☔ மழை 5 ☔

யோகா என்பது வெறும் ஆசனங்களை மட்டும் கொண்டதல்ல. பதஞ்சலியின் கூற்றுப்படி அது யமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி என எட்டு பகுதிகளை உள்ளடக்கியது. நம்மிடம் யோகா பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அரைகுறையாக தெரிந்ததை வைத்து அநேகர் யோகக்கலையை அணுகுகிறார்கள். கூடவே யோகாவை மதம் சார்ந்து பார்ப்பவர்களும் அதிகம். யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக சித்தர்களும் யோகிகளும் பல்லாண்டுகளுக்கு முன்னரே சூத்திர வடிவில் எழுதி வைத்தது. அதற்கு மதமோ சாதியோ பார்க்கவேண்டிய அவசியமில்லை.

ஜஸ்டிஷ் டுடே அலுவலகம்…

செய்தி சேனலுக்கே உரித்தான பரபரப்புடன் அதன் அலுவலர்களும் நிருபர்களும் இயங்கிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அறுபத்தைந்து நாட்களுக்குப் பின்னர் அந்த வளாகத்தில் காலடி எடுத்து வைத்தாள் யசோதரா. ஸ்கூட்டியை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் அடியெடுத்து வைத்தாள்.

அவளைக் கண்டதும் புன்னகையுடன் சல்யூட் வைத்த செக்யூரிட்டியிலிருந்து வரவேற்பு பெண் வரை அனைவரிடமும் இன்முகத்துடன் காலை வணக்கத்தைச் சொன்னபடி தனது ஐ.டி கார்டை அணிந்தவளுக்கு நீண்டநாட்களுக்குப் பின்னர் முழுமையான புலனாய்வு ஊடகவியலாளராக உணர்ந்தாள் யசோதரா.

உள்ளே வந்ததும் மேனகா அவளை வரவேற்றாள்.

“வெல்கம் பேக் யசோ… உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்”

அவளுடன் கான்பரன்ஸ் ஹாலை அடைந்தவளை வழக்கமான கம்பீர புன்னகையுடன் வரவேற்றான் விஷ்ணுபிரகாஷ். கூடவே அவனது மனைவி பூர்வி. எடிட்டர் நாராயணன் யசோதராவிடம் பூங்கொத்தைக் கொடுத்தவர் “ஜஸ்டிஷ் டுடே இஸ் ரியலி ப்ரவுட் ஆப் யூ யசோதரா” என்று மனதாற வாழ்த்தினார்.

ரகு, அனுராதா என அனைவரும் அங்கே அமர்ந்திருக்க யசோதராவின் கண்கள் ஸ்ராவணி எங்கே என்று தேடியது. அதை மேனகாவிடம் கேட்டும் விட்டாள்.

“வனியும் அவ ஹஸ்பெண்டும் டெல்லிக்குப் போயிருக்காங்க யசோ… இன்னைக்கு அங்க இருந்து திரும்பிடுவாங்க”

பின்னர் வழக்கமான அலுவல் ரீதியான கலந்துரையாடலுக்குப் பிறகு அவரவர் இடங்களுக்குத் திரும்பினர். மேனகாவுடன் பேசியபடி தனது கேபினுக்குள் நுழையவிருந்தவள் அவர்களின் நியூஸ் ரூமிலிருந்து ஒளிபரப்பப்பட்ட செய்தியை அங்கே இருந்த பெரிய டிவியில் பார்த்ததும் அப்படியே நின்றாள்.

“தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு துறை இணை ஆணையர் தயானந்த் உயரதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை ஊடகங்களில் சட்டவிரோதமாக வெளியிட்ட குற்றத்திற்காக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அந்தத் தொலைபேசி உரையாடல்கள் வெளியானதில் ஆளுங்கட்சியும் இலஞ்ச ஒழிப்பு துறையும் பெரும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது”

மேனகா தனது கண்ணாடியைச் சரிசெய்து கொண்டபடியே “மானிங்ல இருந்து இதே நியூஸ் தான் யசோ… இவர் ரொம்ப நேர்மையான ஆபிசர்… எப்படா இவரை உள்ள தள்ளலாம்னு காத்திருந்தாங்க…. சான்ஸ் கிடைச்சதும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க… ரூலிங் பார்ட்டில இருக்குற முக்கியப்புள்ளியோட பேச்சும் அந்த டேப்பிங் ரெக்கார்ட்ல இருந்துச்சுனு பேசிக்கிறாங்க… அப்போ எப்பிடி இவரை வெளிய நடமாடவிடுவாங்க?” என்றாள் கவலையுடன்.

யசோதரா பெருமூச்சு விட்டபடி தனது கேபினுக்குள் நுழைந்தவள் இத்தனை நாட்கள் முடிக்காமல் விட்ட பணிகளைத் தொடர்ந்தாள். வேலை முடிந்ததும் தனது கணினியில் உதவி ஆணையரின் கைது பற்றி தேடிப் பார்த்தாள்.

பிரபல செய்தி தொலைகாட்சியில் அந்த தொலைபேசி உரையாடல்கள் ஒளிபரப்பானதை அவளும் தான் பார்த்திருக்கிறாள். அதில் பேசிய யாரும் புனிதர்கள் இல்லை. அவர்கள் பேசியதும் உலகநன்மைக்காக இல்லை. அரசியல் கூடாரத்தில் ஒளிந்திருக்கும் அதிகாரவர்க்க முதலைகளின் ஊழல் குற்றங்களைத் தான் அந்த தொலைபேசி உரையாடல்கள் போட்டு உடைத்திருந்தது.

முக்கியமாக ஆளுங்கட்சியினர் கடந்த நான்கே முக்கால் வருடத்தில் செய்திருந்த அத்துணை ஊழலையும் இலஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர் ஆளுங்கட்சி அமைச்சரிடம் விசுவாசத்துடன் சொன்ன வார்த்தைகள் செய்தி தொலைக்காட்சிகளில் அணிவகுத்ததை அவளும் அறிவாள்!

கணினி திரையிலிருந்து கண்களை விலக்கியவளின் கேபின் கதவு தட்டப்படவும் தலை நிமிர்த்தினாள். அங்கே நின்று கொண்டிருந்தவன் இந்திரஜித். அது அவளுக்கு மதியவுணவுக்கான இடைவேளை என்பதால் அவனை உள்ளே வருமாறு அழைத்தாள்.

“ஹாய் அண்ணி… ஃபர்ஸ்ட் டே ஒர்க் எப்பிடி போகுது?” என்றபடி வந்தவனை அமருமாறு நாற்காலியைக் காட்டினாள் யசோதரா.

அவன் திடீரென வந்ததில் அவளுக்குக் குழப்பம். இந்நேரத்தில் அவன் கல்லூரியில் அல்லவா இருக்க வேண்டும்?

அவள் கேட்காத கேள்விக்கான பதிலை இந்திரஜித்தே கூறினான்.

“நீங்க என்ன கேக்கப்போறிங்கனு எனக்கு நல்லாவே தெரியும்… அதோட ஒர்க்கிங் ஹவர்ஸ்ல உங்களை டிஸ்டர்ப் பண்ணிடக்கூடாதுனு அண்ணாவும் சொன்னார்”

சித்தார்த்தைப் பற்றி குறிப்பிடவும் யசோதரா புருவம் சுருக்கினாள். அவன் எப்போது மேகமலையிலிருந்து திரும்பியிருப்பான்? நேற்றிரவு பேசிய போது கூட அவன் கூறவில்லையே! ஆனால் இந்திரஜித்தோ பேசிக்கொண்டே சென்றான்.

“அண்ணா ஒன் ஹவருக்கு முன்னாடி தான் வந்தார்… வந்ததும் உங்க கிட்ட பேசறதுக்கு என்னை அனுப்பி வச்சார்”

“உன்னை ஏன் அனுப்பி வச்சார் உன்னோட நொண்ணா?” அசுவராசியமாகக் கேட்டாள் யசோதரா.

“உங்களுக்கும் அண்ணாக்கும் சின்ன மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங்காம்… அதான் என்னை அனுப்பிவச்சார்”

“ஓ! லவ் பண்ணுறவங்களோட சண்டைய சமாதானம் பண்ணுற அளவுக்கு நீ வளந்துட்டியா? உன்னைச் சொல்லி குத்தம் இல்ல… உன் நொண்ணாவ சொல்லணும்டா” பொறுமித் தீர்த்தபடி அவனிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் அவள்.

