அடங்காத அதிகாரா 42
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அந்த மிகப்பெரிய வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுக்கு மத்தியில் ஒளியிழந்து காணப்பட்டார் நாகரத்தினம்.
மகன் பல வருடங்களுக்குப் பிறகு அரசியலுக்கு வர விரும்பியது, தன் மகள் மனதில் இருந்த இளைஞன் அவளுக்கு பொருத்தமானவன் என்று கண்டுகொண்டு அவனையே அவளுக்கு திருமணம் முடிக்க நினைத்தது என்று மகனின் பேச்சில் பூரித்துப் போயிருந்த அவரது மனதை கணவரும் மூத்தார் மகளும் காலில் போட்டு மிதிப்பது போல பேசிய வார்த்தைகள் அவரை வதைத்தது என்றால் மகன் ஒருபடி மேல் சென்று அவனும் மகளும் வீட்டை விட்டு கிளம்பியதும் அவரது உயிரையே உருவியது போல உணர்ந்தார்.
ஒருநாள் முழுவதும் உண்ணாமல் உறங்காமல் அறையில் அடைந்து கிடந்தவரிடம் வீட்டின் தலைமை வேலையாள் வந்து அன்றைய சமையல் பற்றிக் கேட்க, இத்தனை நாட்கள் வீட்டில் உள்ளவர்களுக்காக பார்த்துப் பார்த்துக் கூறியவர் என்று வெறுத்துப் போனவராக,
“ஏதோ செய்து வைங்க. ஐயாவுக்கும் அஞ்சு, அவ வீட்டுக்காரருக்கும் மட்டும் தனி சமையல் பண்ணினா போதும். மத்த எல்லாருக்கும் எப்பவும் போல செய்துக்கோங்க.” என்றவர் சோர்வாக நாற்காலியில் சாய்ந்து கொள்ள,
“அம்மா தம்பிய பத்தி இப்ப தான் டிவில சொன்னாங்க. ஏதோ வயசு பசங்க, பிள்ளைங்க எல்லாருக்கும் தொழில் தொடங்க உதவி செய்யப் போகுதாம்.” என்று கூடுதல் தகவல் தந்தவரை நோக்கி,
“அவன் உதவி செய்யலன்னா தான் ஆச்சரியம். போய் வேலையை பாருங்க.” என்று கண்களை மூடிக் கொண்டார்.
சரியாக அந்த சமயம் அறைக்குள் நுழைந்தார் திருமூர்த்தி.
மனைவியின் முகமே அவள் மகனையும் மகளையும் பிரிந்து வாடுவதை படம் பிடித்துக் காட்ட,
“என்ன ரத்தினம் காலங்காலையில் இப்படி சோர்வா உட்கார்ந்து இருக்க ?எப்பயும் பம்பரம் மாதிரி சுத்திக்கிட்டு இருப்பியே!” என்று வெளியே கிளம்பத் தயாராக தன் உடைகளை மாற்ற ஆயத்தமானார்.
“யாருக்காக பம்பரமா சுத்தணும்? வயசுக்கு வந்த பொண்ணு மனசுக்கு பிடிச்ச பையனை அவ அண்ணனுக்கு காட்டி இருக்கா, அவனும் பொறுப்பா விசாரிச்சு நம்ம குடும்பத்துக்கு சரியா இருப்பான்னு வந்து பேசினா அதை தட்டிக் கழிச்சு, அவன் கேட்ட பதவியையும் கொடுக்காம அவனையும் என் மகளையும் வீட்டை விட்டே அனுப்பிட்டீங்க. இனி என் மேல அக்கறை வைக்க யார் இருக்கா? யாருக்காக நான் ஓடணும்?” என்று கண்களைத் திறக்காமல் கூறினார்.
“ஏன் கட்டின புருஷன் என் மேல உனக்கு அக்கறை இல்லையா? எனக்காக ஓட மாட்டியா?” என்று நக்கலாக கேட்டவரின் முன் சற்று கோபமாகவே வந்து நின்றார் நாகரத்தினம்.
“நான் மட்டும் உங்க மேல அக்கறைப்படணும். ஆனா நீங்க என்னைப் பத்தியோ பிள்ளைங்க பத்தியோ கவலைப்பட மாட்டிங்க. அஞ்சு பேச்சு மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியும். இத்தனை வருஷத்துல எப்பவாவது அவளுக்கு எதிரா ஒரு வார்த்தை பேசி இருப்பேனா?
என் பையன் உங்ககிட்ட என்ன கட்சி தலைவர், செயலாளர் பதவியா கேட்டான்? அவன் வயசுக்கு இளைஞர் அணிக்கு தலைவரா இருந்து எல்லாத்தையும் செய்யறேன்னு வந்தான்.
ஆனா அஞ்சு பேச்சைக் கேட்டு அவனை மரியாதை இல்லாம பேசிட்டு, அவன் சொன்ன மாப்பிள்ளையை வேண்டாம்னு சொல்லிட்டீங்க. அது நம்ம மக விரும்பின பையன்னு கூட உங்களுக்கு தோணலையே!
WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright©️ezhilanbunovels.com.
அஞ்சு விரும்பினா சரின்னு கல்யாணம் பண்ணி வைப்பிங்க. இதுவே நேத்ரான்னா அப்படி பண்ண மாட்டிங்க! நீங்களே வித்தியாசம் காட்டும் போது இனிமே நானும் வித்தியாசம் காட்டினா என்ன தப்பு சொல்லுங்க?” என்று மூச்சு வாங்கி நின்றார்.
“என்ன ரத்தினம் இவ்வளவு பேசுற?” என்று அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்த்துக் கொண்டிருந்த திருமூர்த்தி வினவ,
“நேத்து காலைல நான் சாப்பிட்டது. இப்ப வரை நான் சாப்பிடல. நீங்களோ உங்க பொண்ணோ என்னை ஒரு வார்த்தை என்னன்னு கவனிச்சிங்களா? ஆனா நான் மட்டும் பம்பரம் மாதிரி உங்களை சுத்தி வந்து எல்லாம் செய்யணும். அக்கறையும் அன்பும் ஒரு கை ஓசையா இருந்தா எப்படி? நானும் என் பையன் கூட போயிடுவேன். ஆனா நாளைக்கு பத்திரிகைல உங்களை தப்பா எழுதிடுவாங்க. என்னால உங்களுக்கு ஒரு அவமானம் வந்தா என் உயிர் தங்காது. என் மகன் மனசு மாறி வர்ற வரைக்கும் நான் ஏதோ பண்ணிட்டு போறேன். என் பக்கம் யாரும் வராதீங்க. உங்க மகளையே வீட்டை பார்த்துக்க சொல்லிடுங்க.” என்றவர் கட்டிலில் ஒருக்களித்து படுத்துக் கொண்டார்.
அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து தலையணையை நனைக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த திருமூர்த்தியி்ன் மனதில் வலி பிறந்தது.
இத்தனை ஆண்டுகளில் தன்னிடம் பயந்து, அமைதியாக பேசும் மனைவியை மட்டுமே கண்டு கொண்டிருந்தவருக்கு இன்றைய அவரின் பேச்சு சற்று பலமான அடி தான்.
ஆனால் இந்த விஷயத்தில் அவர் எந்த முடிவையும் சட்டென்று எடுத்துவிட முடியாது. அது நேத்ரா திருமணமாக இருந்தாலும் சரி, நீரூபனின் அரசியல் பிரவேசமாக இருந்தாலும் சரி.
இதில் அஞ்சுவைத் தாண்டி அவர் யோசிக்க வேண்டி இருந்தது. ரத்தினத்தின் மனத்தாங்கலுக்காக அவர் சிறு துரும்பை அசைத்தாலும் நாளை அது மிகப்பெரிய பாறையாக அவர் தலையில் விழுந்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஒரு பெருமூச்சுடன் உடை மாற்றி கட்சி அலுவலகத்துக்குக் கிளம்பினார் திருமூர்த்தி.
நீரூபனின் புதிய அலுவலகத்தில் அவனுக்காக நேத்ராவும் பூமிகாவும் ஒரு அறையில் காத்திருக்க,
வீடியோ காலில் நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்தான் வசீகரன்.
ஆனந்த் கான்பரன்ஸ் அறையில் அமர்ந்து பெரிய திரையில் புதிய அலுவலகங்களின் உள்கட்டமைப்பு, தேவைகள் என்று சரிபார்த்துக் கொண்டிருக்க,
கம்பீர நடையோடு உள்ளே நுழைந்தான் நீரூபன்.
அவனை தொலைவில் பார்த்த போதே உள்ளம் சிலிர்த்து சிலையாக சமைந்து விட்டாள் பூமிகா.
நேத்ரா அண்ணனின் கம்பீரம் கண்டு பெருமை கொண்டு பார்த்துக் கொண்டிருக்க, தேனைக் கண்ட வண்டாக அவனை சூழ்ந்து கொண்டதென்னவோ வசீகரனும் ஆனந்தும் தான்.
மூவரும் பேசியபடி அவனது அறைக்குள் நுழைய சோஃபாவில் அமர்ந்திருந்த பூமிகா இதழ் பிரியாத புன்னகையுடன் அவனை வரவேற்க,
“தேங்க்ஸ் அண்ணா” என்று அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு வரவேற்றாள் நேத்ரா.
“என்ன டா?” என்று அவன் ஆச்சரியமாக வினவ,
“எங்க பிரஸ் மீட்ல கட்சி பேர் அனவுன்ஸ் பண்ணி அரசியல் சமுத்திரத்தில் தொப்பக்கடீர்ன்னு குதிச்சிடுவியோன்னு பயந்துட்டு இருந்தேன். ஆனா நீ நல்ல பிள்ளையா என்.ஜி. ஓ தான் ஸ்டார்ட் பண்ணி இருக்க.” என்று கன்னம் கிள்ளி சிறுபிள்ளையாகக் கொஞ்சினாள்.
அவளை உற்று நோக்கிய நீரூபன், பின் தன்னிடம் வராமல் தள்ளி அமர்ந்து கண்களால் தன்னைப் பருகிக் கொண்டிருந்த காதலியை நோக்கினான்.
அவளோ உன்னை நான் அறிவேன் என்னும்படி விழிகளை மூடித் திறக்க,
வசீகரனையும் ஆனந்தையும் எதிர் இருக்கையில் அமரச் சொல்லி விட்டு தன் இருக்கையை ஆக்கிரமிப்பு செய்தான் நீரூபன்.
“நீ என்ன நினைக்கிற பூமிகா?” என்று அவளை அவன் ஆர்வமாகப் பார்க்க,
“இது உங்க அரசியலுக்கு ஏதோ ஒரு வகையில் ஆரம்பம்ன்னு நினைக்கிறேன் மாமா. ஆனா அதுக்கு காரணம் என்னனு புரியலன்னாலும் ஏதோ இருக்குன்னு மட்டும் தெரியுது.” என்று கூறி அவன் பதிலுக்காக காத்திருப்பதை தன் குரலில் மூலமே உணர்த்தினாள் பூமிகா.
“சபாஷ் தங்கச்சி. மாமாவுக்கு ஏத்த பொண்ணு தான் நீ. இந்த ஐஸ்க்கு வீட்ல இத்தனை அரசியல்வாதிகள் இருந்தும் அரசியல் புரியல பாரு!” என்று கேலி செய்த வசீகரனின் கையில் லேசாக அழுத்தம் கொடுத்து அவனது பேச்சுக்கு அணை போட்டான் ஆனந்த்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவன் கண்களுக்கு நேத்ராவின் நேத்திரத்தில் தெரிந்த நெருப்பை வசீகரன் கண்டு கொள்ளாதது பயத்தைக் கொடுத்திருந்தது.
“நேத்ரா உனக்கு அரசியல் மேல வெறுப்பு இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும். நேத்து நான் வீட்ல சொல்லிட்டு வந்ததுல எந்த மாற்றமும் இல்ல. நான் அரசியல் பண்ண தான் போறேன். ஆனா நம்ம வித்தியாசமான முறையில பண்ண போறோம். கண்டிப்பா உனக்கும் இந்த அரசியல் பிடிக்கும்.” என்று தங்கையை சமாதானம் செய்யும் விதமாகப் பேசினான் நீரூபன்.
“ஏன் மாமா இப்ப இந்த என்.ஜி. ஓ? ஏற்கனவே நிறைய பேருக்கு நம்ம டிரஸ்ட்ல உதவி பண்ணிட்டு தானே இருக்கோம்?” என்று பூமிகா நேத்ராவுக்காகவும் சேர்த்தே அந்தக் கேள்வியை எழுப்பினாள்.
“அரசியல் கட்சி எல்லாம் ஒருநாள் ராத்திரியில் தொடங்கி அடுத்த தேர்தல்ல முதல்வராக முடியாது மா. இது சினிமா இல்ல. நான் சினிமாலையும் இல்ல. புரியுதா?
