☔ மழை 46 ☔

ஒரு தனி நபரையோ அல்லது குழுவையோ அவரின் அல்லது அவர்களின் பெர்சனாலிடியை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படம் எடுப்பது போர்ட்ரெய்ட் என அழைக்கப்படுகிறது. இது புதியவர்கள் பயிற்சி செய்ய ஏற்ற போட்ட கிராபி வகையை சேர்ந்தது.அதிகமான போட்டோகிராபர்களுக்கு வருமானம் அளிப்பதும் இதுதான். திருமணம், மாடலிங், ஃபேஷன், குடும்ப புகைப்படம் என பல உட்பிரிவுகளை கொண்டுள்ளது. உங்கள் போர்ட்ரெய்ட் சிறப்பாக அமைய
உங்கள் மாடலிடம் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என எடுத்து கூறி தேவையான போஸை பெறுங்கள். ஒளி விழும் திசையிலும் கவனத்தை செலுத்துங்கள், ஏனெனில் ஒளி விழும் திசை மாறுவதை பொறுத்து அற்புதமான படங்களை பெறமுடியும். உங்களால் முடிந்த வரை கண்களை ஃபோகஸ் செய்யுங்கள். ஏனெனில் நாம் ஒருவரை பார்க்கும் போது முதலில் அவர் கண்களையே நோக்குகிறோம். எனவே போட்டோவில் கண்கள் ஷார்ப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் ஒரே கோணத்தில் போட்டோ எடுக்காமல் வெவ்வேறு கோணங்களை முயற்சி செய்யுங்கள். வித்தியாசமான கோணங்கள் புதிய கதைகள் பேசும். இது பெரும்பாலான போட்டோ வகைகளுக்கும் பொருந்தும். நினைவில் கொள்ளுங்கள் ஒரு சிறந்த போர்ட்ரெய்ட் அந்த சப்ஜெக்டின் கதையை ஒரே ஒரு படத்தில் சொல்லி விடும்.

                                              –By Irfan Malangusha in irfanclicks.com

முக்தி ஃபவுண்டேசனின் முறைகேடுகள் பற்றிய ஜஸ்டிஷ் டுடேவின் ரியாலிட்டி செக் ஷோ அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அதன் விளைவு மதுரையில் சில நலத்திட்ட உதவிகளைத் துவங்கி வைக்க சென்ற அபிமன்யூவிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி மாரி மொழிந்தனர் ஊடகவியலாளர்கள்.

கூடவே அஸ்வினும் வந்திருக்க இருவரும் சாமர்த்தியமாக முக்தி பற்றிய கேள்விகளைத் தவிர்த்தனர். இருப்பினும் பத்திரிக்கையாளர்கள் விடுவதாக இல்லை. வளைத்து வளைத்து ருத்ராஜியைப் பற்றியும் சதாசிவன் கோவில் திறப்பு பற்றியும் கேள்விகளைக் கேட்க தான் செய்தனர்.

அபிமன்யூ ஒரு முடிவுக்கு வந்தவனாக பதிலளிக்க ஆரம்பித்தான்.

“பத்து பதினைஞ்சு வருசமா உங்க ஃபேமிலி டாக்டரா இருந்து உங்களை ட்ரீட் பண்ணுன டாக்டரை போலினு யாரோ ஒருத்தர் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுத்தா நீங்க என்ன பண்ணுவீங்க? எடுத்தேன் கவிழ்த்தேன்னு அவரை கட் பண்ணி விட்டுருவிங்களா? அந்த அலிகேசன் உண்மையா பொய்யானு அலசி பாக்க மாட்டீங்களா? அதுக்கு டைம் எடுத்துக்க மாட்டீங்களா? நான் இப்போ அலசி ஆராயுறதுக்கான டைம் பீரியட்ல இருக்கேன்.. சோ நோ மோர் கொஸ்டீன்ஸ் அபவுட் முக்தி ஃபவுண்டேசன்… இங்க ஓப்பன் பண்ணப்போற மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டலால இந்த சரவுண்டிங் மக்களுக்கு எவ்ளோ உதவியா இருக்கும்னு நீங்க கேக்கலாம்… இது கட்டி முடிக்கிறதுக்குள்ள எங்க ஆட்சி முடிஞ்சிடுமே, அப்போ ஏன் கட்டுறீங்கனு கூட கேக்கலாம்… அதை விட்டுட்டு டி.ஆர்.பி அண்ட் சென்சேஷனல் நியூஸ்காக முக்திய பத்தி மட்டுமே கேட்டா என்ன அர்த்தம்?”

