☔ மழை 32 ☔

குற்றங்களை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் எனப்பாராது நடுநிலையோடு குற்றத்தினை அறிந்து தண்டனை வழங்கச் சொல்லும் மன்னனின் செங்கோன்மையை வள்ளுவர் பின்வருமாறு உணர்த்துகிறார்.

                   “ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

                   தேர்ந்து செய்வதே முறை” (குறள்.541)

இக்கருத்தினை அடியொற்றிய நான்மணிக்கடிகையின் பாடலொன்று, மன்னன் என்பவன் எத்தகையவரிடமும் ஒருசார்பின்றி ஆட்சிபுரிவதே நீதிமுறை எனவும், நடுநிலையோடு இருந்து ஆராய்ந்து நடப்பவனே அரசாளும் இயல்புடையவனாவான் எனவும் அரசாளும் தகைமையினைச் செப்புகிறது.

            “கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்

             உண்ணோட்டம் இன்மையும் இல்” (நான்மணிக்கடிகை.96)

ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை

“லாயர் நோட்டீஷா? என்ன சொல்லுறீங்க மேடி? என்னால இதை டைஜஸ்ட் பண்ணிக்க முடியல… யசோ இவ்ளோ பெரிய டிசிசனை எடுக்குற அளவுக்கா அவங்களுக்குள்ள பிரச்சனை போயிட்டிருக்கு? நான் இது சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு நினைச்சேன்… சீக்கிரம் பேசி ஷாட் அவுட் பண்ணிப்பாங்கனு தான் இதுல தலையிடல… பெரியம்மாக்கு இந்த விசயம் தெரிஞ்சுச்சுனா அவங்க உடைஞ்சு போயிடுவாங்க மேடி”

வீட்டிற்கு வந்ததும் வக்கீல் நோட்டீஷ் விசயத்தை மறைக்காது மாதவன் உரைக்க அக்கணத்திலிருந்து மயூரி பதறியபடி பேசிய வார்த்தைகள் தான் இவை!

தனக்கே இவ்வளவு அதிர்ச்சியென்றால் வைஷ்ணவியும் வாசுதேவனும் இதை எவ்வாறு தாங்கிக்கொள்ள போகின்றனர்? நினைக்கும் போதே மயூரிக்கு மனபாரம் ஏறியது.

மாதவனும் சிந்தனைவயப்பட்டவனாக “அவங்களுக்கு எந்த விசயமும் தெரிய வேண்டாம் மய்யூ… இந்த டிவோர்ஸ் நடக்காம நம்ம தடுத்துடலாம்… அவங்களுக்குள்ள இருந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வளந்து இன்னைக்கு மரமா மாறிடுச்சு… அதை வெட்டி வீழ்த்திட்டோம்னா தானா அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேந்துடுவாங்க” என்றான்.

மயூரிக்கு உடனே யசோதராவிடம் பேசவேண்டுமென மனம் துடித்தது. தாமதிக்காது அவளது மொபைலுக்கு அழைத்தாள். ஆனால் முழு ரிங் போய் அழைப்பு துண்டிக்கப்படவே ஹேமலதாவுக்கு அழைத்தாள்.

அவளுக்கு விபரம் தெரியாதிருக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் மயூரிக்கு. ஆனால் அழைப்பை ஏற்ற ஹேமலதாவோ “டிவோர்ஸா?” என்று தானும் அதிர்ந்து தன்னுடன் அமர்ந்திருந்த சாருலதாவையும் இந்திரஜித்தையும் அதிர வைத்தாள்.

அப்போது தான் யசோதரா இந்த விசயத்தை யாரிடமும் கூறாது மறைத்திருப்பது இருவருக்கும் புரிந்தது. ஹேமலதா பரிதவிப்புடன் இருந்த இந்திரஜித்தைக் கையமர்த்திவிட்டு

“இப்பிடியே போச்சுனா சரியா வராது மய்யூ… சித்து சார் பண்ணுனது தப்பு தான்… ஆனா டிவோர்ஸ் அந்தத் தப்புக்கு அதிகப்படியான தண்டனை… நம்ம இதை பத்தி யசோ கிட்ட பேசியே ஆகணும்” என்றாள்.

மயூரியை மறுநாள் லோட்டஸ் ரெசிடென்சிக்கு வருமாறு கூறியவள் அழைப்பை முடித்துக்கொண்டாள்.

“ஹேமுக்கா இப்போ என்ன பண்ணுறது? அப்பாக்கும் அம்மாக்கும் இந்த விசயம் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும்… இவ்ளோ நடந்திருக்கு, ஆனா அண்ணி எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட டிவோர்ஸ் பத்தி மூச்சு விடல… வீ ஹேவ் டு டூ சம்திங் டூ ஸ்டாப் திஸ் டிவோர்ஸ்”

பதபதைப்புடன் மொழிந்த இந்திரஜித்தை வருத்தத்துடன் ஏறிட்டாள் சாருலதா. அவளுமே யசோதராவிடம் இந்த அதிரடி முடிவை எதிர்பார்க்கவில்லை. யசோதராவுக்கும் சித்தார்த்துக்கும் ஏதோ கருத்து வேறுபாடு, சில நாட்களில் சரியாகிவிடுமென நினைத்தாள் அவள்.

ஆனால் அது உறவையே முறிக்குமளவுக்குச் செல்லும் என்று ஒரு சதவிகிதம் கூட யோசிக்கவில்லை. இதற்கு அடிப்படை காரணம் சர்மிஷ்டாவின் பாதுகாப்பு குறித்த இருவரின் அச்சம் தான்!

எப்படியாவது அவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென இறைவனிடம் வேண்டுகோள் வைத்துவிட்டு எப்போதடா யசோதரா இங்கே வருவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஏனெனில் சித்தார்த் வந்ததுமே அவளையும் இந்திரஜித்தையும் ஹேமலதாவின் ஃப்ளாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டாள் யசோதரா. பேசிவிட்டு வருவதாக அவள் சொன்னதை நம்பி இருவரும் இங்கே வந்து அமர்ந்திருந்தனர்.

யசோதராவின் ஃப்ளாட்டில் என்ன நடக்கப் போகிறதோ என்ன பதற்றம்! கூடவே குழந்தைகளை தன்னுடன் கடற்கரைக்கு அழைத்துச் சென்ற கௌதமால் கிடைத்த நிம்மதி! இந்த இரு உணர்வுகளின் கலவையாய் மூவரும் யசோதராவின் வருகைக்காக காத்திருந்தனர்.

அவளோ சித்தார்த் கூறிய எந்தச்  செய்தியையும் செவிமடுக்கவில்லை.

“அந்த மர்டரரை போலீஸ் அரெஸ்ட் பண்ணுனதுல எனக்கும் பெரிய நிம்மதி தான்… இனிமே என் பொண்ணோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல… பட் அதுக்காக இந்த டிவோர்ஸ் முடிவை நான் மாத்திக்க மாட்டேன் சித்து… நான் டிசைட் பண்ணுனதுல எந்த சேஞ்சும் வராது”

“ஏன் யசோ? நான் செஞ்சது தப்பு தான்… ஆயிரம் தடவை கூட அதுக்காக நான் மன்னிப்பு கேக்க ரெடியா இருக்கேன்… வேணும்னா உன் கால்ல விழவா?” என்று அவன் குனிய சென்ற கணமே பதறி விலகினாள் யசோதரா.

சீற்றத்துடன் அவனை முறைத்தவள் “அன்னைக்கு உன்னோட கோவத்துக்காக என்னை அறைஞ்சு காயப்படுத்துன… இன்னைக்கு கால்ல விழுந்து காயப்படுத்த பாக்குற… ஏன் சித்து நீ இப்பிடி இருக்குற? உன்னால இன்னுமா தெளிவா யோசிக்க முடியல? இந்தக் காயத்துக்காக மட்டும் தான் இப்பிடி ஒரு முடிவு எடுத்தேன்னு நினைக்கிறீயா? இல்ல! நீ பேசுன வார்த்தை இருக்குல்ல, அது தான் என்னைக் காயப்படுத்திடுச்சு… நீ அன்னைக்கு அறைஞ்சது என் கன்னத்துல இல்ல சித்து, என் மனசுல… அந்தக் காயம் இன்னும் பச்சை ரணமா இருக்கு… நீ மன்னிப்பு கேக்குறேங்கிற பேர்ல ஒவ்வொரு தடவையும் அதை ஊசியால குத்துற சித்து… இன்னொன்னும் கேட்டுக்க, நான் அடிக்கடி சொல்லுவேன், காதலா செல்ஃப் ரெஸ்பெக்டானு வந்தா கண்டிப்பா நான் செல்ஃப் ரெஸ்பெக்டை தான் சூஸ் பண்ணுவேன்னு… அதை தான் இப்போ செஞ்சிருக்கேன்… சாரி டூ சே திஸ், வீ ஹேவ் டூ செப்பரேட்… நமக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங்னு ஒன்னு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இன்னைக்கு இல்லாமலே போயிடுச்சு… இதுக்கு மேல சேர்ந்திருந்து எதை சாதிக்கப்போறோம்?” என்று தொடங்கிய போதிருந்த சீற்றம் அடங்க பதிலளித்தாள்.

சித்தார்த் கண்களை இறுக மூடித் திறந்தவன் “என்னால சர்மிய பிரிஞ்சு இருக்க முடியாது” என்றுரைக்க

“அவளை நீ எப்போ வேணும்னாலும் வந்து பாக்கலாம்… நான் தடுக்க மாட்டேன்” என அவளிடமிருந்து பதில் வந்தது.

“என்னால உன்னையும் பிரிஞ்சிருக்க முடியாது யசோ… பிகாஸ் ஐ லவ் யூ” வேதனையுடன் ஒலித்தது சித்தார்த்தின் குரல்.

விரக்தியான புன்னகை இழையோட “வெறும் காதலை வச்சு வாழ்க்கைய ஓட்டிட முடியாது சித்து” என்றாள் யசோதரா.

இதற்கு மேல் பேச ஏதுமில்லை என்பது போல அவள் கண்ணாடி சாளத்தின் வழியே அப்பார்ட்மெண்டின் கீழ்ப்பகுதியில் நடமாடிய மக்களை வெறிக்கத் துவங்கினாள்.

பிரச்சனை எல்லாம் இத்தோடு முடிந்தது, இனி தங்களின் வாழ்க்கை முன்பு போல இனிதே நகருமென்று என்று சித்தார்த் கட்டிய கனவுக்கோட்டை மெதுவாய் சரிய ஆரம்பித்தது. யசோதராவின் பாராமுகம் வருத்த கண்கள் கலங்க அங்கிருந்து வெளியேற திரும்பியவனை ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் சர்மிஷ்டா.

“ஏன்பா நீங்க டூ டேய்சா வரவேல்ல?”

முகம் வாடக் கேட்ட மகளை கண் கலங்க அணைத்துக்கொண்டான் சித்தார்த்.

“இனிமே டெய்லி என்னை பாக்க வருவீங்களா?”

ஆவலுடன் கேட்டவளை மீண்டும் வாட வைக்கும் எண்ணமின்றி உடனே சம்மதித்தான் சித்தார்த்.

“டெய்லி மானிங்கும் ஈவினிங்கும் வரணும்… அம்மா சொன்னாங்க இனிமே நானும் அம்மாவும் இங்க தான் இருக்கப் போறோமாம்” என்று கூறியவள் அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

அப்போதாவது யசோதரா திரும்புவாள் என்று எதிர்பார்த்த சித்தார்த்துக்கு ஏமாற்றமே கிடைத்தது. குழந்தையிடம் அவன் சொல்லிக்கொண்டு வெளியேற அதே நேரம் ஹேமலதாவின் ஃப்ளாட்டிலிருந்து வெளியே வந்தான் இந்திரஜித்.

தமையனின் நிலையைக் கண்டு அதிர்ந்தவன் வேறேதும் பேசாது “இன்னைக்கு என்னோட வாங்கண்ணா… உங்க கார் இங்கயே நிக்கட்டும்” என்று கூற சித்தார்த்தோ உணர்வற்று தலையாட்டினான்.

இருவரும் நகர அவனை தோளணைத்தபடி செல்லும் இந்திரஜித்தைப் பார்த்து கருவிழிகள் கண்ணீரில் தத்தளிக்க நின்றிருந்தாள் சாருலதா.

ஏற்கெனவே ஹேமலதாவும் கௌதமும் எதிரெதிர் திக்கில் நிற்க சித்தார்த்தும் யசோதராவும் விலகியே விட்டனர். தாங்கள் முன்பு போல எந்தக் கவலையுமின்றி மகிழ்ந்திருந்த நாட்கள் திரும்பாதா என்ற ஏக்கம் அவளைச் சூழ்வதை சாருலதாவால் தவிர்க்க முடியவில்லை.

***********

“சோ ஹையர் ஸ்டடீஸை இந்தியால பண்ணலாம்னு டிசைட் பண்ணிருக்க?”

தன்னெதிரே நின்றிருந்த மகளிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தான் அபிமன்யூ.

“ஆமாப்பா.. இதுக்கு மேலயும் அங்க இருக்க எனக்குப் பிடிக்கல” என்றாள் அதிதி.

“ஏன்டா அதி? அங்க மாமா அத்தை தாத்தா பாட்டி எல்லாரும் உங்களை நல்லா தானே பாத்துக்கிறாங்க?” ஆதுரத்துடன் ஒலித்தது அபிமன்யூவின் குரல்.

அதிதியோ “ஆனா நீங்களும் அம்மாவும் இல்லயே” என்று ஏக்கமாய் கூறிவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டாள்.

இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சூரியா அவளுக்குப் பரிந்து பேச ஆரம்பித்தான்.

“பெரியம்மாவும் பெரியப்பாவும் தாத்தா பாட்டியோட இந்தியால செட்டில் ஆகுற ஐடியால தான் இருக்காங்க மாமா… அவங்களுக்கே யூ.எஸ் சலிச்சுப் போயிடுச்சாம்”

பின்னர் அபிமன்யூ அவனை ஏறிடவும் கப்சிப்பானான்.

“சரி ரெண்டு பேரும் எப்போவும் போல மூவி பாக்க போங்க… உங்க மம்மியும் ஆன்ட்டியும் வர்ற டைம் ஆயிடுச்சு” என்று பேச்சை மாற்றிய அபிமன்யூ அவர்களைச் செல்லுமாறு பணித்தான்.

ஆனால் அதிதி அவன் இரத்தம் அல்லவா! தந்தையின் சம்மதம் கிடைத்தாலன்றி நகரமாட்டேன் என்ற பிடிவாதம் அவளை அங்கிருந்து நகர அனுமதிக்கவில்லை.

அதிதியின் பிடிவாதம் குறித்து ஸ்ராவணி பேசும் போதெல்லாம் என் மகள் என்னைப் போல என்ற கர்வம் அபிமன்யூவை ஆட்கொண்டதுண்டு. இன்றோ ஆயாசம் தான் வந்தது அவனுக்கு. ஆனால் மகளின் ஆசைக்கு மறுப்பு கூறி பழக்கமில்லை என்பதால் இது குறித்து யோசிப்பதாகச் சொல்லி சமாதானப்படுத்தி விட்டு இருவரையும் அனுப்பி வைத்தான் அபிமன்யூ.

அவர்கள் இருவரும் நகர்ந்ததும் ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டவன் ஸ்ராவணி வந்து அவன் முகத்தின் முன்னே கையை ஆட்டிய பிறகு தான் பூவுலகிற்கே வந்தான்.

“என்ன தீவிர சிந்தனை சாருக்கு?” என்று கேலியாய் கேட்டவளிடம்

“எல்லாம் பசங்களோட ஸ்டடீஸ் பத்தி தான்… அவங்க ஹையர் ஸ்டடீசை இந்தியால தான் பண்ணுவோம்னு பிடிவாதமா இருக்காங்க… வாட்ஸ் யுவர் ஒபீனியன் வனி?” என்று பதிலுக்குக் கேட்டான் அவன்.

“அவங்க இன்னும் குழந்தைங்க இல்ல… இன்னும் ஒரு வருசம் கழிஞ்சா அதியும் சூரியாவும் மேஜர் ஆயிடுவாங்க… சோ டிசிசன் எடுக்குற பக்குவம் அவங்களுக்கு வந்துடுச்சுனு தான் எனக்குத் தோணுது… அவங்க இங்க நம்மளோடவே இருக்கட்டும் அபி… ஷ்ரவனும் வினியை அழைச்சிட்டு அப்பா அம்மாவோட இந்தியாக்கு ரிட்டன் ஆகுறதா சொல்லிட்டிருந்தான்… அவன் பையனைப் பெத்தவன்… அவனுக்கே அங்க இருக்குறது சரினு படல… சோ நம்ம ரொம்ப யோசிக்க வேண்டாம்… மூனு பசங்களும் இங்கயே எஜூகேசனை கன்டினியூ பண்ணட்டும்” என்றாள் ஸ்ராவணி.

அபிமன்யூ அரை மனதுடன் தலையாட்டியவன் “புனேல வேலை எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா?” என்று கேட்டபடி போனை நோண்ட ஆரம்பிக்க ஸ்ராவணிக்கு அதிர்ச்சி.

“நாங்க புனே போனது உனக்கு எப்பிடி தெரியும் அபி?”

அவன் பதில் எதுவும் கூறாது போனிலிருந்து பார்வையை மடிக்கணினி பக்கம் திருப்பிக்கொண்டான். தலைமை செயலரிடம் இருந்து வந்திருந்த அலுவல் ரீதியான மின்னஞ்சலை படிக்கத் துவங்கியவனின் அருகே வந்து அமர்ந்தாள் ஸ்ராவணி.

அவளும் மேனகாவும் புனே சென்றது யாருக்கும் தெரியாது, அவர்களது ஸ்டிங்க் ஆபரேஷன் குழுவினரைத் தவிர. வீட்டிலும் அலுவலகத்திலும் வேலை விசயமாக ஹைதராபாத் செல்வதாக கூறிவிட்டு இருவரும் புனே சென்றுவிட்டனர்.

இவனுக்கு மட்டும் எப்படி தெரிந்திருக்கும் என்ற கேள்வியுடன் அவனை ஏறிட அவனோ மடிக்கணினியின் திரையைத் தன் பக்கம் திருப்பிக்கொண்டு அவளுக்கு இன்னும் எரிச்சல் மூட்டினான்.

அவனது விரல்கள் விசைப்பலகையில் நர்த்தனமாடவும் ஏதோ பதிலளிக்கிறான் போல என்று அமைதி காத்தவள் அவன் ‘என்டர்’ பொத்தானை அழுத்திவிட்டு நிமிரவும் தனது சந்தேகத்தைக் கேட்க ஆரம்பித்தாள்.

“உனக்கு நாங்க புனே போனது எப்பிடி தெரியும் அபி?”

“நீங்க எதுக்கு புனேக்கு போனீங்கனு கூட எனக்குத் தெரியும் வனி… பட் இதுல்லாம் உளவுத்துறை சம்பந்தப்பட்ட விசயம்… கட்டுன பொண்டாட்டி கிட்ட கூட ஷேர் பண்ணிக்க மாட்டேன்னு ஆல்ரெடி சத்திய பிரமாணம் எடுத்திருக்கேன்… சோ இப்போ எதுவும் கேக்காத” என்றான் அபிமன்யூ.

ஸ்ராவணி எதுவோ புரிந்தது போல பார்த்தவள் “சோ நீ அவரைக் காப்பாத்த ட்ரை பண்ணுறல்ல?” என்று குற்றம் சாட்ட

“நான் அப்பிடி சொன்னேனா? நீயா அந்த மாதிரி எதையும் யோசிக்காத வனி… ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லவா? நான் யாரையும் காப்பாத்த ட்ரை பண்ணல… நான் இப்போ இருக்குற நாற்காலி என் கையை விட்டுப் போகாம இருக்க என்னென்ன செய்யணுமோ அதை மட்டும் செய்யுறேன்… அந்த வேலை முடியற வரைக்கும் யார் கிட்டவும் எதையும் ஷேர் பண்ணிக்கப்போறதில்ல… இன்னொன்னும் சொல்லிக்கிறேன், என்னோட இந்த நடவடிக்கை உன்னோட வேலைய எந்த விதத்துலயும் பாதிக்காது… ஐ ப்ராமிஸ்” என்றான் அபிமன்யூ.

ஸ்ராவணி அவனை நம்பலாமா வேண்டாமா என்று விழிக்க அபிமன்யூ மனைவியைத் தோளோடு அணைத்துக்கொண்டான்.

“அபிமன்யூ பார்த்திபன்ங்கிற பொலிடீசியனை ஸ்ராவணி சுப்பிரமணியம்ங்கிற ஜர்னலிஸ்ட் என்னைக்குமே நம்புனதில்ல… ஐ நோ தட்… பட் இந்த அபிய அவனோட வனி நம்புவானு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று அமர்த்தலாகக் கூற

“ம்ம்… என்னையும் மேகியையும் கண்காணிச்சது அபிமன்யூ பார்த்திபனோட ஆட்களா இல்ல அபியோட ஆட்களா?” என்று சாமர்த்தியமாக வினா எழுப்பினாள் ஸ்ராவணி.

“ரெண்டுமே இல்ல… இந்த ஸ்டேட்டோட சி.எம்மா சில காரியங்களை செய்யுறதுக்கு நான் அப்பாயிண்ட் பண்ணுன சில ஆபிசர்ஸ்… இப்போ நிம்மதியா?” என்று அவன் சற்று கேலியாக வினவ  

“இது வேறயா? த பெஸ்ட் சி.எம்ங்கிற குட்நேமை காப்பாத்திக்க அடுத்து என்னமோ பண்ணுற… அது என்னனு புரியல… எனிஹவ், கத்திரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்… அப்போ தெரிஞ்சுக்கிறேன்” என்றாள் ஸ்ராவணி.

சொன்னதோடு அவன் தோளில் சாய்ந்தும் கொண்டாள். அபிமன்யூ அவளை உச்சி முகர்ந்தவன் தனது அரசியலோ அவளது பத்திரிக்கை துறையோ என்றுமே சொந்த வாழ்க்கையில் தங்களை எதிரணியில் நிறுத்த முடியாது என்று கர்வத்துடன் மனதிற்குள் கூறிக்கொண்டான்.

மழை வரும்☔☔☔