• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் 22 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer

அத்தியாயம் – 22​


ஆதி தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்த பிரயுவிற்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. ஆதி முழுவதுமாக வேலையை விட்டு விட்டானா ? மேலே என்ன செய்ய போகிறான் என்ற நிறைய கேள்விகள் எழுந்த போதும் அவனின் உறக்கத்தை கலைக்க மனம் வரமால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினாள்.

ஏனோ அவன் இங்கே வந்தது பற்றி தன் மாமியார் மனதில் என்ன ஓடுகிறதோ என்று கவலை வந்தது. அவளுக்கு புரிந்த விஷயம் ஆதிக்கு வீடு விஷயமாக கமிட்மென்ட் இருக்கிறது என்று. ஏதோதோ எண்ணங்கள் மனதில் குழம்ப அவள் உறங்குவதற்கு வெகு நேரமாகிவிட்டது.

மறுநாள் காலை சற்று தாமதமாக எழுந்த ப்ரயு, ஆதியை பார்க்க அவனோ அடித்து போட்டார் போல் உறங்கி கொண்டிருந்தான். இத்தனை அலுப்பா என்று எண்ணியவாறு வழக்கம் போல் ஆபீஸ் கிளம்பினாள்.

அவள் வழக்கம் போல் கிளம்பவும், ஆதியின் அம்மா அவளை பார்த்து,

“ஏன் ப்ரத்யா? ஆதி வந்திருக்கிறானே ? நீ லீவ் போடவில்லையா?” என்று கேட்டார்.

“இல்லை அத்தை. அவர் தீடிர்னு வந்திருக்கார். நான் உடனே லீவ் போட முடியாது. வேலைகள் இருக்கு. அதோட இனிமே அவர் இங்கேதானே இருக்க போறார். அதனால் அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று கூறி விட்டு கிளம்பி விட்டாள்.

வெளியே வந்த பிறகு தான் அவளுக்கு தோன்றியது தான் இன்னும் ட்ரைனிங் போகும் விஷயத்தை யாரிடமும் சொல்ல வில்லை என்று. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

ஆதியோ கண்ணே திறக்க விருப்பம் இல்லாமல் தூங்கி கொண்டிருந்தான். அன்று மதியம் எழுந்தவன் குளித்து சாப்பிட வந்தான்.

அவன் அம்மா அவனுக்கு சாப்பாடு போட, சாப்பிட்டுக் கொண்டே

“ப்ரயு எங்கே அம்மா ?”

“அவள் வேலைக்கு போய்விட்டாளே. நான் கேட்டதற்கு தீடிர்ன்னு லீவ் எடுக்க முடியாது என்று சொன்னாள்”

“அதுவும் சரிதான். அவள் இப்போ லீவ் போட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்” என்று மீண்டும் தூங்க போய் விட்டான்.

ப்ரயு வழக்கம் போல் வீடு திரும்பும் போதும் ஆதி தூங்கிதான் கொண்டிருந்தான். அவள் தன் மாமியாரிடம்,

“என்ன அத்தை ? அவர் எழுந்திருக்கவே இல்லியா?”

“இல்லை. மதியம் எழுந்து சாப்பிட்டு விட்டு தூங்குகிறான். அவ்ளோ என்ன அலுப்போ?”

“ஹ்ம்ம். தெரியவில்லை அத்தை. இப்போ நைட் நாம சாப்பிட்டு அவருக்கு ரூம்க்கு எடுத்துட்டு போய்டறேன். ’ என, அவரும் சரி என்றார்,

அவள் தங்கள் அறைக்கு சென்று அவனுக்கு சாப்பாடு கொடுக்க எழுப்ப, அவனுக்கு உடல் சுட்டது, கிளைமேட் சேஞ்ச் ஒத்துக் கொள்ளாமல் ஜுரம் வந்தது போல் இருந்தது,

மெதுவாக அவனை எழுப்பி இட்லி சாப்பிட வைத்து, மாத்திரை கொடுத்தாள். அவனுக்கு குணமாக இரண்டு நாட்கள் ஆகியது.

ஆதியின் அம்மா தான் அவனை பார்த்துக் கொள்வதாக கூறவே, ப்ரயு ஆபீஸ் சென்று வந்தாள்.

ஆதி வந்திருப்பதை வித்யாவிற்கு சொல்லியிருந்தார் ப்ரயு மாமியார். இருந்தாலும் அவன் உடம்பு சரியில்லாததால், அவள் இப்போ வர வேண்டாம் என்றும், இரண்டு நாட்கள் கழித்தும் வந்து பார்க்க சொன்னார்.

பிரயுவிற்கு அவள் பெற்றோரிடம் ஆதி வந்ததை சொல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அவளுக்கு ட்ரைனிங் முடியும் நேரம் ஒரு டெஸ்ட் இருப்பதால் மிகவும் பிஸியாக இருந்தாள்.

ஆதிக்கு புதன் கிழமை மதியத்திற்கு மேல்தான் கொஞ்சம் கண்ணை திறக்க முடிந்தது, மெதுவாக அவன் குளித்து வர ஜெட்லோக் ஓரளவு சரியான மாதிரி இருந்தது.

அன்று மாலை சற்று இலகுவாக ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான், அவன் அம்மாவும் தன் பேரனை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டே நேரத்தை பார்க்க மணி ஏழரை என்றது,

“என்னம்மா. . ப்ரயு இன்னும் காணோம்?”

“தெரியலையே. லேட் ஆகும் என்றால் போன் செய்து விடுவாளே? எதற்கும் நீ போன் போட்டு பார் “ என்றபடி இரவு உணவு வேலை பார்க்க போனார்.

ஆதி முதலில் பிரயுவின் செல்லிற்கு அடிக்க, அது ரிங் போய்க் கொண்டிருந்தது. அவன் இரண்டு முறை ட்ரை செய்துவிட்டு, ஹாஸ்பிடல் நம்பர் அடிக்க, அங்கே வரவேற்பில் இருந்தவள் புதிதாக வேலைக்கு சேர்ந்தவள். அவள் வேலைக்கு சென்ற நாளில் இருந்து பிரயுவை பார்த்தது இல்லை. அதனால் ஆதி பிரத்யுஷா இருக்கங்களா என்று கேட்கவும் அப்படி யாரும் இங்கு இல்லை என்று சொல்லி விட்டாள்.

ஆதி குழம்பி கொண்டிருக்கும் போதே ப்ரயு வந்து விட, அவளிடம் எதுவும் கேட்காமல் விட்டான். அவள் ரெப்ரெஷ் ஆகி , சமையல் அறைக்குள் சென்று தன் மாமியார்க்கு உதவ சென்றாள்.

ஆதியும் அங்கேயே வர,

“சாரி அத்தை. இன்னிக்கு கொஞ்சம் வேலை இருந்தது. அதான் லேட்.” என்றாள். ஆதியிடம் திரும்பி,

“இப்போ உங்களுக்கு பரவா இல்லியா?”

“ஹ்ம்ம். ஓகே ப்ரயு. “ என்றவன் மேலே கேட்கும் முன்னே,

ஆதியின் அம்மா அவனிடம் “ஆதி. நான் கேக்கணும் நினைச்சேன். எத்தனை நாள் லீவ் போட்ருக்க. ? இங்கே எப்போ ஜாயின் பண்ண போற?”

அதற்குள் டின்னெர் ரெடி ஆகி விட்டதால், சாப்பிட சென்றனர்.

ஆதியும் அவன் அம்மாவும் அமர, ப்ரயு பரிமாற சென்றாள். ஆதி அவளை தடுத்து,

“நீயும் உட்கார் ப்ரயு”

“இல்லை. நீங்க சாப்பிடுங்க . நான் அப்புறம் சாப்பிடுறேன்”

“ஏன். இப்போவே மணி எட்டரை ஆச்சு. மூணு பேரும் சாப்பிடலாம்.”

