேகமா சாயந்திரம் டாக்டர் பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க நீங்க அம்மாவை வீட்டில் விட்டுட்டு அப்படியே உங்க வீட்டிற்கு போங்க சாயந்திரம் டாக்டர் என்ன சொல்றார்ன்னு சொல்றேன் “ என்று கூற, பிரயுவும் வற்புறுத்தவே சம்மதித்தனர்.

எல்லோரும் கிளம்பினர்.

ஆதியும் பிரயுவும் மட்டும் தங்கினர். பிரயு மருந்தின் வேகத்தால் உறங்க ஆரம்பிக்க, ஆதியும் முந்தின இரவு விழிப்பால் அங்கியே அட்டேண்டேர் பெட்டில் படுத்தான்.

மாலை டாக்டர் வந்து செக் செய்து விட்டு பிரயுவை டிஸ்சார்ஜ் செய்தார். இருவரையும் அறைக்கு வரச் சொல்லி,

“ப்ரயு இனிமேல் இது போல் வீட்டில் உள்ளவர்களிடம் மறைக்காதே. நீ மருந்து சாபிட்டியா இல்லியா என்று கூட யாருக்கும் தெரியவில்லை. இது மறைக்க வேண்டிய விஷயம் இல்லை உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கஷ்டம் தான் புரிகிறதா. ? “

ஆதி டாக்டரிடம் “டாக்டர் இதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் ?”

“ஒன்றும் இல்லை மிஸ்டர் ஆதி. அவள் மனதை வருத்திக் கொள்ளாமல் இருந்தால் போதும். மேலும் தூக்கம் பாதிக்கபடாமல் பார்த்துக் கொண்டால் போதும்”

ப்ரயு ஆதியிடம் “நீங்கள் பில் கட்டி விட்டு வாருங்கள் “ என்று அனுப்பியவள், தனியாக டாக்டரிடம் தன் சந்தேகங்களை கேட்டாள். அதே போல் ஆதி வந்ததும், பிரயுவை அனுப்பி விட்டு அவனும் தன் சந்தேகங்களை கேட்டுக் கொண்டான்.

நேராக ஆதியின் வீட்டிற்கு சென்றார்கள் அங்கே அவன் அம்மா இரவு உணவு சமைத்து வைத்து இருந்தார். மருத்துவமனையில் இருந்து வந்ததால் இருவரும் குளித்து விட்டு வர, மூன்று பேருமாக சாப்பிட்டனர்.

இதற்கு இடையில் பிரியா பிரபு, பிரய்யு பெற்றோர், தங்கைகள், வித்யா எல்லோருக்கும் வீட்டிற்கு வந்ததை சொல்லி விட்டு, டாக்டர் சொன்னதையும் சொன்னார்கள்.

ஆளாளுக்கு பிரயுவிற்கு அட்வைஸ் மேல் அட்வைஸ் பொழிந்தனர் பிறகு இருவரும் தங்கள் அறைக்கு படுக்க வந்தனர்

“ப்ரயு கொஞ்ச நேரம் பேசலாமா “ என்றான் ஆதி

“சொல்லுங்க ஆதிப்பா”

அவளருகில் அமர்ந்து அவள் கைகளை வருடி “ப்ரயு கொஞ்சம் நீள விளக்கமாக இருக்கும் அதை கேட்டு உன் பதிலை சொல் சரியா?”

“அதற்கு முன் நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் “

“கேளுடா.”

“இன்றைக்கு அப்பாவிடம் ஒரு கேள்வி கேட்டேன் எப்படி நீங்கள் நான்கு வருடம் வெளிநாடு சென்று விடுவீர்கள் என்று தெரிந்த பின்னும் உங்களை எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்? அதற்கு அவர் நீங்கள் அப்பாவிடம் பேசியதாக சொன்னார் என்ன பேசினீர்கள். என்று தெரிந்து கொள்ளலாமா?”

“ஹ்ம்ம். .சொல்கிறேன் அதற்கு முன் நீ எப்படி என்னை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாய்?”

“முதலில் அப்பா, அம்மாவிற்காகதான் பெண் பார்க்க ஒப்புக் கொண்டேன் ஆனால் அன்று நீங்கள் என்னிடம் நேரடியாக பேசியது, உங்கள் அம்மாவிற்கு இவ்வளவு பார்ப்பவர் என்னையும் நன்றாக பார்ப்பீர்கள் என்று தோன்றியது மேலும் உங்களை பிடித்து இருந்தது. அதனால் தான் ஒத்துக் கொண்டேன். “

“ஹ்ம்ம்”

“ஆனால் நீங்கள் தரகர் கொண்டு வந்த வரன் இல்லையாமே. அப்பாவிடமே நேரடியாக பேசினீர்களாமே”

“ஆமாம் உன்னை பெண் பார்க்க வருவதற்கு முன்னே நான் பார்த்து இருக்கிறேன் வித்யா கல்யாணம் முடிந்த பின், நான் ஒரளவு மகிழ்ச்சியாகவே இருந்தேன். அப்போது இந்த வீட்டு கடன், வித்யா கல்யாண செலவு, எல்லாம் ஓரளவு முடித்து என் கடமையைச் சரியாக முடித்த திருப்தி இருந்தது. அப்போது ஒருநாள் என் ஃப்ரெண்ட் ஒருவருக்கு குழந்தை பிறந்திருக்க பார்ப்பதற்காக உங்கள் மருத்துவமனை வந்தேன். ங்கியோ வழிமாறி உங்கள் ரிலாக்ஸ் ரூம் அருகே வந்து விட்டேன். .அப்போது நீயும், உன் ஃப்ரெண்ட் பிரியாவும் பேசிக் கொண்டு இருந்தீர்கள். அவள் ஹீரோ வோர்ஷிப் பத்தி ஏதோ பேசிக் கொண்டிருக்க, நீ அவளிடம் பதிலுக்கு சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு உன்னை பற்றி அறிய ஆவலை தூண்டியது

“ஏய் ஹீரோவொர்ஷிப் ஓகே தான். ஆனால் வாழ்க்கை என்பது சினிமா இல்லை. கலரோ, நாலு பேரை அடிச்சி தூக்கறதோ தேவை இல்லை. நம்மை மதித்து நடப்பவர் தான் வாழ்க்கை துணைவராக வர வேண்டும்”

“அடி போடி எந்த காலத்திலுமே ஆண்கள் பெண்களை அடிமைதான் படுத்துகிறார்கள் அதிலும் ஒருவருக்கு மட்டும் எல்லா விதத்திலும் அடிமை அதற்கு கொடுக்கும் லைசென்ஸ் தான் கல்யாணம் “

“ஸ்டுபிட் மாதிரி பேசாதே. கல்யாணம் என்பது அடிமைத்தனம் அல்ல நம்மை பாதுகாக்கும் பொறுப்பை நம் அப்பாவிடமிருந்து கணவருக்கு கொடுக்கிறார்கள்,, ஒரு கட்டத்தில் அது மகன்களின் பொறுப்பு ஆகிறது “

“அப்போ நம்மை நாம் பாதுகாக்க முடியாதா ? இதற்காக நாம் கொடுக்கும் விலை நம் சுதந்திரம்”

“சுதந்திரம் என்பது என்ன? நீ நினைச்ச நேரத்தில் ஊர் சுற்றுவதா? இல்லை ஆண்கள் நம் எண்ணங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தாலே போதும். உடல் வலிமை அடிப்படையில் பார்த்தால் நம்மை விட ஆண்கள் பலம் அதிகம். மனவலிமை ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். ஆண்களின் பலத்தை அவர்கள் நம்மை பாதுகாக்கவும், பெண்களின் மனபலத்தை ஆண்களுக்கு உறுதுணையாக்கவும் தான் இறைவன் இப்படி ஒரு படைப்பு செய்திருக்கிறார்”


இதற்கு மேல் நீங்கள் என்ன பேசினீர்களோ தெரியாது. ஆனால் உன்னை போன்ற பெண் எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று தோன்றியது. உன்னைப் பின் தொடர்ந்து உன்னை பற்றிய விவரங்கள் அறிந்தேன்

அதற்குள் எனக்கு இந்த வெளிநாடு வாய்ப்பு வரவே, உன் அப்பாவிடம் எல்லாம் சொல்லி , உன்னை திருமணம் செய்து தருமாறு கேட்டேன் அதற்கு முன் திருமணத்தை பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்றும் கேட்டேன். அதற்கு அவர் நீ இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும் என்று சொல்வதாக சொன்னார்.

உன் அப்பாவிடம் நான் “சார், என் நிலைமை இப்போது அம்மாவை என்னுடன் அழைத்து போக முடியாது என் ஃப்ரெண்ட் சொல் படி அந்த கிளைமேட் என் அம்மாவிற்கு ஒத்துக் கொள்ளாது அதோடு என் தங்கையை இப்போதுதான் திருமணம் செய்து கொடுத்து இருப்பதால் அவளுக்கு இனிமேல் வரக்கூடிய எல்லா விசேஷங்களையும் பார்க்க வேண்டும்

என் அப்பா இறந்த பின், என் அம்மா எங்களை வளர்ப்பதற்காக எங்கள் அப்பா வழி உறவுகளிடம் தான் நிற்க நேர்ந்தது. அம்மா நிறைய பேச்சுக்களை கேட்க வேண்டி இருந்தது. மீண்டும் அவர்களிடம் அம்மாவை விட மனம் இல்லை. என்னை பொறுத்தவரை உங்கள் மகளுக்கு பிடித்து இருந்தால் அவள்தான் என் மனைவி. என்னுடைய நேசம் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவளுக்கும் என்னை பிடிக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வேறு யாரையோ நம்பி விடுவதற்கு, என் மனைவியோடு விட்டு செல்ல எண்ணுகிறேன். உங்கள் மகளை வெறும் கம்பனியானாக எண்ணி இதை நான் கேட்கவில்லை என் மனைவி என்பவள் என்னில் பாதி என்னுடைய இடத்தில இருந்து என் குடும்பத்தை பார்த்துக் கொள்வாள் என்று எண்ணித்தான் கேட்கிறேன்.

நான் திரும்பி வர மூன்று வருடத்திற்கு மேல் ஆகும் எனக்கு உங்கள் மகளை திருமணம் முடித்து அனுப்பி வைத்தால், அவள் கேட்ட அவகாசமும் கிடைக்கும் என் அம்மா, உங்கள் மகள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதலும் இருக்கும் இது எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் நல்லது.


இப்படியெல்லாம் பேசி பெண் பார்க்க ஏற்பாடு செய்து, திருமணமும் நடந்தது நான் எதிர்பார்த்த மாதிரி எல்லாம் சரியாக போய் கொண்டிருந்தது ஆனால் நான் எதிர்பாராதது என் அம்மாவின் நடவடிக்கை அவர்கள் வித்யாவை உயர்த்தி உன்னை மட்டம் தட்டுவார்கள் என்று எண்ணவில்லை. இது எனக்கு பெரிய அதிர்ச்சி

நீ சொல்லாமலே என்னால் ஊகிக்க முடிந்தது. ஆனால் நேரில் இல்லாமல் அங்கிருந்து கொண்டு சரி செய்ய கூடிய விஷயமாக தெரியவில்லை அதுதான் நமக்குள் அவ்வப்போது வந்த பிரச்சினைகளுக்கு காரணம்.

அதே போல் நான் சென்ற முறை வந்த போது உன்னோடு மூனாறு போக திட்டமிட்டு இருந்தேன் உனக்கு ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று சொல்லாமல் இருந்தேன். ஆனால் அப்போது திட்டம் முற்றிலும் மாறி விட்டது. அது என்னை ஒரு மாதிரி அப்செட் செய்ததில் தான் உன் அப்பா, தங்கைகள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்து விட்டேன். பிறகு நீ நினைவுபடுத்தி நாம் கிளம்பியபோது ஏற்பட்ட பிரச்சினைகள் உனக்கே தெரியும்

ஆனால் அந்த முறை அங்கே சென்ற பிறகு, உன்னை விட்டு இருக்க முடியாது என்று புரிந்து, நான் எங்கள் ஆபீசில் பேசி, இங்கே மாறுவதற்கு விடாமல் நச்சரித்தேன். .அதன் நடுவில் தான் நீ மயங்கி விழுந்த விஷயம் அம்மா சொன்னார்கள்

அவர்கள் சொல்லும்போது சொன்னது, என்னால் உன் தூக்கம் கெடுவதாகவும், மேலும் என்னைப் பிரிந்து இருப்பது உனக்கு ஏக்கத்தை கொடுப்பதாகவும் சொன்னார்கள். சோ நீ என்னை விட்டு கொஞ்சம் விலகி இருக்க வேண்டும் என்றுதான் உன்னிடம் கடுமையாக பேசினேன்

ஆனால் அதுவே உன்னை இன்னும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று எண்ணவில்லை. பிறகு எல்லாவற்றையும் சரி செய்து, உன்னை பார்க்க ஆவலாக வந்தேன். இங்கே வருவதற்கு இரு நாட்கள் முன் வரை அங்கே என் வீட்டிற்கு கூட போகாமல் ஆபீஸ்லேயே படுத்துச் சாப்பிட்டு வேலை முடித்தேன்

வந்த பின்பு எனக்கு இருந்த அலுப்பில் உன்னிடம் பேசக் கூட முடியாமல் மூன்று நாட்கள் படுத்து விட்டேன் அதன் பின் நடந்ததுதான் தெரியுமே “ என்று முடித்தான்.

“ரதி இதில் நான் எங்கே தப்பு செய்தேன் சொல்லு நான் திருத்திக் கொள்கிறேன் மற்றபடி உன்னை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டவன் கண்ணம்மா எல்லோரையும் விட எனக்கு நீ முக்கியம். இதை நான் உனக்கு எப்படி நிரூபிப்பது சொல்” என்றான் ஆதி

- தொடரும் -
 

Rajam

Well-known member
Member
பிரிவு மனதை எந்த அளவுக்கு பாதித்து விட்டது.
குடும்பத்தில் அநுசரணை வேண்டும்.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom