☔ மழை 20 ☔

அரசின்கீழ் இயங்கும் நாடானது என்பதை “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு”என்ற குறளில் விளக்குகிறார் வள்ளுவர். அதாவது பசியில்லாமலும், பிணியில்லாமலும், அயல்நாட்டின் பகையில்லாமலும் இருத்தலே நலமாக அமையும். நாட்டினது அரசு நாட்டுப்பொருளால் பாரபட்சமின்றி அனைவருக்கும் பசிதீர்க்கும் அரசாகவும், பற்பலத் திட்டங்களின் வழி நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் அரசாகவும், மற்றைய நாடுகளுடன் பகைகொள்ளாது அமைதியை விரும்பும் நாடாகவும் இருப்பதையே சிறந்த நாடென திருக்குறளானது நாடு இருக்கவேண்டிய இயல்பினை எடுத்துரைக்கிறது.

ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை

ஜஸ்டிஷ் டுடே…

ரியாலிட்டி செக் ஷோவுக்காக ஸ்டூடியோ தயாராகிக் கொண்டிருந்தது. நெறியாளராக யசோதராவும் பங்கேற்பாளராக தயானந்தும் அரங்கிற்குள் கிடந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

இன்னும் ஒளிப்பதிவு ஆரம்பிக்கவில்லை. யசோதரா மரியாதை நிமித்தம் தயானந்துடன் பேசிக்கொண்டிருந்தாள். மெய்யாகவே அவர் மீது அவளுக்கு மரியாதை அதிகம் தான். ஏழாண்டுகளுக்கு முன்னர் ஆடியோ டேப் வெளியான வழக்கில் சிறை சென்றவர் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு அரசாங்கத்தால் சுழட்டி அடிக்கப்பட்ட வரலாறு பத்திரிக்கை துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும்.

இவை அனைத்தும் சேர்ந்து தான் அம்மனிதரை சமூக ஆர்வலராக மாற்றிவிட்டது. சிறையிலிருந்து வெளிவந்ததிலிருந்து எண்ணற்ற சமுதாய பிரச்சனைகளில் அவரது குரல் ஒலித்திருக்கிறது. அவர் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்றெல்லாம் நாசூக்கு பார்க்கும் மனிதரல்ல. யார் தவறு செய்தாலும் அவர்களைப் பற்றிய ஆதாரத்துடன் குற்றங்களை மக்கள் பார்வைக்கு கொண்டு வருபவர்.

இதோ இப்போது கூட ஆளுங்கட்சியும் அதன் தலைமையும் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த ஆன்மீகவாதியை ஆதரிப்பது பெருந்தவறு என்பதையும் ஆளுங்கட்சிக்கும் அந்த ஆன்மீகவாதிக்குமான தொடர்பை பற்றியும் ரியாலிட்டி செக் ஷோவில் பேசுவதற்காக தான் வந்திருக்கிறார்.

கேமரா ஒளிப்பதிவை ஆரம்பிக்கவும் யசோதரா வணக்கம் கூறினாள். பின்னர் தயானந்தை பற்றி சில வரிகள் சொலிவிட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தாள்.

“முக்தி ஃபவுண்டேசன் மேல நீங்க வழக்கு தொடர்ந்திருக்கீங்கனு நியூஸ் வருதே சார்… இதுக்குக் காரணம் கவன ஈர்ப்புனு எல்லாரும் பேசிக்கிறாங்க… அதை பத்தி நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?”

“கவன ஈர்ப்பா? அதிகாரத்துல மேல்மட்டத்துல இருக்குறவங்க செய்யுற தப்பை நான் சுட்டிக்காட்டுனா உடனே அதுக்கு கவன ஈர்ப்புனு பேர் வச்சிடுறாங்க… முக்தி ஃபவுண்டேசனையும் அதை நடத்துறவரையும் தப்பு சொல்லி ஃபேமஸ் ஆகவேண்டிய அவசியம் எனக்கு இல்லயே மேடம்… நான் அந்த ஆசிரமத்துக்குப் போனப்போ அங்க நடந்த எதிர்மறை செயல்கள் எனக்குள்ள உருவாக்குன ஆதங்கம் காரணமா அவங்களோட வரலாறை தோண்டித் துருவுனா அவங்க பண்ணுன கிரிமினல் அஃபென்ஸ் வரிசையா வெளிய வருது… அதை அடிப்படையா வைச்சு தான் நான் கேஸ் போட்டிருக்கேன்… இதை முக்தியோட ஆதரவாளர்கள் கவன ஈர்ப்புனு பேர் வச்சாலும் ஐ டோண்ட் கேர்”

யசோதராவுமே ஆரம்பக்கட்டத்தில் முக்தியைப் பற்றிய தகவல்களைத் திரட்டியவள் தான்! ஆனால் காலப்போக்கில் அதைக் காட்டிலும் பல பிரச்சனைகள் தொடர்பான புலனாய்வுகளும் அறிக்கைகளும் அவளை மூழ்கடித்துவிட கிட்டத்தட்ட ஏழாண்டு காலமாக முக்தியைப் பற்றி கேள்விப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவள் பெரிதாக கருதியதில்லை.

ஆனால் தயானந்த் அவளைப் போல இல்லை! தனது அனுபவத்தில் முக்தி ஃபவுண்டேசனின் மேகமலை ஆசிரமத்தில் சந்தித்த பல மனிதர்களையும் அங்கே கண்கூடாக பார்த்த செயல்களையும் வைத்தே அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்காக அவர் எடுத்துக்கொண்ட காலம் ஒரு வருடம். வருமான வரி ஏய்ப்பு, கருப்புபண பரிமாற்றம், கடவுள் மற்றும் யோகாவின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுவது என முக்தியின் மீது அவர் குற்றங்களை அடுக்கினார். அரசாங்கம், பிரபலங்கள், அரசு அதிகாரிகள், மேல்தட்டினர், மாபெரும் தொழிலதிபர்கள்

“நீங்க இந்தப் பிரச்சனைல ஏன் பத்திரிக்கைகளையும் ப்ளேம் பண்ணுறீங்க சார்?”

“உங்களை மாதிரி மீடியாக்களும் பத்திரிக்கைகளும் தான் முக்தி சர்வருத்ரானந்தாவை சாமானியமக்கள் கிட்ட கொண்டு போய் சேர்த்தவங்க… அப்ப எப்பிடிங்க உங்களை குத்தம் சொல்லாம இருக்கமுடியும்?”

நேரிடையாக அவர் கேட்டதில் யசோதரா வாயடைத்துப் போனாள். தயானந்த் தானே பேச்சைத் தொடர்ந்தார்.

“முக்தி ஃபவுண்டேசனை ஆரம்பிச்ச சர்வசிவானந்தா இருந்த வரைக்கும் அந்த ஆசிரம் வெறும் யோகா கத்துக் குடுக்குற இடமா மட்டும் தான் இருந்துச்சு… ஆனா எப்போ அது ருத்ராஜியோட கைக்குப் போச்சோ அந்த நாள்ல இருந்து முக்தியோட அடையாளமே மாறிப்போச்சு… இன்னைக்கு அவங்க ட்ரஸ்ட் மூலமா அங்க இருக்குற டிரைபல் பீபிளுக்கு உதவி பண்ணுறோம்னு நிறைய கம்பெனிகள்ல சி.எஸ்.ஆர் ஃபண்ட் வாங்கிக்கிறாங்க… ஆனா அதை முறைப்படி செலவளிக்கல… கூடவே அரசாங்கம் அனுமதிச்ச இடத்த விட அதிக இடத்தை ஆக்கிரமிப்பு பண்ணிருக்காங்க… வனத்துறை அவங்க மேல குடுத்த வழக்கு இன்னும் கோர்ட்ல நடந்துட்டிருக்கு மேடம்…

ஏழு வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டுல செயற்கை உரங்களால வளமிழந்த நிலங்களை பழையபடி மாத்துறதுக்கு ‘இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவோம்’னு ஒரு மூவ்மெண்ட் ஆரம்பிச்சார்… இப்போ ஆளுங்கட்சியா இருந்தவங்க தான் அப்போவும் ஆளுங்கட்சியா இருந்தாங்க… அந்த மூவ்மெண்டுக்கு மக்கள் கிட்ட வாங்குன டொனேசனை வச்சு எத்தனை ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாத்திருக்காங்கனு இப்போ வரைக்கும் முக்தி ஃபவுண்டேசன் கணக்கு காட்டல… அதுக்கு அப்புறம் வைகை நதியை பாதுகாப்போம்னு டூ இயர்ஸ் பேக் ஒரு மூவ்மெண்ட் அனவுன்ஸ் பண்ணி டொனேசன் வாங்குனாங்க… வழக்கம் போல நம்ம பிரபலங்கள் போர்ட் பிடிச்சு எல்லாரும் ஐம்பது ரூபா குடுங்கனு விளம்பரம் பண்ணுனாங்க.. அந்தத் திட்டத்தை அரசாங்கம் நிறுத்தி வச்சிருக்குறது மீடியாக்குத் தெரியாதா என்ன?

இப்போ சதாசிவனுக்குக் கோயில் கட்டுறாங்க… அந்த இடத்துல எந்தக் கட்டிடமும் கட்டுறதுக்கு ஃபாரஸ்ட் டிப்பார்ட்மெண்ட் பெர்மிசன் குடுக்கல… அப்பிடி இருந்தும் கோயிலைக் கட்டி இப்போ கோபுரம் எழுப்புற வரைக்கும் போயாச்சு… இவ்ளோ தப்புகள் ஒரு சாதாரண மனுசனான எனக்கே தெரியுதுனா அரசாங்கம் என்ன மேடம் பண்ணுது? பக்திய வியாபாரமாக்கி மக்களை முட்டாள் ஆக்குற கூட்டத்துக்கு மறைமுகமா ஆதரவு குடுக்குறதே ஆளுங்கட்சி தானே!

இவ்ளோ ஏன் ஆகம முறைப்படி கோயிலைத் திறக்கிற தினம் சி.எம்மே மேகமலைக்கு சீஃப் கெஸ்டா போகப்போறதா வேற தகவல் வருது… அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதம் மேல அதிகப்படி ஆர்வம் காட்டுறது இந்தியா மாதிரி மதச்சார்பற்ற நாட்டுல இது வரைக்கும் வழக்கமில்ல… அதனால தான் ஆளுங்கட்சி மேல நான் பகிரங்கமா குற்றம் சாட்டுறேன்”

மூச்சு விடாமல் குற்றங்களை அடுக்கியவர் கையோடு கொண்டு வந்த ஆவணங்களையும் காட்டினார். இது வரை முக்தி மீது யார் குற்றம் சாட்டினாலும் ருத்ராஜியும் அவரது ஆதரவாளர்களும் கேட்கும் முக்கிய கேள்வியே ஆதாரம் இருக்கிறதா என்பது தான்.

ஆவண ரீதியாக புகாரளித்த ஆதாரங்கள், சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நீண்டநாள் கழித்து அனுமதி கேட்டு அனுப்பியிருந்த விண்ணப்பங்கள், நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் என அனைத்தையும் தயானந்த் காட்டவும் யசோதரா அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

“இவ்ளோ ஆதாரம் இருந்தும் இன்னும் அவங்க மேல ஏன் இன்னும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கல?”

“அவரை ஃபாலோ பண்ணுற பக்தர்கள் அரசாங்கத்த பொறுத்தவரைக்கும் பெரிய வாக்கு வங்கிகள் மேடம்… அதோட அரசியல் பிரமுகர்களும் முக்தியோட நிரந்தர பக்தர்களா இருக்காங்க… அப்புறம் எப்பிடி நடவடிக்கை எடுப்பாங்க? அங்க கட்டியிருக்கிற அறுபது பில்டிங்ல மேக்சிமம் பில்டிங்ஸ்சை ஹில் ஏரியா கன்சர்வேசன் அத்தாரிட்டி (Hill Area Conservative Authority) கிட்ட பெர்மிசன் வாங்காம கட்டிருக்காங்க… சி.ஏ.ஜி (C.A.G – Comptroller and Auditor General of India) இதை பத்தி விசாரிச்சப்போ தான் அவசர அவசரமா அப்ரூவலுக்கு அப்ளை பண்ணுனாங்க… தமிழ்நாட்டுல கட்டுமானம் முடிஞ்ச எந்தக் கட்டிடத்துக்கும் அப்ரூவல் குடுக்குற வழக்கமே கிடையாது… பில்டிங் வேலை ஆரம்பிக்கிறப்ப அப்ரூவல் வாங்கணுங்கிறது தான் ரூல்… ஆனா அவங்க கட்டி முடிச்ச பில்டிங்சுக்கு அப்ரூவல் கேட்டாங்க… கன்சர்வேசன் அத்தாரிட்டி சில நிபந்தனைகளுக்குட்பட்டு அவங்களுக்கு அப்ரூவல் குடுத்தாங்க… அதுல முக்கியமானது இனி கட்டுற கட்டிடங்கள் எதுவும் அனுமதி இல்லாத இடத்துல கட்டக்கூடாதுங்கிறது தான்..

ஆனா அவங்க இப்போ கட்டுற சதாசிவன் கோயில் அனுமதி இல்லாத இடத்துல தான் கட்டப்பட்டுட்டிருக்கு… அதோட அவங்க ஆசிரமத்தோட சுற்றுச்சுவர் காப்புக்காடுகள்ல இருந்து ஐம்பது மீட்டர் டிஸ்டன்ஸ்ல தான் இருக்கு… ஆனா அப்பிடி எந்தக் கட்டிடமும் இல்லனு போன மாசம் ஒரு நேஷனல் மீடியா சேனல்ல ருத்ராஜி சொல்லுறார்… இது எல்லாத்தையும் விட அவங்க பண்ணுற இன்னொரு மோசடி முக்தி ஃபவுண்டேசனோட எந்தப் பொருளை வாங்குனாலும் அதுக்கு டொனேசன் ஸ்லிப் குடுக்குறது தான்… ஒரு பொருளை வாங்குனாலோ வித்தாலோ பில் தானே குடுக்கணும்… டொனேசன்ங்கிறது வாலண்டரியா விரும்பி குடுக்குற தொகை… இதுல ஏகப்பட்ட அமவுண்ட் வரி ஏய்ப்பு பண்ணுறாங்க… மொத்தத்துல அந்த முக்தி ஃபவுண்டேசன் ஆரம்பிக்கப்பட்டதோட நோக்கமான யோகாவ விட்டு வேற பாதைக்குத் திரும்பி ரொம்பநாளாச்சு மேடம்”

முக்தி ஃபவுண்டேசனின் சில ஏமாற்றுத்தனங்களுக்குத் தானும் சாட்சி என மனதிற்குள் சொல்லிக்கொண்ட யசோதரா இன்னும் சில கேள்விகளைக் கேட்க அதற்கு வந்த பதில்கள் அவளை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

அது என்னவென்றால் முக்தி வித்யாலயாவும் அனுமதியின்றி கட்டப்பட்டது தானாம்! அங்கே படிக்கும் குழந்தைகள் பற்றி அடிக்கடி சித்தார்த் கூற கேட்டிருக்கிறாள் அவள். ஏதோ வேதபாடசாலை முறையில் இயங்குகிறது என்று எண்ணினாளேயொழிய அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அங்கே குழந்தைகளுக்கு இருவேளை உணவு தான் வழங்கப்படுகிறது என்றார் தயானந்த். அத்தோடு கடுமையான உடல் உழைப்பு, வேலை, யோகா என்று அங்குள்ள வாழ்க்கைமுறையே வேறு என்றவர் அங்கிருந்து வெளியேறும் குழந்தைகளுக்கு வெளியுலகில் படித்த குழந்தைகளுடன் உயர்கல்வியில் போட்டி போடுவது கடினம் என்று கூறினார். இவ்வாறு இருந்தால் குழந்தைகளின் உடல்நலனும் எதிர்காலமும் அல்லவா பாதிக்கப்படும்?

கேட்கும் போதே இது வரை கண்டிடாத அங்கே பயிலும் குழந்தைகள் மீது யசோதராவுக்கு இரக்கம் சுரந்தது. கூடவே இத்துணை விவரங்கள் தெரிந்து வைத்திருப்பவர் மீது மரியாதையும் பிறந்தது. இவ்வாறாக விவாதங்கள் விளக்கங்களுடன் அன்றைய ரியாலிட்டி செக் ஷோ முடிவடைந்தது.

இறுதி கேள்வி இவ்வளவு குற்றச்சாட்டுகளை அடுக்கிய பிறகும் சர்வருத்ரானந்தாவைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பக்தர்களைப் பற்றி தயானந்திடம் முன்வைக்கப்பட்டது.

அவரது முகத்தில் ஆயாசமும் அயர்ச்சியும் பரவியது,

“கடவுள் இல்லனு சொல்லுற என்னை மாதிரி நாத்திகவாதிகள் எப்போவுமே பக்திய கேலிக்கூத்தா ஆக்குனது இல்ல… ஆன்மீகவாதிகள்னு சொல்லிக்கிற இந்த மாதிரி ஸ்வாமிஜிக்கள் தான் பக்திய வியாபாரமா ஆக்குறாங்க… அதை பத்தி ஏன் மக்கள் யோசிக்கவே மாட்றாங்க?” என்று ஆதங்கத்துடன் ஒலித்தது தயானந்தின் குரல்.

அதற்கு யசோதராவால் பதிலளிக்க முடியவில்லை. முக்தி ஃபவுண்டேசன் பற்றி ஏழாண்டுகளுக்கு முன்னரே தெரிந்த பிறகும் தான் அமைதியாக இருந்தது தவறோ என்ற கேள்வி அவளுக்குள் உதயமானது. அந்தக் கேள்வியுடன் முடிந்தது அன்றைய ரியாலிட்டி செக் ஷோ.

ஒளிப்பதிவாளர் மற்றும் குழுவினர் அகன்றதும் யசோதராவிடம் பேச்சு கொடுத்தார் தயானந்த்.

“நீங்க தானே செவன் இயர்ஸ் பேக் முக்தி ஃபவுண்டேசன் மேல கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டது?”

யசோதரா ஆச்சரியத்துடன் கண்களை விரித்தவள் “உங்களுக்கு எப்பிடி தெரியும் சார்?” என்று கேட்டபடி அவருடன் நடந்தாள்.

“முக்தியோட ஹிஸ்டரிய தோண்டுனப்போ தெரிஞ்சுகிட்டேன் மேடம்… அதே ஃபயரோட அவங்க பண்ணுன மத்த கிரிமினல் வேலைகளையும் மக்களோட பார்வைக்குக் கொண்டு வந்திருக்கலாமே?” அவர் கேட்டதும் பதில் பேசாமல் திகைத்தாள் யசோதரா.

அவள் பதில் சொல்ல தயங்கவும் அவரே தொடர்ந்தார்.

“ஓ! உங்க ஹஸ்பெண்ட் அவரோட டிவோட்டில்ல… நான் மறந்தே போயிட்டேன்” என்றவரைப் புருவ சுருக்கத்துடன் ஏறிட்டவள்

“பட் அவர் என்னோட புரொபசன்ல தலையிடமாட்டார் தயானந்த் சார்… அந்த டைம்ல மேரேஜ் நடந்துச்சு… அதுக்கு அப்புறம் மத்த ஒர்க் டென்சன்ல நான் முக்திய பத்தி மறந்துட்டேன்… ஆனா அது பெரிய தப்புனு இப்போ புரியுது… எனி ஹவ் இந்த புரோகிராம் மூலமா ருத்ராஜியைக் குருட்டுத்தனமா நம்புற மக்களுக்கு அவேர்னெஸ் உண்டாகும்னு நான் நம்புறேன்” என்றாள் நம்பிக்கையுடன்.

தயானந்தோ சத்தமாக நகைத்தவர் “அதுக்குல்லாம் வாய்ப்பே இல்ல மேடம்… ருத்ராஜியே தன்னோட வாயால இந்த ஸ்கேம், க்ரைமை ஒத்துக்கிட்டாலும் அவங்க டிவோட்டி நம்ப மாட்டாங்க… கவர்மெண்டோட சப்போர்ட் அவருக்குக் கிடைக்கிற வரைக்கும் என்னை மாதிரி ஆளுங்க எவ்ளோ சாட்சிய கொண்டு வந்து கொட்டுனாலும் மக்களோட குருட்டுப்பக்தி மாறாது” என்றார்.

தொடர்ந்து “அப்பிடி இருந்தும் நாங்க எல்லாரும் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படுறோம் தெரியுமா? என்னைக்காச்சும் நியாயம் ஜெயிக்கும்ங்கிற நம்பிக்கைல தான்” என்று சொல்லும் போது அவர்கள் இருவரின் எதிரே வந்தாள் ஸ்ராவணி.

அவளைக் கண்டதும் யசோதரா புன்முறுவல் பூக்க தயானந்திடம் தங்கள் சேனலுக்கு வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்தாள்.

“நீங்க இன்னைக்குச் சொன்ன தகவல் எல்லாம் புரியவேண்டியவங்களுக்குப் புரிஞ்சா நல்லது” என்றாள் பெருமூச்சுடன்.

தயானந்த் உதடு பிரிக்காமல் சிரித்தவர் “நீங்க யாருக்குப் புரியணும்னு நினைக்கிறீங்களோ அவருக்கும் இந்த டீடெய்ல் எல்லாமே தெரியும்… ஆனா அவர் முக்தி மேல ஆக்சன் எடுக்கமாட்டார்… ஏன்னா அவருக்கு ஓட்டு முக்கியம்” என்றார்.

ஸ்ராவணிக்கும் அது புரிந்தது. அபிமன்யூ நினைத்தால் இந்த ஏமாற்றுப்பேர்வழியைச் சிறையில் தள்ளமுடியும். ஆனால் அவன் செய்யமாட்டான்.

யசோதராவும் ஸ்ராவணியும் அவரது தொடர்பு விவரங்களை வாங்கிக்கொண்டவர்கள் தயானந்த் கிளம்பியதும் விஷ்ணுபிரகாஷிடம் வந்து நின்றனர்.

அவர்களை ஏறிட்டவன் என்னவென கேட்க இருவரும் வேண்டியது தாங்கள் ஏன் முக்தி ஃபவுண்டேசனின் யோகா முகமூடிக்குப் பின்னே இருக்கும் பொய் புரட்டுகளை வெளிக்கொணரும் முயற்சியில் இறங்கக்கூடாது என்பதை தான்!

அவன் அதிகநேரமெல்லாம் யோசிக்கவில்லை. உடனே சம்மதித்துவிட்டான்.

“பட் ஒன் கண்டிசன்! இது தனியா யாரோட பொறுப்புலயும் விடக்கூடிய இன்வெஸ்டிகேசன் இல்ல… இதை தனி ஆளால ஹேண்டில் பண்ண முடியாது… முதல்ல இதை பத்தி நம்ம டீம் கூட டிஸ்கஸ் பண்ணுவோம்” என்று கூறினான்.

இருவரும் விஷ்ணுபிரகாஷின் அறையிலிருந்து வெளியே வந்தவர்கள் அவரவர் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். ஆனால் இருவரது மனதிலும் முக்தி ஃபவுண்டேசனின் குற்றங்களை தங்களது வாழ்க்கைத்துணைவர்கள் புரிந்துகொள்ளும் நாள் வருமா என்ற கேள்வியே வியாபித்திருந்தது.

***********

அட்லாண்டிஸ் ஸ்டூடியோ…

“சோ நெக்ஸ்ட் வீக் குமரகம் போகலாம் ரியா… அந்த கபிளுக்கு போட் ஹவுஸ்ல வச்சு தான் ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் நடத்தணுமாம்… அந்த ஏரியால கட்டு வள்ளம் ஃபேமஸ்… அப்பிடியே நம்மளும் போய் சுத்திப் பாத்துட்டு வருவோம்” என்று தீவிரமாகத் தனது தோழியிடம் விவாதித்துக் கொண்டிருந்தாள் சாருலதா.

யாரோ கண்ணாடிக்கதவைத் தட்டும் சத்தம் கேட்க இருவரும் திரும்பினர். அங்கே இந்திரஜித் நின்று கொண்டிருந்தான். உள்ளே வருமாறு சாருலதா சைகை செய்யவும் வந்தவன்

“சீரியசான பிசினஸ் டாக்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று கேட்டபடி இருக்கையில் அமர்ந்தான்.

“பேசி முடிச்சதுக்கு அப்புறம் தான் வந்திருக்க ஜித்து” என்ற சாருலதா ரியாவின் பார்வை இந்திரஜித்தை வலம் வரவும் அவள் புஜத்தில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

அவள் வலியில் முகம் சுளித்துவிட்டு “ஏன்டி கிள்ளுன?” என்று பற்களைக் கடித்தவண்ணம் மெதுவாக வினவ

“நீ ஏன்டி ஜித்துவ திங்குற மாதிரி பாக்குற?” என்று கேட்டபடி முறைத்தாள் சாருலதா.

“ஒரு பையன் பாக்குறதுக்கு ஸ்மார்ட்டா இருந்தா சைட் அடிக்கத் தான் செய்வேன்… எல்லாரும் உன்னை மாதிரி சாமியாரிணியா இருக்கணுமா? போடி” என்றபடி எழுந்த ரியா புன்முறுவலுடன் இந்திரஜித்தின் பக்கம் திரும்பினாள்.

“ஹாய் இந்து! டுமாரோ நாங்க எல்லாரும் குமரகம் போறோம்… நீங்க எப்போவும் சாருவ தனியா விடமாட்டீங்களே! நீங்களும் வர்றீங்களா?” என்று கண்கள் மலர கேட்க இந்திரஜித்தின் முகமும் மலர்ந்தது.

“நீங்களே கூப்பிட்டதுக்கு அப்புறம் வராம இருக்கமுடியுமா? கண்டிப்பா வர்றேன் ரியா”

“ப்ரியா” என்று வேகமாக இடையிட்டாள் சாருலதா கண்கள் பளபளக்க. அதைக் கேட்டு இருவரும் கேள்வியாய் விழிக்க அவளோ

“இவளை நீ ப்ரியானு கூப்பிட்டா போதும்… அண்ட் யூ நீயும் இவனை இந்திரஜித்னு கூப்பிடு, சரியா? இந்து சந்து பொந்துனு சொல்லி அவனோட அழகான நேமை டேமேஜ் பண்ணாத” என்றாள் அதட்டலாக.

அதைக் கேட்டு ரியா என்ற ப்ரியா தோளைக் குலுக்கிவிட்டு “ஓகே! நாளைக்கு ட்ராவல் பண்ணுறப்ப மிச்சத்த பேசிக்கலாம் இந்திரஜித்… இங்க வாஸ்து சரியில்ல” என்று கேலியாக உரைத்துவிட்டு அகன்றாள்.

அவளுக்கு இந்திரஜித் கையசைக்கவும் வாயைப் பிளந்த சாருலதா வேகமாக அவனது கையைப் பிடித்து கடித்துவைத்தாள்.

“அவ்வ்! அடியே போன ஜென்மத்துல ஜெர்மன் ஷெப்பர்டா பிறந்தியா? ஏன்டி கடிச்ச?” கையை உதறியபடி கேட்டான் இந்திரஜித்.

“டாட்டாவா காட்டுற டாட்டா?” என்று முகம் சிவக்க முறைத்தவள் அவன் புஜத்தில் அடித்துவிட்டு கடந்து செல்ல வேகமாக அவள் முன்னே சென்று நின்றான் இந்திரஜித்.

“கம் ஆன் சாரு! ஷீ இஸ் வெரி கியூட்… அவளே பேசுறப்ப நான் மட்டும் ஊமையா நடிக்க முடியுமா?” என்று கேட்டான் அவன்.

சாருலதா அவனது கழுத்தை நெறிப்பது போல கரங்களை உயர்த்தியவள் பின்னர் தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று அதே கையால் தன் தலையில் மடேர் என அடித்துக்கொண்டாள்.

இந்திரஜித் அவளது செயல்களைக் கண்டு நகைக்க கடுப்புடன் திரும்பியவள் “சிரிக்காதடா! நீ இனிமே ரியா கிட்ட பல்லை காட்டுனனு வையேன், அதை பயோரியா பல்பொடி மாதிரி பவுடர் ஆக்கிடுவேன்” என்று கடுகடுத்தாள்.

இந்திரஜித் நமட்டுச்சிரிப்புடன் அவளைத் தள்ளிச் சென்று இருக்கையில் அமரவைத்தவன் தானும் மற்றொரு இருக்கையை இழுத்துப் போட்டு அவளருகே அமர்ந்தான்.

பின்னர் எதுவும் பேசாமல் கன்னத்தில் கைவைத்து அவள் முகத்தைக் குறுகுறுவென நோக்கவும் சாருலதா அசவுகரியமாக உணர்ந்தாள். அவளுக்கு என்ன தலையில் கொம்புகள் முளைத்துவிட்டதா? அல்லது பற்கள் தான் உதட்டைத் தாண்டி வளர்ந்துவிட்டதா? இப்படி கண்களால் ஸ்கேன் செய்யவேண்டிய என்ன அவசியம் வந்துவிட்டது.

எண்ணற்ற கேள்விகள் சரசரவென்று எழ அவள் கேட்பதற்குள் இந்திரஜித் முந்திக்கொண்டான்.

அவளது இருக்கையின் கைப்பிடியில் கரங்களை வைத்து அணை கட்டிவிட்டு அவளை நோக்கியவன்

“நீ என் ஃப்ரெண்ட் சாருலதா இல்ல… வேற யாரோ” என்றான் தீவிரக்குரலில். சாருலதா குழம்பி விழிக்கவும் அவளது நாசியை நிமிண்டிவிட்டு

“அவளுக்குப் பொறாமை படவே தெரியாது… ஆனா நீ அழகா அப்பட்டமா பொறாமை படுற… எவ்ளோ அப்பட்டமானா நீ ரியாவயும் என்னையும் பாத்த பார்வைல இருந்த ஃபயர்ல எனக்கே வேர்த்துடுச்சுனா பாரேன்” என்று கூறவும் சாருலதா புருவம் சுருக்கினாள்.

“எனக்கென்னடா பொறாமை? நீயும் என் ஃப்ரெண்ட், அவளும் என் ஃப்ரெண்ட்… நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ரூட் விடுறது பட்டவர்த்தனமா தெரியுது… அதனால சிங்கிள் பொண்ணு வயிறு எரியுது… அதோட ரிப்ளெக்சன் தான் ஃபேஸ்ல தெரிஞ்சுருக்கும்… மத்தபடி பொறாமைலாம் ஒன்னுமில்ல” என்று அவள் பார்வையை வேறுபக்கம் திருப்பியபடி அசட்டையாக மறுக்க

“பொய் சொல்லுறப்போ உன்னோட கண் என்னை பாக்காது சாரு” என்று அமர்த்தலாக கூறினான் இந்திரஜித்.

சாருலதா நெற்றியில் மெதுவாக குட்டிக்கொண்டவள் கண்களை இறுக மூடித் திறந்தவள் “ஐயா சாமி வந்த வேலைய பாரேன் ப்ளீஸ்” என்று வேண்டிக்கொள்ள

“இப்போ பேச்சை மாத்துற… எனி ஹவ் இப்போதைக்கு இந்த டாபிக்கை கேன்சல் பண்ணிட்டு உன்னோட சைட்ல என்னாச்சுனு பாப்போம்” என்று பெரிய மனது வைத்து தன்னை அவள் அழைத்த விசயத்தைப் பேச ஆரம்பித்தான் இந்திரஜித்.

சாருலதா நிம்மதியாக பெருமூச்சுவிட்டுக் கொண்டாள். பின்னர் அவனிடம் அவளது அட்லாண்டிசின் வலைதளத்தில் உண்டான கோளாறுகளைப் பட்டியலிட இந்திரஜித்தின் கவனம் அதன் பின்னர் கணினித்திரைப்பக்கம் குவிந்து விட்டது.

தனது சிறுபிள்ளைத்தனமான கோபமும், அசட்டுப்பொறாமையும் எதன் விளைவு என்று ஆழ்ந்து யோசித்து மூளையை வருத்த விரும்பாமல் தன்னருகே அமர்ந்திருந்தவனின் விசைப்பலகையில் பதிந்திருந்த நீளமான விரல்களையும் கணினியைத் துளைக்கும் கூர்விழிகளையும் அவளை அறியாது கவனிக்கத் துவங்கினாள் சாருலதா.

இவ்வளவு நேரம் அவள் செய்த அத்துணை வினோதங்களையும் மனதுக்குள் ரசித்தபடி எதுவும் அறியாதவனைப் போல காட்டிக்கொண்டு வேலையைத் தொடர்ந்தான் இந்திரஜித்.

மழை வரும்☔☔☔