☔ மழை 30 ☔

வான்வழி புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு விமானம்அல்லது பிற பறக்கும் பொருளிலிருந்து புகைப்படங்களை எடுப்பது. வான்வழி புகைப்படம் எடுப்பதற்காக நிலையான சிறகுகள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யு.ஏ.வி அல்லதுட்ரோன்கள்), பலூன்கள், பிளிம்ப்ஸ் மற்றும் டிரிகிபிள்ஸ், ராக்கெட்டுகள், புறாக்கள், காத்தாடிகள், பாராசூட்டுகள், தனியாக தொலைநோக்கி மற்றும் வாகனம் பொருத்தப்பட்ட துருவங்கள் போன்றவை பயன்படுத்தப்படும். ஏற்றப்பட்ட கேமராக்கள் தானாக படமெடுக்கும் அல்லது அந்த கேமராவை தரையிலிருந்து புகைப்படக்கலைஞர் இயக்கலாம்.

                                           -mimirbook.com வலைதளத்திலிருந்து

பின் வந்த நாட்களில் ராகேஷின் பரோலை காவல்துறை இடைநீக்கம் செய்துவிட அவன் மீண்டும் சிறைச்சாலையின் சுவருக்குள் அடைபட்டான். எப்படியும் தான் ஏற்பாடு செய்த கூலிக்குக் கொலை செய்யும் கொடூரன் காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிடுவான் என்ற நம்பிக்கை அவனுக்கு.

“ஒரு கொலை பண்ணுனாலும், நாலு கொலை பண்ணுனாலும் ஒரே தண்டனை தானே சார்” என்று ராகேஷிடம் அந்த கூலிக்குக் கொலை செய்பவன் கூறியது அவனுக்கு அசையா நம்பிக்கையை உண்டாக்கிவிட நிம்மதியுடன் சிறையில் அடைபட்டான்.

இடையிடையே அவனிடம் விசாரணை நடத்தப்பட்டாலும் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. சீக்கிரமே சித்தார்த்தின் குடும்பம் அழிந்துவிடும் என்று சிறைச்சாலைக்குள் பகற்கனவு கண்டு நாட்களைக் கடத்த ஆரம்பித்தான் ராகேஷ்.

அதே நேரம் யசோதராவை சவி வில்லாவுக்கு அழைத்து வர சவிதா நாராயணமூர்த்தியில் ஆரம்பித்து இந்திரஜித் வரை அனைவரும் மேற்கொண்ட அமைதி பேச்சுவார்த்தை எந்தப் பலனுமளிக்காது போய் விட யசோதராவுக்கும் சித்தார்த்துக்கும் இடையேயான உறவு இந்தியா பாகிஸ்தான் உறவாகவே இருந்தது. அதே நேரம் மனைவிக்கும் மகளுக்கும் பாதுகாவலர்களை நியமித்திருந்தான் சித்தார்த்.

அந்த ஏழு நாட்களில் எத்தனையோ முறை அவன் லோட்டஸ் ரெசிடென்சிக்கு வந்தாலும் முக்தி வித்யாலயா விசயத்தில் அவனது பிடிவாதம் தளர்வேனா என்று அடம்பிடிக்க அதே நேரம் யசோதராவோ அவர்களது உறவை குறித்து முக்கியமான முடிவை எடுத்தும் விட்டாள்.

அது குறித்து பேசுவதற்காக தான் வழக்கறிஞரைச் சந்திக்க வந்திருந்தாள் அவள்.

“மிசஸ் சித்தார்த், நீங்க உங்களோட முடிவுல உறுதியா தான் இருக்கீங்களா? இல்ல யோசிக்கணுமா?”

வழக்கறிஞரை எவ்வித தயக்கமுமின்றி ஏறிட்டாள் யசோதரா. இந்த முடிவை எடுப்பதற்குள் அவள் எத்தனை முறை மனதுக்குள் குமுறியிருப்பாள் என்பதை அவள் மட்டுமே அறிவாள். ஆனால் இனியும் யோசிப்பதில் பலனில்லை. ஏனெனில் அவள் செய்யும் தாமதம் அவளது காதலைக் கேலிக்கூத்தாகி விடும். அவளது குடும்பத்தின் ஜீவனை வதைத்துவிடும்.

“என்னோட டிசிசன்ல நான் ஸ்ட்ராங்கா இருக்கேன் லாயர் சார்… ஐ வாண்ட் டிவோர்ஸ்… இதுக்கு மேல ஒரு நிமிசம் கூட என்னால மிஸ்டர் சித்தார்த்தோட ஒய்பா வாழ முடியாது… அப்பிடி நான் அவரோட ஒய்பா வாழ்ந்தேன்னா என் குழந்தையோட எதிர்காலம் கேள்விக்குறி ஆயிடும்… என் பொண்ணுக்காக நான் எதையும் செய்வேன்” என்றவளின் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு திகைத்தார் அவர்களின் குடும்ப வழக்கறிஞர் ஞானசேகரன்.

“நான் இந்த முடிவைச் சந்தோசமா எடுக்கல சார்… ஆனா ஐ ஹேவ் நோ அதர் ஆப்சன்… நான் மனசளவுல சித்தார்த்தை விட்டு எப்போவோ விலகிட்டேன்… இந்த டிவோர்ஸ்லாம் வெறும் ஃபார்மாலிட்டி தான்… இது நடந்தா தான் என் பொண்ணு சம்பந்தப்பட்ட எந்த முடிவையும் எடுக்குற உரிமை என் கைக்கு வரும்” என்றவளின் மனசாட்சி மீண்டும் அவளை இடித்தது.

“நல்லா யோசி யசோ… இந்த டிவோர்ஸ் தேவை தானா?”

அடுத்த நொடியே சித்தார்த் அவள் மனக்கண்ணில் தோன்றினான். நீ ஒரு சுயநலமான அன்னை என்றான். உனது பிடிவாதத்திற்காக என் மகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குகிறாய் என்றான்.

பின்னர் யசோதரா யோசிக்கவே இல்லை. சீக்கிரமாக அவனுக்கு நோட்டிஷ் அனுப்பும்படி கூறிவிட்டாள்.

வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவளுக்கு ஸ்ராவணியிடமிருந்து மொபைலில் அழைப்பு வந்திருக்க அதை ஏற்று பேசியபடி காருக்குள் அமர்ந்தாள்.

“சொல்லுங்க மேம்” என்றவள் ப்ளூ டூத்தை அணிந்துவிட்டு காரைக் கிளப்பினாள்.

அடுத்த முக்கால் மணிநேரத்தில் ஜஸ்டிஷ் டுடேவின் வாகன தரிப்பிடத்தில் அவளது காரை நிறுத்திவிட்டு அலுவலகத்தினுள் வந்தவள் நேரே ஸ்ராவணியின் கேபினுக்குச் சென்றாள்.

அங்கே ஸ்ராவணியும் மேனகாவும் ரகுவுடன் ஏதோ தீவிரக்குரலில் விவாதித்துக் கொண்டிருந்தனர். அவள் உள்ளே வரவும் “யசோவே வந்துட்டா… அவ கிட்ட கேட்டா பெஸ்டா எதாச்சும் க்ளூ கிடைக்கும்” என்றாள் மேனகா.

யசோதரா மூவரையும் பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்தவள் “பூனே விசிட்டால எதாச்சும் பிரயோஜனம் இருந்துச்சா?” என்று விசாரிக்க

“பெருசா எந்த தகவலும் கிடைக்கல… மேகமலை ஆஸ்ரமம் போலவே அந்த புனே ஆஸ்ரமத்துலயும் இந்தியன்ஸ் ஃபாரினர்ஸ்னு ஏகப்பட்ட மக்கள் யோகா கத்துக்க வர்றாங்க… அங்க சில யந்திர பூஜைகள் நடக்குது… அதை மட்டும் நான் வீடியோவா ரெக்கார்ட் பண்ணிட்டேன்… அதுல காசு நல்லா விளையாடுது… கனடால செட்டில் ஆன ஒரு தமிழ் லேடி கிட்டத்தட்ட டூ லாக்ஸ் பூஜைக்காக பே பண்ணிருக்காங்க… இவங்க குடுத்த யந்திரம் உடைஞ்சதும் அந்தம்மா கோவப்பட்டு அன்னைக்கு அங்க இருக்குற முக்தியோட ஸ்டாஃப் கிட்ட பயங்கரமா கத்திட்டாங்க… அப்புறம் டூ டேய்ஸ் கழிச்சு போலீஸோட வந்தாங்க… அவங்க பே பண்ணுன அமவுண்டை அஸ் யூஸ்வல் டொனேசனா காட்டிருக்காங்க முக்தி ஃபவுண்டேசன்.. என்.ஆர்.ஐங்கிறதால பிரச்சனைய பெருசாக்காம அந்தம்மாக்கு அவங்க பணத்தைத் திருப்பிக் குடுத்துட்டாங்க… இதையும் நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன்” என்றாள் ஸ்ராவணி.

யசோதராவிடம் ரகு அந்த காணொளியைக் காட்ட அதைப் பார்த்தவள் “அப்போ மேகமலை ஆஸ்ரமத்துலயும் இது நடக்கும்னு நினைக்கிறீங்களா? ஃபர்ஸ்ட் எனக்கு ஒன்னு புரியல, ஆஸ்ரமம், கோயில், பூஜை புனஸ்காரம்னு நடக்குற இடத்துக்கு ஏன் ஷேரிட்டபிள் ட்ரஸ்டுக்கு குடுக்குற டாக்ஸ் எக்சம்சன் குடுத்திருக்காங்க… மத அடிப்படைல நடத்துற ட்ரஸ்டுக்கு இது அப்ளிக்கபிள் இல்லயே” என்று எரிச்சலுடன் கூறினாள்.

“வெறும் யோகா மட்டும் சொல்லிக் குடுத்தா எப்பிடிமா காசு சம்பாதிக்க முடியும்? அதுக்கு தான் எக்ஸ்ட்ராவா கோயில், பூஜை, ஆன்லைன் ஷாப்பிங் சைட் எல்லாமே… இதுல வாலண்டியர்ஸ் வச்சு கிராமங்கள்ல யோகா க்ளாஸ் நடத்துனோம், விவசாயிங்களுக்கு உதவுனோம்னு எக்கச்சக்கமா டீடெய்ல்ஸ் குடுக்குறாங்க… ஆனா பெனிஃபீசியரிஸ்ச பாக்காம நம்ம எந்த முடிவுக்கும் வரமுடியாதுல்ல” என்றாள் மேனகா.

இதில் அவர்கள் இருவரையும் தன்னார்வலராகப் பணிபுரியும்படி அன்புக்கட்டளை வேறு புனே ஆஸ்ரமத்தில் இடப்பட்டதாம்! இவ்வளவையும் கேட்ட யசோதரா ரகுவிடம்

“புனே ஆஸ்ரமம் பத்தி டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணுனது நமக்கு உதவியா இருக்கும் ரகு.. இதே செயல்பாடுகள் தானே மேகமலைலயும் நடக்கும்… நாம ஏன் அங்க நேரா போய் பாக்க கூடாது?” என்று வினவ

“உன்னை நம்பவே மாட்டானுங்க யசோ… நீ அவங்க மேல கேஸ் போட்டவ… உனக்குப் பதிலா வேற யாரையாச்சும் அனுப்பி வைக்கணும்… அவங்களுக்குத் துணையா நானும் போறேன்… மேகமலை ஆஸ்ரமத்துல என்னென்ன நடக்குதுனு சீக்ரேட்டா வாட்ச் பண்ணி அடுத்த அடிய எடுத்து வைப்போம்” என்றான் ரகு.

அவன் கூறுவதை மூன்று பெண்களும் ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் ரகுவும் மேனகாவும் அவரவர் கேபினுக்குச் சென்றுவிட ஸ்ராவணியிடம் தான் சேகரித்த ஆவண ஆதாரங்களைக் காட்டினாள் யசோதரா.

அப்போது தான் ஸ்ராவணி அவளது முன்நெற்றியைக் கவனித்தாள். காயம் ஆறிவிட்டாலும் தழும்பு இருக்குமல்லவா!

“இந்தத் தழும்பு எப்பிடி வந்துச்சு யசோ? எங்கயும் இடிச்சிட்டியா? நான் புனே போனதுக்கு அப்புறம் உன் கிட்ட வீடியோ கால்ல பேசவேல்ல,.. அதான் தெரியல… என்னாச்சு?” என்று அக்கறையாய் வினவவும் யசோதராவின் கரங்கள் தானாய் நெற்றியின் இடப்பக்கமிருந்த அந்தச் சிறிய தழும்பைத் தடவிக்கொண்டது யசோதராவின் விரல்கள்.

என்ன பேசுவது என்று புரியாது தவித்தவள் சிரமப்பட்டு “டேபிள் இடிச்சிடுச்சு மேம்” என்று பொய்யுரைத்தாள்.

ஸ்ராவணி ஆதுரமாய் சிரிக்கவும் யசோதராவின் விழிகள் அவளது மொபைல் வால்பேப்பரில் பட்டு மீண்டது. அதில் அதிதியும் ஆரவ்வும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தனர்.

திடீரெனெ நினைவு வந்தவளாக அவர்கள் வெளிநாட்டில் படிப்பைத் தொடர்வது குறித்து வினவ ஆரம்பித்தாள் யசோதரா.

“பசங்களை ஃபாரின் அனுப்ப நீங்க எப்பிடி ஒத்துக்கிட்டீங்க மேம்?”

“அவங்க பாதுகாப்புக்காக தான் அனுப்பி வச்சேன்… மேகி ரொம்ப அழுதா… ஆனா எனக்கு வினியும் ஷ்ரவனும் எங்க பசங்களை நல்லா பாத்துப்பாங்கனு நம்பிக்கை இருந்துச்சு… அதோட நானும் அபியும் அங்க போய் அவங்களுக்காக நாங்க செலக்ட் பண்ணுன ஸ்கூல் பத்தி விசாரிச்சோம்… அங்க ஸ்டூடண்ட்ஸ் சேஃப்டி பக்காவா இருக்குங்கிறது உறுதியானதுக்கு அப்புறம் தான் நாங்க மூனு பசங்களையும் யூ.எஸ்கு அனுப்பி வச்சோம்”

யசோதரா பெருமூச்சுவிட்டாள். இம்மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுடன் கூடிய வேறு ஏதாவது பள்ளியை சித்தார்த் தேர்வு செய்திருந்தால் கூட மகளுக்காக யசோதரா தலையாட்டி இருப்பாளே! ஆனால் அவனது மனம் முக்தி வித்யாலயாவின் பால் சரிந்துவிட்டதன் வினை இன்று விவாகரத்தில் வந்து நிற்கிறது!

அதை யாரிடமும் இன்னும் பகிர்ந்துகொள்ளவில்லை. பகிர்ந்துகொள்ளும் தகவலா அது? எத்தனை கனவுகளுடன் ஆரம்பித்த வாழ்க்கை அவர்களுடையது! அன்று இருந்த காதல் இன்று வரை துளியளவு கூட குறையவில்லை. இங்கே குறைந்து போனது இரு நெஞ்சங்களின் புரிதல் மட்டுமே!

இல்லறவாழ்க்கை எனும் வாகனத்தின் இரு சக்கரங்களில் ஒன்று காதல் என்றால் மற்றொன்று புரிதல். ஏதேனும் ஒன்று குறைந்தாலும் அந்த வாகனத்தால் நகர முடியாது.

புரிதலற்ற வாழ்க்கையும் காதலற்ற வாழ்க்கையும் செல்லரித்த மரத்திற்கு ஒப்பானது. என்றாவது ஓர்நாள் அது வீழ்ந்து தான் தீரும்! இதோ அவர்களின் வாழ்க்கை வீழ்ந்தது போல!

எப்படியும் ஒரு நாள் வெளியுலகிற்கு தெரியத் தான் போகிறது. அதுவரை அமைதி காப்போமென்ற முடிவுடன் தனது வேலையில் மூழ்கத் துவங்கினாள் யசோதரா.

***********

அட்லாண்டிஷ் ஸ்டூடியோ…

அலுவலக அறையில் அமர்ந்து புகைப்படங்களை அடோப் லைட்ரூம் மென்பொருளில் எடிட் செய்து கொண்டிருந்தாள் சாருலதா. பிரியாவும் ஆகாஷும் மாடிஃபையர்கள் ரிஃப்லெக்டர்கள் சூழ க்ரீம் வண்ண பேக்ட்ராப்பில் ஒரு குழந்தையை படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இப்போதைய ட்ரெண்டான ‘நியூ பார்ன் போட்டோஷூட்’ (Newborn Photoshoot) ஜூரம் அந்தக் குழந்தையின் பெற்றோரையும் பிடித்தாட்ட குழந்தையை இதயவடிவிலான தலையணையில் படுக்கவைத்து அவளைச் சுற்றி துணியிலான க்ரீம் வண்ண மலர்களை அடுக்கி அவளது குட்டி சிரத்தில் பூக்கள் வளைந்து நெளியும் கொடி போன்ற ரீத்தை மாட்டிவிட்டிருந்தனர்.

வெண்ணிற உடையில் குழந்தை கண் மூடி தேவதையாய் இதழ் விரிக்க ஆகாஷ் படபடவென புகைப்படங்களைச் சுட்டுத் தள்ளினான்.

மற்றொரு பக்கம் சுரேஷ் ஸ்டாக் ரூமில் அடாப்டர்களையும் பேட்டரிகளையும் கபோர்டில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

இத்தகைய பரபரப்பிற்கிடையே சாருலதா அழைத்திருந்தாள் என்பதால் அட்லாண்டிஷினுள் நுழைந்தான் இந்திரஜித்.

அவன் நேரே அலுவலக அறைக்குள் பிரவேசிக்க சாருலதாவின் பார்வை அவன் மீது படிந்தது. அடுத்தக் கணமே முத்துப்பற்கள் மின்ன சிரித்தவளுக்கு அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் சிரிப்பை நிறுத்திக் கொண்டாள்.

“என்னடா ஆச்சு? ஏன் உர்ருனு வந்திருக்க? வர இஷ்டமில்லனா போன் பண்ணுனப்போ முடியாதுனு சொல்லிருக்க வேண்டியது தானே”

உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு மீண்டும் கணினிக்குள் புதையப் போனவளின் கரத்தைப் பற்றினான் இந்திரஜித். கண்களில் டன் கணக்கில் கலக்கம்!

இவனுக்கு என்னவாயிற்று என்று அவள் பதற இந்திரஜித்தோ “நீ முக்தி ஃபவுண்டேசனோட ஆஃபரை ஏத்துக்கப் போறியா சாரு? வேண்டாம் சாரு… தப்பு பண்ணுறவங்க சகவாசம் நமக்கு எதுக்கு? ஆல்ரெடி அண்ணா அவங்க மேல வச்ச மரியாதை தான் இன்னைக்கு அவரோட வாழ்க்கைல நடக்குற எல்லா பிரச்சனைக்கும் காரணம்… அடுத்து உன்னால எந்தப் பிரச்சனையும் வேண்டாம் சாரு” என்று தணிந்த குரலில் அறிவுறுத்தினான்.

சாருலதாவும் சிறிது யோசித்தவள் “பட் அவங்க குடுக்குறதா சொன்ன பேமெண்ட் அதிகம் ஜித்து… அதை வச்சு அட்லாண்டிஷோட இண்டீரியர்ல நிறைய டெவலப்மெண்ட் கொண்டு வரலாம்… நிறைய எக்யூப்மெண்ட்ஸ் வாங்கிக்கலாம்னு நான் ஒரு கணக்கு போட்டு வச்சிருக்கேன் ஜித்து” என்றாள்.

“பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும் சாரு… அதுக்காக நீ அந்த மாதிரி இடத்துக்குப் போகணுமா?”

“அவங்க தப்பு பண்ணுறதாவே இருக்கட்டும் ஜித்து… அதுக்கும் என்னோட வேலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? நான் போறது முக்தியோட 2022 கேலண்டர் போட்டோஷூட்டுக்கு தான்… அங்க இருக்குற கலைநயமிக்க பில்டிங்ஸ், டெம்பிளை பேஸ் பண்ணி கேலண்டர் ரெடி பண்ண போறாங்க… அந்தக் கேலண்டர் யூனிக்கா இருக்கணும்னு தான் இந்த ஆஃபரை எனக்குக் குடுத்திருக்காங்க… நான் போட்டோஷுட் முடிச்சதும் எனக்குப் பேமெண்ட் வரப்போகுது… யூ நோ ஒன் திங்க்? நான் ஆல்ரெடி அட்வான்ஸ் வாங்கிட்டேன்… அவங்களுக்குப் ப்ராமிசும் பண்ணிட்டேன்… தொழில்ல குடுத்த வாக்கை காப்பாத்துறது ரொம்ப முக்கியம்… நான் அதை ஃபாலோ பண்ணணும்னு நினைக்கிறேன்”

அவள் நிதானமாகப் பேசிய அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள் தான் என்றாலும் ஏனோ இந்திரஜித்திக்குச் சாருலதாவை அங்கே அனுப்ப இஷ்டமில்லை.

“இஷ்டப்படுறதுக்கு நீ யாருடா பாடிசோடா?” எரிச்சலாய் முணுமுணுத்தது பெரும் நியாயவாதியான அவனது மனசாட்சி.

“ஹான் நான் அவளோட ஃப்ரெண்ட்… என்னை விட வேற எந்த கொம்பன் அவளோட நல்லதை பத்தி யோசிப்பான்?” வெகு தெனாவட்டாய் பதிலளித்தவன் அதே பதிலை சாருலதாவிடம் கூறினால், அவளோ என் காது கேட்காது என்று தொண்ணூறுகளின் குழந்தைகள் சொல்லும் வசனத்தைக் கூறிவிட்டு வேலையைத் தொடர எத்தனித்தாள்.

இந்திரஜித்திற்கு எரிச்சல்! அது வார்த்தையாய் வெளியே வரவும் செய்தது.

“இந்த வாக்கு வெங்காயம் எல்லாம் எனக்கும் புரியுது… ஆனா அந்த ஃபவுண்டேசன் மேல எவ்ளோ அலிகேசன் இருக்குனு தெரிஞ்சும் போறேன்னு சொல்லுற… உனக்கு நிஜமாவே புரியலயா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீயா?”

அவனது அதட்டல் தொனி சாருலதாவிற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஆங்ரி பேர்டைச் சுரண்டிவிட அவள் பொங்கத் துவங்கினாள்.

“நான் நடிக்கிறேன்னே வச்சுக்கோ… ஐ டோண்ட் கேர்… நாய் வித்த காசு குலைக்காதுனு எங்க பாட்டி ஒரு டயலாக் சொல்லும்”

“ஏய் அது பழமொழிடி”

“என்னவோ ஒன்னு! நான் அதை தான் ஃபாலோ பண்ணப்போறேன்… இதுல நீ ஒன்னும் எனக்கு அட்வைஸ் பண்ணவேண்டாம்… இது என்னோட புரொபசனை டெவலப் பண்ணிக்க எனக்குக் கிடைச்ச கோல்டன் ஆப்பர்சூனிட்டி… இதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன்”

இந்திரஜித்தின் அறிவுரையும் மறுப்பும் நிர்தாட்சணியமாக நிராகரிக்கப்பட இதற்கு மேல் இவளிடம் வாதிடுவது சுவரில் முட்டுவதற்கு சமம் என்று சலித்துக்கொண்டவன் “எப்பிடியோ போய் தொலை” என்ற பொன்மொழியை உதிர்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவன் சென்றதும் தானியங்கியாய் சாருலதாவின் மனம் சோர்வுற்றது.

“இவன் வந்தாலே கத்தி கத்தி என் எனர்ஜி வேஸ்டா போகுது… இனிமே ஆபிஸ்ல குளுக்கோஸ் ஸ்டாக் வச்சிக்கணும்… எமர்ஜென்சிக்கு உதவும்” தனக்குத் தானே புலம்பிக்கொண்டு லைட்ரூமை நோக்கியவளின் கவனம் அதில் பதிந்தால் தானே! ஏனெனில் இந்திரஜித்தின் இன்றைய பேச்சின் முடிவில் அவன் குரலில் இருந்த சலிப்பு அவளை வேறு எதையும் யோசிக்க விடாது செய்துவிட மெய்யாகவே சோர்ந்து போனாள் அவள். அப்படிப்பட்ட நிலையிலும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய எண்ணவில்லை சாருலதா.

மழை வரும்☔☔☔