🎵 இசை 1 🎶

“நம்பிக்கை… ஓரறிவு ஜீவராசிகள்ல ஆரம்பிச்சு ஆறறிவு மனுசன் வரைக்கும் ஃபீல் பண்ணுற ஆழமான உணர்வு… டெய்லி ஏர்லி மானிங் விடிஞ்சதும் பறவைங்க கூட்டமா பறந்து போறது அந்த டேரக்சன்ல போனா நமக்கு இரை கிடைக்குங்கிற நம்பிக்கைல தான்… நிலையில்லாத வாழ்க்கைனு தெரிஞ்சும் வீட்டுல டெய்லி கேலண்டர் மன்த்லி கேலண்டரை தொங்கவிடுறதுல ஆரம்பிச்சு இன்னும் பத்து வருசத்துல நான் இப்பிடி இருப்பேன்னு ப்ளான் பண்ணுறது வரைக்கும் எல்லாமே இன்னைக்கு நைட் தூங்குற நம்ம நாளைக்கு மானிங் கண்டிப்பா கண் முழிச்சிடுவோங்கிற நம்பிக்கைல தான்… எப்பிடி பாத்தாலும் நம்பிக்கைங்கிற உணர்வுக்கு அடிப்படை எதிர்காலத்தை நினைச்சு நமக்கு இருக்குற மறைமுகமான பயம் மட்டும

   -பிரதியுஷா

மலைமுகடுக்குள் மறைந்து கிடந்த கதிரவன் பனிப்புகையை விலக்கிக்கொண்டு உதித்தெழுந்து தனது பொற்கதிர்களால் மேற்கு தொடர்ச்சி மலையின் ராணியான உதகமண்டலத்தை துயில் கலையுமாறு அறைகூவல் விடுத்த அழகான காலைப்பொழுது அது.

அந்த உதகமண்டலத்தில் வில்லியம் எஸ்டேட் என்று அழைக்கப்படும் மரங்கள் சூழ்ந்த கானகப்பகுதியின் மலைச்சரிவில் அமைந்திருந்த ‘செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளி’க்கு அப்போது தான் விடிந்திருந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் வில்லியம் என்பவருக்குச் சொந்தமாகியிருந்த அந்த கானகப்பகுதியும் மலையும் சேர்ந்த இடத்தில் நிறுவப்பட்ட அந்த போர்டிங் பள்ளிக்கு வயது எழுபத்தெட்டு.

மிஷனரி குடும்பங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு எத்தனையோ ஏற்ற இறக்கங்களையும் காலமாற்றங்களையும் சந்தித்த அந்தப் பள்ளியின் தலைமை பொறுப்பு லண்டன் சொசைட்டியிடமிருந்து அமெரிக்க மிஷனரிகளுக்கு மாறி பின்னர் அங்கிருந்த கல்விநிறுவன குடும்பங்கள் வசம் சென்றுவிட்டது

தற்போது தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ‘இண்டர்நேசனல் ஸ்கூல்களில்’ செயிண்ட் பீட்டர்சும் ஒன்று.

வகுப்பறைகளைக் கொண்ட பள்ளி கட்டிடம், மாணவ மாணவிகளுக்கான டாமெட்ரிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் குடியிருப்புகள், பொட்டானிக்கல் கார்டன், தேவாலயம் என நூற்றியைம்பது ஏக்கர்களில் கானகத்தின் நடுவே பரந்து கிடந்தது அப்பள்ளி.

அதன் நான்கு டாமெட்ரிகளில் ஒன்றான லில்லி டாமெட்ரியின் மாடி கட்டிடத்தில் நின்றபடி சூரியனின் கதிர்களில் வெயில் காய்ந்தபடி காபியை மிடறு மிடறாக அருந்தி கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். அவள் நின்றிருந்த இடத்தில் இருந்த மஞ்சள் கண்ணாடி வழியே வழிந்த சூரியக்கதிர்கள் அவளை பொன்னிற தேவதையாக காட்டியது என்றால் மிகையில்லை.

கடைசி மிடறு காபியை ரசித்துக் குடித்தவளின் செவியில் “உஷா இன்னுமா உன்னோட காபி டைம் முடியலடி?” என்று கேட்டபடி வந்த மற்றொரு பெண்ணின் குரல் விழவும் உதடு பிரிக்காது சிரித்தபடி திரும்பினாள் அவள், உஷா என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட பிரதியுஷா.

செயிண்ட் பீட்டர்சின் முன்னாள் மாணவி, இந்நாள் ஐ.பி டிப்ளமோ கோர்சில் பொருளாதாரம் பயிற்றுவிக்கும் ஆசிரியை.

