🎵 இசை 2 🎶

“சில மனுசங்களோட நாக்கு இருக்குதே அது மகுடி மாதிரி… அதுல இருந்து வர்ற வார்த்தைகள் உண்மையோ பொய்யோ அவங்கள சார்ந்தவங்க அந்த வார்த்தைகள்ல மயங்கி அதை உண்மைனு நம்ப ஆரம்பிச்சிடுவாங்க… அந்த மாதிரி மனுசங்களை விட்டு விலகி நின்னு நிதானமா யோசிக்கிறப்போ தான் இத்தனை நாள் இவங்க வார்த்தைகளை நம்பிருக்கோமேனு நமக்கு தோணும்… இந்த அனுபவங்கள சந்திக்காத மனுசங்க ரொம்ப கம்மி… அதனால நமக்கு நெருக்கமானவங்கனு யாரையும் நம்ம வாழ்க்கைக்குள்ள அனுமதிக்கிறதுக்கு முன்னாடி அவங்களோட நடவடிக்கைகளை தேர்ட் பெர்சனா நின்னு அனலைஸ் பண்ணிப் பாக்குறது பெட்டர்”

                 -ஆதித்யன்

ஹோட்டல் அறைக்குள் கிடந்த சோபாவில் எதிரும் புதிருமாக அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தனர் ஆதவனும் நீலகண்டனும். இருவரும் செயிண்ட் பீட்டர்சிலிருந்து கிளம்பி வந்து ஒருமணி நேரம் கடந்துவிட்டது. அப்போதிலிருந்து யோசித்தும் பிரதியுஷாவைச் சமாதானம் செய்யும் உபாயம் தான் பிடிபடவில்லை.

செயிண்ட் பீட்டர்சில் விதிமுறைகள் கடுமை என்பதால் பொட்டானிக்கல் கார்டனிலிருந்து திரும்பியதும் பிரதியுஷா ஆதவனை கிளம்புமாறு சொல்லிவிட்டு அனுபமாவை அழைத்துக்கொண்டு சந்தியாவுடன் டாமெட்ரி இருக்கும் மலைச்சரிவுக்குப் படியேறி சென்றுவிட்டாள்.

தரைத்தளத்தில் நின்று சற்று தூரத்தில் மரக்கூட்டத்தின் நடுவே வட்ட வடிவ கட்டிடங்களாக நின்ற டாமெட்ரியை அயர்ச்சியுடன் பார்த்துவிட்டு நீலகண்டனுடன் நடையைக் கட்டினான் ஆதவன்.

ஹோட்டலுக்கு வந்ததும் சாப்பாடு கூட வேண்டாமென மறுத்துவிட்டு இருவரும் யோசனையில் ஆழ்ந்தனர்.

ஆதவன் யோசனை கலைந்தவனாக “அங்கிள் நம்ம ரெண்டு பேர் சொல்லி கேக்கலனா மூனாவதா நான் ஒரு ஐடியா வச்சிருந்தேன்… அது ஒர்க் அவுட் ஆகும்னு நம்புறேன்” என்று பூடகமாக உரைக்க நீலகண்டனோ அதை மறுத்தார்.

“உஷாம்மா மரியாதை வச்சிருந்த ரெண்டே பேர் நம்ம மட்டும் தான் தம்பி… நீங்க வேற அழுதிட்டிருந்த அனு கிட்ட ஆறுதலா பேசாம வந்திருக்கீங்க… இதயே உஷாம்மா பிடிச்சிப்பா”

ஆதவன் பொறுமையிழந்தவனாய் “என்ன அங்கிள் சொல்லுறீங்க? அனு கிட்ட நான் என்ன பேசிருக்கணும்னு எதிர்பாக்குறீங்க?” என்றான்.

“உங்கள நீங்களே கேட்டுப் பாருங்க தம்பி… யார் சோகமா இருந்தாலும் எதாச்சும் பேசி சிரிக்க வைக்குறது தான் ஆது தம்பியோட குணம்னு நானே எத்தனை தடவை உஷாம்மா கிட்ட சொல்லிருப்பேன் தெரியுமா? ஆனா இன்னைக்கு அனு அழுறத பாத்தும் நீங்க கண்டுக்காம வந்திருக்கீங்க… இது கண்டிப்பா உஷாம்மாவுக்கு வருத்தமா தான் இருக்கும்”

ஆதவன் தனது சிகையைக் கலைத்துவிட்டு “முடியல அங்கிள்… ஆளாளுக்குப் படுத்துனா நான் என்ன பண்ணுவேன்?” என்று பரிதாபமாக கேட்டான்.

“எல்லாத்தையும் முடிச்சு வைக்கிறதுக்கு நீங்க தான் இன்னொரு திட்டமும் போட்டிருக்கீங்களே! அதாச்சும் சரியா ஒர்க் அவுட் ஆகுதானு பாப்போம்” என்ற நீலகண்டன் அவனது முதுகில் ஆதரவாகத் தட்டிக்கொடுக்கவே ஆதவனும் தன் திட்டம் வெற்றி பெற வேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.

*******

செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளியின் ஆர்கிட் டாமெட்ரி…

பொது அறையின் சோபாவில் சாய்ந்திருந்த பிரதியுஷாவுக்கும் சந்தியாவுக்கும் அனுபமாவின் முகம் தெளிந்திருப்பதைக் கண்ட பிறகு தான் நிம்மதியாக இருந்தது.

“என்னை லில்லி டாம்ல போட்டிருக்கலாம்… லேவண்டர் டாம்ல போட்டிருக்கலாம்… இவ்ளோ ஏன் டெய்சி டாம்ல கூட போட்டிருக்கலாம்… என் கிரகம் இந்த ஆர்கிட் டாம்ல வந்து மாட்டிக்கிட்டேன்… இந்த லெட்சணத்துல எனக்கு ஆர்கிட்னாலே அலர்ஜி” பொய்ச்சோகத்துடன் கோவைச்சரளா போல இராகம் பாடியபடி கூறிய அனுபமாவின் பேச்சைக் கேட்டு சந்தியா பக்கென்று நகைத்தாள்.

“இதெல்லாம் ஒரு ஜோக்கா? லில்லி டாம்ல உன்னைய போடுறதுக்கு நீ மிடில் இயர் படிக்குற குட்டிப்பாப்பாவா? லேவண்டர்லயும் டெய்சியிலயும் உன்னைய சேர்த்துக்கணும்னா நீ பையன் கெட்டப் தான் போடணும்” என்றாள் பிரதியுஷா கேலியாக.

ஏனெனில் லேவண்டர் டாமெட்ரி மிடில் இயர் புரோகிராம் பையன்களுக்கும், டெய்சி டாமெட்ரி ஐ.பி டிப்ளமோ பையன்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட பகுதி ஆகும்.

பிரதியுஷாவின் கேலிக்கு சந்தியா ஹைஃபை கொடுக்க அனுபமாவோ “ஜோக் சொன்னா சிரிக்கணும் அண்ணி… இப்பிடி கலாய்க்க கூடாது” என்று மூக்கைச் சுருக்கியபடி கூறவும் அவளின் டாம் பேரண்ட் வரவும் சரியாக இருந்தது.

அதற்கு மேல் பொது அறைக்குள் இரு தோழியரும் இருக்க முடியாது. ஏனெனில் ஒரு டாமெட்ரியில் இருக்கும் மாணவ மாணவிகளோ டாமெட்ரியின் பொறுப்பாளர்களோ மற்றொரு டாமெட்ரிக்குள் அதிகநேரம் இருப்பதற்கு செயிண்ட் பீட்டர்சின் விதிகளில் இடமில்லை.

எனவே சந்தியாவும் பிரதியுஷாவும் அனுபமாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.

மரங்களின் ஊடே செல்லும் நடைபாதையில் நடக்கும் போதே பிரதியுஷாவின் தலைக்குள் ஆயிரம் கேள்விகள்! நீலகண்டனையும் ஆதவனையும் சமாளிக்கும் முன்னரே அவள் ஓய்ந்துவிட்டாள். அடுத்து என்ன நடக்குமோ என்ற யோசனையுடன் டாமெட்ரியின் மாடியிலிருக்கும் தனது அறைக்குச் செல்ல படியேறியவளிடம் சந்தியா வீணாக மனதைப் போட்டு அலட்டிக்கொள்ளாதே என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றாள்.

நான்காண்டு நட்பு அவர்களுடையது. இந்த லில்லி டாமெட்ரியில் ஆரம்பித்தது தான். இருவரும் சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதோடு கஷ்டகாலங்களில் ஒருவரை ஒருவர் அரவணைத்து ஆறுதல் சொல்லவும் தவறியதில்லை.

பிரதியுஷா மட்டும் இல்லையென்றால் ஓராண்டுக்கு முன்னே நிகழ்ந்த தாயாரின் மரணத்திலிருந்து சந்தியா வெளிவந்திருக்க மாட்டாள். அதே போல சந்தியா இல்லையென்றால் பிரதியுஷாவின் இரண்டாண்டு வேதனைகள் அவளை நிலைகுலையச் செய்திருக்கும்.

அது இண்டர்நேசனல் பள்ளி என்பதால் சில வெளிநாட்டு மாணவர்களும் வெளிநாட்டு ஆசிரியர்களும் பணியாற்றி வந்தனர். அவர்களிடமும் சரி, இங்கே உள்ளவர்களிடமும் சரி ஒரு எல்லைக்கோட்டை தாண்டி இருவரும் பழகுவதில்லை. சந்தியா ஜானை தவிர்ப்பதே இதற்கு உதாரணம்.

பிரதியுஷா அவளது அறைக்குள் சாதாரணமாக நுழைந்தவள் நாசியில் காபியின் மணம் நிரடவும் மூச்சை உள்ளிழுத்து யோசித்தாள். அவளே இப்போது தான் அறைக்குள் நுழைகிறாள். பின்னே இந்தக் காபி மணத்திற்கு காரணம் யாரென யோசித்தவள் சமையலறைக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே காபி போட்டதற்கு அடையாளமாக சில பாத்திரங்கள் கிடந்தன.

யாரது அத்துமீறி தனது அறைக்குள் நுழைந்தது என்ற கேள்வியுடன் வழக்கமாக அவள் காபி அருந்தியபடி வேடிக்கை பார்க்கும் இடத்திற்கு விரைந்தவள் அங்கே மஞ்சள் வண்ண கண்ணாடி கதவு திறந்து விடப்பட்டிருப்பதைக் கண்டாள்.

அதன் பக்கவாட்டுச்சுவரில் ஒரு கையை ஊன்றி மற்றொரு கையால் காபி கப்பை பிடித்தபடி ஒரு காலை மடித்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும் அதற்கு மேல் அடியெடுத்து வைக்க யோசித்தவளாக அங்கேயே நின்றாள்.

நிற்கும் தோரணையிலேயே அலட்சியம் தெறித்தது. நிற்பதில் மட்டுமா! பிரதியுஷாவைக் கண்டுவிட்டால் பார்வை, சிரிப்பு, உடல்மொழி என அனைத்திலும் அலட்சியம் குடிகொண்டுவிடும் அங்கே நிற்பவனுக்கு.

அதில் அவள் மீதான வெறுப்பும் அவ்வபோது இழையோடுவதை ஆயிரம் முறைகள் கவனித்தும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னே அவளுக்கு ஒரு காரணம் இருந்தது. இன்று அப்படி எதுவும் இல்லையே!

நீலகண்டனையும் ஆதவனையும் அனுப்பி வைத்து முயற்சியில் தோற்றதை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக அவனே வந்துவிட்டான் போல என்று எகத்தாளமாக எண்ணியவளுக்கு இந்த நெட்டையனால் இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த நற்பெயர் வெயில் பட்ட பனியாய் கரைந்து காணாமல் போய்விடுமோ என்ற கவலையும் எழுந்தது.

ஆனால் அடுத்த நொடியே அங்கே நின்றிருந்தவனிடம் நமட்டுச்சிரிப்பு ஏளனப்பூச்சுடன் வெளிப்பட விறுவிறுவென அவன் முன்னே போய் நின்றாள் பிரதியுஷா.

அவள் எண்ணியது போலவே அலட்சியத்துடன் பார்வையை வீசி “வெல்கம் பேக் மிஸ் பிரதியுஷா… உன்னோட பேலஸ்குள்ள பெர்மிசன் இல்லாம நுழைஞ்சதுக்கு அஸ் யூஸ்வல் லெசன் எடுக்கப் போறீயா?” என்றவனின் இதழ்கடையில் முகிழ்த்த சிரிப்பிலும் அலட்சியம்!

அதைக் கண்டதும் பிரதியுஷா சீற்றமுற்றாலும் அந்த அலட்சியத்தில் வெறுப்பின் பூச்சில்லை என்பதைக் கண்டுகொண்டாள். பற்களைக் கடித்தபடி “அக்கார்டிங் டூ செயிண்ட் பீட்டர்ஸ்’ கோட் ஆப் கண்டெக்ட், ட்ரெஸ்பாசிங் இஸ் அ கிரிமினல் அபென்ஸ்” என்றாள்.

அதற்கும் அலட்சியச்சிரிப்பு தான்! உடனே பதில் சொல்லாது ஜீன்சின் பாக்கெட்டிலிருந்து விசிட்டர் பாசை எடுத்து அருகே கிடந்த கவுச்சில் வீசிவிட்டு காபியைக் காலி செய்வதில் மும்முரமானான் அவன்.

காபி காலியாகும் வரை ஓரக்கண்ணால் கோபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிவக்க ஆரம்பித்த பிரதியுஷாவை சுவாரசியத்துடன் பார்த்துக்கொண்டான்.

நிதானமாக சீட்டியடித்தபடி சமையலறைக்குள் நுழைந்து கோப்பையைக் கழுவி கவிழ்த்திவிட்டு வெகு சுவாதீனமாக பிரதியுஷாவின் அருகே கிடந்த கவுச்சில் சரிந்தவனை எதுவும் சொல்ல முடியாமல் தவித்துப் போனாள் அவள்.

சாய்ந்தவன் தனது ஜெர்கினைக் கழற்றிவிட்டு டீசர்ட்டின் கைகளை மடித்துவிட்டபடி “ம்ம்… அப்புறம் எப்போ ஆஸ்திரேலியா கிளம்பி வர்றதா இருக்க?” என்று வினவ

“எப்போவும் வர்றதா இல்ல” என்று துப்பாக்கி தோட்டாவாய் பதில் வந்தது அவளிடமிருந்தது.

அதை கேட்டதும் புருவத்தை ஆட்காட்டிவிரலால் நீவியபடி இன்னும் வாகாக கவுச்சில் சாய்ந்துகொண்டான் அவன்.

“ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?’

“என்னால அனுவ விட்டுட்டு எங்கயும் வரமுடியாது”

அனுபமாவின் பெயர்ச்சுருக்கத்தில் அவனது முகத்தில் உணர்ச்சியற்ற பாவனை உதயமானது. அதைக் கட்டுப்படுத்திக்கொண்டவன் “அவளும் உன்னோட வர்றதுல எங்க யாருக்கும் அப்ஜெக்சன் இல்ல” என்றான்.

“இன்னும் அவளை பதினைஞ்சு வயசு அனுபமானு நினைச்சிட்டிருக்கியா? ஷீ இஸ் மெச்சூர்ட் இனாஃப்… ஷீ வோண்ட் அக்ரி”

“இஸிட்? அவ அந்தளவுக்கு மெச்சூர்டான கேர்ளா மாறிட்டானா சந்தோசம் தான்… நீ ஏன் அவளோட மெச்சூரிட்டில ஹாஃப் கேஜி கடனா வாங்கிக்கக் கூடாது?”

முகம் கடுக்க “யூ ஆர் கிராசிங் யுவர் லிமிட்… ஹூ ஆர் யூ மேன்? மானிங்ல இருந்து ஆள் மாத்தி ஆள் வந்து உயிரை எடுக்கிறீங்க… நானும் அவளும் இந்த ரெண்டு வருசமா நிம்மதியா இருக்குறது உங்க கண்ணை உறுத்திடுச்சா? உங்க யாரோட சங்காத்தமே வேண்டானு தானே விலகி இருக்கோம்… ஏன் தேடி வந்து டார்ச்சர் பண்ணுற ஆதி?” என்றவள் அவனது பெயரைச் சுருக்கியதைக் கவனிக்கவில்லை.

சொன்ன பிறகு தான் உறைத்தது அவளுக்கு. எதிர்பார்த்ததை போலவே அவன் முகம் சிவந்து போனது.

“டோண்ட் கால் மீ ஆதி… ஒன்னு ஏ.கேனு கூப்பிடு… இல்லனா ஆதித்யன்னு முழுப்பேரை சொல்லு”

இவை அவளுக்குப் பழக்கப்பட்ட வார்த்தைகள்! முன்பெல்லாம் கேட்கும் போது மனதுக்கு வருத்தமாக இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை.

“மிஸ்டர் ஆதித்யன் கதிர்காமன் நீ இருக்குறது என்னோட ரூம்ல… சோ எனக்கு ஆர்டர் போடாம சொல்ல வந்தத சொல்லிட்டு கிளம்புனா நல்லது… இல்லனா லத்திகா மேமை கூப்பிடவேண்டியதா இருக்கும்” நிமிர்வுடன் சொன்னவளை வெறித்தான் அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த ஆதித்யன் கதிர்காமன்.

காலையில் வந்த ஆதவனின் சகோதரன். அவன் குறும்புக்காரன் என்றால் இவன் மகா அழுத்தக்காரன். இதில் வேடிக்கை என்னவென்றால் இருவரும் இரட்டை சகோதரர்கள். ஆதவன் ஆதித்யனை விட பன்னிரண்டு நிமிடங்கள் மூத்தவன்!

எப்படி குணத்தில் இருவருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லையோ அதே போல உருவத்திலும் எந்த ஒற்றுமையுமற்ற இரட்டை சகோதரர்கள் அவர்கள். இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை என்றால் அனுபமாவின் பெயரைக் கேட்டால் இருவரின் வதனமும் ஒளியிழந்துவிடுவது மட்டுமே!

“நீ இப்பிடி தான் சொல்லுவேனு எனக்கு நல்லாவே தெரியும்… ஆனா ஆதுவும் நீல் அங்கிளும் உஷா எடுத்துச் சொன்னா புரிஞ்சுப்பானு என்னென்னவோ சொன்னாங்க… நான் வந்ததும் மீட் பண்ணுனது உன்னோட சோ கால்ட் லத்திகா மேமை தான்… உன்னை இங்கேயே ஸ்டே பண்ண விட்டா என்னென்ன பின்விளைவுகள் வரும்னு அவங்களை வார்ன் பண்ணிட்டேன்… ஐ திங் இந்த ஃபைனல் எக்சாம் முடிஞ்சதும் நீ கிளம்புறியோ இல்லையோ அவங்களே உன்னோட லக்கேஜை பேக் பண்ணி ஆஸ்திரேலியாக்கு சொந்தக்காசுல அனுப்பி வச்சிடுவாங்க”

லத்திகாவின் பெயரைக் கேட்டதும் பிரதியுஷா இன்னும் கோபமுற்றாள்.

“ஹவ் டேர் யூ?”

“உன்னோட ரூம்ல உனக்குச் சொந்தமான கவுச்ல உக்கார்ற அளவுக்கு எனக்குத் தைரியம் இருக்கு… இந்த அளவு போதும்னு நினைக்கேன்… எனக்கு அதிகமா பேசுறது பிடிக்காது… சோ சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லிடுறேன்… இங்க எக்சாம் முடிஞ்ச கையோட நீயும் அனுவும் ஆஸ்திரேலியாக்கு வந்துடணும்… உங்கள அங்கேயே தங்க வைக்கிற ஐடியா எங்க யாருக்குமே இல்ல… ஜஸ்ட் த்ரீ மன்த்ஸ்… அப்புறம் நீங்க இந்தியாவுக்கு வந்துடலாம்… அதுக்கு அப்புறம் உங்கள நாங்க தொந்தரவு பண்ணவே மாட்டோம்… தட்ஸ் ஆல்”

“அது என்ன மூனு மாசக்கணக்கு?”

“எல்லாத்தயும் விளக்குற அளவுக்கு எனக்கு நேரமும் கிடையாது… உன் முகத்தைப் பாத்து பேசுற அளவுக்கு எனக்குப் பொறுமையும் கிடையாது… சோ சொல்லவேண்டியத சொல்லிட்டேன்… சீக்கிரம் பெட்டி படுக்கைய பேக் பண்ணுற வழிய பாரு… விசா ப்ராப்ளம் அது இதுனு சீட் பண்ணலாம்னு யோசிக்காத… உங்க ரெண்டு பேரோட விசாவுக்கு இன்னும் வேலிடிட்டி இருக்குனு எனக்கு நல்லாவே தெரியும்”

அவ்வளவு தான் என்பது போல கவுச்சிலிருந்து எழுந்து கொண்டவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான். பிரதியுஷாவுக்கு ஆஸ்திரேலியா செல்வதில் உடன்பாடில்லை.

அதை தெரிவித்துவிடும் அவசரத்துடன் ஆதித்யனைத் தொடர்ந்தவள் அங்கே கதிர்காமன் மற்றும் வசுந்தரா இணைந்து இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தபடி இறுகிப்போய் நின்றவனைக் கண்டதும் அமைதியுற்றாள்.

“மிஸ்டர் அண்ட் மிசஸ் கதிர்காமன்… உன்னோட டிக்ஸ்னரில ஆதர்ச தம்பதிகள்னா அது இவங்க தானே!” என்றபடி திரும்பியவனின் கண்கள் பிரதியுஷாவின் முகத்தை அளவிட்டது.

அப்படியே இளவயது வசுந்தராவின் பிரதிபிம்பம்! அனுபமா கூட தாயை அந்தளவுக்குப் பிரதிபலிக்கவில்லை என்று எண்ணிக்கொண்டான்.

“இவங்க மேல இருக்குற பாசத்துல இப்போவே கூட நீ இவங்களோட ஹெவன்ல ஜாயின் பண்ணிக்க ரெடியா இருப்ப… ஆனா அனு வாழ வேண்டிய பொண்ணு… உன் பிடிவாதம் அவளோட உயிருக்கு எமனா மாறிடக்கூடாது… அண்ட் ஒன் மோர் திங், இதுக்கு மேல உங்க ரெண்டு பேரை பத்தி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ண நானோ ஆதுவோ தயாரா இல்ல”

என் கடமை உன்னை எச்சரிப்பது; அதற்கு மேல் உன் இஷ்டம் என்பது போல படபடவென பொறிந்து தள்ளிவிட்டு வெளியேறினான் ஆதித்யன். அவன் சொன்ன எதுவுமே முழுதாக புரியாத காரணத்தால் குழம்பிப் போய் நின்றாள் பிரதியுஷா.

ஆதித்யனோ பள்ளியை விட்டு வெளியேறியவன் அவனுக்காக நீலகண்டன் ஏற்பாடு செய்திருந்த ஊபரில் ஹோட்டலுக்குப் போய் சேர்ந்தான்.

யோசனை நிரம்பிய முகத்துடன் அவனை வரவேற்றனர் அவனது சகோதரனும் நீலகண்டனும்.

“ஆதி தம்பி நீங்க சொன்னதையாச்சும் உஷாம்மா கேட்டுக்கிட்டாளா?”

வயதில் மூத்தவரிடம் கோபத்தைக் காட்ட முடியாமல் “நான் சொன்னத கேட்டுட்டா அவளோட தலைல இருக்குற க்ரவுன் இறங்கிடுமே நீல் அங்கிள்… அவ வருவானு எனக்குத் தோணல… ஆது ப்ளீஸ்! அவளுக்காக பரிஞ்சு பேசாத… எவ்ளோ ஆட்டிட்டியூடா பேசுறாடா அந்தப் பொண்ணு” என்று உடன்பிறந்த சகோதரனுக்கும் மறக்காமல் குட்டு வைத்தான்.

“அந்தப் பொண்ணா?” ஒரு மாதிரி குரலில் வினவினான் ஆதவன். உடனே ஆதித்யனின் முகத்தில் உணர்ச்சிகள் வடிந்துவிட்டது. தலையைக் குலுக்கிச் சமனிலைக்கு வந்தான் அவன்.

“அந்தப் பொண்ணு தான்… அவளையும் அனுவையும் நான் பாதுகாக்க நினைக்கிறது வெறும் மனிதாபிமானம் மட்டுமே… மூனே மாசம், அதுக்குள்ள இந்தியால செய்ய வேண்டிய எல்லாத்தையும் போலீஸ் டிப்பார்ட்மெண்ட் செஞ்சு முடிச்சிடுவாங்க… அப்புறம் அவளாச்சு அவளோட செயிண்ட் பீட்டர்ஸ் ஆச்சு” என்று விட்டேற்றியாக மொழிந்தவனை ஆதுரத்துடன் நோக்கியது ஆதவனின் விழிகள்.

ஏதோ இடிக்க ஒரு நொடி புருவம் சுருக்கினான் ஆதித்யன்.

“உனக்குப் பழைய நியாபகம் வந்துடுச்சுனு அந்தப் பொண்ணு கிட்ட சொல்லிட்டியா ஆது?”

“சொல்லிட்டேன்டா”

“சொல்லியுமா அவ வரமாட்டேனு அடம்பிடிக்குறா?”

“நீங்க சொல்லியே அவ ஒத்துக்கல தம்பி” இடையிட்டார் நீலகண்டன்.

“என் விசயம் வேற அங்கிள்… அவளுக்கு எப்போவுமே என்னைப் பிடிக்காது” என்றவன் எனக்கும் தான் என மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

தொடர்ந்து “ஆனா உங்க ரெண்டு பேர் மேலயும் அவ டைட்டானிக் கப்பல் அளவுக்கு மரியாதை வச்சிருக்கானு நீங்க தான் சொன்னீங்க” என்றான் கேலியாக.

“ஒருவேளை தனியா வர உஷா யோசிக்கிறாளோ?” ஆதவனின் கேள்வி.

“லாஸ்ட் டைம் மாதிரி தானே அவளையும் அனுவையும் கூப்பிட்டிருக்கோம் ஆது தம்பி”

“அவ ஏஜ் கேட்டகரில அங்க யாரும் இல்லனு யோசிக்கிறா போல நீல் அங்கிள்… பேசாம அவளோட ஃப்ரெண்டையும் இன்வைட் பண்ணுவோமா?”

“நம்ம என்ன வெகேசனுக்கா கூட்டிட்டுப் போறோம்?” உஷ்ணத்துடன் கேட்டான் ஆதித்யன்.

“உடனே கொதிக்காதடா ப்ரோ… அவளுக்கு நம்ம யார் மேலயும் நம்பிக்கை இல்ல… மரியாதை இல்லவே இல்ல… சோ அவளோட நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆளையும் அவளோட சேர்த்து இன்வைட் பண்ணுனா உஷா சம்மதிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு” என்று விளக்கினான் ஆதவன்.

“அவளுக்கு ஃப்ரெண்ட்னு யாரும் இருக்கணுமே ப்ரோ?” யோசனையுடன் ஒலித்தது ஆதித்யனின் குரல்.

“ஒரு பொண்ணு இருக்குறா ஆதி… அவ சொன்னா உஷா கேட்டுப்பானு தோணுது… நான் வேணும்னா அந்தப் பொண்ணு கிட்ட பேசிப்பாக்குறேன்” என்றான் ஆதவன்.

“சோ நீ அவ ஃப்ரெண்ட் கிட்ட பேசிருக்க”

“கம் ஆன் ப்ரோ… ஜஸ்ட் இன்ட்ரோ பண்ணிக்கோனு கேட்டதுக்கே அந்தப் பொண்ணு கண்டுக்கல… இதுல நான் பேசிட்டாலும்… லீவ் தட்… நாளைக்கு நான் போய் அந்தப் பொண்ணு கிட்ட ப்ராப்ளமோட சீரியஸ்னெஸ் பத்தி சொல்லுறேன்… ஐ ஹோப் அவ சொன்னா உஷா கேட்டுப்பா… அப்பிடியே அவளையும் உஷாவோட வர சொல்லிட்டோம்னா உஷாவும் நம்மள நம்புவா” என்றான் ஆதவன்.

அவனது இந்த திட்டத்தில் நீலகண்டனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆதித்யனுமே “பேர் கூட சொல்லாத பொண்ணை கன்வின்ஸ் பண்ணுறேன்னு சொல்லுற உன்னோட மனதைரியத்துக்காக இந்த ஐடியாவ நானும் ஏத்துக்கிறேன்… ஆனா இது தான் லாஸ்ட் அட்டெம்ப்ட்” என்று ஒப்புக்கொண்டான்.

ஆதவனுடைய மனதின் ஓரத்தில் சந்தியா சொன்னால் பிரதியுஷா கேட்டுக்கொள்வாள் என்ற எண்ணம் இப்போது நம்பிக்கையாக வலுப்பெற்றது. அதே நேரம் சந்தியாவோ ஆதித்யன் சொன்னதாக கூறிய அனைத்தையும் தன்னிடம் பகிர்ந்துகொண்ட பிரதியுஷாவின் பாதுகாப்பு குறித்து கவலையுற ஆரம்பித்திருந்தாள்.

இசை ஒலிக்கும்🎵🎶🎵