• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சாதனை

Nithya Mariappan

✍️
Writer
சாதனை

காலையில் கண் விழித்தபோதே அடிவயிற்றில் சுருக்கென்ற வலி. உடனே அவளது விழிகள் அருகில் படுத்திருந்த கணவனைத் தாண்டி கிடந்த செல்பேசியை நோக்கியது.

அதை எடுத்து தொடுதிரையில் இன்றைய தேதியைப் பார்த்தவள் “இன்னும் ரெண்டு நாள் இருக்கு... இது என்னவோ சூட்டு வயித்தவலியா இருக்கும்” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு அவிழ்ந்து கிடந்த கூந்தலை கொண்டையிட்டாள்.

அருகில் உலகை மறந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனின் புஜத்தைத் தட்டி “ஆதிப்பா நேரமாச்சு... எழுந்திரிக்கலயா?” என்று கேட்க

“இவ்ளோ சீக்கிரம் எழுந்திரிச்சி நான் என்ன பண்ணப்போறேன் பாமா?” என்று உறக்க கலக்கத்தில் உளறிவிட்டு புரண்டு படுத்தான் அவளது கணவன் ஜெகந்நாதன், சுருக்கமாக ஜெகன்.

அது என்னவோ உண்மை தான். அவன் எழுந்து செய்கிற காரியம் என்று எதுவுமில்லையே!

திருநெல்வேலியின் மீனாட்சிபுரம் பகுதியில் கீழ்வீட்டை வாடகைக்கு விட்டு அந்த வாடகைப்பணத்தில் வாழும் மாமியாருடன் மாடியிலுள்ள வீட்டில் சேர்ந்து வசித்தனர் பாமாவும் ஜெகந்நாதனும். அந்த அம்மாள் எழுந்ததற்கு அடையாளமாக சமையலறையில் எதையோ உருட்டும் சத்தம் கேட்டது.

இனியும் தாமதித்தால் இன்றைய தினம் முழுவதும் “மருமக இருக்கானு தான் பேரு... எல்லா வேலையும் நானே தான் செய்ய வேண்டியிருக்கு” என்று மூக்கால் இழுத்தபடி பாடும் கோமதியம்மாளின் இராகம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

வேகமாக அவர்களின் அறையை விட்டு வெளியே வந்தவள் பல் துலக்கிவிட்டு வரவும் “இன்னைக்கு எதுக்கும் நாலு குடம் தண்ணி எக்ஸ்ட்ராவா எடுத்து வச்சிட்டுப் போ... தூத்துக்குடில இருந்து சுதா வர்றா” என்ற செய்தியோடு காபி தம்ளர் நீட்டப்பட்டது.

பழுப்புநிற மடைத்தண்ணீர் போல இருக்கும் அந்தச் சர்க்கரை கரைசல் காபி தான் என்று இங்கே வந்த ஆறு வருடங்களில் நம்ப பழகியிருந்தவள் வழக்கம் போல கஷாயத்தை விழுங்குவது போல நாவில் படாமல் தொண்டையில் ஊற்றிக்கொண்டாள்.

“கொஞ்சம் கம்மியா தண்ணி கலக்கலாமே அத்தை” என்ற வார்த்தை தொண்டைக்குள் அந்த பழுப்புநிற சர்க்கரை கரைச்சலால் சமாதியாக்கப்பட்டது.

“என்னம்மா பண்ணுறது? உன்னைய மாதிரி சீமராணிக்கு இந்த காபி மட்டமா தான் தெரியும்” என்பார் மாமியார். அதை கேட்கும் பொறுமை அவளுக்கு இல்லை.

குடங்களுடன் விறுவிறுவென படிகளில் இறங்கியவள் தெரு பம்பில் ஆள் இல்லையென அறிந்ததும் மடமடவென குடங்களை வைத்தாள்.

தினசரி உபயோகத்திற்கான தண்ணீர் அந்த கைப்பம்பில் தான் அடித்து எடுக்கவேண்டும்.

காலையில் எழுந்து இந்த தண்ணீர் எடுத்து தரும் வேலையையாவது செய்து தரலாம் என எத்தனை முறை ஜெகனிடம் சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கின் நிலை தான்!

ஒரு முறை மாமியார் காது பட கேட்டு அது ஒரு பெரிய சண்டையில் முடிந்தது எல்லாம் வேடிக்கை!

“அவனே நாள் முழுக்க கடைல நின்னு வேலை பாக்கான்... உனக்கும் அவன் சேவை பண்ணணுமா?”

“அப்போ நான் மட்டும் ஊஞ்சலா ஆடிட்டு வர்றேன்? நானும் அக்கவுண்டெண்ட் ஆபிஸ்ல முதுகு ஒடிய கம்ப்யூட்டர்ல வேலை பாக்க தான் செய்யுறேன்... அது போக வீட்டுலயும் ஒரு செம வேலை... உங்க மகன் காலையில எழுந்திரிச்சி நாலு குடம் தண்ணி எடுத்து வச்சா என்னவாம்?”

வாக்குவாதம் முற்றி மாமியார் மூன்று நாட்கள் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டது வேறு கதை!

பழைய நினைவுகளில் தண்ணீர்க்குடங்களுடன் மாடிப்படியை ஏறியவளுக்கு மீண்டும் அடிவயிற்றில் சுருக்! அதை அலட்சியப்படுத்திவிட்டு தண்ணீர்க்குடங்களை குளியலறையில் வைத்தவள் மாமியார் எடுத்து வைத்திருந்த பித்தளை விளக்குகளை எடுத்துச் சென்றாள்.

பீதாம்பரியில் பளபளத்த விளக்குகளை ஈரம் போக உலர வைத்துவிட்டு நிமிர நேரம் ஏழரை மணி. இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் அவள் அலுவலகத்தில் இருக்கவேண்டும்.

அலுவலகம் என்றால் கார்பரேட் அலுவலகம் எல்லாம் இல்லை. இதோ நடந்தால் வருகிற தூரத்தில் இருக்கும் கைலாசபுரம் பகுதியில் ஒரு வணிகவளாகத்தில் அமைந்திருக்கும் அக்கவுண்டெண்ட் ஆபிஸ் தான்.

ஆனால் சமையலறையில் எல்லாம் அரைகுறையாக கிடந்ததே! உடனே அங்கே சென்றவள் காபி போட்ட பாத்திரம், தம்ளர்களை கழுவி அடுக்கிவிட்டு காலையுணவு, மதியவுணவுக்கான ஆயத்தத்தை ஆரம்பித்தாள்.

காலைக்கு இட்லி சாம்பார், மதியத்திற்கு சாதம், சாம்பார், முட்டைக்கோஸ் பொறியல் என முடித்து நிமிர்ந்த போது மாமியார் நடுஹாலில் அமர்ந்து இன்றைய ராசிபலனை கேட்டுக்கொண்டிருந்தார்.

கொடுத்து வைத்த பெண்மணி! பெருமூச்சுடன் குளியலறைக்குள் நுழைந்து தாழிட்டவள் குளித்து முடிக்கையில் அடிவயிற்று வலிக்கான காரணமும் தெரிந்துவிட அவளது முகம் கூம்பிப்போனது.

உடைமாற்றிவிட்டு வந்தவளை கட்டிக்கொண்டான் ஆதித்தன். அவளது ஐந்து வயது மகன். அவன் தாத்தா செல்லம் என்பதால் அவருடன் தூங்கி எழுந்தவன் “என்னை குளிப்பாட்டி விடுமா” என்று செல்லம் கொஞ்ச அவனை குளிப்பாட்டச் சென்றாள் பாமா.

அவனுக்குத் தலை துவட்டி சீருடையை அணிவித்து முடிக்கையில் மாமியார் வரவும் அவரிடம் “அத்தை நான் விலக்காயிட்டேன்” என்று முணுமுணுக்கவும் அந்தப் பெண்மணியின் முகம் இறுகிப்போனது.

“ஒரு நல்ல நாள் பொல்லாத நாள் கிடையாது... இன்னைக்கு செவ்வாய்க்கிழமை... உலகம்மன் கோவில்ல கொடைக்கு ஜெகன் காப்பு கட்டுறதா இருக்கான்... இன்னைக்குனு பாத்தா இப்பிடி ஆகணும்? நீ விளக்கை வேற தொட்டுட்டியே... போ உன்னால எனக்கு ரெண்டு வேலை”

அவரது புலம்பல் அவளுக்கு எரிச்சலை கொடுத்தது. அவளது கர்ப்பப்பைக்கான சாவி அவள் கையிலா இருக்கிறது? பைத்தியக்காரத்தனமான இம்மாதிரி பேச்சுகளை சகித்து போய் பழகிவிட்டதால் ஒன்றும் பேசாமல் மைந்தனுக்கு இட்லியை ஊட்டிவிட்டாள்.

