☔ மழை 10 ☔

ஒரு புகைப்படக்கருவியில் படமெடுக்கும் போது அதற்கு அடிப்படையான மூன்று மோட்கள் போர்ட்ரெய்ட் மோட், லேண்ட்ஸ்கேப் மோட் மற்றும் மேக்ரோ மோட். லேண்ட்ஸ்கேப் மோடில் புகைப்படம் எடுக்க குறைந்த வெளிச்சமே போதுமானது. மேக்ரோ மோடானது சிறிய பொருட்களை நுண்ணிப்பாக படமெடுக்க உதவும். பொதுவாக புல்லின் பனித்துளி, ஆபரணத்தின் ஒரு பகுதி இவையெல்லாம் உதாரணமாகும்.

                                         -Jim Miotke in his book ‘Better Photo Basics’

“இங்க பாருடா ஹேமா” என்று ஹேமலதாவை அழைத்தார் மயூரியின் அன்னை சாவித்திரி. அவள் புன்னகையுடன் திரும்பவும் புருவமத்தியில் ஒட்டியிருந்த அரக்கு வண்ண பொட்டிற்கு மேல் திருநீறை சிறு கீற்றாக பூசிவிட்டவர்

“இது மதுரை மீனாட்சியோட விபூதி… கல்யாணப்பொண்ணோட நெத்தில விபூதி இல்லனா பாக்க நல்லவா இருக்கு?” என்று கூறவும் ஹேமலதாவின் கண்கள் பனித்தது.

அன்று அவளது திருமணம்! அதுவும் அவள் காதலித்தவனுடன் இறைவன் சன்னிதானத்தில் நடக்கப்போகிறது. இதைக் காண பெற்றோரும் பாட்டியும் இல்லையே என்ற ஏக்கம் அவளுக்குள் பிரவாகமெடுத்த கணத்தில் தான் சாவித்திரி வந்து திருநீறு பூசிய நிகழ்வு நடைபெற்றது.

ஹேமலதாவின் ஏக்கமே கண்ணீராக உருமாற்றம் அடைய சாவித்திரி “ப்ச்! கல்யாணப்பொண்ணு கண் கலங்கக்கூடாது… அம்மா அப்பாவும் பாட்டியும் தெய்வமா இருந்து நீ நிறைஞ்ச மனசோட தாலி வாங்கிக்கிறத பாத்து சந்தோசப்படுவாங்க… இப்பிடி கண்ணைக் கசக்குனா அவங்களுக்குத் தானே கஷ்டமா இருக்கும்?” என்று அதட்டலாக மொழியவும் அவள் அழாமல் புன்னகைக்க முயன்றாள்.

சாவித்திரி அவளுக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழிக்கும் போதே இளஞ்சிவப்பு மென்பட்டில் அழகுதேவதையாக வந்து நின்றாள் சாருலதா. அவளுடன் ஹேமலதாவை அனுப்பிவைத்தவர் “பாத்து காரை ஓட்ட சொல்லு… ஸ்பீடா போகவேண்டாம்” என்று அறிவுரை சொல்ல

“டோண்ட் ஒரி ஆன்ட்டி… யசோக்காவும் மய்யூக்காவும் கார்ல தான் இருக்காங்க… அவங்க இருக்குறப்போ கார் நாப்பதை தாண்டி போயிடுமா? அவங்க போகத் தான் விட்டுடுவாங்களா?” என்று கேலி பேசினாள் அச்சிறுபெண்.

“வாயாடி! நாப்பதுல போனா உன் அக்காவுக்கு அறுபதாம் கல்யாணம் நடக்குற வயசுல தான் நம்ம கோயிலுக்கே போவோம்… ஏன்னா உங்க சிங்கார சென்னையோட டிராபிக் அப்பிடி” என்று சந்தடி சாக்கில் சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெருக்கடிக்கு ஒரு குட்டு வைத்தார் சாவித்திரி.

அவருடன் இருந்த வைஷ்ணவியோ “அட பேசிட்டே இருந்தா என்ன அர்த்தம்? மாப்பிள்ளை கிளம்பி போய் அரைமணி நேரம் ஆச்சு… இன்னும் என்ன கதை பேசி டைம் வேஸ்ட் பண்ணுறீங்க?” என்று அதட்டி இரு பெண்களையும் அனுப்பி வைத்தார்.

சிவப்பு நிறப்பட்டில் அழகு மயிலாக அசைந்து செல்பவளை வாஞ்சையுடன் பார்த்தபடி நின்ற சாவித்திரி தனது தமக்கையிடம் “நம்மளும் கிளம்புவோமாக்கா?” என்று கேட்க இரண்டு ஃப்ளாட்களையும் பூட்டிவிட்டு தங்களுக்காக காத்திருந்த காரில் கிளம்பினர் சகோதரிகள் இருவரும்.

கோயிலை அடைந்த போது அங்கே திருமணத்திற்கான உற்சாக மனநிலை நிரம்பியிருந்தது. பட்டு வேஷ்டி சட்டையில் நெற்றியில் சந்தனக்கீற்றுடன் கம்பீரமாக நின்ற கௌதம் தன்னுடன் நின்ற சாருலதாவிடமும் இந்திரஜித்திடமும் அவர்களின் கேலிக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஹேமலதாவோ அஞ்சனம் பூசிய விழிகளில் காதல் மின்ன இளையவர்களிடம் பேசி சிரிக்கும் கௌதமைப் பார்த்தபடி தன்னருகே நின்ற சாந்தநாயகியின் பேச்சைக் காதில் வாங்கியும் வாங்காமலும் கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள்.

நந்தன் அவளது கையைப் பிடித்து இழுத்து “மம்மி உங்களுக்கு எப்போ கல்யாணம் பண்ணுவாங்க?” என்று ஆவலுடன் கேட்ட போது தான் பூவுலகிற்கு திரும்பினாள் அவள்.

“இன்னும் கொஞ்சநேரத்துலடா கண்ணா” என்று அவன் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள் ஹேமலதா.

அவள் நந்தனுடன் கொஞ்சும் போது “ஹேமு நீயும் நந்துவும் போஸ் குடுங்கடி” என்று கூறியபடி பொன்னிற டிசைனர் ஜார்ஜெட் சேலையின் கொசுவத்தை பிடித்தபடி வந்து நின்றாள் யசோதரா. அவளருகே ஆகாயநீல வண்ண ஜார்ஜெட்டில் புன்னகை ஜொலிக்கும் வதனத்துடன் மயூரி!

இரு பெண்களின் பெற்றோரும் அடுத்த திருமணம் தங்கள் வீட்டுப்பெண்களுக்கு நடக்க ஆண்டவன் துணைபுரியட்டும் என மனதிற்குள் வேண்டுதல் வைத்துக்கொண்டனர். குறிப்பாக அவர்களைப் பெற்றெடுத்த வாசுதேவனும் விஸ்வநாதனும் தங்கள் பெண்கள் வெகுசீக்கிரமாக வளர்ந்துவிட்டனர் என வழக்கமான தந்தையாராக மனதிற்குள் அங்கலாய்த்து கொண்டனர்.

கௌதம் யசோதராவிடம் சித்தார்த்தும் மாதவனும் எப்போது வருவர் என்று கேட்க அவள் பதிலளிக்கும் முன்னர் முந்திக்கொண்ட மயூரி “ரங்கநாதன் அங்கிளும் வர்றார்ல… அதான் லேட் ஆகுது போல… நான் மேடிக்குக் கால் பண்ணுறேன்” என்று மொபைலில் அவனுக்கு அழைக்க ஆரம்பித்தாள்.

  அவள் மொபைலை எடுத்த போதே தூரத்தில் சித்தார்த்தும் மாதவனும் வருவதை இந்திரஜித் சுட்டிக்காட்டினான். அவர்களுடன் வந்த மூன்றாவது நபர் தான் மாதவனின் தந்தை ரங்கநாதன். முந்தைய தினம் மாலை இந்தியா வந்தவர் அமெரிக்க வாழ்க்கையின் போரடிப்பை தாங்க இயலாதவராக இந்தியாவிற்கு வந்ததும் மகன் காதலிக்கும் பெண்ணையும் அவளது குடும்பத்தினரையும் காண ஆவல் கொண்டார். அதன் விளைவு திருமண நிகழ்ச்சிக்கு மகனுடன் வந்துவிட்டார்.

அதே நேரம் மாதவனும் சித்தார்த்தும் வழக்கமான ஜீன்ஸ் பேண்ட் அலங்காரமின்றி வேஷ்டி சட்டையில் வந்திருந்தவர்களை அடையாளம் கண்டுபிக்க சிரமப்பட்டதாக இந்திரஜித் கலாய்க்க அங்கிருந்த அனைவரும் சிரித்துவைத்தனர்.

மயூரி ரங்கநாதனிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள மாதவனின் விழிகளோ அவளை விட்டு அகலவேயில்லை. சித்தார்த்தின் நிலையும் அதுவே.

எவ்வித ஆடம்பரமும் ஆரவாரமும் இல்லாமல் ஆண்டவனின் சன்னதியில் பெற்றோரும் பெரியவர்களும் கூடவே தங்களின் நலம் விரும்பும் நண்பர்களும் சூழ சுபவேளையில் மங்கலநாணை ஹேமலதாவின் கழுத்தில் அணிவித்து அவளைத் தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான் கௌதம்.

ஐயர் கொடுத்த அட்சதை ஆசிர்வாதமாக அவர்கள் மீது பொழிய ஹேமலதாவின் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கியது. சாருலதா தமக்கையின் கூந்தலில் சிக்கியிருந்த அட்சதையைத் தட்டிவிடும் பாவனையில்

“ஐ அம் ரியலி ஹேப்பி ஃபார் யூக்கா” என்று கூறிவிட்டு அவள் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் இந்திரஜித் மொபைலில் படமாக்கினான். பின்னர் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டனர் மணமக்கள் இருவரும்.

அது வரை நந்தனை வைத்திருந்த யசோதராவிடமிருந்து அவனை வாங்கிக்கொண்டான் கௌதம். சாந்தநாயகியிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கிய பிறகு அனைவரும் லோட்டஸ் ரெசிடென்சிக்குக் கிளம்பினர்.

காரிலேறும் முன்னர் சித்தார்த் யசோதராவைத் தன்னுடன் வரும்படி கண் காட்ட அவளோ தனது பெற்றோர் மற்றும் சித்தி சித்தப்பாவைக் காட்டிவிட்டு அவர்களுடன் செல்வதாகச் சொல்லிவிட்டு டாட்டா காட்டி காரில் அமர்ந்துகொண்டாள்.

அவளுடன் மயூரியும் அமர காரைக் கிளப்பியவள் தனது காரைத் தொடர்ந்து வந்த சித்தார்த்தின் காரை பார்த்துவிட்டு நமட்டுச்சிரிப்புடன் காரைச் செலுத்தினாள்.

சாவித்திரி அக்கா மகளிடம் சித்தார்த் மற்றும் மாதவனின் பெற்றோரிடம் எப்போது திருமண பேச்சுவார்த்தையை எடுப்பது என்று கேட்க அவளோ

“ரங்கநாதன் அங்கிள் மேடியோட வர்றார் தானே… இப்போவே இவளோட மேரேஜ் மேட்டரை பேசிமுடிங்க சித்தி… சித்துவோட பேரண்ட்ஸ் கிட்ட எப்போ பேசறதுனு அவன் தான் சொல்லணும்… அவனுக்கு இப்போ ஆடியோ லாஞ்ச் வேலை இருக்குனு சொன்னான்… இந்த மூவியோட ஒர்க் எல்லாம் முடிஞ்சு ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் மேரேஜ் பத்தி யோசிக்கலாம்னு அவன் சொன்னான்” என்று கூறிவிட பெரியவர்கள் தங்களுக்குள் ஏதோ தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்தனர்.

லோட்டஸ் ரெசிடென்சியை அடைந்த கார்கள் தரிப்பிடத்தில் நிற்க மணமக்களுடன் இறங்கிய அனைவரும் மின் தூக்கியை நோக்கி விரைய யசோதரா காரைப் பூட்டிவிட்டு விறுவிறுவென அவர்களைத் தொடரப் போனவள் சேலையின் கொசுவம் தடுக்கியதில் விழப்போனாள்.

ஆனால் எப்படியோ சமாளித்து நின்றவளின் கால் நரம்புகள் பிடித்துக்கொள்ள வலியில் முகம் சுளித்தாள் யசோதரா. அவள் காலைப்பிடித்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு அவளருகே ஓடிவந்த மயூரி “என்னாச்சு யசோ? கால் பிடிச்சுக்கிட்டா?” என்று கவலையுடன் கேட்க ஆமென தலையசைத்தாள்.

அதற்குள் அவர்களை நோக்கி வந்த மாதவனும் சித்தார்த்தும் என்னவாயிற்று என்று வினவ யசோதரா “கால் நரம்பு பிடிச்சிடுச்சு… வேற ஒன்னுமில்ல” என்றபடி காலை ஊன்ற முயன்றாள். அவளுக்கு நடந்த விபத்தால் நேர்ந்த பின்விளைவில் இந்த நரம்பு பிடிப்பான சியாட்டிகாவும் ஒன்று.

அவள் முயன்று காலை ஊன்றி நிற்க சித்தார்த் வேறேதும் யோசிக்காது அவளைத் தனது கரங்களில் ஏந்திக்கொண்டான். இதை மற்ற மூவரும் எதிர்பார்க்கவில்லை.

“ஐ கேன் மேனேஜ் சித்து… இறக்கிவிடு” என்று யசோதரா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கூற

“ப்ச்! இதையும் எவனாச்சும் வீடியோ எடுத்து போடுவான்னு பயப்படுறீயா? போட்டா போட்டுக்கட்டும் யசோ… ஐ டோண்ட் கேர்” என்று பிடிவாதக்குரலில் மறுத்துவிட்டு அவளைத் தூக்கிக்கொண்டு மின்தூக்கியை நோக்கி நடந்தான்.

அங்கே வந்த பிறகும் கைகளில் அவளை ஏந்தியிருப்பதைப் பார்த்த மாதவன் “டேய் லிப்ட் வந்தாச்சுல்ல… இறக்கிவிடுடா” என்று கலாய்க்க அப்போது தான் சித்தார்த்தின் விழிகள் படிக்கட்டை நோக்கியது.

“யசோ நம்ம கண்டிப்பா லிப்ட்ல தான் போயே தீரணுமா?” என்று விசமம் தொனிக்கும் குரலில் வினவியவனின் பேச்சு புரியாமல் மீண்டும் மூவரும் விழிக்க அவனோ படிகளை காட்டினான்.

அவன் சொல்லவருவதைப் புரிந்துகொண்ட மயூரியோ “சார் நாலாவது ஃப்ளோர் வரைக்கும் இவளை இப்பிடி தூக்கிட்டே எப்பிடி ஏறுவீங்க? ஹீரோனாலும் ஒரு நியாயம் வேண்டாமா சார்?” என்று அங்கலாய்க்க

“நீ வேற மய்யூ! அவன் இப்ப இருக்குற மூட்ல ‘கையில் மிதக்கும் கனவா நீ’னு பாட்டு பாடிகிட்டே இந்த அப்பார்ட்மெண்ட் முழுக்க சுத்தி வரக் கூட ரெடியா இருப்பான்… ஆப்டர் ஆல் நாலு மாடி ஏறிவர மாட்டானா?” என்று நண்பனுக்கு ஆதரவாகப் பேசினான்.

அவன் தூக்கிச் செல்ல தயாராக இருக்கலாம். ஆனால் யசோதரா சம்மதிக்கவேண்டுமே! திமிறி அவனது கரத்திலிருந்து இறங்கியவள் “கை நல்லா இருக்குறது உனக்குப் பிடிக்கலனு நினைக்கேன்… நான் லிப்ட்லயே வர்றேன் ஹீரோ” என்று கூறி அவனது ஹீரோயிசக்கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.

பின்னர் என்ன, நால்வரும் மின் தூக்கியின் உதவியால் நான்காவது தளத்தை அடைந்தனர். கௌதமின் ஃப்ளாட்டில் அனைவரும் குழுமியிருக்க யசோதரா மற்ற மூவரையும் அங்கே செல்லும்படி கூறினாள்.

“நான் ஆயின்மெண்ட் தேய்ச்சிட்டு வர்றேன்… இல்லனா வலிச்சிட்டே இருக்கும்”

அவள் சொன்னதைக் கேட்டு மாதவனும் மயூரியும் அகன்றுவிட சித்தார்த்தோ “நானும் வர்றேன் யசோ” என்றபடி அவளுடன் நகர்ந்தான்.

“நீ எதுக்கு என்னோட வர்ற?”

கேட்டபடியே கதவைத் திறந்தவளிடம் “உனக்கு ஹெல்ப் பண்ணலாமேனு வந்தேன்” என்று அமர்த்தலாக மொழிந்தபடி உள்ளே வந்தான். அவள் வலிக்கான களிம்பை பூசிவிட்டு வரும் வரை காத்திருந்தவன் திரும்பிய யசோதராவிடம் “இப்போ பெயின் பரவால்லயா?” என்று கேட்க

“அப்போ இருந்த அளவுக்கு சிவியரா இல்ல” என்று தோளைக் குலுக்கினாள் அவள்.

“நடக்கமுடியுமா? இல்ல தூக்கிட்டுப் போகவா?” கர்மசிரத்தையுடன் கேட்டவனின் விழிகளில் மட்டும் அந்த விசமத்தனம் இல்லையென்றால் யசோதரா அவனது பாசத்தில் உருகியிருப்பாள்.

ஆனால் அவள் தான் கவனித்துவிட்டாளே!

“ஃபிப்டி செவன் கேஜி ஒன்னும் பஞ்சு மாதிரி இலேசா இருக்காது சித்து” கேலியாக ஒலித்தது அவளது குரல்.

“நீ டூ ஹன்ட்ரெட் கே.ஜி வெயிட்னா கூட தூக்கிட்டுப் போக நான் ரெடி” என்றவனின் கரங்கள் அவளது இடையை வளைக்க விரல்களோ அழுத்தத்துடன் அவளது வெற்றிடையில் படிந்தது.

யசோதரா விதிர்விதிர்த்து விலக எத்தனித்த நொடியில் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன் “யூ லுக் கார்ஜியஸ் யசோ… டெய்லியும் ஷேரி கட்டுனா ரொம்ப வசதியா இருக்கும்” என்று கூற அவளோ பதில் சொல்ல வழியின்றி விழித்தாள்.

படபடத்த விழிகளில் மயில்தோகையாய் விரிந்த இமைகளின் குடையின் கீழே வெண்படலத்தின் நடுவே குறுகுறுவென அவனை நோக்கும் கருமணிகளின் ஈர்ப்பு அவனை எங்கேயோ இழுத்துச் செல்ல அந்த கருவிழிகளின் அழகில் மெதுமெதுவாய் தொலைந்தான் சித்தார்த்.

அவனுக்கு எப்படியோ யசோதராவுக்கு இதற்கு மேல் அவனது விழிகளைச் சந்திக்கும் தைரியமில்லை. இனம்புரியா நாணம் உண்டாக்கிய சிலிர்ப்பும் படபடப்பும் அவளை ஏறிட்டுப் பார்க்க விடவில்லை.

அவள் பார்வையை வேறு திசையில் திருப்பிய அடுத்த கணம் இடையில் அவனது விரல்களின் அழுத்தம் கூட படபடப்புடன் மீண்டும் அவனை ஏறிட்டாள் யசோதரா.

சித்தார்த் ஒரு கரத்திற்கு அவளது இடையிலிருந்து விடுதலை கொடுத்து அவளது வதனத்தில் பணியிலமர்த்தினான். அந்தக் கரத்தின் விரல்கள் அவன் கொடுத்த வேலையைச் செவ்வனே ஆற்றத்துவங்கியது. பொறுமையாய் முகவடிவை அளந்து முடிவில் அந்த விரல்கள் வந்து நின்ற இடம் யசோதராவின் செவ்விதழ்கள்.

விரல்களுக்கு அங்கே என்ன வேலை என அவனது மனசாட்சி இடித்துரைக்கவும் யோசனையின்றி அவளது இதழ்களை மெதுவாக முற்றுகையிட்டது அவனது இதழ்கள். இந்த ஜோடி தங்கள் இதழ் யுத்தத்தில் மூழ்கியிருக்க, இன்னுமொரு ஜோடிக்கான திருமண பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் இருக்க, அந்த நன்னாளில் கௌதமும் ஹேமலதாவும் நந்தன், சாந்தநாயகி மற்றும் சாருலதாவுடன் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து போயினர்.

மழை வரும்☔☔☔