• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடி கிடைத்த செல்வம் – 8

Umanathan

✍️
Writer
தேடி கிடைத்த செல்வம் – 8

வித்யுத்தின் பெற்றோர்கள் வந்து 2 வாரங்கள் ஆகி விட்டிருந்தது. பார்வதிக்கும் எல்லா மருத்துவ பரிசோதனையும் முடிந்து அவருக்கு வைத்தியமும் ஆரம்பித்த விட்டது. மாலை வேளையில் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் மாமியாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பாள் ஷர்விகா. இது தான் என்று இல்லாமல் பொதுவாக பேசுவார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக அதற்கும் தடை வந்து விட்டது. தினமும் ஏதாவது சொல்லி கொண்டு வினு அங்கே வந்து நிற்பது வழக்கமாகி விட்டது. இரண்டு குடும்பத்திற்கும் பலகாலமாக இருந்த நட்போடு, வினுவை சிறு வயதிலிருந்தே பார்த்து பழகியதால் பார்வதிக்கு ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் ஷர்விகாவிற்கு ஏதும் சொல்லவும் முடியவில்லை, அவளோடு பேசவும் பிடிக்கவில்லை. அதனால் இரவு உணவு தயாரிக்க, அலுவலக வேலை என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி தனியே சென்று விடுவாள்.

அதன் விளைவு "என்ன விது, உங்களுக்குள்ள மறுபடியும் ஏதாவது பிரச்சினையா? ஷர்வி முகம் 2 நாளா சரி இல்லை." என்று பார்வதி வித்யுத்திடம் கேட்டார் என்பது ஷர்விகாவிற்கு தெரியாது.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லமா. புராஜக்ட்ல ஒரு சின்ன சிக்கல். அதனால் தான் அப்படி இருக்கா." என்று சமாளித்தாளும், அன்றிரவு வித்யுத் ஷர்விகாவிடம் பேசினான்.

குளித்து விட்டு அறைக்குள் நுழைந்த ஷர்விகா முதலில் எதையும் கவனிக்கவில்லை. நடுவே தலையணைகளால் எல்லை வகுத்து ஒருபுறம் அமர்ந்து இருந்த வித்யுத்தை கவனிக்காமல் தன் புறம் சென்று படுக்க முற்பட்டாள். ஆனால் அவளை நிறுத்தியது வித்யுத்தின் குரல்.

"நீ நடந்துக்கறது சரியில்லை. அம்மா கண்டு பிடிக்கற அளவு இருக்கு. கொஞ்சம் சாதாரணமாக தான் இருக்க பாரேன். நடிப்பு தான், ஆனாலும் அது உனக்கு ஒன்றும் புதுசில்லையே." குத்தல் தான்.

ஷர்விகா வித்யுத்தை நோக்கி "அப்படி ஒன்னும் நான் அத்தை மாமா வந்த நாள் முதல் இப்படி இல்லையே. ஏன்னு தான் நீங்களும் யோசிச்சுப் பாருங்க." என்று பதில் கூறினாள்.

வித்யுத் ஒரு நிமிடம் மௌனமானான். ஆனால் மீண்டும் விடாமல் "புரியுது. ஆனா உனக்கு என்ன பிரச்சினை. நீதான் எல்லத்தாய்யும் விட்டுட்டு போக போறியே?"

ஷர்விகாவிற்கு அவன் குரல் குற்றம் சாட்டுகிறதோ என்று ஒரு நிமிடம் தோன்றியது. உடனேயே அதை விலக்கி கொண்டு ஒரு வெற்று சிரிப்பு சிரித்தாள்.

"என்னமோ நான் போகப் போறதுதான் எல்லா பிரச்சினைக்கும் காரணங்கறத போல சொல்றீங்க. நீங்க என்னை விட்டுட்டு போனது தான் எல்லாத்துக்கும் முதல் தொடக்கம்."

அவள் கண்களின் கரையில் பெருகாமல் அடங்கி நிற்கும் கண்ணீர் முத்துக்களும், துடிக்க முற்பட்ட உதடுகளை உட்புறமாக பற்றி நிற்கும் அவள் பற்களும் அவனுக்கு என்ன சொல்லியதோ?

"நீ இப்போ கோபமா இருக்க. அப்புறமா பேசலாம். குட் நைட்." என்று கூறி முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

ஷர்விகாவிற்கு வந்த கோபத்தில் அந்த முதுகிலேயே ரெண்டு போடலாமா என்று இருந்தது. ஒரு பெருமூச்சை விட்டு விட்டு படுத்து தூங்கலானாள்.

ஆனால் வித்யுத் வினுவிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. அவள் வருவது கொஞ்சம் குறைந்திருந்தது.

இந்நிலையில் ஷர்விகாவின் தங்கை ஷாரிகாவின் நிச்சயதார்த்த விழா இன்னும் 3 நாட்களில் நடைபெற இருந்தது. ஷர்விகா வித்யுத்தை நோக்கி "திங்கட்கிழமை நான் இருக்க மாட்டேன். அன்னைக்கு ஷாரிகாவோட நிச்சயதார்த்தம். என்னோட வேலைகள் எல்லாம் முடிச்சு உங்களுக்கு மெயில் அனுப்பிட்டேன். வேறு ஏதேனும் டீடெயில் வேணுமா?" என்று கேட்டாள்.

வித்யுத் அவளை நோக்கினான். "தனியா உன் தங்கை நிச்சயதார்த்ததுல கலந்துகிட்டு கேக்கறவங்க கேள்விக்கு என்ன பதில் சொல்ல போற? இல்லை உன்னை தனியாக அனுப்பிட்டு என்னை பெத்தவங்காளுக்கு நான் என்ன சொல்ல போறேன்."

"அது..." என்று ஷர்விகா தடுமாறுகையில் "நான் ரெண்டு பேரும் சேர்ந்து தான் போறோம். வெங்கட்டிடம் சொல்லியாச்சு. திங்கள், செவ்வாய் ரெண்டு நாளும் நாம லீவ்." என்றான்.

அவளிடம் பதில் இல்லாமல் போகவே "என்ன பதிலை காணோம்?" என்று மென் முறுவலோடு கேட்டான்.

அவனின் முறுவலை கண்டதாலோ என்னவோ தடுமாற்றத்துடன் ஒரு நன்றி கூறி விட்டு அங்கிருந்து வெளியே வந்து தன் தந்தையை செல்லில் அழைத்தாள். விவரத்தை கூறியவுடன் அந்த பக்கம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

"அப்பா? லைன்ல இருக்கீங்காளா?" ஷர்விகாவின் கேள்வி ஒரு பெருமூச்சு பதிலாக வந்தது.

"இருக்கேன்மா. ஆனா எனக்கு ஒன்றும் புரியலை." என்றார்.

தந்தை என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்து "அப்பா, வித்யுத்தை தவிர நான் வேறு யாரையும் நினைக்க போறதில்லை. அதே போல் அவரிகிட்ட டைவர்ஸ் அப்படீங்கறதையும் நான் யோசிக்க போறதில்ல. அதனால இது தான் எல்லாருக்கும் நல்லது" என்றாள்.

"உனக்கு?" தந்தையின் பொருள் பொதிந்த கேள்வியில் ஷர்விகாவின் கண்கள் கலங்கியது. அவள் வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் இருந்த நாட்களில் கூட இருந்து பார்த்தவர் ஆயிற்றே.

"எனக்கும் தான்பா." என்றாள். தானே தாயையும் ஷரிகாவையும் விவரத்தை கூறி தயார் செய்வதாக தந்தை கூறியதும் செல்லை அணைக்க போனவள் பின்புறம் கேட்ட வித்யுத்தின் குரலில் திரும்பினாள்.

"போகலாமா? வேற வேலை எதுவும் இருக்கா?" என்று கெட்டவனிடம் ஆம் இல்லை என்று பொதுவாக தலை ஆட்டினாள். அவன் எவ்வளவு தூரம் கேட்டிருப்பான். ஆனால் அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவன் முகத்தை பார்த்து புரிந்து கொள்ள அவளால் முடியவில்லை.

***

இருவரும் காரில் தான் ஷர்விகாவின் தாய் வீட்டிற்க்கு சென்றனர். இருவரும் ஒன்றாக வீட்டிற்கு வருவதை பார்த்து ஷர்விகாவின் தாயின் கண்கள் கலங்கியது. பெற்றவர்களின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்த பின் இருவரும் ஒன்றாக வசிக்க எடுத்த முடிவு சரிதான் என்று தோன்றியது.

ஷாரிகவிற்கு தான் அக்கா வந்ததில் ஒரே சந்தோஷம். சகோதரிகள் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு வித்யுத் தனியாக என்ன செய்து கொண்டிருப்பான் என்று தோன்றவே ஷர்விகா அவனை தேடி சென்றாள். அங்கே அவள் அறையில் வித்யுத் உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

முகத்தில் எந்த கவலை வரிகளும் இல்லாமல் ஒரு அமைதியோடு அவன் முகம் இருந்தது. கோபம், வருத்தம் எதுவும் இல்லாமல் அவன் முகம் நிர்மலமான அமைதியோடு இருந்தது. அவன் சிகையை கோத எழுந்த கைகளை அடக்கி கொண்டு தாயை தேடி சென்றாள்.

***

ஷாரிகாவின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்து இருந்தது. சுற்றிலும் எல்லோரும் இருந்தாலும் அவளும், அவளை மணக்க இருக்கும் திவாகரும் வேறு உலகத்தில் இருந்தனர். மண மக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்ட போது ஷர்விகாவின் கண்கள் வித்யுத்தின் கைகளை தானாக பார்த்தது. வித்யுத்தின் கைகளில் அவள் அணிவித்த மோதிரத்தை பார்த்த போது ஷர்விகாவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

அவன் அதை திரும்ப அணிந்து கொண்டானா? எப்பொழுது? இங்கே வரும் போதா? அவன் பெற்றோர்கள் இந்தியா வந்த போதா? இல்லையே? அவன் புராஜக்ட்டில் சேர்ந்த நாளிலிருந்தே அவன் கையில் மோதிரம் இருந்தது அவள் மனக்கண் முன்னே வந்து சென்றது. அப்படி என்றால்???

ஷர்விகாவின் கண்கள் வித்யுத்தின் கைகளில் படிந்திருப்பதை அவன் பார்த்தாலும் கவனிக்காதது போல் இருந்தான். நிகழ்ச்சி முழுவதும் அவன் ஷர்விகாவை விட்டு விலகவில்லை. கம்பு பேசும் சுற்றம் ஏதேனும் கேள்வி கேட்டாலும் அதை அவன் சிறப்பாக சமாளித்தான். மொத்தத்தில் விழா சிறப்பாக நடந்து இருவரும் ஊர் திரும்பும் நேரமும் வந்தது.

பெற்றவர்களிடமும், தங்கையிடமும் விடை பெற்று இருவரும் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நெருங்கிய நண்பரை அழைத்து செல்ல வேண்டும் என்று வித்யுத் கூறினான். இங்கே யார் என்று ஆச்சர்யத்துடன் அவள் பார்க்கையில், வேறு ஒரு வேலையாக அந்த நண்பர் வந்ததாகவும் நாம் இங்கே இருப்பதால் கூட அழைத்து செல்ல இருப்பதாகவும் கூறினான்.

அந்த நண்பர் வினு தான் என்பதை அறிந்த ஷர்விகா எதுவும் கூறவில்லை. காரின் பின்புறம் ஏறிய வினு, ஷர்விகா பின் புறம் வருகிராளா என்று கேட்டதற்கு முன்புறமே வசதியாக இருப்பதாக கூறி விட்டு வெளியே பார்க்க தொடங்கினாள். இனி அடுத்த 6 மணிநேரம் இவளை பொறுத்துக் கொள்ள வேண்டுமே என்கிற சலிப்பு ஷர்விகாவிற்கு. அதனால் அவள் உதடுகள் ஏளனத்துடன் வளைந்ததையும், அதை பார்த்த வித்யுத்தின் இமைகள் இடுங்கியதையும் அவள் கவனிக்கவில்லை.

இடையில் இரவு உணவு உட்கொள்ள ஒரு நல்ல ஹோட்டல் பார்த்து வித்யுத் நிறுத்தினான். சாப்பிட்டு கை கழுவ வித்யுத் சென்றவுடன் ஷர்விகாவை நோக்கி திரும்பினாள் வினு.

"என்ன ஃபங்க்ஷன் நல்லா நடந்துச்சா?" என்ற கேள்விக்கு ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

"நடந்திருக்கும். அதுக்ககத் தானே விதுவும் நீயும் ஒன்னா இருக்கறதா நடிச்சிட்டு இருக்கீங்க" என்று வினு கேட்டதும் ஒரு நிமிடம் அயர்ந்து உட்கார்ந்தாள் ஷர்விகா. ஒரு நிமிடம் தான். உடனேயே அவளுள் கோபம் கொப்பளிக்க தொடங்கியது. தன்னை சமாளித்துக் கொள்ள வெளியே சென்று நெடும் மூச்சுகள் எடுத்து விட்டு கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் வந்ததை கவனித்தாள்.

வித்யுத்துடன் பேச அவள் இஷ்டப்படவில்லை. காரில் ஏறியதும் தலை வலிப்பதாக கூறி கண்களை மூடி அமர்ந்து விட்டாள். அவளை கேள்வியோடு நோக்கிய வித்யுத்தையும் சரி, அவர்களை வெற்றி சிரிப்போடு பார்த்த வினுவையும் சரி அவள் கவனிக்கவில்லை.

வினுவை இறக்கி விட்டபின்னும் அவள் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் வீட்டினுள் காரை நிறுத்தியவுடன் தான் பையை எடுத்துக் கொண்டு விடுவிடுவென அவர்கள் அறையை நோக்கி சென்று விட்டாள். எங்கே இடையில் அவன் நிறுத்தினாள் எல்லோரும் விழிக்கும் படி கத்தி விடுவாளோ என்ற பயம்.

அறைக்குள் நுழைந்த வித்யுத் என்ன என்று கேட்டவுடன் பொங்கி விட்டாள்.

"அதை ஏன் எங்கிட்ட கேட்கிறீர்கள்? உங்கள் ஆசை பிரண்டுகிட்ட கேட்க வேண்டியது தானே? நாம ரெண்டு உங்க அம்மாகாகத் தான் ஒன்னா இருக்கற அவகிட்ட போய் சொல்லிகிட்டு. சே! அப்பிடி நடிக்க வேண்டியது எதுக்காக? பேசாம அவங்கவங்க வழிய பார்த்து போயிடலாம்." பற்களை கடித்து கொண்டு கீழே பெரியவர்கள் காதில் விழாமல் அடக்கிய குரலில் சீறினாள்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு அமைதியாகவே பதில் கூறினான் வித்யுத். "நான் சொல்லலை. அவளாவே கண்டுபிடிச்சான்னு நான் சொன்னா நம்புவாயா?"

"நான்.. நான்... என்ன சொல்றதுன்னு தெரியலை." என்று தடுமாறினாள் ஷர்விகா.

"அதை நீ தான் முடிவு செய்யனும்" என்று கூறிவிட்டு குளியலறையை நோக்கி சென்றான்.

குழப்பத்துடன் படுக்கையில் படுத்த ஷர்விகா இருக்கும் குழப்பம் சேர அப்படியே உறங்கினாள்.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom