☔ மழை 18 ☔

கார்ப்பரேட் சாமியார்களின் தகிடுதத்தங்கள் பற்றிய செய்திகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. எந்த செய்தியிடமிருந்தும் இவர்களை நம்பும் மக்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் நம்பிக்கையும் தளர்வதில்லை. எந்த சாமியார்களின் பின்புலமும் சில ஆண்டுகளில் இவர்களின் வளர்ச்சியும் நம்பமுடியாத அளவுக்கு பிரமாண்டமானவை. குறுகிய காலத்தில் இவர்கள் மிகப்பெரிய சமூக சக்தியாக வளர்ந்துவிடுகிறார்கள். ஒரு அரசியல் கட்சியோ வர்த்தக நிறுவனமோ கூட அவ்வளவு துரிதமாக வளர்வதில்லை. இவர்களது சட்டவிரோத செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தால்கூட அது சட்டம் ஒழுங்கு அமைப்புகளால் கண்டு கொள்ளப்படுவதில்லை.

                                                         –எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், தினகரன் 29.10.2019

சர்மிஷ்டா சித்தார்த்தை அணைத்தவள் பின்னர் தனது பிறந்தநாள் விழாவில் தந்தை கலந்துகொள்ளவில்லை என்பது நினைவுக்கு வரவும் சட்டென விலகி கைகளைக் கட்டி முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டாள்.

குண்டு கன்னங்கள் அவள் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டதில் இன்னும் அழகாக இருக்க கண்களை கோலி குண்டுகளை போல உருட்டியபடி நின்ற மகளைப் பார்த்த சித்தார்த் உதடு பிரிக்காது சிரித்தான்.

அவள் மீண்டும் கண்களை உருட்டினாள். அதாவது அவள் கோபமாக இருக்கிறாளாம்!

“சர்மி குட்டிக்கு அப்பா மேல கோவமா?” என்று கேட்டுவிட்டு அவளைப் போலவே கன்னத்தை காற்று நிரப்பிய பலூனைப் போல உப்ப வைத்தபடி உம்மென்று நின்றான் சித்தார்த்.

“ஆமா! நீங்க என் கிட்ட பொய் சொல்லிட்டிங்க… இன்னைக்கு என்னோட பர்த்டே பங்சனுக்கு வர்றேனு சொல்லிட்டு வராம ஏமாத்திட்டீங்க… போங்கப்பா… என் கூட பேசாதிங்க” என்று கரங்களைக் கட்டிக்கொண்டு மூக்கைச் சுருக்கினாள் அவனது புதல்வி.

“அப்பாக்கு ருத்ராஜி கூட நடந்த ஷூட்டிங்ல டைம் ஆயிடுச்சுடா… எப்பிடி சாரி கேட்டா உன் கோவம் குறையும்? தோப்புக்கரணம் போடவா?” என்று கேட்க

“ஊஹூம்”

“ஐஸ் க்ரீம்?”                          

“மம்மி ஐஸ் க்ரீம் சாப்பிடக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டிருக்காங்க”

“ம்ம்… ஃபைன்ட் அவுட்… சாக்லேட்ஸ்”

“வேண்டாம்… கேவிட்டி வரும்னு ஆட்ல பாத்தேன்”

சித்தார்த் தன்னை ஆட்டி வைத்த குட்டி இளவரசியைச் சமாதானம் செய்யும் வழியறியாது ஆயாசத்துடன் இடுப்பில் கையூன்றி நிற்க அவன் பின்னே சலங்கையொலியாய் சிரிப்புச்சத்தம் கேட்டது.

அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரி யசோதராவே தான். அவன் முன்னே வந்தவள் அவனைக் கண்டுகொள்ளாது குழந்தையிடம் குனிந்து

“நான் பெத்த தங்கமே! உங்கப்பாவ ஷட்டப் பண்ண வைக்குறதுனு ஒரு ஆர்ட்னா அதுல நீ தான்டி பிகாசோ” என்று கொஞ்சியபடி அவளைத் தூக்கி தட்டாமாலை சுற்ற கிண்கிணி நாதமாக சிரித்தாள் சர்மிஷ்டா.

“சவி பாட்டி உனக்காக பனானா புட்டிங் பண்ணிருக்காங்க… பனானால என்ன இருக்குனு மம்மி சொல்லிருக்கேன்?”

“பொட்டாசியம்” கண்களை உருட்டி அபிநயித்த சர்மிஷ்டாவின் கன்னத்தில் தட்டியவள் “யெஸ்… போய் சமத்துப்பொண்ணா சாப்பிடு பாப்போம்” என்று அவளை அனுப்பிவைத்தாள்.

அவள் சென்றதும் இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம், சிரிப்பு அகன்று கடுமை குடியேறியது அவளது வதனத்தில்.

“இன்னைக்கு நீ ஏன் வரல சித்து? என் கிட்டவும் ஷூட்டிங்ல லேட்னு கதை சொல்லாத… நான் ஒன்னும் சர்மிஷ்டா இல்ல… அவளைப் பெத்தவ… டெல் மீ த ரியல் ரீசன்”

ஏற்கெனவே பயணத்தில் களைத்திருந்த சித்தார்த் அவளது விசாரணை தொனியில் மேலும் எரிச்சலுற்று

“ஐ அம் நாட் அ கிட் யசோ… நீ பேசுறது புருசன் கிட்ட பொண்டாட்டி பேசுற மாதிரி இல்ல… சின்னப்பசங்க கிட்ட அவங்கம்மா என்கொயரி பண்ணுற மாதிரி இருக்கு… சேஞ்ச் யுவர் டோன்” என்றான்.

“இல்லனா என்ன பண்ணுவ?” வெகு தெனாவட்டாக அவளிடம் இருந்து வார்த்தைகள் விழவும்

“இல்லனா என் கிட்ட நீ எதிர்பாக்குற பதில் கிடைக்காது… ஏன்னா என்னை யாரும் கண்ட்ரோல் பண்ணுனா எனக்குப் பிடிக்காது… அது நீயா இருந்தாலும் சரி” என்றபடி பால்கனிக்குச் செல்ல எத்தனித்தவன் அப்படியே நின்றான்.

ஏனெனில் அவனது கரம் யசோதராவின் அழுத்தமான பிடியிலிருந்தது. அவளது முகம் கடுமையைப் பூசியிருந்தது.

“என்னோட பொறுமைய நீ பலகீனம்னு எடுத்துக்காத சித்து… என்னைக்கு என் பொறுமை எல்லை மீறுதோ அன்னைக்கு விளைவுகள் மோசமா இருக்கும்… முதல்ல நம்ம பொண்ணு கிட்ட பொய் சொல்லுறத நிறுத்து… உன்னால பிராமிசை காப்பாத்த முடியலனா பிராமிஸ் பண்ணாத… ஏன்னா நீ குடுக்குற ஏமாற்றங்களை தாங்கிக்குற அளவுக்கு அவளுக்கு இன்னும் பக்குவம் வரல”

சித்தார்த் என்ன நினைத்தானோ தனது கரத்தைப் பிடித்திருந்தவளின் கைகளை மெதுவாக உருவியவன் அவளது வதனத்தை தன் கரங்களில் ஏந்திக்கொண்டான்.

அவனது பார்வை யசோதராவின் விழிகளில் நிலைத்தது. திருமணமாகி ஏழு வருடங்களில் அவளின் விழிகளில் சுடர் விடும் தன்னம்பிக்கையும் நேர்மையும் இப்போதும் அணுவளவும் குறையவில்லை. அவனுக்கு எப்போதுமே யசோதராவின் விழிகளில் தொலைவது பிடிக்கும்.

இப்போதும் ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு மாயாஜால உலகிற்கு தன்னை அழைத்துச் செல்லும் கருவிகளான அவளது கருவிழிகளை ஆழ்ந்து நோக்கினான். விட்டால் கருவிழிகளுக்குள் புகுந்துவிடுவான் போல!

அவள் அவ்வாறு எண்ணமிடும் போதே நெற்றியில் இதழ் பதித்தவன் “இப் யூ கீப் டிஸ்டென்ஸ் ஃப்ரம் மீ, ஐ வில் ப்ரேக் யசோ… சமீபகாலமா நீ என்னை விட்டு கொஞ்ச கொஞ்சமா விலகிட்டிருக்குறது உனக்குப் புரியுதா? உனக்கும் எனக்கும் இடையில கருத்துவேறுபாடுகள் வரலாம்… அதை பேசியோ சண்டை போட்டோ ஷாட் அவுட் பண்ணிக்கலாம்… ஆனா இந்த இடைவெளி வேண்டாம் யசோ… இட்ஸ் ஹர்ட்டிங்” என்றவனின் குரல் உடைந்திருக்க எந்தக் கருவிழிகளில் சில நொடிகளுக்கு முன்னர் தொலைந்தானோ அதே கருவிழிகள் இப்போது கண்ணீர்க்கடலில் தத்தளிக்கத் துவங்கின.

அவற்றின் சொந்தக்காரியோ “நான் உன்னை விட்டு விலகல சித்து… நீ தான் என்னை விலக்கி வச்சிட்ட… ஐ பெக் யூ, இனிமே நீ எனக்குத் தேவையே இல்லனு என் வாயால சொல்லவச்சிடாத… பிகாஸ் ஐ அம் லூசிங் மை ஹோப் அண்ட் மை லவ்” என்றவள் அவனது கரத்தை விலக்கிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

தான் அத்தனை முறை அழைத்தும் தனது அழைப்பை ஏற்கமுடியாதளவுக்கு என்ன வேலை அவனுக்கு? யசோதரா இந்த ஏழாண்டுகளில் எத்தனையோ முறை பொறுமையாக இருந்திருக்கிறாள். ஆனால் படிப்படியாக ருத்ராஜியின் மீதான அபிமானம் சித்தார்த்துக்கு அதிகரித்துக்கொண்டே செல்வதும் ஒவ்வொரு படத்தின் வேலை முடிந்ததும் அங்கே சென்று தங்கிவிட்டு வருவதும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

கேட்டால் இந்த எந்திரமயமான வாழ்க்கையில் உண்டாகும் மன இறுக்கத்தைப் போக்க முக்தியின் யோகா தான் அவனுக்கு மருந்து என்பான். அப்படி என்றால் எங்களால் உன் மன இறுக்கத்தைப் போக்க முடியாதா என்று இந்திரஜித்தும் யசோதராவும் கேட்டால் பதிலளிக்காது மழுப்பிவிடுவான் அவன்.

இந்த விசயத்தில் கௌதமும் மாதவனும் சித்தார்த்திற்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை. தங்கள் வாழ்வில் சிறிய நல்ல விசயம் நடந்தாலும் உடனே ருத்ராஜியிடம் ஓடுவது, அவரது ஆசிரமத்துக்கு கணக்கின்றி நன்கொடையை அள்ளி வழங்குவது என மூவரும் ஒரே கோட்டில் தான் பயணித்துக்கொண்டிருந்தனர்.

சித்தார்த் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தையான “எனக்கு முக்தில கிடைக்கிற மனநிம்மதி வேற எங்கயும் கிடைக்கல” என்ற வார்த்தையை முதன்முதலில் கேட்டபோது யசோதரா சற்று ஆடித் தான் போனாள்.

இது தங்களின் அன்னியோன்யத்தை அல்லவா கேள்விக்குறி ஆக்குகிறது. தொடர்ந்து இதே வார்த்தையை பல்வேறு தருணங்களில் அவன் கூறிய போது யசோதராவின் காதல் தான் அடிபட்டு போனது.

அதன் விளைவு மிக மெல்லியதாக ஒரு திரை அவர்களிடையே விழுந்தது. அதை சித்தார்த்தால் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் யசோதரா அந்த விலகலை தனது வார்த்தைகளில் வெளிப்படுத்தினால் சமாதானம் செய்துவிடுவான். அதோடு பிரச்சனை முடிந்தது என்று தான் இன்று வரை அவன் எண்ணிக்கொண்டிருக்கிறான்.

இன்றைய பிரச்சனைக்கு கூட அடிப்படை காரணம் யசோதராவின் செல்பேசி அழைப்புகளை ஏற்காதது தான் என்ற ரீதியில் அல்லவா அவன் யோசிக்கிறான்! மனைவியின் இந்தப் பாராமுகமும் அலுத்துப் போன சொற்களும் அவனது தொடர்ச்சியான செயல்பாடுகளின் விளைவு என்பதை அவன் அறியும் போது அவளும் சர்மிஷ்டாவும் சித்தார்த்தை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவர் என்பதை அவன் இப்போது அறிந்திருக்கவில்லை.

யசோதராவைச் சமாதானம் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவ சர்மிஷ்டாவை மட்டும் கதை சொல்லி உறங்கவைத்துவிட்டு தங்களின் அறைக்கு வந்த போது அவன் மனைவி உறக்கத்தை தழுவியிருந்தாள்.

கைகளை கன்னத்துக்கு ஆதரவாகக் கொடுத்து உறங்குபவளை நெருங்கியவன் நெற்றியின் இதழ் பதித்துவிட்டு தானும் படுத்துக்கொண்டான்.

கண்களுக்குள் யசோதராவின் உருவமும் இந்திரஜித்தின் உருவமும் வந்து நீ எங்களை விட்டு வெகுதூரம் சென்று விட்டாய் என்று குற்றம் சாட்ட புரண்டு படுத்தான்.

ஒரு மனிதனை உலகவாழ்க்கைக்கு இழுப்பது குடும்பம், மனைவி, குழந்தை போன்ற கட்டுப்பாடுகளே! அதை விடுத்து என்று அவன் பரந்த இப்பூவுலகை தனது குடும்பமாக ஏற்கிறானோ அன்று அவன் ஞானமடைவான் என்ற போதனையுடன் ருத்ராஜி வந்து சென்றார்.

அடுத்து பழுப்பு நிற குர்தாவுடன் குட்டி குட்டி மலர்களைப் போல முக்தி வித்யாலயாவின் மாணவச்செல்வங்கள் ஓடினார்கள். அனைத்துக்கும் இறுதியாக வந்த முகம் அவன் வாழ்க்கையில் மிகவும் நம்பிய ஒருவனின் முகம்! அவன் ராகேஷ்!

சிறை தண்டனை காலம் முடிந்து வெளியே வந்துவிட்டேன் என்ற செய்தியுடன் சித்தார்த் முன்னே நின்று அவன் பேசுவது போலவும், அவனுக்கும் சித்தார்த்திற்கும் வாக்குவாதம் நடைபெறுவது போலவும் கனவில் என்னென்னவோ காட்சிகள் உண்மை போல விரிந்தது.

இறுதியில் யசோதரா வரவும் அவளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்ட ராகேஷ் துப்பாக்கியால் அவளைச் சுடவும் “யசோ” என்ற அலறலுடன் எழுந்துகொண்டான் சித்தார்த். எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ராகேஷ் இல்லை. யசோதரா தான் அவனது அலறலில் கண் விழித்து எழுந்தமர்ந்தாள்.

“என்னாச்சு சித்து?” என்று பதற்றத்துடன் கேட்டபடி அறை விளக்கைப் போட்டவள் வியர்த்திருந்த அவனது முகத்தைப் பார்த்துவிட்டு தண்ணீர் ஜக்கை எடுத்தாள்.

தம்ளரில் தண்ணீரை நிரப்பி அவனிடம் நீட்ட அதை வாங்கி பருகியவன் தலையைக் கைகளால் தாங்கிக்கொள்ள யசோதராவுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

தானாய் அவளது கரங்கள் உயர்ந்து அவனது சிகையைக் கோதியது.

“எதுவும் கெட்டக் கனவு வந்துச்சா சித்து?” ஆதுரத்துடன் கேட்டவளை ஏறிட்டவனின் கண்களில் இன்னும் கலவரம் விலகவில்லை.

வேகமாக அவளை இறுக அணைத்தவன் “ராகேஷ் உன்னை ஷூட் பண்ணுற மாதிரி கனவு யசோ… நிஜம் மாதிரியே இருந்துச்சு… எதுவோ தப்பா நடக்கப் போகுது… ஆனா நான் அப்பிடி எதுவும் நடக்கவிட மாட்டேன்… இன்னொரு தடவை உன்னைக் காயப்படுத்த அவனுக்கு நான் சான்ஸ் குடுக்கவே மாட்டேன்.. குடுக்கவே மாட்டேன்” பதற்றத்துடன் மொழிந்தான்.

யசோதராவுக்கோ ஆச்சரியம்! ஒரு கெட்டக்கனவுக்கு இவ்வளவு தூரம் பயப்படவேண்டுமா? அதிலும் ராகேஷ் என்பவன் இப்போது சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதி! அவன் வெளியே வருவது இருக்கட்டும், வந்து தன்னைக் கொல்லுமளவுக்கெல்லாம் நிலமை வராது என்பது உறுதி.

ஏன் இவன் இவ்வாறெல்லாம் எண்ணுகிறான்? அவனிடமிருந்து விலகியவள் அவனை நேருக்கு நேர் நோக்கினாள்.

“எனக்கு எதுவும் ஆகாதுடா சித்து… நீ ஏன் இவ்ளோ பயப்படுற?”

“இந்தக் கனவு எனக்கு அடிக்கடி வருது யசோ”

“என் கிட்ட சொல்லிருக்கலாமே சித்து”

அவனிடமிருந்து பதில் வரவில்லை. யசோதரா அவனது தோளைத் தட்டிக்கொடுத்தவள்

“எனக்கு எதுவும் ஆகாது சித்து… நீ ரொம்ப யோசிக்காத” என்று கூற

“என்னோட குற்றவுணர்ச்சி என்னை நிம்மதியாவே இருக்கவிடாது யசோ… அது தான் இது எல்லாத்துக்கும் அடிப்படை காரணம்… நான் தப்பு பண்ணிருக்கேன்… உன் விசயத்துல ஜித்துவ காப்பாத்த நான் பண்ணுன தப்பு சாகுற வரைக்கும் என்னை வதைக்கும்” என்று நைந்த குரலில் பேசவும் யசோதரா கலங்கி போனாள்.

பழைய விபத்தைப் பற்றி அவன் பேசுவது இப்போதெல்லாம் ஏன் அதிகரிக்கிறது? இப்போது அமைதியாய் பேசினால் சித்தார்த் இன்னும் மனம் சோர்ந்து போவான்.

அத்துடன் இது அவளே மறந்து போன விசயம். அதை ஏன் நினைவுபடுத்திப் பார்க்கிறான்? அவளுக்குள் கோபம் மூண்டது.

“அப்போ என்ன பண்ணலாம்? பேசாம நான் ஜித்து மேல ஹிட் அண்ட் ரன் கம்ப்ளைன்ட் குடுத்துடவா? அவனுக்கு உதவியா இருந்தேனு உன்னை, அங்கிளை, அந்த டாக்டரை, இன்ஸ்பெக்டரை எல்லாரையும் உள்ள தள்ளிடுவோமா?”

யசோதராவின் குரலில் அனல் பறக்கவும் சித்தார்த் திகைத்தான். இப்போது குற்றவுணர்ச்சியெல்லாம் தூர ஓடிவிட்டது. யசோதராவின் கோபத்தை தணிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனமெங்கும் வியாபிக்க அவளது கரத்தைப் பற்றிக்கொண்டான் அவன்.

“சாரி யசோ! இனிமே இப்பிடி சொல்லமாட்டேன்… அப்பிடியே இன்னைக்கு உன்னோட கால் அட்டெண்ட் பண்ணாததுக்கும் மன்னிச்சிடு ப்ளீஸ்”

அவள் அமைதி காக்கவும் தயங்கியவன் “என்னடி சாரி கேட்டாலும் மன்னிக்கமாட்டியா? நீ என்னை மன்னிக்கலனா என்னால நிம்மதியா தூங்க முடியாது யசோ… தூக்கம் மட்டுமில்ல, என் சந்தோசம், வாழ்க்கை எல்லாமே உன் கோவம் விலகலுக்கு முன்னாடி என்னை விட்டு தூரமா போயிடுது” என்று பரிதாபமாக கூறவும் யசோதரா தணிந்தாள்.

“அப்போ இனிமே கனவு கண்டு இப்பிடி அச்சுபிச்சுனு உளறக்கூடாது… உன்னோட சோ கால்ட் ருத்ராஜிக்காக என்னையும் என் பொண்ணையும் ஜித்துவயும் டீல்ல விடக்கூடாது” என்ற நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை அவனுக்கு வழங்கினாள்.

சித்தார்த்தின் முகத்தில் போன பொலிவு திரும்பிவந்தது. அதை பார்க்கையில் யசோதராவுக்கும் நிம்மதி தான். அவளால் அவனிடம் கோபப்படமுடியும். சண்டையிட முடியும். ஆனால் அவனது சோர்ந்த முகத்தை அவளால் காண இயலாது. அது சித்தார்த்தின் மீதான யசோதராவின் காதல் அவளுக்கு அளித்த பலவீனம்.

தெளிந்த முகத்துடன் அவனை அணைத்தவள் “சண்டை போட்டாச்சு… சமாதானம் ஆயாச்சு… மன்னிக்கவும் செஞ்சாச்சு… இப்போ தூங்குவோமா?” என்று கேட்க

“கண்டிப்பா தூங்கணுமா?” என்று விசமத்துடன் கேட்டபடி அவளை அள்ளி அணைத்துக்கொண்டான் சித்தார்த்.

“டுமாரோ நான் சீக்கிரம் ஆபிசுக்குப் போகணும்… சோ தூங்கியே ஆகணும்” என்று சொன்னவளை மார்போடு அணைத்துக் கண்மூடியவனுக்கு அன்று நிம்மதியான நித்திரை வாய்த்தது.

மழை வரும்☔☔☔