அவன் ரெண்டு முறை சொல்லவே, அவளும் அமர்ந்தாள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்து, ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, மீண்டும் அவன் அன்னை கேட்கவே,

“இல்லமா. நாளைக்கு ஆபீஸ் போகணும். அடுத்த வாரம் புல்லா லீவ் போட போறேன். ப்ரயு. நீயும் லீவ் சொல்லிடு”

ப்ரயு “லீவ் எதற்கு “ என,

“நாம ரெண்டு பேரும் வெளியூர் போறோம். (தன் அம்மா இருப்பதால் honeymoon என்று சொல்லாமல், வெளியூர் என்றான். ”

“அத்தை என்ன பண்ணுவாங்க? “

“நீ சொல்றதும் சரிதான் ஆதி. நான் கூட ஊர் பக்கம் போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வரேன். நீயும், பிரத்யாவும் போயிட்டு வாங்க. ”

“இல்லபா. நான் லீவ் போட முடியாது . கொஞ்சம் வொர்க் போயிட்டு இருக்கு “

ஆதியின் அம்மா, “ஏன் இப்போதான் தீடிர்னு போட முடியாது. அடுத்த வாரம்னா முன்னாடியே சொல்லி கேட்கலாம் லே. ” என்று கேட்க,

“இல்லை. ஒரு ட்ரைனிங் போயிட்டு இருக்கேன். அது முடியற வரை லீவ் போட முடியாது “

“ஏன்? உங்க சீப் டாக்டர் கிட்ட நானே கேட்கறேன். ப்ரயு” என்றான் ஆதி.

“இல்ல. இப்போ ட்ரைனிங் அங்கே இல்ல. வேற இடத்திலே மூணு மாசமா அங்கே தான் போயிட்டு இருக்கேன்”

ஆதியின் அம்மா திகைத்து “மூணு மாசமாவா? ஏன் யார்கிட்டயும் சொல்லல. .?” என்றார்.

ஆதிக்கு திகைப்பாக இருந்தது. அவள் தன்னிடம் பேசாவிட்டாலும் தன்னை விட்டு விலகுவாள் என்று அவன் எண்ணவில்லை. ஆனால் அவன் அம்மா கேட்டவுடன் ப்ரயு பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருக்கவும், அவளை ஒரு முறை பார்த்தவன்,

“அவ என்கிட்டே சொன்னாம்மா. ஆனால் அது முடிஞ்சிருக்கும்ன்னு நான் நினைச்சுட்டேன்,.”

ஆதியின் அம்மாவிற்கு புரிந்தது. தன் மகன் சமாளிக்கிறான் என்று. அவருக்கு கோபம் வந்தது. ஆனால் சரி அவர்களே பேசிக் கொள்ளட்டும் என்று எண்ணியவராக,

“ஏன்? எங்கிட்ட சொல்ல கூடாதா? இன்னிக்கு மாதிரி லேட் ஆனாலோ, இல்லை வேற எதுவும் பிரச்சினை என்றால் நான் உங்க ஹாஸ்பிடல் போன் பண்ணினால், நமக்குதானே அசிங்கம். “ என்று கண்டித்தவர்,

“சரி ரெண்டு பேரும் போய் படுங்க. “ என்று சென்று விட்டார்.

இருவரும் தங்கள் அறைக்கு வரவும், ப்ரயு பேசாமல் இருக்க, ஆதிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

“ஏன்மா. எங்கிட்ட சொல்லல ?’

அவள் அமைதியாகவே இருக்கவும், “ப்ளீஸ் மனசுலே என்ன நினைக்கிறன்னு சொல்லு. ?’

சற்று யோசித்தவள் “ட்ரைனிங் ஆபீஸ் நேரத்தில் தான். . அதோட நீங்க தீடிர்னு வருவீங்கன்னு நினைக்கல. எனக்கு ஒரு சேஞ்ச் வேணும் நினைச்சேன். அதோட எங்க ஹாஸ்பிடலில் இதுக்கு அப்புறம் பெரிய பொறுப்பு ஒன்னும் தராங்க. “

“நீ போறத பத்தி நான் எதுவும் சொல்லல. ஆனால் என்கிட்ட ஏன் சொல்லலன்னுதான் கேட்கிறேன் “ என்றான்.

“அது ஏன் சொல்லணும்ன்னு தோணிச்சு. ”

‘ஏன்? “

“ஏதோ கோபம் “

“உனக்கு என் மேல் கோபம் வந்து கிட்டத்தட்ட எட்டு மாசத்துக்கு மேலே ஆகுது. நீ இப்போ ட்ரைனிங் மூணு மாசமா தான் போற. இந்த மூணு மாசத்துலே ஒரு நாள் சொல்லி இருக்கலாம்லே. அட்லீஸ்ட். ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாம்லே. “

பிரயுவிற்கு தெரியும் தான். அவள் இது பிரச்சினை ஆக வேண்டும் என்றுதான் சொல்லாமல் விட்டாள்.

