☔ மழை 49 ☔ (Pre-final)

2007ல் ஸ்காட் க்ரே என்பவரை சி.ஈ.ஓவாக கொண்டு ஏற்படுத்தப்பட்ட வேர்ல்ட் போட்டோகிராபி ஆர்கனிசேஷன் புகைப்படக்கலைக்கான உலகளாவிய அமைப்பாகும். கடந்த ஐம்பதாண்டுகளாக புகைப்படக் கலைஞர்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உலகளவில் புகைப்படக்கலைக்காக நடத்தப்படும் மிகப்பெரிய போட்டியான சோனி வேர்ல்ட் போட்டோகிராபி அவார்ட்ஸ் நிகழ்வை நடத்தி வருகிறது.

முக்தி ஃபவுண்டேசன் மீதான விசாரணை சிறப்பாக ஆரம்பித்தது. அதன் மேகமலை ஆசிரமம் மட்டுமன்றி தமிழ்நாடெங்கும் இருந்த அதன் யோகா ஸ்டூடியோக்கள் அனைத்திலும் கணக்கு வழக்குகளுக்கான ஆவணங்களை தோண்டு துருவ ஆரம்பித்தனர் வணிகவரித்துறையினர்.

இதற்கிடையே விசாரணைக்கென காவல்துறை கஸ்டடியில் எடுக்கப்பட்ட முக்தியின் முக்கிய பிரமுகர்களில் சிலர் அப்ரூவராக மாறிவிட ருத்ராஜிக்குப் பதற்றம் பீடிக்க ஆரம்பித்தது.

அதில் முக்கியமானவர் ரவீந்திரன். தனது வலக்கரமாக செயல்பட்டு வந்த மனிதர் இப்படி திடீரென அப்ரூவர் ஆனதில் மிகவும் அதிர்ந்த ருத்ராஜி தீவிர யோசனையில் ஆழ்ந்தார். அதற்கு காரணம் அவரது மைந்தனின் மறைவு என்பதை அறிந்ததும் முகுந்த விசயத்தில் தான் கொஞ்சம் நீக்குப்போக்காக நடந்திருக்கலாமா என்ற காலங்கடந்த ஞானம் அவருள் உதயமானது என்னவோ உண்மை!

காவல்துறை கட்டுபாட்டில் இருந்த ரவீந்திரன் தான் முக்தியில் சேர்ந்த காலத்திலிருந்து நடந்த அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துவிட்டார். ருத்ராஜிக்கு எதிராக அவரளித்த வாக்குமூலம் விசாரணை குழுவிற்கு வலு சேர்த்தது.

இதற்கிடையே சென்னைக்கு வந்து சேர்ந்தான் முகுந்த். அங்கே வந்ததும் அவன் செய்த முதல் காரியமே காவல்துறையின் விசாரணை வளையத்தில் இருந்த ரவீந்திரனை சந்தித்தது தான்.

என்றோ இறந்துவிட்டதாக கருதிய மைந்தன் கண் முன் வந்து நின்றதும் முதலில் பேச்சு மூச்சற்று போனார் ரவீந்திரன். யாருடைய இறப்பு அவரை மனம் திருந்த வைத்ததோ அவனே இன்று கண் முன் வந்து நிற்கவும் சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனவர் அவனைக் கட்டியணைத்து கண்ணீர் பெருக்கினார்.

முகுந்த் அவரது கண்ணீரைத் துடைத்தவன் “அப்பா புனே ஆஸ்ரமத்துல இருக்குற வாலண்டியர்சே என்னை கொல்ல பாத்தாங்க… அவங்களுக்கு தமிழ்நாட்டுல இருந்து வந்த யாரோ ஒருத்தனுக்குக் கீழ வேலை பாக்க பிடிக்கல… அவங்க கணக்குல பண்ணுன குளறுபடிய நான் கண்டுபிடிச்சிட்டேன்… அந்த டேட்டா எல்லாத்தையும் மேகமலைக்கு அனுப்பிடுவேன்னு பயந்து என்னைக் கொல்ல பாத்தாங்க… அதுக்கு அங்க திருட வந்த திருடனுங்களை கூட்டு சேத்துக்கிட்டாங்க… என்னோட ரூமுக்கு வந்த வாட்ஸ்மேனை நான்னு நினைச்சு அவங்க கொன்னு எரிச்சிட்டாங்க… தப்பிச்சுப் போக நினைச்ச என் கண்ணுல இதெல்லாம் பட்டுருச்சு… அவங்க எல்லாரும் நான் செத்துப் போயிட்டதா நினைச்சிட்டாங்க… அந்த சரவுண்டிங்ல அவங்களுக்குச் செல்வாக்கு அதிகம்… ஒருவேளை நான் உயிரோட இருக்குறது தெரிஞ்சா மறுபடியும் என்னைக் கொல்ல ட்ரை பண்ணுவாங்கனு பயந்து நான் தலைமறைவா இருந்தேன்… இப்போ தான் முக்தியோட ஆட்டம் அடங்கிருச்சுல்ல, புனே ஆசிரமமும் கதி கலங்குன கேப்ல நான் தப்பிச்சு சென்னைக்கு வந்துட்டேன்” என்று தான் தலைமறைவாக இருந்த வரலாறை ஒப்பித்தான்.

ரவீந்திரன் மகனது முகத்தை வருடிக் கொடுத்தவர் “உனக்கு நடந்த எல்லாத்தையும் ருத்ராஜி நினைச்சிருந்தா தடுத்திருக்க முடியும்… ஆனா அவருக்கு அப்போ முக்தியோட இமேஜ் தான் முக்கியமா இருந்துச்சு… அதனால அவர் உன் பிரச்சனைய கண்டுக்கல… நீ இறந்துட்டேனு கேள்விப்பட்டதுமே நான் செத்துட்டேன் முகுந்த்… புத்திரசோகத்தோட வலி ரொம்ப கொடுமையானதுடா… அது என்னை செய்யக் கூடாத எல்லா காரியத்தையும் செய்ய வச்சிடுச்சு… நீ அடிக்கடி கேப்பியே, என்னை விட முக்தி மேல இருக்குற விசுவாசம் தான் பெருசானு… நீ இறந்துட்டனு கேள்விப்பட்டதும் அந்த விசுவாசம் கற்பூரம் போல கரைஞ்சு போயிடுச்சுடா… இன்னைக்கு முக்தி நிலைகுலைஞ்சு நிக்குறதுல என்னோட பங்கும் இருக்கு முகுந்த்… இப்போ நான் அப்ரூவரா மாறி சாட்சியும் சொல்லிட்டேன்… இதனால என் தண்டனை காலம் குறையலாம்… ஆனா மனசுல இருந்த பொய் புரட்டு எல்லாம் போய் நிம்மதியா இருக்கு முகுந்த்… நீ ஆசைப்பட்ட மாதிரி அந்தப் பொண்ணு தீபாவ கல்யாணம் பண்ணீட்டு சந்தோசமா வாழுடா” என்றார் மனதார.

ரவீந்திரனோடு முகுந்தின் வாக்குமூலமும் சேர்ந்து கொள்ள முக்திக்கு எதிரான சாட்சிகள் அதிகரித்தது. ரவீந்திரன் சொன்னது போலவே முகுந்த் தீபாவைச் சந்தித்து நடந்ததை கூறிவிட அவனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள் அவள்.

“இன்னும் ஏன் அழுற தீபா? இனிமே நம்மளை யாராலயும் பிரிக்க முடியாது… அம்மா நீங்க நல்ல தேதியா பாருங்க… அந்த தேதில அப்பாவ பரோல்ல எடுக்க நான் மூவ் பண்ணுறேன்” என்றான் முகுந்த்

தன் மருமகளின் வாழ்க்கையில் இருந்த இருண்டகாலம் முடிந்த மகிழ்ச்சியில் சீக்கிரமே அவர்களின் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற முடிவை ஜானகி எடுத்துவிட அவர்களின் நல்ல எதிர்கால இல்லறத்திற்கான பிள்ளையார்சுழி அன்றே போடப்பட்டது.

அதே நேரம் தொடர்ந்து சில தினங்களாக அதிர்ச்சியான செய்திகள் வரிசையாக செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கிறதே என தமிழ்நாட்டு மக்கள் எண்ணிக்கொண்டிருந்த தருணத்தில் தான் அடுத்த அதிர்ச்சியும் “மே ஐ கம் இன்?” என்று கேட்டுக்கொண்டு தலைப்புச்செய்தி வடிவில் ஒவ்வொருவர் இல்லத்தின் தொலைக்காட்சி திரையில் செய்தியாக ஒளிபரப்பாகியது.

முக்தியின் தூணான சர்வருத்ரானந்தா வெளிநாட்டிற்கு இரகசிய விமானத்தில் தப்பிவிட்டார் என்பதே அச்செய்தி! அது தமிழ்நாட்டின் ஊடக வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கியது.

இன்னும் சில நாட்களில் கைதாவார் என எதிர்பார்க்கப்பட்ட நபர் திடீரென வெளிநாட்டிற்கு தப்பி செல்வது ஒன்றும் நமது நாட்டிற்குப் புதிதில்லையே!

ஜஸ்டிஷ் டுடேவினர் இந்நிகழ்வை கேட்டதும் ஏமாற்றமாக உணர விஷ்ணுபிரகாஷோ 

“நம்ம கடமை தப்பு நடக்குற இடத்தை பத்தி மக்களுக்குத் தெரியப்படுத்துறது தானே தவிர யாரையும் தண்டிக்கிறது இல்ல… அவர் தப்பிச்சு போனது பத்தி நம்ம ஏன் கவலைப்படணும்? அது போலீஸோட கவலை… நம்ம வேலை அவங்க பண்ணுற தப்பை டாக்குமெண்ட்ரி புரோகிராமா டெலிகாஸ்ட் பண்ணுனதோட முடிஞ்சிருச்சு” என்று நீண்ட விளக்கமளித்து தனது குழுவினரின் ஏமாற்றத்தை தன்னால் முடிந்தமட்டும் போக்க முயன்றான்.

இச்செய்தி படப்பிடிப்புத்தளத்தில் ஷூட்டிங்கின் நடுவே சித்தார்த்தின் மொபைலை சென்றடைந்தது. உபயம், கல்லூரியில் அப்போது வகுப்புகள் இல்லாத காரணத்தால் வணிகவியல் துறையில் அமர்ந்து யூடியூபில் செய்தி சேனல்களை ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கௌதம்.

அடுத்த நொடியே அச்செய்தி ‘ரோல் கேமரா, ஆக்சன்’ என்ற வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்த மாதவனின் செவியையும் நிறைத்தது. விளைவு அடுத்த சில நிமிட படப்பிடிப்புக்குப் பிறகு கௌதமுடன் கான்பரன்ஸ் அழைப்பில் பேசத் துவங்கினர் இருவரும்.

எடுத்ததும் கௌதம் புலம்ப ஆரம்பித்தான்.

“யூ நோ ஒன் திங்க், முக்தி பத்தி ஒவ்வொரு தடவை நியூஸ் வர்றப்பவும் ஹேமா என்னை விரோதி மாதிரி முறைச்சிட்டிருப்பா… அந்த ட்ரெய்ட்டர் எஃபெக்ட் குறைஞ்சது ஒரு வாரத்துக்கு இருக்கும்… இன்னைக்கு நானும் ஹேமாவும் கேண்டில் லைட் டின்னருக்கு வெளிய போகலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம்… என் ப்ளான்ல ஒரு லோட் மண்ணள்ளி போட்டுட்டு ருத்ராஜி ஃப்ளைட்ல பறந்துட்டாரே”

“புலம்பாத மேன்… இங்க மெயின் அக்யூஸ்டான சித்துக்கு வீட்டுல இன்னைக்கு ஒரு பாக்சிங் டோர்னமெண்டே வெயிட்டிங்… அவன் என்ன உன்னை மாதிரியா புலம்பிட்டிருக்கான்? அவனைப் பாத்து கத்துக்கோய்யா” என்று சித்தார்த்தைக் கலாய்த்து கௌதமை தேற்றினான் மாதவன்.

“டேய் உன் ஒய்ப் உனக்கு ஓவரா செல்லம் குடுத்து வச்சிருக்குறதால சீன் போடுற… இருடா நீயும் ஒரு நாள் சிக்காமலா போவ? அப்போ மயூரி மங்காத்தா அவதாரம் எடுத்து உன்னை புரட்டி எடுக்குறத நாங்க வேடிக்கை பாத்துட்டு இதே போல கலாய்ப்போம்… அந்த நாள் ரொம்ப தூரமில்ல நண்பா” என்று அவனுக்குச் சாபமளித்து தனது வேதனையைத் தீர்த்துக் கொண்டான் சித்தார்த்.

“என்னைக்கோ நடக்கப்போறத நினைச்சு அவன் ஏன் கவலைப்படப்போறான்? இன்னைக்கு என் வீட்டுல நடக்கப்போற விபரீதத்தை நினைச்சு நான் தான் சோறு தண்ணி இறங்காம பயந்துட்டிருக்கேன்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் முடித்தான் கௌதம்.

எது எப்படியோ இனி தங்கள் வாழ்க்கைத்துணைவியர் ஒரு விசயம் வேண்டாமென்றால் மறுபேச்சின்றி அதை ஒதுக்கிவிட வேண்டுமென அந்த நன்னாளில் தீர்மானம் எடுத்துக்கொண்டனர் மூவரும்.

மாலையில் வீடு திரும்பிய போது கௌதம் அஞ்சியது போலவே ஹேமலதா நக்கல் தொனியுடன் அவனைப் பார்த்தும் பார்க்காமலும் அங்குமிங்குமாக குழந்தைகளுடன் சுற்றினாளேயொழிய அவனை மதித்து ஒரு வார்த்தையாவது உதிர்க்க வேண்டுமே!

சரி நாமே போய் பேசுவோம் என்று அவன் நெருங்கிய போது வெறுமெனே காபி கோப்பையை நீட்டினாள் ஹேமலதா.

அவன் வாங்குவதற்கு தயங்கவும் மிரட்டலாய் ஒற்றைப்புருவம் உயர்த்தினாள் அவள். அதன் பின்னரும் வாங்க மறுப்பானா அவன்?

வாங்கி அருந்தியவனிடம் “இனிமேலாச்சும் பொண்டாட்டி சொன்னா அதை கேக்கணும்… அதை விட்டுட்டு அடிக்க கை ஓங்க கூடாது” என்றாள் ஹேமலதா.

மனைவிகள் என்பவர்கள் கணப்பொழுதும் மறதி என்ற வியாதியறியாத மருத்துவர்கள் போன்றவர்கள்! தகுந்த நேரத்தில் தகுந்த விசயத்தைக் கணவர்கள் மறந்தாலும் தாங்கள் நியாபகப்படுத்திக் கொண்டு ஊசியாய் குத்தும் கலையை அறிந்தவர்கள்!

அந்த வேலையைத் தான் இப்போது ஹேமலதா செய்து கொண்டிருந்தாள். கௌதம் இதற்கு மேல் வாய் திறவாது காபியை மட்டும் அருந்தியபடி அவள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினான்.

அதன் பின்னர் பேச்சுவார்த்தை சாருலதாவின் பக்கம் நகர்ந்தது. அவளது ஸ்டூடியோவிற்காக வங்கிக்கடனுக்கு விண்ணப்பித்தது தொடர்பான பேச்சில் இருவரும் மூழ்கிவிட அதன் பின்னர் முக்திக்கும் ருத்ராஜிக்கும் அவர்கள் பேச்சில் மட்டுமல்ல வாழ்க்கையிலிருந்தும் நிரந்தர ஓய்வளிக்கப்பட்டுவிட்டது.

மாதவன் மயூரியின் இல்லத்தில் அவன் அவளை விடுத்து ஆன்த்தாலஜி படத்தின் மற்ற மூன்று இயக்குனர்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அவள் பொறுத்து பொறுத்துப் பார்த்துவிட்டு மொபைலை பிடுங்கிக்கொள்ளவும்

“ஏய் என்னடி பண்ணுற? ஷூட் முடிஞ்சதும் போஸ்ட் புரொடக்சன் பத்தி பேசுறதுக்கு இன்னிக்குத் தான் டைம் கிடைச்சுது மய்யூ… ப்ளீஸ்டி போனை குடு” என்று கோபமும் கெஞ்சலுமாக வினவினான் மாதவன்.

“நோ வே! என்ன மேன் நினைச்சிட்டிருக்க நீ? பொழுது விடிஞ்சதும் ஷூட்டிங்னு ஓடவேண்டியது, அடைஞ்சதுக்கு அப்புறம் நடுராத்திரி திருடன் மாதிரி சொந்தவீட்டுக்குள்ள வரவேண்டியது… இதுல நான் ஒருத்தி இருக்கேன்ங்கிறது உனக்கு அடிக்கடி மறந்து போயிடுது… இன்னைக்கு என்னமோ அதிசயமா சீக்கிரமா வந்திருக்கியேனு சந்தோசப்பட்டா அதுக்கும் ஆப்பு வைக்கிறீயாடா?”

“என்னடி மய்யூ புதுசா டா போட்டு பேசுற? நான் உன் புருசன்மா”

“இப்போ நீ மட்டும் டி போட்டு கூப்பிட்டல்ல மேன்? நான் அதை குத்தம் கண்டுபிடிச்சேனா? ஒழுங்கா ஓடிப்போயிடு… போனும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது” என்றபடி அவள் நகர அவளைப் போக விடாமல் தடுத்தான் மாதவன்.

அவள் போனை குர்தாவின் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளவும் இடையைப் பற்றி இழுத்தணைத்தவன் “சரிங்க மேடம்! இன்னைக்கு நீங்க ரொம்ப கோவமா இருக்கீங்க… இனிமே நான் போன் பேசப்போறதில்ல… அதுக்குப் பதிலா மேடம் என் கூட பேசுவீங்களா? நோட் மை பாயிண்ட் புரொபசர் மேடம்… நான் பேச தான் சொல்லுறேன்… நோ மோர் ஃபைட்” என்ற நிபந்தனையுடன் அவளது இதழ் நோக்கி குனிய அதற்கு பின்னே அங்கே நமக்கு என்ன வேலை!

இவ்வாறிருக்க சித்தார்த்தும் யசோதராவும் தங்களது இரண்டாவது குழந்தையைப் பற்றியும் மறுநாள் நடக்கவிருக்கும் இந்திரஜித்தின் ரேஸை பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர்.

“ஆக்சுவலி இந்த ரேஸ் போன மாசமே நடக்க வேண்டியது… ஆனா போஸ்ட்போன் பண்ணிட்டாங்கனு ஜித்து சொல்லிட்டிருந்தான்… இன்னைக்கு அவனுக்கு தூக்கமே வராது… ஜெயிக்கிற வரைக்கும் அவனால நிம்மதியா இருக்கமுடியாது யசோ”

“அப்போ நாளைக்கு மானிங் வரைக்கும் அவனுக்குச் சிவராத்திரி தான் போல… ம்ம்… சார் இன்னைக்கு ஆல் சேனல்லயும் ஹாட் நியூஸே உங்க ருத்ராஜி தான், தெரியுமா? தெரிஞ்சும் ஏன் சைலண்டா இருக்கீங்க? இந்நேரம் இங்க ஒரு எரிமலை வெடிச்சிருக்கணுமே”

சித்தார்த் திடுக்கிட்டு அவளை நோக்கியவன் “ஏன்மா ஏன்? எவ்ளோ பெரிய போராட்டத்துக்கு அப்புறம் நீயும் சர்மியும் எனக்குத் திரும்பி கிடைச்சிருக்கீங்க! உங்களை மறுபடியும் இழக்குறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லடி… இனிமே எதுவா இருந்தாலும் யாரா இருந்தாலும் உனக்கு அப்புறம் தான் யசோ” என்று தீர்மானமாக உரைத்துவிட்டு அவளைத் தனது கரங்களில் ஏந்தவும் அவள் புரியாது விழித்தாள்.

“இப்போ எதுக்கு வெயிட் லிப்ட் பண்ணுற மாதிரி என்னைத் தூக்குற?”

“டைம் ஓவர்… இதுக்கு மேல இந்தப் பால்கனில உக்காந்து நம்ம பேசிட்டே இருந்தா நமக்கு நல்லா டைம் பாஸ் ஆகும்… ஆனா என்னோட பேபிக்கு நல்லது இல்ல… தூக்கம் முக்கியம் ரிப்போர்ட்டரே” என்று கேலியாய் உரைத்தபடி அவளுடன் பால்கனியிலிருந்து அறைக்குள் சென்றான் அவன்.

யசோதராவைப் பார்ப்பதற்காக வந்திருந்த வைஷ்ணவியும் சாவித்திரியும் சவிதாவுடன் பேசியதைக் கேட்டதிலிருந்து அவள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டான் சித்தார்த்.

வேலை வேலை என்று அலைவதில் யசோதரா சாப்பாட்டையும் தூக்கத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அந்தப் பொறுப்பை அவன் எடுத்துக்கொண்டான். இனி அவன் வாழ்வில் அவளுக்கும் அவனது குழந்தைகளுக்கும் மட்டுமே முக்கிய இடமென்பதில் அவன் தீர்மானமாக இருந்தான்.

யசோதராவும் விவாகரத்து வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டாள். இனி தனக்கும் சித்தார்த்துக்கும் இடையே யாரும் வரமுடியாதென்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவளுள் உதயமானது. எனவே கலக்கங்கள் குழப்பங்கள் எல்லாம் அகல தனது குழந்தைகளுடனான எதிர்கால வாழ்க்கை மட்டும் அவள் கண் முன்னே அழகாய் விரிந்தது. கூடவே அவளை அணைத்தபடி உறங்கும் சித்தார்த்தும் அந்தக் காட்சியில் அவளோடு நின்றிருந்தான்.

பிறக்கப்போகும் குழந்தைக்காக அவர்களின் கனவுகள் மெதுவாய் விரிய ஆரம்பிக்க தேவையற்ற பேச்சிற்கு இனி அவர்களது வாழ்வில் இடமேது!

இத்தனை நல்ல நிகழ்வுகள் வரிசையாய் நடந்தேறிய தருணத்தில் தி.நகரில் இருக்கும் ஆளுங்கட்சி தலைமை அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் இருந்த அபிமன்யூவின் அலுவலக அறையில் அபிமன்யூவும் அஸ்வினும் வழக்கம் போல கம்பீரமாக அமர்ந்திருக்க அவர்கள் எதிரே இருந்த மேஜையைத் தாண்டி கிடந்த இருக்கைகளில் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தனர் ஜெயசந்திரனும் அவரது மகன் கிரிதரனும்.

நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் அர்த்தபுஷ்டியுடன் பார்த்துக் கொண்டனர். அதன் அர்த்தம் ஜெயசந்திரனும் கிரிதரனும் செய்த தவறுக்கான பரிகாரத்தை பற்றி யோசிப்போமா என்பதே!

“ம்ம்… அப்புறம் என்ன விசயம்? ரொம்ப நாள் கழிச்சு உங்களோட ப்ரைவேட் ஜெட் இன்னைக்குத் தான் ஏதோ ஒரு நாட்டுக்குக் கிளம்பிப் போச்சுனு கேள்விப்பட்டேன்” என்று கேட்டபடி காதின் மடலைத் தேய்த்து விட்டுக்கொண்டான் அபிமன்யூ.

“ஏதோ ஒரு நாடு இல்ல மச்சி… ஈக்வேடார்” என்று நக்கலாகப் பதிலளித்தான் அஸ்வின்.

“அஹான்! நியூஸ்ல முக்தியின் ருத்ராஜி இரகசிய விமானத்தில் மாயமாய் மறைந்தார்னு சொன்னாங்களேடா… ஈக்வேடார் ஒன்னும் மாயாஜால நாடு இல்லயே! அப்போ அது வேற நியூஸ், இது வேற நியூசா? புரியலயே அச்சு” என்று கேலியாய் இழுத்தபடி கிரிதரனைப் பார்த்தான் அபிமன்யூ.

அவனோ அபிமன்யூவை எதிர்கொள்ள இயலாது தந்தையை நோக்கினான். ஜெயசந்திரன் திருட்டுவிழியுடன் மகனைப் பார்த்தவர் பின்னர் அபிமன்யூவின் விழிகள் தங்களைக் கூறு போடுவதை கண்டு கொண்டவராக

“தம்பி அது வந்து…” என்று இழுக்க

“வந்து போய் கதையெல்லாம் எனக்கு வேண்டாம் ஜெயசந்திரன்… நடந்ததை சொல்லுங்க” என்றான் அபிமன்யூ பட்டு கத்தறித்தாற் போல.

ஜெயசந்திரன் முதலில் தயங்கியவர் பின்னர் மகனின் மறுப்பை தாண்டி விசயத்தை போட்டு உடைத்துவிட்டார்.

“ஒரு வாரமா ருத்ராஜியோட பி.ஏ எங்களை கான்டாக்ட் பண்ணுனார் தம்பி… எங்களுக்குச் செஞ்ச உதவிக்குக் கைமாறா அவர் தப்பிச்சுப் போக நாங்க உதவணும்னு சொன்னார்… அப்பிடி உதவலனா எங்களைப் பத்தின விசயத்தையும் போலீஸ் கிட்ட சொல்லிடுவோம்னு அந்த பி.ஏ மிரட்டுனார்… எங்களுக்காக ஆரம்பிச்ச பழைய ஆர்கானிக் அக்ரி புராஜெக்டை அதுக்கு ஆதாரமா காட்டுவோம்னு சொன்னதும் எங்களுக்கு வேற வழி தெரியல தம்பி… அதான் எங்க ப்ரைவேட் ஜெட்ல இன்னைக்கு ஏர்லி மானிங் ஈக்வேடார்கு அனுப்பி வச்சோம்” என்று கூறிவிட்டு தலையைக் குனிந்து கொண்டார் அவர்.

அபிமன்யூ இதற்கு கோபம் கொள்வான் என்று தந்தையும் மகனும் எதிர்பார்க்க அவனோ அதைக் கண்டுகொள்ளாமல் அஸ்வினுடன் இரகசியக்குரலில் ஏதோ பேசினான்.

“இப்போ இல்லனா கூட பின்னாடி இதனால கட்சியோட பேருக்குப் பாதிப்பு வரும்டா மச்சி… நமக்கு கண்டிப்பா அது பெரிய இழப்பு தான்” அஸ்வின் தொலைநோக்குப் பார்வையுடன் விளக்கமளித்தான்.

அபிமன்யூ புருவமத்தியில் ஆட்காட்டிவிரலால் கீறிக்கொண்டவன் “அப்போ இந்த இழப்புக்குச் சமமான இழப்பீடு நம்ம கட்சிக்குக் கிடைச்சாகணும் ஜெயசந்திரன்” என்றான் முடிவாக.

இழப்பீடு என்றதும் தந்தையும் மகனும் அதிர அஸ்வினோ “நீங்க ஷாக் ஆகாதீங்க ஜெயசந்திரன்… எப்பிடியும் இன்னும் மூனு வருசத்துல எலெக்சன் வரும்… சோ நீங்க என்ன பண்ணுறீங்க, ஒரு பெரிய அமவுண்டை கட்சிக்குக் குடுக்குறீங்க… அப்பிடி குடுக்கப் போற தொகைய டொனேசனா காட்டிடலாம்… அதுல்லாம் பிரச்சனையே இல்ல” என்றான் சர்வசாதாரணமாக. கூடவே அந்தத் தொகையை காற்றில் வரைந்தும் காட்டினான் அவன்.

எதிரே இருந்த இருவரும் தொகை எவ்வளவு பெரியது என்று அதிர்ந்து மறுக்க வாயெடுக்க அபிமன்யூ கூர்மையாய் அவர்களைப் பார்த்து வைத்தவன்

“சப்போஸ் நீங்க அமவுண்டை குடுக்க தயங்குனா முக்தி ஃபவுண்டேசனோட ஹிஸ்டரிய தோண்டுறப்ப அதுல உங்க பேரும் உங்க மகனோட பேரும் வெளிய வரும்… உங்களை போலீஸ் அரெஸ்ட் பண்ணுறதை கட்சியோ கவர்மெண்டோ தடுக்காது… எங்க கட்சிக்காரங்களே பண்ணுனாலும் தப்புக்கு தண்டனை கிடைக்கும்னு நானும் பிரஸ் மீட்ல கெத்தா சொல்லுவேன்… என்ன அப்பனுக்கும் புள்ளைக்கும் வேலூர்ல ஏ.சி செல் ஒன்னு ஏற்பாடு பண்ணீடுவோமா?” என்று கடித்தப் பற்களுக்கிடையே வார்த்தைகளை அரைத்தபடி வெளியிட்டான்.

இருவரும் பிடித்து வைத்த பிள்ளையாராய் மாறி அமர்ந்திருக்க அவனது எரிச்சல் அதிகரித்தது.

“அந்த ருத்ராஜி தப்பிச்சத பத்தி எனக்கு எந்தக் கவலையுமில்ல… இங்கயே இருந்திருந்தாலும் அந்த மனுசனை ரொம்ப நாள் ஜெயில்ல வச்சிருக்க முடியாதுனு எல்லாருக்குமே நல்லா தெரியும்… உங்களுக்கு அவர் செஞ்ச உதவிக்கான நன்றிக்கடனா அவர் தப்பிச்சுப் போக உதவுன நீங்க உங்களால கட்சிக்கு வருங்காலத்துல உண்டாகப்போற கெட்டப்பேரை சரி செய்யுறதுக்கு பணத்தைக் குடுத்து தான் ஆகணும்… அப்பிடி குடுக்க கஷ்டமா இருந்துச்சுனா ஜெயில்ல கம்பி எண்ணுற வேலைய பாருங்க” என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசி முடித்தான்.

இத்தனைக்குப் பிறகும் அவர்கள் முடியாதென்றால் கட்டாயம் தங்களுக்கு அபிமன்யூ வேலூர் சிறையில் இடம் ஒதுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதால் வேறு வழியின்றி கட்சிக்கு பெரும் தொகையை நன்கொடையாக அளிக்க ஒப்புக்கொண்டனர் ஜெயசந்திரனும் கிரிதரனும்.

அவர்கள் முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டு நகர்ந்த பிற்பாடு அஸ்வினிடம் ஹைஃபை கொடுத்த அபிமன்யூ “இவனுங்க ரெண்டு பேரும் இருக்குற வரைக்கும் கட்சிக்கு நிதி நெருக்கடியே வராதுடா அச்சு” என்றான் கிண்டலாக.

“டேய் அதை விடு.. ருத்ராஜி தப்பிச்சதை பத்தி நாளைக்கு ப்ரஸ் மீட்ல கேள்வி கேட்டா என்ன சொல்லுறது?” கவலையாய் கேட்டான் அஸ்வின்.

“அதுக்கு ஏன்டா இவ்ளோ யோசிக்கிற? அவர் மார்ஸுக்கே போனாலும் சட்டம் தன் கடமைய செய்யும்னு அறிக்கை விட்டுட்டா போச்சு… டேய் அவரோட இமேஜை ஒன்னுமில்லாம ஆக்கியாச்சு… அவங்க முக்திக்கு முற்றுப்புள்ளி வைச்சாச்சு… இனிமே அவர் இங்க இருந்தாலும் ஈக்வேடார்ல இருந்தாலும் ஒன்னு தான்… இனிமே நம்ம கவனமெல்லாம் சூரியாவோட பர்த்டே செலிப்ரேசன்ல தான் இருக்கணும்… அம்மா ஏதோ ஆசிரமத்துக்குச் சாப்பாடு போடணும்னு சொல்லிட்டிருந்தாங்க… வனி சொன்ன ரெஸ்ட்ராண்ட்ல ஈவினிங் பார்ட்டி ஏற்பாடு பண்ணிடலாமா? அங்க செக்யூரிட்டிய டைட் பண்ணிடுவோம்” என்றான் அபிமன்யூ.

இனி அவனுக்கு ருத்ராஜியைப் பற்றியோ முக்தியைப் பற்றியோ கவலை இல்லை. மக்கள் மத்தியில் ஒரு முதலமைச்சராய் அவனது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்து விட்டான்.

இதற்கு அப்பால் அவனுக்குக் கவலை ஏது? இனி வரும் மூன்றாண்டுகளுக்கு மக்கள் நலப்பணிகளைச் செய்து தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம்பிடித்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாற்காலியைக் கைப்பற்றுவதைப் பற்றி அவன் கனவு காணத் தொடங்கிவிட்டான்!

மழை வரும்☔☔☔