☔ மழை 35 ☔

“கடந்த சில ஆண்டுகளில் ஆன்மீகவாதிகளின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன. நிதிமோசடியில் ஆரம்பித்து பாலியல் குற்றங்கள், கொலை போன்ற குற்றங்களிலும் இந்திய ஆன்மீகவாதிகள் மாட்டிக்கொள்வது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இவ்வாறு மாட்டிக்கொண்டவர்கள் தங்களது பக்தர்கள் மத்தியில் தங்களை அப்பாவியாகவே காட்டிக்கொள்வதால் அந்தக் கண்மூடித்தனமான பக்தர்கள் கூட்டம் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவருக்குத் துணையாக நிற்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு அந்த ஆன்மீகவாதி சிறைக்குச் சென்றால் கூட அந்தப் பக்தர்களின் நம்பிக்கை குறைவதில்லை”

     -எழுத்தாளர் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் மனோகர் பாட்டியா

முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…

நிர்வாகத்துறையினர் மட்டும் அமர்ந்திருந்த அந்த கான்பரன்ஸ் அறையின் நடுநாயகமாக அமர்ந்திருந்தார் சர்வருத்ரானந்தா. அவரது இடப்பக்கம் அமர்ந்திருந்த ரவீந்திரனுடன் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தவரை ஆர்வத்துடன் பார்த்தபடி தனது தோழர் தோழியிடம் புகைப்படம் எடுக்கும் வேலையைப் பற்றி குறிப்பு காட்டினாள் சாருலதா.

முக்தியின் நாள்காட்டி போட்டோஷூட்டிற்காக அவள் அங்கே வந்து அன்றுடன் மூன்று நாட்கள் கழிந்துவிட்டது. உள்ளே வரும் போதே கேமராக்கள் மற்ற கருவிகளைச் சந்தேகக்கண்ணுடன் பார்த்த முக்தியின் ஊழியர்களும் சிஷ்யப்பிள்ளைகளும் சாருலதாவிற்கு அயர்ச்சியைக் கொடுத்தனர்.

அவள் தனது வேலைக்காக கொண்டு வந்த பொருட்களுடன் இந்திரஜித்தின் மடிக்கணினி, மொபைல் இன்னும் சில ஹேக்கிங் இத்தியாதிகளை ஒளித்து எடுத்து வந்திருந்தாளே! அந்த விசயம் அவளது தோழி தோழர்களுக்கே தெரியாது! ஆனால் ரவீந்திரனின் உதவியால் எப்படியோ அவளது உடமைகள் பரிசோதனையிலிருந்து தப்பியது.

இளைப்பாறுதலுக்குப் பின்னர் நாள்காட்டிக்கான போட்டோஷூட்டிற்கு எந்தெந்த இடங்கள் தோதுவாக இருக்கும் என்பதைப் பற்றிய திட்டமிடுதல் கடந்த மூன்று நாட்களில் அட்லாண்டிஷ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

ஏனெனில் முக்தி ஃபவுண்டேசனின் சில பகுதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. தெரியாமல் ஒரு முறை பிரியா அந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதி பக்கம் கேமராவுடன் சென்றுவிட அங்கே தங்கியிருக்கும் தன்னார்வலர் ஒருவர் அவளை முறைப்புடன் எச்சரித்த சம்பவம் அரங்கேறியதால் தான் அவர்கள் மூன்று நாட்கள் திட்டமிடுதலுக்கு எடுத்துக்கொண்டனர்.

இதோ இப்போதைய மீட்டிங்கில் அதை வெளிப்படையாகக் குறிப்பிட்டுவிட்டாள் பிரியா.

“உங்களோட போட்டோஸ் அழகா வரணும்னா நாங்க கிரியேட்டிவா யோசிக்கணும்… கிரியேட்டிவா யோசிக்கணும்னா எங்களுக்குச் சுதந்திரம் இருக்கணும்… ஆனா நாங்க தெரியாம சில இடங்களுக்குப் போனா கூட உங்க வாலண்டியர்ஸ் எங்களை முறைக்கிறாங்க ருத்ராஜி… நாங்க போட்டோஷூட்டுக்கு வந்த விசயத்தை தயவு பண்ணி அவங்களுக்கு கன்வே பண்ணிடுங்க… எங்களை சந்தேகப்பார்வை பாத்தா எப்பிடி நாங்க நிம்மதியா வேலை பாக்க முடியும்?”

ருத்ராஜி அதைக் கேட்ட பிறகு தான் ரவீந்திரனிடம் தீவிரமாக ஆலோசிக்க துவங்கினார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே பிரியா பொருமித் தீர்த்தாள்.

“இங்க பாரு! அந்த எமகிங்கரன் போல இன்னொருத்தன் வந்து முறைச்சான்னு வையேன், எக்யூப்மெண்டை தூக்கிட்டுப் போயிட்டே இருப்பேன்… எதுக்கும் ஒரு லிமிட் இருக்குடி… என்னமோ நம்ம இந்த ஆசிரமத்துக்கு குண்டு வைக்க வந்த மாதிரி முறைக்கானுங்க… ஒழுங்கா அவங்களை கண்ட்ரோல்ல வச்சுக்க சொல்லு… இல்லனா அக்ரிமெண்டாவது மண்ணாங்கட்டியாவதுனு கிழிச்சுப் போட்டுட்டுக் கிளம்பு”

“ப்ச்… கோச்சுக்காத ரியா… ருத்ராஜி பாத்துப்பார்… கொஞ்சம் பொறுத்துக்கடி”

அவளைச் சமாதானம் செய்த சாருலதா ருத்ராஜியின் பதிலுக்காக காத்திருந்தாள்.

ருத்ராஜி தொண்டையைச் செருமிக்கொண்டவர் “உங்களோட போட்டோஷூட்டுக்கு இனிமே எந்தப் பிரச்சனையும் வராது… இனிமே உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும்… வாலண்டியர்ஸ் யாரும் உங்களைத் தடுக்க மாட்டாங்க” என்றார்.

அதைக் கேட்டதும் அட்லாண்டிஷினருக்கு நிம்மதியானது. எனவே சாருலதா தனது யோசனையை முன்வைத்தாள்.

“ஆக்ஸ்வலி கேலண்டருக்கு நம்ம போட்டோஷூட் பண்ணுறப்ப நீங்க சொன்ன மாதிரி பில்டிங்ஸ்சை மட்டும் கவர் பண்ணாம முக்தியோட முக்கியமான மெம்பர்ஸ்சையும் அந்தப் போட்டோஸ்ல இன்க்ளூட் பண்ணிக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு… ஐ மீன், இப்போ சனாதி ரிசார்ட் பக்கத்துல இருக்குற குழந்தைங்க தியானம் பண்ணுற மண்டபத்தை போட்டோ எடுக்குறப்ப அதுல குழந்தைங்களுக்கு யோகா கத்துக் குடுக்குற மெயின் யோகா இன்ஸ்ட்ரக்சரையும் சேர்த்தே எடுத்துடலாம்… இதனால முக்தியோட ஸ்டாஃப்ஸ் மேல கேலண்டரை பாக்குறவங்களுக்கு தனி அபிமானம் வரும்… அதோட வெறும் பில்டிங்கை மட்டும் எடுத்தா போட்டோல வேகண்ட் ஸ்பேஸ் நிறைய தெரியும்… அது போட்டோவோட அழகை கெடுத்துடும்”

ருத்ராஜியும் ரவீந்திரனும் மீண்டும் ஆழ்ந்து விவாதிக்க ஆகாஷ் சாருலதாவின் காதைக் கடித்தான்.

“ஏன் திடீர்னு ப்ளானை மாத்துற சாரு? ஸ்டாஃப்சையும் வச்சு போட்டோஷூட் எடுக்கணும்னா நமக்கு ஒர்க் பர்டன் ஜாஸ்தி ஆகும்… அவங்களுக்கு காஸ்டியூம், மேக்கப்னு எக்ஸ்ட்ரா செலவு வேற… அதோட எல்லா ஸ்டாப்ஸ் அண்ட் ஆபிசர்சும் போட்டோஷூட் நடக்குறப்ப இங்க இருக்கணும்… அவங்க ஒர்க்குக்கு நடுவுல இதுக்கு எப்பிடி டைம் ஒதுக்குவாங்க? அப்போ அவங்க டைம் ஒதுக்குற வரைக்கும் நம்ம காத்திருக்கணுமா? ஒரே வாரத்துல முடியுற வேலை உன்னால மாசக்கணக்குல நீளப்போகுது சாரு”

அவன் பேச்சை மற்ற மூவரும் ஆமோதிக்க சாருலதாவோ தனது திட்டத்தில் உறுதியாக இருந்தாள். யசோதரா சொன்னபடி முக்தியின் தூண்களான அலுவலர்கள், அதிகாரிகள் பற்றி அவள் தகவல் திரட்ட இந்தப் போட்டோஷூட்டில் அவர்களை இணைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

போட்டோஷூட்டிற்காக அவர்களின் பெயர்களுடன் முக்தியின் அன்றாட அலுவல்களில் அவர்களின் பங்கு என்ன என்பதையும் கேட்டு வாங்கிக்கொண்டு அதற்கேற்ப அவர்களை அந்தந்த கட்டிடப்பின்னணியில் புகைப்படம் எடுத்துவிடலாம் என்பதே அவளது திட்டம்.

தகவல் திரட்டுவதை இரகசியமாகச் செய்ய இதைவிட்டால் வேறு மார்க்கமும் அவளுக்குத் தெரியவில்லை. சர்வருத்ரானந்தாவும் ரவீந்திரனும் நீண்டநேர ஆலோசனைக்குப் பின்னர் சாருலதாவின் இந்த யோசனைக்கு மனப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்தனர்.

கூடவே “முக்தியோட முக்கியமான நபர்கள் எல்லாருக்கும் சதாசிவன் டெம்பிள் திறப்புவிழா வேலை நிறைய இருக்கு சாருலதா… சோ எல்லாராலயும் ஒரே நேரத்துல இங்க அசெம்பிள் ஆக முடியாது… அதனால உங்க வேலை கொஞ்சம் லேட் ஆகலாம்… உங்க ஷெட்யூலை நீங்க ப்ரிப்பேர் பண்ணிக்கோங்க… ரவீந்திரன் உங்களுக்கு இம்ப்பார்டெண்ட் மெம்பர்ஸ் லிஸ்டை உங்களுக்குக் குடுப்பார்” என்றார் அவர்.

சாருலதாவிற்குள் நிம்மதி பரவியது. உடனே இத்தகவலை யசோதராவிடம் தெரிவிக்க அவளுக்கு பரபவென இருந்தது. ஆனால் இப்போது முக்தியின் சிப்பந்திகள் சுற்றியிருக்கையில் அது சாத்தியமில்லை என்பதால் முதலில் மீட்டிங்கை முடிப்போம் என்று அமைதியாய் அமர்ந்து கொண்டாள்.

மீட்டிங்கும் நல்லபடியாக முடிவடைய நால்வரும் வெளியேறினர். சாருலதா ஒரு ஓரமாக மொபைலுடன் நகர்ந்தவள் யசோதராவை அழைத்தாள்.

“யசோக்கா ப்ளான் சக்சஸ்… முக்தியோட இம்ப்பார்ட்டெண்ட் ஸ்டாஃப்ஸ் லிஸ்ட் வரப்போகுது… வந்ததும் உங்களுக்கு ஃபார்வேட் பண்ணுறேன்” என்று படபடவென பொரிந்தவளின் பின்னே

“சாருலதா மேம்” என்ற கனத்த குரல் கேட்கவும் அதிர்ந்து போனாள் அவள்.

திக்திக்கென்ற உணர்வுடன் திரும்பியவள் அங்கே நின்ற ரவீந்திரனைக் கண்டதும் வியர்த்து வழிய ஆரம்பித்தாள். தான் பேசியதை மனிதர் கேட்டிருப்பாரோ என்ற ஐயம் அவளது வியர்வை சுரப்பிக்கு வேலை வைத்துவிட்டது.

ஆனால் அவரோ சினேகப்புன்னகை ததும்ப அவளிடம் வந்தார்.

“உங்க மெயில் ஐடி சொன்னிங்கனா முக்தியோட இம்ப்பார்ட்டெண்ட் மெம்பர்ஸ் லிஸ்டும் அவங்களோட ஒர்க் ஷெட்யூலும் அனுப்பிவச்சிடுவேன்… அதை பாத்துட்டு நீங்க அந்த ஷெட்யூலுக்கு ஏத்த மாதிரி உங்க போட்டோஷூட்டை நடத்திக்கலாம்” என்றார் அவர்.

சாருலதாவின் நுரையீரல் இவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த ஒட்டுமொத்த கார்பன்-டை-ஆக்சைடையும் பெருமூச்சாய் வெளியிட்டு உள்ளிருந்த வெற்றிடத்தை சுற்றுபுற ஆக்சிஜனால் நிரப்பிக்கொண்டது.

பயம் தீர அவரிடம் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தவள் இனி கவனமாக இருக்கவேண்டும் என தனக்குள் பேசியபடி அங்கிருந்து அகன்றாள்.

அதே நேரம் ஜஸ்டிஷ் டுடேவில் யசோதரா ரகுவுடனும் ஸ்ராவணியுடனும் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தாள். முக்தியின் மீது நிலுவையிலிருக்கும் வழக்கு விபரங்களைச் சேகரித்திருந்தவள் தயானந்தும் அவரது நண்பர்களும் போட்டிருந்த வழக்குகளை மேற்கோள் காட்டி தான் விவாதித்துக் கொண்டிருந்தாள்.

“ரகு அவங்க மென்சன் பண்ணிருக்கிற டீடெய்ல்ஸ் எல்லாம் சரியா இருக்குதானு செக் பண்ணுறதுக்கு சீக்கிரமே ஜித்து மேகமலைக்குப் போயாகணும்… எப்போடா உங்களோட ஹேக்கிங் ப்ளான் முடியும்?”

“இன்னைக்கு ஃபைனல் டெஸ்ட் பாத்துட்டோம் யசோ… பெர்ஃபெக்டா சாஃப்ட்வேர் வேலை செய்யுது…  நாளைக்கு காத்தால பையன் மேகமலைல இருப்பான்… அவன் பீச் ஹவுசோட கீ என் கிட்ட இருக்கு… அவன் அங்க இருந்து நான் கேக்குற டீடெய்ல்சை அனுப்புனதும் என்னோட வேலை முடிஞ்சிடும்… அதுக்கு அப்புறம் நானும் மேகமலைக்குப் போய் மத்த வேலைய ஆரம்பிச்சிடுவேன்… எல்லாரும் ஒரே நேரத்துல போனா சந்தேகம் வந்துடும்ல யசோ… எனக்கும் ஜித்துக்கும் தேவையான எக்யூப்மெண்ட்சை ஆல்ரெடி சாரு கொண்டு போயிட்டா… சோ இனிமே கவலை இல்ல… ஒரு ஜிப்பாவ போட்டுட்டு கிளம்பிட வேண்டியது தான்”

ஸ்ராவணி புன்சிரிப்புடன் அவனை நோட்டமிட்டவள் “டேய் ஜித்து போனதுக்கு அப்புறம் நீ போகணும்னு டிசைட் பண்ணுனியே அது நல்ல டிசிசன்… சப்போஸ் நீ மாட்டிக்கிட்டாலும் அவன் உன்னைக் காப்பாத்துவான்” என்றாள்.

ரகு அவளை முறைக்க யசோதரா சிரிப்பை கட்டுப்படுத்திவிட்டு “எது எப்பிடியோ நீ எப்போ அங்க போறியோ அப்போ தான் உண்மையான ஸ்டிங் ஆப்ரேசனே ஆரம்பிக்கும்” என்றாள்.

அப்போது “க்ளிங்” என்ற சத்தத்துடன் வந்தது மின்னஞ்சலுக்கான நோட்டிபிகேசன் வரவும் சந்தோசம் மெல்லிய ரேகையாக உதயமாக போனை எடுத்துப் பார்த்தவளுக்கு முக்தியின் முக்கியமான நபர்களின் அட்டவணையும் அவர்களது பொறுப்பும் சாருலதா அனுப்பியிருப்பதைக் கண்டதும் அவளது முகம் உச்சபட்ச சந்தோசத்துக்குச் சென்றது.

ஸ்ராவணியிடம் அதை காட்டவும் அவள் ‘சஞ்சீவ் பாலகிருஷ்ணன்’ என்ற பெயரில் கைவைத்து “இவர் தான் லீகலா எல்லா ஹெல்பையும் பண்ணுறார்… முக்தியோட லீகல் ஒர்க்ஸ் எல்லாத்தையும் இவரோட லா கன்சர்ன் தான் பண்ணுறாங்க… முக்கியமா முக்தி மேல போடப்படுற எல்லா கேசுக்கும் இவர் ஆஜராவார்… இல்லனா அவரோட ஜூனியர்ஸ் ஆஜராவாங்க… ஆக்ஸ்வலா முகுந்த் டெத் கேஸ்ல முக்திக்காக புனே வரைக்கும் போனவர் இவர் தான்… இவரை நானும் மேகியும் அங்க பாத்திருக்கோம்” என்றாள்.

பின்னர் ஒவ்வொருவர் பெயராகப் பார்த்துக் குறித்துக் கொண்ட யசோதரா இனி கையிலிருக்கும் நபர்களின் பின்னணி பற்றி ஆராயும் வேலையை ஆரம்பித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

மூவரும் அவரவர் கேபினுக்குக் கலைந்து சென்றுவிட யசோதராவின் நேரம் காற்றினும் கடிதாகப் பறந்தது.

அதே நேரம் சித்தார்த் தனது வழக்கறிஞருடன் பேசிக்கொண்டிருந்தான். வழக்கறிஞர் குணாளனிடம் தன் நிலையை விளக்கிவிட்டான் அவன்.

“நான் யசோவ கொஞ்சம் ஹர்ட் பண்ணீட்டேன் தான்… அதுக்கு டிவோர்ஸ் ரொம்ப பெரிய பனிஷ்மெண்ட் சார்… என்னால என் பொண்டாட்டி குழந்தைய விட்டுட்டு வாழ முடியாது”

“ஆனா அவங்க டிவோர்ஸ் கேட்ட காரணம் நீங்க ஹர்ட் பண்ணுனது இல்ல சார்… நீங்க உங்க மனைவிய, ஆக்டிங் கரியரை விட்டுட்டு முக்தி ஃபவுண்டேசனுக்குப் போய் சேவை பண்ணப்போறதா சொன்னதாவும் அதால கோவப்பட்டு தான் அவங்க டிவோர்சுக்கு அப்ளை பண்ணுனதாவும் க்ளியரா மென்சன் பண்ணிருக்காங்க… கிட்டத்தட்ட துறவறம் மாதிரி… இது டிவோர்சுக்கு முக்கியமான காரணம் சார்… இதை நம்ம இக்னோர் பண்ண முடியாது”

“நான் அப்போ இருந்த கோவத்துல சொன்னேன் சார்… என் பொண்ணை அந்த ராகேஷோட ஆளுங்க எதுவும் பண்ணிடுவாங்களோங்கிற பயம்… அப்ப எனக்கு கரியர், ஃபேமிலி எதுவுமே முக்கியம்னு தோணல… நான் யசோவயும் சேர்த்து தான் அங்க வரச் சொன்னேன்… அவ முடியாதுனு சொன்னதால தான் நான் மட்டும் போறேன்னு சொன்னேன்… அதை அவ டிவோர்சுக்குக் காரணமா சொல்லுவானு நான் கனவா கண்டேன்?”

நொந்து போன குரலில் உரைத்தான் சித்தார்த். குணாளனுக்கே அவனைப் பார்த்தால் பரிதாபமாகத் தான் இருந்தது. அவசரத்தில் எதேதோ அனர்த்தங்களை செய்துவிட்டு இப்போது இக்கட்டில் சிக்கித் தவிக்கிறான்.

அவனது வழக்கறிஞர் என்ற முறையில் அவனை ஜெயிக்கவைப்பது அவரது கடமை. அதற்கான வேலையில் தான் இறங்குவதாக உறுதியளித்தவர் அவனை விட அகவையில் மூத்தவர் என்பதால் ஒரு அறிவுரையும் கொடுத்தார்.

“அட்வைஸ் பண்ணுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க சித்தார்த் சார்… குடும்பம் தான் ஒரு மனுசனுக்கு அஸ்திவாரம்… அது ஆட்டம் கண்டுச்சுனா அந்த மனுசன் நிலை குலைஞ்சிடுவான்… சோ உங்க பிரிவுக்கு என்ன காரணமோ அதை உங்க வாழ்க்கைல இருந்து அழிச்சிடுங்க… இந்த கேஸ்ல நீங்க ஜெயிக்கணும்னா உங்க மனைவியோட நம்பிக்கைய அன்பை மறுபடியும் நீங்க ஜெயிக்கணும்… அதுக்கு என்ன வழினு யோசிங்க”

இதே அறிவுரையைத் தான் அனைவரும் அவனுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர் சமீபகாலமாக. சாந்தகோபாலன் கூட இனி முக்தி ஃபவுண்டேசனை மறந்துவிடு என்று மறைமுகமாகக் கூறிவிட்டார்.

இனி அவன் வாழ்க்கை அவன் எடுக்கப்போகும் முடிவில் தான் இருக்கிறது. யோசிப்பானா அவன் என குணாளன் யோசிக்கும் போதே சித்தார்த் அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

நேரே வீட்டை அடைந்தவன் இந்திரஜித் அவனது உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்புவதைக் கண்டதும் திகைத்தான்.

இப்போது அவனது சர்க்கிளில் எந்த கார்பந்தயமும் இல்லையே! பின் எங்கே செல்கிறான் என்ற கேள்வியுடன் அவனை எதிர்கொண்டான் சித்தார்த்.

“நான் கொஞ்சநாள் பீஸ்ஃபுல்லா லைஃபை கழிக்க விரும்புறேன் அண்ணா… சோ முக்திக்குக் கிளம்புறேன்… அங்க போய் யோகா, தியானம்னு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வர்றேன்” என்றான் இந்திரஜித்.

சித்தார்த்தால் அவன் சொல்வதை நம்ப முடியவில்லை. முக்தி ஃபவுண்டேசன் விசயத்தில் அவன் யசோதராவைப் போல தான் சிந்திப்பான். அப்படிப்பட்டவன் ஏன் திடீரென அங்கே செல்ல நினைக்கிறான் என்ற குறுகுறுப்பு சித்தார்த்தைப் பேச வைத்தது.

“நம்ப முடியலயேடா… இந்த விசயத்துல நீ யசோவோட ஜெராக்ஸ் காப்பினு எனக்கு நல்லாவே தெரியும்… உண்மைய சொல்லு”

“அண்ணிக்கு முக்தி ஃபவுண்டேசனோட அணுகுமுறை தான் பிடிக்கல… அவங்க எப்போவும் அங்க சொல்லிக்குடுக்குற யோகாவ பத்தி குறை சொன்னது இல்ல… அதனால தான் அங்க போறேன்… எப்பிடியும் திரும்பி வர்றதுக்கு ஒரு மாசம் ஆகும்ணா” என்றான் இந்திரஜித்.

நாராயணமூர்த்தி சவிதாவிடம் சொல்லிவிட்டாயா என்று வினவவும் தமையனின் விசாரணையில் அலுத்துப் போனான் அவன்.

“அதெல்லாம் சொல்லிட்டேன்ணா… உங்களோட ஹியரிங் இந்த மன்த் எண்ட்ல வருதுல்ல… அதுல கான்சென்ட்ரேட் பண்ணுங்கண்ணா… ப்ளீஸ் அண்ணி மறுபடியும் இங்க வரணும்” என்று ஆதங்கத்துடன் தமையனிடம் கூறிவிட்டுக் கிளம்பினான் இந்திரஜித்.

சித்தார்த் அமைதியாகத் தனது அறைக்கு வந்தவன் அங்கே இன்னும் மிச்சமிருந்த யசோதராவின் வாசனையை தனக்குள் நிரப்பிக்கொண்டான். அவள் உபயோகித்த மேஜை, அவளது கரம் பட்டு மீண்ட பேனாக்கள், எப்போதாவது தலை வலித்தால் அவள் பூசிக்கொள்ளும் தலைவலி தைலம் என சின்ன சின்ன பொருட்கள் கூட அவளது பிரிவை பூதாகரப்படுத்தி அவனைத் திணறடித்தது.

இதோ இன்னும் சில நாட்களில் ஹியரிங்கில் அவன் பேசியே ஆகவேண்டும். யசோதரா அவனிடம் இழந்த நம்பிக்கையை  மீண்டும் அவளுக்குள் துளிர வைக்க வேண்டும்.

மெதுவாய் மூச்சு விட்டவன் அருகே கிடந்த மேஜையின் அறையைத் திறந்து பார்க்க அதில் அவனைப் பார்த்து சிரித்தது முக்தியில் கொடுக்கப்பட்ட ருத்திராட்சமாலை.

எப்போதும் அதை கழுத்தில் அணிந்திருப்பவன் என்று யசோதரா விவாகரத்து வரை சென்றாளோ அன்றே அதை கழற்றிவிட்டான். இதே போல ஒரு ருத்திராட்சமாலையில் தானே என்றோ ஒரு நாள் பிரச்சனை ஆரம்பித்தது என்ற எண்ணம்!

கண்களை இறுக மூடிக்கொண்டவன் “நீ இருக்குறப்ப மன அமைதி வேணும்னு எங்கேயோ ஓடுனேன்… இப்போ நீ போனதுக்கு அப்புறம் தெரியுது என்னோட மனசு நீ பக்கத்துல இருந்தா மட்டும் தான் அமைதியா இருக்கும்னு… என்னோட உண்மையான சந்தோசம் உன் கூட இருக்குறப்ப தான் கிடைக்கும்னு இந்தப் பிரிவு எனக்குப் புரிய வச்சிடுச்சு யசோ… எப்போவுமே எனக்குப் பிடிச்ச விசயங்கள்ல நீ தலையிட்டது இல்ல… நீ முக்தி விசயத்துல கோவப்பட்டது நம்ம பொண்ணுக்காக தான்… அதை புரிஞ்சுக்காம கை நீட்டி இன்னைக்கு உன் முன்னாடி மோசமான புருசனா நிக்கிறேன்… எந்த ஐடியால நான் எல்லாரையும் விட்டுட்டு சர்மிய கூட்டிட்டு முக்தில போய் இருக்கப்போறதா சொன்னேன்னு எனக்கே புரியல… அப்போ இருந்த டென்சன்ல எதையும் யோசிக்கல… இப்போ யோசிக்கிறப்ப என் தப்பு புரியுது… இந்த ஹியரிங்ல நான் கண்டிப்பா டிவோர்சுக்கு ஒத்துக்கமாட்டேன் யசோ… ஐ லவ் யூ அண்ட் ஐ மிஸ் யூ அ லாட்” என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டான்.

அதே நேரம் ஜஸ்டிஷ் டுடேயில் உணவருந்திக் கொண்டிருந்த யசோதராவுக்குப் புரையேறியது. ஸ்ராவணி அவள் முதுகில் தட்டி தண்ணீர் தம்ளரை நீட்ட மேனகாவோ “ஹப்பி நினைக்கிறார் போல” என்று கேலி செய்தாள்.

யசோதரா சிரித்துச் சமாளிக்க அனுராதாவோடு அமர்ந்திருந்த ரகுவோ ஆதங்கத்துடன் அவளை நோக்கினான். இன்னும் விவாகரத்து பற்றி அவளிடம் கேட்கவில்லை. ஏற்கெனவே புண்பட்டவளை அக்கறை எனும் பெயரில் வருத்த விரும்பவில்லை அவன்.

யசோதராவோ ரகுவின் பார்வையில் மின்னிய ஆதங்கத்தைக் கண்டுகொண்டு என்னவென வினவ அவனோ ஒன்றுமில்லை என சமாளித்தான். சீக்கிரம் அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகமான முடிவு கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வதை தவிர அந்தத் தோழனுக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லை.

மழை வரும்☔☔☔