☔ மழை 7 ☔

யோகாவை உலகநாடுகள் கவனிக்கத் துவங்கிய பிறகே இந்தியாவில் அதற்கான ஆர்வம் அதிகரிக்கத் துவங்கியது. அதன் விளைவு இன்று புற்றீசல் போல பெருகிய யோகா மையங்கள். யோகா குரு என்ற போர்வையில் பாதகங்களை விளைவிக்கும் குற்றவாளிகள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தங்களது தினசரி வாழ்வில் உண்டாகும் கவலைகள், அலுவலகப்பணியினால் உண்டாகும் மன அழுத்தம் இதிலிருந்து மீள நினைக்கும் இளைய தலைமுறையினரும், ஓய்வுக்காலத்தை அமைதியாகக் கழிக்க விரும்பும் வயோதிகர்களும் இம்மாதியான போலி யோகா குருக்களிடம் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்துவிடுகின்றனர். உலகவாழ்வின் துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கும் பராபரமாக என்றைய தினம் குருக்களையும் பாபாக்களையும் பாதிரியார்களையும் மக்கள் நம்புகிறார்களோ அன்றைய தினம் அவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கையையும் முட்டாள்தனத்தையும் உபயோகித்து பணம் சேர்க்கும் போலி சாமியார் ஒருவர் பிறப்பெடுக்கிறார்.

யசோதரா புருவச்சுழிப்புடன் “நீங்களா?” என்று கேட்க அவர்களின் காருக்கு வெளியே நின்றிருந்தனர் ஸ்ராவணியும் அபிமன்யூவும்.

சித்தார்த்தால் ஸ்ராவணியை அடையாளம் காண இயலாவிட்டாலும் அபிமன்யூவை அவன் அறிவான், அதுவும் அவன் அமைச்சர் என்பதால்.

யசோதரா தன் பக்கத்து கதவைத் திறந்து கொண்டு அவர்களிடம் வந்து நின்றவள் “மேம் நீங்களும் சாரும் இங்க என்ன பண்ணுறீங்க? ஏன் பார்ட்டிக்கு வரல நீங்க?” என்று கேட்க அதற்கு ஸ்ராவணி பதிலளிப்பதற்கு முன்னர் அபிமன்யூ முந்திக்கொண்டான்.

“இன்னைக்கு மானிங்ல இருந்து உங்க மேம் மூட் அவுட்… அதான் பீச்சுக்கு வந்தோம்… அவங்க கோவத்தை எல்லாம் கடல்ல கரைச்சிட்டு இப்போ வீட்டுக்குப் போற வழில உங்க கார் எங்க கார் மேல மோத பாத்துச்சு” என்று முழுக்கதையையும் மூன்றே வரிகளில் கூறி முடித்தான் அவன்.

சித்தார்த் யசோதராவுடன் வந்து நிற்க அவனிடம் “ஏன் ஹீரோ சார் காரை பாத்து ஓட்டமாட்டீங்களா? வருங்கால மனைவி பக்கத்துல இருக்குறப்ப ஏன் கவனம் சிதறுது?” என்று கேட்டான் அபிமன்யூ.

சித்தார்த்தோ நமட்டுச்சிரிப்புடன் “என் கவனம் சிதறவே அவ தான் காரணம் சார்” என்றபடி யசோதராவைப் பார்க்க அவள் புன்சிரிப்பை முடிந்தவரை காட்டாமலிருக்க முயன்றாள்.

ஸ்ராவணி யசோதராவின் முகம் வியர்த்திருப்பதைப் பார்த்துவிட்டு “கார் மோதிடும்னு பயந்துட்டியா யசோ? எப்பிடி வேர்த்திருக்கு பாரு” என்று ஆதுரத்துடன் கூறிவிட்டு கைக்குட்டையை நீட்ட அதை நன்றியுடன் பெற்றுக்கொண்டாள்.

“ஓகே யசோ… ரொம்பநேரம் இப்பிடி நிக்கவேண்டாம்… அப்புறம் நாளைக்கு யூடியூப் சேனல்சோட தம்நெயில் முழுக்க நீங்க ரெண்டு பேரும் தான் இருப்பீங்க” என்று எச்சரித்த ஸ்ராவணி அபிமன்யூவை அழைத்துக்கொண்டு கிளம்ப அவர்களுக்குக் கையசைத்து வழியனுப்பி வைத்தனர் யசோதராவும் சித்தார்த்தும்.

அவர்களின் கார் கிளம்பியதும் “ஷால் வீ கோ?” என்று கேட்ட சித்தார்த்திடம் பதிலளிக்காது காரில் சென்று அமர்ந்தாள் யசோதரா.

அதன் பின்னர் சித்தார்த்தின் பீச் ஹவுசை அடையும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அங்கே காரை நிறுத்தியதும் இறங்கியவள் அவனுக்கு முன்னர் விடுவிடுவென நடந்து செல்ல

“எவ்ளோ வேகமா போனாலும் நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணணும் யசோ… ஏன்னா பங்களா கீ என் கிட்ட தான் இருக்கு” என்று கேலியாகச் சொன்னபடி வேக எட்டுகளை எடுத்து வைத்தபடி அவளைத் தொடர்ந்தான் சித்தார்த்.

உள்ளே நுழைந்ததும் அக்கடாவென சோபாவில் அமர்ந்தவளின் கரத்தைப் பற்றி எழுப்பியவன் “அங்க போய் பேசுவோம்” என்று கண்ணாடி பதித்த ப்ரெஞ்ச் விண்டோவைக் காட்டினான். அதன் வழியே பார்த்தால் வெளியே அலையடிக்கும் கடல் கண்ணுக்கு விருந்தாய் அமையும்!

இருவரும் அங்கே சென்று நின்றதும் யசோதரா அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க சித்து? என்னால முக்தி ஃபவுண்டேசன் மேல குடுத்த கேஸை வாபஸ் வாங்க முடியாது” என்றாள் அவள் உறுதியாக.

சித்தார்த் பேண்ட் பாக்கெட்டிற்குள் கைவிட்டபடி நின்றவன் “நீ வாபஸ் வாங்கணும்னு சொல்லுறதுக்காக உன்னை இங்க கூட்டிட்டு வரல யசோ… உனக்கு அங்க கிடைச்ச ஏமாற்றத்துக்காக நீ தாராளமா கேஸ் போடலாம்… இனிமே நான் அதுல தலையிட மாட்டேன்” என்று நிதானமாகக் கூறவும் யசோதராவின் விழிகள் கடலில் இருந்து மீண்டு அவளருகே நின்றவனிடம் திரும்பியது.

அதில் நிரம்பியிருந்த ஆச்சரியத்தைக் கண்டுகொண்டவன் “என்ன பாக்குற? ருத்ராஜி மேல எனக்கு இருக்குற அபிமானம் வேற விசயம்… அதுக்காக உன்னை ஹர்ட் பண்ணமாட்டேன்… எனக்குத் தெரிஞ்ச யசோதரா இது வரைக்கும் தப்பு பண்ணுனதில்ல… நான் அவளை என்னை விட அதிகமா நம்புறேன்” என்றான்.

யசோதராவின் மனதில் மெல்லிய நிம்மதி அலையாகப் பரவியது. முகம் விகசிக்க அவனை அணைத்துக் கொண்டவள் “தேங்க்யூ சோ மச் சித்து” என்றவள் தலை நிமிர்த்தி அவனை நோக்கினாள்.

அவளது கரங்கள் அவனது மார்பைத் தொட்ட போதே அவள் விரல்களில் தட்டுப்பட்டது அவன் வெண்ணிற சட்டைக்குள் அணிந்திருந்த ருத்திராட்சமாலை. அதைத் தொட்டதும் அவள் முகம் மாறிப்போனது.

அதை புரிந்துகொண்ட சித்தார்த் “நான் உன் தரப்பு நியாயத்த புரிஞ்சுகிட்டேன்ல… அதே மாதிரி நீயும் புரிஞ்சுக்கமாட்டியா யசோ?” என்று கேட்க

“ஐ வில் ட்ரை சித்து… ஒருத்தர் மேல நீ வச்சிருக்குற நம்பிக்கைய உடைக்கிறது ரொம்ப கஷ்டம்னு எனக்கு நல்லாவே தெரியும்… ஆனா உன்னோட நம்பிக்கை உடையுறப்போ உண்டாகுற வலியை நீ தனியா அனுபவிக்கிறது தான் எனக்குக் கஷ்டமா இருக்கு சித்து… ராகேஷ் விசயத்துல நடந்தது மறுபடியும் நடக்கக்கூடாதுனு தான் நான் கவலைப்படுறேன்” என்ற யசோதராவின் கண்களில் கலக்கம்.

“ஓ! நீ அப்பிடி வர்றீயா? சரி இனிமே என்னோட சந்தோசம் துக்கம் வலி எல்லாத்தையும் உன்னோட நான் ஷேர் பண்ணிக்கிறேன்… அதே நேரம் நம்ம ஆர்கியூமெண்ட்சோ, டிஃபரன்ஸ் ஆப் ஒபினீயனோ என்னைக்குமே நம்மளை பிரிச்சிடக்கூடாது… அதுல நான் தெளிவா இருக்கேன்… மேடம் எப்பிடி?” என்று கண்களில் குறும்பு மின்ன அவன் கேட்க

“ம்ம்… நான் ட்ரை பண்ணுறேன்” என்று ராகமாக இழுத்தாள் யசோதரா.

“இப்போவும் வாயைத் திறந்து எந்த வாக்கும் குடுக்கமாட்டியே?” என்று குறைபட்டான் சித்தார்த்.

யசோதரா புருவத்தை உயர்த்தி “நோ வே! யோசிக்காம வாக்கு குடுத்துட்டு தசரதன் பட்ட கஷ்டம் தெரியும் தானே” என்றாள்.

“நீ ரொம்ப தெளிவா தான் இருக்க… எனி ஹவ், ஃபர்ஸ்ட் டே ஒர்க் எப்பிடி போச்சு?” என்று கேட்டபடி ப்ளேசரைக் கழற்றியவன் சட்டையின் கைகளை முழங்கை வரை ஏற்றிவிடவும்

“அஸ் யூஸ்வல் நல்லா தான் போச்சு… நீ இப்போ என்ன பண்ணப்போற? ஏதோ சண்டைக்குப் போற மாதிரி ரெடியாகுற” என்றபடி கேள்வியாய் ஏறிட்டாள் யசோதரா.

“ஐ அம் கோயிங் டு குக் டின்னர்… நீ இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டல்ல?”

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து இன்ஸ்டண்ட் நூடுல்சை சமைத்து முடித்தனர். அதைச் சமைக்கும் போதே இருவரின் மனசாட்சியும் “அடச்சே! இந்த டூ மினிட்ஸ் நூடுல்ஸ் செய்யுறதுக்குத் தான் ஜோடியா ஏப்ரன் மாட்டி இவ்ளோ அதகளம் பண்ணுனீங்களாக்கும்?” என்று கழுவி ஊற்றியது வேறு விசயம்.

அதைக் கண்டுகொள்ளாமல் இருவரும் சாப்பாட்டில் கண்ணாயினர்.

சித்தார்த் தன் முன்னே இருந்த பவுலில் குவிந்திருந்த நூடுல்சை முட்கரண்டியால் சுழற்றி எடுத்து வாயில் போட்டுக்கொண்டபடியே அவளை நோட்டமிட்டான்.

“சோ ஹாட்” என்று அவன் கூற

“நூடுல்சா?” என்று வினவினாள் யசோதரா.

“நீ தான், இந்த ஃபிட் அண்ட் ஃப்ளேர் கவுன்ல” என்றான் சித்தார்த்.

“ஓ! எவ்ளோ ஹாட்? நூறு டிகிரி செல்சியஸ் இருக்குமா?” விளையாட்டாய் கேட்டபடி நூடுல்சின் நீள இழையை வாய்க்குள் தள்ளினாள் அவள்.

