☔ மழை 44 ☔

ஆன்மீகத்தின் பெயரால் சம்பாதிக்கும் கார்பரேட் சாமியார்கள் இந்தியாவில் மட்டும் இல்லை, உலகெங்கும் காணப்படுகின்றனர். கிரிகரி எஃபிமோவிச் ராஷ்புடின் என்ற ரஷ்ய ஆன்மீகவாதி தன்னை கடவுளாக பிரகடனப்படுத்திக் கொண்டவர். அரச குடும்பத்தினர் கூட அவரைக் கடவுளாகவே மதித்து உயரிடத்தில் வைத்திருந்தனர். 1916ல் அரசகுடும்பத்தின் மகாராணி கிரிகரியின் சூழ்ச்சிக்குப் பலியாகி மர்மமான முறையில் மரணமடைந்தார். அதே போல டேவிட் கோரெஷ் என்ற அமெரிக்கர் தன்னை இறுதி இறைத்தூதுவராக பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. ஆனால் அவர் செய்த சட்டவிரோதமான காரியங்களால் குவிந்த புகார்களின் அடிப்படையில் சட்டத்தின் முன்னே சரணடையும்படி கட்டளையிடப்பட அதை அவர் மறுத்துவிட்டார். அத்துடன் அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளைத் தாக்கினர். 51 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தில் டேவிட்டும் அவரது 80 ஆதரவாளர்களும் மௌண்ட் கார்மல் என்ற இடத்தில் தீக்கிரையாயினர். மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் பார்ப்பவர்களுக்கு இம்மாதிரியான முடிவு நேர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

                                                     -ஜூன் 14, 2021 தினத்தந்தி

ஜஸ்டிஷ் டுடே…

ரியாலிட்டி செக் ஷோவுக்காக அலுவலகமே பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று பகுதிகளாக ஒளிபரப்பாகவிருக்கும் இந்த ரியாலிட்டி செக் ஷோவின் மூன்று பகுதிகளுக்கான படப்பிடிப்பும் அன்றைய தினத்தில் அட்டவணைப்படுத்தப் பட்டிருந்தது.

முதல் மற்றும் இறுதி பகுதிகளை தொகுத்து வழங்கும் பொறுப்பு விஷ்ணுபிரகாஷிடமும், இரண்டாவது பகுதியை தொகுத்து வழங்கும் பொறுப்பு சுலைகாவிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

முதல் பகுதிக்கான ஒளிப்பதிவுக்காக நியூஸ் ரூமில் கேமரா ஆப்பரேட்டர் நியூஸ் டைரக்டருடன் பேசிக்கொண்டிருந்தான் விஷ்ணுபிரகாஷ்.

பிராட்காஸ்ட் டெக்னீசியன், ஆடியோ இன்ஜினீயர்கள் தங்கள் கடமையைச் செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்தனர்.

ரியாலிட்டி செக் ஷோவின் இடையே ஒளிபரப்பவிருக்கும் தயானந்தின் பேட்டிக்காக யசோதராவும் வர்தனும் அவரது வீட்டிற்கு அனுப்பிவைக்கப் பட்டிருந்தனர்.

இதோ நியூஸ் ரூமின் நீலவண்ண பின்னணியில் உலக உருண்டை படத்துடன் கூடிய நீள்செவ்வக திரையின் அருகே நின்றான் விஷ்ணுபிரகாஷ்.

அவனருகே பச்சைவண்ண திரையுடன் கூடிய போர்ட் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அவன் பேசும் தலைப்பிற்கேற்ற படங்கள் பின்னர் ஒளிப்பதிவு குழுவினரால் அந்தப் பின்னணியில் இணைக்கப்படும்.

நியூஸ் டைரக்டர் “டேக்” என்று சொல்ல கேமரா ஓட ஆரம்பிக்கவும் பின்னணி இசை ஒலிக்க கச்சிதமான புன்னகையுடன் “வணக்கம்! இது ஜஸ்டிஷ் டுடேவின் ரியாலிட்டி செக் ஷோ… நான் விஷ்ணுபிரகாஷ், உங்களில் ஒருவன்” என்ற முன்னுரையுடன் தனது பேச்சை பிள்ளையார்சுழி போட்டு ஆரம்பித்தான் விஷ்ணுபிரகாஷ்.

“இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மனுசங்க அதிகமா தேடி அலையுறது அமைதியை தான்… அந்த அமைதிய குடுக்குற இடங்கள் ஒவ்வொருத்தருக்கும் அவங்க ரசனைக்கேத்த மாதிரி மாறுபடும்… சிலருக்கு கோயிலுக்குப் போனா அமைதி கிடைக்கும்… இன்னும் சிலருக்கு புக்ஸ் படிச்சா அமைதி கிடைக்கும்… இந்த வரிசைல சமீபகாலமா யோகாவும் தவறாம இடம்பிடிக்குதுங்கிறத உங்களால மறுக்க முடியுமா?”

பேசி விட்டு நிறுத்தியவனிடம் நியூஸ் டைரக்டர் கட்டைவிரலைக் காட்ட தொடர்ந்து உத்வேகத்துடன் பேச ஆரம்பித்தான்.

“இதனாலயே யோகாவுக்கு இப்போ டிமாண்ட் அதிகமாயிடுச்சு… உண்மையாவே யோகா செய்யுறோமோ இல்லயோ ஆனா யோகா கிளாஸுக்குப் போறோம்னு சொல்லுறத அப்பர்-மிடில் கிளாஸ் அண்ட் எலைட் கிளாஸ் மக்கள் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பளா பாக்க ஆரம்பிச்சிட்டாங்க… அதோட விளைவு தான் இன்னைக்கு புற்றீசல் மாதிரி பெருகி இருக்குற யோகா மையங்கள்… அவங்கள்ல பெரும்பாலானவங்க தரமான யோகாவ தான் கத்துக் குடுக்குறாங்கங்கிறதுல எந்தச் சந்தேகமும் இல்ல… யோகாங்கிறது எப்பிடி உடலை ஒழுங்குப்படுத்துறதுக்கான கலைல இருந்து ஸ்டேட்டஸ் சிம்பளா மாறிச்சோ அதே போல இப்போ பெஸ்ட் பிசினஸாவும் மாறிடுச்சு… யோகாவ வச்சு சம்பாதிச்சு இன்னைக்கு தனக்குனு ஒரு சாம்ராஜ்ஜியத்த உருவாக்குன எத்தனையோ நபர்கள் இருக்காங்க… தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் யோகானு சொன்னதும் எல்லாருக்கும் ஞாபகம் வர்றது முக்தி ஃபவுண்டேசன் தான்… யோகாவை மட்டுமே அடிப்படை சேவையா கொண்டு இந்த அமைப்பை ஆரம்பிச்சவர் யோகா குரு சர்வசிவானந்தா… ஆனா முக்தி ஃபவுண்டேசனை இன்னைக்கு தமிழ்நாட்டோட மூலை முடுக்குல கொண்டு போய் சேர்த்த பெருமை அவரோட சிஷ்யரான சர்வருத்ரானந்தாவ தான் சேரும்… குரு அமெரிக்க மண்ல யோகாவ வளத்த நேரத்துல ருத்ராஜினு தன்னோட ஆதரவாளர்களால அன்பா அழைக்கப்படுற சர்வருத்ரானந்தா தமிழ்நாட்டுலயும் இந்தியாவுலயும் முக்திங்கிற ப்ராண்ட வேற உயரத்துக்குக் கொண்டு போனார்… இப்பிடி யோகாவுல ஆரம்பிச்ச முக்தி ஃபவுண்டேசனோட வரலாறை தான் மூனு பகுதிகளா இந்த ரியாலிட்டி செக் ஷோல பாக்கப்போறோம்” என்றவன் முக்தி ஃபவுண்டேசனின் தோற்றம் வளர்ச்சியைப் பற்றி விளக்கிவிட்டு பல்கிப் பெருகிய கிளைகள், கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் பகுதிநேர தன்னார்வலர்கள் மற்றும் ஐந்தாயிரம் முழுநேர தன்னார்வலர்களுடன் இன்று அசைக்க முடியாத ஆன்மீக நிறுவனமாக மாறி நிற்பதையும் விவரித்தான்.

“இங்க இருக்குற தன்னார்வலர்கள் முக்தியோட மேகமலை ஆசிரமத்தோட நிர்வாகம், சமூக ஊடக மேற்பார்வை, ஐ.டி டீம், ஸ்க்ரிப்ட் ரைட்டிங், வீடியோ ஷூட்டிங் அண்ட் எடிட்டிங், நிகழ்ச்சிகளை ஆர்கனைஸ் பண்ணுறது, ஃபண்ட் கலெக்ட் பண்ணுறதுல ஆரம்பிச்சு அங்க நடக்குற அன்றாட வேலையான குக்கிங் அண்ட் க்ளினீங் முதற்கொண்டு செய்யுறாங்க… முக்கியமான விசயம் அவங்க யாரும் இதுக்குனு சம்பளம் வாங்குறது இல்ல… அவங்கள்ல மேக்சிமம் பெர்சன்ஸ் அவங்கவங்க ஃபீல்ட்ல எக்ஸ்பெர்ட்டா இருந்தவங்க… அதே சர்வீசை ஃப்ரீயா முக்தியோட வளர்ச்சிக்காக அவங்க குடுக்குறாங்க… இது எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் ருத்ராஜிங்கிற தனிநபர் மேல அவங்களுக்கு இருக்குற அபிமானம்…

அந்த அபிமானம் தான் இன்னைக்கு முக்தி தொண்டு நிறுவனம்ங்கிற வேர்ல இருந்து வளந்த முக்தி ஃபவுண்டேசன்ங்கிற ஆன்மீக நிறுவனம் வரி ஏய்ப்பு, அனுமதியில்லாம கட்டிடங்கள் கட்டுறது, வனத்துறை நிலங்களை ஆக்கிரமிக்கிறது, சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கிற மாதிரி நடந்துக்கிறதுனு ஏகப்பட்ட முறைகேடுகளைப் பண்ணுறப்ப அவங்களை மௌனமா வேடிக்கை பாக்க வைக்குது… யாராவது இந்த முறைகேடுகளுக்கு எதிரா குரல் குடுத்தா குரல் குடுத்த நபரை குற்றவாளியா சித்தரிக்கவும் வைக்குது…

முக்தி ஃபவுண்டேசன் மேல முதல்ல வைக்கப்படுற குற்றச்சாட்டு வரி ஏய்ப்பு… தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுற 80G வரிச்சலுகையை முறைகேடா பயன்படுத்திருக்காங்க… அதாவது முக்தியோட யோகா நிகழ்வுகள்ல நீங்க வாங்குற பொருட்களுக்கு குடுக்குற தொகையை டொனேசனா காட்டிருக்காங்க… இன்னொரு விசயத்தையும் இங்க ஞாபகப்படுத்த விரும்புறேன், இந்த 80G வரிச்சலுகை மதம் அல்லது ஆன்மீகம் சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்குக் கிடையாது… சமூகசேவை செய்யுற ட்ரஸ்டுகளுக்கு மட்டும் தான் இது அப்ளை ஆகும்… தன்னோட ஆசிரமத்துல சதாசிவனுக்குக் கோயில் கட்டுற ருத்ராஜியால நடத்தப்படுற இந்த டிரஸ்ட் ஆன்மீகம் சார்ந்த எத்தனையோ நிகழ்வுகளை ஆர்கனைஸ் பண்ணிருக்காங்க… அப்போ இவங்க 80Gயை தவறா பயன்படுத்துறாங்க தானே! இது சம்பந்தமா நாலு வருசத்துக்கு முன்னாடி வருமான வரி அலுவலகத்துக்கு புகார் தெரிவிச்சிருக்கார் இவங்க கிட்ட இருந்து மரக்கன்றுகளை வாங்குன மிஸ்டர் சேகர் என்ற நபர்… அதுக்கு வருமான வரி அதிகாரிகள் கிட்ட இருந்து எந்த பதிலும் வரல” என்றவன் அந்நபர் மரக்கன்றுகள் வாங்கியதற்கு கொடுக்கப்பட்ட ரசீதில் நன்கொடை தொகையையும் அதற்கான 80G வரிவிலக்கு வாசகத்தையும் கேமரா முன்னர் காட்டினான்.

அத்துடன் ரவீந்திரனின் உதவியால் இந்திரஜித், ரகு மற்றும் சாருலதா சேகரித்த வரி ஏய்ப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்களின் புகைப்படங்கள் ப்ராட்காஸ்டிங் டெக்னீசியனின் வசம் அனுப்பப்பட்டது. அவை பின்னர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது அந்தப் பச்சை வண்ண திரையில் காட்டப்படும்.

அதே நேரம் யசோதரா தயானந்திடம் பேட்டி எடுக்க அதுவும் இடைச்செருகலாக விஷ்ணுபிரகாஷின் பேச்சோடு இணைக்கப்பட்டது. தயானந்த் முக்தி ஃபவுண்டேசனின் மேகமலை ஆசிரமத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை விளக்கினார்.

அங்கே கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள், ருத்ராஜிக்கென பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட், அதன் பராமரிப்பு செலவு, ஆசிரமத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் மின்வேலிகள், ஆசிரமத்திற்கான தண்ணீரை எடுக்க சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஓடை என அனைத்தையும் புட்டு புட்டு வைத்த தயானந்த் தானும் இன்னும் சில சமூக ஆர்வலர்களும் முக்தி ஃபவுண்டேசனின் சட்டவிரோத மற்றும் இயற்கை விரோத போக்கை கண்டித்து நீதிமன்றங்களில் தொடுத்த வழக்குகளின் விவரங்களையும் ஒப்பித்தார்.

அவர் பேசி முடிக்கவும் விஷ்ணுபிரகாஷ் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி செக் ஷோவிற்கான முக்தி ஃபவுண்டேசனின் வரிஏய்ப்பு தந்திரங்கள் என்ற முதல் பகுதி நிறைவுற்றது. அடுத்தப் பகுதி அனுமதி பெறாத கட்டுமானங்களும் முக்தி ஃபவுண்டேசனும் என்பதை தொகுத்து வழங்க சுலைகா தயாரானாள்.

அவளுடன் வார்ட்ரோப் டெஸ்க் பிரிவினர் இருந்து ஆடை மற்றும் அலங்காரத்தை ஒழுங்குப்படுத்த மேனகாவும் ஸ்ராவணியும் அவளிடம் இலகுவாகப் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ரகுவோ வழக்கம் போல அவளைக் கேலி செய்து கொண்டிருந்தான்.

“ப்ராட்காஸ்டிங் செக்சன்ல இவனை கை கழுவிட்டாங்க போல… இங்க வந்து என்னை டென்சன் பண்ணுறான்” என்று குறைபட்டபடி தனது கருப்பு வண்ண டாப்பின் கழுத்துப்பகுதியில் மாட்டப்பட்டிருந்த மைக்கினை சரி செய்தாள் சுலைகா.

“உங்களோட ஷூட்டிங் முடிஞ்சதும் தான் எங்களுக்கு வேலை ஆரம்பிக்கும் மேடம்… நீ ஏன்மா டென்சன் ஆகுற? நாங்கள்லாம் சிங்கத்த அதோட குகைல சந்திச்சு ஹேண்ட்ஷேக் பண்ணிட்டு வந்தப்ப கூட கூலா இருந்தோம் தெரியுமா?” என்று அமர்த்தலாக மொழிந்தான் ரகு.

“டேய் டேய் போதும்டா… நீ கடைசிநாள்ல பயந்து சொன்ன வெஜிடபிள் சாலட் கதையெல்லாம் ஆல்ரெடி வீ னோ… சோ கொஞ்சம் ஆப் ஆகு” என்று அவனது வாயை அடைத்த ஸ்ராவணி ஒளிப்பதிவுக்கு நேரமாவதாக நியூஸ் ரூமிலிருந்து தகவல் வரவும் சுலைகாவிடம் கைகுலுக்கி அனுப்பி வைத்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் ரியாலிட்டி செக் ஷோவின் இரண்டாம் பகுதி சுலைகா ரஹ்மானால் தொகுத்து வழங்கப்பட்டது.

“வணக்கம்! இது ஜஸ்டிஷ் டுடேவின் ரியாலிட்டி செக் ஷோ… போன பார்ட்ல முக்தி ஃபவுண்டேசன் பண்ணுன வரிஏய்ப்பு பத்தி பாத்தோம்… இந்த செகண்ட் பார்ட்ல அவங்க கட்டுன முறையான அங்கீகாரம் பெறாத கட்டிங்கள் பத்தி விலாவரியா ஆதாரங்களோட பாக்கப்போறோம்… உங்களோட இந்த நிகழ்ச்சி முழுக்கப் பயணிக்க போறது சுலைகா ரஹ்மான்” என்று அவளது பாணியில் இரண்டாம் பகுதியை ஆரம்பித்தாள் சுலைகா.

“மலைப்பகுதிகள்ல பில்டிங் கட்டணும்னா அதுக்கு ஹில் ஏரியா கன்சர்வேசன் அத்தாரிட்டி (Hill Area Conservative Authority) கிட்ட அப்ரூவல் வாங்க வேண்டியது சட்டப்படி கட்டாயம்… முக்தி ஃபவுண்டேசனோட மேகமலை ஆசிரமம் அமைஞ்சிருக்குற பகுதியும் மலைப்பகுதிக்குள்ள தான் வரும்… ஆனா அவங்க கட்டிருக்குற அறுபது பில்டிங்ஸ்ல கிட்டத்தட்ட ஐம்பத்து நாலு பில்டிங்சுக்கு அப்ரூவலே கிடையாது… சி.ஏ.ஜி (C.A.G – Comptroller and Auditor General of India) இதை பத்தி விசாரிச்சப்போ தான் அவசர அவசரமா அப்ரூவலுக்கு அப்ளை பண்ணுனாங்க… கட்டி முடிச்ச பில்டிங்குக்கு அப்ரூவல் வாங்குற வழக்கம் தமிழ்நாட்டுல கிடையாது… ஆனா தங்களோட செல்வாக்கால அந்தக் கட்டிடங்களுக்கு அனுமதி வாங்குனாங்க, இனிமே புதுசா கட்டக்கூடாதுங்கிற நிபந்தனையோட…

அது போக ஃபாரஸ்ட் டிப்பார்மெண்ட் ஆபிசர்ஸ் மேகமலை ஆசிரமத்துல இருக்குற ஆதரைஸ்ட் பெர்சன்ஸ்கு இது சம்பந்தமா லெட்டர்ஸ் அனுப்பிருக்காங்க… ரெண்டு ஃபாரஸ்ட் ஆபிசர்ஸ் தங்களோட உயரதிகாரிகளுக்கு இந்த பில்டிங்ஸ் பத்தி டீடெய்ல்சோட கம்ப்ளைண்ட் செஞ்சதும் அவங்களை வேற ஊருக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க…

இது சம்பந்தமா முக்தி ஃபவுண்டேசன் அரசாங்கத்தோட எந்த விதிமுறையையும் மதிக்க விரும்பல… அதுக்கு ஒரு சிறந்த உதாரணம் தான் சதாசிவன் கோவில்..

அவங்க இப்போ கட்டி முடிச்ச சதாசிவன் கோயில் அனுமதி இல்லாத இடத்துல தான் கட்டப்பட்டிருக்கு… அதோட அவங்க ஆசிரமத்தோட சுற்றுச்சுவர் காப்புக்காடுகள்ல இருந்து ஐம்பது மீட்டர் டிஸ்டன்ஸ்ல தான் இருக்கு… ஆனா அப்பிடி எந்தக் கட்டிடமும் இல்லனு போன மாசம் ஒரு நேஷனல் மீடியா சேனல்ல ருத்ராஜி சொல்லுறார்… இது எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் அரசாங்கத்தோட ஆதரவு ருத்ராஜிக்கும் முக்தி ஃபவுண்டேசனுக்கும் இருக்கு… அப்போ அவங்க ஏன் சட்டவிதிகளை கடைபிடிக்கப் போறாங்க?” என்ற கேள்வியுடன் தனது பேச்சை முடித்தவள் நியூஸ் ரூம் ஸ்டூடியோவை விட்டு வெளியேறிய பிறகு தான் சீராக மூச்சு விட்டாள்.

அதே நேரம் தயானந்திடம் பேட்டி எடுத்துவிட்டு யசோதராவும் வர்தனும் திரும்பியிருந்தனர். வந்தவர்கள் விஷ்ணுபிரகாஷும் சுலைகாவும் தங்களது பகுதிக்கான ஷூட்டிங்கை முடித்து விட்டதை கேள்விப்பட்டதும் சற்று முன்னரே வந்திருக்கலாம் என்று அங்கலாய்த்தது தனிக்கதை.

அடுத்து இறுதி பகுதியான மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமமும் (Environment Impact Assessment Authority) முக்தி நிறுவனமும் என்ற தலைப்பை பேச ஆயத்தமானான் விஷ்ணுபிரகாஷ்.

அதில் முக்தி ஃபவுண்டேசன் 2006ஆம் வருட EIA அறிக்கையை மீறி கட்டிய கட்டிடங்களைக் குறிப்பிட்டு பேசினான். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமமானது கிராமப்புறங்களில் ஏதேனும் தொழில் தொடங்கப்படுமாயின் அத்தொழில் பற்றிய விவரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அந்தத் தொழில் ஆரம்பிப்பது பற்றி மக்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்கவும் உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்பது வழக்கம். இவை யாவும் தொழிலோ திட்டமோ ஆரம்பிக்கும் முன்னர் செய்யவேண்டிய காரியங்கள்.

ஆனால் முக்தி ஃபவுண்டேசன் வழக்கம் போல அனைத்தையும் செய்து முடித்துவிட்டு தங்களது கட்டிடங்களுக்கு ‘எண்விரோன்மெண்டல் கிளியரன்ஸ்’ வழங்கும்படி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமத்திற்கு சமீபத்தில் விண்ணப்பித்திருப்பதை குறிப்பிட்டவன் அதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமம் அளித்த பதிலையும் குறிப்பிட்டான்.

“EIA அறிக்கைக்கு எதிரா ஏற்கெனவே பில்டிங்கை கட்டிட்டு அப்புறமா கிளியரன்சுக்கு அப்ளை பண்ணுறவங்க மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு அபராதம் செலுத்தணும்… கூடவே அவங்க மேல கேஸும் போடப்படும்… ஆனா முக்தி ஃபவுண்டேசன் கேஸை ஃபேஸ் பண்ண தயாரா இல்ல… அதனால ஸ்டேட் என்விரோண்ட்மெண்ட் அசெஸ்மெண்ட் அத்தாரிட்டி முக்தி கிட்ட  சில ரிப்போர்ட்ஸ் கேக்குறாங்க… பப்ளிக் ஒர்க் டிப்பார்ட்மெண்ட், ஹில் ஏரியா கன்சர்வேசன் அதாரிட்டி, பிரின்சிபல் கன்சர்வேட்டர் ஆப் ஃபாரஸ்ட் இந்த மூனு பேர் கிட்டவும் முக்தி ஃபவுண்டேசன் எந்த விதிமுறையையும் மீறலனு சொல்லி கிளியரன்ஸ் வாங்கிட்டா EIA கிளியரன்ஸும் கிடைக்கும்னு சொல்லுறாங்க… ஆனா முக்தி ஃபவுண்டேசனோட லீகல் அட்வைசர் தன்னோட அப்ளிகேசனை வித்ட்ரா பண்ணிட்டார்… சோ இப்போ வரைக்கும் அவங்க எந்த விதத்துலயும் சட்டவிதிகளை ஃபாலோ பண்ணல…

இது எல்லாத்துக்கும் மேல அங்க நடத்துற ஸ்கூலோட சிலபஸ்கு அரசாங்கம் இன்னும் அப்ரூவல் குடுக்கல… இவ்ளோ சம்பவங்களுக்குப் பிறகும் முக்தி ஃபவுண்டேசன் எந்தத் தடையுமில்லாம நடக்குறதுக்குக் காரணம் ருத்ராஜி…

அவருக்குப் பிரபலங்கள், அரசியல் வட்டாரங்கள்ல இருக்குற செல்வாக்கு தான் இத்தனை முறைகேடுகள் நடந்ததுக்கு அப்புறமும் முக்திய யாராலயும் அசைக்க முடியாததா மாத்திருக்கு… இது எல்லாத்துக்கும் மேல முக்தி ஃபவுண்டேசனோட முக்கிய பிரமுகரா கருதப்படுற ரவீந்திரனோட மகனான முகுந்த் புனே ஆஸ்ரமத்துல மர்மமான முறைல இறந்து போன செய்தியும் சில நாட்களுக்கு முன்னாடி ஊடகங்கள்ல பரபரப்பா பேசப்பட்டதை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டீங்க…

இத்தனைக்கும் பிறகும் அரசாங்கம் முக்தி ஃபவுண்டேசனையும் சர்வருத்ரானந்தாவையும் கண்டும் காணாம இருக்குதுனா அதுக்குக் காரணம் ஒரு காலத்துல ஆளுங்கட்சிக்கு ருத்ராஜி செய்த உதவி… சில வருடங்களுக்கு முன்னாடி ஆளுங்கட்சியோட முக்கியப்புள்ளியான முன்னாள் அமைச்சர் ஜெயசந்திரனும் அவரோட மகன் கிரிதரனும் ஒரு ஊழல் வழக்குல சிக்குனாங்க… அப்போ அவங்களுக்காக முக்தி ஃபவுண்டேசன் சார்புல உருவாக்கப்பட்டது தான் ‘இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவோம்’ங்கிற திட்டம்… அந்தத் திட்டத்துல ஜெயசந்திரனுக்கும் முக்தி ஃபவுண்டேசனுக்கும் இடைல நிறைய பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும், அவங்க கட்சித்தலைமையும் இதுக்கு உடந்தையா இருந்தாங்கனும் நம்பத்தகுந்த வட்டாரங்கள்ல இருந்து தகவல் வருது… இப்பிடி ஆளுங்கட்சியோட நெருக்கமா இருக்குற ஒரு ஆன்மீகவாதி மேலயும் அவரோட நிறுவனம் மேலயும் அரசாங்கம் எப்பிடி நடவடிக்கை எடுக்கும்ங்கிறது தான் முக்தியோட உண்மை முகம் தெரிஞ்ச நிறைய பேரோட கேள்வி!

வரிஏய்ப்பு, முறைகேடா வனத்துறை நிலங்களை ஆக்கிரமிச்சு கட்டப்பட்ட கட்டிடங்கள், சுற்றுச்சூழல் மேல அக்கறையின்மைனு நாங்க இந்த ரியாலிட்டி செக் ஷோல முக்தி ஃபவுண்டேசன் மேல வச்ச குற்றச்சாட்டுகள் எதுவும் ஆதாரமில்லாம வைக்கப்பட்டதில்ல… ஜஸ்டிஷ் டுடே எப்போவும் ஆதாரமில்லாம யாரையும் குற்றம் சொன்னதில்ல… எல்லா ஆதாரங்களையும் ஆவண வடிவத்துலயும், ருத்ராஜியோட வாய் வார்த்தையாவும் நீங்களே இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுக்கலாம்… அந்த ஆதாரங்களை திரட்டுறதுக்கு நாங்க ஆரம்பிச்ச ஸ்டிங்க் ஆப்ரேசன் மாதக்கணக்கா முழுவீச்சுல நடந்துச்சு… அதோட முடிவுல எங்களுக்குக் கிடைச்ச ஆதாரங்களை உங்க பார்வைக்கு வைக்கிறோம்… இதுக்காக உழைச்ச என்னோட ஸ்டார் ரிப்போர்ட்டர்ஸ், ஸ்டாஃப்ஸ் அண்ட் சில வெளிநபர்களோட உழைப்புக்கு கண்டிப்பா பலன் கிடைக்குங்கிற நம்பிக்கையோட உங்க கிட்ட இருந்து விடைபெறும் நான் விஷ்ணுபிரகாஷ், உங்களில் ஒருவன்”

கேமரா அவனைச் சுற்றி வட்டமடித்து நிற்கவும் நியூஸ் டைரக்டர் “கட்” என்று கூற புன்னகையுடன் அவருக்குத் தலையசைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் அவன்.

தனது குழுவினரை கான்பரன்ஸ் ஹாலுக்கு வரச் சொன்னவன் அவர்கள் குழுமியதும் அனைவரிடமும் நன்றி கூறினான். நாராயணன் ரியாலிட்டி செக் ஷோவுக்குப் பிறகு தான் தங்களுக்குச் சுமை கூடும் என்பதை குழுவினருக்குத் தெரிவித்துவிட்டார்.

“இதை தான் நான் முன்னாடியே சொன்னேன் சார்… நம்ம அவங்க மேல வச்ச அலிகேசனை அவங்களால மறுக்க முடியாது… ஆனா அவங்களோட ஐ.டி டீமை வச்சு நம்ம சேனல் பத்தி, சீஃப் பத்தி, இங்க இருக்குற ரிப்போர்ட்டர்ஸ் பத்தி அவதூறு பரப்ப வாய்ப்பு இருக்கு… இவ்ளோ ஏன் நம்ம மேல அவங்க டிஃபமேசன் சூட் ஃபைல் பண்ணவும் சான்ஸ் இருக்கு… இது எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண நம்ம தயாரா இருக்கணும்… நம்ம சோஷியல் நெட்வொர்க் டீம் கொஞ்சம் விழிப்பா வேலை பாக்கணும்… அவங்க நம்ம மேல வைக்குற ஃபேக் அலிகேசன்ஸை உடைக்குறதுக்கு தகுந்த எவிடென்சை சரியான நேரத்துல யூஸ் பண்ணணும்… இதுல இன்னொரு தலைவலியும் இருக்கு… நம்ம ஷோவால ரூலிங் பார்ட்டி டென்சன் ஆகுறதுக்கு ஹன்ட்ரெட் பர்சென்டேஜ் சான்ஸ் இருக்கு… சோ பொலிட்டிக்கல் பிரஷரையும் நம்ம ஃபேஸ் பண்ணணும்” என்று பின்விளைவுகளை அழகாகப் பட்டியலிட்டாள் ஸ்ராவணி.

விஷ்ணுபிரகாஷ் அனைத்தையும் கேட்டவன் அதற்கு தகுந்த முன்னேற்பாடுகளை எடுக்கும்படி அந்தந்த பிரிவினருக்கு ஆணை பிறப்பித்தான்.

ஒரு வழியாக கான்பரன்ஸ் முடிந்தது என அனைவரும் கிளம்பவிருக்கும் தருணத்தில் “ஒன் செகண்ட்! ஒரு இம்ப்பார்டெண்ட் விசயம் சொல்லணும்” என்ற பீடிகையுடன் நிறுத்தினார் நாராயணன்.

என்னவென அனைவரும் விழிக்க “இந்த ஸ்டிங்க் ஆப்ரேசன்ல நம்மளையும் தாண்டி வெளிநபர்கள் நமக்கு உதவியா இருந்துருக்காங்க… சோ நான் என்ன நினைக்குறேன்னா ரியாலிட்டி செக் ஷோவோட மூனு பார்ட்ஸ் டெலிகாஸ்ட் ஆனதும் இதுல இந்த ஸ்டிங்க் ஆப்ரேசன் டீமோட மெம்பர்ஸ் எல்லாரும் தங்களோட அனுபவங்களை ஷேர் பண்ணிக்கிற மாதிரி ஒரு ஷோ பண்ணுவோம்… அது தான் மக்கள் மத்தில இந்தப் பிரச்சனைய இன்னும் ஆழமா கொண்டு போய் சேர்க்கும்… அதுல முதல் நபரே யசோதரா தான்” என்றார் அவர்.

“நானா?” என அவள் திகைக்க

“நீ தான் அதுக்குத் தகுதியான ஆள் யசோ… முக்தி முதல்ல இண்டர்பியர் ஆனது உன்னோட வாழ்க்கைல தானே… நீ போட்ட கேஸ் பத்தி அந்த புரோகிராம்ல விலாவரியா பேசலாம்… புரோகிராம்கு ‘ஒரு ருத்திராட்சத்தால் தலைகீழான ருத்ராஜியின் சாம்ராஜ்ஜியம்’னு டைட்டில் வைச்சா செம ரைமிங்கா இருக்கும்” என்று ஆர்வமாய் மொழிந்தான் ரகு.

அதைக் கேட்டு அங்கிருந்தவர்களின் இதழில் புன்சிரிப்பு உதயமாக யசோதராவும் சம்மதித்தாள். கூடவே தனக்கு உதவியாய் இருந்த சாருலதாவையும் இந்திரஜித்தையும் ஷோவிற்கு அழைக்க ஒப்புக்கொண்டாள்.

இப்படியாக ஜஸ்டிஷ் டுடேவினர் சர்வருத்ரானந்தாவின் முக்தி ஃபவுண்டேசனின் அடித்தளத்தை ஆட்டம் காணவைப்பதற்கான வேலையை இனிதே முடித்துவிட்டனர். அதன் ஊழியர்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கும் நாளை எண்ணி ஒருவித ஆர்வமும் பரபரப்புமாய் காத்திருக்க தொடங்கினர்.

மழை வரும்☔☔☔