அறைக்குள் வந்தவளோ சாவிக்கொத்தை ஆட்டிக்காட்டிவிட்டு “இப்போ தான் கெஜட் ரூமை திறந்து வச்சிட்டு வந்தேன்… இன்னும் டூ ஹவர்ஸ்ல பசங்க கிட்ட இருக்குற லேப்டாப்ஸ்சை மறுபடியும் வாங்கி வச்சு பூட்டணும்” என்று சலித்தபடி சொல்ல

“ஜான் கிட்ட கீய குடுத்துட்டா அவர் செய்யப்போறார்… நீ ஏன் அலட்டிக்கிற தியா?” என்றபடி தனது காலி கோப்பையைச் சிங்கில் கழுவினாள் பிரதியுஷா.

அவள் சொன்னது தான் தாமதம், அந்த தியாவின் முகம் கடுப்பேறியது. ஜான் அந்தப் பள்ளியின் ஓவிய ஆசிரியன். பூர்வீகம் அசாம். அடிக்கடி சந்தியாவிடம் அவனது பார்வை ஆர்வத்துடன் சென்றதன் விளைவு அவன் வடக்கே நின்றால் சந்தியா தெற்கில் நிற்பாள். அப்படிப்பட்டவளிடம் போய் பிரதியுஷா இவ்வாறு சொன்னால் கோபப்படாமல் என்ன செய்வாள்!

“அடியே நானே அவன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி ஓடிவந்திருக்கேன்… நீ மறுபடியும் என்னை மாட்டிவிடப் பாக்குறியா?” இடுப்பில் கையூன்றி பிரதியுஷாவை முறைத்தாள்.

“என்ன பண்ணுறதுடி? அப்பிடியாச்சும் செல்வி சந்தியாவாகிய நீ திருமதி சந்தியாவா புரொமோட் ஆயிடுவியானு ஒரு நப்பாசை தான்” கேலி போல பேசியவளின் முதுகில் அடித்தாள் சந்தியா.

அவளும் ஐ.பி டிப்ளமோ பயிலும் பதினொன்றாம் கிரேடு மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியம் பயிற்றுவிக்கும் ஆசிரியை தான்.

“உன் நப்பாசை நிராசையாகப் போகட்டும்ங்கிறது தான் இனிமே என்னோட டெய்லி ப்ரேயர் ரொட்டீன்ல நம்பர் ஒன் வேண்டுதல்” என்று சொன்னவள்

“இன்னைக்கு டாம்ல பெருசா வேலை ஒன்னும் இருக்காதுல்ல… வர்றியா அப்பிடியே ஊட்டிய ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வருவோம்?” என்று வினவ

“நோ வே… இன்னைக்கு அனுக்கு கவுன்சலிங் இருக்கு” என்று நிர்தாட்சணியமாக மறுத்தாள் பிரதியுஷா.

“ஏய் நீ அவளோட டாம் பேரண்ட் இல்லயேடி”

டாம் பேரண்ட் என்பது ஒரு டாமெட்ரியில் இருக்கும் மாணவர்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஆசிரியர்களே. மிடில் இயர் புரோகிராம் பயிலும் மாணவிகள் தங்கியுள்ள இந்த லில்லி டாமெட்ரியின் டாம் பேரண்ட் பிரதியுஷா தான்.

சந்தியா அதே லில்லி டாமெட்ரியின் சூப்பர்வைசர். ஒரு டாமெட்ரியில் தங்கியுள்ள மாணவிக்கு கவுன்சலிங் வழங்கப்படும் வேளையில் டாம் பேரண்ட் கட்டாயம் அவளுடன் இருக்கவேண்டும் என்பது செயிண்ட் பீட்டர்சின் விதி.

“பட் நான் அவளோட கார்டியன்” நிதானமாக உரைத்த பிரதியுஷாவின் கண்கள் எதிர்சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை வெறுமையுடன் அளவிட்டது.

“மிஸ்டர் அண்ட் மிசஸ் கதிர்காமன்” என்று அந்த லில்லி டாமெட்ரியின் முன்னாள் மாணவிகள் மரத்தில் வடிவமைத்து கொடுத்திருந்த பெயர்ப்பலகையுடன் இருந்த புகைப்படத்தில் சிரித்தபடி நின்றிருந்தனர் வசுந்தராவும் கதிர்காமனும். தம்பதிகளாக செயிண்ட் பீட்டர்சில் பணியாற்றியபடியே இதே லில்லி டாமெட்ரியில் ஒரு காலத்தில் டாம் பேரண்டாக இருந்தவர்கள்.

அந்தக் காலம் என்றும் பொற்காலம் தான், பிரதியுஷாவின் அத்தை வசுந்தரா அவளது கார்டியனாக இருந்த காலம். தானும் மருமகளும் மட்டுமே என்று கோடு கிழித்து வாழ்ந்தவளின் மனதுக்குள் கதிர்காமன் புகுந்த காலம்.

அவளோடு சேர்த்து பிரதியுஷாவையும் கண்ணின் மணியாக அவர் பாதுகாத்த காலம். இருவரின் இனிய இல்லறத்தின் அடையாளச் சின்னமான அனுபமாவின் தளர்நடையை மழலைப்பேச்சை தம்பதியர் ரசித்த காலம்.

அந்தக் காலம் அப்படியே இருந்திருக்கலாம். ஆனால் கடவுளுக்கு விருப்பமில்லை போல. ஒரு கொடியநாளில் அனுபமாவின் பொறுப்பை பதினெட்டு வயது பிரதியுஷாவின் கரங்களில் ஒப்படைத்த கையுடன் இருவரும் கண் மூடிவிட்டனர்.

காரணம் செயிண்ட் பீட்டர்ஸ் மாணவர்களுடன் சென்ற ‘ஆக்டிவ் வீக்’ பயணத்தில் நிகழ்ந்த விபத்து. மாணவர்களை காப்பாற்றிய இருவரும் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் மரணமடைவதற்கு முன்னர் மூச்சு வாங்க பேசிய நினைவு இன்றும் பிரதியுஷாவின் மனதில் உறைந்திருந்தது.

“என் அண்ணா என்னை நம்பி உன்னை விட்டுட்டு ஆஸ்திரேலியாக்குப் போனார்… நானும் வினோதனும் உன்னை நம்பி எங்க அனுவ விட்டுட்டுப் போறோம் ரதி”

“அப்பிடி சொல்லாத அத்தை… நீ சீக்கிரம் குணமாயிடுவ… வினோத் மாமாவும் நீயும் மறுபடியும் லில்லி டாம்ல மியூசிக் நைட் ப்ரோகிராம் நடத்துவிங்க”

விசும்பலுடன் பேசிய வார்த்தைகள் கூட இன்று காதில் ஒலித்தது அவளுக்கு.

கதிர்காமனோ “உன்னை நான் அம்போனு விடலடா… உனக்கான பாதுகாப்புக்கு மாமா ஏற்பாடு பண்ணிட்டேன்… சரியான வயசு வந்ததும் உனக்கு அது தெரியவரும்… நானே கூட இருந்து பண்ணவேண்டியது… இப்பிடி பாதியிலேயே விட்டுட்டுப் போறேனே… உன் வினோத் மாமாவ மன்னிச்சிடு ரதிம்மா” என்று அவளது கரத்தைப் பற்றியபடி உயிரை விட்டார்.

அவர் சொன்ன பாதுகாப்பு ஏற்பாட்டைப் பற்றி எண்ணும் போது இப்போது விரக்தியில் பிரதியுஷாவுக்குச் சிரிப்பு தான் வந்தது.

புகைப்படத்தைப் பார்த்தபடி “உங்க ரதிக்கு நீங்க ஏற்பாடு பண்ணுன பாதுகாப்பு பயன்படவே இல்ல மாமா… நான் தனியா நின்னுடுவேனோனு பயந்து நீங்க செஞ்சு வச்ச காரியம் எல்லாமே கேலிக்கூத்தா மாறிடுச்சு… நீங்க ஏற்பாடு பண்ணுன பாதுகாப்பு என் வாழ்க்கைல வர்றதுக்கு முன்னாடியும் நான் தனியா தான் இருந்தேன்… இதோ இந்த ரெண்டு வருசமாவும் நான் தனியா தான் இருக்கேன்… என்னோட தனிமை தான் எனக்குப் பாதுகாப்பு வினோத் மாமா… நீங்க ஏற்பாடு பண்ணுன பாதுகாப்பு அரண் என்னைப் பொறுத்த வரைக்கும் உங்க வார்த்தைக்கு மரியாதை குடுத்து ஷார்ட் டேர்முக்கு எனக்கு நானே பூட்டிக்கிட்ட விலங்கு” என்றாள் நிதானமாக.

கண்களில் கண்ணீர் பளபளத்தது. தோளில் சந்தியாவின் கரங்கள் படியவும் திரும்பியவள் “பழசை நினைச்சு புலம்புறத நிறுத்தமாட்டியானு திட்டப் போறியா தியா?” என்க இல்லை என மறுப்பாய் தலையசைத்தாள் சந்தியா.

