☔ மழை 28 ☔

கார்பரேட் சாமியார்களிடம் புரளும் பணம் சமூகத்தில் பல்வேறு சக்திவாய்ந்த மனிதர்களின் கறுப்புப்பணமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தச் சாமியார்கள் அவர்களது பினாமிகளாக செயல்படுகின்றனர். இந்தக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தகராறுகளே சில சமயம் இவர்கள் மீதான நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.  ஒரு விழிப்புணர்ச்சியுள்ள சமூகம் இங்கே உருவாகாதவரை இந்த கார்ப்பரேட் போலிப் பக்திக் கலாச்சாரத்தை தடுக்க இயலாது.

                                                         –எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், தினகரன் 29.10.2019

முக்தி ஃபவுண்டேசன்…

முக்கிய நபர்களுக்கான தங்குமிடமான சனாதி ரிசார்ட் பகுதியில் இருந்த அறை ஒன்று அரைகுறை வெளிச்சத்தில் சோம்பிக் கிடந்தது. வெளிச்சமும் இருளும் சரிபாதியாக இருந்தாலும் அங்கே இருளின் ஆதிக்கம் சற்று அதிகமே!

அந்த அறைக்குள் குறைந்த வெளிச்சத்தை வழங்கி கொண்டிருந்த விளக்கின் உபயத்தால் சுவரில் புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருந்த முகுந்தின் புன்னகை ததும்பும் வதனத்தைப் பார்த்துக்கொண்டு சாய்வுநாற்காலியில் கிடந்தார் ரவீந்திரன். கண்ணீர் முகத்தின் பக்கவாட்டில் வடிந்து காய்ந்து போயிருக்க மனமோ ஒற்றை மைந்தனை இழந்து புத்திரசோகத்தில் மூழ்கியிருந்தது.

அப்போது வாயில் பக்கம் யாரோ வரும் அரவம் கேட்டது. யாரென எட்டிப் பார்க்க சொல்லி ரவீந்திரனின் மூளை கட்டளையிட்டாலும் சோர்வடைந்திருந்த உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

“டின்னர் சாப்பிடலயா ரவீந்திரன்?”

ருத்ராஜியின் குரல்! பட்டின் மென்மையை ஒத்திருந்த குரல்! அதில் தவழும் ஆதுரம்! ஆனால் இவை எதுவும் ரவீந்திரனின் சோகத்தைக் கிஞ்சித்தும் குறைக்கவில்லை என்பதே உண்மை!

தான் கேட்டதற்கு பதில் வராது போகவே ரவீந்திரனின் அருகே இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தார் ருத்ராஜி. முகுந்தின் புகைப்படத்தையே வெறித்தபடி அமர்ந்திருந்த ரவீந்திரனின் தோளைத் தட்டிக்கொடுத்தவர்

“வருத்தப்படாதீங்க ரவீந்திரன்… உலகத்துல பிறந்த எல்லாரும் ஒரு நாள் சர்வேஸ்வரனோட ஐக்கியமாகித் தான் ஆகணும்… என்ன செய்யுறது? சிலரை அவர் சீக்கிரமே தன் கிட்ட அழைச்சிக்கிறார்”

ருத்ராஜியின் ஆறுதலைக் கேட்டு வெறுமெனே தலையாட்டி வைத்தார் ரவீந்திரன். அதே நேரம் அவரது காதில் முகுந்திற்கு உதவியாய் வட இந்தியாவிற்கு சென்றிருந்த ஜெய்ராமின் குரல் ஒலித்தது.

“தீக்காயம் முகுந்தோட முகத்தை மட்டும் தான் அதிகமா சேதப்படுத்துச்சு… நம்ம ஆஸ்ரமத்துல இருக்குறவங்க மனசு வைச்சிருந்தா முகுந்தை சீக்கிரமாவே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டுப் போய் காப்பாத்திருக்கலாம்… ஆனா அவங்க ருத்ராஜிக்கு கீழ்படியாதவன் இருந்தா என்ன செத்தா என்னனு விட்டுடாங்கப்பா”

ரவீந்திரனின் விழிகள் மூடிக்கொள்ள மூடிய இமைகளினூடே இரு சொட்டுக்கண்ணீர்த்துளி இமை தாண்டி கன்னத்தில் வழிந்தது.

ருத்ராஜி புத்திரசோகத்தின் விளைவு அந்தக் கண்ணீர் என எண்ணிக்கொள்ள உண்மையில் ரவீந்திரனின் மனமோ ருத்ராஜி நினைத்திருந்தால் தன் மகனுக்கு இந்நிலை வராது தடுத்திருக்கலாம் என்ற ஆற்றாமையால் தான் கண்ணீர் வடித்தது.

அவன் அப்படி என்ன செய்துவிட்டான்? ஒரு பெண்ணைக் காதலித்தான். அவளும் குணவதி, கூடவே அவளுக்கும் முக்தி மீது அளவுக்கடந்த மரியாதை இருந்தது. திருமணத்திற்கு பின்னரும் தாங்கள் முக்திக்கு வாழ்நாள் முழுவதும் உழைக்கத் தயாராக இருக்கிறோம் என்று இருவருமே உறுதியளித்தனரே!

ஆனால் முக்தியின் நற்பெயருக்குக் கலங்கம் உண்டாகும் என்றவர் ருத்ராஜி தானே! ஏற்கெனவே ஆன்மீகவாதிகள் நடத்தும் ஆசிரமத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருவதால் முகுந்தும் தீபாவும் மணம் முடித்த நிகழ்வு என்றோ ஓர்நாள் வெளியே கசிந்தால் முக்தியின் பெயரும் மீடியாக்களில் சிதறடிக்கப்படும் என்பதால் அவர்களது உறவை ஏற்றுக்கொள்ள முடியாதென நிர்தாட்சணியமாக மறுத்துவிட்டார் அவர்.

அதன் பிற்பாடு தீபாவின் மாமியார் முக்தி மீது காவல்துறை புகாரளித்தது, அவர்கள் வரும் முன்னரே முகுந்தை என்னென்னவோ பேசி வட இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது எல்லாம் நடந்தது.

பழைய சம்பவங்களை நினைக்கும் போது முகுந்தின் வார்த்தைகள் தான் ரவீந்திரனுக்கு நினைவு வந்தது.

“நீங்க ருத்ராஜி மேல வச்ச நன்றிக்காக என் வாழ்க்கைல எனக்குக் கிடைச்ச சந்தோசத்த தியாகம் பண்ண சொல்லுறீங்களே! இது எந்த விதத்துல நியாயம்பா? ஒரு நாள் இல்லனா ஒரு நாள் நீங்க இதுக்காக வருத்தப்படுவீங்க… ஆனா அப்போ நான் உங்க கூட இருக்கமாட்டேன்”

சொன்னவன் மெய்யாகவே இப்போது அவருடன் இல்லை! மீண்டும் இரு சொட்டுக்கண்ணீரை கன்னத்திற்கு தானம் செய்தன அவரது விழிகள்.

அவர் மைந்தனுக்கு நேர்ந்தவற்றை எண்ணி கலங்க ருத்ராஜி அதை வேறுவிதமாக எடுத்துக்கொண்டார்.

“மனசை போட்டு அலட்டிக்காதீங்க ரவீந்திரன்… மகாபாரதப்போர் நல்லபடியா நடக்குறதுக்கு அரவானை களபலி குடுத்ததா படிச்சிருப்போம்… அப்போ அர்ஜூனன் இருந்த நிலமைல தான் நீங்க இப்போ இருக்கீங்க… இப்போ முக்தி மேல நிறைய அபவாதம் கிளம்புது… இது முக்தியோட மகாபாரதம் ரவீந்திரன்… அதுல முதல் கட்டமா தான் வட இந்தியால இருக்குற கிராமங்கள்ல சேவை செய்ய முகுந்தை அனுப்பி வச்சோம்… அங்க நம்ம பேரை நிலை நாட்டலாம்னு போட்ட கணக்கு தப்பாகி இதுல நம்மளோட விருப்பம் இல்லாமலே முகுந்தை களபலி ஆக்கிட்டோம்”

ரவீந்திரன் கண்ணீருடன் ருத்ராஜியை ஏறிட்டவர் “நீங்க நினைச்சிருந்தா இதை தடுத்திருக்கலாம் ருத்ராஜி” என்று மட்டும் உரைக்க ருத்ராஜியோ அதிர்ந்தார்.

அவரை வருத்த எண்ணமில்லாத ரவீந்திரன் கை கூப்பி “கொஞ்சநாள் நான் தனியா இருக்க ஆசைப்படுறேன் ருத்ராஜி… கொஞ்சநாள் தான்.. என் மகன்ங்கிற மாயைல இருந்து எனக்கு எப்போ விடுதலை கிடைக்குதோ அப்போ மறுபடியும் பழைய ரவீந்திரனா உங்க கூட முக்திக்காக உழைக்க வந்துடுவேன்… அது வரைக்கும் என்னை என் போக்குல விட்டுடுங்க” என்று கண்ணீர் மல்க உரைக்க ருத்ராஜி அவரது கரத்தைப் பிடித்து அழுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

ஆறுதல் சொன்னால் ரவீந்திரன் தேறுவார், சதாசிவன் கோயிலுக்கான வேலைகளும், சட்டரீதியான பணிகளும் முழுவீச்சில் நடைபெறுமென அவர் போட்ட கணக்கு ரவீந்திரனிடம் எடுபடவில்லை. சில நாட்கள் விட்டுப் பிடிப்போம் என்று எண்ணியபடி சனாதி ரிசார்ட்டை விட்டு வெளியேறினார்.

சோகத்திலும் கொடியது புத்திரச்சோகம்! எப்பேர்ப்பட்ட தசரதனையே சாய்த்தது புத்திரசோகம் தான்! எனில் ரவீந்திரனை மட்டும் அது விட்டுவைக்குமா என்ன?

அதை அறியாதவராக ருத்ராஜி அவர் தங்கியிருக்கும் இடம் நோக்கி நடந்தவர் அவரது மொபைல் சிணுங்கவும் தொடுதிரையை உற்றுநோக்கினார். அதில் சித்தார்த்தின் பெயர் வரவும் உற்சாகத்துடன் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தார்.

“சொல்லுங்க சித்தார்த்… வாட்? நோ ப்ராப்ளம்… நீங்க எப்போ வேணும்னாலும் சேர்த்துக்கலாம்.. முக்தியோட கதவுகள் உங்களுக்காக திறந்திருக்கும்… நோ நோ… இதுல எந்தச் சிரமமும் இல்ல… ஆனா ஒன்னு மட்டும் க்ளியரா சொல்லிடுறேன், ரூல்ஸ் எல்லாருக்கும் இருக்குற மாதிரி தான் உங்களுக்கும்… அப்போ நோ ப்ராப்ளம்… நீங்க மத்த புரொசிஜரை முடிச்சிட்டா எல்லா வேலையும் க்விக்கா முடிஞ்சிடும்… ரிலாக்சா இருங்க… குட் நைட்” என்று அழைப்பைப் பேசி முடித்தவரின் கண்கள் தூரத்தில் கட்டுமான வேலைகள் நடைபெறும் சதாசிவன் கோயிலை கர்வத்துடன் ஏறிட்டது.

அதே நேரம் அவருடன் பேசிமுடித்த சித்தார்த் தன்னருகே காரில் அமர்ந்திருந்த சர்மிஷ்டாவின் சிகையை ஒதுக்கிவிட்டான். குழந்தை கார் ஓடும் போது அடித்த காற்றில் கண்ணயர்ந்திருக்க அவள் உறக்கம் கலையாதவாறு

“அப்பா உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன் சர்மிக்குட்டி… உனக்காக எதையும் நான் விட்டுக்குடுப்பேன்” என்று உறுதியாய் அதே சமயம் மெதுவாய் முணுமுணுத்தது அவனது உதடுகள்.

மாதவனுடன் காரில் வந்தவன் சர்மிஷ்டா வீடு திரும்பவில்லை என்றதும் பள்ளிக்குச் சென்று விசாரித்தான். காவலாளி பள்ளி வாகனம் கிளம்பியதும் வந்த காரில் அவள் கிளம்பிவிட்டாளென கூற சித்தார்த்துக்கு அதிர்ச்சி.

ஆனால் அவளோ அங்கிருந்த குல்மொஹர் மரத்தடியில் அமைதியாய் அமர்ந்திருந்தாள். சித்தார்த்தைக் கண்டதும் “அப்பா” என்றபடி ஓடிவந்தவளை அள்ளி அணைத்தவனின் கரங்கள் இவ்வளவு நேரம் இருந்த பதற்றத்தின் விளைவால் நடுங்கத் துவங்கியது.

தனது கலக்கங்கள் அனைத்தும் அந்தச் சின்னஞ்சிறுமியின் அணைப்பில் கரைந்து காற்றோடு போவது போன்ற மாயை. மாதவன் நண்பனின் தோளை அழுத்தி “கிளம்பலமா சித்து?” என்று கேட்கும் வரை அவன் மகளை அணைத்தபடி தான் நின்றிருந்தான்.

பின்னர் மூவரும் காரிலேற சித்தார்த் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் மகளைத் தன்னருகே அமர்த்திக்கொள்ள மாதவன் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அங்கே இருந்தபடி நண்பனின் செயல்களைக் கவனித்தவனுக்கு ராகேஷை கொல்லுமளவுக்கு வெறி வந்தது. அதே நேரம் சித்தார்த்தின் பயத்திலுள்ள நியாயமும் புரிந்தது. அதன் விளைவு சாந்தகோபாலனுக்குத் தகவல் பறந்தது.

அடுத்தடுத்த நடவடிக்கைகளை இனி அவர் கவனித்துக் கொள்வார் என்ற நிம்மதி பிறந்தாலும் அதனுடனே ராகேஷ் முன்கூட்டியே யாரிடமோ அந்த வேலையை ஒப்படைத்திருந்தானே என ஒரு குழப்பமும் இரட்டைக்குழந்தையாக பிறந்தது.

இரு நண்பர்களின் யோசனையில் சவி வில்லா சீக்கிரமே வந்து விட்டது போன்ற பிரமை. மூவரும் இறங்கி உள்ளே செல்லவும் சித்தார்த்தின் முகத்தைக் கவனித்த சவிதா என்னவென வினவ அவன் தலையாட்டி மறுத்துவிட்டு சர்மிஷ்டாவை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களின் அறையை நோக்கி சென்றான்.

மாதவன் படியேறிச் செல்பவனின் முதுகைப் பார்த்தபடி சவிதாவிடம் பேச அமர்ந்தவன் சர்மிஷ்டாவிடம் வம்பளக்க ஆரம்பித்தான்.

சித்தார்த் அவர்களின் அறைக்குள் அடியெடுத்து வைத்த போது யசோதரா மடிக்கணினியும் கையுமாக இருந்தாள். அவளைக் கண்டபோது எரிச்சல் மேலிட்டது. குழந்தையை பள்ளியிலிருந்து வர தாமதமாகி இருக்கிறது. ஆனால் இவளோ அதைப் பற்றிய கவலையின்றி வேலையில் மூழ்கியிருக்கிறாள்!

அதே எரிச்சலுடன் அவளை நெருங்கியவன் “இன்னைக்கு சர்மி வர்றதுக்கு லேட் ஆயிடுச்சுனு கொஞ்சமாச்சும் யோசிச்சியா யசோ? எப்போவும் வேலை தானா?” என்று கேட்க

“ப்ச்… இன்னைக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி சித்து” என்றவளின் கண்கள் இன்னும் கணினி திரையை விட்டு அகலவில்லை.

அதைக் கண்டதும் சித்தார்த்தின் எரிச்சல், முன்னர் ராகேஷ் சொன்ன செய்தி கொடுத்த பதற்றத்துடன் சேர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து கோபமாய் முளைத்து நின்றது. அதன் விளைவு பட்டென்று மடிக்கணினியின் திரையை மூடினான் அவன்.

அவன் அவ்வாறு செய்ததில் யசோதராவின் பொறுமை இதோ நான் போகப்போகிறேன் என்று முன்னறிவிப்பு கொடுத்தது. இருப்பினும் குழந்தை மீதான அக்கறையில் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறான் என்று அதை ஒதுக்கிவிட்டாள்.

முன்னறிவிப்பு கொடுத்த பொறுமையை இழுத்துப் பிடித்து நிறுத்தி “அதான் நீ கூட்டிட்டு வந்துட்டியே சித்து… அப்புறம் என்னவாம்? போய் குளிச்சிட்டு ரிலாக்ஸ் ஆகு” என்று அவள் கூறவும் சித்தார்த்துக்குத் தான் கோபப்பட்டது அனாவசியமோ என்று ஒரு நொடி குற்றவுணர்ச்சியில் மனம் சுருங்கிப்போனது.

அவளிடம் எதுவும் பேசாது மாற்றுடை டவல் சகிதம் குளியலறைக்குள் புகுந்துகொண்டவன் குளித்து முடித்து வெளியே வரும் போது அவனது மனைவி மொபைலில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள்.

“கவலைப்படாதீங்க.. உங்க நேமோ பையனோட நேமோ வெளிய வராது மேம்… இது எங்க புரொபஷனல் எதிக்ஸ்… அதை நாங்க எப்பவும் மீற மாட்டோம்”

யாரிடம் இவ்வளவு தூரம் உறுதியளிக்கிறாள் என்ற கேள்வி அவனுக்குள் உதயமானது. ஆனால் அதை முந்திக்கொண்டு ராகேஷ் என்ன பஞ்சமாபாதகத்தைச் செய்யவிருக்கிறானோ என்ற பயம் அவன் மனதைக் கவ்விக்கொண்டது.

அந்தப் பயத்தை களைய அவன் ஒரு முடிவை எடுத்திருந்தான். அது குறித்து மனைவியிடம் பேச அவளருகே அமர்ந்தான். யசோதரா அழைப்பை முடித்தவள் அவனிடம் “சித்து உன் கிட்ட முக்தி வித்யாலயா பத்தி நிறைய சொல்லணும்டா… கேட்டா உன் மனசு கண்டிப்பா மாறும்” என்று தான் அன்று சந்தித்த முக்தி வித்யாலயாவின் முன்னாள் மாணவனின் தாயாரைப் பற்றி கூற வாயெடுத்தாள்.

ஆனால் அவளை நிறுத்துமாறு சைகை காட்டிய சித்தார்த் தனது மகளின் பாதுகாப்பிற்காக தான் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவுகளைப் பற்றி அவளிடம் கூற ஆரம்பித்தான்.

“சர்மிய வேற ஸ்கூலுக்கு மாத்திடலாம்னு இருக்கேன் யசோ… இங்க அவளுக்குப் பாதுகாப்பு இல்ல”

வெறுமெனே இவ்வாறு சொன்னால் அவளுக்கு எப்படி புரியும்? குழப்பத்துடன் ஏறிட்டாள் யசோதரா.

“இந்த முடிவுக்குக் காரணம் ராகேஷ்” அவன் நிறுத்தவும் யசோதராவுக்குக் குழப்பம் அதிகரித்தது.

“இதுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் சித்து?”

“அவன் பரோல்ல வந்தது நம்ம குடும்பத்தை அழிக்கிறதுக்கு தான்னு என் கிட்டவே சொல்லுறான் யசோ… சகுந்தலாம்மா கூட ஹாஸ்பிட்டல் போற சாக்குல இதுக்கான ஆளை பாத்து செட் பண்ணிட்டானாம்… உன் குடும்பத்தை சிதைச்சுக் காட்டுறேன்னு சவால் விடுறான்… அவன் வேற எதுவும் சொன்னா கூட நான் கண்டுக்காம விட்டிருப்பேன்… ஆனா அவனோட ஃபர்ஸ்ட் டார்கெட் நம்ம சர்மி தான்னு சொன்னான் யசோ… அவன் சொன்னதும் அங்க இருந்து கிளம்பி ஸ்கூலுக்குப் போய் பாத்தா சர்மி தனியா நிக்கிறா… அங்க அவளுக்குப் பாதுகாப்பு இல்ல யசோ… அவளை ராகேஷ் ஏற்பாடு பண்ணுற ஆள் கிட்ட இருந்து காப்பாத்தணும்… என் மனசு முழுக்க அந்த எண்ணம் மட்டும் தான் இருக்கு… அதான் நான் வேற ஸ்கூலுக்கு மாத்திடலாம்னு டிசைட் பண்ணிருக்கேன்”

யசோதரா மகளை ராகேஷ் குறிவைக்கிறான் என்றதும் கதிகலங்கி போனாள். அவர்களின் உன்னத காதலின் அடையாளம் சர்மிஷ்டா. அவளை சூல் கொண்ட நாளிலிருந்து குழந்தையைப் பற்றி சித்தார்த்தும் யசோதராவும் கண்ட கனவுகள் ஏராளம்! அந்தக் குழந்தையை குறிவைக்கிறானே கயவன்!

அவளை ஈன்ற வயிறும், அவளுக்குப் பசியாற்றிய மார்பும் பற்றி எரிவது போன்ற உணர்வு யசோதராவுக்கு. எந்த ஒரு அன்னைக்கும் தனது மகவுக்கு ஆபத்தென்றால் உண்டாகும் வலி தான் அது!

ஆனால் அதற்காக சர்மிஷ்டாவை வேறு பள்ளிக்கு மாற்றவேண்டும் என்ற சித்தார்த்தின் முடிவை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யாராவது மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்துவார்களா?

“நம்ம சர்மிக்கு புரொடக்சனை இன்கிரீஸ் பண்ணிக்கலாம் சித்து… வீட்டுலயும் இன்னும் கொஞ்சம் கார்ட்ஸ்சை வச்சுக்கலாம்… ஆனா ஸ்கூல் மாத்துறதுலாம் வேண்டாமே!”

அவளைப் பைத்தியக்காரி என்பது போல பார்த்தவன் “உனக்கு ராகேஷ் பத்தி தெரியாது யசோ… அவன் சொன்னதை செய்வான்” என்று குரல் நடுங்க உரைக்க யசோதரா அவனது கரத்தைப் பற்றிக்கொண்டாள்.

“அவனோட பரோலை கேன்சல் பண்ணுறதுக்கான ஆக்சனை எடுப்போம் சித்து… அவன் உன் கிட்ட சொன்னதை வச்சே அவனை வெளிய வரமுடியாதபடி பண்ணிடலாம்… அவன் வந்ததுல இருந்து யாரை மீட் பண்ணுனான்னு போலீசை வச்சே கண்டுபிடிச்சுடலாம்”

நிதானமாக யோசித்து அவள் கூறிய யோசனை எதுவும் சித்தார்த்தின் செவியில் ஏறவில்லை. அவனுக்குத் தெரிந்தது எல்லாம் மகளின் பாதுகாப்பு மட்டுமே!

எனவே மறுப்பாய் தலையசைத்தவன் “நீ சொல்லுறதுலாம் நடக்குறதுக்கு முன்னாடி அவன் ஏற்பாடு பண்ணுன ஆளால சர்மிஷ்டாவுக்கு எதுவும் ஆச்சுனா அதுக்கு நீ பொறுப்பு ஏத்துப்பியா யசோ? இந்த விசயத்துல நீ தலையிடாத… நான் அவளை பாதுகாப்பா ரெசிடென்ஸியல் ஸ்கூல்ல சேர்க்குறதுக்கான அரேஞ்ச்மெண்டை எப்போவோ ஆரம்பிச்சிட்டேன்” என்றான் உறுதியானக் குரலில்.

யசோதரா திகைத்தவள் “உன்னோட இந்தப் பயம் தேவையில்லாதது சித்து… சர்மிய அந்த ஸ்கூல்ல மட்டும் எப்பிடி எக்ஸ்ட்ரா பாதுகாப்போட பாத்துப்பாங்க? அது எந்த ஸ்கூல்? அங்க படிக்கிற ஸ்டூடண்ட்சுக்கு மட்டும் இசட் ப்ளஸ் புரொடக்சன் குடுக்குறாங்களா?” என்று குத்தலாக வினவினாள்.

சித்தார்த் கண்களை இறுக மூடித் திறந்தவன் “முக்தி வித்யாலயா” என்று கூற அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

பத்து நாட்களாக அலைந்து திரிந்து எந்தப் பள்ளி மாணவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவில்லை, முறையான கல்வித்திட்டம் இல்லையென அவள் தகவல் சேகரித்தாளோ அதே பள்ளியில் அவளது மகளை சேர்க்கும் எண்ணத்தில் இருக்கிறான் அவளது கணவன்!

நிதானித்து சுதாரித்தவள் ஒரு போதும் இதற்கு சம்மதிக்கக் கூடாதென்று எண்ணியவளாக “என் பொண்ணு அந்த ஸ்கூல்ல படிக்கமாட்டா… அந்த ஸ்கூல் பத்தி டென் டேய்ஸ் அலைஞ்சு திரிஞ்சு நான் கலெக்ட் பண்ணுன டீடெய்ல் படி அங்க படிக்குற குழந்தைங்களுக்கு உடல் உழைப்பு, யோகா, அது இதுனு சொல்லி சரியான நேரத்துக்கு சாப்பாடு குடுக்காம சிவியர் அல்சர் கம்ப்ளைன்ட் வந்ததும் வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்காங்க… அது மட்டுமில்ல, நீயோ நானோ நினைச்சதும் நம்ம பொண்ணை போய் பாக்க முடியாது… ஆறு மாசத்துக்கு ஒரு தடவை தான் நம்மளால குழந்தைய பாக்க முடியும்… இயல்பான குழந்தைப்பருவத்த அவளால அனுபவிக்கமுடியாது சித்து… எனக்கு என்னோட பொண்ணு சராசரி பெண் குழந்தையா வளந்தா போதும்… அவளை ஞானியா வளக்குறதுக்காக நான் பெத்துக்கல” என்று ஆணித்தரமாக மறுத்தாள்.

அவளின் பதிலில் பொறுமையிழந்த சித்தார்த் “உன் சம்மதத்தை நான் கேக்கவேல்ல யசோ… என் பொண்ணு முக்தில தான் படிப்பா… அங்க தான் அவளுக்குப் பாதுகாப்பு இருக்கும்… அங்க போற வி.ஐ.பிக்கள் தவிர மத்த யாருமே ஸ்கூல் பக்கம் போகவே முடியாது… கட்டுப்பாடும் பாதுகாப்பும் நிறைஞ்ச இடம்… உன் பேச்சைக் கேக்குற ஐடியா எனக்கு இல்ல யசோ” என்றான்.

“அறிவுகெட்டவன் மாதிரி பேசாதடா… என் பொண்ணை பாக்காம என்னால இருக்க முடியாது”

“அப்போ வா! நம்மளும் முக்தில போய் தங்கிடுவோம்”

“சித்து என்னடா பேசுற?”

“நான் சீரியசா சொல்லுறேன் யசோ… எனக்கு இந்த சினி ஃபீல்ட், லைம் லைட், கேமரா, ஃபேன்ஸ், நேம் அண்ட் ஃபேமை விட என் பொண்ணு தான் முக்கியம்”

“உனக்குப் பயத்துல பைத்தியம் பிடிச்சிருக்கு சித்து… ஒரு சின்ன விசயத்துக்காக போக கூடாத இடத்துக்கு என் பொண்ணை அனுப்பி வச்சு நீயும் அங்க போறேன்னு சொல்லுற… என்னைப் பத்தி நீ கொஞ்சம் கூட யோசிச்சியா? நீயும் சர்மியும் இல்லாம நான் மட்டும் இங்க தனியா எப்பிடி இருப்பேன்”

“அப்போ நீயும் எங்களோட வா”

“ஏய் என் பொறுமைய சோதிக்காதடா… குழந்தையும் நீயும் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு என் புரொபசனும் எனக்கு முக்கியம்”

சித்தார்த் பற்களைக் கடித்தபடி கரங்களைத் தட்டியவன் “வெல்டன் மிசஸ் யசோதரா! இந்தப் பதிலை தான் உன் கிட்ட நான் எதிர்பாத்தேன்… உனக்கு எப்போவும் நாங்க முக்கியமில்ல… உன்னோட சோ கால்ட் புரொபசன் தான் உனக்கு முக்கியம்… எனக்காக நீ அதை விடவேண்டாம்… ஆனா நம்ம சர்மிக்காக கூட நீ இறங்கிவர மாட்டல்ல… உன்னை மாதிரி ஒரு சுயநலவாதியான அம்மாவ நான் பாத்ததே இல்ல” என்று வார்த்தைகளைக் கவனமின்றி சிதற விட்டான்.

சுயநலவாதி என்ற வார்த்தை யசோதராவுக்கு அளித்த வேதனை அவள் முகத்தில் பிரதிபலிக்க ஒரு கணம் கரங்களை இறுக்கிக்கொண்டவள் பின்னர் பெருமூச்சுவிட்டு பேசத் துவங்கினாள்.

“என் பொண்ணு என்னை விட்டு எங்கயும் வர மாட்டா… முக்கியமா அந்த முக்தி வித்யாலயால என் பொண்ணை சேர்த்துவிட்டு அவளோட பியூச்சர் கூட நான் விளையாட விரும்பல… அதே நேரம் உன்னோட அர்த்தமில்லாத பயத்துக்காக என் உயிரா நினைக்கிற புரொபசனை விட்டுட்டு உன் கூட முக்திக்கு வந்து ருத்ராஜி புராணம் பாடமுடியாது”

“ஏய் நீ எப்பிடியோ போடி…. என் பொண்ணு என் கூட முக்தில தான் இருப்பா… உன்னால என்னைத் தடுக்கவே முடியாது.. புரொபசன் புரொபசன்னு அலைஞ்சு என் பொண்ணை பலி குடுக்க நினைக்கிற உன்னை மாதிரி ஒரு மோசமான அம்மா என் பொண்ணுக்குத் தேவையே இல்ல”

இம்முறை யசோதராவால் பொறுமை காக்க முடியவில்லை. அவளுக்கு அதிகரித்த சினத்தில் அவள் கண்களில் அகப்பட்டது ருத்ராஜியின் புகைப்படம்.

அனைத்திற்கும் காரணம் இம்மனிதர் தானே என சம்பந்தமின்றி ஒரு எண்ணம் தோன்றி அவளை ஆட்டுவிக்க அதன் விளைவு கடுஞ்சினத்துடன் அந்தப் புகைப்படத்தை எடுத்து வீசியவள் அதன் கண்ணாடிகள் சிலீரென்ற சத்தத்துடன் உடைந்து மரச்சட்டங்கள் அகல ருத்ராஜியின் புகைப்படம் வெளியே விழுவதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த கணவன் முன்னே பத்திரகாளி அவதாரமெடுத்து நின்றாள்.

சித்தார்த் ஏற்கெனவே அவள் மறுத்ததில் உண்டான கோபம், ராகேஷின் பேச்சில் உண்டான கோபம், இதோ இப்போது அவனது மரியாதைக்குரிய ருத்ராஜியின் புகைப்படத்தை உடைத்தற்கான கோபம் எல்லாம் சேர கடுங்கோபத்துடன் தன் முன்னே நின்றவளை பளாரென அறைய யசோதரா அவனது அறையில் தடுமாறியவள் கீழே விழுந்தாள்.

விழுந்தவளின் நெற்றியில் அந்தப் புகைப்படத்தின் மரச்சட்டத்திலுள்ள ஆணி கிழித்துவிட குருதி எட்டிப் பார்த்தது. விண்ணென்று தெறித்த வலி கன்னத்தோடு சேர்த்து செவிப்பறையைச் சுண்டி இழுக்க ஒரு கரத்தால் கன்னத்தை அழுத்தியபடி எழுந்தவள் நெற்றியில் சுளீரென்று வலிக்கவும் மற்றொரு கரத்தால் தொட்டுப் பார்த்தாள்.

அவளது ஓ நெகட்டிவ் குருதி நீண்டநாள் கழித்து அதாவது ஏழாண்டுகள் கழித்து அவளது கரங்களை ஸ்பரிசித்திருந்தது. வலியில் கண்கள் கலங்கிவிட மனமோ போயும் போயும் அர்த்தமற்ற பயத்திற்காக தன்னை வார்த்தையில் வதைத்து ஏமாற்றுப்பேர்வழியின் புகைப்படத்தை உடைத்ததற்காக அவளிடம் கைநீட்டிய கணவனை விட்டு வெகுதூரமாய் விலகத் தயாரானது.

அவள் முன்னே நின்ற சித்தார்த் சத்தியமாக அவளது காதல் கணவனில்லை. பூவினும் மெல்லியதாக அவளைத் தாங்குபவன் அவன்! இவனோ கோபத்தில் கைநீட்டியவன்!

சித்தார்த் தனது கோபத்தின் விளைவால் யசோதராவின் கன்னத்திலும் நெற்றியிலும் உண்டான காயத்தைக் கண்டதும் திடுக்கிட்டவன் தானா இவ்வாறு அரக்கத்தனமாக அறைந்தது என்று திகைத்து ஒடுங்கி நின்றான்.

கண்களில் கண்ணீருடன் விலகலும் சேர்ந்து அவனை வெறித்த மனைவியை நோக்கி ஒற்றை கரத்தை நீட்டியவன் அவள் மருண்டு இரண்டடி பின்னே செல்லவும் மனதில் அறை வாங்கினான்.

“யசோ” உடைந்த குரலில் அவன் பேச யசோதராவின் செவியில் எதுவும் ஏறவில்லை. அப்போது அவள் மனதில் தோன்றியது என்னவோ ஒன்றே ஒன்று தான்! இனி இவனுடன் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது என்பது தான்!

இது சாதாரண கணவன் மனைவி ஊடல் இல்லை. சர்மிஷ்டாவின் பாதுகாப்பு என்ற பெயரில் வேண்டாத இடத்தில் மகளைத் தள்ளும் அவனது செய்கைக்கு அவள் உடன்பட விரும்பவில்லை. சுயநலவாதி, இரக்கமற்றவள் என்ற வசைமொழிகளை வாங்கிய பிறகு கூட கலங்காதவள் ருத்ராஜியின் புகைப்படத்தை உடைத்ததற்காக அவன் அறைந்த கணத்தில் தான் மனதளவில் உணர்வற்று போனாள்.

ஏனெனில் அவள் மனதை உயிர்ப்புடனும் உணர்வுடனும் வைத்திருக்கும் காதல் அவன் அறைந்த கணத்திலேயே மடிந்துவிட்டது. இனி அது உயிர்த்தெழுமா இல்லையா என்பதெல்லாம் வீண்கேள்வி.

இவனது அவசியமற்ற பயத்தால் சர்மிஷ்டாவை எங்கேயோ கொண்டு தள்ளுவதை தடுக்கவேண்டும். அதை மட்டும் மனதில் எண்ணிக்கொண்டவள் அந்த அறையிலிருந்து வெளியேறி சர்மிஷ்டாவின் அறைக்குள் அடைபட்டுக்கொண்டாள்.

கிளம்பும் முன்னர் அவள் பார்த்த பார்வையின் அர்த்தம் யாரோ ஒருவருக்காக உன்னை உயிராக காதலித்த என்னை நீ காயப்படுத்திவிட்டாய் என்பதே! அதை புரிந்துகொண்ட சித்தார்த் அவளைத் தடுக்க வழியின்றி கையாலாகாதவனாய் நின்றான்.

அன்றைய இரவுணவின் போது நெற்றியில் என்ன காயமென வினவிய நாராயணமூர்த்தியிடம் மேஜையின் கூர்முனை இடித்துவிட்டது என யசோதரா பொய் சொன்ன போது சித்தார்த் கலங்கி போனான்.

அவர்களின் அறைக்குள் எட்டிக்கூட பார்க்காது சர்மிஷ்டாவின் அறையிலேயே யசோதரா அன்றைய இரவைக் கழித்தபோது அவன் திகைத்துப் போனான். உள்ளே சென்று சமாதானம் செய்யலாம் என்றால் அவனது மனைவியோ உட்பக்கம் தாழிட்டிருந்தாள்.

மொபைலை சுவிட்ச் ஆப் வேறு செய்திருக்க காலை எழுந்ததும் முதலில் அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டவன் இன்னுமே சர்மிஷ்டாவை முக்தி வித்யாலயாவில் சேர்க்கும் நினைப்பிலிருந்து பின்வாங்கவில்லை.

மிகுந்த பிரயத்தனத்துக்கு இடையே அன்றைய இரவில் நித்ரா தேவி அவனை அணைக்க கண்ணயர்ந்தவன் காலையில் எழுந்ததும் சர்மிஷ்டாவின் அறைக்கு வேகமாகச் சென்றான்.

அங்கே அவன் வாங்கிக்கொடுத்த பொம்மைகள் வரிசையாக கிடக்க அவனது சர்மிக்குட்டி மட்டும் இல்லை. எங்கே சென்றாள் என்ற கேள்வியுடன் தங்களது அறையை அடைந்தவனுக்கோ அங்கே யசோதராவின் உடமை இல்லை என்றதும் பகீரென்றது.

இருவரும் எங்கே என்ற கேள்வி அவனை துடிக்க வைக்க சிறிது நேரத்தில் மொத்த சவி வில்லாவுமே அந்தக் கேள்வியுடன் தான் நாளை ஆரம்பித்தனர். அதே நேரம் தனது உடமைகளை தூக்கிக்கொண்டு மறுகரத்தில் மகளின் கையைப் பிடித்தபடி லோட்டஸ் ரெசிடென்சியின் மின் தூக்கியை நோக்கி சென்று கொண்டிருந்தாள் யசோதரா.

மழை வரும்☔☔☔