☔ மழை 33 ☔

போட்டோகிராபியில் மாடிஃபையர்களின் பங்கு முக்கியமானது. படைப்புத்திறனை அதிகரிக்கவும், வெளிச்சத்தைப் பரவ செய்யவும், அந்த இடத்தின் சூழலைச் சரிகட்டவும் மாடிஃபையர்கள் இன்றியமையாதவை. குடைவடிவ மாடிஃபையர்கள் அடிப்படையில் போட்டோகிராபி பயில்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அவை வெளிச்சத்தை மென்மையாகவும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே சீராக பரப்பவும் உதவும். அடிப்படை பயிற்சி முடிவடைந்ததும் சாஃப்ட் பாக்ஸ், ஆக்டாபாக்ஸ், ஜெல் போன்றவற்றை மாடிஃபையர்களைப் பயன்படுத்தி நமது படைப்பாற்றலுக்கு உயிர் கொடுக்க முடியும்.

                                           – Sergey Kostikov in picturecorrect.com

முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…

கோயில் கட்டுமான வேலை முழுமையுற்று விட அதன் திறப்புவிழாவுக்கான ஏற்பாடுகள் களை கட்டத் துவங்கியிருந்தது. சிறப்பு விருந்தினர்களைக் கவனிப்பதற்கான விதிமுறைகள் பப்ளிக் ரிலேசன் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த விழாவுக்கான அழைப்புகள், சதாசிவனைப் பற்றி எழுதப்பட்ட புகழாரங்கள் முக்தியின் சமூக ஊடக கணக்குகளின் முகப்பை அலங்கரிக்கத் தொடங்கியது.

பொது மக்களை அனுமதிக்கலாமா வேண்டாமா, அவர்களுக்கு நுழைவுக்கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவாதங்கள் நிர்வாகத் துறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

நிர்வாகத்துறையின் மேலாண்மை ரவீந்திரன் வசம் இருந்ததால் அவரும் அங்கே அமர்ந்திருந்தார். கூடவே ருத்ராஜியும்.

நீண்டநாள் கழித்து முக்தியின் அலுவல்களில் ரவீந்திரன் கலந்துகொண்ட மகிழ்ச்சி ருத்ராஜியின் முகத்தில் தெரிந்தது. உற்சாகமாக நிர்வாகத்துறையினரிடம் தனது கருத்துக்களை முன்வைத்தவர் கூட்டம் முடிவடைந்ததும் ரவீந்திரனுடன் வெளியேறினார்.

“நீங்க மறுபடியும் பழையபடி இயல்பானதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ரவீந்திரன்”

“எவ்ளோ நாள் தான் நானும் அந்த நாலு சுவருக்குள்ள அடைஞ்சு கிடக்கிறது? அதான் பழையபடி வேலைகள்ல இறங்கிட்டேன்… இப்போ தான் நிம்மதியா இருக்கு ருத்ராஜி”

“குருஜி கால் பண்ணுனாரா ரவீந்திரன்?”

“இல்ல ருத்ராஜி… அவர் யூ.எஸ் ஆசிரமத்துல வேர்ல்ட் லெவல் யோகா புரோகிராமை ஆர்கனைஸ் பண்ணுறதுல பிசியா இருப்பார்னு நினைக்கிறேன்… சதாசிவன் கோயில் திறப்புவிழாக்கு அவரும் வரணும் தானே?”

“அவர் இல்லாம எப்பிடி நடக்கும் ரவீந்திரன்? சீஃப் கெஸ்ட்ல முக்கியமானவர் அவர் தான்… தமிழ்நாடு முழுக்க இதை பத்தி விளம்பரம் பண்ணணும்… மாவட்ட தலைநகரங்கள்ல இருந்து பப்ளிக் ஈசியா வர்றதுக்கு பஸ் அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணிடலாம்னு அட்மினிஷ்ட்ரேசன் டீம் ஒரு ஐடியா குடுத்தாங்க… அது எந்தளவுக்குச் சரியா இருக்கும்னு நான் இன்னும் யோசிக்கல”

“ம்ம்”

இருவரும் பேசிக்கொண்டே ருத்ராஜி தங்குமிடமான அரைவட்ட வடிவிலான கட்டிடத்தை அடைந்தனர். வழக்கம் போல காற்றிலாடும் மலர்களும், தூரத்தில் தெரிந்த மலைச்சிகரங்களும் ரவீந்திரனின் மனதை வருட முயல அதன் அடியாழத்தில் ஒட்டியிருந்த புத்திரசோகம் அவரை அனுபவிக்க விடவில்லை.

“நீயெல்லாம் என்ன மனுசன்? உன் மகன் காரணமே இல்லாம செத்துருக்கான்… அவனோட சாவுக்கு இன்னும் நீதி கிடைக்கல… ஆனா உனக்கு அதைப் பத்தி கவலை இல்ல… உன்னோட விசுவாசம் பாசத்த ஜெயிச்சிடுச்சு ரவீந்திரா” என்று அவரது மனசாட்சி அவரைக் கேள்வி கேட்க துவங்கவும் ருத்ராஜியிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றார்.

அப்படியே சனாதி ரிசார்ட் பகுதிக்கு நடந்து வந்தவர் முன்னே எதிர்பட்டான் ஜெய்ராம். தோளில் பேக், கையில் ரோலர் சூட்கேஸ் சகிதம் எங்கோ செல்லவிருந்தவனிடம் “என்னப்பா மறுபடியும் உன்னை புனே ஆஸ்ரமத்துக்கு அனுப்புறாங்களா?” என்று வினவினார்.

“இல்ல சார்… நான் என் வீட்டுக்குத் திரும்பிப் போறேன்” என்றான் ஜெய்ராம்.

“என்னப்பா திடீர்னு இப்பிடி ஒரு முடிவு எடுத்திருக்க?”

“திடீர்னு எடுத்த முடிவு இல்ல சார்… ரொம்ப நாளா மனசுல போட்டுக் குழப்புன முடிவு தான்… எங்க திரும்புனாலும் முகுந்த் நின்னு பேசுற மாதிரியே ஃபீல் ஆகுது… என்னால இதை டாலரேட் பண்ண முடியல சார்… அதான் கிளம்பிட்டேன்… நீங்க பத்திரமா இருங்க சார்” என்றவன் அவரது காலைத் தொட்டு வணங்கிவிட்டு கிளம்பினான்.

ரவீந்திரனின் மனம் மீண்டும் முகுந்தின் நினைவலைகளில் மெதுவாய் மிதக்க ஆரம்பித்தது. இனி அன்றைய அலுவலில் அவரால் கவனம் செலுத்த முடியாது. வலித்த மனதுடன் தனது அறையை நோக்கி நடைபோட்டார் ரவீந்திரன்.

**********

மயூரி வணிகவியல் இரண்டாமாண்டு வகுப்பிலிருந்து வெளியேறியவள் மூன்றாமாண்டிலிருந்து மாணவர்கள் சூழ வந்த கௌதமைப் பார்த்ததும் என்னவென வினவினாள்.

“டிவைன் காலேஜ்ல நடக்குற காம்படிசன்ல பசங்க கலந்துக்கப் போறாங்க… அதுக்கு டிப்ஸ் சொல்லணுமாம்… விட மாட்றானுங்க என்னை” சினேகம் தவழ புன்னகைத்தான் கௌதம்.

மாணவர்களில் ஒருவனோ “சார் செகண்ட் இயர்ல நீங்க குடுத்த டிப்சை ஃபாலோ பண்ணித் தான் டிசிசன் மேக்கிங்ல வின் பண்ணுனோம்… இந்தத் தடவையும் அந்தக் கப் நமக்குத் தான் கிடைக்கணும்… அதுக்கு நீங்க தான் சார் ஹெல்ப் பண்ணணும்” என்று பேசியபடி வர மயூரியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

“சந்திரன் சார் கிட்ட கேக்க வேண்டியது தானே?”

இவ்வாறு மயூரி கூறியதும் மாணாக்கார்களின் முகம் இஞ்சி தின்ற மந்தியைப் போல மாறிவிட்டது.

“ஏன்பா முகம் இப்பிடி மாறுது?” கேலியாய் கேட்டபடி அவர்களுடன் வணிகவியல் துறையை அடைந்தாள் அவள்.

“நீங்க வேற மேம், க்ளாஸ்ல அவர் நடத்துன தியரி புரியலனு டௌட் கேட்டதுக்கே காய்ச்சி எடுத்துட்டார்… அவர் கிட்ட டிப்ஸ் கேட்டோம்னா க்ளாஸ் நடத்துறப்ப கவனிச்சிருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்னு வறுத்து எடுத்துடுவாரு மேம்” என்று சொன்னபடி இருவருடனும் துறைக்குள் நுழைந்தனர் மாணவர்கள்.

மயூரி சிரித்தபடி தன்னிடம் உள்ள மேலாண்மை சம்பந்தப்பட்ட புத்தகங்களை கௌதமிடம் கொடுத்தவள்

“உன் ஸ்டூடண்ட்சுக்கு இதுல இருக்குற பாயிண்ட்சை எக்ஸ்ப்ளெய்ன் பண்ணு… இட்ஸ் இனாஃப்” என்று கூறிவிட்டு இன்னும் ஒரு மணி நேரம் கழித்துச் செல்லவேண்டிய வகுப்பில் அன்று நடத்த வேண்டிய பாடங்களை குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.

கௌதம் மாணவர்களுக்கு மேலாண்மை சம்பந்தப்பட்ட நடைமுறை செயல்பாடுகளை விளக்கியவன் முடிவெடுக்கும் திறன் குறித்தும் அதற்கு பயன்படுத்த வேண்டிய வழிமுறைகளையும் விளக்கினான்.

மாணவர்கள் கிளம்பியதும் மயூரியிடம் ஓர் உதவி கேட்டான் அவன். அதற்கு முதலில் மயூரி அவனை முறைத்தாள். அவளது முறைப்பில் அவன் தயங்கி பரிதாபமாய் விழிக்கவும்

“செய்யுறதையும் செஞ்சுட்டு மூஞ்சிய மட்டும் பாவமா வச்சுக்கோ… சரி நீ கவலைப்படுற அளவுக்குப் பிரச்சனை பெருசில்ல… ஹேமாக்கு உன் மேல இருக்குறது கோவமில்ல, வருத்தம்! யாரோ ஒரு ஆளுக்காக நீ அவ்ளோ தூரம் கோவப்பட்டது தப்புனு அவ நினைக்கிறா… அவ நினைக்கிறது தப்பு இல்லயே! ஒழுங்கா நீ அவ கால்ல கையில விழுந்தாச்சும் மன்னிப்பு கேளு” என்று கூறிவிட்டு மீண்டும் புத்தகத்தைப் பார்த்து தலைகுனிய

“நான் எவ்ளோ தடவை சாரி கேட்டுட்டேன் தெரியுமா? ஆனா அவ என்னைக் கண்டுக்கவேல்ல மய்யூ… நான் கொஞ்சம் எமோஷனல் ஆனது தப்பு தான்… இனிமே அப்பிடி நடந்துக்கமாட்டேனு சொன்னாலும் கேக்க மாட்றா… வாழ்க்கையே வெறுத்துப் போச்சு எனக்கு” என்று குறைபட்டான் கௌதம்.

மயூரி தலையுயர்த்திவிட்டு “அஹான்! சரி புலம்பாத… ஆல்ரெடி யசோவோட ப்ராப்ளம் வேற… நான் உனக்கு ஒரே ஒரு கேரண்டி மட்டும் குடுக்குறேன்” என்றாள் தீவிரக்குரலில்.

“என்ன மய்யூ?”

“ஹேமா கண்டிப்பா உன்னை டிவோர்ஸ் பண்ணமாட்டா”

மயூரி கேலியாய் சொன்னாலும் அது தான் உண்மை என்பது கௌதமிற்கு தெரியும். ஏனெனில் அவன் மனைவி வைத்திருக்கும் காதலின் ஆழத்தை அறிந்தவன் அவன்! ஆனால் அடுத்த நொடியே மயூரி வேறு விதமாய் அதற்கு விளக்கமளிக்க கௌதம் மீண்டும் பரிதாப நிலைக்குச் சென்றான்.