இதற்கு மேல் அபிமன்யூவிடம் முக்தியைப் பற்றி கேள்வி கேட்டால் கட்டாயம் சமூக அக்கறையில்லாத டி.ஆர்.பி வெறியர்கள் என்று அவன் பட்டமளித்தாலும் ஆச்சரியமில்லை! அவன் செய்யவும் கூடியவன் தான் என்பதால் தங்களது கேள்விகளை திசை மாற்றினர் நிருபர்கள்.

மொத்தத்தில் தனது மனதில் உள்ளதை யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்ளாது சாமர்த்தியமாக அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டான் அபிமன்யூ.

எதிர்கட்சியினர் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துப் பேசவும் வழியில்லாது போனது தான் சோகம். ஏனெனில் அவர்கள் கட்சியும் வஞ்சனையின்றி முக்தி ஃபவுண்டேசனுக்கு ஆதரவளித்திருந்தனர். அப்படி இருக்கையில் எந்த முகத்தை வைத்து அவர்கள் முதலமைச்சரின் செய்கைகளை விமர்சனம் செய்வர்?

அரசியல் வட்டாரங்கள் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக தப்பித்துக்கொள்ள முக்தியின் மேகமலை ஆசிரமம் நாலாபக்கங்களிலும் இருந்து விமர்சன அம்புகளை தாங்கி கொண்டிருந்தது.

ருத்ராஜி சொன்னபடி ஜஸ்டிஷ் டுடே மீது அத்துமீறி ருத்ராஜியின் செல்பேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டதற்கான வழக்கும் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கை ஜஸ்டிஷ் டுடேவும் தங்களது சட்டக்குழுவினரை வைத்து சமாளித்தனர்.

இதற்கிடையே அமெரிக்காவிலிருக்கும் சர்வசிவானந்தாவுக்கு இச்செய்திகள் எல்லாம் கவலையூட்டவே அவர் ருத்ராஜியிடம் கடுமையாகப் பேசிவிட்டார்.

இது நாள் வரை தன்னை மதிப்புக்குரிய சிஷ்யனாக நடத்திய குருஜி தன்னிடம் கடுமை காட்டியதை ருத்ராஜி எதிர்பார்க்கவில்லை. என்ன மாதிரி சூழ்நிலையாக இருந்தாலும் அவர் தன்னை நம்பியிருக்கவேண்டும்! அவரது கொள்கை கோட்பாடுகளின் வழியே முக்தியை தான் வழி நடத்தியிருந்தால் மாநிலமெங்கும் கிளைகள், நாடெங்கும் யோகா மையங்கள், வெளிநாட்டுக் கிளைகள், முக்தியின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்கானிக் வணிகம், கட்டுமான நிறுவனம் இதெல்லாம் சாத்தியமா?

தனது புத்திசாலித்தனம் தான் முக்தியை ஒரு அழிக்க முடியாத பிராண்டாக உருவாக்கியுள்ளது! அதை பாராட்டவிட்டாலும் பரவாயில்லை, இம்மாதிரி சில்லறை பிரச்சனைகளுக்காக கடிந்துகொள்ள வேண்டுமா என்ன?

இருப்பினும் குருவை எதிர்த்து பேசாமல் அவரது வாயைக் கட்டிப் போட்டவர் ரவீந்திரன் தான். கூடவே இருந்து சர்வருத்ரானந்தாவின் தவிப்பை வேடிக்கை பார்த்தவருக்கு முகுந்தின் மரணம் கொடுத்த வடு மெதுமெதுவாய் ஆறுவதைப் போன்ற பிரமை.

இந்தப் பிரச்சனை பூதாகரமானால் முக்தியின் பிரமுகர்கள் அனைவருமே காவல்துறையினரின் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள்! அதில் தானும் ஒருவன் என்று ரவீந்திரனுக்குத் தெரியும்! அப்படி இருந்தாலும் முக்தியின் உண்மை முகம் வெளியாவதே முகுந்திற்கு தான் செய்யும் நியாயம் என்று நம்பினார் அவர்.

அதே நேரம் மாதவன் கொடுத்த ஐடியாவைச் செயல்படுத்தலாமா வேண்டாமா என்ற இரட்டை மனதுடன் அல்லாடிக் கொண்டிருந்தான் சித்தார்த். ஆனால் கண் முன்னே மகளின் அரிச்சிப்பல் புன்னகையுடன் கூடிய தளிர் முகம் வந்து செல்லவும் அந்த அல்லாடல் போன இடம் தெரியவில்லை.

மாலையில் யசோதராவின் அலுவலக நேரம் முடியும் தருவாயில் அவளுக்காக காத்திருந்தவன் அனைவரும் வெளியேறிய பின்னரும் அவள் வராதிருக்கவும் சந்தேகத்துடன் ரகுவின் எண்ணுக்கு அழைத்தான்.

ரகுவோ யசோதரா ஹேமலதாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகக் கூறவும் அவளுக்கு என்னவாயிற்றோ என்று பதறியவன் எந்த மருத்துவமனை என்று விசாரித்தான்.

“சார் இப்போ நீங்க அங்க போனா தேவையில்லாத கிரவுட் தான் கூடும்” என்றான் ரகு.

“சோ வாட்? யசோக்கு என்னாச்சோனு டென்சனா இருக்கு ரகு… அவ என் கிட்ட உண்மைய சொல்லமாட்டா… நேர்ல போய் பாத்தா தானே எனக்கு நிலவரம் தெரியும்” என்று ஆதங்கத்துடன் பதிலளித்தான் சித்தார்த்.

“பெருசா அவளுக்கு ஒன்னுமில்ல சார்… கொஞ்ச நாளா டயர்டா இருந்தா… நான் கேட்டதுக்கு அவளும் அனுவும் ஏதோ லேடிஸ் ப்ராப்ளம்னு  சொன்னாங்க… நீங்க அவ ஃப்ளாட்டுக்கு போய் வெய்ட் பண்ணுங்க.. நேர்லயே கேட்டுருங்க” என்றான் ரகு.

அவன் சொன்னபடியே சித்தார்த் லோட்டஸ் ரெசிடென்சியை நோக்கி பயணமான நேரத்தில் யசோதராவும் ஹேமலதாவும் மருத்துவர் முன்னே அமர்ந்திருந்தனர்.

அவர் சொன்ன பரிசோதனை எல்லாம் முடிவடைந்திருக்க யசோதரா தான் ஒருவித பதபதைப்புடன் என்ன சொல்லப்போகிறாரோ என காத்திருந்தாள்.

ஹேமலதா அவளது நடுங்கும் கரத்தை அழுத்தவும் அமைதியானவள் மருத்துவரை நோக்க அவரோ புன்னகையுடன்

“குட் நியூஸ் தான் மிசஸ் சித்தார்த்… யூ ஆர் ப்ரெக்னெண்ட்… எப்பிடி இத்தனை நாள் கவனிக்காம விட்டீங்க?” என்று வினவினார்.

அதை கேட்டதும் யசோதராவின் மனதில் சந்தோசம் தான் உதயமானது. ஹேமலதா அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவள் “வாழ்த்துக்கள்டி” என்று முகம் மலர கூறினாள்.

அவளை சந்தோசத்தால் கண்ணீர் நிரம்பிய விழிகளைக் கொண்டு நன்றியாய் ஏறிட்டவள் மருத்துவரிடம் “எனக்கு சில மாசமா ஒர்க் பர்டன் கொஞ்சம் அதிகம் டாக்டர்… சோ பீரியட் மிஸ் ஆனதை கவனிக்கல… இனிமே கவனமா இருந்துக்கிறேன்” என்றாள் பொறுப்பான அன்னையாக.

பின்னர் மருத்துவர் கொடுத்த பிரிஸ்கிரிப்சன் மற்றும் ஆலோசனைகளுடன் மருத்துவமனையை விட்டு கிளம்பியவளை ஓய்வாய் அமருமாறு கட்டளையிட்ட ஹேமலதா தானே காரை ஓட்டினாள்.

இருவரும் லோட்டஸ் ரெசிடென்சியை அடைந்ததும் யசோதரா நேரே ஹேமலதாவின் ஃப்ளாட்டினுள் தான் நுழைந்தாள். எப்படியும் சர்மிஷ்டா அங்கே தானே இருப்பாள் என்ற எண்ணம் அவளுக்கு.

அவளது எண்ணப்படி சாந்தநாயகியும் கௌதமும் மேற்பார்வையிட நந்தன், இலக்கியாவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் சர்மிஷ்டா. குழந்தைகளின் கைகளில் தவழ்ந்த ஐஸ் க்ரீமைக் கேள்வியாய் நோக்கிய ஹேமலதாவை கண்களால் அடக்கினான் கௌதம்.

அவள் என்னவென வினவ அதற்கும் அதே கண்களின் சைகை தான் பதில். புரியாது விழித்தவள் யசோதரா கருவுற்றிருக்கும் நற்செய்தியை சொல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தாள். ஆனால் குழந்தையின் தகப்பன் அல்லவா முதன் முதலில் இச்செய்தியைத் தெரிந்துகொள்ள கடமைப்பட்டவன்! எனவே யசோதரா எப்போது சொல்ல விரும்புகிறாளோ அப்போது இவர்களுக்குத்  தெரிந்தால் போதும் என தனது யோசனையை ஒத்தி வைத்தாள்.

சர்மிஷ்டா யசோதராவிடம் “அம்மா டாடி…” என்று ஏதோ சொல்ல வர கௌதம் அவசரமாய் அவளைக் கொஞ்ச ஆரம்பித்தான்.

“டாடிக்கு என்னடா? இந்த சண்டே கட்டாயமா வருவார்… அது ஒன்னுமில்ல யசோ, சர்மிக்கு சித்துவோட நினைப்பு அதிகமாயிடுச்சு… அதான் திடீர்னு அவரை பத்தி பேசுறா” என்று சமாளிக்க அவனை சந்தேகமாய் நோக்கினர் யசோதராவும் ஹேமலதாவும்.

சாந்தநாயகி மகன் சமாளித்த லட்சணத்தைப் பார்த்து மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டவர் சற்று நேரத்துக்கு முன்னர் சித்தார்த் யசோதராவின் ஃப்ளாட்டிற்கு வந்ததையும் மாதவனின் ஐடியாவை தங்களிடம் விவரித்ததையும் ஞாபகப்படுத்திக் கொண்டார்.

அவனை யசோதராவின் ஃப்ளாட்டில் இருக்கும்படி பணித்தவர் அவனது வருகை யசோதராவுக்கு இனிய அதிர்ச்சியாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் தான் மகனிடம் அவனது வருகை பற்றி அவளுக்குத்  தெரிவிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தார்.

கூடவே குழந்தைகளுக்கு சித்தார்த் வாங்கி வந்திருந்த ஐஸ் க்ரீமை கொடுத்து அவன் வந்திருப்பதை யசோதராவிடம் கூறக்கூடாதென்று அன்புக்கட்டளையிட்டுவிட அவர்களும் ஐஸ் க்ரீம் லஞ்சத்தில் அமைதியாய் அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டனர்.

இனிமேல் இங்கேயே இருந்தால் மகனது பேச்சிலேயே சித்தார்த் அவளுக்காக காத்திருக்கும் விஷயத்தை யசோதரா புரிந்துகொள்வாள் என்பதால் அவளை ஓய்வெடுக்கும்படி அவளது ஃப்ளாட்டிற்கு செல்ல சொன்னார் சாந்தநாயகி.

கேள்வியாய் நோக்கிய மருமகளிடம் “ரெண்டு பேரும் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்திருக்கீங்க… முதல்ல குளிங்க… குழந்தைங்க இருக்குற வீட்டுல இப்பிடி  ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு குளிக்காம நடமாடுனா அவங்களுக்குத் தான் தேவையில்லாம இன்ஃபெக்சன் ஆகும்” என்று திடீர் மருத்துவ ஆலோசகராய் மாறி அறிவுறுத்தவும் யசோதராவும் சர்மிஷ்டாவை சமத்துப்பெண்ணாய் விளையாடும்படி கூறிவிட்டுத் தனது ஃப்ளாட்டுக்கு நடையைக் கட்டினாள்.

கை வைத்ததும் திறந்த கதவைக் கண்டு துணுக்குற்றவள் சாந்தநாயகியோ கௌதமோ சர்மிஷ்டாவுக்கு ஏதேனும் வேண்டுமென இன்னொரு சாவி கொண்டு திறந்திருப்பார்கள் என்று எண்ணியபடி உள்ளே நுழைந்தாள்.

நேரே தனது அறைக்குச் செல்ல கால்கள் திரும்பிய நொடி பால்கனியில் யாரோ நடமாடுவது போன்று அரவம் எழவும் அங்கே சென்றவள் அங்கே அமர்ந்து சாவகாசமாய் லோட்டஸ் ரெசிடென்சியில் நடமாடும் மனிதர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்த சித்தார்த்தைக் கண்டதும் திகைத்தாள்.

வழக்கமாய் ஞாயிறு காலையில் டாண் என்று ஆஜராகுபவன் சர்மிஷ்டாவை அழைத்துக்கொண்டு வெளியே சுற்றிவிட்டு மதியம் வீடு திரும்புவது தான் வழக்கம்! இன்று ஏன் அந்த வழக்கத்தை மீறி வந்திருக்கிறான் என்ற கேள்வியோடு அவனை ஏறிட்டவள் தான் கருவுற்றிருக்கும் விசயத்தைச் சொல்லலாமா? சொன்னால் அவன் எப்படி உணர்வான்? என இன்னும் ஏகப்பட்ட கேள்வி மூட்டைகளை தனக்குள் கட்டிக்கொண்டாள்.

சித்தார்த் மனைவியின் ஃபெர்பியூம் வாசனையை வைத்தே அவள் வந்து நிற்பதை அறிந்துகொண்டவன்

“எதுக்கு ஹாஸ்பிட்டல் போனிங்க ரிப்போர்ட்டர் மேடம்?” என்று கேட்க

“கொஞ்சம் உடம்பு சரியில்ல” என்று மெதுவாய் பதிளித்தாள் யசோதரா.

அவளை மேலும் கீழுமாய் பார்த்தவன் “உடம்புக்கு என்ன? நல்லா தானே இருக்கு” என்றபடி எழுந்து அவள் கழுத்திலும் நெற்றியிலும் கைவைத்து வெப்பநிலையைச் சோதித்தான்.

அதில் எந்த வித்தியாசமும் இல்லை என்றதும் கேள்வியாய் அவளை நோக்கி “ஃபீவரும் இல்ல… ஏதோ லேடிஸ் ப்ராப்ளம்னு ரகு சொன்னார்… அப்பிடி என்ன பிரச்சனை உனக்கு?” என்று கண்களை ஸ்கேனிங் மெஷினாய் மாற்றி கேட்க இதற்கு மேல் மறைத்து என்னவாகப் போகிறது என அவனிடம் தகவலைச் சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள் யசோதரா.

இருப்பினும் அவளது குரல் நாண்கள் அவளுக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை. கூடவே அளவுக்கு மீறிய சந்தோசத்தை முகத்தில் காட்டிவிட்டால் தான் சமாதானமாகி விட்டதாக இவன் எண்ணிக்கொள்வானே என்ற யோசனை வேறு! காரணம் இன்னுமே முக்தி ஃபவுண்டேசன் ருத்ராஜி பற்றிய அவனது அபிமானம் மாறவில்லை என்று எண்ணிக் கொண்டிருந்தாள் அவள்.

ஆனால் அவனது ஸ்கேனிங் பார்வை தன்னை துளைத்தெடுப்பதை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாதவளாக “ஐ அம் ப்ரெக்னென்ட்” என்றாள் யசோதரா முகம் மாறாமல்.

சித்தார்த் அதில் இன்பமாய் அதிர்ந்தவன் இவ்வளவு நாட்கள் இருந்த இறுக்கம், கோபம் எல்லாம் காற்றிலிட்ட கற்பூரமாக மறைய சந்தோசத்தில் புன்னகைத்தான்.

“ஒரு வழியா ஸ்வீட் ஆக்சிடெண்ட் என் வாழ்க்கைய காப்பாத்திடுச்சு டோய்” என்று தனக்குள் குதூகலித்துக் கொண்டான் அவன்.

கூடவே குறும்பாக அவளைப் பார்த்தபடி “அன்னைக்கு நடந்த இன்சிடென்டுக்கு அப்புறம் நீ டிவோர்ஸ் முடிவுல இருந்து பின்வாங்கல… இப்போவும் பிடிவாதமா இருக்கப்போறீயா?” என்று ‘இன்சிடென்டை’ அழுத்தி உச்சரிக்க அது எந்த மாதிரி நிகழ்வு என்று தெரிந்தவளுக்கு முகம் சிவந்து போனது.

“கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்ல இவனுக்கு” என்று மனதிற்குள் முணுமுணுத்தவள் வெளிப்படையாகவும் பேச ஆரம்பித்தாள்.

எல்லாவற்றையும் சொல்கிறவன் முக்தி ஃபவுண்டேசன் பற்றிய தனது நிலைப்பாட்டையும் விளக்கியிருக்கலாம். ஆனால் அவன் செய்யவில்லையே! எனவே ஏட்டிக்குப் போட்டியாய் விவாதம் செய்ய ஆரம்பித்தாள் யசோதரா.

“ஆமா… இப்போவும் சொல்லுறேன், ஐ வான்ட் டிவோர்ஸ்” என்று உறுதியாக மொழிந்தவளின் நாசி நுனி கோபத்தில் சிவக்க அடுத்த நொடி அது அவளது கணவனின் கரங்களுக்குள் சிறைபட்டது.

செல்லமாக நிமிண்டியவன் “இந்த மாதிரி டைம்ல கோவப்படக்கூடாது டார்லிங்…. எங்க சிரி பாப்போம்” என்று அவளது கன்னத்தைப் பிடித்து இழுக்க அவனது கரங்களை தட்டிவிட்டவள்

“யூ நோ ஒன் திங், டிவோர்சுக்கு அப்ளை பண்ணுன ஒய்பை இப்பிடி பேசி மனசை மாத்த ட்ரை பண்ணுறேனு நான் அடுத்த ஹியரிங்ல சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.

“இன்னுமா நமக்கு டிவோர்ஸ் கிடைக்கும்னு நீ நம்புற யசோ? அப்பாவிப்பொண்ணு” என்று அவளது முகம் வழித்து நெட்டி முறித்தவன் குறும்பாக அவளை நோக்கினான்.

“நம்ம டிவோர்சுக்கு அப்ளை பண்ணி ஹியரிங் நடக்குற நேரத்துல தான் நீ ப்ரெக்னெண்ட் ஆகியிருக்க யசோ… இதுக்கு மேல நமக்கு டிவோர்ஸ் குடுக்குறதுக்கு ஃபேமிலி கோர்ட்ல இருக்குற ஜட்ஸ் என்ன காமெடி ஷோ ஜட்ஜா? போடி… போய் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்ப ரெடியாகு” என்று கேலி செய்தபடி திரும்பியவன் “அப்பா” உற்சாகத்துடன் கத்திக்கொண்டு வந்து அவனை அணைத்த சர்மிஷ்டாவைத் தூக்கிக்கொண்டான்.

“பிரின்சஸ் என்னை மிஸ் பண்ணுனியா?”

“ஆமாப்பா… ரொம்ப்ப்ப்ப” என்று அவள் கையை விரித்து அளவு காட்டவும் அவளது பூங்கரத்தில் முத்தமிட்டான் சித்தார்த்.

“இனிமே நீயும் மம்மியும் என்னை மிஸ் பண்ணவே மாட்டீங்க… ஏன் தெரியுமா?”

தெரியவில்லையே என உதட்டைப் பிதுக்கி சைகை காட்டினாள் அவனது இளவரசி.

மகளைப் பார்த்துவிட்டு பார்வையை யசோதராவிடம் திருப்பியவன் “ஏன்னா நம்ம வீட்டுக்குக் குட்டிப்பாப்பா வரப்போகுது… என் பிரின்சஸ்கு தம்பி பிறக்கப்போறான்” என்று சொல்லிவிட்டு கண்ணைச் சிமிட்டவும் அவளுக்கு உள்ளுக்குள் புகைந்தது.

அவள் பல்லைக் கடிக்கவும் பறக்கும் முத்தத்தை அளித்துவிட்டு மகளுடன் வெளியேறினான் சித்தார்த்.

அவன் சென்றதும் “குழந்தை இருக்காளேனு யோசிக்கவே மாட்டான்… சினிமால நடிச்சு நடிச்சு வீட்டுலயும் ரோமியோ அவதாரம் எடுக்குறது… தனியா சிக்கட்டும், அப்போ இருக்கு இவனுக்கு” என பொருமித் தீர்த்தாள் யசோதரா.

