🎵 இசை 13 🎶

“சூழ்நிலைக்கைதியா இருக்குறது எவ்ளோ சங்கடம் தெரியுமா? பாக்குறவங்க கண்ணுக்கு நம்ம எதுவுமே பண்ணாம மோசமானவங்களா தெரிவோம்… அந்த இடத்துல அமைதியா இருந்தே ஆகவேண்டிய கட்டாயமும் வரும்… ஆனா அந்த அமைதிக்கு நம்ம தப்பானவங்கனு அர்த்தம் இல்ல… நம்ம வார்த்தைகள் மேல மத்தவங்களுக்கு நம்பிக்கை வராத தருணங்கள்ல அமைதியா இருக்குறது நல்லது… இந்த வார்த்தைகள் எல்லாம் என் வசு அத்தை சொன்னது… இன்னைக்கு நானும் அனுவும் சூழ்நிலைக்கைதியா நிக்கிறப்போ அவங்களோட வார்த்தைகளை தான் நான் ஃபாலோ பண்ணுறேன்”

                                                               -பிரதியுஷா

ஷேரிட்டி நிகழ்வுக்குப் பின்னர் கே.கே.வில்லாவாசிகள் அனுபமாவையும் பிரதியுஷாவையும் மரியாதையுடன் நடத்த ஆரம்பித்தனர். பாசத்தை மழையாய் பொழிந்து தள்ளவில்லை என்றாலும் முகம் சுளிக்காது குறுஞ்சிரிப்புடன் கடந்தனர், ஆதித்யனைத் தவிர. சில நேரங்களில் ஆதவனுமே அவனைப் பின்பற்றுவது வழக்கம்.

ஆனால் அனுபமா அவளது அண்ணியின் அறிவுரைக்குப் பின்னர் வெகுவாக மாறிவிட்டதால் இரு சகோதரர்களிடமிருந்து அன்பையோ அரவணைப்பையோ எதிர்பார்ப்பதில்லை.

முன்பு போல விக்ரமிடம் விளையாடுவது, வைஜெயந்தியுடன் பேசிப் பொழுதைக் கழிப்பது, எமிலி மற்றும் சார்லட்டிடம் ஆஸ்திரேலியாவைப் பற்றிய தகவல்களைக் கேட்பது என அவளின் நேரம் உபயோகமாக கழிந்தது.

பிரதியுஷாவின் பாடு தான் சிரமமானது. அவளது வயதிற்கு ஏற்ற நட்பு என அங்கே யாருமில்லை. அவ்வபோது ஆதித்யனுடன் வரும் ஜெனோலினும் அதிகநேரம் அங்கே இருப்பதில்லை. எனவே அவளுடன் இயல்பாய் உரையாடும் அளவுக்கு மட்டுமே பழகியிருந்தாள்.

அத்துடன் லத்திகாவையும் சந்தியாவையும் காண அவள் மனம் ஏங்கியது. நீலகண்டன் சிம் கார்ட் வாங்கி கொடுத்துவிட நினைத்த தருணத்தில் அவர்களிடம் பேசினாலும் நேரில் கண்டு அளவளாவுவதில் உள்ள இதம் போன் அழைப்புகளில் கிடைப்பதில்லையே!

கே.கே.வில்லாவில் அவளுக்குப் புதிதாக உதித்த சங்கடம் என்னவென்றால் ஆதவனின் சீண்டல் பேச்சு. அவளைப் பார்த்த தினத்திலிருந்து அவன் அவ்வாறு தான் நடந்துகொள்கிறான் என்றாலும் கதிர்காமனின் கடிதத்தைப் படித்த பின்னர் அவனிடமிருந்து ஒதுங்கி போவதே சிறந்தது என எண்ணியிருந்தாள் பிரதியுஷா.

அக்கடிதத்தில் அவர் தனது இரு மகன்களில் ஒருவனுக்கு அவளை மணமுடித்து வைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். அப்படி அவர்களில் ஒருவனை அவள் மணந்தால் உயிலின் முக்கியமான ஷரத்தில் கொஞ்சம் மாறுபாடு வரும் என்று வேறு குறிப்பிட்டிருந்தார்.

அது என்ன என்பதை அந்த ஷரத்தைக் காட்டி ஹென்றி ஒரு நாள் விளக்கவும் சம்பந்தப்பட்ட மூவரும் அதிர்ந்தனர்.

“என் பையன்கள்ல ஒருத்தனுக்கு ரதிய மேரேஜ் பண்ணி வச்சா அனுவுக்கு தனியா ஷேர் அலாட் பண்ணவேண்டியதில்லை… அதோட ஷேர் எதுவும் ஷேரிட்டிக்கும் சொந்தமாகாது… சப்போஸ் அப்பிடி மேரேஜ் நடக்கலனா கண்டிப்பா அனுவோட பேர்ல சம் பர்சென்டேஜ் ஆஃப் ஷேர்சை அலாட் பண்ணியே ஆகணும்” – இது தான் கடிதம் மற்றும் உயிலில் இருந்த முக்கியமான ஷரத்தின் சாராம்சம்.

இதை வெறுமெனே படித்தபோதே ஆதித்யன் சீறினான். பின்னர் ஷரத்துடன் சேர்த்து வாசித்தபோது இது நடக்கவே நடக்காது என முழங்கிவிட்டு அகன்றான்.

ஆதவனோ வழக்கம் போல அதை ஒதுக்கிவிட்டு கிடைத்த சந்தர்ப்பத்தில் பிரதியுஷாவை கேலி செய்தான்.

“பேசாம நம்ம ஏன் உன் வினோத் மாமாவோட ஆசைய நிறைவேத்தக்கூடாது உஷா?”

முதல் முறை இந்தக் கேள்வி அவனிடமிருந்து வந்த போது பிரதியுஷா அதிர்ந்து போனாள். பின்னரோ அவனைப் போல அவளும் கேலியாய் பதில்மொழி பகற ஆரம்பித்தாள்.

“இந்தக் கேள்விய உங்கம்மா கிட்டவும் ட்வின் ப்ரோ கிட்டவும் கேட்டுப் பாரு… அப்புறமா நான் என்னோட ஆன்சரை சொல்லுறேன்” என்பாள் அவள்.

எது எப்படியோ ஆதித்யன் என்ற புரோகிராம் செய்யப்பட்ட ரோபோவிற்கு ஆதவன் ஆயிரம் மடங்கு சிறந்தவன் என்ற எண்ணம் அவளுள் உதயமாகிவிட்டிருந்தது.

அத்துடன் பெயரைச் சுருக்கினால் எரிந்துவிழும் பழக்கம் ஆதவனுக்கு இல்லை. எனவே அவர்கள் சில நாட்களிலேயே ‘ஆது’ ‘டி.ஐ.ஜி’ ஆக மாறிப்போனார்கள்.

டி.ஐ.ஜி என்பது Typical Indian Girl என்பதன் சுருக்கம் என்று அதற்கு அர்த்தம் வேறு கூறுவான் ஆதவன். தன் வயதையொத்தவர்களின் நட்புக்கு ஏங்கிய பிரதியுஷாவுக்கு ஆதவனுடன் பேசுவது பிடித்திருந்தது.

See More  வஞ்சிக்கொடியின் வசீகரனே - 11

அப்படி இருக்கையில் ஆதித்யன் சொன்னான் என அவளை ஈடன் லிக்யூர் ஃபேக்டரிக்கு ஒரு நாள் அழைத்துச் சென்றான் ஆதவன். அந்த லிக்யூர் ஃபேக்டரி வளாகத்திலேயே ஜாம் மற்றும் வினிகர் தயாரிக்கும் பிரிவுகளும் அமைந்திருந்தன.

“இது எல்லாத்துக்கும் ஃப்ரூட்ஸ் ஈடன்ல இருந்து தான் வருதா ஆது?”

இல்லையென மறுத்தவன் “பக்கத்துல டெர்வெண்ட் வேலினு ஒரு ஏரியா இருக்கு… அங்க இருக்குற பழத்தோட்டங்கள்ல இருந்து ஃபிப்டி பர்சென்டேஜ் வாங்குவோம்… மீதி ஈடன்ல இருந்து வந்துடும்” என்றான்.

நீள்வடிவ லிக்யூர் பாட்டிலை பார்த்தவள் “லிக்கர் மேனுஃபேக்சரிங்குக்கு இந்தியால கெடுபிடி அதிகம் தெரியுமா?” என்றாள்.

ஆதவன் புருவம் சுருக்கி “அப்பிடியா? ஆனா நம்ம மேனுஃபேக்சர் பண்ணுறது லிக்கர் இல்ல, லிக்யூர்… ரெண்டும் வேற வேற” என்றான்.

பிரதியுஷாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கு முன்னர் கே.கே.வில்லாவாசிகள் லிக்யூர் தொழிற்சாலையைப் பற்றி பேசும் போது அவர்களை கிங்பிஷர் மல்லையாவோடு ஒப்பிட்டுப் பார்த்தவளாயிற்றே! இப்போது இரண்டும் வெவ்வேறு என்றால் குழம்பத் தானே செய்வாள்.

ஆனால் அவளது குழப்பத்தை ஆதவன் போக்கினான்.

“லிக்கர்ங்கிறது நார்மல் ஆல்கஹால் டிரிங்ஸ் தான்… அதுக்கும் லிக்யூருக்கும் இருக்குற சிமிலாரிட்டி ஒன்னே ஒன்னு தான்… ரெண்டுமே ஸ்ப்ரிட் தான்… ஆனா லிக்யூர்ல ஃப்ளேவர், சுகர்லாம் ஆட் பண்ணுவோம்… ஃபார் எக்சாம்பிள் ஸ்ட்ராபெர்ரி லிக்யூர், லோகன்பெர்ரி லிக்யூர், செர்ரி லிக்யூர் எட்செட்ரா… லிக்கரோட கம்பேர் பண்ணுறப்போ லிக்யூர்ல ஆல்கஹால் லெவல் கம்மி… ABVய வச்சு, அதாவது Alcohol By Volumeஐ வச்சு ஆல்கஹால் எவ்ளோ பர்சென்டேஜ் இருக்குனு அளப்போம்… லிக்யூர்ல 15ல இருந்து 55 பர்சென்டேஜ் வரைக்கும் தான் ஆல்கஹால் இருக்கும்… ஆனா லிக்கர்ல 20ல இருந்து 75 பர்சென்டேஜ் வரைக்கும் இருக்கும்” என்றான் மூச்சுவிடாது.

பிரதியுஷா அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுவிட்டு “அப்போ லிக்யூரை குடிச்சா அவனை ஆல்கஹாலிக்னு சொல்லமாட்டீங்க தானே?” என்று கேட்க “அப்பிடி சொல்லுறது இங்க வழக்கமில்ல” என்றான் ஆதவன்.

கூடவே “இத ஸ்பார்க்கிள் ஒயினோட கலந்து சாப்பிட்டா அமிர்தமா இருக்கும் தெரியுமா?” என்று கண்ணை மூடிச் சிலாகிக்க வேறு செய்தான்.

“அடிக்கடி குடிச்சு பழக்கம் போல” கேட்டுவிட்டு சாதுவைப் போல முகத்தை வைத்துக்கொண்ட பிரதியுஷாவைப் பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்தான் ஆதவன்.

“நேத்து ஈவினிங் மிசஸ் கூப்பர் செஞ்சு குடுத்த ஹாட் கேக்கை வாவ் சூப்பர்னு சப்பு கொட்டி சாப்பிட்டல்ல… அதுல இருந்த சாஸ் செய்யுறதுக்கு யூஸ் பண்ணுனது எங்க ஸ்ட்ராபெர்ரி லிக்யூரை தான்”

“சை” என்று முகம் சுளித்த பிரதியுஷாவைத் தன்னுடன் அழைத்துச் சென்று ஜாம் மற்றும் வினிகர் தயாரிப்பையும் காட்டினான்.

கூடவே தங்களது ஈடன் குழுமம் வாங்கிய விருதுகளைப் பெருமிதத்துடன் காட்டியவன் “ஆஸ்திரேலியாவோட ஜி.டி.பில ஒரு துளி அளவுக்குத் தான் ஈடனோட பங்களிப்பு… ஆனா அதை தக்க வச்சிக்க நாங்க கிட்டத்தட்ட மூனு தலைமுறையா போராடுறோம்” என்றான்.

கூடவே ஆலிவர் ஜோன்ஸ் மற்றும் வசீகரனைப் பற்றியும் அவளிடம் பகிர்ந்துகொண்டான். அனைத்தையும் கேட்ட பிறகு தான் ஏன் கே.கே.வில்லாவாசிகள் ஈடன் மீது இவ்வளவு அக்கறை வைத்துள்ளார்கள் என்பது பிரதியுஷாவுக்குப் புரிந்தது.

வசீகரனும் தனது தந்தையைப் போல தோட்டக்கலை நிபுணராக வந்து ஈடனை உயிராக எண்ணியிருக்கிறார். அவரைப் போலவே கதிர்காமனும் இருக்கவே ஆலிவர் ஜோன்ஸ் தனக்குப் பின்னர் ஈடனின் பொறுப்பை வசீகரனிடம் ஒப்படைத்திருக்கிறார். ஆதவன் சொன்னது போல மூன்று தலைமுறையினர் உழைப்போடு தொழில் பக்தியையும் இயற்கை மீதான நேசத்தையும் கொட்டியதாலோ என்னவோ ஈடனும் செழித்து வளர்ந்திருந்தது.

கன்னத்தில் கை வைத்து அனைத்தையும் பிரமிப்பு தளும்பும் முகபாவத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவளிடம் “அச்சோ உன்னை ரொம்ப போரடிச்சிட்டேன் போல” என்றான் ஆதவன்.

“அப்பிடியெல்லாம் இல்ல ஆது… நான் கூட அடிக்கடி ஏன் நீங்க எல்லாரும் ஈடன் ஈடன்னு புலம்புறீங்கனு யோசிச்சிருக்கேன்… அதுக்கான காரணம் இப்போ தானே தெரியுது” என்றாள் பிரதியுஷா.

See More  🎵 இசை 34 🎶

கூடவே “எங்கப்பா ஏன் ஊட்டிக்கு வராம ஃப்ரூட் ஃபார்மே கதினு கிடந்தார்னும் புரியுது” என்று சொல்ல

“தாமு அங்கிள் பயங்கரமான ஒர்க்கஹாலிக் தெரியுமா? அதுலயும் ‘பிக் யுவர் ஓன் ஃப்ரூட்’ டைம்ல ஈடனுக்கு வர்ற குட்டிப்பசங்களோட சுத்துவார்… யாரும் அவரோட அன்பான மரம் செடிகளோட கிளைய உடைச்சுடக்கூடாதாம்… ஆதி எப்போவும் அவரோடவே சுத்துவான்… அதான் ஈடன்ல இருக்குற அவுட் ஹவுஸ்ல இப்போ கூட சில நாள் தங்கிடுறான்” என்றபடி அவளை தயாரிப்பு பகுதியிலிருந்து வெளியே அழைத்து வந்தான்.

இதற்கு மேல் அங்கேயே இருந்தால் ஊழியர்களுக்குத் தொந்தரவாக இருக்கும் அல்லவா!

முடிந்த வரை தங்களது ஈடன் குழுமத்தைப் பற்றி பிரதியுஷாவிடம் விளக்கி முடித்தவன் அவளை வீட்டில் கொண்டு விட காரைக் கிளப்பினான்.

பாதி தூரம் வரும் போதே கிறிஸ்டோபரிடமிருந்து போன் அழைப்பு. அடுத்த ஸ்டாண்ட்-அப் நிகழ்விற்கான பயிற்சிக்கு எப்போது வருவாய் என்ற கேள்வி!

“நான் உஷாவ வீட்டுல ட்ராப் பண்ணிட்டு ஓடி வந்துடுறேன் கிறிஸ்… நீ எனக்கும் சேர்த்து லஞ்ச் ஆர்டர் பண்ணிடு” என்றவனின் புஜத்தில் சுரண்டினாள் பிரதியுஷா.

என்ன என்று விழியால் வினவியவனிடம் “நானும் உன்னோட ஸ்மைல் கஃபேகு வரவா ஆது? வீட்டுல ரொம்ப போரடிக்குதுடா” என்றாள் பிரதியுஷா.

அவனோ அவளுடன் பேசவும் பொழுதைக் கழிக்கவும் ஆர்வமாய் இருப்பவன். வேண்டாமென்றா மறுப்பான்! கிறிஸ்டோபரிடம் மூவருக்கு லஞ்ச் ஆர்டர் செய்யும் படி கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

“திடீர்னு ஏன் மேடம்கு ஸ்மைல் கஃபே மேல ஆர்வம்?” உள்ளுக்குள் உண்டான குறுக்குறுப்பை அடக்கமுடியாது வினவினான்.

“ஆஸ்திரேலியால காலடி எடுத்து வச்சதும் என்னை புது மனுசியா உணரவச்ச இடம் அது… இறுக்கம் மறைஞ்சு சிரிக்க வச்ச இடமும் கூட… அதான் மறுபடியும் பாக்கணும்னு தோணுது ஆது” என்று சொல்லிவிட்டு பூவாய் சிரித்தவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோணியது அவனுக்கு.

“ஒரு ஃப்ளவர் பொக்கேயே பக்கத்துல உக்காந்து சிரிக்குற ஃபீல் வருது” என்று தனக்குள் சிலாகித்தான் அவன்.

“அஹான்! உனக்கு பக்கத்துல இருக்குற ஃப்ளவர் பொக்கே தெரியுது… எனக்கு எதிர்ல வர்ற எமன் தான் தெரியுறான்டா ஆது” என்று அவனது மனசாட்சி சோக கீதம் பாட உஷாராகி சாலையில் கண் பதித்தான் ஆதவன்.

சில நிமிடங்களில் ஸ்மைல் கஃபே கட்டிடத்தின் முன்னே இறங்கியவர்கள் உள்ளே செல்ல அங்கே கிறிஸ்டோபர் லஞ்சுடன் அவர்களுக்காக காத்திருந்தான்.

“ஏய் ஆது! தட் டிபிக்கள் இந்தியன் கேர்ள்?” என்று கேள்வியுடன் பிரதியுஷாவைக் காட்டி வினவ

“யெஸ்! அவளே தான்… ஷார்ட்டா டி.ஐ.ஜி… உஷானு இன்னொரு பேர் கூட இருக்கு” என்று வளவளத்த வண்ணம் சாப்பிட அமர்ந்தான்.

மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க ஆதவன் அடுத்த நிகழ்வுக்கான ஸ்கிரிப்டுடன் அமர்ந்தான். அவனும் கிறிஸ்டோபரும் ஸ்கிரிப்டில் உள்ளதை வாசித்து சரி பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்தனர்.

வாசிக்கும் போதே இடையிடையே இருவரும் குபீரென நகைத்து வேறு வைக்க பிரதியுஷாவோ அந்த ஸ்மைல் கஃபேயை சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஸ்கிரிப்ட் திருப்தியானதும் ஆதவனை மேடையில் பேசிக்காட்டுமாறு கிறிஸ்டோபர் சொல்ல பிரதியுஷா பார்வையாளர் இடத்தில் நின்று கொண்டாள். இருக்கைகளை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தான் போடுவார்களாம்!

“டீனேஜ்ல எல்லாரும் பண்ணுற கோமாளித்தனத்துல ஒன்னு யாராச்சும் நம்மள பாத்து ஏன் உன்னோட ஸ்கின் இவ்ளோ டார்க்கா இருக்குனு கேட்டுட்டாங்கனா நம்ம சருமத்துக்கு விருந்து வைக்குறது… என்னடா சருமத்துக்கு விருந்தானு நீங்க கேக்குறது புரியுது!

சாதாரண நாள்ல ஃப்ரிட்ஜ் முழுக்க பழங்கள் வெரைட்டி வெரைட்டியா இருந்தாலும் கண்டுக்காத நம்மாளுங்க யாரோ ஒருத்தவங்க ஸ்கின் கலரை பத்தி சொன்னதும் எல்லா பழத்தையும் அரைச்சு அந்த மல்டி-ஃப்ரூட் பியூரிய முகத்துல போட்டுக்குவாங்க… ஐ மீன் முகச்சருமத்துக்கு விருந்து வைச்சிடுவாங்க… அடுத்த நாள் மில்க், அதுக்கு அடுத்த நாள் ஹனினு முகச்சருமம் வெளுக்குற வரைக்கும் அந்த விருந்து தொடரும்…

See More  ☔ மழை 9 ☔

இது எப்போ அவங்க அம்மாக்குத் தெரியவருதோ அப்போ இத விட பெரிய விருந்தை அந்தம்மா வைப்பாங்க… அப்போவும் அடி வாங்கிட்டு அசராம அடுத்து எந்த ப்ரூட் பேக் போட்டா டேன் ஆன ஸ்கின் மறுபடியும் ப்ரைட் ஆகும்னு கூகுளோட உயிர வாங்க போயிடுவாங்க… ஏன்டா டேய் அத ஜூஸ் போட்டு குடிச்சா கூட எனர்ஜி கிடைச்சிருக்குமேடானு சுத்தி இருக்குறவங்க திட்டுனாலும் மண்டைல உறைக்காது… ஏன்னா அந்த வயசு அப்பிடி!

ஆனா டீனேஜ் கடந்து வந்ததுக்கு அப்புறம் தான் புரியும், தோலோட கலர் ப்ரைட்டா இருக்கிறதை விட நம்ம மனசு ப்ரைட்டா இருக்குறது தான் முக்கியம்னு… சோ அவாய்ட் தோஸ் சோ கால்ட் ரேசிஸ்ட் தாட்ஸ்… எவ்ரி ஸ்கின் டோன் இஸ் ஸ்பெஷல் அண்ட் பியூட்டிபுல்… சோ வெள்ளை வெளேர் சருமம் தான் அழகும் ஹெல்தியும்ங்கிற மைண்ட்செட்டை மாத்திப்போம் நண்பா”

ஆதவன் நீளமாக ஆங்கிலத்தில் பேசி முடிக்கவும் கரங்களைத் தட்டினாள் பிரதியுஷா. அந்த நீண்ட உரையில் இடையிடையே சிரிக்க வைத்தவன் அதன் முடிவில் சிந்திக்க வைக்கவும் கருத்தைப் பகிர்ந்தான் அல்லவா! அந்த நகைச்சுவைக்கும் அதில் மணிமகுடமாக மிளிர்ந்த நிறம் பற்றிய கருத்துக்கும் அவளால் முடிந்த பாராட்டு இந்த கைதட்டல் மட்டுமே!

எனவே வஞ்சனையின்றி கைதட்டி முடித்தவள் “ஆது யூ ஆர் ராக்கிங்” என்றாள் மனப்பூர்வமாக.

ஆதவன் சிறிய மேடையில் நின்றபடி “அத இங்க வந்து கூட சொல்லலாம் மேடம்” என்று குறும்பாக உரைக்க பிரதியுஷாவும் மேடைக்கு விரைந்தாள்.

அவனருகே சென்றவள் “யூ ஆர் ராக்கிங் அகெய்ன்… உன்னோட ஸ்டாண்ட் – அப் மத்தவங்கள்ல இருந்து வித்தியாசப்படுறதே நீ கடைசில சொல்லுற இந்த மாதிரி உபயோகமான கருத்துக்களால தான் ஆது… யூ ஆர் ஆசம் மேன்” என்றாள் மனப்பூர்வமாக.

அவளது பாராட்டை தலைகுனிந்து ஏற்றுக்கொண்டவன் புன்சிரிப்புடன் “அவ்ளோ தானா? உங்கள் மனதில் இருப்பதை சொல்லலாமே” என்று தலை சரித்து வினவ

“என்ன சொல்லணும்?” என்று புருவம் உயர்த்தி மிரட்டினாள் பிரதியுஷா.

உடனே சுதாரித்தவன் “சொல்லணும்னா சொன்னேன்? இல்லையே! அது…” என்று இழுத்தவன் அவனது மொபைலில் நோட்டிபிகேசன் சத்தம் கேட்கவும் வேகமாக எடுத்து அதில் முகப்புத்தகத்தைத் திறந்தான்.

பின்னர் அவளிடம் தொடுதிரையைக் காட்டி “ஏதாவது எழுதலாமேனு இதோ இங்க போட்டிருக்குல்ல, இத தான் சொன்னேன்” என்று காட்ட

“ஓ! ஃபேஸ்புக்கா” என்று அவனது சமாளிப்பை தெரியாதது போல நடித்த பிரதியுஷா தனது மொபைலை எடுத்து எதையோ பார்த்தபடியே “தம்பி நீங்க நல்லா கடலை வறுக்கிறீங்க… ஆனா பாருங்க வாணலிய அடுப்புல வைக்காம வறுக்கிறீங்க… சோ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்றாள் கண்களில் குறும்பைத் தேக்கி.

ஆதவன் தன்னைக் கண்டுகொண்டாளே என்று பின்னந்தலையில் தட்டிக்கொண்டவன் அவளது வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டான்.

“சோ நெக்ஸ்ட் டைம் பெட்டரா வறுக்க சொல்லுறீங்க” என்று இழுத்தவனிடம் மொபைல் தொடுதிரையைக் காட்டிய பிரதியுஷா

“நான் கூகுள்பே என் கிட்ட சொன்ன பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டயலாக்க தான் சொன்னேன்… நீ அதுக்கு வேற அர்த்தம் எடுத்துக்கிட்டா நான் பொறுப்பு இல்லப்பா” என்றாள் அமர்த்தலாக.

சிறுபிள்ளைத்தனமாகப் பேசிக்கொண்டாலும் இருவருமே ஒருவர் பேச்சை மற்றொருவர் ரசித்தனர் என்பதே உண்மை. அத்துடன் ஒருவர் மற்றொருவரின் அருகாமையையும் விரும்பத் தொடங்கிவிட்டனர் என்பதையும் புரிந்துகொண்டனர் பிரதியுஷாவும் ஆதவனும்.

பல நேரங்களில் வாழ்நாள் முழுமைக்குமான நேசத்தை வளர்ப்பது இம்மாதிரி சிறுபிள்ளைத்தனமான உரையாடல்கள் தான். அலங்காரமான வார்த்தைகளோ, உணர்ச்சிகரமான வசனங்களோ நேசத்தை உணர்த்த தேவையில்லை. மனம் கவர்ந்தவர்களுடன் கழிக்கும் சிறுபொழுதுகளும், அவர்களின் கள்ளமற்ற வார்த்தைகளும் கூட உறவை உறுதியாக மாற்றும்.

இசை ஒலிக்கும்🎵🎶🎵