ஒரு அரசியல் கட்சியும் அதுல உள்ள தலைவர்களும் கொள்கை அடிப்படையில் ஒண்ணா இருந்து மக்களுக்கு சேவை செய்தத்தெல்லாம் இப்ப சாத்தியம் இல்ல. மக்களும் அரசியல்வாதி கிட்ட அதை இப்ப எதிர்பார்க்கல.
கட்சிகள் தொழிலதிபர்கள் பணத்துல தான் இயங்குது. அவங்க ஆட்சி தொழிலதிபர்களுக்காக இயங்குது. அரசியலை கூர்ந்து பார்க்கற யாருக்கும் இந்த விஷயம் புரியாம போகாது.
கட்சிக்கு உள்ளூர் தொழில் பிரமுகர்கள் கொடுக்கற பணத்தை விட வெளிநாட்டு நிறுவனம் கொடுக்கற டாலர், பவுண்டுக்கு நிகரான இந்திய மதிப்பு அதிகமாக இருக்கிறதனால தான் பல வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியால பல மாநிலங்கள்ல கூடாரம் போட்டு தங்கி இருக்கு.
அவங்க வளர்ந்தா கட்சிக்கும் ஆட்சிக்கும் பணம் நிறைய கிடைக்கும். உள்ளூர் தொழில் வளர்ந்தா கிடைக்கிற சொற்ப தொகை எல்லாம் போஸ்டர், பிரியாணி செலவுக்கு தான் ஆகும்ன்னு உள்நாட்டு தொழில் வளர்ச்சியை கண்டுக்காம அது அப்படியே குறைந்து போயிடுச்சு.
நம்ம பசங்க ஆர்வமா தொழில் தொடங்கினாலும் அது பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களோட கிளைகளா தான் இருக்கு. லாபம் எப்படி பார்த்தாலும் அரசியல் கட்சிகளுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தான்.
நாம கட்சி ஆரம்பிச்சா இவங்க நமக்கும் சப்போர்ட் பண்ணுவாங்க. ஆட்சிக்கு வந்தா அவங்க கேட்கிற இடத்தை நாம கொடுக்கணும், நிறைய கடன் தள்ளுபடி பண்ணணும். இதெல்லாம் செய்ய நம்ம மனசு இடம் தருமா சொல்லு?
அப்ப நம்ம கட்சிக்கு நிலையான நிதியை கொண்டு வர நம்ம உள்நாட்டு/உள்ளூர் தொழில்களும் அதை நடத்துற தொழிலதிபர்கள் நமக்கு நம்பிக்கையான, நேர்மையானவர்களாகவும் இருக்கணும். இதுக்கான முதல் அடி தான் இது.
டீக்கடையா இருந்தாலும் உள்ளூர் பொருட்களை வாங்கி தன் பேர்ல செய்யறவங்க தான் எனக்கு வேணும். ஏதோ ஒரு வெளிநாட்டு பிராண்ட் பொருளை இங்க கூவி விக்கிற பசங்க எனக்கு வேண்டாம்.
மக்களும் கணக்கு போட்டு தான் ஒட்டு குத்திட்டு இருக்காங்க. அதை நாமளும் உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தோம் தானே!
நாம கட்சியா மாற நமக்கு கொஞ்ச கால அவகாசம் தேவை. அதே போல நம்ம ஆட்சிக்கு வர அதிர்ஷ்டம் மட்டும் போதாது. நிறைய கணக்கு போட்டு காய் நகர்த்தணும்.
மக்கள் தங்களுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தா லாபம்ன்னு கணக்கு போடும்போது அதை விடையா கொடுக்குற கணக்கை நாம போடணும்.
அதுக்கு ஆரம்ப புள்ளி தான் இந்த தொழில் வளர்ச்சி.” என்று கைகளைக் கட்டிக் கொண்டு அவன் கூறி முடிக்க மலைப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர் இரு பெண்களும்.
பெருமிதம் பொங்கப் பார்த்தனர் வசீகரனும் ஆனந்தும்.
இந்த ஐவர் படை செய்ய வேண்டிய செயல்களும் செல்ல வேண்டிய பாதையும் தெளிவுற அறிந்திருந்ததால் வெற்றிக்காக ஓடாமல் வெற்றியாகவே ஓட முடிவெடுத்துக் கொண்டனர்.