அப்போது தான் சாந்தநாயகியின் அறிவுரை நினைவுக்கு வர குளிக்கச் சென்றவள் குளித்து உடைமாற்றி விட்டு வந்த போது சர்மிஷ்டாவும் சித்தார்த்தும் அங்கில்லை.

பால்கனி, ஹால், சர்மிஷ்டாவின் அறை என தேடிச் சலித்தவள் நேரே ஹேமலதாவின் ஃப்ளாட்டில் போய் நின்றாள். அங்கேயும் இருவரும் இல்லை என்றதும் கௌதமிடம் சித்தார்த் எங்கே என வினவ அவனோ சர்மிஷ்டாவை அழைத்துக்கொண்டு சித்தார்த் எப்போதோ கிளம்பிவிட்டான் என்றான்.

இந்த நேரத்தில் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சுற்ற வேண்டுமா என கடிந்துகொள்ள அவனது மொபைலுக்குத் தொடர்பு கொண்டாள் யசோதரா.

எடுத்தவன் அளித்த பதிலில் அவளுக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை.

“ஹவ் டேர் யூ? இப்போ ஊர் சுத்தலனு யார்டா அழுதா?”

“என் பொண்ணு தான் அழுதாடி.. நீ ஆபிஸ் வீடுனு இருந்துட்டு அவளை எங்கயும் அழைச்சிட்டுப் போகலயாம்… சோ டூ ஹவர்ஸ் எங்களை ஃப்ரீயா விட்டுடு… நாங்க நைன் ஓ க்ளாக் வீட்டுல இருப்போம்”

“ஏய்..” என்று கோபமாய் கத்தியவளிடம்

“நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர் இன்னும் சில நிமிடத்தில் சாரி சாரி இன்னும் சில செகண்டில்… ப்ச் செகண்டுக்கு தமிழ்ல என்ன சொல்லுவாங்க? அவசரத்துக்கு நியாபகம் வரலடி… ஹான் இன்னும் சில செகண்டில் போனை ஸ்விட்ச் ஆப் செய்யப்போகிறார்… சோ தாங்கள் தனியாக போனில் புலம்பலாம், கத்தலாம்… கோபம் அதிகமானால் போனை சுவரில் எறிந்து உடைக்கலாம்… டாட்டா பை பை… லவ் யூ” என்று படபடவென பொரிந்து தள்ளிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் சித்தார்த்.

யசோதராவோ அவன் சொன்னது போலவே போனை சுவரில் எறிய போனவள் சற்றே நிதானித்தாள். ஒன்பது மணிக்கு திரும்பிவிடுவேன் என்றான் அல்லவா! அது வரை காத்திருப்போம் என்று பொறுமையை வரவழைத்துக் கொண்டு காத்திருந்தாள்.

மணி எட்டானது, ஒன்பதும் ஆனது! ஒன்பதரையும் ஆனது! ஆனால் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. சித்தார்த்தின் மொபைலும் இன்னும் ஆன் ஆகவில்லை.

இறுதியாக பத்து மணி வரை பொறுத்துப் பார்த்தவள் இந்திரஜித்தின் எண்ணுக்கு அழைத்தாள். அழைப்பை ஏற்றவன் தமையனிடம் கொடுக்க அவனோ

“ஓ மை டியர் ஒய்ஃப்! அவுட்டிங் போனதால கொஞ்சம் அலுப்பா இருந்துச்சா, நானும் சர்மியும் டேரக்டா வீட்டுக்கே வந்துட்டோம்… நான் சர்மிய மானிங் கொண்டு வந்து விடட்டுமா?”

“நோ வே! அவ இப்போவே இங்க வந்தாகணும்”

“அதுக்கு சவி வில்லால இருந்து லோட்டஸ் ரெசிடென்சிக்கு ஃப்ளைட் தான் விடணும்டி… அவ்ளோ அன்பான அம்மாவா இருந்தா நீயே வந்து சர்மிய கூட்டிட்டுப் போ”

அலட்சியமும் கேலியுமாக மொழிந்தவன் அவள் வருவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்க ஆரம்பித்தான். அவள் வந்தால் தானே மாதவனின் ஐடியா வேலை செய்யும்! அவனது நம்பிக்கையைப் பொய்க்க விடாமல் சவி வில்லாவுக்கு சாருலதாவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் யசோதரா.

மழை வரும்☔☔☔