☔ மழை 36 ☔

“ஒரு சிறிய போட்டோ ஸ்டூடியோவில் கட்டாயம் இருக்க வேண்டியவை விளக்குகள், ஃப்ளாஷ் ட்ரிக்கர்கள், மாடிஃபையர்கள், விளக்குகளை தாங்கும் ஸ்டாண்ட்கள் மற்றும் பேக் ட்ராப்கள். இது போக ரிஃப்லெக்டர்களும் அவசியம். போட்டோ ஷூடியோ இருக்குமிடம் சிறியதாக இருந்தால் விளக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம்.  ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்காக ஹோம் போட்டோகிராபி கிட் உள்ளது.

                                                        -Format Magazine 28.06.2019

லோட்டஸ் ரெசிடென்சி…

காலை நேரத்தில் என்பது அனைத்து இல்லங்களும் கிட்டத்தட்ட யுத்த களம் போலவே காட்சியளிக்கும். பள்ளிக்குச் செல்ல தயாராகும் முன்னர் ஒரு பக்கம் அன்னையரைப் பம்பரமாகச் சுழல விடும் குழந்தைகள்! மறுபுறமோ அலுவலகம் செல்லும் முன்னர் மனைவியை அரக்க பறக்கடிக்கும் கணவர்!

இத்தனைக்கும் இடையே குடும்பத்தலைவிகள் சதாவதானியாக உருமாறி அனைத்து வேலைகளையும் ஒற்றையாளாய் சமாளிக்கும் அற்புதமான தருணம் அது!

அம்மாதிரி காலை நேரத்தில் ஹேமலதா தன் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க இலக்கியாவையும் நந்தனையும் கிளப்பும் வேலையை கௌதம் வழக்கம் போல திறம்ப நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.

குழந்தைகளைக் குளிப்பாட்டி சீருடை அணிவித்து பள்ளிக்குத் தயாராக்கியவன் கடிகாரத்தை நோக்கிவிட்டு வேகமாக குளிக்கச் சென்றான். முந்தைய இரவில் இலக்கியா விளையாடிவிட்டு அப்படியே விட்டு சென்றிருந்த கார் தரையில் கிடக்க அவளது தகப்பனின் கெட்ட நேரம் அவனது விழிகள் அதை நோக்கவில்லை.

அதன் விளைவு அவனது பாதங்களை விட சற்றே பெரிய அந்தக் காரின் மீது பாதம் பட்டு அதன் சக்கரங்கள் நகர்ந்ததில் வழுக்கி விழுந்தான். டொம்மென்று சத்தம் கேட்டு ஹேமலதா குழந்தைகளுக்குத் தான் என்னவோ ஏதோ என்று பதறியடித்து ஓடிவந்தாள்.

ஆனால் அங்கே பிசகிய காலில் ஒரு கையையும் அடிபட்ட இடுப்பில் மற்றொரு கையையும் வைத்தபடி வலியில் சுளித்த முகத்துடன் அமர்ந்திருந்தான் கௌதம்.

ஹேமலதா இவனா விழுந்தான் என்று யோசித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தவள் ஒரு ஓரமாய் மேற்பாகம் உள்ளே போய் கிடந்த இலக்கியாவின் காரைப் பார்த்ததும் என்ன நடந்திருக்குமென ஓரளவுக்கு ஊகித்துவிட்டாள்.

தரையில் கண் பதித்து நடக்காமல் ஆகாயத்தைப் பார்த்து நடந்தால் இது தான் கதி! அந்த நேரத்திலும் கணவனுக்குக் குட்டு வைத்தது அவளது மனசாட்சி.

“பாத்து நடந்து வரக் கூடாதா? உங்களால இலக்கியாவோட கார் நெளிஞ்சு போச்சு பாருங்க” என்று குறைபட்டு ஏற்கெனவே விழுந்த கோபத்தில் இருந்தவனுக்கு வேப்பிலை அடித்துவிட்டாள்.