இத்தனை களேபரங்கள் முடிந்து மாமனாருடன் மகனை பள்ளி வேன் ஏறும் இடத்துக்கு அனுப்பி வைத்த பின்னர் மெதுவாக சோம்பல் முறித்தபடி வந்தான் அவளது கணவன் ஜெகந்நாதன்.

அவனைக் கண்டதும் சற்றே எரிச்சலாக கூட இருந்தது. என்ன மனிதன்! மனைவி இத்தனை வேலையையும் ஒற்றை ஆளாக செய்வது கூடவா கண்ணில் படாது?

அவனைச் சொல்லி குற்றமில்லை! இது தானே சராசரி இந்திய ஆண்மகனின் குணம்! அவனது அன்னைக்கு தந்தை கூடமாட உதவி செய்வதை பார்த்து வளர்ந்திருந்தால் அவனுக்கும் அந்த எண்ணம் வந்திருக்கும்! நமது வீடுகளில் தான் ஆண் என்றால் துரும்பை கூட கிள்ளிப்போடக் கூடாது என்பது சட்டமாயிற்றே!

வந்தவன் அவளைப் பார்த்து புன்னகைக்க பாமாவுக்கு சிரிப்பு வரவில்லை. அடிவயிற்றின் வலி குறுக்கெலும்பை நிமிண்ட அத்தோடு இத்தனை வேலைகளையும் செய்ததில் அவளது ஸ்டாமினா காலியாகிவிட்டது.

அவன் குளித்து முடித்து வந்ததும் குளியலறையில் அவன் கழற்றி வீசிய உடுப்புகளைத் துவைத்தவள் அவனுக்குச் சாப்பாடு எடுத்துவைத்து தனக்கு மதியத்துக்கான உணவையும் எடுத்துக்கொண்டாள். இரண்டு இட்லிகளை சாம்பாரில் குளிப்பாட்டி சாப்பிட்டு முடித்தாள்.

நேரம் ஒன்பதை நெருங்க அவசரமாக கிளம்பியவளிடம் “இன்னைக்கு மட்டும் நான் பாத்திரத்த கழுவி வச்சிடுறேன்... இதயே வாடிக்கை ஆக்கிடாத” என்று குறைபட்டபடி சமையலறைக்குள் சென்ற மாமியார் “ஒவ்வொரு வீட்டுலயும் மருமக வேலை செய்ய, மாமியார் உக்காந்து சாப்பிடுறா... இங்க இவ என்னமோ ஊர்ல இல்லாத வேலைக்கு போற மாதிரி அரையும் குறையுமா வடிச்சு வச்சுட்டு போறா... எல்லாம் எங்க நேரம்” என்று புலம்புவது காதில் விழுந்தாலும் வழக்கம் போல அதை கேட்காதவளைப் போல மாமனாரிடம் விடைபெற்றாள்.

“ஜெகா பாமாக்கு உடம்பு சரியில்ல போல... நீ அவ காம்ப்லெக்ஸ் முன்னாடி இறக்கிவிட்டுருடா” ஆதுரத்துடன் ஒலித்தது மாமனாரின் குரல்.

“எனக்கு கடைக்கு லேட் ஆகுதுப்பா... இன்னைக்கு கூட்டம் அள்ளும்... லேட்டா போனா பேட்டா கட் ஆயிடும்” என்றான் அசிரத்தையுடன் அவளது கணவன். பிரசித்தி பெற்ற சாந்தி ஸ்வீட்டில் கல்லாவில் காசு வாங்கிப்போடும் பணி அவனுடையது.

“இது சரியா வராது... பாமா நீ ஸ்கூட்டருக்கு எழுதிவிடு... இந்த பய எதுக்கு? நீயே ஜம்முனு போய் ஆபிஸ்ல இறங்கிடு” என்றார் மாமனார்.

“ஒரு வீட்டுக்கு ரெண்டு வண்டி எதுக்குப்பா... இங்க இருக்குது கைலாசபுரம்... நடந்து போகுறது ஒன்னும் கஷ்டமில்லயே”

“நேத்தே அந்தப் பொண்ணு சொல்லுச்சுல்ல, ஓனர் லேட்டா வர்றதுக்கு திட்டுறார்னு”

“ஓனர்னா திட்டுறது வழக்கம் தானே... நான் திட்டு வாங்குறேன்ல, இவ மட்டும் என்ன ஸ்பெஷலா?”

கிண்டலுடன் ஒலித்த குரல் அவளுக்கு கோபத்தை உண்டாக்கியது. என்ன மனிதர்கள் இவர்கள்! நான் என்ன பவுனும் பவுசுமாக அலைவதற்கா வேலைக்குச் செல்கிறேன்?

