☔ மழை 17 ☔

சாதாரணமாக படங்கள் எல்லாமே நீள்சதுர வடிவில் தான் இருக்கும். படங்களில் மையப்புள்ளிகள் (Focal Points) என்று ஒன்று உண்டு. பார்ப்பவரின் கண்கள் அந்தப் புள்ளிகள் இருக்குமிடத்திற்கு தான் அதிகமாக இழுத்துச் செல்லப்படும். ஒரு நீள் சதுரத்தில் மேலிருந்து கீழாகவும், இடவலமாகவும் இரண்டு இரண்டு கோடுகள் கிழித்து சமபாகங்களாக வெட்டும்போது அந்த நான்கு கோடுகளும் சந்திக்கும் இடங்களான A,B,C,D இவை தான் மையப்புள்ளிகள். நீங்கள் எடுக்கும் படங்களில் எந்தவொரு பொருளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறீர்களோ அதை இந்த நான்கு புள்ளிகளில் ஒன்றின் அருகில் வைத்தால் அது படம் பார்ப்பவரின் கவனத்தை உடனே ஈர்க்கும்.

                -புகைப்பட அனுபவங்கள் புத்தகத்தில் கல்பட்டு நடராஜன்

மெட்ராஸ் மோட்டார் ரேஸ் தடம், இருங்காட்டுக்கோட்டை

இந்தியன் நேஷனல் கார் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் MRF Saloon Series பிரிவிற்கான பயிற்சியோட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பயிற்சியோட்டத்தில் கலந்துகொள்ள கார்பந்தய வீரர்கள் தங்களது கார்களுடன் காத்திருக்க தனது வெண்ணிறத்தில் ஆரஞ்சு கோடுகள் பாயும் சலூன் வகை பந்தயக்காரைப் பார்த்தபடி நின்றிருந்தான் இந்திரஜித்.

இருபத்தேழு வயதில் கார் ரேசிங்கில் எண்ணற்ற கோப்பைகளை வென்றவனுக்கு இந்த ரேசில் ஜெயிப்பது ஒன்றும் கடினம் என்று தோன்றவில்லை. அவனது கண்கள் சுற்றி நின்ற மற்ற வீரர்களை அளவிட்டது. அனைவரும் அவனைப் போலவே பதின்வயதிலிருந்து ரேசிங்கில் ஊறியவர்கள் தான்.

மெதுவாக அவனது கண்கள் கார்கள் செல்லும் வழித்தடத்திலிருந்து விலகி அதன் ஓரத்தில் போடப்பட்டிருந்த தடுப்புகளின் அருகே நின்றிருந்த அவனது தோழியையும் அவளின் உதவியாளனையும் தேடியது.

கழுத்திலிருந்து கால் வரை கருப்பில் வெண்ணிறமும் ஆரஞ்சு வண்ணமும் கலந்த ரேசிங் உடை, கைகளில் தாங்கியிருந்த அதே ஆரஞ்சு வண்ண தலைகவசம், கரங்களில் கையுறை என பார்ப்பதற்கு வினோதமாகக் காட்சியளித்தவனின் கண்கள் தலைக்கவசித்தினூடே அவனை விட்டு சில அடிகள் தொலைவில் ஆரஞ்சு வண்ண டீசர்ட்டும் நேவி ப்ளூ லெவிஸ் ஜீன்சும் அணிந்தும் தனது சோனி ஏ9 கேமராவைப் பிடித்தபடி உதவியாளனிடம் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த சாருலதாவை ஏறிட்டது..

இன்று சென்னை மாநகரத்தின் புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர்களில் அவளும் ஒருத்தி. ஆனால் யாரிடமும் சென்று பணியாற்றும் விருப்பமில்லாததால் ஃப்ரீலாஞ்ச் புகைப்படக்கலைஞராக அட்லாண்டிஸ் ஸ்டூடியோ என்ற என்ற புகைப்பட நிறுமத்தை நடத்தி வருகிறாள். அவளுடன் சேர்ந்து நான்கு நண்பர்கள் பணியாற்றும் அந்நிறுவனம் தான் வி.ஐ.பிக்கள் இல்லத்தில் நடக்கும் நிகழ்வுகளை புகைப்படமாக்குகிறது.

இப்போது நண்பன் அழைத்தான் என்று அவனது கார் ரேசிங் அனுபவத்தைப் புகைப்படமாக்க தனது உதவியாளனுடன் வந்திருந்தாள் அவள்.

“பேனிங் டெக்னிக் யூஸ் பண்ணி இந்தப் போட்டோவ எடுத்துடலாம்” என்று சாருலதா உதவியாளனான நண்பனிடம் கூற

“பேனிங் அண்ட் ப்ளர் யூஸ் பண்ணுனா இன்னும் ஃபயரா இருக்கும் சாரு” என்றான் அவன்.

அவர்களின் போட்டோகிராபி பாஷை புரியாத ஒரு ஜீவன் கார் ரேசிங்கின் போது அணியும் உடையுடன் ஹெல்மெட்டை கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கரத்தை இடுப்பில் ஊன்றி குழம்பிக்கொண்டிருந்தது.

ஒருவழியாக சாருலதாவும் உதவியாளனும் பேசிமுடித்துவிட்டு திரும்ப “இப்போவாச்சும் போட்டோஷூட் ஆரம்பிக்கலாமா?” என்று அங்கலாய்த்தவன் இந்திரஜித்தே தான்.

அவனுக்கு ரேசிங் உடையில் புகைப்படம் எடுக்கவேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அதை நிறைவேற்றிக்கொள்ளும் ஆசையுடன் இன்று சாருலதாவை அழைத்திருந்தான்.

சாருலதா அவனது கையிலிருந்த ஹெல்மெட்டைப் பிடுங்கி தலையில் கவிழ்த்துவிட்டு “ஓவரா பேசுனேனு வையேன், சங்கிமங்கி மாதிரி போட்டோ பிடிச்சுடுவேன்… ஒழுங்கா கார்ல போய் உக்காரு… நீ காரை டிரைவ் பண்ணுறப்போ தான் நாங்க ஷூட் பண்ணுவோம்” என்றாள்.

இந்திரஜித்தோ “அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல… நான் நிக்குற போஸ்லயே நீ போட்டோ எடு… இட்ஸ் இனாஃப்” என்று மறுக்க

“டேய் நான் சொன்ன மாதிரி ஷூட் பண்ணுனா தான் நீ கார் ரேசர் மாதிரி இருப்ப… இந்த போஸ்ல பவர் ரேஞ்சர் மாதிரி இருக்க… ஒழுங்கா கார்ல உக்காரு” என்று பல்லைக் கடித்த சாருலதா சொன்னதோடு அவனைத் தள்ளியும் விட்டாள்.

“போட்டோஷூட்டுக்குக் காசு செலவாக கூடாதுனு உன்னைக் கூப்பிட்டேன்ல, அதுக்கு நீ என்னை தள்ளியும் விடுவ, காரை என் மேல ஏத்தவும் செய்வ… மன்னிச்சுக்கோ தெய்வமே! இதோ போறேன்” என்று சொல்லிவிட்டு ரேஸ் காரினுள் அமர்ந்தான் இந்திரஜித்.

அவனது கார் ரேஸ் வழித்தடத்தில் சீறிப் பாயத் தயாராக சாருலதாவும் தனது புகைப்படக்கருவியுடன் அவனைப் படம் பிடிக்கத் தயாரானாள்.

அவனது கார் தெரியும் வண்ணம் சில பெட்டிகளை அடுக்கி அதன் மீது நின்று கொண்டவளின் கேமரா அவனது காரின் நிழற்படத்தைத் தனது லென்ஸிற்குள் சிறைபிடிக்கத் துவங்கியது.

கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர்கள் நீண்ட வழித்தடத்தில் கார்கள் விர்விர்ரென்று சீறிப்பாயும் காட்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகழித்தனர் ரேஸ் பிரியர்கள்.

முன்பு அவளும் இப்படி ரசித்தவள் தான். அப்போது வெறும் கண்களால் ரசித்தவள் இன்று அவளது கேமரா லென்சின் வழியே ரசித்தபடி புகைப்படமாக்கினாள்.

இந்திரஜித் தன்னை கடந்து சென்ற கார்களை லாவகமாக முந்தி சென்று வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தது. அதை சாருலதாவின் கேமரா படம்பிடித்துக் கொண்டிருந்தது.

சில வினாடிகளில் இலக்கை அடைந்து வேகம் குறைந்து கார் நின்றுவிட அதனுள் இருந்து ஹெல்மெட்டுடன் இறங்கினான் இந்திரஜித். அது முதல் பயிற்சி ஓட்டம் என்பதால் அடுத்தப் பயிற்சி ஓட்டத்திற்கு அவனுடன் தகுதி பெற்ற மற்ற வீரர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டவன் சாருலதாவை நோக்கி வந்தான்.

அவள் கேமிராவைக் காட்டி ஏதோ சொன்னபடி நிற்க அவளருகே வந்தவன் தோளில் கைபோட்டுவிட்டு அவளைப் போலவே புகைப்படக்கருவியை உற்று நோக்கினான்.

“போட்டோ நல்லா வந்திருக்குல்ல” என்று புன்னகைத்தவள் அவனை மேலும் கீழுமாக நோக்கிவிட்டு “லிட்டில் ஹார்ட் போஸ் குடு” என்று கேட்க

“நீயும் வா சாரு… ரெண்டு பேரும் சேர்ந்து போஸ் குடுப்போம்” என்றான் அவன்.

பின்னர் என்ன, இருவரும் சேர்ந்து பெருவிரலையும் ஆட்காட்டிவிரலையும் ‘வி’ வடிவத்தில் மடக்கி போஸ் கொடுத்தனர். எல்லாம் கொரியன் தொடர்கள், பி.டி.எஸ் பார்ப்பதன் விளைவு!

பின்னர் நேரமாகிவிட்டதை உணர்ந்து இந்திரஜித் வழக்கமான இலகு உடைக்கு மாறிவிட இருவரும் வீட்டிற்கு கிளம்பத் தயாராயினர். ஏனெனில் மாலையில் சர்மிஷ்டாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் இருந்தது. அவளுக்குப் பரிசு வாங்கவேண்டும்! பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடு கச்சிதமாக முடிந்திருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். எவ்வளவு வேலைகள் இருக்கிறது?

அதற்கு மேல் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் தடத்தில் அவர்களுக்கு என்ன வேலை? சாருலதாவின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு உதவியாளன் கிளம்பிவிட அவளும் இந்திரஜித்தும் சர்மிஷ்டாவுக்குப் பரிசை வாங்கிக்கொண்டு சவி வில்லாவை நோக்கி சிட்டாகப் பறந்தனர்.

அங்கே பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்க வீட்டினுள் நுழையும் போதே மேல்தளத்தில் சர்மிஷ்டாவின் இண்டோர் ப்ளே ரூமிலிருந்து குழந்தைகளின் சத்தம் பலமாக கேட்டது.

“அண்ணா என்னோட பட்டர்ஃப்ளை ட்ராயிங் பாரேன்” இது ஏழு வயது இலக்கியா அவளது சகோதரன் நந்தனிடம் கொஞ்சும் குரல்.

அதைத் தொடர்ந்து சர்மிஷ்டாவும் பிரவினும் பேசும் சத்தம் கேட்க கீழ்தளத்தில் நாராயணமூர்த்தியும் சவிதாவும் அமர்ந்திருந்தனர்.

மகனைப் பார்த்ததும் சவிதாவின் முகம் பூவாய் மலர்ந்தது.

“இன்னைக்கு ப்ராக்டீஸ் செஷன்ல வின் பண்ணிட்டியாடா கண்ணா?”

கேள்வி கேட்கப்பட்டது என்னவோ இந்திரஜித்திடம். ஆனா பதிலைச் சொன்னவர் நாராயணமூர்த்தி.

“நீ கேக்கவேண்டிய அவசியமே இல்ல சவி… ஜித்து தான் வழக்கம் போல ஜெயிச்சிருப்பான்”

அவர் சொல்லி முடிக்கவும் இந்திரஜித் தந்தையின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன் “டாடி டாடி ஓ மை டாடி” என்று பாட்டு பாட ஆரம்பிக்க அவனுடன் வந்த சாருலதா வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

சவிதா மகனது புஜத்தில் பட்டென்று அடி வைத்தவர் “எப்போவும் விளையாட்டு தான்… கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுடா” என்று அதட்ட

அவனோ “அதான் டாடி சொல்லிட்டார்ல, இன்னைக்கு நான் தான் வின்னர்; நாளைக்கும் நான் தான் வின்னரா வருவேன்” என்று சொல்லிவிட்டு தனது டீசர்ட்டின் காலரைத் தூக்கிவிட அவர்கள் பேசிய சத்தம் கேட்டு மேல்தளத்திலிருந்து இறங்கி வந்தனர் மயூரியும் யசோதராவும்.

அவர்களைக் கண்டதும் ஹேமலதா எங்கே என சாருலதா வினவ தோழிகள் இருவரும் மேல்தளத்தை நோக்கி கைகாட்டினர்.

“உன் அக்கா சின்ன குழந்தைங்க கூட குழந்தையா மாறி ஐஸ்பால் விளையாடிட்டிருக்கா சாரு”

மயூரி கூறவும் சாருலதா நமட்டுச்சிரிப்பு சிரிக்க இந்திரஜித்தோ “இதுக்கு ஏன் சிரிக்கிறீங்க? நீங்க ரெண்டு பெரும் ஸ்ட்ரிக்டான மிலிட்டரி ஆபிசர் மாதிரி குழந்தைங்கள வளத்தா அவங்க உங்க முன்னாடி அட்டென்சன்ல நிப்பாங்களே தவிர ஐஸ்பால் விளையாட வரமாட்டாங்க” என்று கேலி செய்தான்.

அவன் கேலி செய்தாலாவது யசோதராவின் முகவாட்டம் மாறுமென எண்ணிய சவிதாவுக்கும் நாராயணமூர்த்திக்கும் ஏமாற்றம்! ஏனெனில் யசோதராவின் கண்களில் மின்னிய நிராசை அப்படியே தான் இருந்தது.

அப்போது “மம்மி” என்றபடி படிகளில் கிளுக்கி நகைத்தபடி ஓடிவந்தாள் சர்மிஷ்டா. அவள் பின்னே ஓடிவந்தாள் ஹேமலதா.

விரிந்த லேயர் கட் கூந்தல் ஆடி அசைந்தாலும் மீண்டும் பழையபடி அழகாய் அடங்கிவிட சர்மிஷ்டாவைப் பிடித்தாள்.

அவள் உயரத்திற்கு முழங்காலிட்டு நின்றவள் “எவ்ளோ வேகமா ஓடுற நீ?” என்று கன்னத்தைக் கிள்ளி முத்தமிட

“நான் அவுட் இல்ல ஆன்ட்டி… நீ தான் கண்ணை கட்டணும்” என்றாள் சர்மிஷ்டா.

“ஏய் நீ அவுட் ஆயிட்டடி… என்னையே ஏமாத்தப் பாக்குறியா?” என்று பொய்யாய் ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்டினாள் ஹேமலதா.

சர்மிஷ்டா உதட்டைப் பிதுக்கியவள் “எனக்காக நீ கண்ணைக் கட்ட மாட்டியா ஆன்ட்டி?” என்று பரிதாபமாக கண்களை உருட்டி கேட்க பேத்தியின் நடிப்பில் மோவாயில் கைவைத்து அதிசயித்தனர் சவிதாவும் நாராயணமூர்த்தியும்.

மயூரியும் இளையவர்களும் சிரிக்க ஹேமலதா தானே கண்ணைக் கட்டிக்கொள்வதாகச் சொன்னதும் தனது அரிசி பற்களைக் காட்டிச் சிரித்தாள் சர்மிஷ்டா.

இதற்கிடையே இந்திரஜித் தான் பரிசாக வாங்கிய குட்டி பியானோவை அண்ணன் மகளுக்கு அளிக்க சாருலதாவோ வெள்ளியாலான தேவதை உருவம் தொங்கிய பிரேஸ்லெட்டை அணிவித்தாள்.

“பிடிச்சிருக்கா?” என்று அவள் கேட்க சர்மிஷ்டா பதிலளிக்காது சாருலதாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

இத்தனைக்கு இடையே யசோதராவின் முகம் தெளிவடையாது இறுக்கத்துடன் தான் இருந்தது.

அதைப் புரிந்துகொண்ட மற்றவர்கள் அவளைக் கலகலப்பாக முயற்சித்தபடி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாட்டை கவனிக்க ஆரம்பித்தனர்.

இதற்கென ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் பலூன்கள், பொம்மைகளால் ஹாலை அலங்கரித்திருந்தனர். கேக் வைப்பதற்கான மேஜையும் அலங்கரிக்கப்பட்டது.

இதற்கிடையே மதியவுணவு முடிந்துவிட மாலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வீட்டினர் அனைவருடன் சர்மிஷ்டாவின் வகுப்பு தோழர்களும் சாந்தகோபாலன் மற்றும் அவரது மனைவியும் வந்திருந்தனர்.

அழகான தேவதையைப் போல க்ரீம் வண்ண கவுனில் கேக் வைத்திருந்த மேஜையின் முன்னே நின்ற சர்மிஷ்டா தந்தையைக் காணும் ஆவலுடன் கேக்கை வெட்டவா வேண்டாமா என்று இருமனதாக அல்லாடிக்கொண்டிருக்க யசோதராவப் பற்றி கேட்கவே வேண்டாம்.

புத்தாடை அணிந்து அலங்கரித்திருந்தாலும் அவள் முகம் மட்டும் இறுக்கத்தை ஆடையாக அணிந்திருந்தது.

சர்மிஷ்டா “மம்மி…” என்று பாவமாக விழிக்க “நீ கேக் கட் பண்ணு சர்மி” என்றாள் யசோதரா.

இந்திரஜித் வேகமாக “கொஞ்சம் வெயிட் பண்ணலாமே அண்ணி… அண்ணா வந்துடுவார்” என்று இடைமறிக்க

“ஆல்ரெடி மானிங்ல இருந்து நாங்க வெயிட் பண்ணிட்டு தான் இருந்தோம் ஜித்து… இதுக்கு மேல வெயிட் பண்ணுனா கெஸ்ட்லாம் என்ன நினைப்பாங்க?” என்று பதிலளித்த யசோதரா மகளை கேக் வெட்டுமாறு பணிக்க அவளும் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தவள் கேக்கை வெட்ட ஆரம்பித்தாள்.

முதல் துண்டினை அன்னைக்கு ஊட்டியவள் பின்னர் தாத்தா பாட்டி சித்தப்பா மற்றும் அன்னையின் தோழிகள் என அனைவருக்கும் ஊட்டி முடிக்கவே அதன் பின்னர் கேக் துண்டங்கள் மற்றவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

வந்தவர்கள் சர்மிஷ்டாவை வாழ்த்தி பரிசுப்பொருட்களை வழங்க அவளைப் பெற்றவன் தான் இன்னும் வரவில்லை.

அவன் மட்டுமா, மாதவனுக்கும் வெளிப்புற படப்பிடிப்பு இருந்ததால் அன்று நள்ளிரவு தான் சென்னைக்கு வரமுடியும் என்று கூறிவிட்டான். கௌதமோ நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களை சென்னையைச் சுற்றியிருந்த கிராமங்களில் ஒன்றிற்கு அழைத்துச் சென்றிருந்தான். அவனும் வீடு திரும்ப இன்னும் மூன்றரை மணி நேரம் பாக்கி இருந்தது.

எனவே அந்த மூவரைத் தவிர்த்து அனைவரும் அங்கே குழுமியிருந்தனர். சாந்தகோபாலன் யசோதராவைத் தனியே அழைத்தவர் சித்தார்த் எப்போது சென்னைக்குத் திரும்புவான் என்று கேட்க அவளோ

“தெரியல எஸ்.ஜி சார்…. நான் கால் பண்ணுனப்போ அவர் எடுக்கல” என்றாள் தனது மொபைலை மதியத்திலிருந்து தொட்டுக் கூடப் பார்க்கவில்லை என்பதை மறந்து.

ஒரு வழியாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள், விருந்து முடிந்து வந்தவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பிய பின்னர் சவி வில்லாவாசிகள் மட்டும் ஹாலில் குழுமியிருந்தனர்.

சவிதாவின் அருகே அமர்ந்திருந்த சர்மிஷ்டா “பாட்டி டாடி எப்போ வருவார்?” என்று ஏக்கத்துடன் கேட்க அவரோ பதிலறியாது விழித்தார்.

மதியத்திலிருந்து சித்தார்த்துக்கு கோடி முறை அழைத்தாயிற்று! ஆனால் பாவம், அவனது மொபைல் சார்ஜ் தீர்ந்து போய் உறங்கிவிட்டது என்பது அவர்கள் யாருக்கும் தெரியாதல்லவா!

யசோதரா அதற்கு மேல் மற்றவரின் இரக்கத்திற்கு ஆளாக விரும்பாதவளாய் எழுந்தவள் “சர்மி மண்டே ஸ்கூலுக்குப் போகுறதுக்கு முன்னாடி ஹோம்வொர்க் முடிக்கணும், வா” என்றபடி தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டாள்.

இந்திரஜித் அவளையும் சர்மிஷ்டாவையும் பார்த்தவன் அவர்கள் தலை மறைந்ததும் பெற்றோரிடம் கவலையுடன் பேச ஆரம்பித்தான்.

“அண்ணாக்கு சர்மிய விட அந்தச் சாமியார் முக்கியமா போயிட்டாரா டாடி? குழந்தை அவருக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்ணுனா… அண்ணியோட பொறுமை என்னைக்கு முழுசா போகுதோ அன்னைக்கு அண்ணாவோட நிலமை மோசமாயிடும் டாடி”

அப்போது வாயிலில் இருந்து ஒரு குரல் கேட்டது.

“அப்பிடி ஒரு நிலமை வராது ஜித்து… ஏன்னா நான் ஒரு தடவை பண்ணுன தப்பை மறுபடி பண்ணமாட்டேன்” என்ற அழுத்தமாகக் கேட்டபடி தனது ரோலர் சூட்கேஸ் சகிதம் நின்றிருந்தான் சித்தார்த்.

அவனைக் கண்டதும் சவிதாவுடன் சேர்ந்து மற்ற மூவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

“குழந்தையும் யசோவும் உனக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்ணுனாங்க தெரியுமா?” மூவரும் ஒருமித்த குரலில் கேட்க அவனோ கிளம்பும் நேரத்தில் திடீரென ருத்ராஜியின் நிகழ்ச்சி அட்டவணையில் மாற்றமாக அமைந்த உரையாடலைப் பற்றி விளக்கிவிட்டுப் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து வினவினான்.

“பர்த்டே சூப்பரா முடிஞ்சுதுண்ணா… நீங்க மட்டும் வந்திருந்தா சர்மி குட்டி சந்தோசப்பட்டிருப்பா”

“அதான் இப்போ வந்துட்டான்ல ஜித்து… இனியும் ஏன் முடிஞ்சதை பேசுற? சித்து நீ போய் ரெஃப்ரெஷ் ஆகுடா… நான் சாப்பாட்டை உன் ரூமுக்கு அனுப்பி வைக்கிறேன்”

சவிதாவிடம் பேசிவிட்டு மேல்தளம் செல்ல எத்தனித்தவன் திடீரென நினைவு வந்தவனாக இந்திரஜித்திடம் வந்தான்.

“இன்னைக்கு உன்னோட ப்ராக்டிஷ் செஷன்ல வின் பண்ணுனியாடா?”

“உங்களுக்குத் தெரியாதாண்ணா? நீங்க இண்டர்நெட்ல பாக்கலயா?”

“என் மொபைல் சார்ஜ் இல்லாம ஆப் ஆயிடுச்சுடா… இல்லனா நான் பாக்காம இருந்துருப்பேனா?”

“இப்போலாம் நீங்க முன்ன மாதிரி இல்லயேண்ணா” எவ்வளவோ முயன்றும் வருத்தத்துடன் ஒலித்தது இந்திரஜித்தின் குரல். சித்தார்த் ஒரு கணம் திகைத்தவன் பின்னே அவனது தோளில் தட்டிவிட்டு படியேறினான்.

அவன் போய் நின்ற இடம் மகளின் அறை! அங்கே காட்டன் டீசர்ட்டும் த்ரீ போர்த் பேண்டும் அணிந்து போனி டெயிலுடன் உறங்க தயாராகிக் கொண்டிருந்தாள் அவனது அருமை மகள் சர்மிஷ்டா.

“சர்மி குட்டி!” மென்மையாக அவன் அழைக்கவும் திரும்பிய குழந்தை அவனைக் கண்டதும் “அப்பா” என்று உற்சாகத்துடன் ஓடி வந்து அணைத்துக்கொண்டாள்.

மனைவியின் கோபம், தம்பியின் ஆதங்கம், பெற்றோரின் அங்கலாய்ப்பு என அனைத்து உணர்வுகளும் அந்தப் பூஞ்சிட்டின் அணைப்பில் கரைந்து காணாமல் போய்விட மகளை உச்சி முகர்ந்து “ஹேப்பி பர்த்டே சர்மி குட்டி” என்றான் சித்தார்த் அளவற்ற அன்பை குரலில் தேக்கியவாறு!

மழை வரும்☔☔☔