விளைவு கௌதம் பொங்கிவிட்டான்.

“அடியே கட்டுன புருசன் விழுந்து கிடக்குறேன், கை குடுத்து தூக்கி விடலனா கூட பரவால்ல… ஆனா என்னை விட்டுட்டு அந்த இத்துப்போன காரை பாத்து உச்சுக்கொட்டுறியே… மனசாட்சி இல்லயா உனக்கு? அவ்வ்”

“போதும் போதும்! அடிபட்டிருக்கப்ப இப்பிடி உணர்ச்சிவசப்பட்டு கத்தக் கூடாது… அப்புறம் ஏடாகூடமா எங்கயாச்சும் பிடிச்சுக்கப் போகுது… இந்தாங்க என் கையை பிடிச்சு எழுந்திருங்க” என்று கைநீட்டினாள் ஹேமலதா.

அதைப் பிடித்துக் கொண்டு எழுந்தவன் காலை ஊன்ற போகவே “காலை ஊனாதிங்க… என்னைப் பிடிச்சிட்டு ஒரு காலை மட்டு பதிச்சு நடங்க” என்று கூறியபடி அவனது ஒரு கரத்தை தோளிலிட்டு அணைவாக அருகில் இருந்த படுக்கையில் அமர வைத்தாள் அவள்.

குழந்தைகள் இருவரும் அறைக்குள் வந்து நின்று ஹேமலதா கௌதமிற்கு சிசுருஷை செய்வதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.  ஹேமலதா சுளுக்கிற்கு போடும் பேண்ட் எய்டை முதலுதவிப்பெட்டியிலிருந்து எடுத்துக் காலில் ஒட்டிவிட்டவள் வலி நிவாரணி களிம்பை அவனிடம் நீட்டினாள்.

கௌதம் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டவன் “அதையும் போட்டுவிட்டா நல்லா இருக்கும்” என்று சொல்ல

“அடிபட்டது கால்ல தானே, கையில இல்லயே! ஒழுங்கா நீங்களே போட்டுக்கோங்க” என்று முறைத்துவிட்டு குழந்தைகளுடன் அகன்றாள்.

அவர்களைப் பள்ளி வாகனத்தில் அனுப்பிவிட்டு அவர்களது ஃப்ளாட்டிற்கு திரும்பியவள் கௌதம் இன்னும் களிம்பை தடவாமல் கையில் வைத்திருப்பதைக் கண்டதும் இடுப்பில் கையூன்றி அவனை பார்வையால் கூறு போட்டாள்.

மீண்டும் அவனது முகம் பரிதாபத்தைப் பூசிக்கொள்ளவும் “ஐயா சாமி! ஆஸ்கார் வேணுமா? கோல்டன் க்ளோப் வேணுமா? என்னமா நடிக்கிறீங்க? ஷேர்ட்ட கழட்டுங்க, நானே போட்டுவிடுறேன்” என்றாள் அவள்.

கௌதம் உதட்டைப் பிதுக்கி வேண்டாமென மறுக்கவும் “அடம்பிடிக்காதீங்க கௌதம்… ரத்தம் கட்டிடுச்சுனா ரொம்ப வலிக்கும்” என்று கூற

“அந்த வலிய விடு… ரொம்ப நாளா இங்க வலிக்குது… அதுக்கு உன்னாலான எதாச்சும் ட்ரீட்மெண்ட் குடு” என்று தனது இடப்பக்க மார்பினை தொட்டுக் காட்ட ஹேமலதா எதுவும் பேசாமல் நின்றாள்.

சில நேரங்களில் பேச்சை விட மௌனம் சிறந்தது. ஆயிரம் வார்த்தைகள் உணர்த்தாத வலியை ஒரு நொடி மௌனம் புரியவைத்து விடும். கௌதமும் ஹேமலதாவும் இது நாள் வரை எத்தனையோ முறை இவ்விஷயம் குறித்து விவாதித்துள்ளனர். ஆனால் அமைதியாக யோசித்தனரா என்றால் அதற்கு இல்லை என்ற பதிலே இருவரிடமிருந்தும் வரும்.

இதோ இந்தச் சில நிமிடம் மௌனம் அத்தவறை உணர்த்தி அவனது வலியை ஹேமலதாவுக்குப் புரிய வைத்ததோ என்னவோ அவனை ஒரு நிமிடம் ஆழ்ந்து நோக்கியவள்

“கொஞ்சநேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க… அப்பிடியும் வலி போகலனா டாக்டரை பாத்துட்டு வந்துடுவோம்” என்று கூறிவிட்டு மீண்டும் சமையலறைக்குள் புகுந்துகொண்டாள்.

இத்தனை நாள் இருந்த கோபம் அகன்று அவள் ஆதுரத்துடன் நடந்து கொண்டதில் நிம்மதியுற்ற கௌதம் படுக்கையில் விழுந்து கண் மூடிக்கொண்டான்.

************

முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…

சதாசிவனின் பழைய கோயிலில் தன்னார்வலர்களுடன் சேர்ந்து விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் சாருலதா. அவளும் பிரியாவும் விளக்கேற்றிவிட்டு வெளியே வரும் போது தான் ரவீந்திரன் அவசரமாக முக்தியின் பொது நுழைவுவாயிலுக்கு விரைவதைக் கண்டு அங்கேயே நின்றனர்.

போனவர் வரும் போது அவருடன் இலவச இணைப்பாய் கூலர்ஸ் சகிதம் வந்தான் இந்திரஜித். வந்தவனைக் கண்டு பிரியா முத்துப்பற்கள் மின்ன சிரித்தாள் என்றால் சாருலதாவோ அவளது செவ்விதழை சுழித்து அலட்சியம் காட்டினாள்.

அவர்கள் இருவரையும் தூரத்திலிருந்தே கவனித்துவிட்டு மிதப்பாய் வந்த இந்திரஜித்தின் விழிகள் அங்கே நடமாடும் ஆஸ்ரமத்தின் சீடர்களையோ வேலை செய்து கொண்டிருக்கும் பணியாளர்களையோ கவனித்ததா என்றால் இல்லை என்பது தான் பதில்!

அத்துணை நபர்கள் அங்குமிங்கும் நடந்தாலும் அவனது விழிகளில் அலட்சியத்துடன் உதடு சுழித்தபடி அவனை நோக்கும் சாருலதா மட்டுமே தென்பட்டாள்.

“ஃபேவரைட் ருத்ராஜியோட ஆஸ்ரமத்துல இருக்குற பூரிப்புல ஓவரா அலட்சியம் காட்டுறா இந்த மங்கி… எங்க போகப் போற? நீ ஒன் வீக்ல போயிடுவனு நினைச்சேன்… அண்ணி சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுது, நீ ஒன் மன்த் இங்க தான் இருக்கப் போறியாம்… அதுக்குள்ள ஏன்டா இந்த ருத்ராஜிக்கு ஃபாலோயர் ஆனோம்னு நீ ஃபீல் பண்ணுவ மங்கி” என்று கறுவிக் கொண்டபடி ரவீந்திரனுடன் அவளை நெருங்கினான் இந்திரஜித்.

அருகே வந்ததும் சாருலதா என்பவளைக் கண்டுகொள்ளாது பிரியாவுக்கு மட்டும் கையசைத்து “ஹாய் ரியா! ஹவ் ஆர் யூ?” என்று வினவ ரவீந்திரன் இவர்களைத் தெரியுமா என்று கேட்டார்.

அப்போது தான் சாருலதாவைக் கவனித்தது போல பாவித்தவன் “ஹேய் சாரு! நீயும் இங்க தான் இருக்கிறீயா? ரவீந்திரன் சார் இவ என்னோட குளோஸ் ஃப்ரெண்ட்… ஒரு பெஸ்ட் ஆஃபர் வந்திருக்குனு சொன்னா… ஆனா அது முக்தில இருந்து வந்துச்சுனு சொல்லவேல்ல… நாட்டி கேர்ள்” என்றவன் அவளைப் பார்த்து விசமமாய் புன்னகைத்தான்.

சாருலதா அவனது நடிப்புத்திறனை மெச்சிக்கொண்டாள் மனதிற்குள். பிரியாவோ “நீங்க இங்க வருவீங்கனு நான் எதிர்பாக்கவேல்ல ஜித்து… நாங்க போட்டோஷூட்டுக்காக வந்திருக்கோம்… நீங்க?” என்று கேட்க

“வேற எதுக்கு? இங்க வந்தா அமைதியை ஃபீல் பண்ணலாம்னு என் அண்ணா சொன்னார்… அதனால தான் வந்தேன்… இன்னும் டூ மன்த்ஸ்ல நடக்கப்போற ஃபார்முலா ஒன்ல கலந்துக்க பீச் ஆப் மைண்ட் எனக்கு வேணும் ரியா” என்று விளக்கமளித்தான் இந்திரஜித்.

“இங்க வந்திட்டீங்கள்ல, இனிமே மைண்ட் பீஸ்ஃபுல்லா ஆயிடும்… இப்போ கிளம்புவோமா? உங்களுக்கு வி.ஐ.பி ரிசார்ட் ஏரியால தான் ரூம் அலாட் பண்ணிருக்கோம்… சித்து சார் வந்தா அங்க தான் தங்குவார்” என்று ரவீந்திரன் கூற இரு பெண்களுக்கும் கையைசைத்துவிட்டு அவருடன் கிளம்பினான் இந்திரஜித்.

சனாதி ரிசார்ட்டின் வழியே தான் அங்கே செல்ல வேண்டும். செல்லும் வழியெங்கும் உள்ள கட்டிடங்களையும் நடமாடும் மனிதர்களையும் காட்டி கேள்விமழை பொழிந்தபடியே வந்த இந்திரஜித்திற்கு பொறுமையாகப் பதிலளித்தபடி நடந்தார் ரவீந்திரன்.

அந்தப் பகுதியின் கடைக்கோடியில் இருக்கும் தனது அறையைக் காட்டியவர் “உங்களுக்கு எதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம என்னை கான்டாக்ட் பண்ணுங்க… ஓ! நீங்க மொபைல் கொண்டு வரலல்ல… இட்ஸ் ஓகே… அது தான் என்னோட ரூம்… எந்த ஹெல்ப் வேணும்னாலும் நீங்க அங்க வரலாம்… இல்லனா உங்க ரிசார்ட்டோட இன்சார்ஜ் மதன் கிட்ட சொல்லி விட்டிங்கனா நானே வந்துடுவேன்” என்று சொல்லிக்கொண்டே நடக்க இந்திரஜித்தும் அவரது பேச்சுக்கு உம் கொட்டியபடி வி.ஐ.பி ரிசார்ட் பகுதிக்கு வந்து சேர்ந்தான்.

ரவீந்திரன் சொல்லிக்கொண்டு கிளம்பியதும் இந்திரஜித் அக்கடாவென உள்ளே சென்றான். தனது உடமைகள் அனைத்தையும் எடுத்து வைத்தவன் அந்த சொகுசு ரிசார்ட்டின் வராண்டாவில் வந்து நின்றான். மலைக்காற்று சிலுசிலுவென வீசி மனதிற்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

அதே நேரம் இங்கே கிளம்பும் முன்னர் பேசிய யசோதராவின் வார்த்தைகள் சீக்கிரம் வந்த வேலையை ஆரம்பிக்கவேண்டும் என்ற உத்வேகத்தை அவனுள் உண்டாக்கியது. அதற்கு அவனுக்கு சாருலதாவின் உதவி தேவை.

