☔ மழை 47 ☔

வைல்ட் லைஃப் போட்டோகிராபிக்கு பொறுமை மிக அவசியம். நீங்கள் போட்டோ எடுக்க போகும் மிருகங்கள் மற்றும் பறவைகளின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டால் நல்ல படங்களை எடுக்கலாம். இதில் ஜூம் லென்ஸ்கள் அதிகமாக உபயோகிக்கபடுகின்றன. அதிகாலை வேலைகள் இந்த வகை போட்டோ எடுக்க ஏற்ற நேரம் ஆகும். அப்பொழுதுதான் விலங்குகள் மற்றும் பறவைகள் சுறுசுறுப்பாக இயங்கும். உங்கள் ஊரில் சரணாலயம் இருந்தால் அங்கு சென்றும் பயிற்சி செய்யலாம். ஃபுட் அண்ட் புராடக்ட் போட்டோகிராப்கள் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதில் நமது நோக்கம் பொருளை விற்பது தான். வாடிக்கையாளர் நாம் எடுக்கும் படத்தை பார்த்தாலே அந்த பொருளை வாங்க தூண்ட கூடிய வகையில் படம் அமைய வேண்டும். பல்வேறு கோணங்களை முயற்சிக்கலாம், மேக்ரோ மோட் இதற்கு சிறந்த செமி ஆட்டோ மோட் ஆகும்.

                                              –By Irfan Malangusha in irfanclicks.com

சவி வில்லா…

சவிதா தனது அறையில் பேத்தி துயில்வதை ஆதுரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நாராயணமூர்த்தி நீண்டநாள் கழித்து அந்த வீட்டில் சர்மிஷ்டாவைக் கண்டதில் உணர்ச்சிவசப்பட்டவராய் அமர்ந்திருந்தார்.

“இப்பிடியே யசோவும் வந்துட்டானா நம்ம ஃபேமிலி பழையபடி ஆகிடும்ல மூர்த்தி?”

ஏக்கமாய் கேட்ட மனைவியிடம் அமைதியாய் தலையசைத்தவரின் மனமோ மருமகளின் பிடிவாதம் அதற்கு இடம் கொடுக்க வேண்டுமே என்று தவித்தது.

அந்தத் தவிப்பை போக்கும் விதமாக அவர் செவிகளில் விழுந்தது “சித்து” என்ற யசோதராவின் அழைப்பு.

அவளது குரலைக் கேட்டதும் நாராயணமூர்த்தி திகைத்து தனது அறையிலிருந்து ஹாலை நோக்கி வர அவரைத் தொடர்ந்து வந்தார் சவிதா.

அங்கே சாருலதாவுடன் நின்று கொண்டிருந்த யசோதராவைக் கண்டதும் இருவரின் முகமும் மலர அவளது விழிகளோ சித்தார்த்தைத் தேடியது.

“இப்ப தான் நீயும் இங்கயே வந்துட்டா நல்லா இருக்கும்னு சொல்லிட்டிருந்தேன் யசோ… கடவுளுக்கு நான் பேசுனது காது கேட்டுருச்சு போல”

திரைத்துறையில் எத்தனையோ பிரபலங்களை தனது நடன அசைவுகளுக்கு ஆட்டுவித்து பல விருதுகளுக்குச் சொந்தக்காரியான அப்பெண்மணி சராசரி மாமியாராய் பேசவும் யசோதரா சினமடங்கி அமைதியானாள்.

சவிதாவிடம் பதிலளிக்கும் முன்னர் இந்திரஜித்துடன் அங்கே வந்த சித்தார்த் யசோதராவின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டான்.

அவனிடம் பேச்சை வளர்க்க விரும்பாதவள் “சர்மி எங்க? அவளை நான் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகணும்” என்றாள் மொட்டை கட்டையாக.

சித்தார்த் ஆச்சரியமுற்றவனை போல நடித்தவன் “அப்போ நீ நம்ம வீட்டுக்குத் திரும்பி வரலையா யசோ? அவளைக் கூட்டிட்டுப் போக தான் வந்தியா? சோ சேட்” என்று சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டான்.

யசோதராவுக்கு அவனது செய்கை எரிச்சலை மூட்டவும்
“ஷட்டப் சித்து… வீணா என்னை கத்த வைக்காதடா… சர்மி எங்க?” என்று குரலை உயர்த்த

“அக்கா டென்சன் ஆகாதீங்க” என்றாள் சாருலதா. அவளது விழிகள் இந்திரஜித்திடம் சர்மிஷ்டாவை அழைத்து வரும்படி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அவனோ முடியாதென உதட்டைப் பிதுக்க நாராயணமூர்த்தியும் சவிதாவும் யசோதராவைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தனர்.

“நடந்த எதுவுமே சரினு நாங்க ஆர்கியூ பண்ணமாட்டோம் யசோ… சித்து மட்டுமில்ல, நாங்களும் தான் இவ்ளோ நாள் கண்மூடித்தனமா எல்லாத்தையும் நம்பியிருந்தோம்… ஆனா கொஞ்சநாளா நியூஸ்ல வர்றதை பாக்குறப்ப எவ்ளோ பெரிய முட்டாளா இருந்திருக்கோம்னு புரியுது… நீ கொஞ்சம் பொறுமையா யோசியேன்மா”

யசோதரா முடியாதென மறுப்பாய் தலையசைக்க சித்தார்த்தோ “அப்போ நீ வந்த வழிலயே திரும்பி போயிடுடி… ஏன்னா இதுக்கு மேலயும் உன் இடியட்டிக் ஈகோவால என் பொண்ணைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது” என்றான் பிடிவாதமாக.

அதை கேட்டதும் யசோதராவின் விழிகள் கலங்க ஆரம்பிக்க சாருலதாவோ “இப்போவும் நீங்க தப்பு தான் பண்ணுறீங்க சார்… சும்மா பொண்ணு பொண்ணுனு உருகிறீங்களே, அந்தப் பொண்ணை பெத்து எடுத்தது யசோக்கா தான்… இப்போவும் உங்க பேபிய சுமந்திட்டிருக்கிறவங்களை இப்பிடி ஹர்ட் பண்ண உங்களுக்கு எப்பிடி தான் மனசு வருது?” என்று ஆவேசப்பட அவள் சொன்ன தகவலில் நாராயணமூர்த்தி சவிதாவின் முகம் திகைப்புக்குச் சென்று பின்னர் ஒளிர்ந்தது.

“என்னடா சாரு சொல்லுற?” என்று ஐயத்துடன் திக்கி திணறி சவிதா வினவ

“யசோக்கா ப்ரெக்னெண்டா இருக்காங்க ஆன்ட்டி.. இன்னைக்கு ஈவினிங் தான் ஹேமாக்காவோட ஹாஸ்பிட்டலுக்குப் போய் கன்ஃபர்ம் பண்ணிட்டு வந்தாங்க… அது சித்து சாருக்கும் தெரியும்… தெரிஞ்சும் இப்பிடி மகளை மட்டும் வச்சுக்கிட்டு பொண்டாட்டி எக்கேடோ கெட்டுப் போகட்டும்ங்கிற மாதிரி நடந்துகிட்டா என்ன அர்த்தம்?” என்று வெடித்தாள் சாருலதா.

அடுத்த நொடி நாராயணமூர்த்தி கடுப்புடன் என்னடா இது என்பது போல மூத்த மகனை முறைக்க அவனோ “சும்மா முறைக்காதீங்க டாடி… உங்களோட பசங்களை பாக்க சண்டே விசிட்டர் மாதிரி நீங்க போயிட்டு வந்திருந்தா என் வேதனை உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்… இப்போவும் சொல்லுறேன் என் குழந்தைங்க என்னோட தான் இருப்பாங்க… இவளோட ஈகோவ பத்தி இனிமே எனக்கு எந்தக் கவலையுமில்ல… ஆனா சாரு சொன்ன பாயிண்டும் வேலிட் ஆனது தான்… பிள்ளைங்களை மட்டும் வச்சுக்கிட்டு பொண்டாட்டிய வேண்டாம்னு ஒதுக்கித் தள்ளுறது நல்ல மனுசனுக்கு அழகு இல்ல… சோ இனிமே யசோவும் இங்க என்னோட தான் இருப்பா” என்று சொல்லி நிறுத்தியவன் யசோதராவை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு

“இருப்ப தானே?” என்று கேட்க அவளோ “முடியாது” என்று நிர்தாட்சணியமாக மறுத்தாள்.

“பாத்திங்கள்ல, இப்பிடி பிடிவாதம் பண்ணுனா நான் என்ன தான் பண்ணுறது?” என்று நாராயணமூர்த்தியிடம் கேட்டான் சித்தார்த்.

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக “ஓகேப்பா நீங்களும் அம்மாவும் சர்மிய பாத்துக்கோங்க… டேய் நீ சாருவ பத்திரமா வீட்டுல விட்டுட்டு வா” என்று கட்டளையிட அனைவரும் புரியாது விழித்தனர்.

“ஏன் இப்பிடி முழிச்சிட்டே நிக்கிறீங்கப்பா? டேய் சாருவ கூட்டிட்டுப் போனு சொன்னது காதுல விழலையா?” என்று மீண்டும் அவன் அதட்ட இந்திரஜித் யசோதராவைப் பார்த்தான்.

“அவளை ஏன்டா பாக்குற? இனிமே அவ இங்க தான் இருக்கப்போறானு சொல்லிட்டேனே… நீ சாருவோட கிளம்பு… நீங்களும் தூங்க போங்கப்பா” என சித்தார்த் அழுத்தமாக கட்டளையிட சாருலதா திகைத்து விழிக்கும் போதே இந்திரஜித் அவளது கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றுவிட நாராயணமூர்த்தியும் சவிதாவுடன் அவர்களின் அறையை நோக்கி கிளம்பினார்.

யசோதரா இவ்வளவையும் வேடிக்கை பார்த்தவள் “உன் ஆர்டருக்கு அவங்க எல்லாரும் கட்டுப்படலாம்… நான் ஏன்டா நீ சொல்லுறத கேக்கணும்? சர்மிய எப்பிடி என்னோட அழைச்சிட்டுப் போகணும்னு எனக்கு நல்லா தெரியும்… நான் கிளம்புறேன்” என்றபடி வாயிலை நோக்கி திரும்ப அடுத்த நொடி அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான் சித்தார்த்.

“ஏய் என்னடா பண்ணுற? ஒழுங்கா என்னை இறக்கிவிடு” என்று அவள் காச்மூச்சென்று கூச்சலிடுவதைப் பொருட்படுத்தாது தங்களது அறைக்குள் அவளைச் சுமந்து வந்தவன் அங்கிருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு இதற்கு மேல் பேசாதே என்பது போல அவள் உதட்டில் ஆட்காட்டிவிரலை வைக்கவும் யசோதரா கப்சிப்பானாள்.

ஆனால் அவளது விழிகள் அறைக்கதவை நோட்டமிடவும் அதைக் கண்டுகொண்டவன் செய்த முதல் காரியம் அதை பூட்டியது தான். அடுத்து மொபைலில் இந்திரஜித்தை அழைத்தவன் சாருலதாவை லோட்டஸ் ரெசிடென்சியில் விடும் போது யசோதராவின் உடமைகளை எடுத்து வரும்படி கட்டளையிட்டான்.

யசோதரா கடுப்புடன் அவனை ஏறிடவும் “என்ன கோவம் வருதா? என்னை பளார்னு அறையணும்னு கூட தோணுமே… உன் ஆசைய ஏன் கெடுக்கணும்? கம் ஆன்! ஸ்லாப் மீ” என்று தனது கன்னத்தைக் காட்டினான்.

“எடுத்ததுக்குலாம் கை நீட்டுறதுக்கு நான் ஒன்னும் சித்தார்த் இல்ல” என்று சுருக்கென்று பதிலளித்தாள் யசோதரா.

சித்தார்த் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தவன் “சோ நீ இன்னும் அதை மறக்கல… ஓகே! மறக்காத… அப்பிடியே பொக்கிஷ நினைவுகளா மனசுக்குள்ள ரெக்கார்ட் பண்ணி வச்சுக்கோ… ஹூ கேர்ஸ்?” என்று சலிப்பு தட்டிய குரலில் கூறிவிட்டு நிற்க

“இதே வார்த்தைய நாளைக்கு ஈவினிங் நான் என்னோட ஃப்ளாட்டுக்குப் போனதுக்கு அப்புறமாவும் சொல்லுவடா” என்றபடி எழுந்தாள் யசோதரா.

சித்தார்த்தின் நெற்றியின் யோசனைக்கோடுகள் விழவும் அவளுக்குள் சிறு திருப்தி பரவியது என்னவோ உண்மை! ஆனால் அடுத்த வினாடியே அவன் முகம் ஒளிர்ந்தது.

இதழில் குறும்பு புன்னகை மிளிர அவன் மொபைலை எடுக்கவும் யாரிடம் இந்நேரத்தில் பேசப்போகிறான் என்ற கேள்வியுடன் யசோதரா பார்க்கும் போதே சித்தார்த் மாதவனை அழைத்தான்.

