☔ மழை 19 ☔

எந்த நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று கேமராவைப் பிடித்திருக்கும் கையின் நடுக்கம். சிலர் கேமராவின் ஷட்டரை அழுத்தும் போது கேமராவையே நகர்த்திவிடுவர்.  இதைத் தவிர்க்க ஆள்காட்டிவிரல் ஷட்டர் மீது இருந்தால் கட்டைவிரலால் கேமராவின் எதிர்பக்கத்தைப் பிடித்துக்கொண்டு இந்த இரு விரல்களுக்குமான இடைவெளி குறுகிடுமாறு செய்து ஷட்டரை இயக்கவேண்டும். மற்றொரு வழி கேமராவை உங்கள் உடலோடு ஒட்டினாற்போல வைத்துக்கொள்ளல். இரண்டாவதை விட முதல் வழி நல்லது.

                -புகைப்பட அனுபவங்கள் புத்தகத்தில் கல்பட்டு நடராஜன்

“நல்லா ஃபோர்சா பஞ்ச் பண்ணு பப்பு… ஹான் அப்பிடி தான்… இந்த பஞ்சிங் பேக் தான் உன்னோட ஆப்போனென்ட்னு நினைச்சு இன்னும் ஃபோர்சா குத்து பாப்போம்”

பஞ்சிங் பேக்கைப் பிடித்தபடி பெரிய நாற்காலி மீது ஏறி நின்று அதை குத்தும் மகனை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தான் மாதவன்.

பிரவின் பற்களைக் கடித்தபடி வேகமாக குத்த அவனை உற்சாகப்படுத்திய மாதவனுக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இவ்வாறு மனைவி மகனுடன் நாட்களைச் செலவளிப்பதில் பிடித்தம் அதிகம்.

அந்நாட்களில் தந்தையும் மகனும் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் வீடே அல்லோகலப்படும். சமைப்பதற்கு, வீட்டுப்பராமரிப்பிற்கு பணியாட்கள் இருப்பதால் மயூரியும் விடுமுறை நாட்களை மகனுடனும் கணவனுடனும் சேர்ந்தே கழிப்பாள்.

மூவருமாய் சேர்ந்து திகில் படம் பார்ப்பது, பிடித்த இனிப்பு வகைகள் சிற்றுண்டிகளைச் சமைப்பது, கடற்கரையில் விளையாடுவது என நாள் முழுவதும் உற்சாகமாகக் கழிப்பர்.

மாதவன் சினிமா சம்பந்தப்பட்ட சந்திப்புகள், பேட்டிகள், விழாக்கள் எதிலும் மனைவி மற்றும் மகனுடன் கலந்துகொள்வதில்லை. அது மயூரிக்குப் பிடிக்காது என்பதால் முன்னரே இருவரும் பேசி வைத்தது தான்.

அதே போல பிரவினின் புகைப்படம் தேவையில்லாமல் இணையத்தில் உலா வருவதில் மயூரிக்கு இஷ்டமில்லை என்பதால் அவனை இம்மாதிரி நிகழ்வுகளுக்கு அனுப்புவதில்லை அவள்.

இதோ இன்னும் சில மணி நேரத்தில் மாதவன் ஒரு விருது வழங்கும் விழாவுக்குக் கிளம்பவேண்டும். ஆனால் அவன் இன்னும் தயாராகாமல் மகனுக்கு குத்துச்சண்டை பழக்கிக் கொண்டிருந்தான்.

மயூரி அங்கே வந்த போது கைகளில் சிறிய சிவப்புவண்ண பஞ்சிங் கிளவுஸ் அணிந்து அவனை விட உயரமான பஞ்சிங் பேக்கை தொப்தொப்பென்று குத்திக்கொண்டிருந்தான் பிரவின். அவனருகே நின்றிருந்த மாதவன் அவனை இன்னும் வேகத்துடன் குத்தும்படி சொல்லிக்கொண்டிருந்தான்.

“அவார்ட் ஃபங்சனுக்குக் கிளம்பலயா மேடி?”

மனைவியிடம் மகனைக் காட்டியவன் “இன்னும் எங்களோட ப்ராக்டீஸ் செஷன் முடியல மய்யூ” என்று கூற பிரவினும் ஆமென்று தலையாட்டினான்.

“நாளைக்கு மீதி ப்ராக்டீசை பண்ணிக்கலாம்.. பப்பு கீழ இறங்கு… டாடி இன்னைக்கு அவார்ட் ஃபங்சனுக்குக் கிளம்பணும்” என்று கூறியபடி மகனை நாற்காலியிலிருந்து இறக்கிவிட்டாள்.

பிரவின் மாதவனின் கிளவுஸ் அணிந்த கரத்தில் குத்திவிட்டு “டுமாரோ நான் இதை விட ஃபோர்சா பஞ்ச் பண்ணுவேன்பா, இப்பிடி” என்று சொல்லவும்

“தட்ஸ் மை பாய்” என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டவன் மயூரி சொன்னபடி விருது வழங்கும் விழாவுக்குக் கிளம்பத் தயாரானான்.

தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனருக்கான நாமினேசனில் மாதவனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதில் தேர்வானதில் வயது குறைந்தவன் அவன் தான்.

அங்கே விருது கிடைத்தால் என்ன பேசவேண்டுமென யோசித்து முடித்தவனின் கண்ணில் அவனும் மயூரியும் பிரவினுடன் எடுத்த புகைப்படம் பட்டுவிடவும் அவர்களும் தன்னுடன் வந்தால் நன்றாக இருக்குமென்ற ஏக்கம் அவனுள் உதயமானது.

இத்தனை ஆண்டுகள் இல்லாத ஏக்கம்! மயூரி அவன் தயாராகி விட்டானா என்று பார்க்க வரவும் அவளிடம் கேட்டே விட்டான்.

“இன்னைக்கு நடக்கப்போற அவார்ட் ஃபங்சன்ல நான் தான் யங்கஸ்ட் நாமினேசன் தெரியுமா? ஆனா நீ ஃபங்சனுக்கு வரமாட்டேனு சொல்லுற… ஏன் மய்யூ இப்பிடி?” அங்கலாய்த்தபடி தனது முழுக்கை சட்டை மீது கருநீலவண்ண ப்ளேசரை அணிந்தான்.

அவனது கண் நிறைந்த தோற்றத்தை ரசித்தபடியே “ஏன்னா எனக்கு உன் சினி ஃபீல்டோட கேமரா ஃப்ளாஷ், பகட்டான பேச்சு, போலியான சிரிப்பு இதெல்லாம் பாத்தா அலர்ஜி மாதிரி ஃபீல் ஆகுது மேடி… இது தெரிஞ்சு தானே நீ என்னை லவ் பண்ணி மேரேஜூம் பண்ணுன… இப்போ அவார்ட் பங்சனுக்கு வானு சொன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டபடி அவனது மொபைலை எடுத்துக் கொடுத்தாள் மயூரி.

மாதவன் பெருமூச்சுவிட்டபடி அவளை ஏறிட்டவன் “நம்மள காதலிக்கிறவங்களுக்குகாக சில விசயங்களை விட்டுக் குடுக்கலாம் மய்யூ” என்றான்.

“ஆனா யாருக்காகவும் நம்மளோட இயல்பை மாத்திக்க முடியாது மேடி” என்றாள் அவனது மனையாள் தீர்மானமாக.

இதற்கு மேல் அவளை வற்புறுத்தும் எண்ணமற்றவன் “அட்லீஸ்ட் பப்புவ கூட்டிட்டுப் போகவாச்சும் பெர்மிசன் உண்டா?” என்று வினவி அவளை மேலும் கடுப்படித்தான்.

“நானே வரமாட்டேன்னு சொல்லுறேன்… இதுல என் பையனை மட்டும் எப்பிடி அனுப்புவேன்னு நினைச்ச நீ? அந்த பாப்பராஸி கிட்ட இருந்து எங்களோட ப்ரைவேட் லைஃபை காப்பாத்திக்க நான் எவ்ளோ பிரயத்தனப்படுறேனு எனக்குத் தான் தெரியும் மேடி… இந்த லைம்லைட்ல நீ மட்டும் நனைஞ்சா போதும்… நானும் என் மகனும் அதை ரசிக்கிற இடத்துல நிக்கத் தான் ஆசைப்படுறோம்” என்று அவள் விளக்கமளிக்க மாதவன் அவளது பதிலில் அமைதியானான்.

இது வழக்கமாக நடக்கும் விவாதம் தான். பிரபலங்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை இயல்பாக சாதாரண மக்களைப் போல வாழ முடிவதில்லை. காரணம் நம் மக்களுக்கு அவர்களின் பிரபலத்துவத்தின் மீதிருக்கும் கண்மூடித்தனமான வெறி!

அந்தக் குருட்டுப்பக்தி பொது இடங்களிலோ பொது நிகழ்வுகளிலோ பிரபலங்கள் பங்கேற்கும் போது அவர்களிடம் அன்பு என்ற பெயரில் எல்லை மீறுவது, புகைப்படம் எடுக்கிறேன் என அனுமதியின்றி நடந்து கொண்டு அவர்களை எரிச்சல் மூட்டுவது, அவர்களை காணும் ஆர்வத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது என பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுவது வழக்கம்.

இவை எதுவுமில்லாத அமைதியான இயல்பான வாழ்க்கையை மயூரியும் தனது மகனும் வாழட்டும் என எண்ணியவன் கடுப்பே உருவாக நின்றவளை தன் வசம் இழுத்து அணைத்துக் கொண்டான்.

“உடனே புரொபசருக்கு மூக்கு மேல கோவம் வந்துடுச்சா? என்னோட ஹேப்பியான மொமண்ட்ல நீ என் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேனே தவிர உனக்கு அது அன்கம்பர்டபிளா இருக்கும்னு யோசிக்கல.. ஐ அம் சாரி… நான் போய்ட்டு சீக்கிரமா வந்துடுறேன்.. அது வரைக்கும் தாங்குற மாதிரி ஒரு கிஸ் குடு பாப்போம்” என்று கன்னத்தைத் தட்டிக்காட்ட அவனது அருகாமையில் கோபம் தீர்ந்து இதழ் பதித்தாள் மயூரி.

கூடவே “பெர்பியூம் போடலயா மேடி?” என்று வினவ

அவனோ அவளது நாசியுடன் நாசி உரசியபடி “நீ இன்னும் கொஞ்சம் டைட்டா ஹக் பண்ணுனா உன்னோட பெர்பியூம் ஸ்மேல் என் மேல ஒட்டிக்கும்… வேஸ்டா என்னோட பெர்பியூமை ஏன் காலி பண்ணணும்? இதுல்லாம் சிக்கனம்மா… கத்துக்கோ” என்று அமர்த்தலாக மொழிந்தபடி இறுக அணைத்துக்கொண்டு அவளது டாம் ஃபோர்ட் வெல்வெட் ஆர்கிட் பெர்பியூமை வாசம் பிடித்தான்.

மயூரி அவனது அணைப்பில் நெகிழ ஆரம்பித்தவள் “மேடி டைம் ஆச்சு… எவ்ளோ நேரம் ஹக் பண்ணிட்டு நிக்குறதா உத்தேசம்?” என்று மிகவும் மெல்லிய குரலில் கேட்க

“ப்ச்… நானா மாட்டேனு சொல்லுறேன்… பாழாப்போன மனசு உன்னை ஹக் பண்ணுனா விலக விடமாட்டேங்கிறது மய்யூ… வாட் கேன் ஐ டூ?” என்று கொஞ்சியபடி அவள் கழுத்து வளைவில் இதழ் பதித்தான்.

மயூரிக்கு அவனது தாடை ரோமங்கள் கூச்சமூட்டவே சிரித்தபடி விலகியவள் “நானே விலகிட்டேன்… இப்போ போகலாம் தானே” என்று கேட்டுவிட்டுக் கண்ணைச் சிமிட்டினாள்.

“மயூரி மீன்ஸ் மெர்சிலெஸ் பொண்ணுனு என்னோட டைரில குறிச்சு வச்சுக்கிறேன்” என்று வராத கண்ணீரைத் துடைப்பது போல நடித்தவனைப் பார்த்து கலகலவென அவள் நகைக்க அந்நேரத்தில் சித்தார்த் மாதவனது மொபைலுக்கு அழைத்தான்.

அவனிடம் தனக்கும் யசோதராவுக்கும் இடையே இருந்த குட்டிச்சண்டை முடிவடைந்ததை சித்தார்த் பகிர்ந்துகொள்ள அச்செய்தி அடுத்த நிமிடம் மயூரிக்குப் பகிரப்பட அவளும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

மாதவன் போன் பேசியபடி அவளுக்குக் கையசைத்துவிட்டுக் கிளம்ப மயூரி மைந்தன் அவனது அறையில் என்ன திருவிளையாடல் செய்கிறானோ என்று கவனிக்கச் சென்றுவிட்டாள்.

************

லோட்டஸ் ரெசிடென்சி…

“அக்கா இன்னும் டூ டேய்ஸ்ல காம்படிசன் ரிசல்ட் வந்துடும்… அதை நினைச்சாலே மனசு படபடங்குது” கண்ணிமைகளைக் கொட்டியபடி ஹேமலதாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் சாருலதா.

தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கீழ் இயங்கும் போட்டோ டிவிசன் ஆண்டு தோறும் புகைப்பட கலைஞர்களுக்காக வைக்கும் போட்டியில் சாருலதா கலந்துகொண்டாள். அந்த போட்டி முடிவு பற்றிய அறிவிப்புக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அதைப் பற்றி தான் ஹேமலதாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“இதுல நீ ஜெயிச்சனா ஃபிப்டி பர்சென்டேஜ் கிரெடிட் ஜித்துக்கும் போகணும்… அவன் தானே உனக்கு ஹெல்பா கூட வந்தவன்” என்ற ஹேமலதா தங்கையிடம் சாந்தநாயகிக்காக போட்ட கஷாயத்தை நீட்டினாள்.

“அத்தை கிட்ட குடு… அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்… நீ லஞ்ச் முடிச்சிட்டு ஸ்டூடியோக்குப் போறீயா?” என்று கேட்டவளிடம் மறுத்தாள் சாருலதா.

“ஆன்ட்டிக்கு உடம்பு நல்லா இருந்துருச்சுனா இன்னைக்கு மணத்தக்காளி குழம்பு வச்சு தந்திருப்பாங்க… ப்ச்… அந்தச் சோகத்த வெளிய சாப்பிட்டுத் தீத்துக்கிறேன்… நான் கிளம்புனதும் நீ டயர்டா இருக்குனு தூங்கிடாதக்கா… டே டைம்ல தூங்கி நீ இப்போ ரொம்ப வெயிட் போட்டுட்ட… தூங்கணும்னு தானே எல்லா வேலையையும் மானிங்கே முடிச்சிட்ட?” என்று அவளைக் கேலி செய்த தங்கையின் தலையின் குட்டினாள் ஹேமலதா.

“நான் குண்டா இருக்கேனா? கௌதம் அப்பிடி சொல்லவேல்லயே?” என்று சொல்லிவிட்டு தன்னைத் தானே மேலிருந்து கீழ் வரை சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டாள் அவள்.

அப்போது மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு கௌதம் வந்துசேர்ந்தான். இரு குழந்தைகளும் இவ்வளவு நேரம் லோட்டஸ் ரெசிடென்சியின் நீச்சல்குளத்தில் மீன்குஞ்சுகளாய் நீந்தி களைத்திருந்தனர்.

“நீங்க இவங்களுக்கு பெர்மனன்ட் ஸ்விம் ட்ரெய்னராவே மாறிட்டீங்க மாமா” என்ற சாருலதாவின் கேலிக்குப் புன்சிரிப்பை உதிர்த்தான் கௌதம். குழந்தைகள் இருவரும் சாருலதாவைப் பார்த்து நாக்கைத் துருத்திக்காட்டவும் அவள் ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்டினாள்.

ஹேமலதாவோ முதலில் கவனித்தது குழந்தைகளின் தலையைத் தான். இருவருக்கும் தலையில் ஈரம் நின்றால் ஜலதோசம் பிடித்துவிடும் இத்தனைக்கும் தலையைத் துவட்டிய பிறகு தான் அழைத்து வந்திருந்தான் கௌதம். இருப்பினும் இன்னொரு துவாலையால் அவர்களது தலையைத் துவட்டிய ஹேமலதா கௌதமிடம் ஈரமான உடையை மாற்றும்படி கட்டளையிட அவனும் அறைக்குள் சென்றுவிட்டான்.

“மம்மி நானும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கிறேன்” என்று நந்தன் ஓடிவிட இலக்கியாவிற்கு அவளே உடை மாற்றிவிட்டாள்.

“போய் அண்ணா கூட விளையாடு” என்று அவளை அனுப்பிவைத்தவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் சாருலதா.

தமக்கையின் ஃப்ளாட்டை விட்டு வெளியே வந்தவள் தங்களது ஃப்ளாட்டிற்கு சென்று அவள் வைத்துக்கொடுத்த கஷாயத்தைச் சாந்தநாயகிக்குக் கொடுத்துவிட்டு அவர் குடித்துவிட்டு கண்ணயர்ந்ததும் ஸ்டூடியோவிற்கு கிளம்பினாள்.

மின்தூக்கியை நோக்கி சென்றவள் மீது யாரோ இடித்துவிட சாருலதா தடுமாறி விழப் போனாள். பின்னர் சுதாரித்து நின்றவள் இடித்தவர் யாரென பார்க்க அங்கே நின்று கொண்டிருந்தவர் அவர்களது தளத்தில் இருக்கும் கடைசி ஃப்ளாட் ஜானகி.

கணவரை இழந்த அப்பெண்மணியின் வீட்டில் அவரும் மருமகளும் மட்டும் தான். மகன் கடந்தாண்டு விபத்தில் மறைந்துவிட மருமகளும் அவருமாக மட்டும் அங்கே தங்கியிருந்தனர். அந்த மருமகப்பெண் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியவர் திடீரென அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதிலிருந்து ஜானகி தனியாக தான் இருக்கிறார்.

அவரது மருமகள் சென்ற தினத்திலிருந்து அப்பெண்மணி தளர்ந்து போனார். எப்போதாவது எதிர்பட்டால் புன்சிரிப்புடன் கடப்பார். அப்படிப்பட்டவரின் கண்கள் கலங்கியிருப்பதைக் கவனித்த சாருலதா

“என்னாச்சு ஆன்ட்டி? ஏன் அழுறீங்க? எதுவும் பிரச்சனையா ஆன்ட்டி?” என விசாரிக்க அவரோ ஒன்றுமில்லையென தலையாட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து அவரது ஃப்ளாட்டை நோக்கி சென்றுவிட்டார்.

சாருலதாவிற்கு அவரது செயல்கள் ஐயத்தையும் குழப்பத்தையும் கொடுத்தது. ஆனால் ஸ்டூடியோவிலிருந்து அவளது தோழி மொபைலில் அழைக்கவும் அப்போதைக்கு ஜானகியை தற்காலிகமாக மறந்து போனாள்.

************

ஜஸ்டிஷ் டுடே…

கான்பரன்ஸ் ஹாலில் மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. விஷ்ணு பிரகாஷ் தீவிரமாக விவாதித்தது தற்போதைய அரசின் செயல்பாடுகளைப் பற்றி தான்.

அங்கே வழக்கம் போல அவனது குழுவினர் அனைவரும் அமர்ந்திருக்க ஸ்ராவணியும் மேனகாவும் யசோதராவை அடுத்து அமர்ந்திருந்தனர்.

“பொதுவா ஸ்டேட் கவர்மெண்டோ யூனியன் கவர்மெண்டோ எந்த ஒரு மதத்தையும் சார்ந்து இருக்குறது இந்திய அரசியல்ல வழக்கமில்ல… ஆனா இப்போ இருக்குற தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட மதத்துல இருக்குற ஒரு காட்மேனுக்கு ஆதரவா செயல்படுதுனு ஒரு பேச்சு அடிபடுது… அரசாங்கத்தோட இந்தச் செயல்பாடு செக்யூலரிசத்தை கேள்விக்குறியாக்குது… இதை பத்தி நம்ம ரியாலிட்டி செக் ஷோல பேசுனா நல்லா இருக்கும்ங்கிறது நாராயணன் சாரோட ஒபீனியன்… இந்த டாபிக் கவர் பண்ணுறதுல உங்க யாருக்காச்சும் மாற்றுகருத்து இருக்குதா?” என்று கேட்டுவிட்டு அனைவரையும் கேள்வியாய் நோக்கினான் விஷ்ணுபிரகாஷ்.

சுலைகா மெதுவாக தொண்டையைச் செருமியவள் “சீஃப் ரூலிங் பார்ட்டி பத்தி பேசுனா அது கான்ட்ரோவெர்சி ஆகாதா? சி.எம் முன்ன மாதிரி இல்ல, அவரோட செயல்பாடுகள்ல பாஸ்ட் டூ இயர்சா நிறைய சேஞ்சஸ் தெரியுது… மக்களோட சப்போர்ட்டும் அவருக்கு இருக்குறப்போ நம்ம இந்த மாதிரி ரியாலிட்டி செக் ப்ரோகிராம் பண்ணுனா வேற எதுவும் பிரச்சனை வந்துடாதா?” என்று கேட்க

“ம்ம்… ப்ராப்ளம் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு… நம்மளோட நடுநிலையை சந்தேகப்பட்டு ட்விட்டர்ல மோசமா நம்மளை திட்டுவாங்க… தேவை இல்லாத ஹேஸ்டேக்ஸ் ட்ரெண்ட் ஆகும்… நம்மளோட நேர்மை கூட கேலிப்பொருளாகும்… இத்தனை வருசத்துல இதை மாதிரி நிறைய கான்ட்ரோவெர்சிய நம்ம சந்திச்சிட்டோம்… சோ இது நமக்குப் புதுசில்ல… என்ன, இந்தத் தடவை சி.எம்கு மக்களோட சப்போர்ட் இருக்கு” என்றான் விஷ்ணுபிரகாஷ்.

அப்போது இடையிட்டது ஸ்ராவணியின் குரல்.

“மக்களோட சப்போர்ட் அவருக்கு இருக்குறதால தான் இந்த டாபிக்கை பத்தி ரியாலிட்டி செக் ஷோல பேசணும்னு நான் நினைக்கிறேன் சீஃப்…. ஏன்னா மக்களோட நம்பிக்கைய ஜெயிச்ச முதல்வர் போலிகளோட பக்கம் நின்னா அது மக்களுக்குத் தப்பான வழிகாட்டுதலா போய் முடியும்… அவரை நம்புற மக்கள் அந்த காட்மேனையும் நம்புவாங்க சீஃப்… சோ இந்த புரோகிராம்ல கவர்மெண்டை விமர்சிக்கிறதுல எந்தப் பிரச்சனையும் வராதுங்கிறது என்னோட ஒபீனியன்” என்று தெளிவாக இயம்பி முடித்தவளை விஷ்ணுபிரகாஷ் பெருமிதம் பொங்கும் விழிகளால் பார்த்துவிட்டு அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகும் யசோதராவிடம் திரும்பினான்.

“ஆர் யூ ரெடி?”

“யெஸ் சீஃப்… இது சம்பந்தமா நம்ம ரியாலிட்டி செக் ஷோக்கு வரப் போற கெஸ்ட் யாரு?”

“சோஷியல் ஆக்டிவிஸ்ட் மிஸ்டர் தயானந்த்” விஷ்ணுபிரகாஷ் முடிக்கவும் ஸ்ராவணி யோசனையில் ஆழ்ந்தாள்.

யசோதராவோ உற்சாகமாகச் சம்மதித்தாள். கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கு முன்னர் தொலைபேசி ஆடியோ வெளியான வழக்கில் கைதான அதே தயானந்த் தான், இப்போது முழு நேர சமூக ஆர்வலராக மாறிவிட்டார்.

இப்போதும் தைரியமும் நேர்மையும் மிளிர தவறு செய்பவர்களைப் பற்றி தனது தளத்தில் கட்டுரைகளை எழுதுவது, அது தொடர்பாக வழக்கு தொடர்வது என சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களைத் தட்டி கேட்பவர் அவர். அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் தைரியமாக விமர்சிப்பவர் என்பதால் அவரை அந்த நிகழ்ச்சிக்கு வரவழைக்கலாம் என்று விஷ்ணுபிரகாஷ் மற்றும் அவனது குழுவினர் ஏகமனதாகப் பேசி முடிவெடுத்தனர்.

அந்த நிகழ்ச்சிக்கு நெறியாளராக யசோதராவே இம்முறையும் தொடர்வாள் என்று மீட்டிங்கின் முடிவில் பேசிமுடித்துவிட்டு அனைவரும் கலைந்தனர். ஸ்ராவணி மட்டும் யோசனையுடன் அவளது கேபினை அடைந்தாள்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் தமிழக அரசு ஏன் அந்தக் குறிப்பிட்ட ஆன்மீகவாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை பற்றி மக்களுக்கு விளக்குவதே! தமிழக அரசு என்பது பெயருக்குத் தான், அங்கே அவர்கள் பேசப்போவது தமிழக முதல்வரைப் பற்றி!

தமிழக முதல்வரைப் பற்றியோ அவர் இந்நிகழ்ச்சியைப் பற்றி என்ன நினைப்பார் என்பதை பற்றியோ ஸ்ராவணிக்கு என்ன கவலை என நீங்கள் கேட்கலாம்! அவளுக்கு முதல்வர் பதவியைப் பற்றிய கவலை இல்லாது போகலாம்! ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவளது கணவன் அபிமன்யூவைப் பற்றி அவள் கவலை கொள்வாள் தானே!

மழை வரும்☔☔☔