அவள் தங்கியிருப்பது எங்கே என்று தெரியவில்லை. அந்த இருநூறு ஏக்கர்க ஆசிரமத்தில் இந்திரஜித் எங்கே போய் அவளைத் தேடுவது? எனவே ரவீந்திரனின் உதவியை நாடுவோம் என்ற முடிவுக்கு வந்தவன் முதலில் களைப்பு தீர குளித்துவிட்டு மற்ற வேலையை ஆரம்பிப்போம் என்று தீர்மானித்து அதை செயல்படுத்த ஆரம்பித்தான்.

குளித்து உடைமாற்றியவன் சனாதியை நோக்கி நடை போட்டான். வழியெங்கும் சின்னஞ்சிறு அரும்புகளாய் முக்தியின் சீருடையில் பிள்ளைகள் ஓடி விளையாடியபடி தங்களது இருப்பிடம் நோக்கி ஓடிய காட்சி அவனது கண்களில் பட்டு கருத்தைக் கவர்ந்தது.

அவர்களை ரசித்தபடி சனாதியின் கடைசி பகுதியில் இருந்த ரவீந்திரனின் அறையை அடைந்தவன் அங்கே கேட்ட பேச்சுக்குரலில் உள்ளே செல்லாமல் வெளியே நின்றுவிட்டான்.

“இன்னுமா நீங்க முகுந்தை நினைச்சு வருத்தப்படுறீங்க? நடந்தது நடந்து போச்சு ரவீந்திரன்… இது முக்திக்கு முக்கியமான காலகட்டம்… சதாசிவன் கோவில் முக்தியோட வரலாற்றுல முக்கியமான ஒரு மைல்கல்… இந்தச் சமயத்துல நம்ம ருத்ராஜிக்கு பக்க பலமா இருக்கணும்… ருத்ராஜி சொன்ன மாதிரி மகாபாரதத்துல அரவானை களபலி குடுத்த மாதிரி நம்ம முகுந்தை குடுத்துட்டோம்… நம்மளால இனிமே அவனை உயிரோட வரவழைக்க முடியாதுல்ல” என்று கனத்த குரலில் யாரோ பேச

“என்ன சொன்னாலும் என் மனசு கேக்க மாட்டேங்கிறதே கோபாலன்… இன்னைக்கு சித்தார்த் சாரோட தம்பிய அழைச்சிட்டு வர்றப்ப அந்தப் பையன் வாய் ஓயாம பேசுனது எனக்கு முகுந்தை தான் ஞாபகப்படுத்திச்சு… என்னால முழு மனசோட எந்த வேலையும் செய்ய முடியல… எங்க பாத்தாலும் என் மகன் நிக்குற மாதிரியெ தோணுது” என்று உடைந்த குரலில் பதிலளித்தார் ரவீந்திரன்.

கேட்ட இந்திரஜித்திற்கே இறந்த முகுந்த் மீது இரக்கமுண்டானது. இதற்கு மேல் ஒட்டுக் கேட்க விரும்பாதவனாய் திறந்திருந்த கதவைத் தட்டினான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டதும் அங்கே பேச்சுக்குரல் நின்றது. அந்தக் கோபால் என்ற நபர் யாரென எட்டிப் பார்க்க இந்திரஜித் புன்னகைத்தான்.

“ஓ! வாங்க சார்… என்ன விசயம்”

“ரவீந்திரன் சாரை பாக்கணும்… ஒரு சின்ன ஃபேவர்”

ரவீந்திரனே வந்துவிட அவரிடம் சாருலதாவைப் பற்றி விசாரித்தான். அவள் தங்கியிருக்கும் இடம் பற்றி கேட்க அலுவல் ரீதியாக வருபவர்கள் தங்கியிருக்கும் பகுதிக்குத் தானே அழைத்துச் செல்வதாக கூறினார்.

அவரிடம் இருந்து கோபால் விடைபெற இந்திரஜித்தும் ரவீந்திரனும் சாருலதா தங்கியிருக்கும் பகுதியை நோக்கி நடைபோட்டனர். அவரது முகம் சோர்ந்திருக்க கண்டவன் “உங்க பையனுக்கு நடந்ததை உங்களால மறக்க முடியாது தான் சார்… ஆனா அதையே நினைச்சிட்டிருந்தா எதுவும் நடக்கப் போறதில்லயே” என்றான் மென்மையாக.

ரவீந்திரன் சற்று தடுமாறியவர் சிரமத்துடன் தனது கலக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவர் “என்னால அவனோட மரணத்துக்கு நீதி கூட கேக்க முடியாம போயிடுச்சே” என்றார் நைந்த குரலில்.

இந்திரஜித் வெறுமெனே தலையசைத்தவன் “உங்க மகனை அரவானோட கம்பேர் பண்ணாதிங்க… அரவானுக்குத் தான் சாகப்போறது நல்லா தெரியும்… உங்க மகன் முக்திங்கிற சக்கரவியூகத்துல மாட்டிக்கிட்ட அபிமன்யூ… உள்ளே நுழைய தெரிஞ்ச அபிமன்யூவுக்கு வெளிய வரத் தெரியாததால எந்தச் சக்கரவியூகத்த உடைக்கமுடியும்னு அவன் நம்புனானோ அதே சக்கரவியூகம் அவனுக்கு முடிவும் கட்டிச்சு… உங்க மகனும் முக்திய விட்டு வெளியேற நினைச்சவர்னு நியூஸ்ல பாத்திருக்கேன்… எப்பிடி வெளியேறுறதுனு யோசிச்சவருக்குப் புனேல நடந்தது பெரிய அநியாயம்… ஒரு அப்பாவா மகனோட சாவுக்கு நீதி கேக்க வேண்டியது உங்க கடமை… நீங்க செய்யுவீங்கனு நம்புறேன்… என் மனசுல பட்டத சொல்லிட்டேன் சார்… டோண்ட் டேக் மீ ராங்” என்று வெளிப்படையாகத் தனது கருத்தை வெளிப்படுத்திவிட்டான்.

அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரவீந்திரனுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை இந்திரஜித் அறியவில்லை. அவரும் அந்தத் தாக்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாருலதா இருக்கும் ரிசார்ட்டைக் காட்டிவிட்டு விடைபெற்றார்.

அவனது பேச்சு பிற்காலத்தில் முக்திக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட மாபெரும் உதவியாக இருக்குமென்பதை அறியாத இந்திரஜித் தோழியைச் சந்திக்க ரிசார்ட்டை அடைந்தான்.

சாருலதா பிரியாவுடன் வராண்டாவில் கிடந்த மூங்கில் இருக்கைகளில் அமர்ந்து மடிக்கணினியைக் காட்டி எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அங்கே வந்த இந்திரஜித்தைக் கண்டதும் சாருலதா திகைக்க பிரியாவோ முகம் மலர வரவேற்றாள்.

இந்திரஜித்திடம் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு சாருலதாவின் புகைச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டாள் பிரியா.

“இங்க கிளைமேட் சில்லுனு இருந்தாலும் இன்னைக்கு வெயில் கொஞ்சம் அதிகமா தெரியுது… இஃப் யூ டோண்ட் மைண்ட், சில்லுனு ஜூஸ் கொண்டு வர முடியுமா?”

“பத்து நிமிசன் வெயிட் பண்ணுங்க… ஜூசோட வர்றேன்” என்று எழுந்தவளின் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தாள் சாருலதா.

“எப்பிடிமா ஜூஸ் கொண்டு வருவ? நீ எதுவும் அட்சயப்பாத்திரம் வச்சிருக்கியா? இல்ல அற்புதவிளக்கு ஜீனி மாதிரி எதுவும் பூதத்தை உன் கன்ட்ரோல்ல வச்சிருக்கியா? நமக்கு ஃபுட் அண்ட் பீவரேஜ் இன்னும் வரலடி” என்று கேலியாக உரைத்தவளை அட அற்பமே என்பது போல பார்த்தாள் பிரியா.

பின்னே என்னவாம்! காலையிலேயே அவர்களுக்குத் தேவையான பழங்களைக் கொண்டு வந்து கொட்டியிருந்தனர் ரிசார்ட்டின் பணியாட்கள். முந்தைய தினம் மாலையே பிரியா அவர்களிடம் எலுமிச்சை பற்றி குறிப்பு காட்டியிருந்ததால் அதுவும் இருக்க பழச்சாறு தயாரிக்க இனி என்ன தடை?

விசயத்தை பிரியா விளக்கியதும் “உன்னோட இந்த தொலைநோக்குப் பார்வைல இத்துணூண்டு இவளுக்கு இருந்தா கூட போதும்… ஆனா இல்லையே” என்று அவளைப் பாராட்டுவது போல சாருலதாவை வாரி விட்டு வேடிக்கை பார்த்தான்.

பிரியா  புன்சிரிப்புடன் எழுந்து உள்ளே சென்றதும் தன்னை முறைத்த சாருலதாவை அருகே வரும்படி இரகசியக்குரலில் அழைத்தான் அவன்.

சாருலதா வழக்கம் போல தனது கண்களை உருட்டியவள் “கொன்னுடுவேன் உன்னை” என்று மிரட்ட

“என்னை அப்புறமா கொன்னுக்கலாம்டி… இப்போ என் மொபைல், லேப்டாப், எக்யூப்மெண்ட்ஸ் எல்லாத்தயும் எடு” என்று அடிக்குரலில் கூற

“அதுக்குத் தான் அவளை அனுப்பி வச்சியா?” என்று அவனைப் போல இரகசியக்குரலில் வினவினாள் சாருலதா.

“ஆமா! உன் மரமண்டைக்கு இப்போவாச்சும் புரிஞ்சுதா? போய் என்னோட திங்சை எடுத்துட்டு வா… இல்ல இல்ல… நீ ஒன்னு பண்ணு… உன்னோட டூல்ஸ் வைக்குற பேக்ல என் திங்சை வச்சு எடுத்துட்டு வா… பிரியா கேட்டா வி.ஐ.பி ரிசார்ட்டுக்கு முன்னாடி இருக்குற சனாதி ரிசார்ட்ல போட்டோஷூட் வச்சா நல்லா இருக்குமானு டெஸ்ட் பண்ணுவோம்னு சொல்லி சமாளி… நான் பேக்கோட திரும்பி போனா ரிசார்ட் இன்சார்ஜ் மதன் சந்தேகப்படுவான்” என்றான் இந்திரஜித்.

அடுத்த சில நிமிடங்களில் பழச்சாறுடன் பிரியா வருவதற்கு முன்னர் இந்திரஜித்தின் மடிக்கணினி, மொபைல் இன்னும் சில ஹேக்கிங் உபகரணங்களை தனது கேமரா இத்தியாதிகளுடன் சேர்த்து பெரிய பேக்கில் போட்டுக்கொண்டவள் வராண்டாவில் சென்று அமர்ந்தாள்.

பிரியா பழச்சாறு கொண்டு வரவும் கண் காட்டிவிட்டு இயல்பு போல காட்டிக்கொண்டவள் பழச்சாறை அருந்த துவங்கினாள். அது என்னவோ சில்லென்று தொண்டைக்குள் இறங்கி அவளைக் குளிர்விக்க முயன்றது தான்.

ஆனால் பிரியாவும் இந்திரஜித்தும் சிரித்து சிரித்து பேசி அவளைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.

சாருலதா அவர்களை முறைத்தபடி தம்ளரை காலி செய்தவள் இந்திரஜித்தின் திட்டப்படி பிரியாவை அழைத்துக்கொண்டு கிளம்பினாள். சனாதி ரிசார்ட்டை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து உதட்டைப் பிதுக்கியவளின் ஏமாற்றத்தைப் பொறுக்காதவன் போல இந்திரஜித் வி.ஐ.பி ரிசார்ட் பக்கம் அழைத்தான்.

“அங்க தெரியுற மலைச்சிகரம், பெரிய பெரிய மரங்கள் இதுல்லாம் உன் கேமராக்கு செம தீனியா இருக்கும் சாரு” என்று அவன் கூறவும் பிரியா அவளை வி.ஐ.பி ரிசார்ட் பக்கம் செல்வோமென நச்சரிக்க ஆரம்பித்தாள்.

வேண்டாவெறுப்பாக ஒத்துக்கொள்வதை போல சிறப்பாய் நடித்து இந்திரஜித்துடன் வி.ஐ.பி ரிசார்ட் பக்கம் வந்த சாருலதா கேமிராவை மட்டும் எடுத்துக் கொண்டாள்.

“ஏய் ட்ரைபோட் வேண்டாமாடி?” என்ற பிரியாவிடம் முதலில் சாதாரண கோணத்தில் எடுப்போம் என்று சமாளித்தவள் ட்ரைபோட் மற்றும் சில உபகரணங்களுடன் உறங்கிக் கொண்டிருக்கும் இந்திரஜித்தின் உடமைகள் அடங்கிய பேக்கை அவனிடம் நீட்டினாள்.

“நாங்க ஸ்டில்ஸ் எடுக்குற வரைக்கும் உன் ரூம்ல வச்சுக்கோ ஜித்து… இல்லனா எதையாச்சும் தொலைச்சிடுவேன்”

தோழியின் சாமர்த்தியத்தை மெச்சியவாறு அந்தப் பேக்கை வாங்கிக்கொண்டவன் அவனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான்.

அதிலிருந்த தனது மொபைலை எடுத்தவன் முதலில் அழைத்தது யசோதராவுக்கு.

“அண்ணி நான் பத்திரமா வந்துட்டேன்… என்னோட திங்ஸ்சை சாரு கிட்ட இருந்து வாங்கிட்டேன்… நான் இன்னைல இருந்தே இங்க இருக்குற டிவைசை ட்ராக் பண்ண ட்ரை பண்ணுறேன்… டூ டேய்ஸ்ல ரகு அண்ணா கேட்ட டீடெய்ல்ஸ் கிடைச்சதும் பீனிக்ஸ் கிட்ட அந்த வேலைய ஒப்படைச்சிட்டு அவரும் இங்க வந்துடுவார்… அப்புறம் நீங்க கேட்ட எவிடென்சை நானும் அவருமா சேர்ந்து கலெக்ட் பண்ணிடுவோம்”

மறுமுனையில் இருந்த யசோதராவின் மனம் நிம்மதியையும் பயத்தையும் ஒருங்கே அனுபவித்தது. ஆயிரம் முறை அவனையும் சாருலதாவையும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்திவிட்டுப் போனை வைத்தவள் நேரே சென்றது ரகுவின் கேபினிற்கு தான்.

“ஜித்து வேலைய ஆரம்பிச்சிடுவான் ரகு… சீக்கிரமே உன்னோட வேலைய முடிச்சிட்டு நீயும் மேகமலைக்குக் கிளம்பிடலாம்” என்றாள் அவள் நம்பிக்கையுடன். முக்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் சொந்த வாழ்க்கையில் நடந்த குளறுபடிகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு! முக்தியின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டால் சித்தார்த் விழித்துக் கொள்வான் என்ற நப்பாசை! பாவம், அவள் அவனை விட்டு விலகிய நாளிலிருந்தே அவன் விழித்துவிட்டான் என்பதை யசோதரா அறியவில்லையே!

மழை வரும்☔☔☔