இத்தனை நாட்கள் மனதில் புதைந்து கிடந்த வார்த்தைகள் எரிமலையாய் வெடித்துச் சிதறியது.

“நீங்க சொகுசா எட்டுமணி வரைக்கும் உறங்கி லேட்டா போறதும் நான் உங்க எல்லாருக்கும் ஊழியம் பாத்து இங்கே ஏச்சுபேச்சு வாங்கிட்டு, அங்கயும் லேட்டா போய் அந்த மனுசன் கிட்ட ஏச்சு பேச்சு வாங்குறதும் ஒன்னா? என்னை இரும்புலயா செஞ்சு வச்சிருக்கு? ஒரு நாள் பாத்திரம் கழுவ உங்கம்மா சலிக்கிறாங்க... நீங்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம குளிச்சு முடிச்சிட்டு ஈரத்துண்டு முதற்கொண்டு வீசிட்டு வர்றிங்க? உங்க துணிய கூட துவைக்க முடியல... ஆனா நான் காலைல வயித்துவலியோட எட்டு குடம் தண்ணி சுமந்து விளக்கு தேச்சு, பாத்திரம் கழுவி, ரெண்டுவேளைக்குச் சமைச்சு, நீங்க கழட்டிப்போடுற ஜட்டி முதற்கொண்டு துவைச்சு காயப்போட்டுட்டு முதுகெலும்பு ஒடிய நிக்குறேன்... ஆனா என்னைய ஆபிஸ்ல இறக்கிவிட உமக்கு கஷ்டமா இருக்கு... நானும் மனுசி தானே... உதவி செய்யலனாலும் உபத்திரவம் குடுக்காம இருக்கலாமே...

இதுக்கு தான் வேலைய விட்டு நின்னுடுறேன்னு சொன்னேன்... ஸ்கூட்டி டியூவ காரணம் சொன்னீங்க... ஆதி படிப்பை காரணம் சொன்னீங்க... என் சம்பளத்தை வச்சு டியூ கட்டுற ஸ்கூட்டில என்னை ஆபிஸ் வாசல்ல இறக்கிவிட கஷ்டமா இருக்கு... கைலாசபுரத்துல இருந்து சாந்தி ஸ்வீட் என்ன மைல் தொலைவிலயா இருக்கு? மனுசன்னா இரக்கம் வேணும்... நான் கட்டிக்கிட்டது இரக்கம் கெட்ட ஜென்மமா இருக்கு” என்று முழங்கிவிட்டு செருப்பை அணிந்தவள் “போயிட்டு வர்றேன் மாமா” என்று அவருக்கு மட்டும் சொல்லிவிட்டு ஜெகந்நாதனுக்குக் காத்திராமல் படிகளில் இறங்கினாள்.

கீழ் வீட்டு குடித்தனக்காரப்பெண் “என்னக்கா ரொம்ப கோவமா போறீங்க?” என வினவ அவளை முறைத்துவிட்டு பொதுவாயிலை கடந்து வீதிகளில் நடக்கத் துவங்கினாள்.

தோளில் அணிந்திருந்த கைப்பையும் கையில் பிடித்திருந்த லஞ்ச்பேகும் இவ்வளவு கனக்குமா என்ன? ஒருவேளை மனதின் பாரம் தான் இவ்வாறு எதிரொலிக்கிறதோ?

நடந்து பூர்ணகலா தியேட்டர் வரை வந்துவிட்டவள் வழக்கம் போல அவளை கீழ்க்கண்ணால் வெறித்த ஆட்டோ டிரைவரை முறைத்துவிட்டு வேகநடை போட்டாள்.

“அந்த வேன்ஸ்டாண்ட் பக்கத்துல நிக்குற முருகன் படம் போட்ட ஆட்டோக்காரன் என்னை வெறிச்சு பாக்கிறாங்க... எனக்கு அருவருப்பா இருக்கு... நீங்க கடைக்குப் போற வழி தானே... அவனை கூப்பிட்டு சத்தம் போடுங்க”

எத்தனை முறை சொல்லியிருப்பாள்? ஆனால் பதில் என்னவோ வழக்கமான அலட்சியம் தான்.

