• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நடுகல்

Nithya Mariappan

✍️
Writer
நடுகல்

முத்தாயம் சோனாலு ரெண்டு... நான் உன் காய வெட்டிட்டேன்ல... நீ அவுட்டு” குதூகலத்துடன் சொன்னபடி ஆலமர சுடலைமாடன் பீடத்திற்கு முன்னே கிடந்த சிமெண்ட் தரையில் தனது சேக்காளிகளை வெறுப்பேற்றினான் பேச்சிமுத்து. நான்காம் வகுப்பு மாணவன். கொரானாவின் கைங்கரியத்தால் ஓராண்டு கல்வியை மறந்துவிட்டு தாயம், ஆடுபுலியாட்டம் என விளையாடி மகிழும் கிராமத்து சிறார்களில் அவனும் ஒருவன்.

“லேய் நீ கள்ளாட்டம் ஆடுற... நான் அங்கன திரும்பைல நீ தாயக்கட்டய திருப்பிட்ட” என்று முரண்டு பிடித்த வேலனுக்கும் அவன் வயதே.

“நீ தோத்ததுக்கு என்னைய குத்தம் சொல்லாதல”

“நீ கள்ளாட்டம் ஆடிட்டு வாய் பேசாதல”

அந்த இடம் குருஷேத்ரமாக மாறும் முன்னர் “ஏல முத்து யார் கூட எசலிட்டிருக்க?” என்று வசவுமழை பொழிந்தபடி கூந்தலை கொண்டையாக அள்ளிமுடிந்து கொண்டு வந்தாள் பேச்சிமுத்துவின் அன்னை வடிவு.

அவள் வருவதைக் கண்டதும் நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக்கொண்டவன் “ஒன்னுமில்லம்மா” என்று பம்மவும்

“கள்ளாட்டம் அது இதுனு என் காதுல விழுந்துச்சே... அந்தளவுக்கு எனக்கு ஓர்மை இல்லனு நெனைச்சியாக்கும்? எந்திரில... ஒழுங்கா நம்ம லெச்சுமிய அங்குவிலாஸ்காரரு தோட்டத்துல மேச்சலுக்கு பத்திட்டுப் போ... சாய்ங்காலம் வீட்டுக்கு வந்தா போதும்” என்றபடி அவனது கையைப் பிடித்து இழுக்காத குறையாக வீட்டுக்கு அழைத்தாள் வடிவு.

அதற்குள் பேச்சிமுத்து வேலனுக்குக் கண் காட்ட அவனோ “எத்த நானும் எங்க ஆட்டை மேச்சலுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டுச் சிட்டாகப் பறந்தான். போகும் முன்னர் உள்ளங்கையை விரித்து அதில் ஆட்காட்டிவிரலால் அழுத்தி காட்டிவிட்டுச் சென்றான் வேலன்.

“அவன் என்னத்த சைகை காட்டிட்டுப் போறான்ல?”

“தெரியலம்மா... நான் லெச்சுமிய மேச்சலுக்குக் கூட்டிட்டுப் போனா நீ ஞாயித்துக்கிழமை பிரியாணி போடுவியா?” என்று குழந்தைத்தனமாக கேட்டபடி அவளுடன் வீட்டுக்கு நடையைக் கட்டினான் பேச்சிமுத்து.

இதோ வீடு வந்துவிட்டது. ஓடு போட்ட நான்கு பத்தி வீடு அவர்களுடையது. கொல்லைப்புறத்திலிருந்த மாட்டுத்தொழுவத்தில் இருந்து லெட்சுமி “ம்மா” என்றழைத்தது. தொடர்ந்து அதன் மணியோசை எழுந்தது.

வடிவின் கணவன் துரைசாமியின் மறைவுக்குப் பிறகு அவளது குடும்பத்திற்கு படியளக்கும் காமதேனு லெட்சுமி தான். அவன் இருந்தால் லெட்சுமியையும் விற்று அரசாங்கத்தின் டாஸ்மாக்கிற்கு மொய் எழுதியிருப்பான் என்று அவ்வபோது எண்ணிக்கொள்வாள் வடிவு.

வீட்டுக்குள் நுழைந்த போதே “அவனை கூட்டிட்டு வந்திட்டியாம்மா?” என்ற கேள்வியுடன் அவ்வளவு நேரம் முகம் புதைத்திருந்த மொபைல் போனிலிருந்து விழியுயர்த்தி அன்னையை வினவினாள் அவளது மகளும் பேச்சிமுத்துவின் அக்காவுமான வளர்மதி. மொபைல் என்றதும் என்னவோ எதுவோ என்று எண்ணிவிட வேண்டாம்.

கொரானாவின் காரணமாக அவளது எட்டாம் வகுப்பு பாடத்தை ஆன்லைன் வகுப்பில் கவனிக்கும் படி சொல்லிவிட்டதால் வடிவு வாங்கி கொடுத்த மொபைல் போன் அது. வளர்மதியும் இது வரை ஆன்லைன் வகுப்புக்கு மட்டுமே அதை எடுத்து உபயோகிப்பாள்.

வடிவுடன் வந்த பேச்சிமுத்துவைக் கண்டதும் “எப்ப பாத்தாலும் தாயக்கட்ட விளையாடுறேனு உன் சேக்காளிங்க கூட சண்டைக்காடு போட்டல்ல... போ போய் மாடு மேச்சிட்டு வா” என்று கிண்டல் செய்தபடி போனை அலமாரி மீது வைத்தாள்.

பேச்சிமுத்துவின் விழிகள் அந்தப் போனைக் கண்டதும் ஜொலித்தது.

“எக்கா உனக்கு கிளாஸ் முடிஞ்சிச்சா?”

“எதுக்குல கேக்க?”

“நானும் லெச்சுமியும் அங்குவிலாஸ்காரரு தோட்டத்துக்கு மேச்சலுக்கு போறோம்... அங்கனக்குள்ள எனக்கு நேரம் போவாதுல்லா... உனக்கு கிளாஸ் முடிஞ்சிச்சுனா போனை தாப”

அக்காவும் தம்பியும் என்னவோ செய்யுங்கள் என்று வடிவு நேரே சமையலறைக்குள் நுழைந்தவள் பானையில் இருந்த பழைய சோற்றை தயிர் ஊற்றுப் பிசைந்து தூக்குவாளியில் நிரப்பினாள்.

அதன் மீது ஒரு கிண்ணத்தில் எண்ணெய்யில் பொறித்த மோர் மிளகாய்களை வைத்து தூக்குவாளியைப் பூட்டி எடுத்து வந்தவள் மகனின் கையில் இருந்த போனை கண்டதும் வெகுண்டெழுந்துவிட்டாள்.

பத்திரகாளியாய் மகளை முறைத்தவள் “ஏட்டி இந்த வெறுவாக்கட்ட கையில எந்தப் பொருள் போனாலும் கட்டமண்ணாக்கிட்டு தான் மறுசோலிய பாப்பான்னு தெரிஞ்சும் ஏன் அவன் கிட்ட குடுக்க?” என்று கடுகடுக்க

“எம்மா அக்காவ ஏசாத... நான் சாய்ங்காலம் வரைக்கும் வச்சு வெளையாண்டுட்டு கொண்டுவந்துடுவேன்... நம்ம ஊர்க்காரங்க பயலுவல்லாம் செல்பி எடுத்து க்ரூப்ல போடுறானுவ... நானும் எடுத்துட்டு வந்துடுவேன்மா” என்றான் பேச்சிமுத்து கண்களில் ஆர்வம் மின்ன.

“அவனுவ அப்பன் ஆத்தா ரெண்டு பேரும் சம்பாதிக்காவ... இங்க அப்பிடியா? நான் ஒத்தமனுசியா கிடந்து லோல்படுறேன்ல... ஆம்பளப்புள்ள படிச்சு முன்னேறுவனு பாத்தா நீ பண்ணுற சேட்டைக்கு உன் வாத்தியாரே நீ தேற மாட்டனு சொல்லிட்டாரு... எதோ பொட்டப்பிள்ளையாச்சும் படிக்குதேனு அதுக்கு போனு வாங்கி குடுத்தா அதயும் ஒளிய வைக்க பாக்கீயா?”

அவளின் வருத்தத்துக்கு ஏற்ப பேச்சிமுத்து படிப்பில் படு சுமார் தான். அதில் வடிவுக்கு எக்கச்சக்க வருத்தம். ஆனால் சுறுசுறுப்பான அச்சிறுவனோ எவ்வித கவலையுமின்றி கூட்டாளிகளுடன் சேர்ந்து பட்டம் விடுவது, பனங்காய் வண்டி ஓட்டுவது, டயர் விளையாட்டு, ஓலைக்காத்தாடி விளையாடுவது என குதூகலத்துடன் பொழுதைக் கழித்தான்.

அந்த ஊர்ச்சிறுவர்கள் தங்கள் வீட்டு மொபைல் போனில் செல்பி எடுப்பதையும் ஊர்க்கார இளவட்டங்கள் வைத்திருக்கும் வாட்சப் குழுமத்தில் அதைப் பகிர்வதையும் கண்ட அச்சிறுவனுக்கு தனது செல்பியும் அதில் இடம்பெற வேண்டுமென்ற ஆசை.

அப்படி செல்பி அந்தக் குழுமத்தில் வந்ததும் அம்மாவிடம் காட்டி பெருமைப்பட வேண்டும். அப்போது தன்னை திட்டி தீர்க்கும் அம்மா பெருமையாய் நெட்டி முறிப்பாள் என்ற சிறுபிள்ளைத்தனமான எண்ணம் அவனுக்கு.

இதோ வடிவு தலைபாடாக அடித்தும் “சாய்ங்காலம் வரைக்கும் தானம்மா.. தம்பி பத்திரமா கொண்டு வந்துடுவான்” என்ற வளர்மதியின் பரிந்துரையின் பேரில் மொபைல் போன் பேச்சிமுத்துவின் கைக்கு வந்துவிட்டது.

லெட்சுமியின் மூக்கணாங்கயிறு ஒரு கையில், மற்றொரு கையில் மொபைல் போன், தோளில் தூக்குவாளி சகிதம் அவன் அங்குவிலாஸ்காரர் என்று அன்புடன் அழைக்கப்படும் ஊர்ப்பெரியவரின் தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டான்.

“முத்து நில்லுல... நானும் வர்றேன்” என்றபடி ஓடிவந்து அவனுடன் இணைந்து கொண்டான் வேலன்.

“எங்கல உன் ஆட்டை காணும்?”

“நான் அத்த கிட்ட சும்மா சொன்னேன்ல... மதிக்காவோட போனை எடுத்துட்டு வந்தியா?”

“இந்தாருக்கு பாரு”

“ஐய்! இன்னைக்கு நம்ம அங்குவிலாஸ்காரரு தோட்டத்துல எடுக்குற போட்டோவ பூரா அந்த க்ரூப்ல போடணும்ல”

இரு சிறுவர்களும் நிறைய திட்டங்களுடன் அங்குவிலாஸ்காரரின் தோட்டத்துக்குள் நுழைந்தனர். மாட்டை புல்தரை இருக்கும் இடத்தில் கட்டிப் போட்ட பேச்சிமுத்து அதன் கழுத்தைத் தடவிக்கொடுத்தான்.

“லெச்சுமி எதும் வேணும்னா ம்மானு சத்தம் போடு... நான் அந்த தென்னைமரத்துக்குப் பக்கத்துல இருக்குற கெணத்து கிட்ட தான் இருப்பேன்.. சரியா?” என்று சொல்ல லெட்சுமியும் கழுத்துமணி அசைய ஆமோதித்தது.

பின்னர் இரு சிறுவர்களும் கிணற்றின் அருகே சென்று நின்றவாறு அங்கிருந்த புதர்களைப் பிடித்தவாறு நிறைய செல்பிக்களை எடுத்துத் தள்ளினர்.

பேச்சிமுத்து கிணற்றங்கரையில் கிடந்த அவனை விட உயரமான கல் ஒன்றைப் பார்த்ததும் வேலனிடம் ஆவலுடன் பேச ஆரம்பித்தான்.

“அந்தக் கல்லு கிட்ட போட்டோ எடுப்போமால?”

அடிக்கடி இங்கே வந்திருக்கிறான். அப்போதெல்லாம் செடிகொடிகள் சூழ புதரடைந்து கிடந்த அந்தக் கல் அவனை ஈர்த்ததில்லை. ஆனால் இன்று கையில் போன் உள்ளதல்லவா! அதன் மயக்கம் பார்க்கும் அனைத்தையும் புகைப்படமாகச் சுடும்படி அவனைத் தூண்டியது.

அதன் விளைவு இத்தனை நாட்கள் கண்டும் காணாமலும் கடந்தவன் இன்று ஆர்வத்துடன் அந்தக் கல்லைக் காட்டி நண்பனிடம் புகைப்படம் எடுக்கலாமா என்று வினவினான்.

“அந்தச் சொமதாங்கி கல்லு பக்கம் போக கூடாதுனு எங்கம்மா சொல்லும்ல... வேணாம்” வேகமாக மறுத்தான் வேலன்.

“ஏன்ல?”

“இந்தக் கல்ல ஒத்தபனை கிட்ட இருந்து அங்குவிலாஸ்காரரு எடுத்துட்டு வந்தாராம்... ஒத்தபனை கிட்ட தான் சுப்பாச்சிய வெட்டிக் கொன்னாங்களாம்ல... அவங்க ஆவி இந்தக் கல்லுக்குள்ள இருக்குனு எங்கம்மா சொல்லுச்சு”

அதை கேட்டதும் பேச்சிமுத்துவுக்கும் கொஞ்சம் திகிலானது. ஆனால் இளங்கன்று பயமறியாதல்லவா!

“மனுசங்க நூறுவயசு வரை தான் வாழுவாங்கல்ல... இடைல செத்துப் போனாலும் நூறுவருசம் கழிச்சு அவங்க சாமி கிட்ட போயிருவாங்கனு பூசாரி சொல்லுவாரு... சுப்பாச்சியும் சாமி கிட்ட போயிருக்கும்ல... இந்தக் கல்லு வெறும் கல்லு தான்” என்று சொன்னதோடு வேலனையும் அதனருகே இழுத்துச் சென்றான்.

காட்டுக்கொடிகளும் மரங்களும் சூழ்ந்து பாதியுயரம் வரை பசுமை மறைத்து காணப்பட்டது அந்தக் கல். அதைப் பார்த்தால் ஆண்டாண்டு காலமாக அங்கேயே கிடப்பதை போல தான் தெரிந்தது.

அந்தக் கல்லை தோட்டத்தின் சொந்தக்காரரும் பெரிதாக கவனித்ததில்லை. ஊர்க்காரர்களும் அப்பகுதிகளில் வைக்கப்படும் சுமைதாங்கிக்கல் என்றே அதை எண்ணியிருந்தனர். அத்துடன் அக்கல்லை பற்றிய வதந்திகளும் அந்த வட்டாரத்தில் பிரபலம்.

கிராமங்களில் நீண்டகாலமாகப் பேசப்படும் வதந்திகளும் புரளிகளும் செவிவழிக்கதைகளாக மாறிவிடும்! அப்படி தான் ஒற்றைப்பனைமரத்தை இந்தக் கல்லுடன் இணைத்துப் புனையப்பட்ட வதந்தியும் செவிவழிக்கதையாகவே மாறிப்போய்விட்டது அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரைக்கும்.

பேச்சிமுத்துவும் வேலனும் சிறுவர்கள் தானே! அவர்கள் அந்த செவிவழிக்கதையைக் கேட்டுவிட்டு அந்தக் கல்லை கண்டு பயந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லையே!

பேச்சிமுத்து தன் அச்சத்தை ஒதுக்கிவிட்டு அந்தக் கல்லை நெருங்கியவன் “இங்க வால வேலா” என்று அவனையும் இழுத்து தன்னருகே நிறுத்திக்கொண்டான்.

“போனை பாருல” என்று அதட்டிவிட்டு செல்பி எடுத்தவனின் பின்னே இருந்த செடியும் புதரும் மட்டுமே புகைப்படத்தில் விழுந்தது.

“அந்தக் கல்லு தெரியவே மாட்டிக்கு”

பேச்சிமுத்து குறைபடவும் வேலன் பயம் நீங்கி “இந்தச் செடி மறைக்குதுல... இதை பிச்சி போட்டுட்டா கல்லு கிளியரா தெரியும்” என்று உபாயம் கூறினான்.

இரு சிறுவர்களும் அந்தக் கல்லை சுற்றி மண்டிக் கிடந்த செடிகளையும் ஆளுயர புற்களையும் பிடுங்கத் தொடங்கினர். “இத லெச்சுமிக்குப் போட்டுட்டு வாரேன்ல” என்று செடிகொடிகளைக் கையில் அள்ளிக்கொண்ட வேலனுடன் பேச்சிமுத்துவும் சேர்ந்துகொண்டான்.

இருவரும் வியர்க்க விறுவிறுக்க அந்தக் கல்லை சுற்றிக் கிடந்த செடிகொடிகளை அகற்றி முடித்ததும் கல் பளிச்சென்று தெரிந்தது. கூடவே அதில் செதுக்கியிருந்த உருவமும் தெரிந்தது.

வெயிலிலும் மழையிலும் கேட்பாரின்றி கிடந்து கருமை நிறத்தில் சற்றே பாசி பிடித்திருந்த அந்தக் கல்லின் நடுவே ஒரு மனிதன் ஓங்கிய வாளுடன் நிற்பது போலவும் மற்றொரு கையில் வாளின் உறையைத் தாங்கியிருப்பது போலவும் செதுக்கப்பட்டிருந்தது.

இத்தனை நாட்கள் செடிகொடிகளுக்கு இடையே வெறுமெனே தெரிந்த மேல்பாகத்தை மட்டும் தான் அனைவரும் பார்த்திருக்கின்றனர். இன்று அதில் செதுக்கியிருந்த உருவத்தைக் கண்டதும் இரு சிறுவர்களுக்கும் திகைப்பு.

“லேய் வேலா இத பாருல... சொமதாங்கி கல்லு வெறுமன தான இருக்கும்... இதுல என்னமோ செதுக்கிருக்கு” என்று அந்தக் கல்லில் இருந்த பாசியைச் சுரண்டியபடி கூறினான் பேச்சிமுத்து.

“ஆமால... இது நம்ம சொல்லமாடச்சாமி மாதிரில்லா இருக்கு... கைல அருவா இருக்கு பாருல... அப்போ இது சாமிக்கல்லு போல” என்ற வேலன் கன்னத்தில் பயபக்தியுடன் போட்டுக்கொண்டான்.

“சொல்லமாடச்சாமி கத்தி மட்டும் தான வச்சிருக்கும்... இந்தக் கல்லுல இருக்குற ஆளு இன்னொரு கைல வேற என்னமோ வைச்சிருக்காருல” இருவரும் அந்தக் கல்லில் செதுக்கியிருந்த உருவத்தை மீண்டும் உற்றுநோக்கினர்.

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நமது வேலை செல்பி எடுப்பது என்று மீண்டும் அதில் மூழ்கிப்போயினர். மதியவெயிலில் பழையசோறும் மோர்மிளகாயும் தேவாமிர்தமாக இருக்க அதைச் சாப்பிட்டுவிட்டு அந்தக் கல்லில் சாய்ந்துகொண்டு இருவரும் ஆடுபுலி ஆட்டத்தில் ஆழ்ந்தனர்.

“இந்தக் கல்லு சில்லுனு இருக்குல” – பேச்சிமுத்து அதில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் குளுமையை அனுபவித்துக் கூறினான்.

“கெணத்துப்பக்கத்துல கெடக்குலா... அதான் சில்லுனு இருக்கு” என்றான் வேலன்.

“இது சாமிக்கல்லா இல்ல சொமதாங்கி கல்லானு தெரியலயே... கொழப்பமா இருக்குல” என்ற பேச்சிமுத்து வாட்சப் குழுமத்தில் தங்களின் செல்பிகளுடன் அந்தக் கல்லின் புகைப்படத்தையும் பகிர்ந்தான்.

“எதுவா வேணாலும் இருக்கட்டும்ல... மொதெல்லாம் இந்தக் கெணத்துக்கு குளிக்க வரப்ப எங்கம்மா சொன்ன கதைய நம்பி இந்தக் கல்லுல சுப்பாச்சி ஆவி இருக்குனு பயப்புடுவேன்... இனிம பயமில்ல” என்றான் வேலன்.

இப்படியே நேரம் கடக்க மாலை நேரம் ஆனதும் இருவரும் லெட்சுமியை அழைத்துக்கொண்டு அந்தக் கல்லை பிரிய மனமின்றி கிளம்பினர்.

வீட்டுக்கு வந்த பேச்சிமுத்துவிடம் “போனை எத்தனை செதறலா கொண்டு வந்திருக்க?” என்று கிண்டலாக கேட்டபடி வாங்கி கொண்டாள் அவனது அன்னை வடிவு.

வளர்மதியிடமும் அவளிடமும் அந்தக் கல்லை பற்றி சொல்லலாமா வேண்டாமா என இரட்டைமனமாக தவித்தான் சிறுவன் பேச்சிமுத்து. ஒருவேளை வேலனின் தாயைப் போல வடிவும் அந்தக் கல்லுக்கும் ஒற்றைப்பனைக்கும் முடிச்சு போட்டுப் பேசி இனி அவனை அங்குவிலாஸ்காரர் தோட்டத்திற்கு அனுப்பவில்லை என்றால் என்ன செய்வது!

இரவில் போனில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க “அது என்னல டொய்ங் டொய்ங்க்னு சத்தம் கேக்குது? அமத்தி போடு” என்றாள் வடிவு.

பேச்சிமுத்து போனை எடுத்துப் பார்த்தவன் தங்களின் செல்பிக்களைப் பற்றி ஊரின் இளவட்டங்கள் பேசுவதைப் பார்த்துவிட்டு போனுடன் அன்னையிடம் ஓடினான்.

“பாத்தியாம்மா நானும் வேலனும் எடுத்த செல்பி நல்லாருக்குனு முருகண்ணன் சொல்லுது”

பெருமிதமாக உரைத்தவனையும் போனையும் மாறி மாறி பார்த்த வடிவிற்கு எதுவும் புரியவில்லை. அவளுக்கு இந்த ஆண்ட்ராய்ட் போன் பயன்பாடும் வாட்சப்பும் இன்னுமே புரியாத கம்பசூத்திரம் தான்.

வளர்மதியோ “அவங்க உன்னைய பத்தி பேசல முத்து... நீ போட்டோ எடுத்த கல்லை பத்தி கேக்குறாங்க” என்றாள் அந்த குழுமத்தின் உரையாடலை வாசித்தவளாக.

வடிவோ “எந்தக் கல்ல போட்டோ எடுத்தல?” என்று பதற்றமாக வினவ

“அங்குவிலாஸ்காரரு கெணத்துப்பக்கம் கிடக்குற கல்ல தான் எடுத்தேன்மா” என்றான் பேச்சிமுத்து.

உடனே வடிவு திகிலடைந்தாள்.

“ஏ கூறுகெட்டபயலே! அதுல ஒத்தப்பனை சுப்பாச்சி ஆவி இருக்குனு யாருமே அது பக்கத்துல கூட போவமாட்டோமே... நீ அங்கனக்குள்ள போட்டோ வேற புடிச்சியாக்கும்... இதுக்குத் தான் இவன் கிட்ட போனை குடுக்காதனு சொன்னேன்... நீ என் பேச்சை கேட்டியாலா?” என்று அவனையும் வளர்மதியையும் ஒரு சேர வறுத்தெடுத்தாள்.

“எம்மா ஆவி பேய்லாம் கட்டுக்கதைம்மா... நீ இன்னமும் அத நம்புறியா?” – வளர்மதி.

“அப்பிடி சொல்லுக்கா... நான் பகல் முச்சூடும் அங்கன தான இருந்தேன்... நானும் வேலனும் அந்தக் கல்லுல சாஞ்சு ஆடுபுலியாட்டம் வெளையாண்டோம்... சுப்பாச்சி கல்லுக்குள்ள இருந்துச்சுனா என் ரெத்தத்தை குடிச்சிருக்கும்ல” என்ற பேச்சிமுத்துவின் முதுகில் இரண்டு அடி போட்ட வடிவு திருநீறை அள்ளி அவன் நெற்றியில் பூசினாள்.

“ஐயா சொல்லமாடச்சாமி எம்புள்ளய நீ தான் கூடவே இருந்து பாத்துக்கணும்” என்ற வேண்டுதல் வேறு!

அக்காவும் தம்பியும் இதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டனர்.

வளர்மதியோ “முருகண்ணன் உன்னைய பாராட்டிருக்கு பாருல... நாளைக்கு காலைல உன் கிட்ட பேசுறேன்னு சொல்லிருக்கு” என்றாள் பெருமையாக.

முருகன் என்பவர் பத்திரிக்கையாளர்களுடன் நல்ல நட்பில் இருக்கும் மனிதர். ஊரின் இளைஞர்கள் அவ்வபோது வாட்சப் குழுவில் பகிர்ந்துகொள்ளும் தகவல்களைப் பார்ப்பதும் பாராட்டுவதுமாக அவர்களுடன் நல்ல உறவை வைத்திருந்தார்.

வளர்மதியைப் பொறுத்தவரை அவர் தான் தங்களது கிராமத்திலேயே பெரிய புத்திசாலி. அப்படிப்பட்டவர் தனது தம்பியைப் பாராட்டுவதைக் கண்டு அவள் அகமகிழ்ந்து போனாள்.

அக்காவின் சொற்களைக் கேட்டுவிட்டு உறங்க ஆரம்பித்த பேச்சிமுத்துவிற்கு அன்று கனவில் மீண்டும் அந்தக் கல்லும் அதிலிருந்த வாளோங்கிய மனிதனும் வந்தனர்.

மறுநாள் விடியலில் லெட்சுமியின் ‘ம்மா’வில் கண் விழித்தவன் பல் துலக்கிக் கொண்டிருந்த போதே வேலன் ஓடிவந்தான்.

“லேய் முத்து உன்னைய முருகண்ணன் கூப்புட்டுச்சு”

பாத்திரத்தைக் கழுவிக்கொண்டிருந்த வடிவு ஏன் என பார்வையால் வினவ “அங்குவிலாஸ்காரரு தோட்டத்துல கெடந்த கல்லு ரொம்ப பழங்காலத்து கல்லாம் அத்த... முத்து எடுத்த போட்டோவ நேத்து ராத்திரியே முருகண்ணன் பேப்பர்காரங்களுக்கு அனுப்பிடுச்சாம்... இன்னும் ஆபிசருங்க வந்து பாத்துட்டு பேப்பர்ல சேதி போடுவாங்களாம்”

விலாவரியாக விளக்கிய வேலனுடன் பேச்சிமுத்து மட்டுமன்றி வடிவும் சேர்ந்து முருகனின் இல்லத்துக்கு விரைந்தாள்.

அவளைக் கண்டதும் “வாங்கக்கா” என்று முகமலர்ச்சியுடன் வரவேற்றார் முருகன்.

“இவன் எதுவும் தப்பு பண்ணீட்டானா தம்பி? எனக்கு மனசு கெடந்து அடிக்குதுப்பா” மருண்டு போய் வினவிய வடிவையும் பேச்சிமுத்துவையும் திண்ணையில் அமரச் சொன்னவர் “வேணி காபி கொண்டு வா” என்று சொல்லிவிட்டு சம்பவத்தை விளக்க ஆரம்பித்தார்.

அதாவது பேச்சிமுத்து எடுத்த புகைப்படத்தில் இருந்த அங்குவிலாஸ்காரரின் தோட்டத்து கல் சாதாரணக்கல் இல்லை. ஊர்மக்கள் சொல்வது போல அது சுமைதாங்கி கல்லும் இல்லை.

புகைப்படத்தைத் தனது பத்திரிக்கை நண்பர்களுக்கு அனுப்பி இருப்பதாகக் கூறியவர் அந்தக் கல்லை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த பிறகு செய்தித்தாளில், தொலைக்காட்சிகளில் அதை பற்றி விளக்குவார்கள் என்றார்.

கூடவே “இவன் படிக்கலனு வருத்தப்படாதிங்க அக்கா... இவனை வேற வழில மோல்ட் பண்ணிருவோம்” என்று நம்பிக்கை அளித்தார்.

பேச்சிமுத்து வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி “தேங்ஸ் அண்ணே!” என்று சொல்ல வடிவுக்கோ மகனை எண்ணி எல்லையில்லா பெருமிதம்.

அன்றைய தினத்துக்குப் பின்னர் தொல்பொருள் துறையினர் அங்கே வருகை தந்து அந்தக் கல்லையும் அதன் கீழே இருந்த குறியீடுகளையும் ஆராய்ந்ததில் அது பண்டைகாலத்தில் போரில் உயிர்நீத்த வீரனின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல் என்பது தெரியவந்தது.

அது எழுப்பப்பட்ட காலம் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் நாட்கள் பிடிக்கும் என்றவர்கள் பாண்டிய மன்னர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட நடுகல்லாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்று குறிப்பிட்டனர்.

அத்துடன் அதை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவன் என்ற முறையில் பேச்சிமுத்துவைப் பற்றியும் செய்தித்தாள்களில் படத்துடன் செய்தி வந்தது.

அதைக் கண்டதும் ஊர்க்காரர்களுக்குப் பெருமைபிடிபடவில்லை. வடிவோ அங்குவிலாஸ்காரரின் பாராட்டில் ஆகாயத்தில் பறந்தாள். பேச்சிமுத்துவுக்கு ஊர் சிறுவர்கள் மத்தியில் பாராட்டுமழை தான்.

“என் மகனுக்குத் தான் எம்புட்டு அறிவு” என்று நெட்டிமுறித்து திருஷ்டி கழித்த வடிவிடம்

“எம்மா நான் அன்னைக்கு போன்ல ஒரு நியூஸ் காட்டுனேன்ல, ஒரு சின்னப்பிள்ளை அவங்கம்மா அப்பா கூட கடற்கரைக்குப் போனப்ப டைனோசர் கால்தடத்த பாத்து அத உலகத்துக்கு காட்டுச்சுனு, அத மாதிரியே நம்ம முத்துவும் அந்தக் கல்ல உலகத்துக்கு காட்டிருக்கான்மா” என்று பெருமையாக உரைத்தாள் வளர்மதி.

பேச்சிமுத்துவோ “எம்மா ஞாயித்துக்கிழமை பிரியாணி செய்வியா?” என்று ஆவலுடன் வினவ

“உனக்கு இல்லாத பிரியாணியா? செஞ்சுட்டா போச்சு” என்றாள் வடிவு.

“அப்ப நான் இனிம லெச்சுமிய அங்குவிலாஸ்காரரு தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போனா எனக்குப் போன் தருவியா?” என்று சமயோஜிதமாக அடுத்தக் கேள்வியைக் கேட்ட பேச்சிமுத்துவை பொய்கோபத்துடன் முறைத்தாள் வடிவு.

அக்காவும் தம்பியும் நமட்டுச்சிரிப்பு சிரித்தனர்.

“எம்மா அன்னைக்கு நான் போன் கொண்டு போவலனா இன்னைக்கு என் பேர் பேப்பர்ல வந்திருக்குமா நீயே சொல்லு” என்று புத்திசாலித்தனமாக வினவிய மகனையும் அவனுடன் சேர்ந்து நகைத்த மகளையும் பார்த்து மனம் நிறைந்து போனாள் வடிவு.

அவனை இனி அங்கே மேய்ச்சலுக்கு அனுப்பும் போது போனை கொடுத்துவிடுவாளோ இல்லையோ முன்பு போல ஆவி பேய் என்ற மூடநம்பிக்கைகளில் மனம் உழன்று பயப்படமாட்டாள். இதற்கு காரணமான அந்த நடுகல் அங்குவிலாஸ்காரரின் தோட்டத்தில் கம்பீரத்துடன் நின்றிருந்தது, அதில் செதுக்கப்பட்டிருந்த வீரனைப் போலவே!

***********

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

இந்தக் கதை உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன்... அப்புறம் கிராமத்துல போன், வாட்சப் க்ரூப், செல்பினுலாம் எழுதிருக்கேன்னு யோசிக்காதீங்க.... நான் இப்போ இருக்குறதும் கிராமம் தான்... ஒரு டீக்கடை கூட இல்லாத குக்கிராமம்... இங்க உள்ள சின்னப்பசங்க என்னை விட போனை நல்லாவே யூஸ் பண்ணுவாங்க... ப்ளஸ் கிராமம்னதும் பழைய பாரதிராஜா படத்துல வர்ற மாதிரியே தான் இருக்கும்ங்கிற மாயை இன்னும் நிறைய பேருக்கு இருக்கு... அப்பிடிலாம் இல்லங்க... இங்கயும் மக்கள் முன்னேறிட்டாங்க!

நன்றி

நித்யா மாரியப்பன்​
 

Nithya Mariappan

✍️
Writer
மறைக்கப்பட்ட வரலாறுகள் நடுகல்லில் உண்டு.
ஆமா சகோ... எங்க ஊர்ல கிடைச்சது வெறும் பாதம் மட்டும் இருக்குற மாதிரி ஒரு சிலைனு சொல்லுவாங்க... அதை என்ன பண்ணுனாங்கனு யாருக்குமே தெரியல... வயசான ஆச்சிகள் இந்தக் கதைய சொல்லி கேட்டிருக்கேன்... அதை கொஞ்சம் மாத்தி பிரதிலிபி டாபிக்குக்கு எழுதுனேன்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom