☔ மழை 13 ☔

“இந்தியமக்கள் விசித்திரங்களை நம்பி அதன் பின்னே ஓடுபவர்கள். அதனாலேயே காவியுடைகளை நம்பி அவர்கள் பின்னே செல்கின்றனர். அவர்களைத் தங்களது ரட்சகராக கருதுகின்றனர். இதன் முடிவில் குருட்டு நம்பிக்கை அனைத்தையும் அழித்துவிடுகிறது”

                                                -பிரதீப் சிங், சமூகவியலாளர்

சவி வில்லா…

இரவுணவுக்குப் பின்னர் சர்வருத்ரானந்தாவுடன் பேச அமர்ந்திருந்தனர் மாதவனும் சித்தார்த்தும். ரவீந்திரன் பணிவு காட்டி இன்னும் இருக்கையில் அமராது நின்று கொண்டிருக்கவும் மாதவன் அவரை அமருமாறு பணித்தான்.

அவர் இன்னும் யோசனையுடன் ருத்ராஜியைப் பார்க்க “உக்காருங்க ரவீந்திரன்… நீங்க தானே சித்தார்த்துக்கு எல்லா டேர்ம்ஸையும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணப்போறீங்க! எவ்ளோ நேரம் நின்னுட்டிருப்பீங்க?” என்று அவர் கூறவும் ரவீந்திரன் அமர்ந்தார்.

“சொல்லுங்க சார்” என்று ஒரே குரலில் கேட்டனர் மாதவனும் சித்தார்த்தும்.

“முக்தி ஃபவுண்டேசன் தமிழ்நாடு முழுக்க செயற்கை உரங்களால வளமிழந்து போன அக்ரி லேண்டை பழைய நிலைக்குக் கொண்டு வந்து இயற்கை வழில விவசாயம் பண்ணுறதுக்கு ஏழை விவசாயிகளுக்கு உதவுகிறதா இருக்குறோம்… போன வருசம் யோகா ப்ரோகிராம்ல கிடைச்ச ரெவன்யூ மொத்தமும் இதுல போடப்போறோம்… இந்த புராஜெக்டுக்கு ‘இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவோம்’னு பேர் வச்சிருக்கோம்” என்றார் ரவீந்திரன்.

சித்தார்த் கண்ணில் கவனத்துடன் கேட்டவன் “இதுக்கு ஃபண்ட் குடுக்கணுமா ரவி சார்? சொல்லுங்க ஜே.எம் சார் மூலமா மொத்த ஃபேமிலியும் சேர்ந்தே குடுக்குறோம்” என்க அவனது நண்பனும் அதையே கூறினான்.

சர்வருத்ரானந்தா இருவரையும் கையமர்த்தியவர் “என்ன வேகம்? முக்திக்கு உதவ நினைக்கிற உங்களோட ஹெல்பிங் டென்டன்ஸி எனக்குப் புரியுது… இதை முழுக்க முழுக்க முக்தியோட பணத்தை வச்சே செஞ்சு முடிக்கணும்னு தான் முதல்ல ப்ளான் பண்ணுனோம்… ஆனா முக்தியோட பணம் எல்லாம் டெல்டா டிஸ்ட்ரிக்டுக்கு மட்டும் தான் போதும்னு நம்ம ஃபினான்ஷியல் அட்வைஷர்ஸ் சொல்லுறாங்க… அதனால பொதுமக்கள் கிட்ட நன்கொடை திரட்டப் போறோம்… ஆனா மக்கள் நம்பணும்னா உங்களை மாதிரி பிரபலங்கள் அந்த புராஜெக்ட் பத்தி பேசணும்… உங்களோட ஆதரவு இருந்தா மக்களோட நம்பிக்கைய ஈசியா ஜெயிச்சிடுவோம்” என்றார்.

ரவீந்திரனோ “ரொம்ப அதிகமா டொனேசன் வாங்கப்போறதில்ல சார்… ஒருத்தர் ஃபிப்டி ருபீஸ் குடுத்தா போதும்” என்று கூற சித்தார்த்தும் மாதவனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“இவ்ளோ தூரம் நீங்க பேசணுமா ருத்ராஜி? நாங்க மட்டுமில்ல இன்னும் எங்களோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் இந்த புராஜெக்டுக்குச் சப்போர்ட் பண்ணவைக்குறோம்… எங்களால நேரடியா வறுமையால கஷ்டப்படுற விவசாயிங்களுக்கு உதவ முடியாது… அட்லீஸ்ட் உதவுற உங்களை மாதிரி பெரியவங்களோட இருக்குற வாய்ப்பாவது கிடைக்குதேனு சந்தோசப்படுறோம் ருத்ராஜி… சொல்லுங்க நாங்க என்ன பண்ணணும்?”

ரவீந்திரன் தங்களது முக்தி ஃபவுண்டேசன் சார்பாக விளம்பர நிறுவனத்தினர் எடுக்கப்போகும் விளம்பரப்படங்களில் பிரபலங்களை ‘இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவோம்’ செயல்திட்டத்தை ஆதரித்து நடிக்கவைக்கும் திட்டத்தை விளக்கினார்.

“இதுக்கு நீங்க என்ன சம்பளம் எதிர்பாத்தாலும் அதை குடுக்க நாங்க தயாரா இருக்கோம்” என்று கூற

“உங்களோட இந்த முயற்சியால எவ்ளோ ஃபார்மர்ஸ் பயனடைய போறாங்க! இதுக்குப் போய் நாங்க சேலரி வாங்குவோமா? நானும் சித்துவும் ஃப்ரீயாவே அந்த ஆட் பண்ணுறோம்… இன்னும் எங்க சர்க்கிள்ல இருக்குற எல்லாரும் இதுக்குச் சப்போர்ட் பண்ணுறதுக்கான ஏற்பாட்டையும் நாங்க பாத்துக்கிறோம்” என்று முடித்தான் மாதவன்.

தாங்கள் வந்த வேலை எவ்வித சிரமமுமின்றி முடிந்துவிட சர்வருத்ரானந்தாவின் மனதில் நிம்மதி பரவியது.

அவரும் ரவீந்திரனும் கிளம்பியதும் மாதவனும் சித்தார்த்தும் செய்த முதல் வேளை தங்களது நட்பு வட்டாரத்தில் இருக்கும் சினிமாத்துறையினரை அழைத்து இது தொடர்பாகப் பேசியது தான்.

அடுத்து அவர்கள் இந்த விசயத்தைக் கூறியது அவர்களை ஒத்த கருத்துடன் இருக்கும் கௌதமிடம். இப்போதைக்கு வெளியே யாரிடமும் தெரிவிக்கவேண்டாமென்ற ரவீந்திரனின் வேண்டுகோளை கௌதமிற்காக மட்டும் ஒதுக்கி வைத்தனர்.

அவனும் இதைக் கேட்டதும் மகிழ்ந்தான். அந்த மூன்று இளைஞர்களுக்கும் சர்வருத்ரானந்தாவின் மீதிருந்த நம்பிக்கையும் அபிமானமும் இன்னும் ஒரு படி அதிகரிப்பதற்கு இந்நிகழ்வு அடிகோலியது.

இந்த மூவரையும் தாண்டி இவ்விசயம் அவரவர் வாழ்க்கைத்துணைவியருக்குச் சென்றடைந்தது அவர்கள் நடித்த விளம்பரப்படம் தொலைகாட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் வலம் வந்த வேளையில் தான்.

அதைப் பார்த்த பின்னர் யசோதரா திகைத்தாலும் அதற்காக சித்தார்த்திடம் வாதிடவில்லை. அவளுக்கு முக்தி ஃபவுண்டேசன் மீது சின்ன கசப்புணர்வு இருந்தாலும் அவர்களது ‘இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவோம்’ என்ற திட்டத்தால் பயனடையும் விவசாயிகளைப் பற்றி எண்ணும் போது இத்திட்டத்தை அவளும் வரவேற்கவே செய்தாள். அவர்களின் தொலைகாட்சியிலேயே அந்த விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

கூடவே அவர்கள் அலுவலகத்திலேயே பெரும்பாலான ஊழியர்கள் கூட இத்திட்டத்திற்கு நன்கொடை அளித்தனர்.

இவ்வாறு இருக்கையில் கௌதம் மற்றும் ஹேமலதாவின் இல்லற வாழ்க்கையின் அடையாளமாக அவள் கருவுற சந்தோசம் இரட்டிப்பானது. இதற்கிடையே நந்தனும் மழலையர் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டான். சாருலதாவும் ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜியில் புகைப்படக்கலை டிப்ளமோவில் சேர்ந்துவிட்டாள்.

இவ்வாறு நாட்கள் என்னவோ நல்லபடியாக நகர்ந்து கொண்டிருக்க மாதவன் மயூரியின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டது. மாதவனுக்கும் மயூரிக்கும் திருமணம் எளிமையாய் நடந்தால் போதுமென்ற எண்ணம் தான். ஆனால் அவர்களைப் பெற்றவர்களுக்கோ தங்கள் புத்திரச்செல்வங்களின் திருமணம் சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டுமென்பது நீண்டகால கனவாக அல்லவா இருந்தது!

எனவே திரைத்துறை பிரபலங்களின் திருமணம் மற்றும் மற்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றில் இவர்களின் திருமண ஏற்பாடு ஒப்படைக்கப்பட்டது. மணமக்கள் குடும்பத்தினருக்கு திருமணத்தில் வந்து நிற்கும் வேலை மட்டும் தான்.

எனவே மயூரி வழக்கமாக கல்லூரிக்குச் செல்ல சாவித்ரியும் விஸ்வநாதனும் வைஷ்ணவி மற்றும் வாசுதேவனுடன் கலந்தாலோசித்து தங்கள் பக்கத்து சடங்கு சம்பிரதாயங்களை மாதவனின் தந்தை ரங்கநாதனிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டனர்.

அவரும் தன் மகள் மருமகனிடம் கலந்தாலோசித்துவிட்டு இரு குடும்பத்தினரின் சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பட்டியலை திருமண ஏற்பாட்டு நிறுவனத்தின் வசம் ஒப்படைத்துவிட்டார்.

மாதவனின் தமக்கை நேத்ராவும் கணவன் ராகவும் அவர்களின் புத்திரச்செல்வத்துடன் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இந்தியா வருவதாகச் சொல்லிவிட்டனர்.

அப்படி இருக்கையில் ஹேமலதாவோ தனக்குப் பிறக்கப்போகும் மகவைப் பற்றிய கனவுகளுடன் நாட்களைக் கழித்தாள். நந்தனும் அவளும் தங்கள் வீட்டிற்கு வரப்போவது குட்டிப்பாப்பா என்று முடிவே செய்துவிட்டனர்.

அதனால் மயூரியும் யசோதராவும் கூட குழந்தை பற்றி பேசினால் ‘உன் பொண்ணு’ என்றே அழைத்து வைத்தனர்.

அன்று வார விடுமுறை. யசோதராவும் மயூரியும் தத்தம் அன்னையரின் வற்புறுத்தலால் எண்ணெய் குளியலுக்குப் பின்னர் மதியவுணவை உள்ளே தள்ளிவிட்டு ஹேமலதாவிடம் வம்பளந்து கொண்டிருந்தனர்.

கௌதம் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தான். ஹேமலதாவும் நந்தனும் ஏதோ ரகசியம் போல கிசுகிசுவென பேசிக்கொண்டிருக்க அவளருகே அமர்ந்திருந்த சாருலதா அவனைச் சத்தமாகப் பேசும்படி கூறவும் நந்தன் உரத்தக்குரலில் அக்கேள்வியைக் கேட்டான்.

“குட்டிப் பாப்பாக்கு இலக்கியானு நேம் வைப்போமா மம்மி?”

கண்களை உருட்டிக் கேட்டவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட ஹேமலதா “என் செல்லக்குட்டி சொன்ன பேர் எவ்ளோ அழகா இருக்கு… இதையே வச்சிடுவோம்” என்றாள்.

“எனக்கும் இந்த பேர் பிடிச்சிருக்குடா” என்றார் சாந்தநாயகி. அவரருகே அமர்ந்திருந்த யசோதரா கேலியாக அவரைப் பார்த்தவள்

“ஐயோ ஆன்ட்டி டிபிக்கள் மாமியாரா நீங்க இவ கூட சண்டை போடணும்… புரியலயா? அது என்ன பெண்குழந்தைனு சொல்லுற… எனக்குச் சிங்கக்குட்டி மாதிரி பேரன் தான் பிறப்பான்” என்று உரத்தக்குரலில் நடித்துக் காட்ட மயூரியுடன் தமக்கையை ஒட்டி அமர்ந்திருந்த சாருலதா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“இவங்க அக்கா கூட சண்டை போட்டாங்கனா அது தான் இந்த உலகத்தோட எட்டாவது அதிசயம் யசோக்கா… மாமியாரும் மருமகளும் ஓவர் கொஞ்சல் குலாவல்.. அதை பாக்குறப்போ எனக்கு வரப்போற மகராசி என்ன பண்ண காத்திருக்காளோனு ஒரு சின்ன பயம் வருது” என்று போலியாய் கவலை காட்டினாள் அவள்.

அவளது தலையில் நறுக்கென்று குட்டிய ஹேமலதா “அவங்க வர்றப்ப பாத்துக்கலாம்… நீ அதுக்கு முன்னாடியே அவ இவனு மரியாதை இல்லாமலா பேசுற?” என்று முறைக்க பால்கனியிலிருந்து திரும்பிய கௌதம் புன்சிரிப்புடன் மனைவியைப் பார்த்தான்.

“இப்போ தான் சித்து கிட்ட பேசுனேன்… நானும் அவரும் கமிங் ஃப்ரைடே சுவாமிஜிய பாக்க போறோம்” என்று அவன் கூறவும் அங்கிருந்த பெண்களின் முகம் யோசனையாய் அவனை நோக்கி திரும்பியது.

அதில் முக்கியமானவள் யசோதரா.

என்ன தான் முக்தி ஃபவுண்டேசன் அந்த ருத்திராட்ச வழக்கில் அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்துவிட்டாலும் விவசாயிகளுக்கான திட்டத்தைச் செயல்படுத்தினாலும் யசோதராவுக்கு அவர்கள் மீது பெரியளவில் பிடித்தமில்லை. மயூரிக்கு அவ்வாறே!

“ஒர்க்கிங்டேல போய் பாக்குற அளவுக்கு அப்பிடி என்ன அவசரம்?” கேட்டவள் மயூரி. ஒரே கல்லூரியில் பணியாற்றுபவர்கள் அல்லவா!

“என் பொண்ணு பிறக்குறப்பவே அவரோட ஆசிர்வாதத்தோட பிறக்கணும்னு ஆசைப்படுறேன்… தட்ஸ் ஒய்” என்று தோளைக் குலுக்கியவன் ஹேமலதாவிடம்

“நான் குட்டிமாவுக்கு நேம் கூட செலக்ட் பண்ணிட்டேன்… என்ன பேர் தெரியுமா? ருத்ரா” என்றான் புன்னகையுடன்.

அதை கேட்டதும் நந்தனின் முகம் வாடியது. அவனது குட்டி தங்கைக்கு அவன் தேர்ந்தெடுத்த பெயர் கிடையாதாம்! வருத்தம்!

அவனது வருத்தம் பெண்களையும் பாதித்தது. அத்துடன் கௌதம் சொன்ன காரணம் யசோதராவின் மூன்றாவது கண்ணைத் திறந்துவிட்டது.

“ஸ்வாமிஜியோட பேரை வச்ச நேரம் நம்ம பொண்ணுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் ஹேமா”

ஹேமா புருவம் சுருக்கி “ஸ்வாமிஜி?” என்று கேள்வியாய் நோக்க

“சர்வருத்ரானந்தாவ பத்தி தான் பேசுறேன்… அவரோட பேரை தான் நம்ம பொண்ணுக்கு வைக்கப்போறேன்”

அந்தப் பதிலில் எரிச்சலுற்ற யசோதரா “இங்க பாரு கௌதம், ருத்ராங்கிறது சர்வேஸ்வரனோட பேர்… அந்த அர்த்தத்துல நீ வச்சேனா நோ ப்ராப்ளம்… ஆனா சாமியாரை மீன் பண்ணி தான் வைக்குறேனா உன்னை மாதிரி அடிமுட்டாள் எவனும் இல்ல… ஏன்டா உன் புள்ள செலக்ட் பண்ணுன பேரை விட எவனோ ஒரு சாமியார் உனக்கு முக்கியமா போயிட்டானா?” என்று பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்.

ஹேமலதாவோ கணவனை முறைத்து வைக்க சாருலதா அவனுக்குப் பரிந்து பேச வந்தாள். எல்லாம் சர்வருத்ரானந்தா அவளுக்காக ஆசிர்வதித்து கொடுத்த ருத்திராட்ச மாலையைப் பார்த்ததும் அவருக்குத் தன் மீது உண்டான பரிவில் உண்டான திடீர் பக்தி தான்.

“ஸ்வாமிஜி இதுல என்ன தப்பு பண்ணுனார் யசோக்கா?” என்று முதல் முறை அவருக்கு ஆதரவாகப் பேசினாள் சாருலதா.

ஹேமலதாவும் மயூரியும் திடுக்கிடலுடன் அவளைப் பார்க்க யசோதரா எரிச்சலுற்றாள்.

“வாயை மூடு… உங்க பக்தி பரவசத்தை எல்லாமே உங்க கூடவே வச்சுக்கோங்க… குழந்தை விசயத்துல தலையிட்டீங்கனா அவ்ளோ தான்” என்று கடுகடுத்தவள் அங்கே வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்ற நந்தனை தூக்கிக் கொண்டாள்.

“செல்லக்குட்டி நீ செலக்ட் பண்ணுன நேமையே குட்டிப்பாப்பாக்கு வச்சுடலாம்… சரியா?” என்று அவனது கன்னத்தில் முத்தமிட நந்தனுக்குக் கொண்டாட்டம். அவனைப் பெற்றவனோ முகம் வாட நின்றான்.

அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவனது செல்வமகளுக்கு இலக்கியா என்ற பெயரே இறுதியாக தீர்மானிக்கப்பட்டது. ஒருவேளை மகனாக அமைந்தால் கூட இலக்கியன் என்று தான் பெயர் சூட்டுவேன் என்று ஹேமலதா கூற நந்தனுக்குக் குஷி!

அதன் பின்னர் சொன்னது போல கௌதம், சித்தார்த், மாதவன் மூவரும் மேகமலைக்கு சென்றுவந்தனர். கௌதம் அவனது குழந்தைக்காகவும் மாதவன் அவனது திருமணத்திற்காகவும் சித்தார்த் அவனது திரைப்படத்திற்காகவும் அங்கிருந்த சதாசிவன் கோவிலில் மணமுருகி வேண்டிக்கொண்டனர்.

‘இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவோம்’ நிகழ்வில் பிசியாக இருந்ததால் சர்வருத்ரானந்தாவால் மாதவனின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாநிலை என்பதால் முன்னரே அவரது ஆசியைப் பெற திட்டமிட்டவன் கௌதமையும் சித்தார்த்தையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அங்கே சென்றான்.

சர்வருத்ரானந்தாவின் ஆசி கிடைத்ததோ இல்லையோ அவர்கள் வாழ்க்கை இனிதே நகர்வதற்கான ஆசியை அந்தச் சதாசிவன் அவர்களுக்கு அளித்துவிட்டார் என்பதே உண்மை!

மனநிறைவுடன் மூவரும் சென்னைக்குத் திரும்பினர். அவர்கள் திரும்பி வந்ததும் திருமணத்திற்கான நிகழ்வுகள் வரிசையாக ஆரம்பித்தது. இக்கால திருமணத்திற்கு இலக்கணமான ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் அலப்பறைகளுக்கு மாதவன் மயூரியின் திருமணமும் விதிவிலக்கல்ல.

சொன்னபடியே நேத்ராவும் ராகவும் இந்தியா வந்துவிட்டனர். வந்தவர்கள் மயூரியின் குடும்பத்தினருடன் இன்முகத்துடன் பேசி அவர்களின் குடும்ப ஜோதியில் ஐக்கியமாகிவிட்டனர்.

இரு குடும்பத்தினரும் எதிர்பார்த்த திருமணநாளும் வந்துவிட அன்று உற்றார் உறவினர், நண்பர்கள் புடைசூழ மயூரியைத் தன் மனையாள் ஆக்கிக்கொண்டான் மாதவன்.

சித்தார்த் பட்டுப்புடவையில் ஆரணங்காய் மின்னிய யசோதராவின் காதில் “இவங்களை எழுப்பிவிட்டுட்டு நம்ம உக்காந்துக்கலாமா? எப்பிடியும் இன்னும் கொஞ்சநாள்ல அதான நடக்கப்போகுது?” என்று கேட்டு வைக்க

“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல… ஆனா இங்க அங்கிள் இல்ல… ஆன்ட்டி மட்டும் தான் இருக்காங்க” என்று உதட்டைப் பிதுக்கினாள் யசோதரா.

“அஹான்! நீ சொல்லுற தௌசண்ட் அண்ட் எய்ட் ஹன்ட்ரெட் அண்ட் செவன்த் சாக்குப்போக்கு இது” என்று கூறியவனின் தோளில் சாய்ந்துகொண்டாள் அவள்.

பின்னர் திருமணச்சடங்குகள் தொடர்ந்தது. மணமக்களை ஒன்றாய் அமர்த்தி உணவருந்த வைத்த போது நண்பர்களின் கேலிகள் அவர்களைச் சிரிப்பும் நாணமுமாய் அந்தக் கணத்தில் கரைய வைத்தது.

“இனிமே நான் உங்கள மேம்னு கூப்பிடணுமா? அண்ணினு கூப்பிடணுமா?”

இந்திரஜித்தின் ஐயம் அனைவருக்கும் சிரிப்பை மூட்ட மயூரியோ “நீ யூ.ஜி முடிச்சிட்டல்ல… இனிமே நான் உனக்குக் கிளாஸ் எடுக்கப்போறதில்ல… சோ தாராளமா நீ என்னை அண்ணினு கூப்பிடலாம்” என்றாள்.

“அண்ணினு கூப்பிட்டா என்னோட அரியர் பேப்பர்சை கிளியர் பண்ணி விடுவிங்களா? யூஸ்வலா நீங்க தான் அரியர் எக்சாம் பேப்பர்சை கரெக்ட் பண்ணுவீங்கனு நவீன் சொன்னான்” என்று தன் காரியத்தில் கண்ணாய் கேட்டாய் இந்திரஜித்.

“டேய் இனிமே தான ரிசல்ட் வரும்? அதுக்குள்ள நீயே அரியர்னு முடிவு பண்ணிட்டியா?” மாதவன் முறைத்தபடி கேட்க

“எழுதுனவனுக்குத் தெரியாதா? எப்பிடியும் இன்கம்டாக்ஸ்ல நான் அவுட்” என்றவனின் முதுகில் சித்தார்த்தின் கரங்கள் அழுத்தமாய் பதிய

“அவ்வ்! ஏன்ணா அடிக்கிறீங்க?” என்று வலியில் முகம் சுளித்தான் இந்திரஜித்.

“இதுக்கே கத்துனா எப்பிடி? நீ மட்டும் அரியர் போட்டுப் பாரேன்” என்று மிரட்டிய சித்தார்த்தை வில்லனைப் போல பார்த்தான் இந்திரஜித்.

இத்தனை கலகலப்பான சம்பவங்களுடன் திருமண நிகழ்வு நிறைவுற்றது. அதன் பின்னர் மாதவனும் மயூரியும் தேனிலவிற்காக வெளிநாடு கிளம்பிவிட சித்தார்த்தின் திரைப்படமும் திரைக்கு வந்தது.

வழக்கம் போல படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்துவிட்டது. மாதவன் வெளிநாட்டிலிருந்து திரும்புவதற்குள் புதிய திரைப்படத்திற்காக தன்னை உடல் அளவில் தயார்ப்படுத்துவதில் பிசியானான் சித்தார்த். யசோதராவோ முக்தி ஃபவுண்டேசனை மறந்து அவளது வழக்கான புலனாய்வு ஊடகவியல் வேலைகளில் மூழ்கிப்போனாள்.

இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. வழக்கமான தேர்தல் போலன்றி இம்முறை ஆளுங்கட்சிக்கு இத்தேர்தலில் ஜெயிப்பது கௌரவப்பிரச்சனையாக அமைந்தது. கூடவே இத்தேர்தல் அவர்களுக்குச் சவாலும் தான். ஏனெனில் ஆளுங்கட்சி எவ்வளவோ முயன்றும் ஊழல் தொடர்பான ஆடியோக்களை அவர்களால் நியாயப்படுத்த முடியவில்லை.

அதுவே எதிர்கட்சியினருக்கு வெற்றியைத் தங்கள் பக்கம் திருப்பும் வாய்ப்பாகத் தோணியது. இருமுனைப் போட்டியாக தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கியது.

அதே நேரம் யசோதராவின் பெற்றோரும் சித்தார்த்தின் பெற்றோரும் ஒரு நன்னாளில் அவர்களது திருமணச்செய்தியைப் பேசி முடித்தனர்.

“பிரபல நடிகர் சித்தார்த்தின் திருமணம் – மணமகள் புலனாய்வு பத்திரிக்கையாளர்”, “திருமணத்தில் கனிந்த தமிழ்த்திரையுல நாயகனின் காதல்” என்றெல்லாம் தொலைகாட்சிகள் அவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பை வெவ்வேறு தலைப்புகளுடன் செய்தியாக வெளியிட்டன.

தேனிலவுக்குச் சென்றிருக்கும் மாதவனும் மயூரியும் இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முன்னரே இரு குடும்பத்தினரும் பேசி வைத்திருந்ததால் அவர்கள் இந்தியா திரும்பும் நாளுக்காக காத்திருந்தனர் அனைவரும்.

மழை வரும்☔☔☔