☔ மழை 1 ☔

யோகா என்பது உடலையும் மனதையும் கட்டுக்குள் வைக்க பாரம்பரியமாக தொடர்ந்து வரும் ஒரு ஒழுக்கநெறியாகும். யோகாவை முறைப்படுத்தி அதற்கென சூத்திரங்களை வடிவமைத்த சிறப்பு பதஞ்சலி முனிவரையே சாரும். இவரை நவீன யோகாவின் தந்தை என்பர். அதே நேரம் இந்தியாவின் தலை சிறந்த யோக குருவான திருமலை கிருஷ்ணமாச்சாரியும் நவீன யோகாவின் தந்தை எனப்படுகிறார்.

முதல் பாகத்தின் சம்பவங்கள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து…

லோட்டஸ் ரெசிடென்ஸி…

காலை வேளையின் மெல்லிய பரபரப்பு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனது காலடி தடத்தைப் பதித்திருந்த நேரத்தில் அதன் F4 அப்பார்ட்மெண்டும் துயில் களைந்தது.

அதன் படுக்கையறைகளில் ஒன்றில் இன்னும் விழிக்காது புரண்டபடி இருந்தாள் யசோதரா. மூடிய கண்களுக்குள் ஆல்வினும் ராகேஷும் வந்து சென்றனர். ஆல்வினின் துப்பாக்கி அவளைக் குறிவைக்க அதற்குள் சித்தார்த் இடையில் புகுந்து கொள்ளவும் “சித்து!” என்று அலறியபடி எழுந்து அமர்ந்தாள் அவள்.

முகமெங்கும் வியர்வைத்துளிகள்! அணிந்திருந்த டீசர்ட்டின் புறங்கையால் முகத்தைத் துடைத்துக்கொண்டவள் கூந்தலை கோதியபடி படுக்கையிலிருந்து கீழே இறங்கினாள்.

மெதுவாக நடந்து பால்கனிக்கு வந்தவளின் கண்களின் முன்னே லோட்டஸ் ரெசிடென்சியின் பரபரப்பான காலை நேரக்காட்சிகள் விரிந்தது. அன்றைய தினம் வார விடுமுறை. எனவே குழந்தைகள் அங்கிருந்த பூங்காவில் விளையாடுவதும் அவர்களுக்கான பிரத்தியேக நீச்சல்குளத்தில் குட்டி மீன்குஞ்சுகளாக நீந்துவதும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

அதை பார்த்து இதழில் குறுஞ்சிரிப்புடன் நின்றிருந்தவளின் செவியில் “யசோ” என்ற குரல் விழவும் திரும்பிப் பார்த்தாள் யசோதரா. கையில் காபி கோப்பையுடன் வந்து நின்றாள் மயூரி.

“என்னடி மானிங்கே சைட் சீயிங்கா? உன் மொபைலுக்குச் சித்தார்த் கால் பண்ணிருக்கார்… நீ எடுக்கலனதும் டென்சன் ஆயிட்டார் மனுசன்”

அவள் சொன்னதைக் கேட்டதும் ஒரு நொடி யசோதராவின் கண்கள் ஒளிர்ந்தது. அவள் மருத்துவமனையிலிருந்து வந்த தினத்திலிருந்து அவளின் உடல் மற்றும் மனநிலையைப் பற்றிய கவலை சித்தார்த்தை பீடித்துவிட்டது.

 ஏனெனில் மோசமான கொலைமுயற்சியிலிருந்து தப்பித்திருக்கிறாள் அல்லவா! என்ன தான் ராகேஷும் ஆல்வினும் சிறையில் கம்பி எண்ணினாலும் அவர்களின் ஆட்கள் வெளியே உலாவுகிறார்களோ என்ற எண்ணம் அவனுக்கு இருந்து வந்தது தான் அவனது இந்தக் கவலைக்குக் காரணம்.

யசோதராவிற்கு அது புரிந்தாலும் சில நேரங்களில் அவனது இந்த அதிகப்படி அக்கறை அவளுக்குள் சிறு எரிச்சலை விதைக்கும். நான் என்ன குழந்தையா என்று அவளுக்குள் இருக்கும் அனுபவத்தில் முதிர்ந்த இளம்பெண் சிலிர்த்துக்கொள்வாள். விளைவு, அன்றைய தினம் முழுவதும் வாதம் விவாதமாகக் கழியும். நாள் முடிவில் இருவரில் ஒருவரின் மன்னிப்பு கேட்கும் நிகழ்விற்கு பிறகு சுமூகமான பேச்சுவார்த்தைக்குத் திரும்புவர் இருவரும்.

அப்படி பார்த்தால் இன்றும் அவளுக்கு எரிச்சல் தான் வந்திருக்க வேண்டும்! ஆனால் ஏனோ சித்தார்த்தின் இந்த நேசமும் அக்கறையும் இம்முறை அவளுக்குள் மகிழ்ச்சியை விதைத்தது.

யசோதரா அதே மகிழ்ச்சியான மனநிலையுடன் “நான் அவன் கிட்ட பேசிக்கிறேன் மய்யூ! நீ எனக்கும் ஒரு கப் காபி கொண்டு வந்திருக்கலாம்ல” என்று கேட்க

“பல் தேய்க்காம காபியா? ஒழுங்கா ஓடிப் போயிடு யசோ” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்டினாள் மயூரி.

“ஐயோ நான் பயந்துட்டேன்” என்று உதட்டைப் பிதுக்கி அழுவது போல நடித்துவிட்டு யசோதரா அவளது அறையை நோக்கி ஓடினாள்.

அங்கே போய் மொபைலை பார்த்தாலோ ஏகப்பட்ட தவறவிட்ட அழைப்புகள்! அழைத்தவனின் மூன்றாவது கண் இந்நேரம் திறந்திருக்குமோ என்ற சந்தேகத்துடன் அவனுக்கு அழைத்தாள் யசோதரா.

அதே நேரம் சவி வில்லாவில் சித்தார்த்தோ டம்பிள்சை புருவம் சுழித்தபடி ஏற்றி இறக்கிக்கொண்டிருந்தான்.

அவனுக்கு அருகே கிடந்த ஓய்வெடுக்கும் பெஞ்சில் படுத்து மொபைலை நோண்டிக்கொண்டிருந்த மாதவன் தன்னருகே இன்னொரு கவுச்சில் சாய்ந்திருந்த இந்திரஜித்திடம் கண்களால் பேசிக்கொண்டிருந்தான்.

அதை கவனித்த சித்தார்த் “என்னடா கண்ணாலயே பேசிக்கிறீங்க?” என்று அதட்டவும் எழுந்த மாதவன் தனது டீசர்ட்டை இழுத்து நேராக்கிக் கொண்டான்.

“ஒன்னுமில்ல மச்சி… சித்தார்த் சித்தார்த்னு ஒரு மானஸ்தன் இருந்தான்… நான் ஒரு பொண்ணை பாத்து ஜஸ்ட் சிரிச்சா கூட அவன் இடையில புகுந்து குட்டிக்கலாட்டா பண்ணி என்னை கமிட் ஆகவிடாம செஞ்ச வரலாறுலாம் இந்தச் சவி வில்லாவோட ஒவ்வொரு செங்கல்லயும் செதுக்கப்பட்டிருக்கு… ஆனா பாரேன், ரீசண்டா அந்த மானஸ்தன் தலைமறைவாயிட்டான்… நானும் யூ.எஸ்ல வந்ததுல இருந்து தேடுறேன் தேடுறேன் தேடிட்டே இருக்கேன்… அந்த மானஸ்தன் கண்ணுல படமாட்றான் மச்சி… பேசாம ஹைகோர்ட்ல ஹேபியஸ் கார்பஸ் போட்டுடுவோமா?” என்று படுதீவிரமாகக் கேட்டான் சித்தார்த்திடம்.

அவனருகே இருந்த இந்திரஜித் சத்தம் போட்டு நகைத்தவன் மொபைலை தவறவிட்டான். சித்தார்த் இருவரையும் இடுப்பில் கையூன்றி முறைத்துவிட்டு

“என்னை நீ கலாய்ச்சதுலயும் அதை கேட்டு இவன் சிரிச்சதுலயும் நான் ரொம்ப அவமானப்பட்டுட்டேன்டா… இனிமே உங்க ஆத்மா சாந்தி அடையுமா?” என்று கேலி விரவியக் குரலில் கேட்டான்.

மாதவனோ “ஐயே சாந்திங்கிறது ஓல்ட் டைப் நேமா இருக்கு மச்சி… நீ ட்ரெண்டியா வேற எதாச்சும் பொண்ணு நேம் சொல்லு” என்று கூறவும்

“அஹான்! சாந்தி வேண்டாம்… ஆனா மயூரிங்கிற நேம் ட்ரெண்டி தானுங்க… அதை ட்ரெண்டினு நம்புறீங்களா? இல்ல அவங்களுக்கே கால் பண்ணி தரட்டுங்களா?” என்றான் சித்தார்த்.

அவன் சொன்னது தான் தாமதம் மாதவன் அவனை முறைத்துவிட்டு இந்திரஜித்தைத் துணைக்கு அழைத்தான்.

“அடேய் இத்தனை நாள் நான் கமிட் ஆகாம இருந்ததுக்கு இவன் தான் காரணம்னு சொன்னேன்ல, அந்த வரலாறுல இன்னொரு செண்டென்சையும் ஆட் பண்ணிக்கோ, மாதவனோட லவ் ப்ரேக்கப் ஆகுறதுக்கும் உங்கண்ணன் தான்டா காரணமா இருப்பான்”

இந்திரஜித் நகைத்தபடி எழுந்தவன் “ஓயெம்ஜி! எப்பிடி கெத்தா இருந்த நீங்க இப்போ இந்த மாதிரி காமெடி பீசா மாறிட்டீங்களே… இது எல்லாம் பொல்லாத காதலால் வந்த வினை… இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோங்க அண்ணாஸ்! இந்த ஜித்துவோட வாழ்க்கைல லவ்ங்கிற வேர்டுக்கு எப்போவுமே நோ என்ட்ரி தான்” என்றான் அமர்த்தலாக.

இப்போது சித்தார்த்தும் மாதவனும் அவனை புருவம் உயர்த்தி ஆச்சரியத்துடன் நோக்கினர். ஏன் இவ்வாறு பார்க்கிறார்கள் என்று அவன் யோசிக்கும் போதே சித்தார்த் அவனை நெருங்கினான்.

நெருங்கியவன் மாதவனிடம் “டேய் மேடி பாத்தியாடா, இன்னும் முளைச்சு மூனு இலை கூட விடல… அதுக்குள்ள சார் லவ் பத்திலாம் சபதம் எடுக்கிறாராமா” என்று கேலியாகக் கூற

“ரேஸ், பார்ட்டினு இருந்தாலும் தம்பி நம்ம வளர்ப்புனு நிரூபிக்கிறான்டா” என்றான் மாதவன்.

இப்போது விழிப்பது இந்திரஜித்தின் முறை.

“பேசாம இவனை ருத்ராஜியோட ஆஸ்ரமத்துக்கு அனுப்பி வச்சிடுவோமா? காலம் முழுக்க பிரம்மச்சாரியா அங்கயே சேவகம் பண்ணிட்டு இருப்பான்” என்று சித்தார்த் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டம் தீட்ட இந்திரஜித் திருதிருவென விழித்தான்.

மாதவன் அவனது செய்கையில் சிரித்தவன் “சரி விடு சித்து… பையன் பாவம்டா, ஒரு ஃப்ளோல சபதம் போட்டா இவனுங்க நம்மளை சாமியார் ஆக்கிடுவானுங்களோனு புள்ளைக்குப் பயம் வந்துடுச்சு பாரு” என்று கிண்டலடிக்க சித்தார்த் அவனுக்கு ஹைஃபை கொடுத்தான்.

இருவரும் அவனை கலாய்த்து ஓய்வதற்குள் சித்தார்த்தின் மொபைல் இசைத்தது. தொடுதிரையைப் பார்த்ததும் அவனது முகம் மலர்ந்தது. இருவரையும் விட்டு விலகி தனியே சென்றவன் “யசோ டார்லிங் ஏன் நான் கால் பண்ணுனப்போ எடுக்கல?” என்று பவ்வியமாகக் கேட்டான்.

மறுமுனையில் இருந்தவளோ “நீ கால் பண்ணுனப்போ நான் எதாச்சும் வேலையா இருந்திருப்பேன்னு \ஏன் யோசிக்கவே மாட்ற சித்து?” என்று பதிலுக்கு வினாவைத் தொடுத்தாள்.

“ஓகே! என்ன வேலையா இருந்த?”

“நான் பண்ணுற எல்லா வேலையையும் உன் கிட்ட ரிப்போர்ட் பண்ணணுமா?”

சித்தார்த் அயர்ந்து போனான். இப்போது என்ன பதில் அளிப்பது? ஆமாம் என்றால் கட்டாயம் இன்று மாபெரும் விவாதமேடை ஒன்று நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இல்லை என்றாலோ பின்னர் ஏன் கேள்வி கேட்கிறாய் என்ற கேள்வி பிறக்கும். இப்போது மாட்டிக்கொண்டவன் அவனே!

ஆனால் யசோதராவுக்கு அன்றைய தினம் வாதம் செய்யும் எண்ணமில்லாததால் அவளே விட்டுக்கொடுத்தாள்.

“இட்ஸ் ஓகே! ஏதோ முக்கியமான விசயம்ங்கிறதால தான் நீ அத்தனை தடவை கால் பண்ணிருக்க… சொல்லு என்ன விசயம்?” என்று தண்மையாக வினவினாள் அவள்.

சித்தார்த் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணியபடி அவன் அழைத்த காரணத்தைக் கூற ஆரம்பித்தான்.

“இன்னைக்கு வளசரவாக்கம் யோகா ஸ்டூடியோல ருத்ராஜியோட யோகா ப்ரோகிராம் நடக்குது யசோ… த்ரீ டேய்ஸ் செசன்… அதை நீ மிஸ் பண்ணிடக்கூடாதேனு தான் கால் பண்ணுனேன்… நான் ஜே.எம் சார் கிட்ட என்ட்ரி ஃபீஸ் பே பண்ணச் சொல்லிடவா?”

மறுமுனையில் இருந்தவளுக்கு யோகாசனம் செய்யுமளவுக்கு என்றைக்குமே பொறுமை இருந்ததில்லை. அத்துடன் சித்தார்த் சொன்ன அந்த ‘ருத்ராஜி’ என்ற யோகா குரு சர்வருத்ரானந்தா தமிழகத்தின் முக்கியமான யோகா குருவில் ஒருவர். அவரது ‘முக்தி ஃபவுண்டேசன்’ என்ற அறக்கட்டளையின் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் யோகா மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இவையனைத்தையும் யசோதரா அறிவாள். அத்துடன் சித்தார்த் மனநிம்மதியற்று இருந்த சமயங்களில் அவரது வி.ஐ.பி யோகா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதையும் அவன் கூறி கேட்டிருக்கிறாள்.

அவரது யோகா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலே மனதுக்கு நிம்மதியும் உடலுக்குப் புத்துணர்ச்சியும் உண்டாகும் என்று பக்கம் பக்கமாக அவன் பேசியதில் சில சமயம் அவளது செவிப்பறை வீங்கியதும் உண்டு.

ஆனால் யசோதராவோ இதில் நாட்டம் கொண்டவள் அல்ல. அவளைப் பொறுத்தவரை மனம் சாந்தமடைய ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வழிமுறையைக் கையாள்வான். சிலருக்கு இசையைக் கேட்டால் மனம் அமைதியுறும். இன்னும் சிலருக்கோ அமைதியான சூழலில் உறக்கம் போட்டால் மனக்கொந்தளிப்பு அகலும். சிலரோ ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்டு மனநிம்மதியைப் பெறுவர்.

அதே போல சித்தார்த்துக்கு சர்வருத்ரானந்தாவின் தியானம் மற்றும் யோகப்பயிற்சியில் கலந்துகொண்டால் மனம் தெளிவடையும். எனவே தான் குண்டடி பட்ட பின்னர் உண்டாகும் அமைதியற்ற நிலை மாறுவதற்காக யசோதராவுக்கு அந்த யோகா நிகழ்வைப் பற்றி கூறினான் அவன்.

யசோதராவுக்கும் போய் பார்த்தால் தான் என்ன என்று தோணி விட “சரி சித்து…  நானும் மய்யூவும் சேர்ந்தே போறோம்… அப்புறம் இன்னொரு விசயம் என் என்ட்ரி ஃபீசை நானே பே பண்ணிக்கிறேன்” என்றாள்.

“ஃபர்ஸ்ட் செசன்லயே நீ வித்தியாசத்த ஃபீல் பண்ணுவ யசோ… உனக்கு நான் என்ட்ரி ஃபீஸ் பே பண்ணக்கூடாதா?”

“ப்ளீஸ் சித்து! என்னை சங்கடப்படுத்தாத… இன்னும் நமக்குள்ள எதுவும் கன்ஃபார்ம் ஆகல”

“கன்ஃபாம் ஆகாம தான் மேடம் அன்னைக்கு என்னை கிஸ் பண்ணுனிங்களா?” குறும்பாக ஒலித்தது அவனது குரல்.

யசோதரா மறுமுனையில் தலையிலடித்தவாறு “அது ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப் கிஸ்… அதை நீ தப்பா நினைச்சுக்கிட்டா நான் பொறுப்பாக முடியாது” என்று தனது பரபரப்பை மறைத்தபடி கூற அதை அவன் நம்பவேண்டுமே!

“சரிங்க மேடம்! உங்க என்ட்ரி ஃபீசை நீங்களே பே பண்ணிக்கோங்க… ஆனா த்ரீ டேய்ஸ் கண்டிப்பா அட்டெண்ட் பண்ணு யசோ… எனக்காக” என்று கடைசி வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான் அவன்.

“நீயும் வரலாம் தானே” ஆர்வத்துடன் கேட்டாள் யசோதரா.

“என்னை பாக்கணும்னு ஆசையா இருக்குதா டார்லிங்?”

“ஐயோடா! நீ வந்தா அந்த யோகா மெத்தட்லாம் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவியேனு நினைச்சேன்”

“எப்பிடியும் நீ உண்மைய சொல்லமாட்ட… லீவ் தட்… எனக்கும் வரணும்னு ஆசை தான்… ஆனா தேவையில்லாம கூட்டம் கூடும்… நானும் மேடியும் நெக்ஸ்ட் வீக் ருத்ராஜிய பாக்க முக்திக்குப் போறோம்… அவர் கூடவே ஒன் வீக் இருந்துட்டு தான் வருவேன்… சோ இப்போ நீ மட்டும் போயிட்டு வா”

“ஓகே! என்ட்ரி ஃபீஸ் எவ்ளோ?”

“செவன் ஹன்ட்ரெட் தான்”

“செவன் ஹன்ட்ரெட் குடுத்து போகணுமானு இப்போ என் மூளை கேக்குது சித்து”

“அப்போ அதை ஆப் பண்ணிடு யசோ… இந்த மாதிரி இடத்துக்குப் போகறப்ப மனசை மட்டும் ஆன் பண்ணுனா போதும்”

“ஓகே ஓகே! நான் கிளம்புறேன்”

“போனை வைக்கிறதுக்கு முன்னாடி பை சீ யூ, லவ் யூ இப்பிடி எதையும் சொல்லக்கூடாதுனு முன்னாடியே முடிவு பண்ணிவச்சிட்டுத் தான் கால் பண்ணுவியா யசோ?”

மறுமுனையில் யசோதராவின் இதழில் புன்னகை துளிர்த்தது.

“சரிங்க ஹீரோ! பை சீ யூ! போதுமா” என்றவள் அவன் கேலியாய் பதிலளிப்பதற்குள் அழைப்பைத் துண்டித்தாள்.

சிரித்தபடி போனின் தொடுதிரையைப் பார்த்தவளின் அருகே வந்தாள் மயூரி.

“என்னடி சிரிப்புலாம் ஒரு மார்க்கமா இருக்கு? சித்தார்த் சாருக்கு ஓகே சொல்லுற முடிவுக்கு வந்துட்ட போல?”

யசோதரா சிரிப்பை விழுங்கிவிட்டு “இல்லயே! அவனோட ஃபேவரைட் ஸ்வாமிஜியோட யோகா செஷன் வளசரவாக்கத்துல நடக்குதாம்… அங்க போயே ஆகணும்னு சாரோட ஆர்டர்” என்றாள்.

“ஓ! ஆர்டரா? அப்போ கேட்டு தான் ஆகணும்… அவர் ஆர்டர் போடுவார், நீங்க அதை ஏத்துப்பீங்க… ஆனா அந்த மனுசனோட லவ்வுக்கு ஓகே மட்டும் சொல்லமாட்டீங்க… என்னடி அக்கிரமம் இது?” என்று கேலியாய் கேட்டபடி காபி தீர்ந்த கோப்பையுடன் சமையலறையை நோக்கிச் சென்றாள் மயூரி.

“இது என்னவா வேணாலும் இருக்கட்டும்… நீயும் என்னோட யோகா செஷனுக்கு வரணும்… நான் போய் குளிச்சுட்டு ரெடியாகுறேன்… நோ ப்ரேக்ஃபாஸ்ட்” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தவள் குளித்து முடித்து வெண்ணிற முக்கால் ஸ்லீவ் டாப்பும் வெண்ணிற பட்டியாலாவும் அணிந்து கூந்தலை போனி டெயிலாக போட்டுக்கொண்டாள்.

புருவத்தின் மத்தியில் கடுகு போல ஒரு பொட்டினை ஒட்டிக்கொண்டவள் மொபைலை எடுத்துக்கொள்ளவில்லை. தனது வாலட்டை மட்டும் எடுத்துக்கொண்டாள்.

அதற்குள் மயூரியும் தயாராகியும் விட இருவரும் வீட்டின் கதவை அடைத்துவிட்டு வெளியேறிய தருணத்தில் எதிர்பட்டான் குட்டி நந்தன். இருவரையும் அண்ணாந்து பார்த்து தூக்குமாறு கைநீட்டியவனை தூக்கிக்கொண்டாள் மயூரி.

“என்னடா செல்லம்? நீயும் எங்களோட வர்றியா?”

“இல்ல ஆன்த்தி… நான் மம்மி கூட பார்லருக்குப் போறேன்”

“சரிடா நந்து குட்டி… நீ போய் மம்மி கூட இரு” என்று அவனை இறக்கிவிட்டவள் அவன் ஹேமலதாவின் ஃப்ளாட்டிற்குள் செல்வதைப் பார்த்துவிட்டு யசோதராவுடன் மின்தூக்கிக்குள் நுழைந்தாள்.

அப்போது அவளது மொபைல் சிணுங்கவும் முகம் மலர அழைப்பை ஏற்றாள் மயூரி. யசோதராவுக்கு யார் அழைப்பது என்பது தெரிந்துவிட்டதால் அவள் நமட்டுச்சிரிப்புடன் “நானே ட்ரைவ் பண்ணுறேன்… நீ கடலை வறுக்க ஆரம்பிடி” என்று கூற மயூரி அவளது கையில் கிள்ளிவிட்டுப் பேச ஆரம்பித்தாள்.

“சொல்லுங்க மேடி! நானும் யசோவும் போறோம்… நோ நோ.. ஏன் வேஸ்டா ஜே.எம் சாரை அலையவைக்கணும்? நாங்களே பாத்துக்குறோம்… ம்ம்ம்… பை”

கீழ்த்தளம் வந்துவிட இருவரும் மின்தூக்கியை விட்டு வெளியேறி தரிப்பிடத்தில் இருந்த காரில் ஏறினர். சொன்னது போல காரைக் கிளப்பியது யசோதரா தான். மயூரி தான் வாட்சப்பில் மூழ்கியிருந்தாளே! அவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு புன்முறுவலுடன் ஸ்டீயரிங்வீலை வளைத்தபடி லோட்டஸ் ரெசிடென்சியை விட்டு வெளியேறினாள்.

அவளும் சரி சித்தார்த்தும் சரி, இந்த யோகா நிகழ்வு தங்களது வாழ்வில் இனிவரப் போகும் பிரச்சனைக்குரிய நிகழ்வுகளுக்கு பிள்ளையார் சுழியாக மாறும் என்று அப்போது யோசிக்கவே இல்லை.

மழை வரும்☔☔☔