“டேய் மச்சி உன் ஐடியா ஒர்க் அவுட் ஆயிடுச்சுடா… இப்போ நீ எனக்கு இன்னொரு ஃபேவரும் பண்ணணும்” என்று யசோதராவைப் பார்த்தபடியே கூறியவன் மறுமுனையில் மாதவன் பேசத் துவங்கவும் அங்கிருந்து நகர்ந்து பால்கனி பக்கம் சென்றுவிட யசோதரா அவன் என்ன பேசுகிறான் என்று பரிதவிப்புடன் காத்திருந்தாள்.

அவன் பேசி முடித்துவிட்டு வந்ததும் குழப்பத்துடன் அவனை நோக்கவும் “நாளைக்கு ஈவினிங் முடிஞ்சா நீ உன்னோட ஃப்ளாட்டுக்குப் போய் தான் பாரேன்” என்று கேலியாய் சொல்லிவிட்டு படுக்கையில் அமர்ந்தான்.

யசோதரா இவன் ஏதோ திட்டம் தீட்டிவிட்டான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் பற்களைக் கடித்தபடி எழுந்தாள்.

கையாலாகத்தனத்துடன் அந்த அறையை நோட்டமிட்டவள் அங்கிருந்த ருத்ராஜியின் புகைப்படத்தைக் காணவில்லை என்றதும் புருவம் சுருக்கினாள்.

அடுத்து அவள் நோட்டமிட்டது அவளது டேபிளை தான். அங்கே வழக்கமாக வைக்கப்பட்டிருக்கும் முக்தியின் முத்திரை பொறித்த ருத்திராட்சமாலையையும் காணோம்!

அவளது விழிகளின் ஆராய்ச்சிப்பார்வையைக் கண்டுகொண்ட சித்தார்த் சீட்டியடித்து அவளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான்.

“நீ தேடுற எதுவுமே இங்க இருக்காது… எனக்கும் கண் இருக்கு… காது இருக்கு… நானும் டெய்லி நியூஸ் சேனல் பாக்குறவன் தான்… ட்வென்ட்டி ஃபோர் ஹவர்ஸ் சோஷியல் மீடியால சுத்தலனாலும் டெய்லி ஒரு தடவையாச்சும் ட்விட்டர் பக்கம், எஃப்.பி பக்கம் போறவன் தான்… இந்த கொஞ்சநாள்ல என்னென்ன நடக்குதுனு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல… எல்லா நியூசையும் பாத்தேன் யசோ… ருத்ராஜி பேசுன ஆடியோவ என் காதால கேட்டேன்… உண்மைய சொல்லணும்னா அந்த ஆடியோவ கேக்குறதுக்கு முன்னாடி கூட நான் ருத்ராஜிய நம்புனேன்… அவரோட வாயால அவர் பேசுனதை கேட்டதும் தான் கன்னத்துல அறைஞ்ச மாதிரி உண்மை புரிஞ்சுது… நான் எவ்ளோ முட்டாள்தனமா அவர் மேல இருந்த மரியாதையால உன்னை தப்பா நினைச்சிட்டிருந்தேனு தெரிஞ்சுது… அடுத்த நிமிசமே முக்தி ருத்ராஜினு எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டேன் யசோ… ப்ளீஸ்! எனக்கு இன்னொரு சான்ஸ் குடு”

தீவிரக்குரலில் பேசியபடி அவளருகே வந்தவன் அவளது கரங்களை பற்றிக்கொண்டு “இந்த செகண்ட் சான்ஸ் எனக்காக மட்டுமில்ல, நமக்காக, நம்ம ஃபேமிலிக்காக, நம்மளோட பசங்களுக்காக தான் கேக்குறேன் யசோ… என்னை மன்னிச்சிடு” என்றபடி அவளை அணைத்துக்கொண்டான்.

யசோதராவின் மனதை இத்தனை நாள் அழுத்திக் கொண்டிருந்த பாரம் அகன்றது. இத்தனை நாட்களில் எத்தனை முறை முக்தியைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பிறகு சித்தார்த் எவ்வாறு எதிர்வினையாற்றுவான் என்று அவள் எண்ணி எண்ணி மருகியிருப்பாள்? அந்த மருகலுக்கு எல்லாம் பலனாய் அவளது கணவன் பழைய சித்தார்த்தாக அவளுக்குத் திரும்ப கிடைத்திருக்கிறான்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை அணைத்தவனின் தோளில் நம்பிக்கையுடன் படிந்தது அவளது தளிர்விரல்கள்.

“ம்ம்” என்று ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்தவள் அவனை விலக்கி நிறுத்திவிட்டு “எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு… நான் தூங்குறேன்” என்று உரைத்துவிட்டு படுக்கைக்குச் சென்றுவிட அவள் தன்னை மன்னித்துவிட்டாளா இல்லையா என்று எண்ணி குழம்புவது சித்தார்த்தின் முறையாயிற்று!

அப்படியே கண்ணயர்ந்தவனுக்கு நன்கு விடிந்த பிறகு தான் விழிப்பு தட்டியது. கண் விழித்தவனின் கரங்கள் அனிச்சை செயலாக அருகே படுத்திருந்த யசோதராவைத் தேட அங்கே அவற்றிற்கு தட்டுப்பட்டது என்னவோ வெற்றிடம் தான்!

உடனே பதறியடித்து எழுந்து அமர்ந்தவன் பின்னர் நிதானமுற்றான். படுக்கையிலேயே அமர்ந்திருந்தவன் “அப்பா” என்ற அழைப்போடு ஓடி வந்த சர்மிஷ்டாவையும் அவள் பின்னே மூச்சு வாங்க நின்ற யசோதராவையும் கண்ட பிறகு புன்முறுவலுடன் எழுந்தான்.

“சர்மிகுட்டி ஏன் இவ்ளோ ஸ்பீடா ஓடி வர்றீங்க?” என்று கேட்டபடி மகளுடன் மனைவியையும் பார்த்து வைத்தான் சித்தார்த்.

அதற்கு அர்த்தம் நீயும் ஏன் வேகமாய் ஓடி வந்தாய் என்பது தான். அதைப் புரிந்து கொண்டவள் பதிலளிக்காது உதட்டைச் சுழிக்கவும் “எப்பா இருந்தாலும் இவ்ளோ அலும்பு இருக்கக்கூடாதுடா சாமி” என்று தனக்குள் பொருமிக் கொண்டான்.

ஆனால் வெளிப்படையாகச் சொல்லமுடியாதே! அதே பொருமலுடன் மகளைப் பள்ளிக்குக் கிளப்பியவன் யசோதராவின் உடமைகள் மீண்டும் அவர்களின் வார்ட்ரோபை நிரப்பியிருப்பதை ஒருவித மகிழ்ச்சியுடன் பார்த்துவிட்டு மகளோடு நேரத்தைக் கழித்தான்.

யசோதரா அவனிடம் பேச்சு கொடுக்காது அலுவலகத்திற்கு செல்ல தயாரானவள் காலையுணவின் போதும் மற்ற அனைவரிடமும் சகஜமாக உரையாடினாள். சித்தார்த்தை மட்டும் கண்டும் காணாமல் விட்டவள் தனது காரிலேயே அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்று விட அவனும் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டான்.

சர்மிஷ்டாவைப் பள்ளியில் சென்றுவிடும் பொறுப்பை வழக்கமாகச் செய்யும் டிரைவரிடம் ஒப்படைத்து விட்டார் சவிதா. இந்திரஜித் அனைத்தையும் வேடிக்கை பார்த்தவன் அப்படி என்ன சொல்லி யசோதராவை தங்கள் இல்லத்தில் தமையன் நிரந்தரமாக தங்க வைத்திருப்பான் என்ற சிந்தனையில் நாளை கழித்தான்.

அலுவலகம் சென்ற யசோதராவை ரகு முப்பத்திரண்டு பற்கள் ஜொலிக்க வரவேற்றான்.

“என்னடா கோல்கேட் ஆக்டிவ் சால்ட்டுக்கு மாறீட்டியா?” என்று அவள் செய்த கிண்டலைக் கூட கண்டுகொள்ளவில்லை அவன்.

“நீ மறுபடியும் சித்து சாரோட வீட்டுக்குப் போயிட்டியாமே”

“உனக்கு எப்பிடி தெரியும் ரகு?”

“ஜித்து சொன்னான்… எனிஹவ் நல்ல முடிவெடுத்திருக்க மை டியர் ஃப்ரெண்ட்… என் மருமகன் வயித்துல இருக்குறப்பவே அம்மாவுக்கு நல்ல புத்திய குடுத்துட்டான்”

“அஹான்! அது மருமகளா கூட இருக்கலாம் ரகு”

கேலிப்பேச்சுகளோடு வேலையும் சேர்ந்து கொள்ள யசோதராவின் நாள் இனிமையாய் நகர்ந்தது. வேலையினூடே விவாகரத்து மனுவை திரும்ப பெறும் செயல்முறை வழக்கறிஞரிடம் பேச வேண்டுமென தீர்மானித்த யசோதரா ஸ்ராவணி யோசனையுடன் வலம் வருவதைக் கவனித்துவிட்டாள்.

“என்னாச்சு மேடம்? எதுவும் பிரச்சனையா?”

“ப்ச்… பிரச்சனை எதுவுமில்ல யசோ… இன்னும் டூ டேய்ஸ்ல சதாசிவன் கோவில் திறப்புவிழா… அபி அங்க போறதுக்கான ஏற்பாடு எல்லாம் ஜரூரா நடக்குது… மேகமலை ஏரியால டைட் செக்யூரிட்டி போட்டிருக்காங்க… மீடியா, ஜெனரல் பப்ளிக் விருப்பத்தையும் மீறி அங்க போறதுக்கு சி.எம்முக்கு என்ன அவசியம்னு யோசிக்கிறேன்”

“நீங்க மட்டும் இல்ல மேம், டோட்டல் தமிழ்நாடே அந்தக் கேள்வியோட தானே இத்தனை நாளா காத்திருக்கு… அவர் அங்க தமிழ்நாட்டோட சி.எம்மா போறாரா இல்ல முக்தியோட அபிமானியா போறாரானு அபி சாருக்கு மட்டும் தான் தெரியும்… வெயிட் பண்ணுனது தான் பண்ணுனோம், இன்னும் டூ டேய்ஸ் தானே… பொறுமையா இருப்போம்… ரிசல்ட் என்ன வருதுனு பாப்போம்”

பின்னர் இருவருக்கும் அவரவர் வேலைகள் காத்திருக்க அதில் மூழ்கிப் போயினர்.

அதே நேரம் லோட்டஸ் ரெசிடென்சியில் ஹேமலதாவும் கௌதமும் கதாசிரியர்களாக மாறி ஏகப்பட்ட கதைகளை உண்மை போல உரைத்துக் கொண்டிருந்தனர்.

வேறு யாரிடம்? யசோதரா மயூரியின் பெற்றோரிடம் தான். அவர்கள் திடுதிடுப்பென அதிகாலையில் வந்து நிற்கையில் சாந்தநாயகியோடு ஹேமாவிற்கும் கௌதமுக்கும் அதிர்ச்சி தான்! அதை இன்ப அதிர்ச்சி என்று சொல்லி சமாளித்தவர்கள் உடனே மொபைலில் பேசியது மயூரியிடம் தான்!

அவளோ நேற்றைய இரவில் சித்தார்த்தும் மாதவனும் பேசியதை குறிப்பிட்டவள் யசோதரா கருவுற்றிருப்பதாகச் சொல்லி பெரியவர்களை சென்னைக்கு வரவழைத்ததே அவர்கள் இருவரும் தான் என்று கூறினாள்.

கூடவே “பெரியம்மா கண்டிப்பா ஃப்ளாட்டை பாத்துட்டு நிறைய கொஸ்டீன்ஸ் கேப்பாங்க… இந்தத் தடவை அவங்களை சமாளிக்க வேண்டியது உங்க ரெண்டு பேரோட பொறுப்பு தான்” என்று பெரியவர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ளும் பொறுப்பை ஹேமலதா கௌதம் தம்பதியினரிடம் தள்ளிவிட்டாள்.

வைஷ்ணவி வந்ததும் தூசி தும்பின்றி இருந்த ஃப்ளாட்டை பார்த்ததும் முதல் கேள்வியைத் தொடுத்தார்.

“வீக்லி ஒன்ஸ் யசோவும் சர்மியும் இங்க வருவாங்கம்மா… அப்போ அவ க்ளீன் பண்ணீட்டு தான் போவா”

அடுத்த கேள்வி ஃப்ரிட்ஜ் பற்றி. அதில் சர்மிஷ்டாவுக்குப் பிடித்த சாக்லேட், ஐஸ் க்ரீம், பழவகைகள் அணிவகுத்திருக்கவும்

“என்னமோ ரொம்ப நாளா சர்மிகுட்டி இங்க தங்குன மாதிரில்ல இருக்கு?” என சந்தேகமாய் வினவினார் சாவித்திரி.

“டூ டேய்ஸ் ஃபிஃபோர் சர்மியும் யசோவும் வந்தப்ப இதெல்லாம் வாங்கி வச்சா யசோ” என்று சமாளித்து மனைவிக்கு உதவியாய் நின்றான் கௌதம்.

நல்லவேளையாக அவன் கல்லூரிக்குக் கிளம்பவேண்டும் என்பதாலும் சாருலதா வந்துவிட்டதாலும் வைஷ்ணவி சாவித்திரியின் கேள்விக்கணைகள் நின்றுவிட்டது.

இரண்டாம் முறையாக கருவுற்றிருக்கும் மகளை அவளது புகுந்த வீட்டிற்கு சென்று பார்ப்பது தான் முறை என்று வைஷ்ணவி யசோதராவைப் பற்றிய பேச்சுகளில் மூழ்கிவிட ஹேமலதா தப்பித்துக் கொண்டாள்.

பின்னர் குழந்தைகள் அவர்களின் கவனத்தை ஈர்த்துக்கொள்ள சாந்தநாயகியுடன் கலந்து பேசி மறுநாள் சித்தார்த்தின் இல்லத்திற்கு சென்று மகளைப் பார்த்துவிட்டு வருவோமென முடிவெடுத்தனர்.

இந்த தகவல் அனைத்தும் கௌதம் வாயிலாக சித்தார்த்தின் செவிகளை அடைந்துவிட படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் ஓய்வாக இருந்தவன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்.

அவனைக் காண வந்த மாதவனை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டவனை வேகமாய் விலக்கி விட்டான் அவன்.

“டேய் நான் ஒன்னும் இந்த மூவியோட ஹீரோயின் இல்ல… அடுத்த சீனுக்கு என்னை வச்சு டிரையல் பாக்குறீயாடா?” என்றபடி கன்னத்தை அழுந்த துடைத்தான் மாதவன்.

“நீ என்ன வேணாலும் சொல்லிக்க, நான் இன்னைக்கு இருக்குற சந்தோசத்துல யூனிட்ல இருக்குற எல்லாரையும் ஹக் பண்ணி கிஸ் பண்ணிடுவேன்… மாமியார்ஸ் அண்ட் மாமனார்ஸ் வந்தாச்சுடா… அப்போ இனிமே யசோ என்னை விட்டுட்டு அந்த ஃப்ளாட்ல போய் இருக்க மாட்டா… டிவோர்ஸ் டிசிசனையும் மாத்திப்பா… என்னோட பழைய வாழ்க்கை எனக்கு திரும்ப கிடைச்சிடுச்சு மேடி… ஐ அம் சோ ஹேப்பி நவ்” என்றான் சித்தார்த் மனநிறைவுடன்.

நீண்டநாள் கழித்து அவனை அவ்வாறு கண்டதில் மாதவனுக்கும் மகிழ்ச்சியே! இருவரும் சேர்ந்து மாலையில் லோட்டஸ் ரெசிடென்சிக்குச் சென்று மாமனார் மாமியாரைச் சந்திப்போம் என்று முடிவெடுத்து அடுத்தக் காட்சிக்கான விவாதத்தில் ஆழ்ந்தனர்.

சொன்னது போலவே மாலையில் லோட்டஸ் ரெசிடென்சியை அவர்கள் அடைந்த போது அங்கே மயூரியும் யசோதராவும் கூட பிள்ளைகள் சகிதம் பெரியவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.

சித்தார்த்தும் மாதவனும் அவரவர் மாமனார் மாமியாரிடம் உரையாட ஆரம்பித்தனர். யசோதராவின் விழிகள் மட்டும் சித்தார்த்தை கூறு போட்டது.

தனியே சட்டைக்காலரை பற்றி அவனை இழுத்துச் சென்றவள் “இது தான் உன்னோட பிளானாடா? பேரண்ட்ஸ் வந்துட்டா நான் இங்க திரும்பவர மாட்டேன்னு தானே ப்ளான் பண்ணி ப்ரெக்னென்சி நியூசை சொல்லிருக்க… சரியான திருடன்” என்று பொய்யாய் கடிந்து அவன் தலையில் குட்டு வைத்தாள்.

சித்தார்த் வலிக்காத தலையைத் தடவிக்கொண்டு “புருசனை அடிச்சா பொண்டாட்டியோட உயரம் கம்மி ஆயிடுமாம்… லாஸ்ட் மன்த் சைனீஷ் சயின்டிஸ்ட் ஒருத்தர் ரிசர்ச் பேப்பர்ல சொல்லிருந்தார்… ஏற்கெனவே உன்னோட உயரம் உலகப்பிரசித்தி… இதுல இன்னமும் குள்ளமா ஆயிட்டனா கூட்டத்துல உன்னைத் தேடித் தான் கண்டுபிடிக்கணும்” என்று கிண்டல் செய்தான்.

யசோதரா இன்னும் இரண்டு குட்டு வைத்தவள் “எல்லா வியாக்கியானமும் பேசத் தெரியுது… ஆனா டிவோர்ஸ் பெட்டிசனை வாபஸ் வாங்கினியானு கேக்க மட்டும் சாருக்கு மறந்துடும்… அப்பிடி தானே?” என்று குறைபட

“நீ லாயருக்குப் போன் பண்ணி பேசுனது எனக்குத் தெரியும்” என்றான் சித்தார்த் நமட்டுச்சிரிப்புடன்.

“உனக்கு எப்பிடிடா தெரியும்?”

“ப்ச்! நான் உன் ஹஸ்பண்ட்மா… எனக்குத் தெரியாம உன்னைச் சுத்தி எதுவும் நடக்காது”

யசோதரா அவனை புன்சிரிப்புடன் பார்த்துவிட்டு அவனது தோளில் கரங்களை மாலையாக்கிக் கொண்டாள்.

விழியெடுக்காது அவனை நோக்கிவிட்டு “சாரிடா… சாரி ஃபார் எவ்ரிதிங்” என்று கூற சித்தார்த்தின் கண்கள் பனித்தது.

உணர்ச்சிவசத்தில் பேச வார்த்தை எழவில்லை. எனவே தொடர்ந்து யசோதராவே பேசினாள்.

“ஐ ஹேவ் டு அப்பாலஜைஸ் ஃபார் எவ்ரிதிங்… நீ முக்திய பத்தி தெரிஞ்சிக்கிட்ட அப்புறம் எனக்கு வேற என்ன வேணும்? ஆனாலும் நீ என்னை அறைஞ்சதை நான் மறக்க மாட்டேன்” என்று கடைசி வார்த்தையில் ஆப்பு வைக்கவும் சித்தார்த்திற்கு தூக்கி வாரிப்போட்டது.

“அம்மா தாயே! உன் கால்ல வேணாலும் விழுறேன்டி… அதை மறந்துடு… என் வாழ்க்கைல நான் செஞ்ச பெரிய முட்டாள்தனம் அது தான்… அதுக்காக எத்தனை தடவை என்னை நானே அசிங்கமா திட்டிக்கிட்டேன் தெரியுமா? இனிமே அந்தத் தப்பு நடக்காது யசோ” என்று உளப்பூர்வமாக மன்னிப்பு வேண்டினான்.

யசோதராவின் கண்களில் மீண்டும் காதல் ஊற்றெடுக்க “சரி உன்னை நான் மன்னிச்சிட்டேன்… மத்த வேலையெல்லாம் எப்போ செய்யுறதா உத்தேசம்?” என்று வினவ

“இன்னும் என்ன வேலைடி?” என்று புரியாது கேட்டான் சித்தார்த்.

“நம்ம செகண்ட் பேபி பத்தி அனவுன்ஸ் பண்ண வேண்டாமா இடியட்?” என்று அவன் காதைப் பிடித்து திருகினாள் அவள்.

“அவ்ச்! கண்டிப்பா பண்ணணும் செல்லக்குட்டி… ஜே.எம் சார் கிட்ட சொல்லி பிரஸ் மீட் வச்சிடுவோம்… டிவிட்டர்ல டிவீட் போட்டுருவோம்… இன்னும் மேடம்கு என்னென்ன செய்யணும்னு தோணுதோ எல்லாத்தையும் செஞ்சிடுவோம்… இப்போ ஹேப்பியா?” என்று அவன் கேட்க

“தவுசண்ட் டைம்ஸ் ஹேப்பி” என்ற யசோதரா அவள் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

கருத்து வேறுபாட்டால் உண்டான நீண்ட சச்சரவும், அதன் காரணமாக ஏற்படவிருந்த பிரிவும் பெரிய கால இடைவெளிக்குப் பின்னர் முடிவுக்கு வந்துவிட இனி அவர்களிடையே சந்தோசம் மட்டுமே வாசம் செய்யும் என்பதில் ஐயம் எதுவுமில்லை!

அதே நேரம் முக்தி ஃபவுண்டேசனின் மேகமலை ஆசிரமம் கோவில் திறப்பு விழாவுக்காக ஜெகஜோதியாகத் தயாராகிக் கொண்டிருந்தது. எங்கு நோக்கினும் தன்னார்வலர்கள், காவல்துறையினரின் கூட்டம் தான்!

அந்தத் திறப்புவிழா நடக்குமா? அதில் கலந்துகொள்ளப் போகும் அபிமன்யூ எடுக்கப்போகும் முடிவென்ன? அவனது முடிவு முக்திக்கு முடிவு கட்டுமா?

மழை வரும்☔☔☔