“கதிர் சாரும் வசு மேமும் பண்ணுன புண்ணியம் தான் நீ அவங்களுக்கு மருமகளா கிடைச்சிருக்க… அனு இஸ் சோ லக்கி”

“ப்ச்… மருமகள்னு சொல்லாத தியா”

“ஓகே ஓகே! தத்துப்புள்ளையா இருக்க… போதுமா? ஒரு வார்த்தைக்கு இவ்ளோ சீன்! இந்தப் பொண்ணை ரட்சியும் ஆண்டவரே”

அவள் மேலே நோக்கி கை கூப்பி சொன்ன விதத்தில் பிரதியுஷாவுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் சிரிப்பதற்கு இது நேரமில்லை. அந்த போர்டிங் ஸ்கூலின் டாமெட்ரியில் ஞாயிறு என்றால் டாம் பேரண்ட்களுக்கும், சூப்பர்வைசர்களுக்கும் பெரிதாக வேலை இருக்காது. மாலை நேரத்தில் பொது அறையில் மாணவர்கள் படிப்பதை கவனிப்பது தவிர.

அத்தோடு ஞாயிறு என்றால் மாணவர்களுக்குச் சாப்பாடு டாமெட்ரியின் பொதுவான அறைக்கே வந்துவிடும். இல்லையென்றால் டாம் பேரண்டின் அறைக்கு வந்து சமைப்பதற்கு உதவுகிறோம் என கொட்டமடிப்பார்கள். உரிமையுடன் கூடிய வழிகாட்டிகளாக டாம் பேரண்ட்கள் இருப்பதே மாணவர்கள் அவர்களுடன் சுதந்திரமாகப் பழக காரணம்.

ஆனால் மே மாதம் வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இறுதி பரிட்சைக்காகத் தயாராகும் டிப்ளமோ மாணவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு அவர்களின் வகுப்பாசிரியர்களுக்கு இருந்தது.

காலையுணவுக்குப் பின்னர் அவர்களைக் கவனிக்கும் பொறுப்பு இருக்கிறதே! அந்த நினைவு எழவும் பரபரப்புற்றனர் இருவரும். பிரதியுஷாவின் மொபைல் வேறு சிணுங்கி வைக்க எடுத்துப் பேச ஆரம்பித்தாள்.

லில்லி டாமெட்ரியில் தங்கியிருக்கும் நிஹாரிகா என்ற மிடில் இயர் புரோகிராம் பயிலும் மாணவியின் அன்னை தான் அழைத்திருந்தார். ஐ.பி எனப்படும் இண்டர்நேசனல் பேக்கலொரேட் (International Baccalaureate) கல்விமுறையில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய பல்கலைகழகங்களில் அவ்வளவு சுலபத்தில் இடம் கிடைக்காது என்று உறவினர் யாரோ போகிற போக்கில் சொன்னதன் விளைவு உடனே பிரதியுஷாவுக்கு அழைத்துவிட்டார்.

“நோ மேம்… அப்பிடி எதுவும் இல்ல… ஏ.ஐ.யூவோட ரீசண்ட் கைட்லைன்ஸ் படி ஐ.பி டிப்ளமோ ட்வெல்த் ஸ்டேண்டர்டுக்கு ஈக்வல் தான்”

“பட் இது அட்வான்சானது, சோ ஐ.பி கிரேடை கன்வெர்ட் பண்ணுறது கஷ்டம்னு சொல்லுறாங்களே”

“அப்பிடி இல்ல மேம்… யூனிவர்சிட்டிஸ் அவங்களுக்குனு இருக்குற கிரிட்டீரியா பிரகாரம் ஐ.பி டிப்ளமோ ஸ்கோரை அவங்களுக்கு ஏத்த மாதிரி கன்வெர்ட் பண்ணிப்பாங்க… நானும் ஐ.பி சிலபஸ் தான் படிச்சேன் மேம்… நான் காலேஜூக்குப் போகாமலா இப்போ டீச்சரா ஒர்க் பண்ணுறேன்?”

அவளே நடமாடும் உதாரணம் என பிரதியுஷா சொன்ன பிறகு அந்த மாணவியின் அன்னை அமைதியுற்றார். அவருக்குத் தெளிவுபடுத்திவிட்டு சந்தியாவுடன் கவுன்சலிங் அறையை நோக்கி நடைபோட்டாள் பிரதியுஷா.

கவுன்சலிங் அறையின் வாயிலில் கருப்பு நிற டீசர்ட்டும் கருநீலநிற பேண்ட்டும் அணிந்து அடர்ந்த கூந்தலை போனிடெயிலில் அடக்கி கண்கள் அலைபாய நின்றிருந்தாள் அனுபமா. காலஞ்சென்ற கதிர்காமன் வசுந்தராவின் மகள். பதினேழு வயதிற்கு அவளது முகத்தில் தெரிந்த முதிர்ச்சி மிகவும் அதிகம்.

ஆனால் இந்த அலைபாயும் தன்மைக்கு என்ன காரணம்? கேள்வியுடன் அவளை நெருங்கிய பிரதியுஷாவையும் சந்தியாவையும் கண்டவள் பதபதைப்புடன்

“அண்ணி நீல் அங்கிள் வந்திருக்காராம்… இப்போ தான் ஜேக்கப் அண்ணா சொன்னார்” என்றபடி கையைப் பிசைந்தாள்.

பிரதியுஷாவுக்கும் அதை கேட்டு அதிர்ச்சி தான். ஆனாலும் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. சந்தியாவிடம் கண் காட்ட அவள் அனுபமாவின் தோளில் சினேகமாக கைபோட்டபடி பேச ஆரம்பித்தாள்.

“உன் அண்ணி எப்போவுமே உன்னை விட்டுட்டுப் போகமாட்டா… நீ ஏன் பயப்படுற?”

“இல்ல தியாக்கா… அந்த அங்கிள் அண்ணிய கூட்டிட்டுப் போகத் தான் வந்திருக்கார்னு ஜேக்கப் அண்ணா சொன்னார்” சொல்லும் போதே அனுபமாவின் கண்களில் கண்ணீர் மினுமினுத்தது.

ஒன்றல்ல இரண்டல்ல முழுதாய் எட்டாண்டுகள் பிரதியுஷாவின் நிழலிலேயே வாழ்ந்துவிட்டாள் அல்லவா! எங்கே அண்ணியைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற பயம் அவளுக்கு!

சந்தியா அறிந்தவரை பிரதியுஷாவுக்கு அனுபமா தான் எல்லாமே. அவளை யாருக்காகவும் பிரிய பிரதியுஷா சம்மதிக்கமாட்டாள் என்பது திண்ணம்!

அதையே அனுபமாவிடம் கூறிச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கையில் மனோதத்துவ மருத்துவர் வந்துவிட “சரி வா… இன்னைக்கு கவுன்சலிங்ல நான் உனக்கு கம்பெனி குடுக்குறேன்” என்று சொல்லி அவளை உள்ளே இழுத்துச் சென்றாள்.

அவர்கள் செல்வதையே பார்த்தபடி நின்றிருந்த பிரதியுஷாவை அழைக்க வந்தான் ஜேக்கப். அந்த செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளியின் அலுவலகப்பணியாட்களில் ஒருவன்.

“உஷா மேடம் உங்கள பாக்க விசிட்டர் ஒருத்தர் வந்திருக்கார்… அவர் பேரு…”

“நீலகண்டன்”

தான் சொல்லாமலே இவளுக்கு எப்படி பெயர் தெரிந்தது என தலையைச் சொறிந்த ஜேக்கப்பிற்கு அனுபமா ஏற்கெனவே விவரத்தைத் தெரிவித்துவிட்டாள் என்று சொல்லி அனுப்பி வைத்தாள் பிரதியுஷா.

“சீக்கிரமா வாங்க மேடம்… அவர் ரொம்ப நேரமா உங்களுக்காக வெயிட் பண்ணுறாரு”

ஜேக்கப் சென்று விட பிரதியுஷா கவுன்சலிங் அறைக்கு வெளியே கிடந்த மர இருக்கையில் தொய்ந்து அமர்ந்தாள்.

நீலகண்டன்! இந்த மனிதர் எப்போதெல்லாம் அவளது வாழ்க்கைக்குள் வருகிறாரோ அப்போதெல்லாம் பெரிதாக ஏதாவது அனர்த்தம் நிகழ்ந்தே தீரும்! இப்போது என்ன காத்திருக்கிறதோ!

மூளை அங்கலாய்த்த போதே அந்த மனிதரின் நேர்மை குணம் மற்றும் விசுவாசத்தை அறிந்த அவளின் மனசாட்சி நீலகண்டனுக்குப் பரிந்து கொண்டு அவளிடமே வாதிட்டது.

வேறு வழியின்றி எழுந்தவள் அலுவலக அறையின் அடுத்து அமைந்திருந்த விசிட்டர்கள் அறைக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் புன்சிரிப்புடன் எழுந்தார் நீலகண்டன். இரண்டாண்டுகளில் நரை மட்டும் அதிகரித்திருந்தது. மற்றபடி அதே மூக்குக்கண்ணாடி, அதற்குள் தீர்க்கமாக பார்க்கும் விழிகள் என மனிதர் இன்னும் மாறவே இல்லை!

“எப்பிடி இருக்க உஷாம்மா?”

“நல்லா இருக்கேன் நீல் அங்கிள்… நீங்க?”

“எனக்கென்னமா குறை? தம்பி என்னை நல்லா பாத்துக்கிறார்”

“ஓ!”

ஒற்றைவார்த்தையில் பதில் வரவும் நீலகண்டனுக்குப் பிரதியுஷாவின் மனநிலை புரிந்துவிட்டது.

“தம்பி உன்னை கையோட அழைச்சிட்டு வரச் சொல்லிருக்கார்மா”

விலுக்கென்று நிமிர்ந்த பிரதியுஷாவின் கண்களில் தெரிந்த சீற்றம் அவரைத் திடுக்கிட வைத்தது. ஆனால் தோன்றிய வேகத்தில் அச்சீற்றம் மறைந்தும் போனது. அவளால் அவரிடம் அதிகநேரம் கோபப்பட முடியாது. எப்படி இருந்தாலும் அவளது வினோதன் மாமாவின் நண்பர் அல்லவா!

நீலகண்டனும் அதையே தான் கூறினார்.

“கதிர் சாரோட மருமகள் இப்பிடி கஷ்டப்படணும்னு என்ன அவசியம் உஷாம்மா? போனது போகட்டும்… இனியாச்சும் நீ கொஞ்சம் இறங்கிவரலாம்”

“நான் அவரோட மருமகள்னா அனு வினோத் மாமாவோட பொண்ணு… மருமகளை விட பொண்ணுக்குத் தானே உரிமை அதிகம் அங்கிள்… அவளை அம்போனு விட்டுட்டு என்னால எங்கயும் வரமுடியாது”

அவளின் பிடிவாதப்பேச்சில் முகம் வாடிய நீலகண்டன் “நீ கதிர்காமனோட மருமகள்மா… ரெண்டு வருசம் நீ இப்பிடி கஷ்டப்பட்டத பாத்தா அவரோட ஆத்மா கூட எங்கள மன்னிக்காது” என்றார்.

“நீங்க சொல்லுற அதே கதிர்காமன் இந்த ஸ்கூல்ல வினோதன்ங்கிற பேர்ல சாதாரண டாம் பேரண்டா இருந்தவர் தான் அங்கிள்… இன்னைக்கு நானும் அதே பொசிசன்ல தான் இருக்கேன்… இந்த ஸ்கூல், கேம்பஸ், தூரத்துல தெரியுற மலை, டாமெட்ரி இது தான் என் வாழ்க்கைனு நான் எப்போவோ தீர்மானிச்சிட்டேன் அங்கிள்… நீங்க டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க”

சொன்னதோடு அந்த அறையை விட்டு வெளியேறி பொட்டானிக்கல் கார்டனை அடைந்தாள். வண்ண வண்ண மலர்களோடு மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் பல வகை தாவரங்களுடன் பச்சை போர்வை போர்த்தி கிடந்தது அந்தப் பொட்டானிக்கல் கார்டன்.

ஒரு காலத்தில் அவளது வினோதன் மாமா பொறுப்பாளராக இருந்த இடம். அந்தத் தோட்டத்தின் மத்தியில் சிவப்பு செங்கற்களால் கட்டியது போல அமைந்திருக்கும் அவரது அறையைக் கண்டவளுக்குக் கண்களில் கண்ணீர் முட்டியது.

கிட்டத்தட்ட ஒரு ஆள் உயரத்துக்கு வளர்ந்திருந்த பெரணியின் அருகே கிடந்த கல்மேடையில் அமர்ந்தவளின் மனதில் சொல்லவொண்ணா பாரம் ஏறியமர்ந்து கொண்டது.

அங்கே நிலவிய அமைதியான சூழலைத் தாண்டி அந்தக் குரல் அவளது செவியைத் தீண்டியது.

“இது என்னோட விசிட்டர் பாஸ்… இப்போ நான் போகலாம் தானே”

அழுத்தமும் குறும்பும் சரிநிகர் சமானமாக கலந்தக் குரல்! அதற்குரியவனைப் போலவே என்று எண்ணிய பிரதியுஷா பரபரப்புற்று எழுந்தாள். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பின்னே அவனது குரலைக் கேட்கிறாள் அவள்!

“தாராளமா போகலாம் சார்… ஆனா ஃப்ளவர்சை டச் பண்ணிடாதிங்க”

பொறுப்பாளரின் குரலும் ஒலித்ததை வைத்துப் பார்த்தால் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் இங்கே தான் நிற்கிறான் போல. வேகமாக பெரணியை விட்டு நீங்கி கற்கள் பதித்த சிமெண்ட் பாதையில் நடந்தவள் பொறுப்பாளரின் அறைக்கு வெளியே அவருடன் சிரித்த முகமாக பேசிக்கொண்டிருந்தவனைக் கண்டு ஒரு நொடி உறைந்து போனாள்.

நெடுநெடு உயரத்தில் இதழில் குறும்புச்சிரிப்பு மின்ன முதல் முறை அவனைக் கண்ட போது எழுந்த குறுகுறுப்பு இப்போதும் எழ, அதனுடன் போனசாக இவன் வந்ததால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது என்ற சலிப்பும் எழுந்தது அவளுக்குள்.

பொறுப்பாளரிடம் பேசிக்கொண்டிருந்தவன் நடைபாதையின் நடுவே நின்று தங்களது உரையாடலைப் பார்த்துக்கொண்டிருந்தவளைக் கவனித்துவிட்டான்.

“ஓகே முகுந்தன் சார்… உங்களோட பிசி ஷெட்யூல்ல இவ்ளோ நேரம் எனக்கு இந்தக் கார்டனை பத்தி விளக்குனதுக்கு தேங்க்ஸ்… நான் பாக்க வந்தவங்க அதோ அங்க நிக்குறாங்க” என்று கண்கள் மலர பிரதியுஷாவைக் காட்டினான்.

“ஓ! உஷா மேடத்தோட ரிலேட்டிவா நீங்க? ஏன் சார் இத முன்னாடியே சொல்லிருக்கக் கூடாதா?” என்ற முகுந்தன் அவனிடமிருந்து விடைபெற்றார்.

இத்தனையையும் பார்த்தபடி நின்ற பிரதியுஷாவிடம் மெதுவாக வந்து சேர்ந்தான் அவன்.

கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டபடி “எப்பிடி இருக்கீங்க மிஸ் பிரதியுஷா பரந்தாமன்?” என்று அவனுக்கே உரித்தான குறும்புத்தனத்துடன் வினவ பிரதியுஷாவின் முகத்தில் அவளை அறியாது புன்னகை அரும்பியது.

“ஆது” என்றபடி கண் கலங்கியவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டான் அவன்.

“ஆதுவே தான்… உன்னைத் தேடி இவ்ளோ தூரம் வந்திருக்கேன்… நீ என்னடானா கிண்டர் கார்டன் படிக்குற குழந்தையாட்டம் அழுற? இது தான் இந்தியன் ஸ்டைல் வரவேற்பா?” கேலிச்சிரிப்புடன் வினவியவனை விட்டு விலகி நின்றவள் அவனைப் பாதாதி கேசம் பார்த்தாள்.

அன்றைக்கும் இன்றைக்குமுள்ள வித்தியாசம் நெற்றியின் வலப்புறம் ஒரு இன்ச் அளவுக்கு இருக்கும் தழும்பு மட்டுமே! மற்றபடி இவன் பழைய ஆதுவே தான்!

“உனக்கு எல்லாம் நியாபகம் வந்துடுச்சா ஆது?”

ஆம் என்பது போல தலையசைத்தவன் “நீ கிளம்பி கொஞ்ச நாள்லயே நியாபகம் வந்துடுச்சு உஷா… உடனே உன்னைப் பாக்கணும்னு நினைச்சேன்… ஆனா உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சதால கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணல” என்றான்.

என்றைக்குமே அவளைப் பற்றிய அவனது கணிப்பு மிகத் துல்லியமாக இருக்கும்! அவனே அழைத்திருந்தாலும் அப்போதைய மனநிலையில் பிரதியுஷாவின் வார்த்தைகள் அவனைக் குத்திக் கிழித்திருக்கும் என்பதில் அவளுக்கு எள்ளளவும் ஐயமில்லை.

எல்லாம் சரி தான்! ஆனால் இப்போது அவன் வந்திருப்பதன் நோக்கம் என்ன? அவனிடமே வினவி திகைத்தப் பார்வையைப் பதிலாகப் பெற்றாள் பிரதியுஷா.

“நானும் நீல் அங்கிளும் இங்க ஏன் வந்திருக்கோம்னு தெரிஞ்சும் இப்பிடி கேட்டா என்ன அர்த்தம்?”

“யார் என்ன சொன்னாலும் நான் செயிண்ட் பீட்டர்சையோ அனுவையோ விட்டுட்டு ஒரு இன்ச் கூட நகரமாட்டேனு அர்த்தம்”

அவளது பிடிவாதத்தில் தளர்ந்து போனான் அவன். என்ன செய்யலாம் என சுற்றும் முற்றும் பார்த்தபடி யோசித்த நேரம் தங்களை நோக்கி வந்த இளம்பெண்ணைக் கண்டதும் கண்களில் குறுகுறுப்பு மின்ன பிரதியுஷாவிடம் அவள் யாரென சைகையால் வினவினான்.

வந்தவள் சந்தியா தான். இந்தச் சைகையைக் கவனித்தாலும் அவனைக் கண்டுகொள்ளவில்லை.

“அனுவோட கவுன்சலிங் முடிஞ்சுது உஷா… அவளுக்கு எங்க நீ அவளை விட்டுப் போயிடுவியோனு பயம்… பட் டாக்டர் சொன்னதும் புரிஞ்சுகிட்டா… இன்னொரு செஷன்ல கலந்துகிட்டா ஷீ வில் ஓவர்கம் ஹெர் ஃபியர்” என்றாள் முத்தாய்ப்பாக.

தோளில் வழிந்த சுருள் கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டபடி மற்றொரு கையை ஜீன்சின் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு புருவம் சுருக்கிச் சொன்னவளின் பேச்சைக் கண்களில் கவனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

பிரதியுஷா அவனைப் பார்க்க அவனோ சந்தியாவை நோட்டம் விட்டு அவளின் எரிச்சலை வாங்கிக் கட்டிக்கொள்ள தயாராக நின்றான். சந்தியா யாரடி இவன் என்பது போல கண்களை உருட்டிக் கேட்ட விதத்தில் உஷாரான பிரதியுஷா அவசரமாக “இவன் ஆது” என்றாள்.

அதைக் கேட்டதும் சந்தியா அவனை உறுத்து விழிக்க அவனோ “ஃபுல் நேம் சொல்லமாட்டியா உஷா?” என்று பிரதியுஷாவிடம் குறைபட்டுவிட்டு சந்தியாவிடம் திரும்பினான்.

“ஹாய் ஐ அம் ஆதவன் கதிர்காமன்” என்றான் இதழ் விரித்த புன்னகையுடன்.

கூடவே அவளது கையைப் பிடித்து குலுக்கவும் சந்தியா “ஓ!” என்ற வார்த்தையுடன் அவனிடமிருந்து தனது கரங்களை உருவிக்கொண்டாள்.

“நீங்களும் உங்களை இன்ட்ரடியூஸ் பண்ணிக்கலாம்… என்னை அட்ராக்ட் பண்ண நினைக்கிறீங்கனு நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்” என்றபடி தோளைக் குலுக்கி ஒரே நேரத்தில் சந்தியாவின் முகத்தில் திகைப்பையும் பிரதியுஷாவின் இதழில் சிரிப்பையும் கொண்டு வந்தான் ஆதவன்.

“நீ கொஞ்சம் கூட மாறல ஆது” என்ற பிரதியுஷாவின் சிரிப்பு கலந்த குரலையும் “அது எப்பிடி மாறுவேன்? தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்களே! வாட் இஸ் தட்? ம்ம்ம்… ஹான், தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்… சோ ஈசியா மாறாது உஷா” என்ற ஆதவனின் பதிலையும் கேட்டு சந்தியா தலையிலடித்துக் கொண்டாள்.

அப்போது தான் அக்குரல் கேட்டது.

“என்னை விட்டுட்டுப் போயிடுவியா அண்ணி?” விம்மலுடன் உரத்தக் குரல் கேட்க மூவரும் திரும்பி நோக்கினர்.

பொட்டானிக்கல் கார்டனின் நடைபாதையில் அவர்களை விட்டு சற்று தொலைவில் நின்றிருந்தாள் அனுபமா. கண்களில் கண்ணீர்! மனமோ இவ்வளவு நேரம் கேட்ட கவுன்சலிங்கை மறந்து துடித்தது. அவளது கண்ணீரைக் கண்டதும் பிரதியுஷாவும் சந்தியாவும் பதபதைக்க ஆதவனோ வழக்கம் போல எவ்வித உணர்வையும் காட்டாது நின்றான்.

இசை ஒலிக்கும்🎵🎶🎵