அவன் வெட்கப்புன்னகையுடன் “ஐ அம் ட்வென்டி அண்ணி… நானும் பெரிய பையன் தான்” என்று சொல்லிவிட்டுத் தண்ணீரைக் குடித்தான்.

“சரிங்க பெரியமனுசன் சார்… என்ன விசயமா உங்கண்ணா உன்னை இங்க அனுப்பி வச்சார்?”

“அண்ணா உங்களை பாக்கணுமாம்… இப்போ உங்களுக்கு லஞ்ச் ப்ரேக் தானே… பக்கத்துல இருக்குற ரெஸ்ட்ராண்ட்ல உங்களுக்காக அண்ணா வெய்ட் பண்ணுறார் அண்ணி… நீங்க வந்தீங்கனா எல்லா மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங்கையும் க்ளியர் பண்ணிக்கலாம்னு சொன்னார்”

இந்திரஜித்திடம் அவள் மறுப்பு தெரிவிக்கமாட்டாள் என்பது தெளிவாகத் தெரிந்தே அனுப்பி வைத்திருக்கிறான் இவன் என்று சித்தார்த்தை வறுத்தெடுத்தபடியே மறுப்பாக தலையாட்டினாள் யசோதரா.

“ரொம்பநாள் கழிச்சு இன்னைக்குத் தான் ஆபிசுக்கு வந்திருக்கேன் ஜித்து… இப்போ என்னால எங்கயும் வரமுடியாது… உன் அண்ணாவ வீட்டுக்குக் கிளம்பச் சொல்லு” என்றாள் அவள்.

இந்திரஜித் ஏமாற்றத்துடன் “ஆனா அண்ணா உங்களுக்காக வெயிட் பண்ணுறாரே? நீங்க வரலனா ஹீ வில் ஃபீல் பேட்” என்க,

“நோ ப்ராப்ளம்… உன் அண்ணாவ அவரோட ருத்ராஜி நாமத்தை சொல்லி பஜனை பாடிட்டே வீட்டுக்குக் கிளம்பச் சொல்லு… அதுக்கு அப்புறம் அவர் ஏன் சோகமா ஃபீல் பண்ண போறாரு?” என்று கேலியாக பதிலளித்தாள் யசோதரா.

இந்திரஜித்துக்கு அதற்கு மேல் அங்கேயே இருந்து அவளுக்குத் தொந்தரவு கொடுக்கும் விருப்பமில்லை.

“ஓகே அண்ணி… போறதுக்கு முன்னாடி ஒரு குட்டி ஃபேவர்” என்று கண்களைச் சுருக்கி கேட்டான் அவன்.

“என்ன ஃபேவர்?”

“அண்ணா மேல கோவப்படாதீங்க… ஹீ லவ்ஸ் யூ அ லாட்”

யசோதரா புன்சிரிப்புடன் அவனை ஏறிட்டவள் “எனக்கு அது தெரியாதா ஜித்து? உங்கண்ணா மேகமலைக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி பேசுன வேர்ட்ஸ் எல்லாமும் என் ப்ரெயின்ல ஹைட் அண்ட் சீக் விளையாடுறத எப்போ நிறுத்துதோ அப்போ நான் என் கோவத்தை விட்டுடுறேன்… ஓகேவா?” என்று சமாதானமாய் பேச இந்திரஜித்தின் முகம் மலர்ந்தது.

பின்னர் அவளிடம் டாட்டா காட்டிவிட்டு கிளம்பியவன் மொபைலில் சாருலதாவுக்கு அழைத்தபடி காரைக் கிளப்பினான்.

அவன் சென்றதும் மொபைலைக் கவனித்த யசோதரா அப்போது தான் அதில் சித்தார்த்தின் தவறிய அழைப்புகள் இருப்பதைக் கவனித்தாள்.

“யசோ நீ கொஞ்சம் ஓவரா தான் பண்ணுறீயோ? அவனே இறங்கி வர்றான்… நீ மட்டும் ஏன் பிடிவாதமா இருக்க? இப்பிடியே பண்ணுனா அப்புறம் நீ அவனோட ப்ரபோசலுக்கு ஓகே சொல்லுறதுக்கு முன்னாடியே உங்களுக்குள்ள ப்ரேக்கப் நடந்துடும்”

அவளது மனசாட்சியின் எச்சரிக்கையை அப்போதைக்கு ஒதுக்கி வைத்தவள் மீண்டும் தயானந்தின் கைது பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தாள். இடையிடையே ரகுவும் மேனகாவும் அன்றைய மாலை பார்ட்டி பற்றி நினைவூட்டிவிட்டு சென்றனர்.

அதை அவளால் எப்படி மறக்கமுடியும்? வெறுமெனே யசோதரா மீண்டும் பணிக்கு வந்ததற்கு மட்டும் கொடுக்கப்படும் பார்ட்டி அல்லவே! ஜஸ்டிஷ் டுடே என்ற இந்த சேனலை நாராயணன் ஆரம்பித்த தினம் அது.

எனவே அன்றைய பார்ட்டியின் உற்சாகம் அப்போதே அவளுக்கு தொற்றிக்கொள்ள யசோதரா அப்போதைக்கு தயானந்தின் கைது பற்றிய தேடலை அப்போதைக்கு ஒதுக்கிவைத்தாள்.

*************

பொதிகை தமிழ்நாடு ஹவுஸ், திக்கேந்தர்ஜித் மார்க், புதுடெல்லி…

தமிழக அரசின் விருந்தினர் மாளிகையான அந்த பொதிகை தமிழ்நாடு இல்லத்தின் வி.ஐ.பி ஷூட் அறையில் சீற்றத்துடன் போனில் உறுமிக் கொண்டிருந்தான் அபிமன்யூ, தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர். ஆளுங்கட்சியின் பொதுசெயலாளரும் கூட.

அவனது சீற்றத்திற்கான காரணம் தயானந்தின் கைது. அத்துடன் அந்த மனிதர் சி.பி.சி.ஐ.டியில் கொடுக்கவிருக்கும் வாக்குமூலம். ஏனெனில் அந்த தொலைபேசி உரையாடலில் பேசிய ஊழலில் முக்குளித்த அமைச்சர் அவனது கட்சிக்காரர் அல்லவா!

“இன்னும் அந்தாளு ஜெயசந்திரனால கட்சிக்கு என்னென்ன அசிங்கம் வரப்போகுதோ? அபிமன்யூ எல்லா அமைச்சர்களையும் அவனோட கட்டுப்பாட்டுல வச்சிருக்கான்னு இத்தனை நாள் எடுத்த பேர் எல்லாம் சர்வநாசமா போயிடுச்சு… இப்போ என்ன பண்ண போறீங்க அறிவழகன் அங்கிள்?”

அவன் உரையாடுவது தமிழக முதல்வர் அறிவழகனிடம். முதலமைச்சரிடம் இந்த அளவுக்குப் பேசும் அதிகாரம் அவனுக்கு வந்ததற்கு முக்கியக் காரணம் அந்தக் கட்சியின் தலைவர் பார்த்திபனின் மகன் அவன். முன்னாள் தலைவரான வாசுதேவன் ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றதிலிருந்து கட்சியின் தலைமையை தந்தையிடமும் மாநிலத்தின் தலைமையை அறிவழகனிடம் ஒப்படைத்திருந்த அவனது முக்கியமான வேலையே சக அமைச்சர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான்.

அந்தக் கட்டுப்பாட்டில் ஓட்டை விழுந்திருக்கிறது. அவனது கட்சி அமைச்சர் அவன் முதுகுக்குப் பின்னே ஊழல் செய்து அதைப் பற்றி இலஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியிடம் பேசும் தொலைபேசி உரையாடல் வெளியே வந்ததிலிருந்து அவனுக்கு நிம்மதி இல்லை.

இது ஐந்தாண்டு கால ஆட்சிக்கு உண்டான களங்கமாகவே அவனுக்குத் தோற்றமளித்தது. இன்னும் மூன்றே மாதங்களில் தேர்தல். பொதுவாக ஐந்தாண்டுகளில் எந்த பாதகத்தைச் செய்தாலும் கண்டுகொள்ளாத மக்கள் தேர்தல் அறிவிப்பு வந்ததும் ஆளுங்கட்சியையும் எதிர்கட்சியையும் சீர்தூக்கி பார்க்க ஆரம்பித்துவிடுவர்.

அதிலும் இந்த டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகத்தின் அளப்பரிய வளர்ச்சி சின்ன குற்றத்தையே அழுத்தி அழுத்தி சொல்லி பூதாகரமாக்கிவிடும். இதுவோ கோடிக்கணக்கில் அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்றிய ஊழல்!

மக்களின் நியாபகத்திலிருந்து இதை எந்தத் தேர்தல் அறிக்கையாலும் மறக்கடிக்க முடியாது. அவர்களே மறந்தாலும் எதிர்கட்சியினரும் அவர்களின் தொழில்நுட்ப பிரிவினரும் (IT wing) அதை தங்களது மீம்கள், ட்வீட்கள், சமூக வலைதள பதிவுகள் மூலம் நினைவூட்டிக்கொண்டே இருப்பர்.

அதையெல்லாம் அறிந்தவனால் எப்படி அமைதியாக இருக்க முடியும்? அறிவழகன் அவனை அமைதி காக்குமாறு வேண்ட பெருமூச்சு விட்டான் அபிமன்யூ.

“ஓகே அங்கிள்… டூ சம்திங்…. அந்த டி.எஸ்.பி உள்ள போனது போனதாவே இருக்கட்டும்… முடிஞ்சளவுக்கு லீக் ஆன டேப்பிங்கை ரிமூவ் பண்ணுறதுக்கான ஸ்டெப் எடுப்போம்… நான் அடுத்த ஃப்ளைட்ல சென்னைக்கு வர்றேன்… மறுபடியும் சொல்லுறேன் தயானந்த் வெளிய வரவே கூடாது” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி அழைப்பை பேசி முடித்தான்.

“ஏன் அவர் வெளிய வரக்கூடாதுனு சொல்லுற அபி?”

அவனை விட அழுத்தம் திருத்தமான குரலில் கேட்ட அந்தக் கேள்வியில் தனது ஆட்காட்டிவிரலால் நெற்றியைக் கீறியபடி திரும்பினான் அபிமன்யூ. அவனுக்கு எதிரே கரங்களைக் கட்டியபடி நின்றிருந்தாள் ஸ்ராவணி, அவன் மனைவி.

அபிமன்யூ தான் பேசிய அனைத்தையும் அவள் கேட்டுவிட்டாள் என்பதால் இனியும் எதையும் மறைக்க முயலவில்லை.

“அவர் வெளிய வந்தா அவரோட உயிருக்குத் தான் பாதுகாப்பு இல்ல வனி… ஏன்னா அவர் லீக் பண்ணுனது ஜெயசந்திரனோட டேப்பிங்கை… அவரும் அவரோட மகனும் ரொம்பவே ஆபத்தானவங்க… இப்போவாச்சும் ஜெயிலுக்குத் தான் போயிருக்கார், வெளிய வந்தார்னா ஒரேயடியா மேல போயிடுவார்மா”

அலட்சியத்துடன் பேசிவிட்டு தனது வெள்ளை சட்டையை அணிந்து கொண்டவனை திகைப்புடன் பார்த்தாள் ஸ்ராவணி.

முதுகு காட்டியபடி நின்றவனின் தோளைத் தொட்டாள் அவள். அபிமன்யூ திரும்பவும் “உன்னால அவங்களை தடுக்க முடியாதா அபி? இத்தனை வருசம் எல்லா மினிஸ்டரையும் உன் கன்ட்ரோல்ல தானே வச்சிருந்த?” என்று ஆதங்கத்துடன் கேட்க

“நான் எதுக்கு அவங்கள தடுக்கணும் வனி? அந்த டெலிபோன் ஸ்பீச்சால எங்க கட்சியோட மானம் சோஷியல் மீடியால போயிட்டிருக்கு… இதுக்குக் காரணம் அந்த தயானந்த் தான்… அந்தாளை அதுக்குக் காரணம் ஆனவங்க என்ன பண்ணுனாலும் எனக்குக் கவலை இல்ல… எனக்குத் தேவை கட்சி இழந்த பேரை மறுபடியும் சம்பாதிக்கணும்… அவ்ளோ தான்!” என்று இறுக்கத்துடன் கூறினான் அவன்.

“உங்க கட்சி மினிஸ்டர் ஒன்னும் காந்தியோ காமராஜரோ இல்ல… ஊழல் பண்ணி இன்னும் கொஞ்சநாள்ல கம்பி எண்ணப்போற அக்யூஸ்ட்… பட் தயானந்த் இஸ் அ விசில்-ப்ளோயர்… நடந்த தப்பை மீடியாக்குக் காட்டுனது அந்த ஆடியோ டேப் தான்”

“அஹான்! இந்தியன் டெலிகிராப் ஆக்ட் படி கவர்மெண்ட் அபிஷியல் தவிர வேற யாரும் டெலிபோன் ஸ்பீச்சை டேப் பண்ண முடியாது… மிஸ்டர் தயானந்த் அந்த ஆடியோ டேப்பை ரிலீஸ் பண்ணுனது தப்பு… சோ ஹீ இஸ் ஆல்சோ அன் அக்யூஸ்ட்… அக்யூஸ்டை பத்தி நான் ஏன் கவலைப்படணும்?”

ஸ்ராவணி திகைக்க அவனோ அந்த நொடியே அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இயல்பான பேச்சுக்குத் திரும்பிவிட்டான்.

“ரெஸ்ட்ராண்ட் போகலாமா? நான் இன்னைக்கு சௌத் இந்தியன் லஞ்ச் தான் சாப்பிடப்போறேன்… நோ மோர் புல்கா… நாக்கு செத்து போச்சு வனி… நீ என்ன சாப்பிடப் போற?” என்று இலகுவாகப் பேச அவனது மனைவியோ கொதிநிலைக்குப் போனாள்.

“எப்பிடி உன்னால இவ்ளோ கேசுவலா பேச முடியுது அபி? எப்போ நீ இவ்ளோ மோசமான பொலிடீசியனா மாறுன?”

“நான் எப்போ உன் கிட்ட நல்லவன்னு சொன்னேன் வனி? நான் நல்லவன் இல்ல, நல்லவனா வாழ ஆசைப்படவும் இல்ல… இது வல்லவர்களுக்கான உலகம்… இங்க நல்லவன்னா ஏமாளினு அர்த்தம்… உனக்கே தெரியும், எனக்கு ஏமாளியா இருக்குறது பிடிக்காதுனு… அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?”

ஸ்ராவணி கொதிப்புடன் ஏதோ சொல்லவர அவளது இதழில் ஆட்காட்டிவிரலை வைத்து அமைதி என்றவன் “எனக்கும் சேர்த்து நீ நல்லப்பொண்ணா, நேர்மையானவளா இருந்துக்கோ வனி… நான் தடுக்கவே மாட்டேன்… ஆனா நான் இப்பிடி தான்… எனக்கானதை தக்க வைக்க நான் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவேன்” என்று தீவிரமாகக் கூறினான்.

இத்தனை வருடங்கள் கடந்தும் அவன் மாறவில்லை. அவளும் மாறும்படி கட்டாயப்படுத்தவில்லை. இதற்கு மேல் தன்னால் அவனை மாற்றவும் முடியாது என்ற உண்மையைப் புரிந்துகொண்டவளால் ஆற்றாமையை மட்டும் காட்டாமல் இருக்க முடியவில்லை.

“இது தப்பான அணுகுமுறை அபி… அதை நீ சீக்கிரமே புரிஞ்சுப்ப” என்றவள் அபிமன்யூ சிரிக்கவும் எரிச்சலுடன் திரும்பிக்கொண்டாள்.

இனி அவளைச் சமாதானம் செய்ய அந்த ஆண்டவனால் கூட முடியாது, அபிமன்யூ மட்டும் என்ன செய்யமுடியும்? கூடவே இந்த எதிர்துருவங்கள் இத்தனை ஆண்டுகள் ஒற்றுமையாய் வாழ்வதே உலகின் எட்டாம் அதிசயம் என்று வியப்பாய் சொல்லிக்கொண்டது விதி.

மழை வரும்☔☔☔