• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடிக் கிடைத்த செல்வம் – நிறைவு

Umanathan

✍️
Writer
தலை விண் விண்ணென்று வலித்ததில் மெல்ல முகம் சுளித்தாள் ஷர்விகா. ஏன் இப்படி வலிக்கிறது என்று கையை தூக்கி நெற்றியை தடவ போனால், கை தூக்க முடியாமல் வலித்தது. மெல்ல உடலில் அங்கங்கே வலி தெரிய மெல்ல கண் விழித்து பார்த்தாள். மருத்துவமனை அறை போல் இருக்கிறதே, எங்கே நான் எப்படி என்று யோசித்த போது நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் படம் போல் திரும்ப வந்தது.

மெல்ல எழ முயன்றவளுக்கு ரித்வியின் குரல் கேட்டது. அவளை எழ விடாமல் நிறுத்தி "அப்பா, முழிட்டியா? எல்லாரையும் கதி கலங்க வச்சுட்ட நீ. என்னதான் கோபம் வந்தாலும் இப்படியா?" என்று கோபமாய் கேட்டவளிடம் "நான் எப்படி இங்கே?" என்று கேட்டாள் ஷர்விகா.

"என்ன ஆச்சு?" என்று மேலும் கேட்டவளிடம் "கை உடஞ்சிடிச்சி. மத்தபடி பெரிய அடி ஒன்னும் இல்லை. ஆனா விழுந்த வேகத்தில ஊமை காயம் அதிகம். அதனால இரண்டு நாள் வலி இருக்கும்ன்னு டாக்டர் சொன்னார்." என்று பதில் அளித்தாள் ரித்வி.

மேலும் "வித்யுத் தான் அவரோட காரிலேயே உன்னை இங்கே கொண்டு வந்தார். பாவம் உன்னை பார்த்து அதிர்ந்து போய் இருக்கார். ஏதோ அவர் தான் சாவோட நுனிய பார்த்துட்டு வந்தவர் மாதிரி இருக்கார். நீ கண் முழிட்டன்னு தெரிஞ்சா தான் மனுஷன் மூச்சு கூட விடுவார்ன்னு நினைக்கறேன். இரு வித்யுத்தை கூப்பிடுறேன்." என்று ஷர்விகாவை பேச விடாமல் வெளியே சென்றாள் ரித்வி.

அவர்களுக்கு தனிமை தேவை என்று உணர்ந்ததாலோ என்னவோ ரித்வி இல்லாமல் வித்யுத் மட்டும் உள்ளே வந்தான். அவனின் வெளுத்த முகத்தை பார்த்ததும் ரித்வி சொன்னது மனதில் வந்தது. உண்மையிலேயே பயந்து விட்டானா? இல்லை? ஆனால் அவனோ அவள் முகத்தை பார்க்காமல் நிற்கிறானே.

ஏதோ தோன்றியவளாக "இதனால் உங்கள் பிளான் கெட்டு போச்சா? கவலை வேண்டாம். கை சரியானதும் நான் கிளம்பிடறேன்." அவளின் வார்த்தைகளை கேட்டவன் சரேலென்று திரும்பி அவள் கண்களை சந்தித்தான்.

அவன் கண்களை பார்த்த ஷர்விகா ஒரு நிமிடம் உறைந்து போனாள். இவ்வளவு வலியை கண்களால் ஒருவர் காட்ட முடியுமா? ஓடி சென்று அவனை சமாதான படுத்த நினைத்த மனதை கஷ்டபட்டு அடக்கினாள்.

"ஒன்னை புரிஞ்சுக்கோ. நீ என்னை விட்டு போகனும்னு என்று நான் நினைக்கலை. அது போல விவாகரத்து வேணும்னு நினைக்கவில்லை. நீ விவாகரத்து கேட்டாலும் என்னால் முழு மனசோட தர முடியாது."

என்ன. என்ன. என்ன நடக்கிறது இங்கே. அவன் பேசியது தனக்கு தான் சரியாக புரியவில்லையா என்று திகைத்து போனவள் உடனே சமாளித்து ஏதோ கேட்ட போனாள். அதற்குள் அவளை நிறுத்தியவன் "ஷர்விகா. பிளீஸ், இப்போ நீ ரொம்ப டயர்டா இருக்க. நானே எல்லாத்தையும் சொல்றேன். சொல்லப்போனா நான் சில விளக்கங்களும் தரனும். இப்போ நீ ரெஸ்ட் எடு." என்றவன் ஒரு நிமிடம் விட்டு மெல்ல தொடர்ந்தான்.

"இப்போதைக்கு ரித்வியை உன்னோட இருக்க சொல்லி கேட்டிருக்கேன். அவங்க சாயங்காலம் வீட்டுக்கு போறப்போ நான் வர்றேன். நீயும் சாயங்காலம் வீட்டிற்க்கு போயிடலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டார். உன்னை கூட்டிட்டு போக வர்றேன். இப்போ கூட எனக்கு இங்கிருந்து போக மன்சில்லை. ஆனால் நீ நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கனும். அதனால் தான் போறேன்." என்று வாயில் நோக்கி சென்றவன் மீண்டும் திரும்பினான்.

"நம்ம அம்மா அப்பாகிட்ட இதை ஒரு விபத்துன்னு சொல்லி இருக்கேன். நீ எதுக்கும் மாமாகிட்ட பேசிடு." என்றவன் நில்லாமல் வெளியே சென்று விட்டான்.

வித்யுத் சென்ற பின் ரித்வி அறைக்குள் வந்தாள். சிறிது நேரம் பேசி ஷர்விகாவின் மனதை திசை மாற்றினாள். "உனக்கும் வித்யுத்துக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிடிச்சுன்னு புராஜக்ட்ல எல்லோருக்கும் தெரிஞ்சிடிச்சி. எல்லோருக்கும் பயங்கர ஆச்சரியம். உங்க கதை என்னன்னு தெரிஞ்சிக்க எல்லாரும் காத்திட்டு இருக்காங்க. எனக்கு தெரிந்து இப்பவே கண் காது மூக்கு வெச்சு கதை தயாராகி இருக்கும்." என்று கூறி சிரித்தாள்.

ஷர்விகா பிறகு தன் தந்தைக்கு போன் செய்தாள். அவள் தாயால் அதிகம் பேச முடியவில்லை. தனக்கு ஒன்றும் இல்லை என்று உறுதியாக கூறிய பிறகே அந்த அன்னை சமாதானம் ஆனார். அவள் தந்தையோ "வித்யுத் உங்கூட இருக்கறது எனக்கு தைரியமாக இருக்கு ஷர்விமா. அவர் பாத்துப்பார். நீயும் அதிகம் அலட்டிக்காதடா. நல்லா ரெஸ்ட் எடு. நானும் அம்மாவும் சீக்கிரம் கிளம்பி வர்றோம்." என்றார்.

பின்னர் மாத்திரையின் விளைவோ என்னவோ மாலை வரை அயர்ந்து உறங்கினாள். மாலையில் வித்யுத் வந்த போதும், ரித்வி கிளம்பிய பின் அவர்கள் இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்த போதும் சரி, இருவரும் ஒன்றும் பேசவில்லை.

கையில் கட்டுடன் ஷர்விகாவை பார்த்து பதறிய பார்வதியையும், விஸ்வநாதனையும் ஒன்றுமில்லை என்று சமாதான படுத்திவிட்டு ஷர்விகாவை அவர்கள் அறைக்கு கூட்டி வந்தான் வித்யுத்.

சாப்பிட ஏதேனும் வேண்டுமா என்று கேட்ட வித்யுத்தை கூர்ந்து நோக்கினாள் ஷர்விகா. பேசுவதை அவன் தள்ளி போட நினைக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.

"எதுவும் வேண்டாம். எனக்கு உங்ககிட்ட பேசணும்." என்று கூறினாள்.

புரிந்து கொண்டது போல் தலையாட்டி விட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான். நன்றாய் இருக்கும் அவளின் கையை எடுத்து தன் கைகளுள் பிணைத்து கொண்டு ஒரு பெருமூச்சை எடுத்து விட்டான். அப்பொழுதும் அவன் ஒன்றும் பேசாமல் இருப்பதால் அவளே திரும்பவும் ஆரம்பித்தாள்.

"நீங்க ஏதோ விளக்கம் தரணும்ன்னு சொன்னீங்க." என்று எடுத்துக் கொடுத்தாள்.

வித்யுத் தலை அசைத்து விட்டு மெல்ல ஆரம்பித்தான். "நான் சொல்ல வேண்டிய விளக்கம் நம் கல்யாணத்துக்கு முன்ன இருந்து ஆரம்பிக்கனும். நம் நிச்சயம் நடந்து ஒரு வாரம் கழிச்சு ஒருத்தன் என்னை சந்திக்க வந்தான். நீயும் அவனும் ரொம்ப நாளா காதலிப்பதாகவும், அவனுக்கு வேலை இல்லாததாலும் அதனால் அவனை விட்டு விட்டு ஒரு நல்ல எதிர்காலத்துக்காக என்னை கல்யாணம் செய்ய நீ முடிவு செஞ்சதாகவும் சொன்னான்."

ஷர்விகாவிற்கு மூச்சு விட கூட இயலவில்லை. எப்படி? எப்படி அவனால் என்னை இப்படி நினைக்க முடிந்தது? மூச்சு முட்டுவது போல் தோன்றவே வித்யுத்திடம் இருந்து விலக முயற்சித்தவளின் கைகளை மேலும் இறுக பிடித்தான் வித்யுத்.

எதுவும் சொல்லாமல் ஷர்விகா அமைதியாக இருப்பதை பார்த்து மீண்டும் தொடர்ந்தான். "நான் அவனை முதல்ல நம்பலை. ஆனா அவன் திரும்பத் திரும்ப வந்தான். உன்ன பத்தி எல்லாம் சரியா சொன்னான். உன்னோட விருப்பு வெறுப்புகள், உன்னை பத்தின விவரங்கள்ன்னு நிறைய சொன்னான். அப்போ கூட நான் உன்னை தப்பா நினைக்கலை. அவன் உன்னோட நெருங்கிய நண்பனாக இருக்க கூடும், அதனால் அவனுக்கு நிறைய தெரிந்திருக்க வாய்ப்புண்டு. உன் மேல் தவறு இருக்காதுன்னு நினைத்தேன்."

பேசுவதை சற்று நிறுத்தியவன் முகம் தூக்கி ஷர்விகாவை பார்த்தான். எழுந்து சென்று அவன் அலமாரியை திறந்து எதையோ எடுத்து வந்தான். தன் கையை திறந்து அந்த பொருளை காட்டியவன், இதை நினைவிருக்கிறதா என்று கேட்டான். அது ஷர்விகாவின் பிரேஸ்லெட்.

"இது. என்னுடைய பிரேஸ்லெட். தொலைஞ்சு போச்சே. இது எப்படி உங்ககிட்ட?" என்று ஆச்சரியமாக கேட்டாள்.

"இதை எங்கிட்ட கொண்டு வந்து அவன் தான் கொடுத்தான். இது அவன் உனக்கு கொடுத்த பரிசுன்னும், அவன் கூடஎந்த தொடர்பும் இருக்க கூடாதுன்னு அதை நீ அவங்கிட்ட திருப்பி கொடுத்துட்டதாவும் சொன்னான்."

இதை கேட்டு ஷர்விகாவால் பொறுக்க முடியவில்லை. "இது என் பிரண்ட் லட்சுமி கொடுத்த பரிசு. எங்க முதல் சம்பளத்தில் ரெண்டு பேரும் அடுத்தவங்களுக்கு ஏதேனும் வாங்கி தர வேணுங்கறது என்று எங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம். அவளோட முதல் சம்பளத்துல எனக்கு இதை வாங்கி தந்தா. வேறு யாரும் எனக்கு தரலை. இதை நீங்கள் கேட்டிருந்தா நானே சொல்லி இருப்பேனே." என்று தவிப்புடன் கூறினாள்.

அந்த பிரேஸ்லெட்டை மென்மையாக அவள் கையில் அணிவித்தான். "எனக்கு உங்கிட்ட கேட்க பயம். எங்க நீ ஆமான்னு சொல்லிடுவியோன்னு ஒரு பயம். எல்லா விஷயத்திலும் தைரியமாக முடிவு எடுத்த என்னால, காதல்ன்னு வந்தப்போ தைரியமாக இருக்க முடியலை."

காதல் என்னும் வார்த்தையை கேட்ட ஷர்விகாவிற்கு சிறிய நம்பிக்கை வந்தாலும் அதை அவள் நிறுத்தினாள். ஒரு வார்த்தையில் எல்லாம் சரி ஆகிவிடாதல்லவா.

வித்யுத் மேலும் தொடர்ந்தான் "காதலித்தவன் கெட்டவனா இருந்தாலும் ஒர் பொண்ணு அவனைத்தான் கல்யாணம் செய்யனும்னு சொல்ற அளவுக்கு நான் மோசமானவன் இல்லை. ஆனால் பணம் இல்லைங்கறதுக்காக நீ மாறிட்டங்கறத தான் என்னால ஒத்துக்க முடியலை. உன்னை அந்த மாதிரி என்னால நினைக்க முடியலை. அப்போ எனக்கு என் மேலயே கோபம் வந்தது. அவ்வளவு மோசமாக உன்னை பத்தி தெரிஞ்ச அப்புறம் கூட உன்னை விட முடியலை. ஏன்னு என்னால ஊகிக்க முடியலை."

"அம்மா அப்பா வருத்தப்படுவாங்க, கல்யாணம் நின்னுட்டா என்ன காரணம் சொல்றதுன்னு யோசிச்சேனே தவிர உன்னை கல்யாணம் செய்ய கூடாதுங்கற நினைப்பு மட்டும் வரவே இல்லை. அது வேற என் மேல் இன்னும் கோபம் வந்துச்சு. அந்த கோபம் உன் மேல இன்னும் அதிகமாச்சு. உன்னால தானே இந்த நிலைமைன்னு என் மனசு திரும்ப திரும்ப சொல்லிச்சு. அதனால தான் கல்யாணத்துக்கு முன் நான் அப்பிடி நடந்துகிட்டேன்."

ஷார்விகாவால் இன்னமும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. இதெல்லாம் அவன் ஒரு வார்த்தை நேராக கேட்டிருந்தால் சரியாக போய் இருக்குமே. அவள் மனதை உணர்ந்தவன் போல தொடர்ந்தான்.

"உங்கிட்ட கேட்க தயக்கம். நான் விரும்பாத பதிலை நீ சொல்லிட்டா? ஆனா உன்னோட எல்லாவத்தையும் மறந்துட்டு வாழவும் முடியலை. தீர யோசிச்சு ஒரு முடிவு எடுத்தேன். நம்ம கல்யாணத்துக்கு ஒரு மாசம் கழிச்சு உன்னிடம் நான் பேசினது ஞாபகம் இருக்கா?"

மறக்க முடியுமா. அந்த நாளின் வலி ஷர்விகாவின் கண்களில் பார்த்ததும் வித்யுத்தின் முகம் வருந்தியது.

"நான் ஊரைவிட்டு போறேன்னு சொன்னா நீ என்ன செய்யறன்னு பார்க்க முடிவு செஞ்சேன். நீ என்னை பிரிய முடியாதுன்னு சொன்னா உடனே அவனை பத்தி சொல்லி என்ன நடந்ததுன்னு கேட்கனும்னு நினைச்சேன். ஏன்னா அப்போ கூட என்னால உன்னை முழுதாக சந்தேகப்பட முடியலை. ஆனா நீ விவாகரத்து பத்தி கேட்டதும் என் சந்தேகம் சரியோன்னு என் மனசு கலங்கி போச்சு. ஒரு வேளை எங்கூட நீ நினைச்ச வாழ்வு அமையலைன்னு உன் காதலன் கூட போயிடலாம்ன்னு முடிவு செஞ்சிட்டன்னு நினைச்சேன். அதனால வந்த கோபம் தான் அன்னைக்கு."

ஷர்விகாவின் மனம் லேசாக தெளிவடைந்தது போல் இருந்தது. முழுதாக புரியவில்லை என்றாலும் அவன் மனம் புரிவது போல் இருந்தது. ஆனாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். எதுவானாலும் அவன் சொல்லி முடிக்கட்டும்.

"நீ என்னை பிரிஞ்சு வீட்டை விட்டு வெளியே போனதும் எனக்கு அதிர்ச்சி. என் நம்பிக்கையை நீ உடைச்சிடன்னு தோணிச்சு. அதனால நானும் விலகிட்டேன். ஆனாலும் என்னால உன்னை பத்தி தப்பா மத்தவங்க கிட்ட சொல்ல முடியலை. என்னை தப்பா நினைச்சாலும் சரின்னு பழிய என் மேலயே போட்டுக்கிட்டேன்.

இதற்கு பதில் கூறாமல் அவளால் இருக்க முடியவில்லை.

"அன்னைக்கு நீங்க தனியா போறது பத்தி சொன்னவுடனே என்னால என்ன காரணம்ன்னு யோசிக்க முடியலை. ஒருவேளை உங்க மனசுல இந்த நினைப்பு இருக்கான்னு தெரிஞ்சிக்கத் தான் அப்படி கேட்டேன்."

அவனுக்கு புரிந்தது என்பது போல் அவள் கையை தட்டி கொடுத்தான்.

"நீ என்னை விட்டுப் போனதும் என்னோட மனசு உடைஞ்சிடிச்சு. ஆனா அந்த வீட்டில இருந்து நான் வெளியேறலை. ஒருவேளை நீ திரும்ப வருவியோன்னு 6 மாசம் அங்கேயே இருந்தேன். வராத உன் மேல ஏற்பட்ட கோபத்தை விட எதிர்பார்த்து இருந்த என் மேல தான் எனக்கு வெறுப்பு தான் அதிகமா இருக்கு."

ஷர்விகா ஒரு நொடி அமைதியானாள். எங்கே அந்த வீட்டு பக்கம் சென்றால் மன அமைதி போய் விடும் என்று அந்த பக்கம் போகாமல் இருந்ததை எண்ணி இப்பொழுது தவித்தாள். அப்பொழுது ஒரு முறை சென்று இருந்தால் கூட இந்த பிரச்சினை தீர்ந்து இருக்குமோ?

ஆனால் வேறு ஒன்று தோன்ற "நீங்க அங்கேயே இருக்கீங்கன்னு அத்தை ஒரு முறை கூட எங்கிட்ட சொல்லலியே?"

ஒரு வெற்று சிரிப்பு சிரித்து விட்டு மீண்டும் வாய் திறந்தான். "எப்போ பேசினாலும் ஷர்விகா நல்ல பொண்ணு, அவளை கஷ்டபடுத்தாதேங்கறது தான் அவங்க வார்த்தையா இருந்தது. அதனால கொஞ்ச காலம் அவங்க கிட்ட பேசறத கூட விட்டுட்டேன்."

"ஆனால நெஞ்சில் ஒரு புழு மாதிரி உன் நினைப்பு என்னை அரிச்சிட்டே இருந்தது. எவ்வளவு முயற்சி செஞ்சாலும் என்னால உன்னை மறக்க முடியலை. மனசின் ஏதோ ஒரு ஓரத்துல நான் தான் தப்பு செய்யறேனோன்னு ஒரு உறுத்தல் இருநதுட்டே இருந்தது. ஆனா வினு மட்டும் தான் எனக்காக பேசினா." அவன் குரலில் இப்பொழுது தெரிந்த கோபத்தை புரிந்து குழம்பினாள். எதற்காக கோபம்?

"சரி, எல்லா கேள்விக்கும் ஒரு முடிவு எடுக்கனும்னு தோணிச்சு. அதனால தான் நான் இந்த புராஜக்ட்ல சேர்ந்தேன். முதல்ல நான் உன்னை புரிஞ்சிகிட்டு, உண்மையில உனக்கு என்னோட வாழ விருப்பம் இல்லையின்னா விவாகரத்து கொடுக்கனுங்கற எண்ணத்தில தான் இங்கு வந்தேன்."

ஒரு நிமிட மௌனத்திற்கு பின் மீண்டும் தொடர்ந்தான் "ஆனால் உன்னை மறுபடியும் பார்த்த ஆப்புறம் பிரியனும்கற நினைப்பே எனக்குள்ள வரலை. அந்த கோபமும் உன் மீதே திரும்பிச்சு."

இதை கேட்ட போது ஷர்விகாவிற்கு சிரிப்பு தான் வந்தது. அவள் முகத்தில் சிரிப்பை பார்த்தவன் புன்னகையுடன் கூறினான் "ஆமாம் சிரி. என் அவஸ்தை எனக்கு தான் தெரியும்."

"அப்புறம்?" என்று கேட்டாள் ஷர்விகா.

"நான் என்ன கதையா சொல்றேன்" என்று கேலியாக கூறினாலும் மேலும் கூற தொடங்கினான்.

"அந்த வெள்ளிக்கிழமை மிசஸ். ஷர்விகான்னு சொன்னியே. அப்போ எனக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம். அப்புறம் ஸ்வேதாவின் வீட்ல அவ குழந்தையை கையில் வச்சிட்டு என்னை பார்த்தியே? அப்போ என் மனசு எனக்கு தெள்ள தெளிவாய் புரிஞ்சது. உன்னை தவிர இந்த உலகத்துல எனக்கு வேற யாரும் இல்லைன்னு. ஆனா..."

ஆனால் என்ன? வித்யுத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளின் நம்பிக்கை என்னும் விதையை நீர் ஊற்றி வளர்த்தது. அவன் ஆனால் என்றதும் மேலும் என்ன என்று கேள்வியோடு நோக்கினாள்.

"ஆனா என்ன?" என்று கேட்கவும் செய்தாள்.

"ஆனா அதை நான் மட்டும் முடிவு செய்ய முடியாதே. உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாதே. அதனால தான் அன்னைக்கு திரும்ப வரும்போது நீ ஏன் யாரோடையும் டச்சுல இல்லைன்னு கேட்டேன். நீ பேச முடியலைன்னு சொன்னதும் குற்ற உணர்ச்சியில் தான் அப்படி சொல்றியோன்னு நினச்சேன்."

ஓ, அதனால் தான் அன்று கோபத்துடன் அவளை விட்டு விட்டு சென்று விட்டானா?

"அப்புறமும் என்னால உன்னை புரிஞ்சிக்க முடியலை. உன் தங்கை நிச்சயதார்த்துக்கு போக்றதுக்கு முன்னாடி உன் அப்பாகிட்ட பேசினியே, அதையும் நான் கேட்டேன். அப்போவே என் மனசுல இருந்த எல்லா குழப்பமும் போயிடிச்சு. ஆனா உன் தங்கை கல்யாணம் முடிஞ்ச அப்புறம் என் மனசுல இருக்கறதை சொல்ல முடிவு செஞ்சேன். நீயும் மறுக்க மாட்டன்னு எனக்கு தோணிச்சு."

கூறிக் கொண்டே போன வித்யுத்தின் தலை குனிந்தது. குற்ற உணர்வில் தவிக்கும் அவன் முகத்தை பார்த்த ஷர்விகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

"ஷாரிகாவையும் திவாகரையும் கூட்டிட்டு கொண்டு அந்த மாலுக்கு போனோமே ஞாபகம் இருக்கா?" என்று கேட்டான்.

மறக்க முடியுமா? அவன் மீண்டும் மாறியது அப்பொழுது தானே. ஆம் என்று சொன்னவள் முயன்றும் கண்களில் வலியை காட்டாமல் இருக்க முடியவில்லை. அதை பார்த்த வித்யுத்தின் முகம் மேலும் வருந்தியது.

"அன்னைக்கு புட் கோர்ட் போனதுல இருந்து நான் நடந்துகிட்டது உனக்கு குழப்பமா இருக்கும். அங்க உன்னை ஒரு டேபிள்ல உட்கார சொன்னேனே. அது கூட வேணும்னு தான். ஏன்னா உன்னை காதலிச்சதா சொன்னவன் அங்கு தான் உட்கார்ந்திருந்தான்."

ஷார்விகா சரேலென்று அவனை பார்த்தாள். அங்கு நின்றவன் யாரென்று கூட அவளுக்கு நினைவில்லை. யார் என்று யோசித்து பார்த்தாலும் நினைவில்லை.

"அங்கே யார் இருந்தான்னு எனக்கு நினைப்பில்லை." என்று ஆரம்பித்தவளின் உதட்டில் விரல் வைத்து அவள் பேச்சை நிறுத்தினான்.

"நீ எதுவும் சொல்ல வேணாம். உன் மேல எந்த தப்பும் இல்லைன்னு நான் உணர்ந்துகிட்டேன். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சதாவே காட்டிக்கலை. முதல்ல நீங்க நடிக்கறீங்களோன்னு எனக்கு தோணிச்சு. அப்புறம் அவன் கிளம்பவும் அவன் பின்னாடியே போய் அவன் கிட்ட பேசினேன்."

ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்து சொன்னான். "அவன் கிட்ட போய் என்னை நியாபகம் இருக்கான்னு கேட்டேன். முதல்ல குழம்பியவன் உடனே அடையாளம் தெரிஞ்சிகிட்டான். தன் கூட இருந்த பெண்ணை அவன் மனைவின்னு சொல்லிட்டு, அந்த பெண்கிட்ட திரும்பி அவன் மன்னிப்பு கேட்ட வேண்டிய ரெண்டு பேர்ல நான் ஒரு ஆள்ன்னு சொன்னான். எனக்கு புரியலை. அப்புறம் அவன் சொல்ல சொல்ல தான் நான் எவ்வளவு ஏமாந்திருந்தேன்ன்னும் உனக்கு எவ்வளவு அநியாயம் செஞ்சிட்டேன்னும் தெரிஞ்சது. அவனுக்கு நீ யாருன்னே தெரியாது கண்ணம்மா. உன்னை காதலிக்கறதா சொன்னா அவனுக்கு பணம் கொடுக்கறதா சொல்லி இருந்தாங்க. அவனோட பணத் தேவைக்கு அவனும் ஒத்துக்கிட்டான். அந்த பெண்ணை கல்யாண்ம் செய்ய ஒரு நல்ல வேலை தேடிக்கிட்டிருந்தவன் வெளிநாடு போக தேவையா இருந்த பணத்துக்காக இந்த காரியத்தை செஞ்சிட்டான்."

"இப்போ தான் இந்தியா வந்திருந்தவன் அவங்க கல்யாணத்துக்கு பொருள் வாங்கத்தான்ன்னைக்கு வந்திருந்தாங்க. இவ்வளவையும் சொல்லி மன்னிப்பு கேட்டவனை தாறுமாறாக அடிச்சு நொறுக்க கோபம் வந்தது. அவனோட சுயநலத்துக்காக நம்ம வாழ்க்கையைஅழிச்சிட்டானே. ஆனா உடனே வேற ஒன்னும் தோணிச்சு. அவன் சொல்வதை வெச்சு பார்த்தா, அவன் வெறும் அம்புன்னு புரிஞ்சது. யார் அவனை அனுப்பினதுன்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்தது."

அவனை மேலே பேச விடாமல் சட்டென்று "வினு?" என்று கேட்டாள் சட்டென்று உதட்டை கடித்து அமைதி ஆனாள். அவளுக்கு வினுவை பிடிக்காது. இதை அவள் தான் செய்திருப்பாள் என்பதும் அவளின் ஊகம் தான்.இல்லையென்றால்? ஏற்கனவே வினுவை பற்றி சொன்னால் அவனுக்கு பிடிக்காதே.

ஷர்விகாவின் நிலையை பார்த்த வித்யுத் ஒரு வருத்தமான முறுவலுடன் அவளை பார்த்தான்.

"நான் என்ன சொல்வேனோன்னு யோசிக்கறியா. வேணாம் ஷர்வி. உன்னை எதுவும் சொல்ற தகுதி எனக்கு இருக்கான்னு தெரியலை. அன்னைக்கு எனக்கும் அதே சந்தேகம் தான் வந்தது. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி அவளை பத்தி நீ சொன்னதெல்லாம் நியாபகம் வந்தது. அவங்கிட்ட நான் அவனை மன்னிக்கனும்னா அவனை அனுப்பினது யாருன்னு சொல்லனும்னு சொன்னேன். அவன் முதல்ல தயங்கினாலும் அந்த பெண் ஒத்துக்கிட்டா. வினியோட போட்டோவே காட்டினதும் ஆமான்னு என்று ஒத்துக்கிட்டான்."

இதற்கு என்ன சொல்வது என்று ஷர்விகாவிற்கு தெரியவில்லை. யாரோ சொன்னதை கொண்டு தன்னை சந்தேகப் பட்டானே என்று அவன் மேல் கோபம் கொள்வதா? இல்லை இத்தனை நாள் தன்னோடு அவனும் கஷ்டப்பட்டதோடு இல்லாமல், தன் தோழி என்று நம்பியவள் செய்த துரோகத்தால் மனைவிக்கு பெரிய அநியாயம் செய்து விட்டோமே என்று மருகுபவனின் மேல் பரிதாபப் படுவதா?

எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தவளை ஏக்கத்துடன் பார்த்து விட்டு பேசினான்.
"உன் முகத்தை ஏறெடுத்து பார்க்க கூட முடியலை. எப்படிப்பட்ட அநியாயம் செய்துட்டேன். அதை எப்படி சரி செய்ய போறேன்னே தெரியாம தவிச்சேன். அப்புறம் ஒரு முடிவு எடுத்தேன். உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லி மன்னிப்பு பேக்கனும். நீ மன்னித்து என்னை ஏத்துகிட்டா அது என் அதிர்ஷ்டம். இல்லைன்னா உன் மன்னிப்பு கிடைக்கற வரைக்கும் காத்திருக்கறதுன்னு முடிவு செஞ்சேன். நீ ஆன்சைட் போறதுல உறுதியாக இருந்தா அதையும் ஏத்துகனும், ஆனா பின்னாடியே உன்னை தேடி வந்துடனும்னு முடிவு செஞ்சேன். அதனால வெங்கட்கிட்ட கூட உன் விசா பத்தி கேட்டிருந்தேன்."

ஷர்விகாவின் உள்ளம் மகிழ்ச்சியில் லேசானது. அதனால் தான் வெங்கட்டிடம் அவளின் விசா பற்றி கேட்டிருக்கிறான். இவள் தான் தப்பாக புரிந்து கொண்டாள்.

ஆனால் அவள் மனம் செல்லும் போக்கு தெரியாததால் வித்யுத் தொடர்ந்து பேசிக் கொண்டு போனான்.

"இன்னைக்கு காலைல வினுவை தான் பார்க்க போனேன். அவள் செஞ்சதெல்லாம் எனக்கு தெரியும், அதனால இனி நாம இருக்கற திசை பக்கம் கூட தலை வெச்சு படுக்க கூடதுன்னும் எச்சரிச்சிட்டு வந்தேன். ஆனா இன்னைக்கு உன்னை இரத்த வெள்ளத்தில் பார்த்ததுக்கு அப்புறம்..." நினைக்க கூடாததை நினைத்த மாதிரி தலையை குலுக்கியவன் அவளை பார்த்து சொன்னான்.

"ஷர்வி, நீ என்ன சொன்னாலும் கேக்கறேன். ஆனால் தயவு செய்து பிரிவை மட்டும் கேட்காதே. நீ என்னை மன்னிக்க எத்தனை வருஷம் ஆனாலும் நான் காத்திருக்கிகேன். நான் உன்னை தவறாக நினைச்சிருக்கக்கூடாது...." என்று பரிதவிப்புடன் பேசியவனை இடைமறித்தாள் ஷர்விகா.

"நான் இன்னைக்கு உங்களை தப்பா நினைச்சது போலவா?"

சரேலென்று அவளின் முகத்தை பார்த்த வித்யுத் அப்பொழுதும் தயங்கியபடி கேட்டான்.

"அப்படின்னா?"

ஷர்விகா யோசித்தாள். அவன் செய்தது பெரிய தவறு தான். ஆனால் அவள் செய்தது என்ன? அவளும் தானே அவனை தவறாக நினைத்தாள். சிறிதோ பெரிதோ, இருவரும் தவறு செய்திருக்கிறார்கள்.

"பாருங்க நாம ரெண்டு பேரும் செஞ்சது தப்பு தான். அதுக்கு காரணம் என்ன? நாம் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் தெளிவாக பேசிக்காதது தானே. நாம் ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கை வெச்சிருந்தா இப்பிடி நடந்திருக்குமா?" என்று கேட்டாள்.

"ஆனால் நான் செஞ்சது பெரிய தப்பு தான் ஷர்வி. அதை எப்படி நான் சரி செய்யறது?" தான் செய்த தவறால் குற்ற உணர்வில் தவிக்கிறான் என்று புரிந்து கொண்டாள் ஷர்விகா.

தன் கையால் வித்யுத்தின் முகத்தை ஏந்தி அவன் கண்களை பார்த்து கேட்டாள். "என்ன செய்யலாம். நாம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டோம். அதுக்காக வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தா சரி ஆகிடுமா? முகம் பார்த்து பேச முடியாதுன்னா விலகிட முடியுமா?" என்று மென்மையாக கேட்டாள்.

அந்த கேள்வியின் தாக்கத்தில் சட்டென்று அவளை இருக அணைத்தான் வித்யுத். "இல்ல ஷர்விகா. என்னால நீ இல்லாமல வாழ முடியாது."

ஈகோ பார்க்காமல் தான் மனதை முதலில் திறந்தான் வித்யுத். இருக அணைத்ததால் கையில் ஏற்பட்ட வலியை அவன் சொற்கள் நீக்கி விட்டது போல உணர்ந்தாள் ஷர்விகா. பின் அவளும் சொன்னாள் "என்னாலயும் உங்கள விட்டு வாழ முடியாது வித்யுத். நடந்ததை கடந்துடுவோம். அதில கத்துகிட்ட பாடத்தை மட்டும் எடுத்துக்குவோம். இனிமேல என்ன நடந்தாலும் நாம் ஒருத்தருக்கொருத்தர் ஒளிவு மறைவு இல்லாம பேசிக்கிட்டா நிறைய பிரச்சினைகளை நாம் சரி செஞ்சிடலாம்."

அவள் முகம் பார்த்து வித்யுத் மென்மையாய் சொன்னான். "நீ சொல்வதை எல்லாம் நான் கேக்கறேன். ஆனால் நீ என்னை வித்யுத்ன்னு கூப்பிடாம விதுன்னு கூப்பிட்டா தான் கேட்பேன்."

ஷர்விகாவின் கண்களில் குறும்பு எட்டி பார்த்தது. "யாரோ எங்கிட்ட விதுன்னு கூப்பிட கூடாதுன்னு சொன்னாங்க" என்று கேட்டாள்.

வித்யுத் அதே தொனியில் "யாரோ எங்கிட்ட நடந்ததை கடந்துடுவோம்ன்னு சொன்னாங்க" என்று கேட்டான். இருவரும் கப்பென்று சிரித்து விட்டார்கள்.

பின் வித்யுத் அமைதியாக "நீ அன்னைக்கு விதுன்னு கூப்பிட்டதும் உன்னை இருக கட்டிக்கனும்னு போல இருந்தது. அதை மறைக்கறதுக்காக தான் அப்படி கோபப்பட்டேன்." என்றவன் இரு கைகளால் அவள் முகத்தை ஏந்தினான்.

"நீ என் செல்வம் ஷர்வி. என்னோட முட்டாள்தனத்தால நான் தொலைத்து மறுபடியும் தேடி கிடச்ச செல்வம். இப்போ சொல்றேன். தொலைத்தவனுக்கு தான் அதோட அருமை தெரியும். தொலைச்சு திரும்ப பெற்றவன் நான். உன்னை என் மனசுல வைத்து பாத்துப்பேன்." என்று கூறி அவன் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.

இருவரும் இனி வரும் இனிய நாட்களை நினைத்து நிறைவுடன் அமர்ந்திருந்தனர்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
தேடி கிடைத்த செல்வம்- கதையும் கதையாசிரியரும் எங்களுக்கு கிடைத்த செல்வம்!!! புரிதல் தான் காதல் வாழ்க்கை உறவு எல்லாம்!!! புரிந்தது இன்று விதுரன் 💞ஷர்விக்கு!!!!!
 

Umanathan

✍️
Writer
தேடி கிடைத்த செல்வம்- கதையும் கதையாசிரியரும் எங்களுக்கு கிடைத்த செல்வம்!!! புரிதல் தான் காதல் வாழ்க்கை உறவு எல்லாம்!!! புரிந்தது இன்று விதுரன் 💞ஷர்விக்கு!!!!!
மிகவும் நன்றி சகோதரி
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom