☔ மழை 8 ☔

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

பொதுவாக மக்கள் புகைப்படம் எடுத்து முக்கியமான தருணங்களை ரசிப்பதை தவறவிடுகின்றனர் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் புகைப்படமானது அந்த அழகான தருணத்தை இன்னும் பல வருடங்கள் கழித்தும் நினைவூட்டும் என்பதை மறந்துவிடுகின்றனர். அத்துடன் புகைப்படம் எடுப்பதற்கு தொழில்நுட்ப அறிவும், விலையுயர்ந்த புகைப்படக்கருவியும், புகைப்படவியலில் பட்டப்படிப்பும் கட்டாயம் தேவை என்ற கருத்தும் நிலவுகிறது. என்ன தான் விலையுயர்ந்த புகைப்படக்கருவிகள் துல்லியமான நேர்த்தியான புகைப்படங்களைக் கொடுத்தாலும் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞனுக்கு ரசனை தான் அடிப்படை தகுதியாகும்.

பீனிக்ஸ் சேனல், தமிழகத்தின் முக்கியமான பொழுதுபோக்கு சேனல்களில் ஒன்று. திங்கள் முதல் வெள்ளி வரை அந்தச் சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தமிழகத்தில் பெண்கள் பலருக்கும் வெங்காயமின்றி கண்களில் கண்ணீரை வரவைக்கும் வல்லமை படைத்தவை. வார விடுமுறை நாட்களில் அந்தத் தொடர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளும்.

ஐந்து நாட்கள் அழவைத்ததற்கு பரிகாரமாக சனி மற்றும் ஞாயிறுகளில் கேம் ஷோக்கள் என்ற பெயரில் இல்லத்தரசிகளின் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது, சிரிப்பே வராவிட்டாலும் ஏதோ நைட்ரஸ் ஆக்சைடு வைத்திருந்த குடுவையை முகர்ந்து பார்த்தது போல வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஜட்ஜ்கள் சிரிக்கும் கிரிஞ்ச் காமெடி ஷோக்கள், அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்ப்பது தவறு என்ற அடிப்படை நாகரிகத்தை துடைத்தெறிந்து போட்ட ரியாலிட்டி ஷோக்கள், இன்ன பிற டாக் ஷோக்கள் என பீனிக்ஸ் சேனல் ஜெகஜோதியாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது தமிழகத்தின் எத்தனையோ இல்லங்களில்.

அந்த தொலைகாட்சியின் பிரபல டாக் ஷோவான ‘சில்வர்ஸ்கிரீன் வித் ஹாரி’ என்ற நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தனர் சித்தார்த்தும் மாதவனும், கூடவே நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹாரி.

முதல் பாதி சித்தார்த்தின் திரைக்கு வரவிருக்கும் படத்தைப் பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட அதற்கு பிசிறின்றி பதிலளித்தான் சித்தார்த். அதை அடுத்து மாதவனின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கவிருக்கும் படம் பற்றிய கேள்விகளை இருவரிடமும் கேட்க ஆரம்பித்தார் அந்த ஹாரி.

“இந்த மூவி உங்களுக்கு ஏன் ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கலாமா சித்தார்த் சார்?”

அவர் கேட்டதும் ஆட்காட்டி விரலால் தன்னருகே அமர்ந்திருந்த மாதவனைக் காட்டினான் சித்தார்த்.

அவனோ “ஏன்டா நீயே சொல்லவேண்டியது தானே?” என்று கேட்டுவிட்டு “அவர் அப்பிடி தான்… அப்பப்ப ஹீரோ கெத்த காட்டுவாரு” என்று கலாய்க்க ஹாரியோ சிரித்தார்.

“இங்க மட்டும் தான் நான் கெத்து காட்ட முடியும்… ஷூட்டிங் ஸ்பாட்ல உன் ராஜ்ஜியம் தானே” என்று அப்பாவியாய் கூறி மீண்டும் அவரைச் சிரிக்கவைத்தான் சித்தார்த்.

“என்னமா நடிக்குறடா டேய்! ஏன் ஒரு மூவி குடுக்குறதுக்கு நீங்க ரொம்ப டைம் எடுத்துக்கிறீங்கனு கேட்டிங்கல்ல ஹாரி, இந்த மாதிரி மகாநடிகனை ஹீரோவா போட்டு படம் எடுக்கணும்னா ஃபுல் ஷெட்யூல் முடிக்க ஒரு யுகமே தேவைப்படும்… ஏதோ நான் கொஞ்சம் திறமைசாலிங்கிறதால ஒரு வருசத்துல முடிப்பேன்னு நம்புறேன்” என்றான் மாதவன் பரிதாபமான முகத்துடன்.

இந்தத் தோழர்கள் இருவரும் சேர்ந்து பேட்டியளித்தால் அதில் கலாய்ப்புக்கும் கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது. அத்துடன் இருவரும் ஒருவரையொருவர் வாரிவிட்டுச் சிரித்துக் கொள்வதும் வழக்கம். இது ஹாரிக்கே நன்றாக தெரியும். எனவே தான் அவர்களுடன் சேர்ந்து இலகுவாகப் பேட்டியைத் தொடர்ந்தார்.

விளையாட்டுப்பேச்சை முடித்துவிட்டு மாதவன் தனது புதிய படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

“இந்த மூவி எனக்கு ஏன் ஸ்பெஷல்னா எங்களுக்கு சினி ஃபீல்ட்ல முதல் வாய்ப்பு ஏற்படுத்திக்குடுத்த எஸ்.ஜி சார் மறுபடியும் சினி ஃபீல்ட்ல புரொடியூசரா அடியெடுத்து வைக்கப்போற மூவி இது… அவர் தான் எங்களுக்கு மென்டார்… தட்ஸ் ஒய்” என்றான் படு சீரியசான குரலில்.

அவன் அருகே அமர்ந்திருந்த சித்தார்த்தும் அதை ஆமோதித்தான்.

“யெஸ்… ஒரு பெரிய இழப்புக்கு அப்புறம் எஸ்.ஜி சார் எடுத்து வைக்குற முக்கியமான அடி இது… இதுல நாங்களும் அவரோட இருக்கப்போறோம்னு நினைக்கிறப்போவே ஐ ஃபீல் வெரி ஹாப்பி… கிட்டத்தட்ட ஃபர்ஸ்ட் மூவில இருந்த அதே டீம் தான் இதுல ஒர்க் பண்ணப்போறோம்… மறுபடியும் பழைய நாட்களை திரும்பிப் பாக்குற சான்ஸ் கிடைச்சிருக்கு… இவ்ளோ அருமையான காரணங்கள் இருக்குறதால இந்த மூவியோட டைரக்டர் ஒரு சாட்டர் பாக்ஸ்சா (Chatterbox) இருந்தாலும் பொறுத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்று கடைசிவார்த்தையில் மாதவனை வாரிவிட்டான் சித்தார்த்.

கலகலப்பாக நடந்த பேட்டிக்கு இடையே சாந்தகோபாலனின் தயாரிப்பில் உருவாகும் படத்திற்காக மாதவனும் சித்தார்த்தும் சம்பளம் வேண்டாமென மறுத்த தகவல் சமூகவலைதளங்களில் படுவேகமாக பரவியிருந்ததால் அதுவும் ஒரு கேள்வியாக வைக்கப்பட்டது.

“இது உண்மையா சார்?” என்று தொகுப்பாளர் கேட்க

“உண்மையானு கேக்குறப்போவே தெரியவேண்டாமா அது புருடானு” என்று நமட்டுச்சிரிப்போடு சொல்லிவிட்டு இரு தோழர்களும் ஹைஃபை கொடுத்துக்கொண்டனர்.

“ஓகே! இப்போ முக்கியமான கேள்வி சித்தார்த் சாருக்கு… ஒரு ஃபேனா நானே உங்க கிட்ட இருந்து இந்த அனவுன்ஸ்மெண்ட் எப்போ வரும்னு தான் காத்திருக்கேன்” என்று தொகுப்பாளர் கேட்க சித்தார்த்தின் மனசாட்சி “அலர்ட் ஆகிக்கோடா சித்தார்த்… இந்தாளு ஏதோ விவகாரமா கேள்வி கேக்கப்போறான்” என்று அவனை எச்சரித்தது.

அந்தத் தொகுப்பாளர் புன்சிரிப்புடன் “எப்போ சார் கல்யாணம்?” என்று கேட்டுவிட்டு வேகமாக “இதை நான் மட்டும் கேக்கல, உங்களோட ஃபேன்ஸ் ஒவ்வொருத்தரும் எதிர்பாக்குற செய்தி இது தான்” என்று அவனது ரசிகர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக்கொண்டார்.

மாதவன் “மாட்டுனியா மகனே? ஆன்சர் பண்ணு ராஜா” என்று கிண்டலடிக்க அவனது தோளில் பலமாக அடித்துவிட்டு தொகுப்பாளரிடம் பேச ஆரம்பித்தான் சித்தார்த்.

“கல்யாணம்ங்கிறது ரெண்டு பேர் சம்பந்தப்பட்டது… நீங்க என் கிட்ட மட்டும் இந்தக் கேள்விய கேட்டா என்ன நியாயம் ஹாரி?” என்று கேள்வியை அவனிடமே திருப்பிவிட்டான் அவன்.

“சோ உங்களோட இந்தக் கேள்விய அவங்க இன்னும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லலலைங்கிற மீனிங்ல எடுத்துக்கலாமா?” என்று மீண்டும் பந்தை அவனிடம் திருப்பிவிட்டார் தொகுப்பாளர் ஹாரி.

“தமிழ் இலக்கணத்துல பல்பொருள் ஒருமொழினு ஒரு டேர்ம் சொல்லுவாங்க… ஒரே ஒரு சொல் பல அர்த்தத்துல வர்றதை மென்சன் பண்ணுற டேர்ம் அது… அதே மாதிரி தான் என்னோட கேள்விக்கும் பல அர்த்தம் இருக்கு…  அதுல உங்களுக்கு எந்த அர்த்தம் வசதியோ அந்த அர்த்தத்தை எடுத்துக்கோங்க ஹாரி” என்று நைச்சியமாக பதிலளித்தான் சித்தார்த்.

“மொத்தத்துல மூவி அப்டேட் மட்டும் கேளுடா, பெர்சனல் லைப் பத்தி பேசாதனு சொல்லுறீங்க” என்று நமட்டுச்சிரிப்புடன் கூறிய அந்த ஹாரி அவர்களின் அடுத்த புராஜெக்ட் பற்றி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்.

“அடுத்து நீங்களும் மேடி சாரும் ஆன்த்தாலஜி மூவி ஒன்னு பண்ணுறதா சோஷியல் மீடியால ஒரு நியூஸ் வந்துச்சு… அது உண்மையா?”

இருவரும் ஆமென்று தலையசைத்தனர்.

“அப்கமிங் மூவியோட ஷெட்யூல் முடிஞ்சதும் அதை ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கோம்… இது நாலு ஷார்ட் ஃப்லீம் இருக்குற ஆன்த்தாலஜி மூவி… என்னோட பார்ட்ல நானும் சித்துவும் மட்டும் இப்போ ஆன் போர்ட்… டீம்ல யாருலாம் வருவாங்கனு இனிமே தான் ப்ளான் பண்ணணும்… நெட்ஃபிளிக்ஸ்ல ரிலீஸ் பண்ணுற முடிவுல தான் நாலு டைரக்டர்சும் இருக்கோம்” என்றான் மாதவன்.

கூடவே “ஏன் ஹாரி என் கிட்டலாம் எப்போ கல்யாணம்னு கேள்வி கேக்கமாட்டிங்களா?” என்று தொகுப்பாளரை வம்பிழுத்து வைத்தான் அவன்.

“ஏன் சார் கேட்டா மட்டும் நீங்க பதிலா சொல்லப்போறீங்க? சித்து சாரை விட பயங்கரமா கலாய்ப்பீங்க… தேவையா எனக்கு?” என்று தொகுப்பாளர் அங்கலாய்க்க

“கரெக்டா சொன்னீங்க ஹாரி… இவனாவது பெர்சனல் லைப் பத்தி மூச்சு விடுறதாவது” என்ற சித்தார்த் தொகுப்பாளருக்கு ஹைஃபை கொடுத்தான்.

எப்படி சித்தார்த்துக்கு அவனது ரசிகர்ளுக்கு பொய்நம்பிக்கை கொடுக்க பிடிக்காதோ அதே போல மாதவனுக்குச் சொந்த வாழ்க்கையைப் பற்றி ஊடகத்தில் பகிர பிடிக்காது. இதில் மயூரி அவனை விட ஒரு படி மேல்.

பிரபல சினிமா இயக்குனரின் காதலியாக அவள் அறிந்துகொள்ளப் பட்டால் எங்கே இயல்பான வாழ்க்கை மாறிவிடுமோ என்ற தயக்கம் அவளுக்கு. எனவே மற்றவர் கண்ணை உறுத்தும் அளவுக்கோ அல்லது அவர்கள் மட்டும் தனித்தோ என்றுமே சந்தித்துக்கொண்டதில்லை. அந்த விதத்தில் மயூரியும் மாதவனும் ஜாடிக்கேற்ற மூடி தான்.

கலந்துரையாடலுக்குப் பின்னர் கலகலப்பான அந்த டாக் ஷோ முடிவுக்கு வர இருவரும் ஹாரியிடம் கைகுலுக்கிவிட்டு ஸ்டூடியோவை விட்டு வெளியேறினர். செல்லும் முன்னர் ஒளிப்பதிவாளரிடம் “குட் ஜாப் ஜென்டில்மேன்” என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு தோழனைத் தொடர்ந்தான் மாதவன்.

“அப்பா உன் கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னார் மேடி… உனக்கு வேற எதும் ப்ளான் இல்லையே?”

இல்லையென தோளைக் குலுக்கினான் மாதவன். பின்னர் பீனிக்ஸ் சேனலின் ஸ்டூடியோவிலிருந்து கிளம்பிய சித்தார்த்தின் கருப்புநிற பி.எம்.டபிள்யூ மாதவனையும் அவனோடு சேர்த்து சுமந்துகொண்டு சவி வில்லாவை அடைந்தது.

அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இருவரும் வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்த நேரம் நாராயணமூர்த்தியின் கார் அங்கிருந்து சீறிப் பாய்ந்து வெளியேறியது. ஆனால் அன்றைய தினம் நாராயணமூர்த்தியின் வாகன ஓட்டியான கணேஷ் விடுமுறை எடுத்திருந்தார்.

எனவே சித்தார்த் யோசனையுடன் மாதவனைப் பார்த்தான். “இன்னைக்கு கணேஷ் அங்கிள் லீவ்… அப்பா இவ்ளோ ஸ்பீடா ட்ரைவ் பண்ணமாட்டாரே” என்று கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான்.

பெரிய வரவேற்பரையிலிருந்த வெறுமையான சோபாக்கள் நாராயணமூர்த்தி அங்கே இல்லை என்று தெரியப்படுத்த அதற்கு மாறாக நாராயணமூர்த்தியின் குரல் அவரது அறையிலிருந்து கேட்டது.

“நோ ப்ராப்ளம்… சிம்லால தானே ஷூட்டிங்… மொத்த யூனிட்டும் அங்க போகணுமா? இல்ல அதுக்கு வேற எதுவும் ப்ளான் வச்சிருக்காங்களா?”

அவரது நிறுவனம் தற்போது தயாரித்துக் கொண்டிருந்த திரைப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பைப் பற்றி செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் அவர்.

அப்படி என்றால் அந்தக் காரை கிளப்பிச் சென்றது இந்திரஜித்தாக தான் இருக்கவேண்டும் என்று தோழர்கள் ஊகித்துக்கொண்டனர். இருவரும் வெறுமையாய் கிடந்த சோபாக்களை ஆக்கிரமித்துக்கொண்டனர்.

செல்பேசியுடன் அங்கே வந்த நாராயணமூர்த்தி மகனையும் மாதவனையும் பார்த்துவிட்டு அவர்களுக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்தார். அமர்ந்தவர் கேட்டது என்னவோ ஆன்த்தாலஜி படத்தைப் பற்றி தான்.

“நெட்ஃபிளிக்ஸ்ல ரிலீஸ் பண்ணுனா மூவி நிறைய ஆடியன்சை ரீச் பண்ணும் அங்கிள்… ஆனா எங்களுக்கு புரொடியூசர் சிக்கல… பிகாஸ் இதுல இருக்குற நாலு டைரக்டர்சும் கோலிவுட்ல டாப் மோஸ்ட் டைரக்டர்ஸ்… காஸ்டிங்கும் அதே போல தான் இருக்கும்… இதை சமாளிக்கிற புரொடியூசர் எங்களுக்கு வேணும்” என்றான் மாதவன்.

நாராயணமூர்த்தி அவன் கூறுவதைக் கவனித்துவிட்டு “நாலு டைரக்டர்ஸ் இண்டிபெண்டண்ட் மூவியா எடுக்கப்போறீங்க… பட் ஒன்னொட ஒன்னு தொடர்பு இருக்குற மாதிரி கதைய கொண்டு போறீங்க… ஓகே! நாலு பேரோட ஸ்க்ரிப்டும் தயார் ஆயிடுச்சுனா ஃபார்வேர்ட் பண்ணுங்க… படத்தை நான் புரொடியூஸ் பண்ணுறேன்” என்றார்.

மாதவனும் சித்தார்த்தும் ஒரு கணம் திகைத்தனர். என்ன தான் மகன் மற்றும் அவனது தோழன் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்திருந்தாலும் அவர்களுடன் இதுவரை படம் பண்ணும் எண்ணம் அவருக்கு வந்ததே இல்லை.

கற்றுக்குட்டிகளுடன் சேர்ந்து பணியாற்றும் அளவுக்கு இன்னும் தனக்கு முதிர்ச்சி வரவில்லை என்பார். அப்படிப்பட்டவரா தங்களைப் போல இன்னும் மூன்று இளையதலைமுறையுடன் சேர்ந்து செய்யும் படத்தை தயாரிக்க விரும்புவதாக கூறுகிறார் என்பதே தோழர்கள் இருவரும் திகைத்து போனதற்கு காரணம்.

“என்னடா பாக்குறீங்க?” – நாராயணமூர்த்தி.

“இல்லப்பா நீங்க யங்ஸ்டர் கூட படம் பண்ணமாட்டீங்களேனு தான் யோசிக்கிறோம்” – சித்தார்த்.

“நான் என் மனசை மாத்திக்கிட்டேனு வச்சுக்கோ… சரி எப்போ ஷூட்டிங் ஆரம்பிக்கப் போறீங்க?” என அடுத்து மாதவனிடம் வினவ

“எஸ்.ஜி சாரோட மூவி வேலை முடிஞ்சதும் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் அங்கிள்… மத்த மூனு பேரும் இன்னும் த்ரீ மன்த்ஸ்ல ஆரம்பிக்கலாம்னு ப்ளான்” என்று தங்களது திட்டத்தை அவரிடம் விளக்கினான் மாதவன்.

“ம்ம்… ஓ.கே… அவங்களோட ஸ்க்ரிப்டை கேட்டுட்டு அவங்க சேலரி டீடெய்லை பி.ஏ மூலமா கவனிச்சிக்கிறேன்… நீங்க ரெண்டு பேரும் சேலரி வாங்கிக்க மாட்டீங்கனு தெரியும்” என்று கூற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழித்தனர்.

சித்தார்த் அவசரமாக “நாங்க எங்கப்பா சம்பளம் வேண்டாம்னு சொன்னோம்?” என்று கேட்க

“நீங்க ரெண்டு பேரும் சாந்தகோபாலனோட பேனர்ல எடுக்கப்போற மூவிக்கு சம்பளம் வேண்டாம்னு சொல்லிட்டீங்கனு அவரே என் கிட்ட சொன்னார்” என்றார் நாராயணமூர்த்தி அமர்த்தலாக.

மாதவனோ “அங்கிள் எஸ்.ஜி சார் ரொம்ப நாள் கழிச்சு பண்ணுற படம்… அதோட அவர் எங்களுக்கு ஃபர்ஸ்ட் சான்ஸ் குடுத்தவர் அங்கிள்… அதனால சேலரி வேண்டாம்னு சொன்னோம்… ஆனா நீங்க…” என்று இழுக்க

“சரிப்பா சரிப்பா… சும்மா தான் சொன்னேன்… தொழில்ல கறாரா இருக்குறது நல்லது தான்” என்று கூறியவர் மற்ற விவரங்களை தனது உதவியாளர் தெரிவிப்பார் என்று பேச்சை முடித்துக்கொண்டார்.

எப்படியோ சொந்த மகனை வைத்து ஒரு படம் கூட எடுக்காத தயாரிப்பாளர் என்ற பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்த நிம்மதி அவருக்கு.

சித்தார்த் அப்போது தான் நினைவு வர “உங்க காரை எடுத்துட்டுப் போனது யாருப்பா?” என்று வினவினான்.

“ஜித்து தான் எடுத்துட்டுப் போறான்டா… அவன் கார்ல சின்ன ஃபால்ட்… அதோட அவன் ஃப்ரெண்டோட அக்காவுக்கு மேரேஜாம்… அதான் நம்ம யசோதராவோட ஃப்ரெண்ட்… அந்தப் பொண்ணு ஷாப்பிங் போறப்போ இவனையும் வரச்சொன்னானு போயிருக்கான்… எப்பிடியோ வீட்டுக்கு வரப்போற ரெண்டு மருமகளும் மகன்களோட செலக்சனா தான் இருக்கும் போல” என்றார் நாராயணமூர்த்தி கேலியாக.

ஆனால் சித்தார்த்தோ “அவன் ஸ்பீடா ட்ரைவ் பண்ணிட்டுப் போறான்பா” என்று கவலையுடன் கூற

“அவன் சின்ன பையன் இல்ல சித்து… இருபது வயசு ஆகுதுல்ல… அதுக்கு ஏத்த பொறுப்பு அவனுக்கும் இருக்கும்டா… நீ வீணா அவனை நினைச்சு கவலைப்படாத… உன் ஃபீல்ட்ல நீ கவனம் செலுத்து… இப்போ நீ வெறும் ஆக்டர் மட்டுமில்ல, புரொடியூசரும் கூட” என்று இந்திரஜித் பற்றிய பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் நாராயணமூர்த்தி.

இரு நண்பர்களும் சரி சரியென தலையை உருட்டிவிட்டு சித்தார்த்தின் அறையை அடைந்தனர். அங்கே சென்று அக்கடாவென அமர்ந்த சில நிமிடங்களில் மாதவனுக்கு மயூரியிடமிருந்து அழைப்பு வந்தது.

பொதுவாக கல்லூரி நேரத்தில் அவனிடம் அவள் பேசுவதில்லை. எனவே யோசனையுடன் அழைப்பை ஏற்றவன் “என்னாச்சு மய்யூ டார்லிங் திடீர்னு என் நியாபகம் வந்து கால் பண்ணுனியா?” என்று குறும்பாக வினவ

“உங்க நியாபகம் வந்து கால் பண்ணல… ஜித்து இன்னைக்கு காலேஜுக்கு வரல… ஏன்னு கேக்க கால் பண்ணுனேன்” என்றாள் மயூரி.

“அவன் சாருவோட ஷாப்பிங் போயிருக்கானாம்… இப்போ தான் நாராயணன் அங்கிள் சொன்னார்”

“வாட்? இன்னைக்கு அவனுக்கு ஃபைனல் புராஜெக்ட் க்ளாஸ் இருக்கு… அவனோட கைட் என் கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணுறார் மேடி… இன்னைக்கு அவனோட டீம் எல்லாரும் சேர்ந்து டாக்குமெண்ட்டோட ப்ரிண்டிங் ப்ராசசை கவனிச்சிட்டிருக்காங்க… ஆன அவன் வரல… இந்த வருசம் க்ரூப் புராஜெக்ட்… ஆனா அவன் பீ.ஜி போனா தனியா புராஜெக்ட் பண்ணணும்… க்ளாஸ் அட்டெண்ட் பண்ணாம அவனுக்கு இந்த டெக்னிக்லாம் எப்பிடி புரியும்?” என்று சரமாரியாக கேள்விகளை சிதறடித்தாள் மயூரி.

“மய்யூ நடந்த கலவரத்துல நாங்க யாருமே அவனை கவனிக்கல… இப்போ சாருவுக்கு லீவ் வேற… அதான் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டிருக்கான்” என்றான் மாதவன் அமைதியாக.

மறுமுனையில் நிதானித்த மயூரிக்குச் சாருலதாவைக் கண்டிக்க வேண்டிய கட்டாயமும் புரியவர “நான் சாரு கிட்ட பேசுறேன்… நீங்க ஜித்துவ ஸ்டடீஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணச் சொல்லுங்க… செமஸ்டர் ஹாலிடேல ஜாலியா ஊர் சுத்தட்டும்” என்று தனது பேச்சை முடித்துக்கொண்டாள்.

இவர்கள் இங்கே பேசுவது எதையும் அறியாது சாருலதாவும் இந்திரஜித்தும் திருமணத்திற்கான ஆடைத்தேர்வில் உற்சாகமாக ஈடுபட்டிருந்தனர்.

“மேரேஜுக்கு நான் ஷேரி கட்டலாம்னு இருக்கேன் ஜித்து”

“ஐயே! அது உனக்கு நல்லாவே இருக்காது சாரு… டெடி பியருக்கு யாராச்சும் ஷேரி கட்டுவாங்களா?”

தன்னைக் கேலி செய்தவனின் தலையில் நறுக்கென்று குட்டியவள் விற்பனை பிரதிநிதியிடம் “அண்ணா நீங்க லைட் வெயிட் சில்க் ஷேரிஸ் எடுத்துப் போடுங்க” என்று கூற

“நம்ம ஃப்ரெண்ட் கொஞ்சம் அழகா தெரியட்டுமேனு அக்கறைல சொன்னா நீ என் தலையில தபேளா வாசிக்கிற… நல்லதுக்குக் காலமில்ல ஜித்து” என்று தன் தலையைத் தடவியபடி புலம்பினான் இந்திரஜித்.

சாருலதா நமட்டுச்சிரிப்புடன் விற்பனை பிரதிநிதி குவித்த புடவைகளை ஆராய ஆரம்பித்தாள்.

இறுதியாக முகூர்த்தத்திற்கு இளஞ்சிவப்பில் ஒரு மென்பட்டுப்புடவையும், வரவேற்பிற்கு க்ரீம் வண்ணமும் அரக்குநிறமும் கலந்த லெஹங்காவும் தேர்ந்தெடுக்கப்படவே அந்த லெஹங்காவை டிரையல் ரூமில் அணிந்து பார்க்க சென்றாள் சாருலதா.

இந்திரஜித் தோழிக்காக காத்திருந்தான். ஆனால் சென்றவள் போன வேகத்தில் திரும்பி வந்தாள். வந்தவளின் முகமெங்கும் சிவந்திருந்தது. மூக்கு கோபத்தில் விடைக்க தன்னை இரு இளைஞர்கள் அசிங்கமாக கிண்டல் செய்வதாக கூறினாள்.

“நீ சும்மாவா விட்ட சாரு?”

“நான் திட்டுனேன் ஜித்து… ஆனா அவனுங்க சிரிக்கானுங்க… நீ வந்து அவனுங்க மூஞ்சிய பஞ்சராக்கி விடு” என்றாள் அவள்.

“நானா? ஆர் யூ சீரியஸ் சாரு?” சந்தேகத்துடன் வினவினான் இந்திரஜித்.

“என்னடா இப்பிடி கேக்குற? என் க்ளாஸ் மேட் வினி உனக்கு புரூஸ்லீனு நிக்நேம் வச்சிருக்கா தெரியுமா? அந்த நிக்நேம் வச்சதுக்காகவாச்சும் நீ அவனுங்களை புரட்டியெடுக்கணும்” சீற்றத்துடன் உரைத்தாள்.

“இவ்ளோ கோவப்படுற அளவுக்கு அவனுங்க என்ன சொன்னானுங்க?”

சாருலதா ஒரு கணம் தயங்கியவள் பின்னர் “என்னை ஐட்டம்னு சொன்னாங்கடா… எனக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியும்… உனக்குத் தெரியாதுனா…” என்றவளிடம் போதுமென்று கையுயர்த்தி தடுத்தவன் அவளை அழைத்துக்கொண்டு அந்த இளைஞர்கள் நின்ற இடத்திற்கு சென்றான்.

அவர்கள் இந்த இருவரையும் நக்கலுடன் பார்க்க இந்திரஜித் அவர்களிடம் “இவளை கிண்டல் பண்ணுனீங்களாடா?” என்று கேட்க

“ஆமா! அதை கேக்க நீ யாரு ஹீரோவா? டேய் பொண்ணு முன்னாடி புளிப்பு காட்டாதடா” என்று அவர்களுள் ஒருவன் ஏளனத்துடன் உரைக்க இந்திரஜித் பொறுமையிழந்து அவனை பளாரென அறைந்தான்.

மற்றொருவன் அதைப் பார்த்து இந்திரஜித்தைத் தாக்க வர அவனது கன்னத்திலும் இந்திரஜித்தின் கரம் வேகமாக பதிந்தது.

பின்னர் இருவரும் அவனைத் தாக்க வர கார் ரேசிங்கிற்காக உடற்பயிற்சியில் இறுகியிருந்த இந்திரஜித்தின் பலம் அன்று தான் அவனுக்கே தெரிந்தது.

இருவரையும் புரட்டியெடுத்தவனை பின்னர் கடை சிப்பந்திகள் வந்து தடுத்தனர். அந்த இருவரும் காவல்துறையில் புகாரளிப்போம் என்று மிரட்ட இந்திரஜித் கொதித்துப்போனான்.

“டேய் ஒரு பொண்ணை பாத்து ஐட்டம்னு கமெண்ட் பண்ணுனா உங்களை அடிக்காம கொஞ்சுவாங்களா? அது என்னடா ஐட்டம்? நீங்க ஐட்டம்னு சொல்லுற அந்தப் பொண்ணுங்களோட நிலமைக்கு உங்களை மாதிரி அசிங்கம் பிடிச்ச நாலு ஆம்பளை தான் காரணமா இருப்பான்… மனசு முழுக்க வக்கிரத்தை வச்சுக்கிட்டு என் ஃப்ரெண்ட்டை நீ தரக்குறைவா பேசுவியா? பொது இடம்ங்கிறதால மூஞ்சிய உடைச்சதோட விட்டுட்டேன்… இதுவே வேற இடமா இருந்தா கொன்னுருப்பேன்” என்று கடுஞ்சினத்துடன் உரைக்க அவனின் ஆவேசமுகமும் அந்த இரு இளைஞர்களின் காயப்பட்ட முகமும் ஒரு போனில் வீடியோவாகப் பதியப்பட்டுக் கொண்டிருந்தது.

கடை சிப்பந்திகள் அவர்களை விலக்கிவிட இந்திரஜித் புருவச்சுழிப்புடன் நின்றான். சாருலதாவோ “வாவ்! எவ்ளோ அழகா சண்டை போட்ட தெரியுமா? அவன் என்ன கேட்டான்? நீ என்ன ஹீரோவானு கேட்டான்ல… இனிமே நான் கெத்தா சொல்லுவேன், யூ ஆர் மை ஹீரோ” என்று நண்பனை பாராட்டிவிட்டு அவனது முகம் வழித்து நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள்.

இந்திரஜித்துக்குக் அவள் பேசிய விதத்தில் கோபம் குறைந்து சிரிப்பு பீறிட்டது. சாருலதாவுக்கோ தன் நண்பன் தனக்காக சண்டையிட்ட கர்வம். இருவரும் முகம்கொள்ளா புன்னகையுடன் அந்தக் கடையை விட்டு வெளியேறினர். ஆனால் அன்றைய தினம் மாலையிலேயே “பிரபல தயாரிப்பாளரின் மகனும் பிரபல நடிகரின் சகோதரனுமான கார் பந்தய வீரரின் அடாவடி” என்ற தலைப்புடன் செய்தி தொலைக்காட்சிகள் அந்தக் கடையில் நடந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அந்த வாரத்திற்கான டி.ஆர்.பியைச் சமன் செய்துகொள்ளும் என்பதை அவர்கள் அப்போது அறியவில்லை.

மழை வரும்☔☔☔