அவள் அதற்கும் பதில் சொல்லாமல் இருக்கவே, ஆதியால் ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. சற்று நேரம் ஜன்னல் ஓரம் நின்று விட்டு வந்தவன், பிறகு

“சரி. எப்போ ட்ரைனிங் முடியும். ?’

“அவள் இன்னும் ஒரு பதினைந்து நாள் ஆகும் . ”

“சரி. அதற்கு பிறகு லீவ் போடுகிறாயா?”

அவள் வெறுமனே தலையாட்டவும், அவளை படுக்க சொன்னான்.

“இல்ல. எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. நான் அத ஹால்லே உட்கார்ந்து பார்க்கறேன். நீங்க படுங்க. ”

அவள் செல்லவும், ஆதி வெகு நேரம் ஏன் ப்ரயு இப்படி செய்தாள்? அவள் அப்படிப் பட்டவள் இல்லையே. ? கோபம் வந்தால் கூட இப்படி அலட்சியம் செய்ய மாட்டாளே என்று தோன்றியது.

அதே சமயம் அவளோடு இருந்திருந்தால் தான் நமக்கு தெரியும். .இந்த மூன்று வருடத்தில். முப்பது நாட்கள் கூட நாம் சேர்ந்து இல்லாதப்போ என்ன புரிஞ்சிக்க முடியும் என்று எண்ணினான்.

சரி அவள் ட்ரைனிங் முடியட்டும் பார்க்கலாம் என்று முடிவு செய்தான்.

பிரயுவின் மாமியர்க்கு பிரயுவின் மேல் கோபமே. ஆனால் ஆதிக்காக அதை காட்டாமல் அடக்கி கொண்டார்.

ப்ரயு அதற்கு பின் ஆதியின் அருகில் வருவதில்லை. அவனிடம் பேசுவதும் இல்லை. காலையில் அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டு செல்பவள், மாலையில் அவன் வந்த பின்னே தான் அவள் வருவாள்.

அதோடு இரவு உணவு முடிந்த பின் வேலை என்று சென்று விடுவாள். அவள் எப்போ தூங்குற, எங்கே படுக்கிறா என்று எதுவும் அவனுக்கு தெரியவில்லை.

நாட்கள் நகர , அன்று அவர்களுக்கு மூன்றாவது வருட திருமண நாள். ஆதி இதை மனதில் வைத்துதான், ஹனிமூன் போல் பிளான் செய்திருந்தான். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இத்தனை நாள் எதுவும் பிரயுவிடம் காட்டா விட்டாலும், இன்று அவனின் ஏமாற்றம் அதிகமாக இருந்தது.

முதல் நாள் இரவு அவள் வருவாள் என்று வெகு நேரம் விழித்து இருந்தும் அவள் வராததால், ஹாலில் சென்று பார்த்தான். அங்கேயே அவள் சோபாவில் படுத்து இருக்கவும் , மிகவும் கோபமாக இருந்தது. அவளை எழுப்ப எண்ணி அவள் அருகில் சென்றவன் , அவள் அசந்து தூங்குவதை பார்த்து அப்படியே சென்று விட்டான்.

அன்றைக்கு காலையில் அவள் வழக்கம் போல் எல்லாம் எடுத்து வைத்து விட்டு சென்று இருக்கவும், கோபத்தை கட்டுபடுத்தி அவளை ரூமிற்கு அழைத்தான்.

அவள் வரவும், அவள் முகத்தையே பார்த்தவன், அவளை இழுத்து அணைத்தான். அதோடு நிற்காமல்

“ஹாப்பி வெட்டிங் அனிவேர்சரி டே கண்ணம்மா . “ என்று அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான்.

ப்ரயுவும் அந்த நெருக்கத்தில் தன்னை மறந்தவளாக அவனோடு ஒன்றினாள். அவன் ஊரிலிருந்து வந்த தினத்தில் இருந்து அவனிடம் நெருங்க கூடாது என தனக்குள் வேலியிட்டு கொண்டிருந்தவள், இன்று அவனின் அருகாமையில் தன்னை மறந்தாள்.

அவளின் மனதை படித்த ஆதி,

“ஏன் ப்ரயு. இன்னிக்கு எங்காவது வெளியில் போகலாமா? சீக்கிரம் வருகிறாயா?”

அவளுக்கு சரி என்று சொல்ல ஆசைதான் . ஆனால் அன்று நிஜமாகவே வர லேட் ஆகும். அதோடு அவள் சொல்லாமல் விட்டது. அன்றோடு அவள் ட்ரைனிங் முடிகிறது. அவள் எதிர்பார்த்ததை விட ஐந்து நாட்கள் முன்னதாகவே முடிகிறது.

ஆனால் அதை சொல்லாமல்,

“இல்ல. இன்னிக்கு வழக்கத்தை விட லேட் ஆகும். ” என்று விட்டாள்.

ஆதி கோபத்தில் அவளை விட்டு விலகியபடி, பாத்ரூமிற்கு சென்று விட்டான்.

அவன் அலுவலகம் கிளம்பி வரும் நேரம், பிரயுவின் அம்மா , அப்பாவின் குரல் கேட்க, வரவேற்பறைக்கு வந்து

“வாங்க . அத்தை. மாமா “ என்று வரவேற்றான்,

அவன் வந்ததே தெரியாமல் இருந்தவர்கள் திகைத்து எழுந்து நின்றார்கள்,

“மாப்பிள்ளை. நீங்க எப்போ வந்தீங்க. ? யாரும் சொல்லவே இல்லியே ?”

அவர்களுக்கு மேல் திகைத்து நின்றான் ஆதி. தானே தீடிர் என்று வந்தோம். அவர்களுக்கு எப்படி தெரிந்திருக்கும். தான் தான் அவர்களை பார்க்க சென்றிருக்க வேண்டும். அட்லீஸ்ட் போனிலாவது பேசியிருக்க வேண்டும். தன் தவறு புரிந்தவனாக,

“சாரி. மாமா. அத்தை. நான் வந்து பத்து நாட்கள் ஆகிறது. தீடிர் என்றுதான் வந்தேன். “

“ஏன் ப்ரத்யா? நீயாவது சொல்லியிருக்கலாம் இல்லியா.” என்று அவள் அப்பா கேட்க,

அவள் அம்மாவோ, “எங்கே. எங்களோடு போனில் சாதாரணமாக பேசுவதுதான் கிடையாது. இதைக் கூட சொல்ல முடியாதா? அவ்ளோ என்ன கோபம் உனக்கு ?”

ஆதிக்கு இது முற்றிலும் புதிய செய்தி. அவள் அவனோடு மட்டும் தான் கோபத்தில் இருக்கிறாள் என்று நினைத்து இருந்தவன், அவள் பெற்றோர் மீதும் கோபமா என்று எண்ணி திகைத்தான்.

ப்ரயு பதில் சொல்லும் முன்,

“எதை தான் சொல்கிறாள் உங்கள் பெண்? மூன்று மாதமாக ஆபீஸ் விட்டு வேறு இடத்தில ட்ரைனிங் போகிறாளாம். இதையும் யாரிடமும் சொல்லவில்லை. இன்னும் என்ன என்ன மறைத்து இருக்கிறாளோ. ?” என்று ப்ரயு மாமியார் அவள் பெற்றோரை . கேள்வி கேட்டார். அவருக்கு ப்ரயு ஹாலில் படுப்பது தெரிந்தது. தன் மகனே திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கழித்து வந்து இருக்கிறான். இவள் இப்படி இருக்கிறாளே என்ற கோபம்.

அதற்குள் ஆதி “அம்மா. சும்மா இருங்க. ” என்று அதட்ட,

பிரயுவின் அம்மாவோ அவளை அடித்து விட்டார்.

“ஏன் ப்ரத்யா. இதுதான் நீ எங்களுக்கு வாங்கி கொடுக்கும் பேரா? உனக்கு என்ன அத்தனை துணிச்சல்?” என்றார்.

அவளை அடித்ததை பார்த்து “அத்தை. என்ன இது ? அவளிடம் பொறுமையாக கேட்கமால் ? “ என்று அவளுக்கு சப்போர்ட் செய்து பேசினான்.

அவள் அம்மாவோ “பார்த்துக் கொள். இப்படி பட்ட மனிதரை ஏன் அவமரியாதை செய்கிறாய்?” என்று மீண்டும் வினவ,

ஆதி சப்போர்ட் செய்து பேசும் போது அவனை பார்த்த ப்ரயு அவள் அம்மா அவளிடம் கேள்வி கேட்பதற்கு எந்த பதிலும் சொல்லாமல்,

“எனக்கு வேலைக்கு நேரம் ஆகிறது. இப்போ என்னால் பதில் சொல்ல முடியாது. அப்புறம் நான் பேசுகிறேன்” என்று விட்டு சென்று விட்டாள்.

பிரயுவின் பெற்றோர் இப்போது அதிர்ந்தனர். அவளை அடித்ததற்கு கோபப்படவும் இல்லை. அதற்கு வருத்தமும் படவில்லை. அடிச்சாச்சா. அடுத்து என்ன. என்ற மாதிரி கிளம்பவும், என்ன சொல்ல என்று தெரியவில்லை.

ஆதியும் என்ன இவள் இப்படி இருக்கிறாள். .என்று வேதனை பட்டான். பிறகு அவன் ஹாலில் இருந்தவர்களை பார்த்து

“மாமா. இதை இப்போதைக்கு விட்டு விடுங்கள். அவளை நான் பார்த்துக் கொள்கிறேன். என் மேல் தான் தவறு. நானாவது உங்களிடம் பேசியிருக்க வேண்டும். “

“இல்லை மாப்பிள்ளை. உங்கள் மேல் எதுவும் வருத்தம் இல்லை. ப்ரயு தான். சரி நீங்கள் சொல்வது போல் கொஞ்சம் விட்டு பிடிக்கலாம். நாங்கள் கிளம்புகிறோம். ”

ஆதியும் வேலைக்கு செல்ல, அங்கே அவன் நண்பன் திருமண நாள் வாழ்த்துக்கள் சொன்னவன்,

“ஏண்டா. நீதான் இன்னிலேர்ந்து லீவ் ன்னு சொன்னியே? அப்புறம் வந்துருக்க ?”

“இல்லைடா. அவளுக்கு ஒரு ட்ரைனிங் போயிட்டு இருக்கு . . அது முடிஞ்சதும் லீவ் போடலாம்ன்னு இருக்கேன். ”

ஆனால் ஆதியின் முகம் தெளிவு இல்லாததை கண்ட அவன் நண்பன்,

“என்னடா. வேற ஏதோ பிரச்சினை இருக்கிற மாதிரி இருக்கு? “

ஒரு நிமிடம் யோசித்த ஆதி, பிறகு பிரயுவின் செயலுக்கு காரணம் அவனோடு பேசும்போது எதாவது புரிகிறதா என்று பார்க்கலாம் என்று அவனிடம் ஊரிலிருந்து வந்த பிறகு நடந்ததை சொன்னான்.

அங்கே பிரயுவோ, மனதில் ஆதியை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். தான் செய்தது சரியா. தவறா என்ற யோசனையில் இருந்தாள்,

ஆதி அவன் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது போன் வர, எடுத்து பேசியவன் முகம் மாறியது.

என்ன என்று வினவிய நண்பனிடம் “என் மாமனார் தீடிர் என்று நெஞ்சு வலியில் துடித்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருக்கிறார்களாம். இப்போ பிரயுவை அழைத்துக் கொண்டு போக வேண்டும்” என்று கிளம்பினான்.

பிரயுவின் மொபைல்க்கு அடித்தவன் , நல்ல வேளை அப்போ லஞ்ச் என்பதால் செல் ஆனில் இருக்கவே அட்டெண்டு செய்து பேசினாள் ப்ரயு.

உடனே மேலதிகாரியிடம் சொல்லி விட்டு கிளம்பி வர, ஆதியும் வந்து அவளை அழைத்து சென்றான்.

இவள் வேலை செய்கின்ற ஹாஸ்பிடல் என்பதால், நேராக ஐ.சி.யூவிற்கு அவள் சென்றாள்.

அங்கே பிரயுவின் தங்கைகள் அவர்கள் கணவர்களோடு வந்திருந்தனர்.

அப்போதுதான் சகலைகள் மூவரும் நேரில் சந்திக்கின்றனர் என்பதால் கை குலுக்கி விட்டு, அவர்களிடம் டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்டு கொண்டிருக்க,

பிரயுவின் தங்கைகளோ

“அக்கா. நீ செய்வது உனக்கே நல்ல இருக்கா? உன்னால் தான் அப்பா இப்படி ஆகி விட்டார்’ என்று குறை கூற,

ப்ரயு அவள் அம்மாவை பார்த்தாள். அவள் அம்மா அப்பாவிற்கு தீடிர் என்று நெஞ்சு வலி வர என்ன காரணம் என்று கேட்டவர்களிடம் காலையில் நடந்தை சொல்லியிருக்க, அவர்கள் இருவரும் பிரயுவின் மேல் குற்றம் சுமத்தினர்.

நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு , என்னவோ தவறாக பட்டது.

அதற்குள் அவர்களின் கணவன்மார்கள் தங்கைகள் இருவரையும் கண்டிக்க, பிரயுவோ அதையும் உணர்ச்சியற்ற முகத்தோடு பார்த்து விட்டு, ஐ.சி.யூ விற்குள் சென்று விட்டாள்.

டாக்டர்களிடம் கேட்க, அவர்கள் மைல்ட் அட்டாக் மாதிரி தான். சற்று கவனமாக பார்த்துக் கொள்ள சொன்னார்கள். பிரயுவே டாக்டர்களிடம் பேச, மற்றவர்கள் கேட்டார்கள்,

இரண்டு நாட்கள் ஆப்சர்வேஷனில் இருக்க வேண்டும் என்று விட்டு சென்றார்கள்.

பிரயுவும் அவள் அம்மாவும் மருத்துவமனையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற இருவருக்கும் கைக்குழந்தைகள் இருப்பதால் அவர்களை அனுப்பி வைத்தார்கள். ஆதி இரவு தங்குவதாக கூற, பிரயுவோ அவனை வீட்டில் சென்று ரெஸ்ட் எடுக்க சொன்னாள்.

ஆபத்து கட்டத்தை நீங்கிய பிறகு, எல்லோருமே சற்று இலகுவாக இருக்க. ப்ரயு மட்டும் இறுக்கமாகவே இருந்தாள்.

பிரயுவின் அம்மா கூட , இரவு உறங்கி விட ப்ரயு உறங்க வில்லை. இரண்டு நாட்கள் ஹாஸ்பிடல் வாசம் முடித்து வீட்டில் கொண்டு விட பிரயுவும் வரவே, எல்லோரும் வியந்தனர்.

ஆதி அவர்கள் வியப்பிற்கு காரணம் கேட்க, கிட்டத்தட்ட ப்ரயு அவள் பெற்றோர் வீட்டிற்கு ஏழெட்டு மாதங்களாக வருவதில்லை என , ஆதிக்கு இன்னும் திகைப்பாக இருந்தது.

ஆதிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அவனோடு பேசுவதை நிறுத்தியும் அத்தனை நாட்கள் தான் ஆகியது.

என்ன ஆயிற்று அவளுக்கு அந்த நேரத்தில்? இதை அவளிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியபடி இருக்க. பிரயுவோ அவள் அப்பா வீட்டில் வைத்து,

“ஆதிப்பா. நான் ஒரு நாலு நாள் இங்கே இருக்கவா ?” என்று வினவ,

ஆதிக்கோ அவன் காதுகளை நம்ப முடியவில்லை. அவள் அப்படி கூப்பிட்டு வருடம் ஆகப் போகிறது என்று எண்ணியவனாக,

“சரி ரதிம்மா “ என்றான்.

நாலு நாட்கள் கழித்து , அவளிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று ஆதி எண்ணியிருக்க, அதற்குள் ப்ரயு மயங்கி விழுந்து கண் திறக்காமல் ஹாஸ்பிடலில் இருந்தாள்.

-தொடரும் -
 
Last edited:

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom