தேன் மழையிலே – 1

தேன் மழையிலே
ஆர்த்தி ரவி

அத்தியாயம் 01:

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!

மார்கழி மாதம், இருள் பிரியாத அதிகாலை நேரம். தேன்மொழியின் இனிய குரல் மெலிதாகப் பாசுரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

அவளுக்குச் சிறு வயதிலிருந்து உயிரான இந்த மாதம், இப்போதெல்லாம் எந்த உவகையையும் தருவதில்லை.

இனி இப்படித்தான் இருக்கப் போகிறது. எதையும் மாற்ற முடியாது என்று அவளுக்கு உறுதியாகத் தோன்றியது. எதை நினைப்பது எதை நினைக்காமல் இருப்பது? புரியாமல் தவிப்புத்தான் சூழ்ந்தது.

மாற்றம் ஒன்று தான் மாற்றமின்றி நிகழ்ந்துகொண்டு வருவது. இதை இப்போது போய் அவளிடம் எடுத்துச் சொன்னாலும் உணர்ந்து கொள்வாளா?

படுக்கையைவிட்டு எழுந்ததுமே தலைக்குக் குளித்திருந்தாள். முதுகில் புரண்டு விளையாடிய அடர்த்தியான கூந்தலில் வழிந்த நீர்த்திவலைகளை மட்டும் பிழிந்துவிட்டு அப்படியே கத்தரிப்பூக்களிட்ட ஒரு வெள்ளைத் துவாலையில் முடிந்து வைத்தாள்.

அந்த இளமனதில் எத்தனை எத்தனை உணர்வுகள்… எல்லாம் அவளுக்குள்ளேயே தான் அடைந்திருந்தது. உணர்வுகளை உள்ளே வைத்துப் போராடவிட்டு வளைய வந்தாலும், அவை வெளியே தெரியவில்லை. அப்படியொரு நிர்மலமான முகத்துடன் இருந்தாள்.

காதோரம் சுருண்டிருக்கும் கூந்தல் கற்றை ஒன்று அவளின் கன்னத்தைத் தொட்டுத் தொட்டு உறவாடிக் கொண்டிருந்தது.

அந்தத் தோலின் பளீர் நிறத்திற்கு புருவங்களின் கருமையும், ஒற்றைக்கற்றைச் சுருளின் கருமையும் அவளின் அழகை மேலும் எடுத்துக்காட்டுவதாய்த் தெரிந்தது.

‘எப்படிப்பட்ட அழகுடையவளாக இருந்தும் என்ன செய்ய? மனம்? அதில் என்ன இருக்கிறது? வெறுமையாக இருக்கிறதா? இல்லை நினைவுப்பெட்டகமாகத் திகழ்கிறதா? அதனை உயிர்ப்பித்தால் அல்லவா முழு அழகு?’

வீட்டின் முன் பக்கம் போனவள் வாசலுக்குப் போகாமல், வீதியைக் காண்பதற்கு ஏதுவாக வெராண்டாவில் சற்று ஓரமாக நின்றிருந்தாள்.

அவளின் அழகிய விழிகள் வீதியில் பதிந்திருந்தன. கரிய நீள் இமைக்காம்புகள் படபடத்துக் கொள்ள, கருமணிகள் உருண்டு ஆசையாக எதிர் வீட்டு ரங்கோலி கோலத்தின் அழகை உள் வாங்கிக் கொண்டிருந்தன.

அவளின் நாசியினது வெடவெடப்பில் இதழ்களிலும் சிறு துடிப்பு. அதே நேரம் அந்தக் கைகளும் பரபரத்தன.

மூளைக்குள்ளே பல கோலங்களும் புள்ளிக்கணக்குகளும் வந்து வந்து போக, ஓர் ஏக்கம் பிறந்தது. அதைப் பார்ப்பவர்கள் அந்த நேரம் யாரும் அருகிலில்லை. ஏக்கம் பிறந்த சடுதியில் விழிகளில் நீர்த்திவலைகள் கோர்த்துக் கொண்டன.

‘தேனுன்னா இனிப்புச் செல்லம். என் செல்லம் எப்போதும் ஸ்வீட்டா இருக்கணும். சிரிடி தேன் மிட்டாய். ப்ளீஸ்!’

‘என் தேனுக்கு இந்தச் சிரிப்பு ஆண்டவன் கொடுத்திருக்கும் பெரிய பரிசு. அதை எப்பவும் விட்டுடாத. ம்ம்…’

‘எந்தச் சூழ்நிலையிலும் உன் மனசை விட்டுடாத தேனம்மா. இனி இந்த சூர்யாவின் தைரியமும் உன் கூடவே வரும். வரணும். இதையும் ஞாபகத்தில் வச்சிக்கோ.’

‘சிரிப்பும் தைரியமும் என் செல்லத்தின் சொந்தம். உன் இனிமையை எப்போதும் கைவிட்டுடக் கூடாது. புரிஞ்சுதா?’

காதோரம் அக்குரல் இன்னும் ஒலிப்பதாகவே அவளுக்குப்பட்டது. தோளில் வலிய கரம் ஒன்று அழுத்தம் கொடுப்பதாக உள் உணர்வு சொன்னது!

அக்குரலும் அழுத்தமும் ஏற்படுத்திய உணர்வின் சிலிர்ப்பில் கண்களில் வழிந்த கண்ணீரை வேகமாகத் துடைத்துக் கொண்டாள்.

‘நான் அழறேனா? எதுக்கு இந்த அழுகை வருது? அழ மாட்டேன்… நான் அழலை சூர்யா. நீ சொன்ன மாதிரி எப்பவும் தைரியமா இருப்பேன்.’

தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, தனக்குள்ளே தைரியம் சொல்லிக் கொண்டாள்.

அந்தக் குரல் தான் அவள் உயிரின் பிடிப்பு. சில வருடங்களாக அவள் வாழ்க்கையை முன்னால் நகர்த்தி வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அத்துடன் பெற்று வரும் தைரியத்தைப் பற்றிக்கொண்டு காலத்துடன் உருண்டு கொண்டிருக்கிறாள்.

என்றும் போல் இன்றும் நெஞ்சத்தில் இனிமையைப் படரவிட்டுத் தெளிந்தாள் தேன்மொழி.

அதே நேரம் வீட்டிற்குள்ளே… அந்த மனிதர்… வெற்றிமாறன் என்ற பெயரையுடையவர் ஒரு குல்லாவை இழுத்து தலையில் போட்டபடி படுக்கையறையிலிருந்து வெளியே வந்தார்.

“ஸ்ஸ் ப்பா என்ன இந்த வருசம் இப்படிக் குளிருது…” சொன்னபடி கைகள் இரண்டையும் தேய்த்துவிட்டுக் கொண்டார்.

அவருடைய குரலைக் கேட்டுச் சமையலறையிலிருந்து வெளியே வந்தார் வனிதா. வெற்றிமாறனின் மனைவி.

“ஆமா நம்ம இருக்கிறது ஊட்டி பாருங்க. அப்படித்தான் குளிரடிக்கும்!”

நக்கலாகச் சொன்ன மனைவியை முறைத்துப் பார்த்தார் வெற்றி.

“பின்ன என்னங்க… சென்னைல குளிருதுன்னு சொன்னா சிரிப்பால்ல இருக்கு.”

“மாட்டுத்தோலுக்கு எப்படிக் குளிரும்? இப்ப பேஞ்சிட்டு இருக்கிற பனி உனக்கு உறைக்காதுன்னு மறந்து போயி வாயை விட்டுட்டேன்.”

“என்னை மாடுன்னு சொல்றீங்களா? நான் மாடுன்னா நீங்க எதுல சேர்த்தி?” உடனே கோபம் பொங்க பல்லைக் கடித்தபடி கணவனை அனல் பார்வை பார்த்து வைத்தார் வனிதா.

அந்த அனலைத் தவிர்க்கவோ என்னவோ, “நீ மாடுன்னா என்னைய வேணும்னா காங்கேயம் காளைன்னு சொல்லிட்டுப் போவியா?” பதிலுக்கு வெற்றி பேச,

“நீங்க… காங்கேயம்… காளை! க்கூம்… காளையார் காட்டு எருமன்னு வேணும்னா உங்களைச் சொல்லலாம்.” ‘உனக்குச் சளைத்தவளா நான்?’ மெத்த பார்வையுடன் வனிதாவும் விடாமல் பதில் கொடுத்தார்.

“பார்த்தியா சந்தடி சாக்குல என்னைய எருமங்கிற. எத்தனை நாளா மனசுக்குள்ள வச்சே எருமன்னு திட்டிட்டிருந்த… இன்னைக்கு இந்த எருமை வெளிய வந்திருக்கு. சரி தான். இனிப் புதுசு புதுசா திட்டு விழுகுமோ?” யோசனை செய்வது போல் வெற்றி நாடியைத் தட்டிக்கொள்ள,

“உங்களை…!” விடாமல் கோல் போட்டு என்ஜாய் செய்து கொண்டிருந்த கணவரை முடிந்த மட்டும் வனிதா முறைத்து வைத்தார்.

“அதுக்கு எதுக்கு உங்களைன்னு இந்த இழுவை இழுக்கிற? என்ன செய்யப் போற வனிதா? முத்தம் வைக்கப் போறியா? இப்ப வேணாம். ராத்திரி வேணும்னா வச்சிக்கோ!” போனா போகுது பாவனையில் கிண்டலாகச் சொன்னார் வெற்றி.

கண்டனத்துடன் ஒலித்த வனிதாவின் குரலைக் கேட்டுப் பேச்சை திசை திருப்பிவிட்ட திருப்தியுடன் வெற்றிமாறன் தனது வழமையான காலை நடைபயிற்சிக்குத் தயாரானார்.

சில காலமாக அதிகமான வலியை அவர்கள் இருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். கணவரின் இத்தகைய பேச்சுக்கள் வனிதாவுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் தருகின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.

இதுவும் இல்லாது இருந்தால், வீட்டில் மூச்சு முட்டி நெஞ்சு வெடித்துவிடும் அபாயம் இருந்தது. இருவரும் தங்களின் வேதனையை இப்படிப்பட்ட வார்த்தையாடலில் கரைக்க முற்படுகின்றனர் என்று அவர்களைச் சூழ்ந்திருக்கும் காற்றுக்குக் கூட வெளிச்சம்.

“என்னங்க, காபி குடிச்சிட்டுப் போங்க. அஞ்சே நிமிசம்… இதோ டிகாசன் இறங்கட்டும். ஸ்ட்ராங்கா ஒரு கப் போட்டுக் கொண்டுட்டு வரேன்.” கணவர் வெளியே கிளம்புவது உறைக்க, வனிதா அவசரமாகச் சொன்னார்.

“வாக்கிங் போயிட்டு வந்து குடிச்சிக்கிறேன் வனிதா. இப்ப ஒரு டம்ளர் வெந்நீர் மட்டும் கொண்டு வா.”

“அவசரமா உங்களுக்காகத் தான் பில்டர்ல டிகாசனை இறக்கிட்டு இருக்கேன். இப்ப வேண்டாம்ன்னு சொன்னா அப்புறம் நீங்க வந்து கேட்கிறப்ப திரும்ப வேற புதுசா இறக்கணும். இருந்து குடிச்சிட்டே கிளம்புங்கப்பா.

எப்ப பாரு எதையாவது சிந்தனை செய்ய வேண்டியது. அடிக்கடி உங்க மனசும் சரியில்லை. நைட்டும் ஒரே யோசனையில் இருந்தீங்க. டிபன் வேண்டாம்ன்னுட்டீங்க. ஏன்னு கேட்டா வயிறு சரியில்லைன்னு ஒரு காரணத்தைச் சொன்னீங்க.

கொஞ்சமா சூடா காபி குடிச்சிட்டுப் போனா குளிருக்கு நல்லாயிருக்கும். எனக்கும் மனசு நிம்மதியா இருக்கும். சுகரு, பிபின்னு வச்சிக்கிட்டு நீங்க பண்றது கொஞ்சங்கூடச் சரியில்லை. எதையாவது இழுத்து வச்சுக்காதீங்கப்பா.”

“ஏன்டி காலங்கார்த்தாலேயே புலம்புற. டிகாசன் இந்நேரத்தில் இறங்கி இருக்கும். போ போ… போயி காபியே கலந்து எடுத்துட்டு வா. அப்படியே குடிக்க வெந்நீரும் வேணும்.

தேன்மொழி எழுந்துட்டாளா? அவ காதுல நீ புலம்புறது விழுந்துற போகுது. நீ இப்படிப் புலம்பி வச்சே, அவ இன்னுமே ரொம்ப வேதனைப்பட போறா.”

“தேனு தானே, எப்பவோ எழுந்திருச்சிக் குளிச்சும் முடிச்சாச்சு. மார்கழி மாசம் வழக்கம் போல இதை மட்டும் அவ விடலை. நம்ம பேசுறது அவளுக்குக் கேட்டா இப்ப என்ன கெட்டுப் போச்சு. நல்லாக் காதுல விழட்டும். அப்ப தானே நம்ம மனசு அவளுக்கும் தெரியும். நாமளும் அவகிட்ட பேசத் தோதா இருக்கும்.”

“வனிதா! அவ நம்ம மக. இப்படியே பேசி அவ வேதனையைக் கூட்டுற! அப்படி அவ என்ன தப்பு செஞ்சுட்டா? நல்லது செய்றேன்னு நீ சும்மா அவளைக் குத்திக் காட்டிப் பேசாம இரு. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். எப்படிப் பேசணுமோ அப்படிப் பதமா பேசிக்கிறேன்.”

“எப்பவும் நான் தான் தப்பு. என்ன சொன்னாலும் என் வாயை அடைச்சிடுங்க. ஒரு அம்மாவா மகளைப் பத்தி நான் என் மனக்கவலையை வெளிய சொல்லக் கூடாதா?”

“தாராளமா சொல்லு. யாரு சொல்லக் கூடாதுங்கிறா? ஆனால், எதுக்கும் வரைமுறை நேரங்காலம்னு இருக்கில்லை. அவளைப் பெத்த தாய் நீ! அதையும் மனசுல வச்சிக்க. எப்ப பார்த்தாலும் மாற்றாந்தாயைப் போல வெடவெடக்கறது… அதைத்தான் வேணாங்கிறேன்.

அடுத்தவங்களை விட, பெத்தவங்க பேசுற வார்த்தைகள் பிள்ளைங்க மனசுல பசுமரத்தாணி மாதிரி பதிஞ்சிரும். அவங்க காலத்துக்கும் அந்தப் பேச்சுக்களை மறக்க மாட்டாங்க. எப்ப அந்த ஞாபகம் வந்தாலும் அவங்க மனசு வேதனைப்படும். சும்மா சும்மா கடுகடுக்காம நல்லாப் பக்குவப்பட்டவளா பேசுங்கறேன்.” வெற்றி பொறுமையாக மனைவிக்குச் சொல்ல,

“சரி சரி விடுங்க… காலங்காத்தால உங்க பேச்சைக் கேட்டுட்டு நிக்க எனக்கு நேரமில்லை!” வனிதாவோ அதைக் கேட்டுப் புரிந்து கொண்டாலும் கொஞ்சம் அலட்சியத்தைக் காட்ட,

“இப்ப டாபிக்கை ஆரம்பிச்சதே நீ தானே? நான் என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேட்டுக்காம ஊடால நேரமாச்சுங்கிற? பொறுடி… நின்னு கேட்டுட்டுப் போ அவசரக்குடுக்கை.” வெற்றி வைத்தார்.

“சரி இந்தா சோஃபால்ல உட்கார்ந்திட்டேன். நீ சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிங்கப்பா.” ‘முடியலை போ…’ பாவனை வனிதாவிடம். அவரும் தான் என்ன செய்வார்? பிறவிக்குணம் தலைதூக்கத்தான் செய்தது.

“உனக்கும் தேனுக்கும் எப்பவும் நல்லவுறவு இருக்கணும். பொண்ணுங்க நெருக்கமா உணருறது அம்மாகிட்ட தான். நம்ம வீட்ல உங்குணத்தால தலைகீழா போயிட்டு இருக்கு.” வருத்தப்பட்டார் வெற்றி.

“எதுவும் தலைகீழா போகலை. தலை முழுகியும் போகலை. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்னு பழமொழியே இருக்கு. க்கூம்…”

“பாத்து மெதுவா கழுத்துச் சுழிக்கிக்கப் போகுது! நம்ம பொண்ணு மாடுமில்லை, நீ மாட்டுக்காரனுமில்லை. எங்குல தெய்வம்டி என் தேன்மொழி! பழமொழின்னு கண்டதையும் பேசி எங்கோவத்தைக் கிளப்பிவிட்றாத!”

‘எதுவும் பேசிப் புரிய வைக்க முடியாது இவகிட்ட. தண்டக்கருமாந்திரம்! இவ அப்பனைச் சொல்லணும். எந்தலைல கட்டி விட்டுட்டார். படிச்சவளாட்டம் பக்குவமா ஒரு பதமான பேச்சிருக்கா?’

தன்னை முறைத்தபடி நிற்கும் கணவரின் மைண்ட் வாய்ஸ் எல்லாம் வனிதாவை எட்டவே எட்டாது. அவரின் மேக் அப்படி!

“இந்தத் தடவை நான் ஒன்னும் பேசலைப்பா. விட்டிடறேன். நீங்களாச்சு உங்க மகளாச்சு. அவ லீவு முடிஞ்சு ஊருக்குப் போறதுக்குள்ள எல்லாமும் பேசி அவளைச் சரி கட்டினா சரி தான்.” அந்த முறைப்பைச் சகிக்க முடியாது விட்டுக் கொடுத்தார்.

“சரி. சமயம் பார்த்து நானே பக்குவமா எடுத்துச் சொல்றேன். இப்ப தேன்மொழி எங்க இருக்கா?”

“இந்நேரத்தில வேற எங்க இருக்கப் போறா, வாசப்பக்கம் போய்ப் பாருங்க.”

வெற்றிமாறன் முன்புற வாயிலை நோக்கிப் போக வனிதா மகளைப் பற்றி நினைத்துக் கொண்டே தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.

“குட் மார்னிங் கண்ணம்மா!”

“அப்பா! குட் மார்னிங்ப்பா!”

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமில்லடா?”

“மார்கழி மாசம்ப்பா. எப்பவும் போல முழிப்பு வந்துருது.”

மெல்லிய புன்னகையின் ஊடே வெளி வந்த மகளின் இனிய குரலில் வெற்றிமாறன் நெகிழ்ந்து போனார். மகளின் கன்னத்தை வருடியவரின் கரம் அப்படியே அங்கே அருகிலிருந்த கோலப்பொடி கிண்ணத்தை எடுத்தது.

“அப்பா!” அதிர்ந்தாள் தேன்மொழி.

அவளிடம் நீட்டப்பட்ட கோலப்பொடியை வெறித்த பார்வையால் பார்த்தவளைக் கண்டு அத்தந்தைக்குத் துயரம் நெஞ்சடைத்துக் கொண்டு வந்தது. நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டார்.

“போடா, ஒரு சின்னக் கோலத்தைப் போட்டு விட்டுட்டு வா. உங்க அம்மா கோலம்ங்கற பேருல சும்மா கோடு கோடா கம்பிக் கிறுக்கலா ஏதோ ஒன்னை சும்மா அவசர அவசரமா இழுத்துட்டு வருவா.

தினமும் அதையே பார்க்க ரொம்ப போர் அடிக்குது. இன்னைக்கு என் மகளோட தாமரைப்பூக் கோலம் தான் வாசலை அலங்கரிக்கணும். எதுக்கு இப்படி யோசனை பண்ற? அப்பா இருக்கேன் போடா கண்ணம்மா!”

அவர் இவ்வளவு சொல்லவும் “சரிப்பா.” என்று மிகுந்த தயக்கத்துடன் அப்பாவிடம் கோலப்பொடி கிண்ணத்தை வாங்கிக் கொண்டாள். அவளின் கைகளில் நடுக்கம் தெரிய, வெற்றிமாறனுக்கு அதைக் காணச் சகிக்கவில்லை.

தன் மகளின் நிலையை மாற்ற வேண்டும் என்கிற உறுதி மேலும் திடமானது.

“நீ சமர்த்தா கோலத்தைப் போடுவியாம். நான் உன் கூடச் சேர்ந்து தாமரைப்பூவுக்கு எல்லாம் கலர்ப்பொடி சேர்க்க வர்றேன்.”

இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இன்று தான் அந்த வாசலுக்கு முழுப்பொலிவு திரும்பியது. தேன்மொழியின் கையால் மலர்ந்த அழகிய மலர்க்கோலம் அவர்களின் வீதிக்கும் பொலிவைத் தந்து கொண்டிருந்தது.

வெற்றிமாறன் மகளிடம் சொல்லிக்கொண்டு நடைபயிற்சிக்குச் செல்ல, அவள் நின்று நிதானமாக அக்கோலத்தை உள்வாங்கினாள்.

அப்போது, ‘சூப்பரா இருக்குடி! இந்தக் கோலம் போட்ட விரல் ஒவ்வொன்னுக்கும் பரிசு கொடுக்கணுமே. இப்படி ஓரமா வாயேன்.’ என்று அவளை இழுத்துச் சென்ற சூர்யாவின் நினைவுகள் அவளுக்குள் பேரலையாக எழுந்து ஆட்டம் போட்டன.

இன்னுமே அந்த இளம் விரல்களில் சூர்யா தந்த முத்தங்களின் ஈரம்!

சில நிமிடங்களில் அமைதியடைந்தவளின் காதோரம் கரகரத்தது அவனின் குரல்.

‘சந்தோஷம் தேனு. இப்படி உன்னைப் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு.’

அவளின் மாற்றத்தை அவன் ஆதரிப்பதைப் போல உணர்ந்தாள். அவளின் விழிகளின் கண்ணீர் மணிகள் பூத்து வழிந்தன. புறங்கையால் துடைத்துக்கொண்டாள்.

அதே நேரம் மெல்ல மெல்ல கிழக்கிலிருந்து மேலெழும்பிய சூரியன், ஒளிக்கதிர்களை வீசி அவளிடம் கதை பேசியபடி கடமையைக் கவனிக்க ஆரம்பித்தான்.

மகளை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் வனிதா. அவள் கோலம் போட்டு முடித்ததைப் பார்த்ததும் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார். இனி மகளின் வாழ்க்கை சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை அவருக்குள் துளிர்த்தது.

தேன்மொழி உள்ளே வருவதைப் பார்த்து உடனே முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு,

“போர்ன்விடா கலக்கவா தேனு? தலையைத் துடைச்சிக் காய வைக்காம ஏன்டி இப்படித் துண்டைக் கட்டிட்டு நிக்கிற? போ போ காய வச்சி க்ளிப் மாட்டிட்டு வா.” என்று விரட்டினார்.

“எனக்கு நீ எதுவும் கலக்கி வைக்க வேணாம்மா. நானே அப்புறம் வந்து கலக்கிக் குடிக்கிறேன். தலை தானா காஞ்சிக்கும்.”

அன்றைய செய்தித்தாளை எடுத்துக் கொண்டு குஷன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள் தேன்மொழி.

“நான் என்ன சொன்னாலும் கேட்டுக்காத… ஏட்டிக்குப் போட்டியாவே பண்ணு!” வனிதா மகளின் செய்கையில் கடுப்பாகிவிட,

“ஏம்மா… விடேன். நானென்ன சின்ன பிள்ளையா என்னைப் பார்த்துக்க மாட்டேனா?” சலிப்புடன் தேன் பதில் சொல்ல,

“அதையே தான் நானு‌ம் சொல்லிட்டு இருக்கேன். காதுல வாங்குறயா நீ? உன் மனசு போலத்தானே நடந்துக்கிற? யாரு கவலைப்பட்டா உனக்கென்ன!” பொருக்க மாட்டாமல் தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.

“சின்ன விசயத்துக்கெல்லாம் ஏம்மா இப்படிக் கோவப்படுற? உன் மனசுல என்ன இருக்குன்னு புரியாம இல்லை. என் போக்குல விடுங்கன்னா அது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது? இப்படியே டார்ச்சர் பண்ணிட்டிருந்தா நான் இனி இங்க வரலை. சிங்கப்பூர்லயே இருந்துக்கறேன்.”

வெடுக்கெனச் சொல்லிவிட்டு பேப்பருடன் பின் வாசல் பக்கம் போய் விட்டாள் தேன்மொழி. அங்கிருந்து விலகிப் போகும் மகளையே வனிதா பார்த்துக்கொண்டு நிற்க,

“காலைலயே ஆரம்பிச்சிட்டீங்களா? லீவு நாள்ல கூட நிம்மதியா தூங்க விட மாட்டேங்கிறேங்க சைய்!” தூக்கம் கெட்டுப் போனதில் தேவானந்த் வேறு எழுந்து வந்து சத்தம் போட்டான்.

வனிதா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்து தடார் புடார் என்று பாத்திரங்களை உருட்டி பெரும் சத்தத்துடன் வேலையைப் பார்க்க, அம்மா தன் கோபத்தைக் காட்டுவது அந்த வளர்ந்த பிள்ளைகளுக்குப் புரியாதா என்ன?

என்ன தான் கோபமாகச் சமைத்தாலும் இட்லி வெங்காய சாம்பாருடன் மகளுக்குப் பிடித்த கேசரி, ரவா தோசை, கொத்தமல்லி சட்னி என்றே அவர் மெனு போட்டுச் சமைத்துக் கொண்டிருந்தார்.

வெற்றிமாறன் வீடு திரும்பும் போது வேறு பேச்சுக்கள் ஏதுமின்றி நெய் வடியும் கேசரியின் ஏலம் மட்டும் வெளி வாசல் வரைக்கும் மணத்தது!

அந்நேரம் தேவானந்தும் குளித்து முடித்திருக்க, வெற்றிமாறன் குளித்துவிட்டுச் சாமி கும்பிட்டு வரவும், அனைவரும் காலை உணவுண்ண டைனிங்கில் அமர்ந்தனர்.

தேன்மொழி தலையை உலர்த்திவிட்டு, இரு பக்கமும் காதோரத்தில் இருந்து கொஞ்சமாக முடியை எடுத்து நடுவில் இழுத்து ஒரு சின்ன க்ளிப் போட்டுக் கொண்டு வந்து உட்காரவும், வனிதா முகத்தில் மகளைப் பார்த்ததும் ஒரு திருப்தி.

தேவானந்த் அம்மாவின் பார்வை போன இடம், அடுத்த ரியாக்‌ஷன் எனப் பார்த்தவன், ‘இதுக்குத்தானே அப்போ அத்தனை சத்தம்?’ என்று கண்களால் கேட்டு அவரை முறைத்து வைத்தான்.

வெற்றிமாறன் இவர்களைக் கவனிக்கவில்லை. அவர் கவனம் முழுவதும் மகளிடமே! பல மாதங்கள் கழித்து அவளைப் பார்க்கிறார். அவளின் பொருட்டு உண்டாகியிருக்கும் பிரச்சனை கவலை வேறு!

அவருக்கு மகள் அவர் அருகிலிருக்கும் போது அவள் மட்டுமே கண்களுக்குத் தெரிய,

“வாடாம்மா இப்படி வந்து அப்பா பக்கத்தில் உட்காரு. இந்தா இந்தத் தோசை போட்டுக்கோ. இது சூடா இருக்கு பாரு.” என்று மகளுக்குப் பார்த்து எடுத்து வைத்தவர், தனக்கும் இட்லி சாம்பாரைப் பறிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.

அவர் வாய் மென்று உணவை உண்டு கொண்டிருந்தாலும், மகளுடன் பேசுவதற்கான தக்க சமயத்தை மனம் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

தேவானந்த் அம்மா சுட சுட நெய்விட்டுக் கொண்டு வந்த முறுகலான ரவா தோசையைப் பிய்த்து வாயில் அடைத்தபடி,

“அக்கா, சினிமாக்குப் போலாமா? நம்ம தியேட்டருக்குப் போனது அந்தக்காலம் போலிருக்கு. அம்மா அப்பா நீ நான்னு நம்ம எல்லாம் ஒன்னா போய் எந்தப் படத்தைப் பார்த்தோம்னு ஞாபகத்தில இல்லைக்கா. ஆன்லைன்ல நாலு டிக்கெட் புக் பண்றேன். இன்னைக்கு ஈவ்னிங் இல்லை நைட் ஷோ. என்னப்பா ஓகே வா?” என்று கேட்க,

“சரி தேவ். போலாம். என்ன படம் வந்திருக்கு?” என்று உடனே சம்மதம் சொன்னாள் தேன்மொழி. அதில் மற்ற மூவருக்குமே ஆச்சரியம்!

இரண்டரை வருடங்களாக சினிமா தியேட்டர் எல்லாம் மறந்தே போயிருந்தது. எப்போதாவது போகலாம் என்று கேட்டால் பலமான மறுப்புத்தான் வரும். இன்று அவள் சம்மதித்ததில் பெற்றோர்களின் மனதில் சிறு மகிழ்ச்சி!

தேவானந்த் நெகிழ்ச்சியில் கண் கலங்க, அதை மறைக்க நினைத்து அவசரமாக சிங்க் பக்கம் எழுந்து போனான்.