• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அசரீரி

Nithya Mariappan

✍️
Writer
அசரீரி

மண்மகளின் மேனியில் வருணன் இட்ட முத்தங்களாய் மழையின் ஈரம் இன்னும் காயாத காலைப்பொழுது. காகங்களும் குருவிகளும் தமது உணவிற்கான தேடலை ஆரம்பித்து வானில் கூட்டமாய் சிறகடித்துச் செல்ல மழையின் கைங்கரியத்தால் வந்த வெள்ளத்தில் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது நதியூரின் கால்வாய்.

அதன் கரையில் இருந்த தங்க அரளிமரத்தின் கிளையில் நின்று பாய்ந்தோடும் நீரில் துள்ளும் மீன்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது மீன்கொத்தி ஒன்று. அந்தக் கால்வாய் கரையில் என்றோ கட்டப்பட்டிருந்த சிமெண்ட் படிக்கட்டில் வந்தமர்ந்தான் மாசானம்.

பழுப்பேறிய வேஷ்டி, எண்ணெய் பசை என்றால் என்ன என கேட்கும் சிகை, மழிக்காத தாடி, தோளில் இதோ கிழியப்போகிறேன் என அபாய அறிவிப்பு கொடுக்கும் நிலையில் தொங்கும் துண்டு இது தான் மாசானத்தின் தோற்றம்! வயது என்னவோ நடுத்தரம் தான்!

அவனுக்கென்று சொல்லிக்கொள்ளுமளவுக்கு உறவுகள் யாருமில்லை. அவனது மனைவி கூட சில வருடங்களுக்கு முன்னர் அவனை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக ஊருக்குள் ஒரு பேச்சு உலவுகிறது. ஆனால் உற்றார் உறவினர் இல்லாத இந்நிலை மாசானத்தின் உற்சாகத்தையோ கலகலப்பையோ குறைத்ததே இல்லை.

ஊர் பெருந்தனக்காரரான சுப்பையாவின் நிலத்தில் களை பிடுங்குவது, வயலைக் காவல் காப்பது, அவருடைய கால்நடைகளை மேய்ப்பது என அவனது நாட்கள் உற்சாகமாகவே கழிந்தது. இதற்கான கூலியாக அவன் வாங்கும் சம்பளத்தில் அவனது ஜீவனம் நடந்தது.

அவனுக்கென இருந்தது ஒரே ஒரு உறவு தான்! அது தான் லெட்சுமி. உறவில்லை என்று சொல்லிவிட்டு இப்போது உறவு என்கிறாயே என நீங்கள் பேசுவது புரிகிறது. அந்த லெட்சுமியை மானிடகுலம் உறவாக ஏற்காது. ஏனெனில் அது ஒரு பசு.

மாசானம் தனது அன்பு முழுவதையும் கொட்டி வளர்த்த பசு அது. லெட்சுமி என்று அவன் அழைத்தால் ‘ம்மா’ என்ற அதன் குரல் எதிரொலியாய் ஒலிக்கும். அவன் குளிப்பாட்டிவிடும் போது நாவால் அவனது கரத்தை நக்கி கொடுக்கும் லெட்சுமியின் பாசம் மட்டுமே இந்த ஜென்மத்தில் தனக்குப் போதுமென நாட்களைக் கழித்து வந்தவன் மாசானம்!

அதன் மணியோசை கிணுகிணுப்பது தான் அவனது காலை நேர அலாரமே! லெட்சுமி சினையாய் இருந்ததால் மேய்ச்சலுக்காக தூரமாக ஓட்டிச்செல்லவில்லை அவன்.

இதோ இப்போது கூட இந்தக் கால்வாய் கரையின் ஓரத்தில் நின்ற பசும்புல்லை லெட்சுமி மேய்வது போன்ற பிரமை மாசானத்துக்கு.

அப்போது அவனருகே வந்து யாரோ அமர விரக்தியாய் திரும்பினான் அவன். அவனருகே அமர்ந்தவர் சுப்பையா. கடனே என அமர்ந்திருந்தவனின் தோளில் கைவைத்தவர்

“விடுல... நீ இப்பிடி உக்காந்து வெறிச்சு பாக்குறதால போன லெச்சுமி திரும்பி வரப்போகுதா? போய் ஆக வேண்டிய சோலிய பாருல” என்று கூற மாசானத்தின் வாயிலிருந்து ஒரு முத்து கூட உதிரவில்லை.

இதுவே சாதாரண நாளாய் இருந்தால் இதே மாசானம் அசட்டுச்சிரிப்போடு தலையைச் சொறிந்துகொண்டு எழுந்து வேலையைப் பார்க்கச் சென்றிருப்பான். ஆனால் இன்று அவன் அப்படி செய்யவில்லை.

காரணம் அவனது லெட்சுமி அவனுடன் இல்லை. இதே கால்வாய் கரையில் புல் மேய கட்டிப்போட்டிருந்த போது நாகம் தீண்டி லெட்சுமி மறைந்து இன்றோடு மூன்று நாட்கள் கழிந்திருந்தது. இறந்த இடத்திலேயே லெட்சுமியைக் கண்ணீரும் கம்பலையுமாகப் புதைத்திருந்தான் மாசானம்.

மூன்று நாட்களுக்கு முன்னர் அவன் கதறியழுதது சுப்பையாவின் கண் முன்னே வந்தது. அவனுடன் அன்று இருந்தவர் சுப்பையா தான்.

“லெச்சுமி என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டியே... இனிமே எனக்குனு யாரு இருக்கா?”

அவன் கதறியழுத போது அவனை யாராலும் தேற்ற முடியவில்லை. சுப்பையா அவனைத் தேற்ற முயன்று தோற்றுப்போனார்.

“ஏல அதுக்கு நேரம் வந்துச்சு, எமன் அழைச்சதும் போயிடுச்சு... அதுக்குனு ஏன் அழுது புலம்புற கோட்டிக்காரப்பயலே?” அதட்டியாவது அவனைச் சமாதானம் செய்ய முயன்றார் சுப்பையா.

“லெச்சுமி என் ஆத்தா மாதிரிய்யா.. எங்க ஆத்தா விட்டுட்டுப் போன மாதிரியே லெச்சுமியும் போயிட்டா... நானும் உன் கூட வாரேன் லெச்சுமி” என்று தலையில் அடித்து அழுதான் அவன்.

சுப்பையாவுக்கு நெஞ்சம் கனத்துப் போனது. ஊர் இளவட்டங்களோ “மாசானண்ணே! அழாத... வந்து ஒரு கட்டிங்கை போடு... லெச்சுமி போன சோகம் ஓடிப்போயிடும்வே” என்று தங்கள் பாணியில் அவனது கவனத்தைத் திருப்ப முயல அனைவரின் முயற்சியும் தோல்வி தான்!

சிறிது நேரத்தில் மழை வேறு பெய்ய ஆரம்பிக்க அனைவரும் கலைந்து போக சுப்பையாவும் பொறுத்துப் பார்த்துவிட்டுக் கிளம்பினார். மூன்று நாட்கள் மழை நதியூரை மூழ்கடிக்குமளவுக்கு தாரை தாரையாக ஊற்றியது.

அதில் மாசானத்தை பற்றி யோசிக்க மக்களுக்கு நேரமேது. அவனும் மழையில் நனைந்தபடி அவனது மண்வீட்டை அடைந்தவன் அதன் ஒழுகாத மூலையில் முடங்கினான். பின் பக்கமிருந்த தொழுவத்திலிருந்து சாணத்தின் வாடை மழை வாசத்துடன் கலந்து வீட்டிற்குள் வந்தது.

அழுது புலம்பும் திராணி இல்லாமல் வீட்டிற்குள் முடங்கிப்போனவன் மழை நின்ற பின்னர் இன்று தான் கால்வாய் கரைக்கு வந்தான். எதிரில் தலையை ஆட்டியபடி லெட்சுமி புல் மேய்வது போன்ற பிரமை அவனுக்கு.

“ம்மா!” என்ற அழைப்போடு “டிங் டிங் டிங்” என்ற மணிச்சத்தம் காதில் ஒலித்தது மாசானத்துக்கு.

அருகில் அமர்ந்திருந்த சுப்பையா “இன்னைக்கு பாவநாசம் அணைய திறந்துவிடப்போறானுவ... நீ என்னல இங்க உக்காந்துருக்க? தண்ணி ஊருக்குல வந்துடுமோனு சனம் எல்லாம் ராத்திரி முழுக்க பொட்டு தூக்கம் இல்லாம தவிக்குது... நீ கொஞ்சம் கூட பயம் இல்லாம இங்கன உக்காந்துருக்க... இப்பயே தண்ணி மட்டம் ஏறுது... ஒழுங்கா என் கூட வா” என்று அவனை அதட்ட

“சுப்பையா ஐயா உங்க வயக்காட்டுக்குள்ள மணியோட மாடு வந்து மேஞ்சிட்டிருக்கு” என்று யாரோ உச்சஸ்தாயியில் கத்தவும்

“நீ இருந்தா இப்பிடி கண்ட பய மாடுலாம் என் வயக்காட்டுக்குள்ள வந்திருக்குமால?” என்று வருத்தபட்டபடி எழுந்த சுப்பையா தனது கனத்த சரீரத்தை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு அவரது வயலை நோக்கி சென்றார்.

மாசானமோ இன்னும் பிரமை பிடித்த நிலையிலிருந்து அகலவில்லை. இன்னும் சில நாட்களில் கன்று ஈனும் நிலையில் புல்லை மேய்ந்தபடி அவனை நோக்கி ஒலிக்கும் லெட்சுமியின் “ம்மா!” என்ற குரலே அசரீரியாய் ஒலித்தது.

மாசானம் மெதுவாய் எதிர்க்கரையை ஏறிட்டான். அங்கே அவனது லெட்சுமி நின்று கொண்டிருந்தது.

“லெச்சுமி” கண்களில் நீர் வழிய மாசானம் அழைக்கவும் தலையை ஆட்டி கழுத்து மணியை இசைக்கச் செய்தது லெட்சுமி.

மாசானம் படிக்கட்டில் எழுந்து நின்றவன் கால்வாயில் வெள்ளமாய் பாய்ந்தோடும் தாமிரபரணியைப் பற்றி கவலை கொள்ளாது கால்வாய்க்குள் இறங்கினான்.

“நானும் வர்றேன் லெச்சுமி” என்று கண்கள் பளபளக்க அவன் நீரில் நடக்க நீரினளவு மார்பு வரை இருந்து பின்னர் நாடியைத் தொட்டு அதன் பின்னர் நாசியை மூடியது. அது அவனது கண்களை மூடும் வரை எதிர்க்கரையில் நின்ற லெட்சுமியின் உருவம் மறையவில்லை.

“ம்ம்மா!” என்ற அசரீரி மாசானத்தின் செவிகளில் ஒலிக்க மெதுமெதுவாய் நீருக்கும் அமிழத் துவங்கினான் அவன். மூக்கில் நுழைந்த நீர் சுவாசக்குழாய்களின் வழியே நுரையீரலை அடைந்து ஆக்சிஜனுக்காக அவனது சுவாசமண்டலம் தவித்த நிலையிலும் லெட்சுமியின் குரலே அசரீரியாய் கேட்டது.

அதே நேரம் வயலில் இருந்து திரும்பிய சுப்பையா கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் நடுவே ஒரு தலை மூழ்குவதையும் மேலே தண்ணீர்க்குமிழ்கள் கொப்பளிப்பதையும் பார்த்தவர் படிக்கட்டில் கிடந்த மாசானத்தின் துண்டை பார்த்ததும் “ஏலேய் மாசானம்” என்று கதறிய சத்தம் அந்தப் பகுதியில் எதிரொலித்தது.

ஆனால் அந்த அழைப்புக்குரிய மாசானமோ அவனது லெட்சுமியிடம் போய் சேர்ந்துவிட்டான். இனி அவனுக்கு அசரீரியெல்லாம் தேவையில்லை!

***********

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😊

இது பொதுவா கிராமங்கள்ல நடக்குற நிகழ்வு தான்... மேய்ச்சலுக்கு போற பசுக்களை நாகங்கள் தீண்டுறது காலங்காலமா நடந்துட்டு இருக்கு... போன வாரம் எங்க பக்கத்து வீட்டு பசுமாடு செத்து போனப்ப அதை வளர்த்தவரு அழுதது இப்போவும் கண்ணுக்குள்ள நிக்குது... பொதுவா பசுவை வளக்குறவங்க அதை விலங்கா நினைக்கமாட்டாங்க... தன்னோட உறவா நினைச்சு தான் வளப்பாங்க... அதை இழந்த மனுசனோட வலிய நேர்ல பாத்தது மனசுல உறுத்திட்டே இருந்துச்சு.. இன்னைக்கு குட்டிக்கதையா வெளிய வந்துடுச்சு...

நன்றி🙏

நித்யா மாரியப்பன்🦋
 

Nithya Mariappan

✍️
Writer
wow super sis. naangalum siru vayathil aadu maadu ellaam valarththom :)
எங்கப்பா பசுமாடு நிறைய வளத்ததா சொல்லுவார் சிஸ்... எப்பவோ பஞ்சம் வந்துச்சாம், அதுல அந்த மாடுகளை பூரா வித்துட்டதா சொல்லுவாரு... அப்போ அவரு கண்ணு கலங்கிடும்... நம்ம உணர்வுகளோட கலந்து போயிடுதுல்ல
 

Rajam

Well-known member
Member
அந்த பசுவின் உயிரைத் தேடி
அவன் உயிரும் பறந்து விட்டது.
அன்பிற்கோர் எல்லையில்லை.
 

Srilaxmipriya

New member
Member
என் அப்பா நினைவு தான் வருது எனக்கு.. அவரும் ஆசையா மாடு நாய் லாம் வளர்த்தார்... அதுக்கு பிரிஞ்சப்போ ரொம்ப கஷ்டப்பட்டார்..
 

Nithya Mariappan

✍️
Writer
என் அப்பா நினைவு தான் வருது எனக்கு.. அவரும் ஆசையா மாடு நாய் லாம் வளர்த்தார்... அதுக்கு பிரிஞ்சப்போ ரொம்ப கஷ்டப்பட்டார்..
உண்மைக்கும் வருத்தமா இருக்கும் சிஸ்... நம்மளோட சேர்ந்து வீட்டு நபராவே மாறிடுதுல்ல😕
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom