🎵 இசை 11 🎶

“நமக்குச் சொந்தமானவங்களுக்கு என்னைக்குமே நம்ம பிரையாரிட்டியா இருக்கணுமே தவிர ஆப்சனா இருக்கக்கூடாது… அதே சமயம் யார் ஒருத்தவங்க மத்தவங்களுக்காக நம்மள வேண்டாம்னு ஒதுக்கி வைக்கிறாங்களோ அவங்களை நம்ம லைஃப்ல இருந்து ரிமூவ் பண்ணிடனும்… அதான் சொல்லுவாங்களே இக்னோர் நெகடிவிட்டினு… பட் நான் நெகட்டிவிட்டிய இக்னோர் பண்ணுற டைப் இல்ல… யார் என்னை நெகட்டிவ்வா ஃபீல் பண்ண வைக்கிறாங்களோ அவங்களை என் லைப்ல இருந்து டெலீட் பண்ணுற டைப்… அதனால தானோ என்னவோ என் லைஃப் ஸ்மூத்தா மூவ் ஆகுது”

                                                                  -ஆதவன்

மறுநாள் ஷேரிட்டி நிகழ்வுக்காக கே.கே.வில்லா தயாரானது. நிர்வாக ரீதியான வேலைகள் அனைத்தையும் ‘ஃபார் த சில்ரன்’ ஷேரிட்டியின் அலுவலகப்பணியாட்கள் முடித்துவிட விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதித்யனின் உதவியாளனான வின்சென்ட் கவனித்துக்கொண்டான்.

இம்மாதிரி ஷேரிட்டிக்கான விழாக்களில் பழம்பெரும் பொருட்களை ஏலம் விடும் நிகழ்வு நடைபெறும். அந்த ஏலத்தில் கிடைக்கும் தொகையை ஷேரிட்டிக்குக் கொடுப்பது வழக்கம். அதற்காக பங்கேற்கும் நபர்கள் அமருமிடம், மேடையை எளிமையாக மலர்களை வைத்து அலங்கரித்துக் கொள்ளலாம் என்பது ஏற்கெனவே எடுத்த முடிவு தான்.

மலர் அலங்காரத்தை ஜெனோலினின் பொறுப்பில் தான் ஒப்படைத்திருந்தனர். அவள் பத்மஹாசினி மற்றும் வைஜெயந்தியுடன் அது குறித்து பேசிக்கொண்டிருக்கையில் பிரதியுஷா அங்கே வர அவளை எங்கேயோ கண்ட நியாபகத்தில் குழம்பி விழித்தாள் ஜெனோலின்.

பிரதியுஷாவோ இவள் லேம்ப் போஸ்டுடன் விமானநிலையத்தில் கண்ட ஜெனோ அல்லவா என்று புருவம் சுருக்கினாள்.

பத்மஹாசினி இத்தனைக்கும் பிரதியுஷா என்ற ஒருத்தி வந்ததையே கவனியாதவர் போல அமர்ந்திருக்க வைஜெயந்தி அவளை அறிமுகப்படுத்தினார்.

“இவ பிரதியுஷா… உனக்கு தாமு அண்ணாவ நியாபகம் இருக்குதா? அவரோட பொண்ணு… இந்தியால இருந்து வந்திருக்கா” என்றதும் ஜெனோலின் புன்னகைத்தாள்.

பிரதியுஷா முகம் மலர “நான் உங்கள ஏர்போர்ட்ல பாத்தேன்… ஆதி… ப்ச்… ஏ.கே கூட” என்றாள். ஜெனோலின் அதற்கும் புன்னகைக்க பத்மஹாசினியும் வைஜெயந்தியும் அவளது புன்னகையை நோட்டமிட்டுக் கண்களால் பேசிக்கொண்டனர்.

ஆதித்யனும் ஜெனோலினும் காதலிப்பது கே.கே.வில்லாவின் செங்கற்கள் கூட அறிந்த உண்மை. அவ்வாறிருக்க பெரியவர்களுக்கு மட்டும் தெரியாதிருக்குமா என்ன?

பின்னர் அவர்களுடன் மலர் அலங்காரம் குறித்துப் பொதுப்படையாகப் பேசிய நேரத்தில் கூட பத்மஹாசினி பிரதியுஷாவைக் கண்டுகொள்ளவில்லை. அவளுக்கே இந்நிலை என்றால் அனுபமாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். பத்மஹாசினி இருக்குமிடத்துக்கே வருவதற்கு யோசித்தாள் அச்சிறுபெண்.

அவர் மட்டுமல்ல, அவரது புத்திரச் செல்வங்கள் கூட அனுபமாவை ஏறேடுத்துப் பார்ப்பதில்லை. ஆனால் ஆதவன் மட்டும் பிரதியுஷாவை விழி மலர நோக்கினான். எதிர்படும் போது தெரிந்தவன் போல பேசினான். அவள் ஒதுங்கி சென்றால் சீண்டினான்.

ஆதித்யன் என்பவன் பிரதியுஷாவைப் பொறுத்தவரை புரோகிராம் செய்யப்பட்ட ரோபோ. குறைந்தபட்சம் அவளது பார்வையில் பட்ட நேரங்களில் அவன் அவ்வாறு தான் நடந்துகொண்டான்.

சந்திரமோகனை பாம்பென்று ஒதுக்கவும் முடியவில்லை; பழுதென்று கடக்கவும் முடியவில்லை. அன்னையும் இரட்டைமகன்களும் பிடித்தமில்லை என்பதை செய்கையில் வெளிப்படுத்தினால் அந்த அன்னையின் இளையச்சகோதரன் அதே பிடித்தமின்மையை சர்க்கரைப்பூச்சுடன் வெளிப்படுத்தினார்.

பேச்சின் முடிவில் இரவில் மலர் அலங்காரம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்த போது ஆதித்யன் வந்துவிட மூவரின் முகமும் மலர்ந்தது, பிரதியுஷாவைத் தவிர்த்து.

அவனோ அவள் ஒருத்தி இருப்பதையே கண்டுகொள்ளாது அன்னை, அத்தை மற்றும் காதலியிடம் மட்டும் முப்பத்திரண்டு பற்களையும் காட்டிப் பேசிக்கொண்டிருந்தான்.

அவர்களின் பேச்சு முழுவதும் அவர்கள் அறிந்த வட்டம் பற்றி இருந்தது. அதில் யாரையும் பிரதியுஷாவுக்குத் தெரியாது. ஒருவேளை வேண்டுமென்று தனக்குத் தெரியாத நபர்களைப் பற்றி பேசி தன்னை மூன்றாவது நபராக உணரவைக்கிறானோ என்ற எண்ணமும் அவளுக்குள் உதயமானது.

எரிச்சல் மூள எழுந்தவளை நால்வரும் ஏறிட ஆதித்யன் “எங்க போறீங்க மேடம்? உங்க ஷெட்யூல் இன்னைக்கு ஃப்ரீனா என்னோட ஈடனுக்குக் கிளம்புங்க” என்றான் நிதானமாக.

பிரதியுஷா மறுத்துப் பேச வாயெடுக்கவும் “ஷேர்ஹோல்டருக்கு கார்டியனா இருக்குறவங்களுக்குப் பிசினஸ் நேச்சரைப் பத்தியும் தெரிஞ்சிருக்கணும்… எந்த ஆதாயமும் கஷ்டப்படாம கிடைக்காது” என்று வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல அவள் கஷ்டப்படாமல் சொகுசாக பங்குகளைப் பெற விழைகிறாள் என்று குற்றம் சாட்டினான்.

இதற்கு மேல் மறுத்தால் அவன் சொன்னது உண்மை என்பது போலாகிவிடும். எனவே அவனுடன் செல்ல ஒப்புக்கொண்டாள் பிரதியுஷா.

மீண்டும் அவள் மாடியை நோக்கிச் செல்ல எத்தனிக்க “நான் உன்னை ஈடனுக்கு வரச் சொன்னேன்” என கட்டளையிடுவது போல ஆதித்யனின் குரல் ஒலித்தது.

இவன் என்ன எனக்குக் கட்டளையிடுவது என்று எரிச்சல் மண்ட திரும்பியவள் “அனு கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்” என்றாள்.

“ஏன் அந்த மேடம் கிட்ட பெர்மிசன் வாங்காம நீங்க எங்கயும் வரமாட்டீங்களா?”

அவனது கேலியில் அவள் கடுப்புறுவதைக் கண்ட வைஜெயந்தி இருவரும் முட்டிக்கொள்ளும் முன்னர் வைஜெயந்தி இடையில் புகுந்தார்.

“அனு கேட்டா நான் சொல்லிடுறேன் உஷாம்மா… நீ கிளம்பு” என்றவரிடம் சொல்லிக்கொண்டு ஆதித்யனுடன் கிளம்பினாள் பிரதியுஷா.

என்னவோ துணி மூட்டையை அருகிலிருத்தி கார் ஓட்டுவது போன்ற பாவனையுடன் காரைக் கிளப்பியவனின் செயல்பாடு பிரதியுஷாவுக்கு அசவுகரியத்தை அளித்தது.

ஆதித்யனோ முகஜாடையில் வசுந்தராவைப் பிரதிபலித்தவளைப் பார்க்க விரும்பாதவனாக சாலையில் கண் பதித்து காரை ஓட்டினான்.

சில மணித்துளிகளில் கார் ஈடனுக்குள் நுழைந்தது. ஈடனை நெருங்கும் முன்னரே ஆங்காங்கே ‘ஈடன் வெல்கம்ஸ் யூ’ என்று குட்டி குட்டி அறிவிப்பு பலகைகள் தென்பட்டன.

உள்ளே நுழைந்ததும் தரிப்பிடத்தில் காரை நிறுத்தியவன் அவளை இறங்கும்படி சைகை செய்துவிட்டுக் கார்க்கதவைத் திறந்து வெளியேற பிரதியுஷாவும் இறங்கினாள்.

இறங்கியவளின் பார்வையில் பசுமையைத் தவிர வேறெதுவும் படவில்லை. இலையுதிர்க்காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்திருந்ததால் காலையில் பெய்த மழையில் மரங்களும் செடி கொடிகளும் நீராடிவிட்டு புத்துணர்வுடன் நின்றன.

தண்ணீர் தேங்கிவிடாது ஆங்காங்கே வேலைகள் நடந்தவண்ணம் இருக்க கபே, ஷாப் இரண்டையும் தாண்டி சென்ற போது செடிக்கூட்டத்திற்கு நடுவே நின்றது மேலாண்மை இயக்குனரின் அலுவலக அறை.

பிரதியுஷாவுக்கு இங்கேயே நின்று இந்த மரங்களை ரசித்தால் போதுமென்று தோணி விட ஆதித்யன் அவளைத் தாண்டிச் சென்றதைக் கூட அவள் கவனிக்கவில்லை.

அவனோ அவள் வேடிக்கை பார்க்கட்டும் என்று தன் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.

பிரதியுஷா கால் போன போக்கில் நடந்தவள் ஆப்பிள் மரங்களும் ஆப்ரிகாட் மரங்களும் நிறைந்த பகுதிகளை வட்டமிடும் லோரிகீட் பறவைகளைப் பார்த்து ரசித்தபடி நடந்தாள்.

இவ்வளவு பறவைகள் நிரம்பிய பழத்தோட்டத்தில் சேதாரமும் அதிகமாகத் தானே இருக்கும் என்று யோசித்த போது பார்வையில் விழுந்தது முறையாக கவாத்து செய்யப்பட்டு சிறிய ஏணி வைத்து பறிக்கும் உயரத்தில் இருந்த மரங்களை மூடியிருந்த வலை.

அதைக் கடந்து மரங்களில் தொங்கும் பழங்களை பறவைகளால் நெருங்க முடியாது. இயற்கையை ரசிக்க ஆரம்பித்த மனதிற்கு சுற்றுபுறம் மறந்து போகும். பிரதியுஷாவும் அப்படி தான் பொடி நடையாக நடந்து அந்த பழப்பண்ணையின் மரங்கள் அடர்ந்த பகுதியின் கடைக்கோடியை அடைந்துவிட்டாள். அதைத் தாண்டி சென்றால் செடிகள் அடங்கிய பகுதி. அங்கே ஸ்ட்ராபெர்ரி நடவுக்கு முன்னர் மண்வளத்தை அதிகரிக்க கடுகு பயிரிடும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அத்தோடு மழை பெய்திருந்ததால் சுற்றுவட்டாரத்தில் வீசிய காற்றில் ஈரப்பதம் அதிகரித்திருந்தது. அது உடலில் மோதும் போது மயிர்க்கூச்செறிய கரங்களால் புஜங்களைத் தடவியபடி நடைபோட்டவளின் லாங் ஸ்கர்ட் புதரில் சிக்கிக்கொள்ள குனிந்து அதை எடுத்தவளின் நாசியை நிரடியது பான்சி பூக்களின் நறுமணம்.

அதைச் சுவாசித்தபடி நறுமணம் வந்த இடத்தை நோக்கி நடந்தவள் அந்தக் கடைக்கோடியில் இருந்த அவுட் ஹவுசை அடைந்தாள். அவுட் ஹவுசின் பின்பகுதிக்குச் செல்ல மரத்தாலான கதவுகள் இருக்கவே அதைத் திறந்து கொண்டு அங்கிருந்த குட்டி மலர்வனத்துக்குள் அடியெடுத்து வைத்தவள் அதன் அழகில் மெய்மறந்து நின்றுவிட்டாள்.

மெதுவாக மலர்ச்செடிகளிக்கிடையே ஓடிய பாதையில் நடந்தவள் மழை முடிந்த பிறகு அடிக்கும் இளம்வெயிலை அனுபவித்தபடி சற்று நேரம் அங்கேயே கண் மூடி நின்றாள்.

கண்ணைத் திறந்தவள் எதேச்சையாக தனது கால்களைப் பார்க்க அவளிடமிருந்து சில அடிகள் தொலைவில் கருப்புநிறத்தில் பெரிய சைஸ் எலியைப் போல வெயில் காய்ந்தபடி படுத்திருந்த விலங்கு ஒன்றினை கண்டதும் நகராமல் சிலையாய் நின்றாள்.

அது பார்ப்பதற்கு கண் மூடி சாது போல கிடந்தாலும் அதன் கடைவாயின் இருபுறங்களிலும் டிராகுலாவுக்கு இருப்பது போன்று இரு பற்கள் வெளியே வந்து நிற்க பிரதியுஷாவுக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை.

அதன் தவம் கலையாதவாறு பின்னோக்கி மெதுவாய் நகர்ந்தவள் எதன் மீதோ மோதிக்கொண்டு திடுக்கிட்டுத் திரும்பினாள். அங்கே எரிக்கும் பார்வையுடன் நின்று கொண்டிருந்தவன் ஆதித்யன்.

ஏன் இவன் முறைக்கிறான் என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்த பிரதியுஷா, அவன் திட்ட வாயெடுக்கவும் அவசரமாக கரங்களால் அவன் வாயை மூடிவிட்டு படுத்திருந்த கருப்பு நிற விலங்கை காட்டினாள்.

அதைக் கண்டதும் ஆதித்யனும் அமைதியாக நகர அவன் பின்னே பூனை போல நடந்து அந்தக் குட்டி மலர்வனத்தை விட்டு வெளியேறினாள் பிரதியுஷா.

ஆதித்யனோ இந்த மலர்வனத்துக்குள் வரும் உரிமை தன்னையும் ஜெனோலினையும் தவிர்த்து வேறு யாருக்குமில்லை என்று கிட்டத்தட்ட பழப்பண்ணையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தே விட்டான். ஊழியர்களே அங்கு செல்லாத நிலையில் பிரதியுஷா அங்கே சென்றதில் அவனுக்கு எக்கச்சக்க கோபம். சிசிடிவியில் கண்டுவிட்டு ஓடோடி வந்திருந்தான் அவன்.

“இந்த கார்டன் என் ஜெனோவுக்காக நான் ரெடி பண்ணுனது… எங்க ரெண்டு பேரைத் தவிர வேற யாரும் நுழையக் கூடாதுனு தான் பிரைவேட் ப்ளேஸ்னு போர்ட் வச்சிருக்கேன்… நீ எப்பிடி உள்ளே போகலாம்?”

அப்போது தான் அங்கே இருந்த அறிவிப்பு பலகையைக் கவனித்தாள் பிரதியுஷா. அவள் முகத்தில் குற்றம் செய்துவிட்டப் பாவனை வந்துவிட நாக்கைக் கடித்தவள் பதிலேதும் பேசாது நிற்க ஆதித்யனே தொடர்ந்தான்.

“போனது தான் போன… அந்த அனிமலை பாத்ததும் வெளியே வந்திருக்க வேண்டியது தானே.. ஏன் அங்கேயே சிலையா நின்ன?”

“அது என்ன அனிமல்னு தெரியாம…”

“டாஸ்மேனியன் டெவில்… இந்த ஏரியால மட்டுமே இந்த ஜீவராசிய பாக்கமுடியும்… அது கார்னிவோரஸ்… பல்ல பாத்தல்ல… கடிச்சிருந்தா அது என்ன அனிமல்னு ஆராய்ச்சி பண்ணுனது தப்புனு புரிஞ்சிருக்கும்”

பிரதியுஷா உதட்டைக் கடித்துக்கொண்டு நின்றவள் மெதுவாக “சாரி ஆதி… எனக்கு அது பிரைவேட் ப்ளேஸ்னு தெரியாது… அந்த அனிமல பாத்ததும் ஓடணும்னு நினைச்சேன்… பட் சத்தம் கேட்டதும் கண் முழிச்சு அது கடிச்சு வச்சிடுமோனு பயம்” என்றாள்.

“டோண்ட் கால் மீ ஆதி” என்று கட்டளை பிறப்பித்துவிட்டு அவன் விறுவிறுவென்று நடக்க ஆரம்பிக்க அவன் பின்னே ஓடினாள் அவள்.

இருவரும் அலுவலக அறைக்குள் நுழைந்ததும் அவளது பார்வை அவனது இருக்கைக்குப் பின்னே உயரத்தில் மாட்டிவைக்கப் பட்டிருந்த புகைப்படங்களில் நிலைத்தது. அதிலிருந்த மற்ற இருவரை தெரியவில்லை என்றாலும் இளவயது பரந்தாமன் மற்றும் கதிர்காமனைப் பார்த்ததும் அவள் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

“வினோத் மாமா எப்போவும் ஹேண்ட்சம் தான்” ஆர்வக்கோளாறில் வாய் விட்டு உளறியும் விட்டாள்.

சுழல்நாற்காலியில் அமர்ந்த ஆதித்யனோ “அவர் பேர் கதிர்காமன்… வினோதன் இல்ல” என்றான் கடுமை காட்டி.

பிரதியுஷா உதட்டுச்சுழிப்புடன் அலட்சியப்படுத்திவிட்டு “இப்போ எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்திருக்கீங்க?” என வினவ

“ஈடனோட ஷேர்ஹோல்டருக்கு நீ கார்டியனா இருக்கப்போற… சோ ஃபார்மோட ஃபினான்ஷியல் கண்டிசன் பத்தி நீயும் தெரிஞ்சிக்கணும்” என்றவன் அதன் பின்னே தொழில் சம்பந்தப்பட்ட விவரங்களை அடுக்க பிரதியுஷாவும் அதை கவனமாக கேட்க ஆரம்பித்தாள்.

நேரம் பேச்சில் கழிய அதனிடையே அவனுக்கு ஆதவனிடமிருந்து போனில் அழைப்பு வந்தது.

“சொல்லு ஆது” என்றவன் “வாட்? இப்போ எதுவும் பிரச்சனை இல்லையே? சி.பி.ஆர் குடுத்தாச்சுல்ல… எதுக்கும் டாக்டர் மார்கரேட்ட வரச் சொல்லுடா… நோ நோ… அதுக்கு அவசியமில்ல… நான் ஆஃப்டர் நூன் வர்றச்ச அவளையும் அழைச்சிட்டு வர்றேன்” என்று பேசிவிட்டு போனை வைத்தான்.

பிரதியுஷா என்னவென வினவ “நத்திங் இம்பார்டெண்ட்” என்று அலட்சியம் காட்டிவிட்டு மீண்டும் தொழில் பேச்சைத் தொடர்ந்தான் அவன். அதன் பின் அவளும் அந்த போன் பேச்சைப் பெரிதுபடுத்தவில்லை.

அனைத்தும் முடியவும் மதியநேரமாகவும் சரியாக இருந்தது. இருவரும் ஈடனிலிருந்து கிளம்பி கே.கே.வில்லாவை அடைந்த போது அங்கே அமைதிக்குப் பதிலாக பரபரப்பு சூழ்ந்திருந்தது.

ஆதித்யன் இயல்பாக உள்ளே நுழைந்தாலும் பிரதியுஷாவிற்குள் அமைதியின்மை உதயமானது.

அங்கே எமிலி எதிர்ப்பட என்னவென வினவியவளிடம் அவர்கள் கிளம்பிச் சென்ற சில மணிநேரங்களில் அனுபமாவும் விக்ரமும் தோட்டத்தில் ஓடி விளையாடியபோது அவன் தடுமாறி நீச்சல்குளத்தில் விழுந்துவிட்ட செய்தியைத் தெரிவித்தார் அவர்.

“ஐயோ விக்கிக்கு என்னாச்சு?” என அவள் பதற

“அவனுக்கு ஒன்னும் ஆகல… உன்னோட வந்த அனுபமா அவனைத் தண்ணில இருந்து காப்பாத்தி சி.பி.ஆர் குடுத்துட்டாளாம்” என்றான் ஆதித்யன் சாதாரணமாக.

அதைக் கேட்டதும் பிரதியுஷா நிம்மதியானவள் அடுத்த நொடியே “ஸ்விம்மிங்பூல்ல அனு இறங்குனாளா?” என்று அதிர்ச்சியுடன் கேட்க

“ஆமா அதுக்கென்ன?” என அவன் அலட்டிக்கொள்ளாது வினவ

“அனுக்கு ஸ்விம்மிங்பூல் வாட்டர்ல நனைஞ்சா ஒத்துக்காது… அவளுக்கு குளோரின் ரேஷ் வந்துடும்” என்று பதறியபடி மாடிப்படிகளில் ஏறினாள் பிரதியுஷா.

அனுபமாவின் அறைக்கதவைத் தட்டி “அனு என்ன பண்ணுற?” என்று சத்தமிட அவள் கதவைத் திறந்தாள், முகம், கழுத்து மற்றும் கரங்களில் சிவப்பு நிற வீக்கங்களுடன்.

“அண்ணி!” என மெதுவாய் முணகியபடி வந்தவளின் நிலையைக் கண்டதும் பிரதியுஷா அவளைத் திட்ட ஆரம்பித்தாள்.

“ஸ்விம்மிங்பூல் வாட்டர் உனக்கு அலர்ஜி ஆகும்னு தெரிஞ்சும் ஏன் அதுல இறங்குன? வீட்டுல இருக்குற யாரையாச்சும் ஹெல்புக்கு கூப்பிட்டிருக்கலாமே அனு” பதற்றத்துடன் உரைத்தவள் “யாராச்சும் டாக்டரை வரச் சொன்னாங்களா?” என வினவ

“ஆமா அண்ணி! டாக்டர் அப்போவே வந்து விக்கிய பாத்துட்டு பயப்பட எதுவுமில்லனு சொல்லிட்டார்” என்ற அனுபமா கழுத்தை தடவிக்கொண்டே இருக்க

“நான் கேட்டது அவனுக்காக இல்ல… உனக்காக… உன்னை டாக்டர் கிட்ட அழைச்சிட்டுப் போகலயா?” என மீண்டும் பிரதியுஷா வினவ இல்லையென மறுத்து தலையாட்டி

“நான் அப்போவே ரூம்குள்ள வந்துட்டேனே அண்ணி… யாருக்கும் எனக்கு அலர்ஜியானது தெரியாது” என்றாள் அனுபமா.

பிரதியுஷாவுக்குள் சுறுசுறுவென கோபம் மூண்டது. விக்ரமிற்கு நடந்த விபத்து அதிர்ச்சியானது தான். ஆனால் ஒருவர் கூடவா அவனைக் காப்பாற்றிய பெண் என்னவானாள் என கவனிக்கவில்லை?

கடுப்புடன் அவள் கரத்தைப் பற்றியவள் “வா என் கூட” என்று ஹாலுக்கு அழைத்துச் சென்றாள். அங்கே வைஜெயந்தியுடன் பேசிக்கொண்டிருந்த சார்லட் அனுபமாவின் முகத்தைக் கண்டதும் அதிர்ந்து போனார்.

சிவப்பு நிற தடிப்புகளும், வீக்கமுமாக இருந்தவளை கண்டு வைஜெயந்தி “என்னாச்சு அனு?” என பதற்றமாக வினவ

“அவளுக்கு ஸ்விம்மிங்பூல் வாட்டர் ஒத்துக்காது சித்தி… குளோரின் ரேஷ் வந்துடும்… விக்கிய பாக்க டாக்டர் வந்ததுக்கு அப்புறம் யாருமே அனுவ கவனிக்கலயா?” என விசாரணை செய்யும் தொனியில் பேச விக்ரமுடன் விளையாடிக்கொண்டிருந்த இரட்டை சகோதரர்கள் அவளது பேச்சில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

வைஜெயந்தியோ “நான் விக்கிக்கு நடந்த இன்சிடென்ட்ல கொஞ்சம் டென்சனாயிட்டேன் உஷாம்மா… அதான் கவனிக்கல” என்றார் வருத்தத்துடன்.

“இந்த வீட்டுல நீங்க மட்டும் தான் இருக்கீங்களா?” என்ற பிரதியுஷாவின் பார்வை ஆதவனை குற்றம் சாட்ட அவனருகே அமர்ந்திருந்த ஆதித்யனுக்கு அது எரிச்சலை மூட்டியது.

சட்டென எழுந்தவன் “ஆஃப்டர் ஆல் குளோரின் ரேஷ்கு நீ இவ்ளோ சீன் கிரியேட் பண்ண வேண்டிய அவசியமில்ல… இவ ரூம்குள்ள போய் கதவைச் சாத்துனத ஆது என் கிட்ட போன்ல சொன்னான்… அப்போ நீயும் என் கூட தானே இருந்த… இவளுக்கு ஸ்விம்மிங்பூல் வாட்டரால குளோரின் ரேஷ் வந்துடும்னு கண்டுபிடிக்க நாங்க ஒன்னும் டெர்மட்டாலஜிஸ்ட் இல்லையே” என்றான் எரிச்சலுடன்.

“அப்போ நான் கேட்டதுக்கு நத்திங் சீரியஸ்னு சொன்னது இத தானா?” கண்களில் கோபம் மின்ன கேட்டாள் பிரதியுஷா.

ஆமாம் என இலகுவாக தலையாட்டியவனை கண்களால் எரித்தவள் “ஒரு நாள், ஒரே ஒரு நாள் இவளை உங்க வீட்டுல உள்ளவங்களோட விட்டுட்டுப் போனேன்… அதுக்கே இந்த நிலமை… இதுவே உங்க வீட்டுப்பொண்ணா இருந்தா எக்கேடோ கெட்டுப்போனு விட்டிருப்பீங்களா?” என அனைவரையும் கேள்வி கேட்க இப்போது கடுப்புற்றது ஆதவன்.

“இப்போ என்னாச்சுனு ஓவர் ரியாக்ட் பண்ணுற உஷா? டாக்டர் கிட்ட போனா சரியாகிடப் போகுது” என்றான் விட்டேற்றியாக.

“டாக்டர் கிட்ட போனா சரியாயிடும்ங்கிறது எனக்கும் தெரியும்… ஆனா இவ்ளோ நேரம் இவ அலர்ஜி எரிச்சல்ல அவதிப்பட்டத கண்டுக்க கூட இங்க ஆள் இல்லையே… இவ்ளோ தானா உங்க அக்கறை? உங்க வீட்டுப்பையனை காப்பாத்தி தானே அவளுக்கு இப்பிடி ஆச்சு? ரூம்குள்ள போய் கதவைச் சாத்துனதும் எல்லாரும் தொல்லை விட்டதுனு இருந்திருக்கீங்க” என்றாள் பிரதியுஷா வேதனையும் கோபமும் கொப்புளிக்கும் குரலில்.

வைஜெயந்தி இல்லையென ஏதோ சொல்லவர அவரைக் கைநீட்டி தடுத்தவள் “வேண்டாம் சித்தி… எதையும் சொல்லி சமாளிக்கலாம்னு நினைக்காதீங்க… வெறும் அலர்ஜினு நீங்க நினைக்கலாம்… ஆனா இதுல நான் இந்த வீட்டாளுங்களோட அலட்சியத்த தான் பாக்குறேன்… கடைசில நீங்களும் இவங்கள மாதிரி தான்னு நிரூபிச்சிட்டீங்க” என்றாள் கசந்த குரலில்.

ஆதித்யன் பொறுமையிழந்தவனாக “ஏய் இப்போ என்ன பண்ணணும்ங்கிற? செஞ்ச தப்புக்குப் பரிகாரமா இந்தச் சின்ன மகாராணியோட கால்ல விழணுமா? அலர்ஜி வரும்னு தெரிஞ்சு யார் இவளை குளத்துல குதிக்கச் சொன்னது? செக்யூரிட்டிய ஹவுஸ்கீப்பரை கூப்பிட்டிருக்க வேண்டியது தானே! சின்ன விசயத்த ஊதி பெருசாக்கி இரிட்டேட் பண்ணாத” என்று சத்தமிட அந்த நொடியில் தங்களுக்கு இந்த வீட்டில் இவ்வளவு தான் மரியாதை என்பது கன்னத்தில் அடித்தது போன்று பிரதியுஷாவுக்குப் புரிந்தது.

அவனிடம் பேசாது “உங்க போனை குடுங்க சித்தி” என்றவள் அவர் போனை தரவும் நீலகண்டனுக்கு அழைத்தாள்.

“ஹலோ அங்கிள் நான் உஷா பேசுறேன்… எனக்கு இப்போ ரெண்டு விசயம் தேவை… ஒன்னு டெர்மட்டாலஜிஸ்ட் கிட்ட அப்பாயிண்மெண்ட்… இன்னொன்னு இந்தியாக்குத் திரும்பிப் போக ஃப்ளைட் டிக்கெட்ஸ்” என்றவள் அவர் பேசும் முன்னர் போனை வைத்துவிட்டாள்.

அனுபமாவிடம் “நீ போய் லக்கேஜை பேக் பண்ணு… நீல் அங்கிள் வந்ததும் டாக்டரை பாத்து மெடிசின் வாங்கிட்டு இன்னைக்கு நைட் ஃப்ளைட்ல நம்ம கிளம்புறோம்” என்று கட்டளையிட அவள் தயங்கி நின்றாள்.

“உன்னை லக்கேஜ் பேக் பண்ண சொன்னேன் அனு” பிரதியுஷாவின் குரல் உயர்ந்தது.

கே.கே.வில்லாவாசிகள் அதிர்ந்து நிற்க தம்பியுடன் லிக்யூர் தொழிற்சாலையிலிருந்து திரும்பிய பத்மஹாசினி திகைத்துப் போனார்.

அனுபமா கெஞ்சலுடன் “அண்ணி கோவப்படாத ப்ளீஸ்… நான் ரூம்குள்ள போய் கதைவைப் பூட்டுனதால தான் யாருக்குமே இந்த அலர்ஜி மேட்டர் தெரியல… இதுக்குப் போய் நம்ம இந்தியாக்குக் கிளம்பணுமா?” என்று மன்றாடிய வினாடியில் ஆதித்யனின் இதழ்க்கடையில் ஏளனச்சிரிப்பு துளிர்க்க பிரதியுஷா கோபத்தில் கொந்தளித்துப் போனாள்.

அதே கோபத்துடன் அனுபமாவின் கன்னத்தில் பளாரென அறைந்தவள் “அறிவில்ல உனக்கு? இன்னுமா இவனுங்க உன்னை தங்கச்சியா ஏத்துப்பாங்கனு நினைக்குற? இவனுங்களும் இவனுங்களை பெத்த மகராசியும் உங்கப்பாவயே மதிக்கலடி… அப்புறம் நம்மள எப்பிடி மதிப்பாங்க?” என்று சீற்றமடைய அவள் அறைந்த வேகத்தில் தடுமாறி விழப்போன அனுபமாவைத் தாங்கிப் பிடித்தான் ஆதவன்.

“வாட் இஸ் திஸ் உஷா?” என்று சீறியவனைக் கண்டுகொள்ளாது மீண்டும் அனுபமாவிடம் வந்தவள்

“நீ உண்மையாவே என் வசு அத்தைக்குப் பிறந்தவ தானா? உங்கம்மாக்கு அவங்களோட செல்ப் ரெஸ்பெக்ட யாரும் தீண்டுனா பிடிக்காது… அவ்ளோ ரோஷக்காரி… ஆனா நீ முட்டாள்தனமா நடக்கவே நடக்காத விசயத்துக்காக காத்திருக்க அனு… நீல் அங்கிள் வந்ததும் நம்ம டெர்மட்டாலஜிஸ்ட் கிட்ட போறோம்… அப்புறம் இந்தியாக்குக் கிளம்புறோம்… அப்பிடி உனக்கு வர இஷ்டமில்லனா நீ இங்கயே இரு… என்னால இவங்க உன்னை துச்சமா நடத்துறத பாத்துட்டு இருக்க முடியாது… நான் இந்தியாவுக்குப் போறது உறுதி” என்று பிடிவாதமாகக் கூற சந்திரமோகனின் குரல் எழுந்தது.

“இப்பிடி திடுதிடுப்புனு கிளம்புனா ஈடனோட நிலமை என்னாகும்மா?”

அதே கேள்வி தான் இரட்டை சகோதரர்களுக்கும் அவர்களைப் பெற்ற அன்னைக்கும்.

“நீங்களும் உங்களோட ஈடனும் எக்கேடு கெட்டா எனக்கென்ன? நான் இங்க வந்தது என் வினோத் மாமாவோட குடும்பத்துக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவிய செய்யணும்ங்கிறதுக்காகவும், அனு அவளோட பிரதர்சை பாக்க விரும்புனதுக்காகவும் தான்… ஆனா வந்ததுல இருந்து நீங்க எல்லாரும் எங்கள கிள்ளுக்கீரை மாதிரி நடத்துறீங்கள்ல… என்ன நினைச்சிட்டிருக்கீங்க? போக்கிடம் இல்லாம உங்கள அண்டிப் பிழைக்க வந்திருக்கோம்னா? எங்களோட செயிண்ட் பீட்டர்ஸ் எங்களுக்குக் காலம் முழுக்க அடைக்கலம் குடுக்கும்…

இந்த இடத்தை விட அங்க ஆயிரம் மடங்கு அன்பும் பாதுகாப்பும் எங்களுக்குக் கிடைச்சுது, இனியும் கிடைக்கும்… பழைய வெறுப்பை மனசுல வச்சுக்கிட்டு அதை வெளிக்காட்டணும்னா நானும் எவ்ளோ விசயத்துல காட்டிருக்கலாம்… நீங்க என்னங்க எங்களை வெறுக்கிறது? கடந்த ஆறு வருசமா நானும் உங்கள வெறுக்குறேன், உங்க யாரோட முகத்துலயும் முழிக்க எனக்கு விருப்பமில்ல… இதோ இவளுக்காக பல்ல கடிச்சிட்டு வந்தேன்… ஆனா உங்களோட அலட்சியம் எல்லை மீறிடுச்சு… இனியும் பொறுமையா இருந்தேன்னா நான் வசு வினோதனோட வளர்ப்பானு எனக்கே சந்தேகம் வந்துடும்… அனு நீ வர்றியா இல்லையா?” என்று இறுதியாய் கேட்க அனுபமா ஆதவனை விலக்கிவிட்டு விசும்பலுடன் ஓடி பிரதியுஷாவை அணைத்துக்கொண்டாள்.

அந்நேரத்தில் நீலகண்டனும் வந்துவிட அவரை வேறு எதுவும் பேச வேண்டாமென்றவள் அனுபமாவை அழைத்துக்கொண்டு அவருடன் மருத்துவமனைக்குக் கிளம்பிவிட்டாள்.

இத்தனைக்கும் பத்மஹாசினி என்ற பெண்மணியை அவள் கண்டுகொள்ளவே இல்லை. வைஜெயந்தி அண்ணியை செய்வதறியாது பார்க்க ஆதித்யன் கோபத்தில் கொந்தளிக்க ஆதவனோ சற்று முன்னர் தான் கரங்களில் தாங்கிய அனுபமாவின் உடலில் ஏற்பட்ட தடிப்புகளை மட்டும் எண்ணியவண்ணம் அமைதியாக நின்றான்.

இசை ஒலிக்கும்🎵🎶🎵