“அது உன் மேல வச்சிருக்குற லவ்வுக்காகனு கனவுக்கோட்டை கட்டாத மகனே… என்னை பாத்து ஏன்டா கை ஓங்குனோம்னு நொந்து போற வரைக்கும் கௌதமை விடமாட்டேன்னு என் கிட்ட ஆல்ரெடி சபதம் போட்டிருக்கா உன் பொண்டாட்டி… டிவோர்ஸ் பண்ணிட்டா அது நடக்காதுல்ல”

“நீ இந்த விளக்கத்த குடுத்திருக்கவே வேண்டாம்”

“அது எப்பிடி விடமுடியும்? இதெல்லாம் என்னோட கடமை”

மயூரி கேலி போல கூறினாலும் ஹேமாவையும் யசோதராவையும் சுட்டிக்காட்டி மாதவனை தெளிவுறச் செய்ய அவள் பட்ட கஷ்டம் அவளுக்கு மட்டுமே தெரியும்!

தான் ஒன்றும் யசோதராவை போல விவாகரத்து அளிக்கவோ, ஹேமாவைப் போல கூடவே இருந்து புறக்கணிவோ மாட்டேன் என்றவள் இம்மாதிரி கண்மூடித்தனமான நம்பிக்கையை மாதவன் விடவில்லை என்றால் பிரவினை அழைத்துக்கொண்டு கண்காணாத இடத்திற்கு போய்விடுவேன் என்று எச்சரித்திருந்தாள்.

அவள் சொன்னால் செய்துவிடுவாள் என்பதை மாதவன் அறிந்திருந்ததாலும் ஏற்கெனவே இரு நண்பர்களின் இனிய இல்லறம் சிதறியதைக் கண்கூடாக கண்டிருந்ததாலும் முடிந்தவரை ருத்ராஜி மீதான குருட்டு நம்பிக்கையிலிருந்து வெளிவர முயன்று கொண்டிருந்தான் மாதவன்.

அதைச் சுட்டிக்காட்டிப் பேசிய மயூரி “உனக்கு கடவுள் பக்தி இருக்குதா? நேரா உங்க ஏரியால இருக்குற சிவன் கோயிலுக்கோ பெருமாள் கோயிலுக்கோ போய் கடவுளை சேவிச்சுக்க… அதை விட்டுட்டு இந்தச் சாமியார் ஆஸ்ரமம்னு சுத்துறது தான் பக்தினு நினைச்சா அது உன்னோட அறியாமை… ஹேமாவ சமாதானம் பண்ணுறதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு… அதுக்கு நீ இனிமே முக்தி பத்தியோ ருத்ராஜி பத்தியோ வீட்டுல பேசாத… அதை மறந்தா தான் உன் லைஃப் உனக்குத் திரும்ப கிடைக்கும்… இதுக்கு அப்புறம் உன் இஷ்டம்” என்று பேச்சை முடித்துக்கொண்டாள்.

கௌதம் அனைத்தையும் கேட்டவன் அவனது நாற்காலியில் சாய்ந்து யோசனையில் மூழ்கினான். அவன் நல்ல முடிவு எடுப்பான் என்ற நம்பிக்கையில் மயூரி அடுத்த வகுப்பிற்கான குறிப்பை எடுக்க ஆரம்பித்தாள்.

*************

“என்னோட செட்டப் எல்லாமே பீஸ் ஹவுஸ்ல இருக்கு ரகுண்ணா… நீங்க வந்திங்கனா அதை பாத்துடலாம்… அப்புறம் நம்ம ப்ளானை டிசைன் பண்ணிக்கலாம்” என்று ரகுவுடன் பேசியபடி பீச் ஹவுசில் இருக்கும் தனது ஹேக்கிங் அறைக்குள் நுழைந்தான் இந்திரஜித்.

எதிக்கல் ஹேக்கிங்கை அவன் பாடமாக எடுத்தது இயல்பிலேயே அவனுக்குள் இருக்கும் ஆர்வத்தினால். பத்தோடு பதினொன்றாக இருக்க விரும்பாமல் தனது தனித்தன்மையை நிரூபிக்கவே எதிக்கல் ஹேக்கர் ஆனது.

படிக்கும் போதே இந்த ஹேக்கிங் ரூம் செட்டப்பை அவனது கார்பந்தயத்தில் ஜெயித்த தொகையை வைத்து கச்சிதமாக நிறுவிக்கொண்டான். படித்து முடித்த பிறகு ஹேக்கிங்கிற்கு பயன்படுத்த கூடிய அதிகாரப்பூர்வ மென்பொருட்கள், அதை இயக்குவதற்கு தேவையான கணிப்பொறி மற்றும் மற்ற இயந்திரங்களை நிறுவுவதற்கான செலவை அவனது தந்தை நாராயணமூர்த்தி ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் அங்கே நிறுவப்பட்ட இயந்திரங்கள் யாவும் அவன் வாங்கிய சர்வதேச அளவில் பிரபலமான ஹேக்கிங் மென்பொருள் நிறுவனத்தாரே கட்டமைத்துக் கொடுத்தது. அதற்கான செலவு அதிகம் தான்! அதை சித்தார்த் தான் செய்தான்.

“ஏன்ணா இதெல்லாம் நீங்க பண்ணுறீங்க? நானே பே பண்ணிக்கிறேன்”

“டேய் உன்னோட புரொபசனுக்கு நானும் என் பங்குக்கு எதாச்சும் பண்ணணும்ல… சாஃப்ட்வேர் அப்கிரேடிங் செலவை வருசாவருசம் நீ தான் கட்டப்போற… அப்புறம் என்ன?” என்று கேட்க அதற்கு மேல் இந்திரஜித் சித்தார்த்திடம் வாதிடவில்லை.

இது வரை அந்த மென்பொருளை வைத்து இந்திரஜித் வேலை செய்தது எல்லாம் அரசாங்கத்திற்காக மட்டுமே. சில வழக்குகளில் தடயம் எதுவும் கிடைக்காத நிலையில் குற்றவாளியின் வாய் வார்த்தையாகவோ அல்லது அவரது தகவல் தொடர்பு கருவிகளான மொபைல், கணினி வாயிலாகவோ கிடைக்கும் ஆதாரங்கள் காவல்துறைக்கு உதவியாக இருக்கும். அம்மாதிரி கருவிகளை அதை வைத்திருப்பவர்கள் அறியாவண்ணம் இயக்குவதற்கென சில மென்பொருட்கள் இருக்கின்றன. அதை எல்லாரும் அவ்வளவு எளிதில் வாங்கிவிட முடியாது.

வெறுமெனே இணையத்தில் கிடைக்கும் ‘ஓப்பன் சோர்ச்’ ஹேக்கிங் மென்பொருட்கள் நம்பகத்தன்மை அற்றவை. அவற்றால் பெரியளவில் எந்த செய்தியையும் ஹேக் செய்ய இயலாது. எனவே தான் அதிகாரப்பூர்வ மென்பொருட்களை அவன் உபயோகிப்பது!

அவன் ரகுவிற்காக காத்திருக்க அப்போது ஒரு கார் பீச் ஹவுசின் வளாகத்தினுள் நுழைந்தது. காரின் சொந்தக்காரன் மாதவன் என்பதை பீச் ஹவுசின் பால்கனியில் நின்றிருந்த இந்திரஜித் அறிந்துகொண்டான்.

கார் தரிப்பிடத்தில் நின்றதும் அதிலிருந்து மாதவனுடன் இறங்கிய சித்தார்த்தைக் கண்டதும் இருவரும் ஏன் இந்நேரத்தில் பீச் ஹவுசிற்கு வருகின்றனர் என்ற கேள்வியுடன் வேகமாக பால்கனியிலிருந்து உள்ளே வந்தவன் படிகளில் இறங்கி ஹாலில் வந்து நின்றான்.

உள்ளே நுழைந்த நண்பர்கள் இருவரும் இந்திரஜித்தைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்தனர். கதவு திறந்திருந்த போது வழக்கம் போல பணியாளர்கள் இருப்பர் என்றே எண்ணியிருந்தனர் இருவரும். அத்தோடு இந்திரஜித்தின் காரும் தரிப்பிடத்தில் இல்லை.

“நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணுறீங்க?” இருவரிடமும் வினவினான் அவன்.

“அதுக்கு அப்புறமா பதில் சொல்லுறோம்… உன்னோட கார் எங்க?” வெகு வேகமாக அவனது தமையனிடத்திலிருந்து கேள்வி பிறந்தது.

“கார் காம்பவுண்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடியே ஏதோ ஃபால்ட்ல நின்னுடுச்சுண்ணா… சோ சர்வீசுக்கு அனுப்பிருகேன்… ஓகே! இப்போ என்னோட கேள்விக்குப் பதில் சொல்லுங்க”

“பதில் தெரிஞ்சுக்காம விடமாட்டியே! இன்னைக்கு ஷூட் இல்ல… அதான் கொஞ்சம் ரிலாக்சா இருக்கலாம்னு இங்க வந்தோம்” என்றான் மாதவன்.

சித்தார்த்தும் ஆமென்று தலையசைக்க அப்போது “ஹாய் ஜித்து” என்று அழைத்தபடி ஜஸ்டிஷ் டுடே ஐடி கார்டுடன் அங்கே வந்து சேர்ந்தான் ரகு.

மாதவனையும் சித்தார்த்தையும் அவன் அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது அவனது திகைத்த பார்வையிலேயே தெரிந்தது. இருப்பினும் இருவரையும் பார்த்து புன்முறுவல் பூத்தவன் “ஹலோ சார்! ஹவ் ஆர் யூ?” என்று மரியாதைநிமித்தம் குசலம் விசாரித்தான்.

இருவரும் நலமென்றவர்கள் இந்திரஜித்திடம் கண்ணால் பேச அவனோ “ரகுண்ணாவ நான் தான் வரச் சொன்னேன்… ஆக்ஸ்வலி எனக்கு இப்போ பெரிய ஒர்க் ஒன்னு வந்திருக்கு… அதுல கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு… அதை அண்ணா கிட்ட கேட்டு க்ளியர் பண்ணிக்கலாம்னு வரச் சொன்னேன்” என்றான் அவன்.

“அதுக்குனு ஆபிஸ் ஹவர்லயா வரச் சொல்லுவ? ஈவினிங் ஆபிஸ் முடிஞ்சதும் கூப்பிட்டிருக்கலாம்ல” என்று கேள்வியாய் ஒலித்தது சித்தார்த்தின் குரல்.

இந்திரஜித் பதில் சொல்ல திணற ரகுவே உதவிக்கு வந்தான்.

“இன்னைக்கு எனக்குப் பெருசா எந்த வேலையும் இல்ல சார்… அதான் ஜித்து கூப்பிட்டதும் வந்துட்டேன்… சில சந்தேகங்களை உடனே பேசி தீர்த்துக்கலனா பிரச்சனை பெருசாயிடும்” என்று முத்தாய்ப்பாக கூறினான் அவன்.

“சரி ஜித்து! உங்களுக்கு காபி கொண்டு வரச் சொல்லுறேன்.. நீ இவரோட டைமை வேஸ்ட் ஆக்காம சீக்கிரமா உன் சந்தேகத்த கிளியர் பண்ணீட்டு அனுப்பு” என்றான் மாதவன்.

இருவரும் தலையாட்டிவிட்டு ஹேக்கிங் ரூமை நோக்கி நகர நண்பர்கள் இருவரும் ஹாலில் இருந்து வெளியேறி ஃப்ரெஞ்ச் விண்டோவுக்கு வெளியே தெரிந்த புல்வெளியில் கிடந்த நாற்காலியை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

அமர்ந்ததும் காபி வர அதை அருந்தியவர்கள் சோவென்று இரையும் கடல் அலைகளின் சத்தத்தை ரசித்தபடியே அமர்ந்திருந்தனர். மாதவனால் வெகுநேரம் அமைதியாக இருக்கமுடியவில்லை. எனவே கேட்டே விட்டான்.

“நீ டிவோர்சுக்குச் சம்மதம் சொல்லப்போறீயா?”

சித்தார்த் மெல்லிய திடுக்கிடலுடன் திரும்பியவன் கண்களில் உறுதி உதயமாக, இல்லை என்று பலமாகத் தலையசைத்தான். தனது தவறினால் நடந்த குளறுபடிகளைச் சீரமைக்க அவனுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் தேவை! அந்த வாய்ப்பு கண்டிப்பாக பிரிவு இல்லை என்பதை சித்தார்த் நன்றாக அறிவான். பிரிவிற்கு பதிலாக யசோதரா என்ன கேட்டாலும் செய்ய அவன் தயாராக இருந்தான்.

சித்தார்த்தின் இம்மனநிலையை யசோதரா அறிந்துகொண்டால் அவளது மணமுறிவு முடிவிலிருந்து பின்வாங்குவாளா?

மழை வரும்☔☔☔