“காம்ப்ளிமெண்ட் குடுத்தா தேங்க்ஸ் சொல்ல கத்துக்கடி… அதை விட்டு கலாய்க்குற” என்று சித்தார்த் அங்கலாய்க்க

“காம்ப்ளிமெண்டுக்கும் ஃப்ளர்ட் பண்ணுறதுக்கும் எனக்கு வித்தியாசம் நல்லாவே தெரியும்” என்றாள் யசோதரா அமர்த்தலாக.

தன்னைக் கண்டுகொண்டாளே என்று நாக்கைக் கடித்துச் சமாளித்தவனை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தபடி சாப்பிட ஆரம்பித்தாள் யசோதரா.

சித்தார்த்துக்கும் தங்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு மறைந்ததில் நிம்மதி. கலகலப்பான பேச்சுடன் அந்த இரவு நகர அதே நேரம் இந்திரஜித் சாருலதாவை லோட்டஸ் ரெசிடென்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

அங்கே சென்றவனுக்குப் போனசாய் கிடைத்தது ஹேமலதா மற்றும் கௌதமின் திருமணச்செய்தி. முதலில் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தவன் தனக்கு இச்செய்தியைக் கூறாத சாருலதாவை முறைத்தான்.

“என்னடா லுக்கு?” என்றவளுக்கு அலட்சியமாய் உதடு சுழித்தவன்

“சிலர்லாம் ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட்னு சும்மா பீலா விடுறாங்க… ஆனா எந்த விசயத்தையும் நம்ம கிட்ட ஷேர் பண்ணிக்கவே மாட்டாங்க… எல்லாம் காலக்கொடுமை” என்றான்.

ஹேமலதா இருவரும் சிறுபிள்ளைகளாக அடித்து கொள்வதைப் பார்த்து சிரிக்க கௌதம் சாருலதாவிற்கு ஆதரவாய் பேசினான்.

“சாரு பார்ட்டிக்குப் போற குஷில மறந்துருப்பா… அவளுக்கு ஃப்ரெண்ட்னு இருக்குறதே நீ மட்டும் தான்… உன் கிட்ட சொல்லக்கூடாதுனு ஏன் நினைக்கப்போறா?”

“அப்பிடி சொல்லுங்க மாமா… இவன் சரியான அவசரக்குடுக்கை… இவன் கிட்ட முதல்ல சொல்லணும்னு எனக்கும் ஆசை தான்… ஆனா நான் என்ன டிகிரி பண்ணணும்னு யோசிச்சதுல இதை மறந்துட்டேன்” என்றாள் சாருலதா.

இப்போது இந்திரஜித் அனைத்தையும் மறந்துவிட்டு “நீ எந்த மேஜர் எடுக்கப்போற?” என்று அவளது பட்டப்படிப்பு பற்றி கேட்கவும்

“நான் ஒரு வாரம் ரொம்ப டீப்பா யோசிச்சு போட்டோகிராபி படிக்கலாம்னு டிசைட் பண்ணிருக்கேன்” என்றாள் சாருலதா.

ஹேமலதா மறுப்பாக ஏதோ சொல்லவர அவளைக் கையமர்த்திய கௌதம் “உனக்கு போட்டோகிராபி தான் பிடிச்சிருக்குனா சென்னைல பெஸ்ட்டா போட்டோகிராபி கோர்ஸ் இருக்குற இன்ஸ்டிட்டியூட் லிஸ்டை ரெடி பண்ணு… நம்ம அப்ளை பண்ணுவோம்” என்றான்.

சாருலதா “சரி மாமா” என்று ஆர்வத்துடன் தலையாட்ட இந்திரஜித் தனது மொபைலில் புகைப்படக்கலை பயிற்றுவிக்கும் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய விவரத்தை கூகுளின் வாயிலாகத் தேட ஆரம்பித்தான்.

ஹேமலதா கௌதமைத் தனியே அழைக்க அவளுடன் சென்றான் அவன்.

“போட்டோகிராபி படிக்க நிறைய செலவாகும் கௌதம்… சாருவ எதாச்சும் டிகிரி படிக்க வைக்குற அளவுக்குத் தான் என் கிட்ட சேவிங்ஸ் இருக்கு” என்றாள் ஹேமலதா யோசனையுடன்.

அதைக் கேட்ட கௌதமின் முகம் இறுகிப்போனது. இவனுக்கு என்னவாயிற்று என அவள் பதற “நான் உன்னை எப்போவோ என்னோட லைப் பார்ட்னரா நினைக்க ஆரம்பிச்சிட்டேன்… ஆனா நீ அப்பிடி நினைக்கலல்ல” என ஆற்றாமையுடன் ஒலித்தது அவனது குரல்.

தொடர்ந்து “சாருவோட படிப்பு, கல்யாணம் இது ரெண்டுமே இது வரைக்கும் உன்னோட ரெஸ்பான்சிபிளிட்டியா இருந்துச்சு… ஆனா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணுனதும் அதை நான் நம்மளோட ரெஸ்பான்சிபிளிட்டியா ஏத்துக்கிட்டேன், நீ நந்தனை ஏத்துக்கிட்ட மாதிரியே… அவ விரும்புறதை படிக்கவைக்க உனக்கு மட்டும் தான் உரிமை இருக்குங்கிற மாதிரி நீ பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு ஹேமா… உன்னை நம்பி நந்தனோட பொறுப்பை நான் உன் கூட ஷேர் பண்ணிக்கிட்டேன்… ஆனா சாரு விசயத்துல நீ இன்னும் என்னை மூனாவது மனுசனா தான் பாக்குறல்ல?” என்றான் வேதனையுடன்.

அதைக் கேட்டு பதறிய ஹேமலதாவோ “ஐயோ நீங்க சொல்லுற மாதிரி நான் யோசிக்கவே இல்ல கௌதம்… நான் எப்போவுமே உங்களை பிரிச்சு பாத்தது கிடையாது” என்றாள் வேகமாக.

“அப்போ சாரு ஆசைப்படுற போட்டோகிராபிய அவ படிக்கட்டும்… அதுக்கு எவ்ளோ செலவானாலும் நம்ம சேர்ந்தே சமாளிப்போம்… சரியா?” என்று கேட்டவனுக்குப் பதிலாக வேகமாக தலையை ஆட்டினாள் அவள்.

இவர்களின் பேச்சினூடே நந்தன் வந்துவிட்டான். அவனது பெரிய குறை பள்ளிக்கு சீருடை அணிந்து செல்வது தான்.

“எனக்கு யூனிஃபார்ம் வேண்டாம் மம்மி”

உதடு பிதுக்கி தனது பிடித்தமின்மையை வெளிக்காட்டிய அந்தச் சிறுவனின் மழலைக்கு முன்னர் வேறெதுவும் வேண்டாமென தோணியது இருவருக்கும்.

ஆனால் சீருடை அணியாது பள்ளிக்குச் செல்வது நல்லப்பிள்ளைக்கு அழகல்ல என்று அறிவுறுத்தியவாறு கௌதமுடன் ஹாலுக்குச் செல்ல அங்கே மாதவனும் மயூரியும் சாந்தநாயகியிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.

கௌதமைக் கண்டதும் எழுந்த மாதவன் “நான் கிளம்புறேன் கௌதம்… ருத்ராஜிய பாத்துட்டு வந்ததும் கிடைச்ச குட் நியூஸ் இது… ஆன்ட்டி சொன்ன மாதிரி ஆடம்பரமா அலட்டலோட மேரேஜ் நடக்கலனாலும் நாங்க எல்லாரும் உங்களோட ஸ்பெஷல் மொமண்ட்ல உங்க கூட இருப்போம்…. இந்த ஹேப்பியான நியூசை ருத்ராஜியோட ஆபிசுக்குச் சொல்லிட்டீங்களா?” என்று மீண்டும் சர்வருத்ரானந்தா பற்றியே பேசவும் மயூரி மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டாள்.

ஆனால் அவர்களின் பேச்சில் அவள் தலையிடவில்லை. இப்படியே நேரம் சென்று கொண்டிருக்க இதற்கு மேல் தாமதித்தால் மறுநாள் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தடைபட்டுவிடமென இந்திரஜித்தை அழைத்துக்கொண்டு கிளம்பினான் மாதவன்.

அதே நேரம் பீச் ஹவுசிற்கு வெளியே கடற்கரையில் அமர்ந்து சித்தார்த்தின் தோளில் சாய்ந்திருந்தாள் யசோதரா.

சித்தார்த் வானில் ஜொலித்த வெண்ணிலவைப் பார்த்தபடியே “எனக்கு ஒரு டவுட் யசோ… இந்த நிலா வானத்துக்குச் சொந்தமா, இல்ல அதோட பிம்பம் விழுற கடலுக்குச் சொந்தமா?” என்று கேட்க

“நிலா யாருக்குமே சொந்தமில்ல சித்து… நிலாவோட சிறப்பு அதோட வெளிச்சம் தான்… அது வானத்துல இருக்குறதாலயோ இல்ல அதோட பிம்பம் கடல்ல விழுறதாலயோ மட்டும் நம்ம நிலாவ ரசிக்கல… அதோட பால் ஒளிக்காக தான் நம்ம அதை விரும்புறோமே தவிர அது இருக்குற இடத்துக்காக இல்ல” என்று பதிலிறுத்தாள் யசோதரா.

“சோ அந்த நிலா யாருக்கும் சொந்தமில்ல… என் பக்கத்துல இருக்குற ஃபைவ் ஃபீட் ஃபிப்டி டூ கேஜி நிலாவாச்சும் எனக்குச் சொந்தமா இல்ல அதுவும் வானத்து நிலா மாதிரி ஃப்ரீ பேர்டா?” என்று கண்களைச் சுருக்கி குறும்பாக வினவ யசோதரா மோவாயில் தட்டி யோசிக்க ஆரம்பித்தாள்.

“என்ன யோசனை? இது சிம்பிளான கேள்வி” என்றான் அவன் அமர்த்தலாக.

யசோதராவோ இல்லையென மறுத்தவள் “நான் உனக்குத் தான் சொந்தம்னு சொல்லி வெக்கப்பட்டு தலைகுனிய எனக்கு இஷ்டமில்ல… பிகாஸ் ஐ அம் நாட் அ டீனேஜ் கேர்ள்… … அதோட என்னோட உடல் பொருள் ஆவி எல்லாமே நீ தான்னு டயலாக் விடுறதுல எனக்கு உடன்பாடு கிடையாது… ஆனா நான் என்னோட வாழ்க்கைய உன்னோட ஷேர் பண்ணிக்க விரும்புறேன்… நான் உன் கைய பிடிச்சிட்டேன்னா என்ன நடந்தாலும் இந்தக் கைய விடமாட்டேன்… ஐ லவ் யூ சித்து” என்று மனம் நெகிழ்ந்து கூறியவள் அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.

சித்தார்த்துக்கு அவள் கூறிய ‘ஐ லவ் யூ’வைத் தவிர வேறு எந்த வார்த்தைகளும் காதில் விழவில்லை. தன் தோள் மீது சாய்ந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன் அவனது விரல் இடுக்குகளில் இருந்த இடைவெளியை நிரப்பிய அவளது செங்காந்தள் விரல்களில் பார்வையை நிலைத்தான். தனது சரிபாதி என்று உறுதியாகிவிட்டால் அவர்களின் விரல்கள் தரும் ஸ்பரிசம் கூட அலாதி தான் போல! இதழ்களில் குமிழிடும் சிரிப்புடன் கண் மூடி அந்த ஸ்பரிசத்தில் திளைக்க ஆரம்பித்தான் யசோதரையின் சித்தார்த்தன்.

மழை வரும்☔☔☔