“ரோட்ல நடந்தா எல்லாரும் பாக்க தான் செய்வாங்க பாமா... அவன் உன்னை பாக்குறான்னு உனக்கு எப்பிடி தெரியுது? நீ அவனை பாக்க போய் தானே... நீ அவனை கவனிக்காம இரு... போதும்”

இப்படி பதில் வரும் போதெல்லாம் நிதர்சன வாழ்க்கை அவளை செருப்பால் அடிப்பதை போல உணர்வாள் பாமா. இப்போதும் அந்தச் செருப்பின் தடத்தைக் கன்னத்தில் உணர்ந்தவளாக வேலை பாக்கும் அலுவலகம் இருக்கும் வணிக வளாகத்தின் மாடிப்படையில் ஏறத் துவங்கினாள்.

அலுவலகம் என்றால் மூன்றுபக்கம் சுவரும் ஒரு பக்கம் கண்ணாடி தடுப்பும் கொண்ட சிறிய அறை தான். அதன் ஒரு பாதியை நீண்ட மர மேஜை ஆக்கிரமித்திருக்கும். அதில் மூன்று கம்ப்யூட்டர்கள்.

ஒன்று உரிமையாளரான அக்கவுண்டெண்டுக்கு சொந்தமானது. மற்ற இரண்டில் ஒன்று அவளது சொத்து. அவள் உள்ளே நுழையும் போதே அக்கவுண்டெண்ட் ஷோல்டர் பேக்குடன் தயாராகி நின்றார்.

“ஆலங்குளம் கிளையண்டை பாக்க போறேன் மேடம்... புவனா வந்துட்டா... அவளும் நீங்களும் ஆபிசை பாத்துக்கோங்க... கொஞ்சம் சீக்கிரம் வரலாமே”

“அவருக்கு லேட் ஆகுதுனு பாலத்து கிட்ட இறக்கிவிட்டுட்டு போயிட்டாரு சார்”

“ஆபிஸ்னா ஆளுக்கு ஒரு நேரம் கிடயாது... உங்களால காலையில சீக்கிரம் வர முடியலனா சாயங்காலம் ஏழுமணி வரைக்கும் வேலை பாருங்க... அதுக்கும் நீங்க ஒத்துக்கமாட்டிங்க... சாயங்காலம் சீக்கிரம் போகணும்னு மட்டும் தெரியுது... காலைல சீக்கிரம் வர மட்டும் மனசு இல்ல”

இது தினசரி நடப்பது தான். கேட்டு கேட்டு பழகி போய்விட்டதால் பாமாவுக்கு பெரிதாக ஒன்றும் வருத்தமில்லை. இனி சீக்கிரம் வருவதாக உறுதியளித்ததும் உரிமையாளர் முணுமுணுத்துவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியே செல்லவும் அவளுடன் பணியாற்றும் புவனா வரவும் சரியாக இருந்தது.

“எங்க போயிருந்த புவி?”

“பக்கத்து எல்.ஐ.சி ஆபிஸ் வரைக்கும் தான்... அந்த தாத்தா கிட்ட நியூஸ் பேப்பர் வாங்க போனேன்கா... நீங்க ஏன் டயர்டா இருக்கீங்க?”

படபடவென பொறிந்தவள் தனது பேக்கிலிருந்து எவர்சில்வர் டிபன் பாக்சை எடுத்து நீட்டினாள்.

பாமா கேள்வியாக நோக்கவும் “இன்னைக்கு அம்மா ஆப்பம் செஞ்சாங்க... உங்களுக்கு பிடிக்கும்னு எடுத்துட்டுவந்தேன்... சாப்பிட்டுட்டு சிஸ்டம்ல உக்காருங்க... நானும் நியூஸ் பேப்பரை வாசிக்கிறேன்” என்றாள்.

பாமாவும் வலிக்கு இதமாக ஒருத்தியாவது பேசுகிறாளே என ஆப்பம் சாப்பிட அமர்ந்தாள். வழக்கம் போல புவனா சத்தமாக செய்திகளை வாசித்து விமர்ச்சிக்க சிரித்தபடியே சாப்பிட்டும் முடித்தாள்.

“குத்துச்சண்டையில் மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார். இந்தியப்பெண்ணின் இமாலய சாதனை”

அவள் வாசித்ததும் பாமாவின் இதழ்களில் விரக்தி கலந்த புன்னகை. வேலைக்குச் செல்லும் நடுத்தரவர்க்கத்தின் குடும்பத்தலைவியாக அவள் சந்திக்கும் பிரச்சனைகள், மனவுளைச்சல்கள், வாழ்க்கைத்துணையின் அலட்சியம் என அனைத்தையும் சமாளிப்பதே மிகப்பெரிய சாதனை தான்.

பதக்கம் வாங்கினால் தான் இமாலயச்சாதனையா என்ன? ஒவ்வொரு சராசரி இந்தியப்பெண்ணும் இமாலயச்சாதனை புரிபவள் தான்.

அன்னை மருமகள் அவதாரத்தில் குழந்தைகளையும் வீட்டுவேலைகளையும் கவனித்து, அலுவலகத்திலும் எட்டுமணிநேரம் உழைத்து, வெளியிடங்களிலும் பணியிடங்களிலும் பெண் என்றாலே நாக்கை தொங்கவிட்டு அலையும் பல வெறிநாய்களைச் சமாளித்து, இதற்கிடையே மாதாந்திர உபாதை தரும் வேதனையையும் பொறுத்துக்கொண்டு, எந்த இடத்திலும் தனது விரக்தியைக் கொட்டிவிடாமல் கோபத்தைக் காட்டாமல் பொறுமையோடு நாட்களைக் கடக்கும் ஒவ்வொரு இந்திய குடும்பத்தலைவியும் சாதனை புரிகிறவளே!

என்ன ஒன்று, அவளது சாதனைக்கான அங்கீகாரத்தை நாம் தான் கொடுப்பதில்லை! வேதனையிலும் வேதனை அந்தச் சாதனைகளை நாம் கேலிக்கூத்தாக்கிவிடுகிறோம் “என்னமோ நீ மட்டும் தான் வேலைக்குப் போற மாதிரி ஓவரா அலுத்துக்கிற?” என்ற ஒற்றை வார்த்தையில்!

***********

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

டெய்லி டாபிக் கதை இது... உங்கள்ல நிறைய பேர் ஹோம்மேக்கரா இருப்பீங்க... ஒர்க்கிங் விமன்ஸும் இருப்பீங்க... இன்னும் சிலரோட மனைவி ஹோம்மேக்கர்/ஒர்க்கிங் விமனா இருக்கலாம்... அல்லது உங்களோட அம்மா இருக்கலாம்... அப்பிடிப்பட்டவங்க வாழ்க்கைல தினசரி நடக்குற நிகழ்வு தான் இது... சோபிஸ்டிகேட்டட் லைப்ஸ்டைல்ல இருக்குறவங்களுக்கு இது புரியாம போகலாம்... ஆனா ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தலைவிகளோட நிலையும் இது தான்... அவங்களுக்கு நீங்க சிலை வச்சு வணங்க வேண்டாம்... வீட்டு வேலைல கொஞ்சம் உதவுங்க... நம்மில் பாதிக்கு உதவுறதால நம்ம தரம் குறைஞ்சு போயிடமாட்டோம்னு நினைச்சுக்கோங்க... அவங்கள அலட்சியப்படுத்தாதீங்க... ஆல்ரெடி அம்மாக்கு, ஒய்புக்கு நாங்க உதவுறோம்னு சொல்லுறவங்களுக்கு ஹாட்ச் ஆஃப்... உங்களை நீங்களே முதுகுல பெருமையா தட்டிக்குடுத்துக்கோங்க...

நன்றி

நித்யா மாரியப்பன்​
 

Nithya Mariappan

✍️
Writer
en husband cook pannuvaar sis ithu penkalin thalai eluththu :(
குக் பண்ணுறது பெரிய விசயம் சிஸ்... சில வீடுகள்ல ஆண்கள் சமையலறைக்கு வர்றத விரும்புறதில்ல... வருங்கால தலைமுறைய இப்பிடி விட்டுடக் கூடாது... பெண்களோட கஷ்டநஷ்டத்த சொல்லி குடுத்து வளக்கணும்
 

Yuvanandhini

✍️
Writer
நல்ல கதை sis, அம்மாவும் இதே மாதிரிதான் ஆனா ஹோம்மேகேர், இந்த கதை அம்மாவோட பிரதிவின்பமா இருந்துச்சு, இனிமேல் இன்னும் அதிகமா உதவி செய்யலாம்னு இருக்கேன். :giggle: :giggle:
 

Nithya Mariappan

✍️
Writer
நல்ல கதை sis, அம்மாவும் இதே மாதிரிதான் ஆனா ஹோம்மேகேர், இந்த கதை அம்மாவோட பிரதிவின்பமா இருந்துச்சு, இனிமேல் இன்னும் அதிகமா உதவி செய்யலாம்னு இருக்கேன். :giggle: :giggle:
கண்டிப்பா செய்யுங்கம்மா🤗
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom