• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் -17 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – 17

ஆதி தன் வேதனையை மறைத்துக் கொண்டு சாதாரணமாக பேசி கொண்டிருந்தான். இந்த நிலையில் ஆதி பிரயுவின் முதல் திருமண நாள் வந்தது.

ஏற்கனவே செய்தது போல் பிரயுவிற்கு தன் பரிசை அனுப்பி வைத்தான். ப்ரயு வருத்தத்தில் இருந்தாலும் அதை பெரிதாக்க விரும்பாமல், அவன் அனுப்பிய பரிசை ஏற்றுக் கொண்டு அவனிடம் நன்றாக இருப்பதாக கூறினாள்.

இருவருக்குமே காதலர் தினத்தன்று இருந்த உற்சாகம் இல்லை. ஆதி அந்த உற்சாகம் பிரயுவிடம் தோன்றுமோ என்றும், பிரயுவோ அந்த நாள் நினைவில் தனக்கு அப்படி ஒரு சந்தோஷம் இனி கிடைக்குமா என்ற கேள்வியோடும் அந்த நாளை கழித்தனர்.

பிரயுவின் பெற்றோர் வாழ்த்து தெரிவித்து போன் செய்தனர். பிரயுவின் மாமியாரும் பட்டும் படாமல் வாழ்த்து தெரிவித்தார். வித்யாவும் பிரயுவை வாழ்த்தினாள்.

வித்யா குழந்தை பிறந்து நாற்பது நாட்கள் முடிந்திருந்தது. வித்யாவின் கணவர் இப்போதெல்லாம் மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்திருந்தார். முன்பும் வருவார் என்றாலும், தங்க மாட்டார்.

இப்போ குழந்தை கொஞ்சம் விளையாட ஆரம்பிக்கவும், இரவினில் தங்க ஆரம்பித்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு வருபவர் , திங்கள் கிழமை ஆபீஸ்க்கு நேராக இங்கிருந்து சென்று விடுவார். மீண்டும் புதன் கிழமை தங்கி விட்டு செல்வார்.

ஆதியின் வீடு டபுள் பெட்ரூம் பிளாட்தான். ஒன்றில் பிரயுவும், மற்றொன்றில் அவள் மாமியாரும் இருப்பார். இப்போ வித்யா இங்கே வந்த பிறகு , வித்யாவிற்கு அவள் மாமியார் அறையை கொடுத்திருந்தனர், அவள் மாமியார் உடல் நிலை காரணமாக இவர்கள் அறையில் படுத்திருப்பார்.

வித்யா கணவர் வர ஆரம்பித்தபின் அவளுக்கு இரவுகளில் முழிக்கும் வேலை இல்லை. ஆனால் அதற்கு பதில் வீட்டு மாப்பிள்ளை என்பதால் அவருக்கு உணவு வகைகள் சிறப்பாக செய்ய வேண்டியிருந்தது. அது கூட அவளுக்கு பிரச்சினை இல்லை.

அவள் நடமாட்டம் சுருக்கி கொள்ள வேண்டியிருந்தது. திருமணம் ஆகி வந்ததிலிருந்தே ஆதியும் வெளிநாடு சென்ற பின் வீட்டில் பெண்கள் தான் என்பதால் , நைட்டியில் இருப்பது பழக்கமே. அதே போல் காலையில் இவள் வேலை எல்லாம் முடித்து விட்டு தான் குளிக்க போவாள்

ஆனால் வித்யா கணவர் இங்கிருப்பதால் பிரயுவிற்கு இதில் சில சங்கடங்கள் ஏற்பட்டது. ஆதி இருந்திருந்தால் வேறு மாதிரி.

அதே சமயம் என்னதான் எதையும் கண்டுக்காமல் இருந்தாலும், வித்யாவின் கணவர், குழந்தையை கொஞ்சும் சாக்கில் வித்யாவை சீண்டுவது, இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது இதையெல்லாம் பார்த்தால் அவளின் மனம் ஏங்கும்.

அதனால் அவள் தங்கள் அறையை விட்டு வெளியே வருவதே இல்லை.

இவர்கள் திருமண நாள் முடிந்து ஒருவாரத்தில் ப்ரியாவின் திருமணம் வந்தது. சனிக்கிழமை வரவேற்பு சண்டே திருமணம். வித்யாவின் கணவர் இருப்பார் என்பதால் பிரயுவை முதல் நாளே அனுப்பி வைத்தார் அவள் மாமியார்.

பிரயுவின் பெற்றோர் முதல் நாள் வரவேற்பில் கலந்து கொண்டார்கள். பிரயுவின் தங்கைகள் இருவரும் அவர்கள் சொந்தத்தில் கல்யாணம் என்று சென்று விட்டார்கள்.

ப்ரயு ப்ரியாவின் கல்யாணத்தில் ரொம்ப நாள் கழித்து உற்சாகமாக இருந்தாள். அவள் வேலை பார்த்த ஹாஸ்பிடலில் இருந்து வருபவர்களை கவனித்து அனுப்பும் பொறுப்பை அவள் ஏற்றிருந்ததால், எல்லோரையும் வரவேற்று, சாப்பிட வைத்து அனுப்பிக் கொண்டிருந்தாள்.

ப்ரியாவின் கணவர் பிரபாகரனின் பிரெண்ட்ஸ் எல்லோரும் ஒரே கலாட்டாவாக பேசிக் கொண்டிருந்தனர். ஒரே ஆட்டமும் , பாட்டமும் தான். இரவு இவள் அங்கேயே தங்கி விட்டதால், அவர்களின் கலாட்டாவில் அவளும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் ப்ரியாவை டான்ஸ் ஆட சொல்ல, அவள் தனியாக ஆடாமால் பிரயுவையும் இழுத்துக் கொண்டு ஆட ஆரம்பித்தாள். முதலில் தயங்கிய ப்ரயு, பின் அவளும் நன்றாக என்ஜாய் செய்ய ஆரம்பித்தாள். ப்ரயு பரதநாட்டியம் கற்றவள் என்பதால் அவளின் நடனத்தில் இருந்த நளினமும், பாவமும் சேர்ந்து எல்லோரயும் கட்டி போட்டது.

பிறகு எல்லோரும் அவளை சோலோ டான்ஸ் ஆட சொல்ல,

“கண்ணா வருவாயா. மீரா கேட்கிறாள். “

பாட்டிற்கு ஆடினாள்.

ரொம்ப நாள் கழித்து ஆடியதால் உடலில் கொஞ்சம் அசதி இருந்தாலும், மனம் மிகவும் உற்சாகமாக இருந்தது.

மறுநாள் கல்யாணத்திலும் உற்சாகமாக கலந்து கொண்டாள். திருமணம் வரை ப்ரியாவோடு இருந்தவள், அதன் பின் அவளை அவள் கணவனோடு விட்டு விட்டு, மற்ற வேலைகளில் ஈடுபட்டாள்.

அன்று மாலை தங்கள் வீட்டிற்கு வந்தவள் முகத்தில் ரொம்ப நாள் கழித்து மகிழ்ச்சி தெரிந்தது.

அன்று அவள் வரும் நேரம் தெரியாததால் , சீக்கிரமே அவள் மாமியார் வேலைகளை முடித்திருந்ததார். அதனால் அவளும் சற்று இலகுவாக இருந்தாள்

அன்று ஞாயிறு விடுமுறை என்பதால், அவளே ஆதியை சாட்டில் அழைத்தாள்.

ஆதிக்கு அவள் கூப்பிட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நடுவில் ஏற்பட்ட சில மன கசப்புகளுக்கு பிறகு, ப்ரயு ஆதியை கூபிடுவதே இல்லை. இன்று அவளே கூப்பிடவும் , உடனே வெப் காம் முன்னால் வந்தவன், பிரயுவின் மலர்ந்த முகத்தை பார்த்து ரசித்தான்.

“ஹலோ. என்ன . ஸ்க்ரீனே பார்த்துட்டு இருக்கீங்க. ?” என்று கேட்கவும்,

“ஹ்ம்ம் என் ரதி குட்டி ரொம்ப ஹாப்பியா இருக்கிற மாதிரி இருக்கேன்னு ரசிச்சுட்டு இருக்கேன். உங்க முக மலர்ச்சிக்கு காரணம் என்னவோ ?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இன்னிக்கு பிரியா கல்யாணம் போயிட்டு வந்தேன்லே. அங்கே ரொம்ப நாள் கழித்து பிரெண்ட்ஸ் எல்லாம் பார்த்த சந்தோஷம் தான்.”

“ஒ. கல்யாணம் நல்ல நடந்ததா?”

“ஹ்ம்ம். ” என்றவள்,

“அப்புறம் தப்பா எடுத்துக்காதீங்க. நான் அங்கே எல்லாரும் கம்பல் பண்ணதாலே டான்ஸ் பண்ணேன் “

“ஹே. இதுலே என்ன இருக்கு . நீயும் எங்கிட்ட சொல்லிருக்க. உனக்கு டான்ஸ் தெரியும்ன்னு. நாந்தான் பார்க்க முடியாமல் இருக்கேன். அத வீடியோ எடுத்து இருக்காங்களா?”

“ஆமாம். “

“எனக்கு நீ அனுப்பி விடு. “ என்றவன் , மேலும் கொஞ்ச நேரம் அவளோடு அவன் ஆபீஸ் கதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தான்.

அப்போ “ப்ரயு, நான் இங்கே கொஞ்சம் கொஞ்சம் ஸெல்ப் குக்கிங் செய்யறேன். நேத்து என் பிரெண்ட்ஸ் வீட்லே பேட்லாக் பார்ட்டி பண்ணோம் . நான் நம்ம வீட்லேர்ந்து பருப்பு உருண்டை குழம்பும், பால் பாயசமும் எடுத்துட்டு வரேன் சொல்லிட்டேன். எப்படியோ நெட்லே நோண்டி . ரெண்டையும் பண்ணி எடுத்துட்டு போயிட்டேன். அங்க போய் பார்த்தா பருப்பு உருண்டை எல்லாம் கரைஞ்சு குழம்பே இல்லாம. அத கூட்டு மாதிரி பிசஞ்சு சாபிட்டோம். சரி பாயாசமாவது நல்ல வந்துருக்கும் நு பார்த்தா அது ஒரு மாதிரி வாசனை அடிச்சது . என்னனு பார்த்தா மில்க் மைட்க்கு பதிலா, பட்டர் போட்டு பண்ணிருக்கேன். “ என்று கூற

“ஆதிப்பா. இப்படி எல்லாமா பண்ணுவீங்க. “ என்று ப்ரயு குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள், அவள் சிரிப்பதை ஆசையாய் பார்த்திருந்தான் ஆதி.

ஆதியின் கண்களில் கண்ணீர் வந்தது. கல்யாணமான புதிதில் அவள் கலகலன்னு சிரிச்சது . அதுக்கு பிறகு . இப்போதான் அவள் சிரித்து பார்க்கிறான். மேலும் அவளின் ஆதிப்பா அவனை நெகிழ்த்தியது.

மேலும் கொஞ்ச நேரம் மற்றவர்களின் சொதப்பல்களை கூறி, அவளை சிரிக்க வைத்த பின் தான் . இருவரும் பேசி முடித்து வைத்தனர்.

இருவருக்குமே அன்று இரவு நிம்மதியான உறக்கம் . ப்ரயு சிரிப்பதை அவள் மாமியார் பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்சம் நிம்மதியாக கூட இருந்தது. அவர் சுயநலவாதியே தவிர, கெட்டவர் இல்லை. பிறரின் மகிழ்ச்சி காண பொறுக்காதவரும் இல்லை. என்ன தன் பெண்ணின் மேல் பாசம் அதிகம்.

இவர்கள் திருமணம் முடிந்து, ஆதி கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்னாடி சென்ற வருட பர்த்டே வந்தது.

அன்றைக்கு பார்த்து ஆதிக்கு விசா இண்டர்வியு வர, அவன் காலையில் சென்றவன் மாலையில் தான் வந்தான். ப்ரயு யாரிடமும் சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் எல்லோரும் நேரில் வந்து வாழ்த்தவே , அவனுக்கு தெரிந்தது. பிறகு எல்லோரையும் ஹோட்டல் அழைத்து சென்றவன், பிரயுவை மட்டும் தனியாக பைக்கில் கடற்கரைக்கு அழைத்து சென்றான்.

ஒருமணி நேரம் இருவரும் அங்கே செலவு செய்து விட்டு வந்தனர். அவளுக்கு எதாவது வாங்கி தருகிறேன் என்றதற்கு, கல்யாணத்திற்கு எல்லாம் வாங்கி இருப்பதால் ஒன்றும் வேண்டாம் என்று விட்டாள்.

இந்த வருட பிரயுவின் பர்த்டேவிற்கு ஆதி அழகான நெக்லஸ் ஒன்று அனுப்பி இருந்தான். அவளும் அன்று இரவு பேசும்போது அதை அணிந்து காண்பித்தாள்.

ப்ரியாவிடம் அவள் கேட்டபடி. பிரயுவின் டான்ஸ் வீடியோவை அனுப்பி இருந்தாள். அதை ஆதிக்கு மெயில் அனுப்பி இருந்தாள் ப்ரயு,

அவளின் பாவமும், ஏக்கமும் பார்த்த ஆதியின் மனதில் அவளோடு எப்போது சேர்ந்து வாழ்வோம் என்ற ஏக்கம் தோன்றியது. தினமும் இரவில் அந்த வீடியோ பார்த்துவிட்டுத்தான் அவன் உறங்குவதே.

நாட்கள் பிரச்சினை இல்லாமல் நகர்ந்தது. வித்யா குழந்தைக்கு மூன்று மாதம் முடியும் போது அவள் வீட்டில் கொண்டு விட்டனர். செய்யும் சீர் முறையும் சிறப்பாகவே இருக்கவே அவள் மாமியார் ஒன்றும் சொல்லவில்லை.

இப்போது பிரயுவின் தங்கைகள் இருவரும் உண்டாயிருக்க, ப்ரயு சென்று பார்த்து வந்தாள்.

ப்ரயு பழைய படி ஞாயிறு அவள் பெற்றோரை பார்த்து வந்தாள். பவித்ரா, தாரிணி இருவரும் மசக்கைக்காக தாய் வீடு வந்திருக்க, பிரயுவும் மகிழ்ச்சியோடு அவள் செல்லும் நேரங்களில் கழித்தாள்.

அடுத்த வாரம் அவள் செல்லும் போது அவள் தங்கைகளின் கணவன்மார்கள் வந்திருக்க, அவர்கள் இருவரும் அவர்களோடு இருக்க வேண்டியதாயிற்று. பிரயுவின் பெற்றோரும் அவர்கள் மாப்பிள்ளைகளை கவனிக்க வேண்டியிருக்க, ப்ரயு அங்கே தனிமையாக உணர ஆரம்பித்தாள்.

அவளுக்கு எல்லாம் புரிந்தாலும், அந்த தனிமை உணர்வை அகற்ற முடியவில்லை. அதிலிருந்து அவள் தங்கள் பெறோர் வீட்டிற்கும் செல்வதில்லை.

அவர்கள் மசக்கை முடிந்து சென்றிருந்தாலும் கூட, இவள் வரும் ஞாயிறு அன்று தான் அவர்களும் வருவார்கள். அவள் மனதிற்குள் ஒரு பயம், தன்னுடைய எண்ணங்கள் அவர்களை தாக்கிவிடுமோ என்று. அதனால் இவள் அங்கே செல்வதை தவிர்க்க ஆரம்பித்து விட்டாள்.

இதை அவள் யாரிடமும் சொல்ல வில்லை. எப்போதும் போல் மனதில் வைத்து வேதனை பட்டாள். ஏனோ ஆதிக்கும் இப்போது எல்லாம் பிரயுவின் முகத்தை பார்த்து ஏதோ தோன்றியது. அவனுக்கு என்ன என்று புரியவில்லை. அவன் கேட்டதற்கும் மறுத்து விட்டாள்.

மேலும் நான்கு மாதங்கள் கடந்திருக்க, வித்யாவின் குழந்தைக்கும் கிட்ட தட்ட ஏழு மாதங்கள் முடிந்திருக்க, குழந்தைக்கு காது குத்தும் ஃபங்சன் வைக்க விரும்பினர்.

ஒற்றைப்படை மாசமாக இருக்க வேண்டும் என்பதால் அந்த மாதம் வைக்கலாமா என்று ஆதியின் வசதியை கேட்க, அவனும் அந்த மாத கடைசியில் வருவதாக தெரிவித்து இருந்தான்.

வெளிநாட்டில் இருந்து வருவது என்றால் சும்மாவா ? நெருங்கிய உறவினருக்கு அங்கே உள்ள நல்ல பொருட்களாக வாங்க வேண்டும். பிரெண்ட்ஸ் மற்றும் கொஞ்சம் வேண்டியவருக்கு எதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும். அக்கம் பக்கம் உள்ளவருக்கு சாக்லேட் ஆவது வாங்க வேண்டும்.

அவன் ஒருபக்கம் ஷாப்பிங் என்றும், இன்னொரு பக்கம் அவன் வேலை பார்க்கும் நிறுவனமோ, பதினைந்து நாள் லீவ் கொடுத்து விட்டு, அங்கேயே மூன்று நாட்கள் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு தேவையானதை தயார் செய்து வைக்க வேண்டியிருந்தது.

ஆதியின் மனதில் இந்த முறை கட்டாயம் பிரயுவோடு தனியாக எங்காவது சென்று வர வேண்டும் என்று இங்கிருந்தே மூனார் செல்ல டிக்கெட் புக் செய்திருந்தான். சுற்றி பார்க்க வேண்டும் என்பதை விட, ப்ரயு நினைச்ச நேரம் தூங்கி, எழ, தடையில்லாமல் தன்னோடு செலவு செய்ய என்று யோசித்து ஏற்பாடு செய்திருந்தான்.

இங்கே பிரயுவோ விஷேசத்திற்கு தேவையானதை வாங்கி வைப்பது, ஆதிக்கு பிடித்ததை செய்து கொடுக்க வேண்டிய சாமான்களை வாங்கி வைப்பது என்று பிஸி ஆக இருந்தாள்.

இந்த முறை ஆதி கட்டாயம் வருவான் என்று அவளுக்கு தோன்றியது. அவன் மேல் அவளுக்கு கோபம் இல்லை என்பதால் அவன் வரவை ஆவலோடு எதிர் பார்த்து இருந்தாள்.

இவர்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்க, செவ்வாய் கிழமை நாள் பார்த்து இருக்க, ஆதி ஞாயிறு வருவதாக இருந்தது.

ஞாயிறு ரெஸ்ட் எடுத்து விட்டு, திங்கள் மதியம் வித்யா கணவர் சொந்த ஊருக்கு செல்ல வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஆனால் ஆதி வரும் ஃப்ளைட் 5 மணி நேரம் தாமதமாக வர, அவன் சென்னை ஏர்போர்ட் வரவே திங்கள் விடிகாலை 6 மணி ஆனது. பிறகு இமிகரேஷன் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வர ஒன்பது மணி ஆனது.

வந்தவுடன் அவன் பிரயுவை தேட, வீட்டிலோ கிட்ட தட்ட வித்யா மாமியார், அவர்கள் உறவுக்காரர்கள் எல்லாம் சேர்த்து பதினைந்து பேர் இருந்தனர்.

எல்லோரும் இவர்கள் வீட்டில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படுவதாக ஏற்பாடு. ஆதி நொந்து போய் பிரயுவை பார்த்தான்.

-தொடரும் -
 

kothaisuresh

Well-known member
Member
கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனால் அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடித்தாம்
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom